வியாழன், 23 ஜூன், 2022

 

பாரதியார் என்னும் பெரியார்

-    நெய்வேலி பாரதிக்குமார்

-     


தமிழ் என்னும் சொல்

எத்திசையிலிருந்து  ஒலித்தாலும்

அத்திசைக்கு  முதல் வரும் முதல்வர்

கல்வி என்று காதில் விழுந்தால்

களத்துக்கு முதல் வரும்..முதல்வர்

எத்தனை கவிகள் சுற்றி நின்றாலும்

அத்தனை பேருக்கும் அவர் செவி முதலாய் வரும்.

நமக்கு எல்லாம் நல்லறிவு நடுவர்

இன்று நமக்கமைந்த நடுவர்

 

அரசியல் எதுவும் பேசவில்லை அதிலே எனக்கு விருப்பில்லை

நீங்களாக எதுவும் நினைத்துக் கொண்டால் நான் அதற்குப் பொறுப்பில்லை....

நாம் செய்த பெரும் பேறு

நல்லவர்கள் முதல்வராக வாய்த்திருக்கிறார்கள்

அரசியல் எதுவும் பேசவில்லை அதிலே எனக்கு விருப்பில்லை

நீங்களாக எதுவும் நினைத்துக் கொண்டால் நான் அதற்குப் பொறுப்பில்லை....

 

நானும் உங்களைப்போல அப்பாவி

ராதாக்கிருஷ்ணனை சாதாக் கிருஷ்ணன் என்றுதான் நினைத்திருந்தேன்...

அகம் அறியவியலா முகம்

அதிரா குரல்... யார் மனமும்

சிதறா அணுக்கம்

ராதாக்கிருஷ்ணனை சாதாக்கிருஷ்ணன் என்றுதான் நினைத்திருந்தேன்

கிருஷ்ணன்கள் என்றைக்கு சாதாவாக, சாதுவாக இருந்திருக்கிறார்கள்

 

திசை எட்டும் பரவட்டும் தீ கவிஞன் புகழ் என

கவிபாட திணற எட்டு தலைப்புகளை தீப்பந்தமாகத் தந்தார் கையில்

மூச்சுத் திணறுகிறதா.. பேச்சு குழறுகிறதா

மொழி திருகுகிறதா விழி பிதுங்குகிறதா என உதட்டுக்குள் சிரித்தபடி

அமர்ந்திருக்கும்  ராதாக்கிருஷ்ணனை சாதாக்கிருஷ்ணன் என நினைத்துவிட்டேன்

எவரும் ஊதா சங்கை எடுத்து என் கையில் தந்துவிட்டார்

சங்கு முழங்குகிறதா சங்கு முனங்குகிறதா என இங்கு அமர்ந்து ரசிக்கும் ராதாகிருஷ்ணன் சாதாக் கிருஷ்ணன் இல்லை அறிவீர் அன்பர்களே..

 

பாரதியார் என்னும் பெரியார்

என்ற தலைப்பு கேட்பவரை மிரள வைக்கும்

இரண்டும் ஒன்றா என்று ஒரு சிலரை திகைக்க வைக்கும்..

 

பாரதியார் என்னும் பெரியார்

முதலில் பாரதி யார்..?

மரபுக்கவிதையின் ஆலமரம்

புதுக்கவிதையின் மூல வித்து

சிறுகதையின் பெருங்கிளை

நாவல் இலக்கியத்தின் ஆணி வேர்

பத்திரிகையாளன் என்னும் பச்சையம்

மொத்த இலக்கிய பூமியின் ஒற்றை இமயம்

முப்பத்தி ஒன்பது அகவைக்குள் தமிழின் கம்பீர முகம்

என்னும் செயற்கரிய செயல் சாதித்தவன்..

இலக்கியத்துடன் முடிந்து போனவையா 

அவன் இலக்குகள் ..?

வெறும் கவிதைத் தொகுப்பா அவன் ?

அவன் தலைப்பாகை என்பது

எழுத்துக் குவியலின் மேல்

சூட்டப்பட்ட கிரீடமா?

பாரதியின் தரிசனம் வரிகளின் வழியே மட்டுமல்ல..

அவனது வாழ்வின் வழியே அடையக்கூடியது..

 

காந்தியார் வந்திருந்தார் சென்னைக்கு ஒரு முறை

ஒவ்வொரு நிமிடத்தையும் அளந்து வைப்பது அவர் முறை

ஆலோசனைக் கூடத்தில் அவரைச் சுற்றி

நிறைய பேர் நின்றிருக்க

அவசரமாய் நுழைந்தார் பாரதி

இடமில்லையே என திகைக்கவில்லை மகாகவி

சட்டமாய் அவரருகில் சென்று அமர்ந்து

திட்டமிடாமல் தன் கூட்டத்துக்கு திடீரென அழைத்தார் பாரதி

இன்னொரு நாள் தள்ள முடியுமா எனக் கேட்டார் மகாத்மா..

எவர் பொருட்டும் மாறுவது என் பழக்கமில்லை மறுதலித்தார் மகாகவி

‘சுயமரியாதைக்காரன் என்று பாரதியை நான் அழைத்தால் பிழையொன்றுமில்லை 

புரிந்துகொண்டு நீங்கள் ஆர்ப்பரித்தால்  நான் அதற்கு பொறுப்பில்லை..

 

பார்ப்பானை அய்யர் என்ற காலம் போச்சே

பாட்டால் சாட்டை வீசிய பாவலன்

பூணூல் அணிய மறுத்து உதறியவன்

ஆதிதிராவிடர் கனகலிங்கத்துக்கு பூணூல்

அணிவித்து இன்றிலிருந்து நீ பிராமணன்

என அறிவித்தார் உலகறிய..

பூணூல் இனத்தின் அடையாளமில்லை

வேதம் கற்றதன் அடையாளம் என

முரசறைந்தார் 

கனகலிங்கமே என் மகன்

நான் மரணமுற்றால் அவனே தீ மூட்டட்டும் என

சனாதனத்தின் வயிறுகளில் தீ மூட்டியவர்..

சனாதனத்துக்கும் மனு நீதிக்கும் தீ மூட்டியவர் எவரோ

அவரெல்லாம் நமக்கு பெரியார் என்று நாம் சொல்லுவோம்

அவர்தான் பெரியார் என்று நான் சொல்லவில்லை

 

மனைவியை துணைவி என்று அழைப்பவர் சாதாரணர்

மனைவியை இணை என்று நினைப்பவர் அசாதாரணர்

இணையாகவே நடத்துபவர் மாமனிதர்

எல்லோர் இல்லத்திலும் அரித்துப்போன

கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று இருக்கும்..

பாட்டனும் பாட்டியும் முறைத்தபடி அதிலிருப்பர்

பாட்டன் அமர்ந்திருக்க பாட்டி அடங்கி ஒடுங்கி நின்றிருப்பார்

பாரதியின் புகைப்படம் யாவிலும்

செல்லம்மா இணையாக நின்றிருப்பார் இல்லை

பாரதி நின்றிருக்க செல்லம்மா அமர்ந்திருப்பார்..

நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படியே..

தெருக்களில் நடக்கும் போதும்

பாரதியின் ஆதரவான கைகள் அணைத்திருக்கும்

செல்லம்மாவின் தோள்களை....

அக்ரஹாரம் முழுக்க பொருமித் தீர்க்கும்..

போகுது பாரு பைத்தியங்கள் வீதி உலா..

எனத் திட்டி கைகள் முறிக்கும்   

  

நடைபயிற்சி பற்றி எழுதச் சொன்னால்

நானும் எழுதுவேன் நீங்களும் எழுதுவீர்கள்

நடந்தால் மேனி இளகும் நடந்தால் நலமே சூழும்

நடந்தால் சர்க்கரை குறையும் நடந்தால் ஆயுள் நிறையும்

நானும் எழுதினேன் நீங்களும் எழுதுவீர்கள்..

பாரதி எழுதினான் நடை பயிற்சி அனுபவத்தை

மாலையில் நடை பழக சென்றேன்

வானம் கருத்திருந்தது மேகம் திரண்டிருந்தது வானிலை சொன்னது

மழை வருமென எதிரே வந்த வைதீகனை எச்சரித்தேன்

பஞ்சாங்கத்தில் மழை இல்லை.. திதியை கணக்கிட்டேன்

அதுவும் சொல்லவில்லை வேலையைப்பாரும்

என்று சிரித்துப்போனார் வைதிகர்

திரும்ப வருகையில் ஊறுகாயாய் ஊறி நனைந்து வந்தார்

அறிவியல் பெரிதில்லையா ஆன்றோரே

சோதிடம்தனை இகழ்ந்தவர் மகாகவி அறிவீரே..

 

'நாட்டின் விடுதலைக்கு முன்,
நரம்பின் விடுதலை வேண்டும்;
நாவுக்கு விடுதலை வேண்டும்;
பாவுக்கு விடுதலை வேண்டும்;
பாஷைக்கு விடுதலை வேண்டும்'

என்றவன் பாரதி

சுயமரியாதைக்காரர்கள் யாவரும்

அதைத்தான் சொன்னார்கள்

அவர்கள் பேசும் உரைகளில் சொன்னார்கள்

பாரதி கவி வரிகளில் சொன்னான்

 

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்

 என்கிறது தொல்காப்பியம்

உரை எழுதிய இளம்பூரணார் செப்பினார்

“நும் நாடு எதுவெனில் தமிழ்நாடு என்றல்’ என்கிறார்  

 

‘மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல்

தமிழ் நாட்டில் பெயரதிர் மாதோ”

என்றான் கம்பன் கிஷ்கிந்தா காண்டத்தில்

 

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்

முதுநீர் உலகு முழுமையும் இல்லை

என்கிறது சிலப்பதிகாரம்

 

கம்பன் இளங்கோவன் வரிகளில்

அதிகம் ஒன்றிய பாரதி சொன்னான்

வரிகளில் அதிகம் ஒன்றிய பாரதி என்றுதான் சொன்னேன்

நன்றாக கவனியுங்கள்

வரிகள் அதிகம் ஒன்றியம் என்று செவிகளில் விழுந்தால்

நான் அதற்கு பொறுப்பில்லை அவையோரே

கம்பன் இளங்கோவன் வரிகளில் அதிகம் ஒன்றிய பாரதி சொன்னான்

செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

ஒன்றியம் என்றதும் காதில் ஈயம் காய்ச்சியது போல் இருந்ததால்

சில நரிகள் இனி தமிழகம் என அழைப்போம்

என தனிக்காட்டில் ஊளையிட்டபடி இருக்கின்றன

நன்றாக நினைவில் கொள்

செந்தமிழ் நாடென்பது தொல்காப்பியன் துவங்கி

கம்பன் கைகளில் ஏந்தி இளங்கோ சுமந்து

மகாகவி எம் கையளித்தது

எவர் பறிக்கவும் அனுமதியோம்..

 

திரும்பவும் தலைப்பிற்கு வருகிறேன்

பாரதியார் என்னும் பெரியார்

அவரும் இவரும் ஒன்றா

அவர் எப்படி இவராவார்

இவர் எப்படி அவராவார்

இரு தரப்பும் ஏற்காது 

 

தலைப்பைக் கண்டதும் என் தாத்தனிடம் கேட்டேன்..

தாத்தன் யார் ?

நமக்கெல்லாம் பாட்டன் வள்ளுவன்தானே..

சரியா  நியாயமா எனக் கனிவாய் கேட்டேன்

 

பாரதி.... யார்? என திருப்பிக் கேட்டான் வள்ளுவன்

சுயமரியாதைக்காரன்

சனாதனத்தின் வயிற்றில் நெருப்பு வைத்தவன்

பெண் விடுதலை போற்றியவன்

சோதிடம்தன்னை இகழ்ந்தவன் 

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் மகுடம் சூட்டியவன்..

முப்பத்தி ஒன்பது வயதுக்குள்

மொத்த தமிழினத்தின் காவிய அடையாளமாக மாறிய

செயற்கரிய செயல் செய்தவன் என்றேன்

 

பிறகென்ன  ஐயம்  

செயற்கரிய செய்பவர் பெரியர் என்று தெளிவாய் சொன்னார் வள்ளுவர்

ஒருக்கால் ஒரு காலை விட்டாரோ..ஒரு காலை நாம் சேர்த்தோமோ

இல்லை.. நான்தான் ஆழம் தெரியாமல் காலை விட்டேனோ

எதுவென்றாலும் பொருள் ஒன்றுதான் செயற்கரிய செய்தவர் பெரியர்..

இவர்தான் அவரென்று  சொல்லவில்லை

நான் அவர்தான் இவரென்று இயம்பவில்லை

நீங்கள் அப்படி  நினைத்திருந்தால் அதில் தவறொன்றும் இல்லை

 

சிந்தனையாளர்கள் ஒருவர் போல் இன்னொருவர் இருப்பதில்லை

ஒரேபோல் இருக்க வேண்டுமெனில்  

தனித்தனியே சிந்தனையாளர்கள் தேவை இல்லை

பெரியாரை பாரதி ஏற்றதாய் தகவல் இல்லை

பாரதியை பெரியார் போற்றியதாய் நினைவு இல்லை..

தீபங்கள் ஒன்றையொன்று ஏற்றிக் கொள்ளாது

ஒளி  வேண்டுமெனில் நாம்தான் ஏற்றிக்கொள்ள வேண்டும்..

 

சனாதனத்தின் வாகனங்களில்

நிச்சயம் பெரியாருக்கு இருக்கை இருக்காது

அவரும் ஏறமாட்டார்  

முன்னேற்றப் பயணத்தில்

முற்போக்கு விமானத்தில்

அருகருகே இருவருக்கும் இருக்கை அமைப்போம்

 

அவர் எப்படி இவராவார்

இவர் எப்படி அவராவார்

என்று கொதிக்கும் யாவரும்

ஒரு கணம் பொறுக்கலாம்

ஒளி வீசும் யாவும் தீபங்களே

 

இரு தீபங்களையும் நாம் இரு கைகளில் ஏந்துவோம்

நாம் கையிறக்கினால் கள்வர்கள் கையேந்தி செல்வர்

பாரதியாரைப் போற்றுவோம்

பெரியாரைப் போற்றுவோம்  

இவரை அவராக்கி அவரை இவராக்கி

இருவரையும் சங்கமமாக்கி

இலக்கை நோக்கிய சங்கமமாக்கிய  

இலக்கியச் சங்கம நண்பர்களை வணங்கி  விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்  

 

 

 

 

 

 

..  

 

 

 

  

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...