சகடத்தின் உயிர்ச் சக்கரம்
பெருவிழியின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீர்
வலியின் மொழியாக பெருக்கெடுத்து ஒழுகியது...
அசையும் காற்றோடு இசைவாக அசைபோடும்
தசைகள் அசைவின்றி
வெளிறின
ம்..ம்..மா எனும் ஒற்றைச் சொல்லால் உலக மொழிகளோடு உரையாடும் குரல் தேய்ந்து தொண்டைக்குள் கரைந்தது...
திமிலிழுத்த பாரங்கள் இறங்கிய பின்னர்
பூட்டாங்கயிறு விடுவித்த நுகத்தடியில் தொற்றிக்கொண்டு இருந்தன
கன்று முதல்
இன்று வரையான நினைவுகள்..
ஓடித்தேய்ந்த இரு மரவட்டுகள்
உயிரியக்கம் இன்றி
தேங்கி நின்றன
நிழலில்...
தன்முன் வணங்குதலுக்காக
ஏற்றப்பட்ட சுடர்
மோட்ச தீபம் என்றறியாமல்
வெறித்துக் கொண்டிருந்தது செவலை..
முற்றிய நோய் திறந்து விட்டிருந்தது
மரண வீட்டின்
வாசலை...
அன்பை
'இறக்க' வழியின்றி
இறுதி நிமிடங்களில்
தவித்துக் கொண்டிருந்தது
சகடத்தின் உயிர்ச் சக்கரம்...
_பாரதிக்குமார்
- தலைமைச் செயலக குறிஞ்சி தமிழ் மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் தேர்வுப் பெற்ற கவிதை
குறிப்பு : சகடம் என்றால் மாட்டு வண்டி என்று ஒரு பொருள் உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>