திங்கள், 27 ஜூன், 2022

 கிழக்கு வாசல் உதயம் இதழில் பிரசுரமான கட்டுரை 


அமைதிப் புயல் அன்னி'

 


அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் அமைதிப் புரட்சியாளர் என்று சொன்னால் அது அன்னிபெசண்ட்'ஐக் குறிக்கும். அவர் அணுகுமுறையில் அமைதியானவர் என்றாலும் முடிவுகள் எடுப்பதில் அதிதீவிரமானவர். அவரது பன்முகத் தன்மைகள் அதிகம் அறியப்படாதவை. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய பலரைப் பெயரளவில் தான் அறிந்திருக்கிறோம். அன்னி, இந்திய சுதந்திரத்திற்காக ஆற்றிய பணிகள், இந்திய தேசிய காங்கிரசில் அவரது மகத்தான பங்கு ஆகியவை விரிவாகப் பேசப்பட வேண்டியவை.

                இந்தியா சுதந்திரம் அடைவதற்கு மிகச்சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் (1847) அக்டோபர் 1ம் தேதியன்று லண்டன் வில்லியம் பேஜ்வுப், எமிலி மோரிஸ் தம்பதியர்க்குப் பிறந்தார். அன்னிக்கு ஐந்து வயதாகும்போது அவரது தந்தை திடீரென மறைந்தார். மருத்துவராகப் பணிபுரிந்தாலும், வில்லியம் எந்த சொத்தையும் பிள்ளைகளுக்காக சேர்த்து வைக்கவில்லை. அவர் இறந்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்ட ஆல்பர்ட் என்னும் அன்னியின் இளைய சகோதரன் இறந்து போனான். அன்னியின் குடும்பம் வறுமையில் உழன்றது. அன்னியின் தாயார் எமிலி, மாணவர் விடுதியொன்றில் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக அன்னியின் பள்ளிப் படிப்பு மூன்றாம் வகுப்போடு நின்றுபோனது.

                கல்வியில் நாட்டம் கொண்ட அன்னியின் ஆர்வத்தைக் கண்ட எமிலியின் குடும்ப நண்பர் மிஸ் எலன் மேரியம் என்பவர் அன்னியை தன் பொறுப்பில் பள்ளியில் படிக்க வைத்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவரை வளர்த்து 16ம் வயதில் மீண்டும் அவரது தாயாரிடம் ஒப்படைத்தார்.

                கவிதைகள், கதைகள் எழுதுவதில் விருப்பம் கொண்ட அன்னி, பல்வேறு படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை பிரசுரம் பெற்று சிறிதளவு தொகையை ஈட்டித் தந்தன.

                லண்டனில் மதபோதகராக இருந்த ஃபிராங்க் பெசண்ட் அன்னியை மணக்க விரும்புவதாக எமிலியிடம் தெரிவித்தார். அன்னி 21 வயதில் பிராங்க் பெசண்டை மணந்தார். திங்பே, நோபல் என்று இரண்டு குழந்தைகளை அவர்களுக்குப் பிறந்தன. ஆனால் அவர்களது திருமண வாழ்வு கசப்பான முரண்பாடுகளுடனே ஆறு ஆண்டுகள்தான் நீடித்தது.

                ஃபிராங்க் பெசண்ட் மனதளவிலும் ஒரு பிற்போக்குவாதியாக இருந்தார். இங்கிலாந்தில் அப்பொழுது திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, அன்னியின் படைப்புகளுக்காக பத்திரிகைகள் தரும் தொகையைத் தாமே பெற்றுக் கொண்டார். லண்டனின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு எதிராக அன்னி இறங்கியபோது ஃபிராங்க் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்தார். இருவருக்குமான கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததன் காரணமாக, வேறுவழியின்றி இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

                மன அழுத்தம் காரணமாக ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற அன்னி, தாமஸ் என்பவரின் தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு சுய சிந்தனை இயக்கத்தில் ஈடுபாடு காட்டினார்.

                சுய சிந்தனை இயக்கத் தலைவராக இருந்த சார்லஸ் பிராட்லாவுடனான அன்னியின் நட்பு, பலவிதமான மாற்றங்களை அவருள் ஏற்படுத்தியது. சமூக சேவைக்கான பேபிள் சங்கத்திலும், பெண்கள் சங்கத்திலும் உறுப்பினராகி பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டார்.

                அன்னியும் பிராட்லாவும் இணைந்து ஒரு பதிப்பகத்தைத் துவங்கினர். சாமுவேல் கோடன் என்பவர் எழுதிய சர்ச்சைக்குரிய தத்துவங்களின் கனி' என்கிற நூலை வெளியிட்டனர். அதில் கருத்தடையை ஆதரித்துச் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஒரு அமைப்பு இதன் பொருட்டுத் தொடர்ந்த வழக்கில் அன்னி, பிராட்லா இருவருக்கும் ஆறுமாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேல் முறையீட்டில் அந்த தண்டனை நீக்கப்பட்டது.

                பிரம்மஞான சபையின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அன்னி, அந்த அமைப்பின் கொள்கைகளைப் பரப்பினார். பிரம்மஞான சபையில் தீவிரமாக இயங்கிய பிளாவாட்ஸ்கி' அம்மையார் மறைந்த பிறகு, அவரது பணிகளை ஏற்றுக் கொண்ட அன்னி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பிரம்மஞான சபை குறித்து பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.

                சார்லஸ் பிராட்லா இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் அப்பொழுதிருந்த இங்கிலாந்து நாடாளுமன்ற சட்டப்படி, கிருத்துவத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். ஆனால், அப்படிச் செய்ய விரும்பாத பிராட்லே பதவியேற்காமலேயே திரும்பி விட்டார்.

                சுவாமி விவேகானந்தர் 1893ல் சிகாகோவில் சகோதர சகோதரிகளே' என்று துவங்கி நிகழ்த்திய புகழ்பெற்ற உரை பற்றி நாமறிவோம். உலக சமய மாநாட்டுக் கூட்டத்தில் இந்து சமயம் சார்பில் சுவாமி விவேகாநந்தர் அந்த உரையை நிகழ்த்தினார். அதே மாநாட்டில் பிரம்மஞான சபை சார்பாக அன்னி கலந்து கொண்டு உரை நிகழ்த்தியது பலரும் அறியாத செய்தி.

                அதேபோல் பேட்ரியன் கழகத்தில் இணைந்து பணியாற்றிய காலத்தில் அவருடன் அந்தக் கழகத்தில் இயங்கிய மற்றொரு பிரபலமான நபர் பெர்னாட்ஷா

                உலக சமய மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு இந்தியா மீதும் இந்து சமயம் மீதும் அன்னிக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1893ம் ஆண்டிலேயே அவர் இந்தியாவுக்கு வந்தார்.

                இந்து சமய புராணங்கள், இதிகாசங்களை முறையாக அறிந்து கொள்ள சமஸ்கிருத மொழியை கற்றுத் தேர்ந்தார். பகவத்கீதையை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டார். அந்தப் புத்தகம் சுமார் 10 லட்சம் பிரதிகள் விற்று சாதனை புரிந்தது.

                இந்து சமயம் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தார். அந்தப் பிரயாணத்தின் போது தான் இந்து மக்களுக்குப் போதிய கல்வியைத் தரும் பாடசாலைகள் இல்லாத குறையை உணர்ந்தார்.

                அதைப்போலவே இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா மீள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தார். ஆகவே அவர் இந்திய தேசிய காங்கிரஸில் தம்மை இணைத்துக் கொண்டு, இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார்.

                அதே சமயம் பிரம்ம ஞான சபையின் நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். சென்னை அடையாறில் 1895ம் ஆண்டு தியாசபிகல் சொசைட்டி'யை நிறுவி, அதையே தலைமையகமாகக் கொண்டு ஆன்மீகப் பணியாற்றினார். சைவ உணவு பழக்கத்தின் மேன்மையை உணர்ந்து, அன்னி இந்தியா வந்த பிறகு கடைபிடிக்கத் துவங்கியவர் தன் வாழ்நாள் இறுதி வரை சைவ உணவாளராகவே இருந்தார்.

                இந்திய மக்களின் கல்வியறிவைப் பெருக்க பல கல்வி நிலையங்கள் துவங்க முயற்சியெடுத்தார். குறிப்பாக பனாரசில் (வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரி ஆரம்பிக்க அன்னி பெரிதும் காரணமாக இருந்தார்.

                இந்தியாவில் இருந்தபடியே லண்டனில் வெளியாகும் பத்திரிகைகளில் தொடர்ந்து இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியதன் அவசியம் பற்றி கட்டுரைகள் எழுதி வந்தார். இந்தியாவிலும் இரண்டு பத்திரிகைகள் துவங்கி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை அதில் பிரசுரித்தார்.

                இந்திய தேசிய காங்கிரசில் அப்பொழுது திலகர் தலைமையில் தீவிரவாத தன்மை கொண்ட' குழு ஒன்றும், கோகலே தலைமையில் மிதவாத குழு' ஒன்றும்  என இரண்டாகப் பிரிந்து இயங்கி வந்தன. இதனால் பல போராட்டங்களில் ஒருமித்த கருத்துடன் அவர்களால் செயல்பட முடியாமலிருந்தது. அன்னி இந்த முரணைப் போக்குவதற்கு பெரு முயற்சிகள் எடுத்தது, இந்திய தேசிய காங்கிரசை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த ஏதுவாக இருந்தது. இருபக்கமும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து அவர்களுடன் விவாதித்து இரண்டு குழுக்களையும் 1916ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள வைத்தது அவரது பெரும் சாதனை என்றே கூறலாம்.

                ஆங்கிலேய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லி சீர்திருத்த சட்டத்தில் பல குறைபாடுகளும், முரண்பாடுகளும் இருந்தன. அவற்றை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவற்றைக் களைய பெருமுயற்சி எடுத்தார் அன்னி.

                இந்தியாவின் விடுதலைக்காக இந்தியாவுக்கு வெளியே சர்வதேச அரங்கில் பல நாடுகளின் ஆதரவைத் திரட்டியதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

                1917ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக அன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மாவோடு இணைந்து பல முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

                ஒருபுறம் அரசியல் நடவடிக்கைகள், மறுபுறம் ஆன்மீகத் தேடல்கள் இன்னொரு பக்கம் பத்திரிகை மற்றும் கல்விப்பணி என பன்முகத்தன்மையில் இயங்கிய அன்னி சில ஆண்டுகளில் அரசியலை விட்டு விலகி தியாசபிகல் சொசைட்டி' பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். வயோதிகம் மட்டும் அதற்குக் காரணமல்ல. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்கிற ஜே.கே.அப்பொழுதுதான் ஒரு தத்துவ ஞானியாக எழுச்சி பெற்ற சமயம் என்பதால் அவரோடு இணைந்து பணியாற்றுவதில் அவருக்கு மன நிறைவு கிடைத்தது.

                1933ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அவரது பணிகள் தியாசபிக்கல் சொசைட்டியைச் சார்ந்தே இருந்தன.

                பெசண்ட் என்கிற முரண்பாடான மதவாதியான சுயநலமிக்க நபருடன் அன்னி என்கிற மாபெரும் ஆளுமையைப் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை.

                இந்திய அரசியலிலும் ஆன்மீகத்திலும் கல்வித்துறையிலும் இந்திய விடுதலை இயக்கத்திலும் இதழியல் துறையிலும் ஓய்வறியாது உள்ளார்ந்து செயல்பட்ட அன்னியின் பணிகள் மகத்தானவை. இந்திய சுதந்திரப் போராட்டம் எனும் பெருங்கடலில் கரைக்கப்பட்ட பல தியாகங்கள், பணிகள் மறக்கப்பட்டனவோ அதுபோல் சுலபமாகக் கடந்து போய்விட முடியாத ஆளுமை அன்னி'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...