ஃபிரான்சிஸ்
இட்டிக்கோரா
-
மலையாள மூலம் ட்டி.டி.ராமகிருஷ்ணன்
-
தமிழில் குறிஞ்சிவேலன்
பக்கம்: 352, விலை: 275
உயிர்மை பதிப்பகம்
ஒரு பிரம்மாண்ட உலகின்
பிரம்மிக்கத்தக்க சகல வெளிகளிலும் பயணிக்கும்
அனுபவத்தை ஒரு நாவல் தரமுடியுமா
என்ன? ட்டி.டி.ராமகிருஷ்ணன்
தனது ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா நாவல் மூலம் அப்படியான
ஒரு அனுபவத்தை தந்திருக்கிறார். ஏற்கனவே ‘ஆல்ஃபா' நாவல் மூலம்
மலையாள மற்றும் தமிழ் வாசகர்களிடையே
பரவலான கவனத்தை ஈர்த்த ராமகிருஷ்ணன்,
பின்நவீனத்தின் எல்லையற்ற சுதந்திர வெளிகளில் பசிகொண்ட பறவையாக பறந்து, பறந்து
வேட்டையாடுகிறார். அவரது கூர்ந்த அலகில்
வரலாறு, கணிதம், இலக்கியங்கள், இதிகாசம்,
அரசியல் , பல்வேறுபட்ட மனித கலாச்சாரம் என எதுவுமே
தப்பவில்லை.
வாசித்தலின்போது கணநேர அலட்சியத்தையும் யோசிக்க
முடியாத வகையில் நாவல் கனமான
விஷயங்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. கணித மேதை ஹைபேஷியா
துவங்கி துபாக் அமரு, ஈராக்கின்
சித்திரவதைக் கூடம் அபுகிரைப், பால்
ஏர்தோஸ், ஃபெர்மாட்டின் இறுதி தேற்றம், மைக்கேல்
ஏஞ்சலோ, சதாம் உசேன், பெருவின்
அரசியல் சூழல் என எட்டு
திக்கும் பாய்ச்சல் நிகழ்த்தும் ராமகிருஷ்ணன், நரபோஜிகள் பற்றிய விபரங்கள், வர்ணனைகளை
தரும்போது வாசிப்பவர்களை திடுக்கிட வைக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதுவதற்கும்
முன் ஒரு மிகப்பெரிய தேடலை
வேட்கையோடு நிகழ்த்தியிருக்கிறார். நாவலின் கதை இதுதான்
என சுருக்க முயல்வது நாவலுக்குச்
செய்யும் அநீதி என்றே படுகிறது.
புனைவும் உண்மையும் பின்னிப் பிணைந்து களிநடனம் புரிகின்றன. இதில் எது உண்மை
எது கற்பனை என்று தெரியாத
அளவு அவரது எழுத்துத் திறன்
ஒரு மர்ம குகைக்குள் நம்மை
இட்டுச் செல்கிறது. பலசமயம் ராமகிருஷ்ணனின் வேகத்துக்கு
ஈடு கொடுக்க முடியாமல் தளர்ந்து
போய்விடுவதும் நடக்கிறது.
பதினெட்டாம் கூட்டத்தார்கள் என்கிற வினோத வம்சாவழியினர் விசித்திரமான
சடங்குகள், கட்டுப்பாடுகளோடு இருந்தனரா?.. கோராப்பாட்டன் என்பவர் யார்? மர்மயோகியா?
மாந்த்ரீகனா?கடவுளா என்பதை எல்லாம் அனுமானிக்க
முடியாதபடி அந்த கதாபாத்திரத்தை நாவல்
முழுக்க பேசப்படும்படி அல்லது வாசிப்பவர்கள் உள்ளத்திலிருந்து
அழிக்க முடியாதபடி வெற்றிகரமாக செதுக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் வாசிக்கின்றவர்களே
கூட இட்டிக்கோராவைப் பற்றிய ஆய்வில் இறங்கவேண்டும்
என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது ராமகிருஷ்ணனின் பாத்திர படைப்பு.
எங்கோ பிறந்த ஹைபேஷியாவையும்,
இட்டிக்கோராவையும் மிக சாமர்த்தியமாக ஒரு
புள்ளியில் இணைக்க முயற்சிக்கிறார். சமீபத்தில்
கனடா வாழ் தமிழ் எழுத்தாளர்
அ.முத்துலிங்கம் மரபணு
ஆய்வு மையம் ஒன்றில் தனது
மூதாதையர் பற்றிய மரபணு வரைபடத்தை
டி.என்.ஏ ஆய்வு
மூலம் பெற்றதாக செய்தியினை அனைவரும் அறிந்திருக்கலாம். ராமகிருஷ்ணன் தனது படைப்பாக்கம் மூலம்
கேரள சிந்தனை மரபொன்றை அலெக்ஸாண்ட்ரியாவோடு
தொடர்புப்படுத்த முயல்கிறார். கணிதம், வரலாறு ஆகிய
இரண்டையும் சமதூரத்தில் வைத்துக்கொண்டு அனாயசமாக இந்த நாவலை தான்
எண்ணிய இலக்கை நோக்கி நடைபோடுகிறார்.
அந்தந்த தேசத்து கலாச்சாரம்,
இடங்கள் பற்றிய தெளிவு, ஆடைகள்,
உணவு வழக்கங்கள் என எல்லாவற்றையும் பார்த்து
பார்த்து நெய்திருக்கிறார். கேரளம், ஈராக், பெரு,
அமெரிக்கா, ரோம் என்று பயணிக்கும்
இந்த நாவலின் களம் தமிழுக்கு
மிகவும் புதியது.
இந்த நாவலை மொழி
பெயர்க்கத் துணிவது ஒரு சித்திரவதைக்
கூடத்தில் தானே தன்னை அடைத்துக்கொளவது
போன்ற அவஸ்தை என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில் இதன் ஒவ்வொரு அத்தியாயமும்
ஒரு நாவலுக்கு நிகரான உழைப்பை சுரண்டக்கூடியது.
போகிற போக்கில் இதனை மொழிபெயர்த்துவிட முடியாது.
சுயபடைப்பொன்றை புனைவதற்கும் மேலான கவனமும், உழைப்பும்
தேவைப்படுகிற புதினம் இது. குறிஞ்சிவேலனின்
மொழிபெயர்ப்புப் பணி அசாத்தியமானது. மன
உறுதி இல்லை என்றால் எந்த
நேரத்திலும் இந்த முயற்சியை பாதியிலேயே
நிறுத்திவிட நேரும் அபாயம் கொண்டது
இதன் தகவல் திகைப்புகள். குறிஞ்சிவேலனின்
அசாத்தியமான அற்புதமான மொழிபெயர்ப்பு தமிழுக்கு ஒரு அருமையான படைப்பிலக்கியத்தை
பரிசாக தந்திருக்கின்றது.
இதன் மொழிபெயர்ப்புப் பணியை
சரிபார்க்க ராமகிருஷ்ணன் நேரில் குறிஞ்சிவேலன் அவர்களின்
இல்லம் வந்து தங்கியிருந்து அதனை
முனைந்து செய்துகொண்டிருந்த வேளையில், அவரை சந்தித்தது நினைவுக்கு
வருகிறது. அந்த அர்ப்பணிப்பு இந்த
நாவலை நமக்கு அச்சு அசலாக
தந்திருக்கிறது.
இத்தனை பார்த்து, பார்த்து
செதுக்கிய நாவலில் சில நெருடல்களும்
இல்லாமலில்லை. ஃபெர்மாட்டின் இறுதி தேற்றத்தை நிருபிப்பதில்
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட
மேரி சோபி ஜெர்மெயின் பற்றி
சில தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
பாரிசில் அன்றிருந்த அரசியல் சூழலில் பெண்களுக்கு
கணிதம், மற்றும் அறிவியல் போன்ற
துறைகளில் கல்வி கற்க அனுமதி
மறுக்கப்பட்டிருந்தது. அதனால் இகோல் தொழில்நுட்பக்கல்லூரியில்
சோஃபிக்கு கணிதம் படிக்க இடம்
கிடைக்க வில்லை என்பதுவரை சரிதான்.
ஆனால் வீட்டிலிருந்தே ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும்
பாடத்திட்டத்தில் சேர்ந்து பின் பாதியில் படிப்பைவிட்ட
எம். லீ ப்ளாங்க் என்பவர்
ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது போல மாணவி அல்ல
அவன் ஒரு மாணவன். ( ப்ளாங்க்
மாணவி எனில் சோபிக்கே கல்வி
கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமே.. சோபியின் தந்தை அம்புரோஸ் ஃபிரான்காயிஸ்
அரசின் அதிகாரம் மிக்க நிர்வாகக்குழுவில் இருந்தவர்.
ஆனால் அவரால் கூட அந்த
சட்டத்தை மீறமுடியாது)
ப்ளாங்க் பாரிசைவிட்டுச் செல்லும்போது கல்லூரிக்குத் தெரிவிக்காமல் சென்றதால் அவனது பெயரில் கணித
ஆய்வுகட்டுரைகளை அனுப்பினார் சோஃபி. கல்லூரிப் பேராசிரியரும்,
பிரான்சின் கணித மேதையுமான லாரிஞ்சே
கட்டுரைகளை வாசித்துவிட்டு ப்ளாங்க்கின் அறிவுத்திறன் அத்தனை மேன்மையானது இல்லையே
என்று சந்தேகப்பட்டு கல்லூரிக்கு நேரில் வரும்படி கடிதம்
அனுப்பினார். வேறு வழி இல்லாமல்
சோஃபி அப்பொழுதுதான் தான் ஒரு பெண்
என்பதை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.
அது சட்டப்படி குற்றம் என்பதால் தொடர்ந்து
அவ்வாறு செய்ய அனுமதிக்க முடியாது
என லாரிஞ்சே மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது
ஆய்வுக் கட்டுரைகள் நுட்பமானவை என்பதால்
தனக்கு தொடர்ந்து அனுப்பும்படியும், கணிதம் தொடர்பான சோஃபியின்
ஆய்வுகளுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.
நாவல் ஆசிரியர் குறிப்பிட்டது போல சோஃபி தன்
அழகைக் காட்டித்தான் அவருடனான நட்பைப் பெற்றார் என்பது
சுத்த அபத்தம்.
அன்றைய நாளில் பெண்கள்
அதிகம் நடமாட முடியாதபடி பாரிசில்
கலவரச்சூழல் இருந்தது. இருவருக்குமான தொடர்பு அதிகமானது ஆய்வுதாள்களின்
வழியில்தான். லாரிஞ்சேவுடனான அறிமுகம் சோஃபிக்கு மாபெரும் அங்கீகாரம் எதையும் தரவில்லை. அவரால்
ஒரு சான்றிதழைக்கூட இகோல் கல்லூரியில் இருந்து
சோஃபிக்கு பெற்றுத்தர இயலவில்லை.
ஜெர்மானிய கணிதமேதை ‘காஸ்' (GAUSS) என்பவர்தான் சோஃபியின் கணிதத்திறமையை வியந்து, அவருக்கு காடிங்டன் பல்கலைக்கழகத்தில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கவேண்டும்
என பெரிதும் முயற்சித்தார். காஸ்-இன் முயற்சியின் காரணமாக
சோஃபிக்கு பிரான்சின்
புகழ் பெற்ற இன்ஸ்டியூட் ஆஃப்
அகாடமி அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல்
பெண் உறுப்பினர் சோஃபியாதான். இதைத்தவிர அவருக்கு எவ்வித கௌரவமும் அவர்
உயிருடன் இருக்கும் வரை வழங்கப்படவில்லை.
திருமணமே செய்துகொள்ளாமல்
கணித ஆய்வுகளிலேயே தனது வாழ்வின் எஞ்சிய
நாட்களை செலவிட்ட சோஃபியா இறுதிகாலத்தில்
புற்று நோயால் மரணமுற்றார்.
அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப்பிறகு ‘காஸ்'-ன் கடுமையான
முயற்சிகளால் காடிங்கன் பல்கலைக்கழகம் சோஃபியாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
வழங்கியது. இத்தனைக்கும் ‘காஸ்' ஒரு முறை
கூட சோஃபியை நேரில் சந்தித்தது
இல்லை. வெறும் கடிதத் தொடர்புகள்..
அதுவும் கணித ஆய்வுகள் சம்மந்தப்பட்டவையே..
ஆக சோஃபி கவர்ச்சியால் தன்னை
முன்னிலைப்படுத்தினார் என்பது அவரின் திறனை
சிறுமைப்படுத்துவதாகும். எத்தனை பெரிய மேதையாக
இருந்தாலும் அவர் பெண்தானே அவர்
‘எதையும் அப்படித்தான் பெற்றிருப்பார்'என்கிற எண்ணம் பிற்போக்கானது.
ரோம் சாம்ராஜ்யத்தின் ஹைபேஷியா,
ஹங்கேரியின் ஏர்தோஷ், பிரான்சின் ஃபெர்மாட் மற்றும் மேரி சோஃபி
என உலகின் பல்வேறு கணித
ஆளுமைகளை நாவலில் கதாபாத்திரங்களாக உலவவிட்ட
ராமகிருஷ்ணன்.. இந்தியாவைப் பொருத்தவரை இட்டிக்கோராவை மட்டுமே முன்னிறுத்துவது ஆச்சர்யமளிக்கிறது.
ஒரு ஜனரஞ்சக திரைப்படத்தில் எல்லாப்புகழும்
கதாநாயகனுக்கே என்பதுபோன்ற முயற்சி. அது படைப்பாளியின் உரிமை
எனக்கூட சொல்லலாம்.. ஆனால் இந்த நாவல்
உண்மையையும், வரலாற்றையும் பிணைத்து சொல்கிறது எனவே அந்த கண்ணோட்டத்தில்
இதனை வாசிக்கும் போது இது ஆபத்தான
உத்தி.. இந்தியாவை பொருத்தவரை ஆரியபட்டாக்கள், வராஹமிரா, பிரம்மகுப்தா, பவுலரி மல்லானா, ஸ்ரீதரா, பாஸ்கராக்கள்,
இராமானுஜர், எஸ். எஸ். பிள்ளை,
காப்ரேகர், சகுந்தலாதேவி வரை ஒரு நீண்ட
கணித பாரம்பரியம் இருக்கிறது. இராமனுஜரை ஒரு சில வரிகளில்
கடந்து செல்கிறார். பாஸ்கராவின் லீலாவதியில் ஒரு செய்யுளை பயன்படுத்தி
இருக்கிறார். மற்றவர்களை ‘கவனமாக' மறந்துவிடுகிறார். ஆனால்
இந்த நாவல் அவர்களைப் பற்றி
எல்லாம் சொல்ல கிடைத்த அபூர்வமான
களம்.
நாவலில் ஏர்தோஷ் இளம்பெண்களை
Epsilons என்று தனது தனிப்பட்ட மொழியில்
அழைக்கும் பழக்கம் உள்ளவரென முதலில்
அறிமுகம் செய்கிறார். அவ்வாறே மொறிகாமியை அழைக்கவும்
செய்கிறார். அடுத்த சில பக்கத்தில்
வகுப்பறையில் ‘ நீ ஆண் என்றல்லவா
நினைத்தேன்' என ஆச்சர்யத்துடன் கேட்கிறார்.
அப்படியானால் அதற்கு முந்தைய பக்கங்களில்
Epsilon என அழைப்பது முரண் இல்லையா? அதுபோல
பொறிஞ்சு பாதிரியாரின் பெயர் குழப்பமும் உண்டு.
ஒரு வேளை வாசித்தலின் போது
ஏற்படும் குழப்பமாகவும் இருக்கலாம்.
ஒரு நாவலை எழுத
ராமகிருஷ்ணன் எத்தனை பிரயாசைப் படுகிறார்
என்பது நாவலின் ஒவ்வொரு வரியிலும்
புலனாகிறது. ஆலிஸின் அற்புத உலகம்
போல எத்தனை முறை நுழைந்தாலும்
பிரம்மிப்பூட்டுகிறது. இந்திய நாவல் இலக்கியத்தில்
இது குறிப்பிடத்தக்க முயற்சி.. அவரது அடுத்த நாவலை
பரபரப்புடன் மனம் எதிர்நோக்குகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>