காட்சி: 13
பாத்திரங்கள் :
வ.உ.சி, ,
வடுகராமன், ஜெயிலர்
வடுகராமன்:
ஐயா கப்பலோட்டிய
தமிழரே... உம்மை
வணங்குகிறேன்.
வ.உ.சி:
நீங்கள் கன்விக்டர்
வார்டன் இல்லையா?
எங்களைப் போன்ற
கைதிகளை அடக்கியாளும்
பணி உங்களுக்கு.
நீங்கள் என்னை
வணங்குவதைப் பார்த்தால் பரங்கியர் கூட்டம் உங்களை
வாட்டி வதைத்து
விடுமே...
வடுக
ராமன்:
உங்களைப்போன்ற தியாகிகளை
வணங்குவதால் நான் சித்திரவதைப் பட்டால் அதைப்
பெருமிதத்துடன் ஏற்பேன்.
வ.உ.சி:
உங்களை யாரென்றே
எனக்குத் தெரியாது.
என்றாலும் என்
மீது இத்தனை
அன்பு, மரியாதை...
அப்படியென்ன பெரிதாக சாதித்து விட்டேன்? சரி,
உங்கள் பெயர்?
வடுகராமன்:
என் பெயர்
வடுகராமன். நான் உங்களைப் போல தேச
விடுதலைக்குப் போராடும் தியாகி அல்ல. நான்
இந்த அரசாங்கச்
சட்டப்படிக் குற்றவாளி.
வ.உ.சி:
இந்த அரசாங்கத்தில்
சட்டங்கள் எதுவும்
அத்தனை நியாயமானவை
அல்ல. ஆகவே
அதுகுறித்துக் கலங்க வேண்டாம், இந்த அரசாங்கத்தின்
பார்வையில் நான் கூடக் குற்றவாளிதான்.
வடுகராமன்:
ஐயா... நீங்கள்
சாப்பாட்டுக்காக இனி தட்டேந்தி வரிசையில் நிற்கவேண்டாம்.
நானே எடுத்து
வருகிறேன்.
வ.உ.சி:
என் மீது
சாட்டப்பட்ட குற்றம், நியாயமில்லாமல் போகலாம். ஆனால்,
இங்கு நானும்
ஒரு குற்றவாளி.
உங்களைப்போன்றே நானும் ஒரு கைதி. ஆகவே
எனக்கென்று எந்த சலுகையும் வேண்டாம்.
வடுக
ராமன்:
அதற்காக சொல்லவில்லை.
நான் தனியே
வந்து உங்களிடம்
ஒருசில விஷயங்களைச்
சொல்ல வேண்டும்.
இந்த ஜெயில்
பற்றி, ஜெயிலர்
பற்றி, இங்குள்ள
மருத்துவர் பற்றி... நான் சொல்லியே ஆக
வேண்டும்.
வ.உ.சி:
ஓஹோ... சரி.
அப்படியானால், என்னை சந்திப்பதில் உங்களுக்கு எதுவும்
ஊறு நிகழ்ந்து
விடாமல் கவனமாகப்
பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜெயிலர்:
வடுகராமன்... என்ன
செய்து கொண்டிருக்கிறாய்?
உன்னை ஜெயில்
சூப்பிரண்டெண்ட் அறைக்கு கூப்பிடுகிறார். உடனே அங்கு
போ.
வடுகராமன்:
சரி, இப்போதே
நான் அங்கு
செல்கிறேன்.
ஜெயிலர்:
என்ன பிள்ளைவாள்...
இங்கும் ஆள்
பிடிக்கிறீர்களா?
வ.உ.சி:
ஆள் பிடிப்பது,
வால் பிடிப்பது,
நாடு பிடிப்பது
இதெல்லாம் எங்கள் வேலையல்ல.
ஜெயிலர்:
ம்ம்ம்... திமிர்.
வாய்க்கொழுப்பு. இந்த இரண்டும் உங்களுக்கு அதிகம்
என்று கேள்விப்
பட்டிருக்கிறேன்.(கைத்தட்டி) ஏய், இங்கே வா.
இவரை செக்கிழுக்கும்
பகுதிக்கு இட்டுச்
செல். அங்கு
மாடுகளுக்கு பதிலாக இவரைப் பூட்டி இழுக்கச்
சொல்.
வ.உ.சி:
அதற்கெல்லாம் அஞ்சோம்.
நாங்கள் எள்
என்றால் எண்ணெயாக
இருப்பவர்கள். எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கவும் எங்களுக்குத்
தெரியும்.
ஜெயிலர்:
அப்படியா? அதை
நாள் முழுக்க
தாராளமாகச் செய்யுங்கள். கையோடு கொண்டுபோங்கள் இவரை.
காட்சி: 14
பாத்திரங்கள்
:
வ.உ.சி, , வடுகராமன்,
வடுகராமன்:
தமிழர்களின் வீரம்
தழைக்க இந்தியர்களின்
மானம் காக்க
அன்று கப்பல்
இழுத்த உங்களை
இங்கு செக்கிழுக்க
வைத்து விட்டார்களே
கயவர்கள்...!
வ.உ.சி:
பரவாயில்லை வடுகராமா...
பாரதத் தாயின்
அடிமை விலங்கை
உடைக்க கப்பலையும்
இழுப்போம்; செக்கையும் இழுப்போம்.
வடுகராமன்:
என்னால் தானே
உங்களுக்கு இத்தனை இக்கட்டு...உங்கள் கைகளெல்லாம்
தோலுரிந்து வெடித்துக் கிடக்கின்றனவே. தினவெடுக்கும் உங்கள்
தோள்களில் தான்
எத்தனை ஆழமான
ரணம்.
வ.உ.சி:
போகட்டும். உன்னைச்
சும்மாவா விட்டார்கள்?
வடுகநாதன்:
மிகக் கேவலமாக
நடத்தினார்கள். இழிவாகப் பேசினார்கள். ஆனால், என்னிடம்
இலேசான பயமுண்டு
அவர்களுக்கு. என் மூர்க்கத் தனம் முன்
அவ்வளவு சீக்கிரம்
வாலாட்ட மாட்டார்கள்.
வ.உ.சி:
நீ என்னை
அதிகம் சந்திக்க
வேண்டாம். இப்பொழுது
கூட நான்
உன்னை அழைத்ததற்குக்
காரணம் ஆறுமுகம்
பிள்ளை உன்னைப்
பற்றி ஒரு
தகவல் சொன்னார்.
அது உண்மையா
என்று அறியத்தான்
அழைத்தேன்.
வடுகராமன்:
ஓ... புரிகிறது.
உங்களிடம் அதுபற்றி
விவாதிக்க வேண்டாமென்று
சொல்லியிருந்தேனே... ம்ம்ம்... உங்களின்
விசுவாசி. நான்
சொல்லியா கேட்கப்
போகிறார்?
வ.உ.சி:
ஆனால் நீ
நான் சொல்வதைக்
கேட்க வேண்டும்.
வடுகராமன்:
ஐயா, இந்த
ஜெயிலரும், சூப்பிரண்டெண்டும் உங்களை இழிவு படுத்திய
சிறைத்துறை மருத்துவரும் ஒருகாலும் திருந்த மாட்டார்கள்.
அவர்கள் மூவரையும்
ஒரே நேரத்தில்
தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகின்றோம்.
வ.உ.சி:
தயவு செய்து
அந்தத் திட்டத்தைக்
கைவிட்டுவிடு. வெள்ளையர்களின் ஆட்சியை ஒழித்து அவர்களை
இங்கிருந்து விரட்ட வேண்டுமே தவிர, அவர்களையே
அழிக்க நினைக்கக்
கூடாது.
வடுகராமன்:
ஐயா, இதில்
உங்களை ஒருபோதும்
சம்பந்தப் படுத்த
மாட்டோம். எங்கள்
வழியில் எங்களை
விட்டுவிடுங்கள்.
வ.உ.சி:
உயிர்க்கொலை என்பது
எதற்கும் தீர்வாகாது.
அது கொடிய
பாவமும் கூட.
எந்த ஜென்மத்தில்
நாம் என்ன
பாவம் செய்தோமோ...
இந்த சிறைச்சாலையில்
வந்து சித்திரவதைப்
பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் ஏன்
பாவச் செயலைத்
தொடர வேண்டும்?
வடுகராமன்:
ஆனால், அவர்கள்
தொடர்ந்து இதே
சிறையிலிருந்தால், ஒருநாள் இல்லாவிட்டால்
ஒருநாள் நான்
கோபத்தில் அவர்களை
அடித்தே கொன்று
விடுவேன். திட்டமிடாமல்
ஒருவனைக் கொல்லுவதை
விட திட்டமிட்டு
மூன்று பேரை
தீர்த்துக் கட்டிவிடலாம்.
வ.உ.சி:
உன்னுடைய பிரச்சினை
அவர்கள் இங்கு
இருப்பது தானே..
உன் புத்திக்
கூர்மையைப் பயன்படுத்தி, அவர்களை இந்த ஜெயிலை
விட்டு விரட்ட
முயற்சி செய்.
வடுகராமன்:
ம்ம்ம்...
சரி. உங்கள்
பேச்சை என்னால்
மீற முடியவில்லை.
முயற்சி செய்கிறேன்.
உங்கள் மீதான
தீர்ப்பை எதிர்த்து
மேல்முறையீடு செய்திருந்தீர்களே... அது என்னாயிற்று?
வ.உ.சி:
முதல் குற்றத்துக்கு
ஆறாண்டுகளும், இரண்டாம் குற்றத்துக்கு மூன்றாண்டுகளுமாக தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் அத்துடன் விடப்போவதில்லை. பிரிவி.கவுன்சிலில்
மனுச்செய்து மீண்டும் போராடப் போகிறேன். தண்டனைக்
குறைவென்பது எனக்கு வழங்கப் படும் நீதியல்ல.
நீதிமன்றத்தில் தண்டனை என்று தரப்படுவதே நான்
குற்றவாளி என்பதையும்
ஊர்ஜிதம் செய்வது
போல்தான் இருக்கிறது.
வடுகராமன்:
கவலைப் படாதீர்கள்.
சரித்திரம் உங்களைப் புரிந்து கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>