திங்கள், 27 ஜூன், 2022

 

‘கண்ணுக்குத் தெரியாத காற்று ‘ நூலுக்கான எனது முன்னுரை

             


   ‘இடம்’அல்ல அவர்களின் இடம் ...

     அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் சிவபெருமான் தனது இடப்பாகத்தை, சக்தியாக விளங்கும் பரமேஸ்வரிக்குத் தந்ததாக நாம் புராணங்களில் படித்திருக்கின்றோம். உடலின் பாதியையே அவர் தந்து, பெண்ணினத்திற்கு மாபெரும் மரியாதையை அளித்திருக்கிறார் எனவே இந்த ஒட்டு மொத்த சமூகமும் அவ்வாறே பெண்ணினத்தை மதிக்க வேண்டும் என்பதே இந்த புராணக்கதையின் உள்ளடக்கம். ஆனால் உடலின் இடது புறத்தின் உறுப்புகள் அனைத்தையும் இயற்கையே ஒப்பீட்டு நோக்கில் வலது புறத்தைவிட பலம் குன்றியே வைத்திருக்கிறது. நாம் இயல்பிலேயே இடதுபாக உறுப்புகளை அலட்சியத்தின் குறியீடாக கவனப்படுத்துகிறோம். உதாரணமாக அவர் என்னை இடதுகையால்தான் ஆசீர்வதித்தார் என்று ஒருவர் குறிப்பிட்டால் அதன் பொருள் அவர் வெறுப்போடு அல்லது விருப்பமின்றி அங்கீகரித்தார் என்றுதான் அர்த்தப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் கால் மீது கால் போட்டு அமரும்போது கூட பெரும்பாலும் இடது காலின் மீது வலது கால் அழுத்த, இடது கைமீது வலது கை விழுமாறுதான் அமர்கிறோம். ஆக பெருந்தன்மையாக இடமளித்த சிவன் கூட இடது பாகத்தைத்தான் பெண்ணுக்குத் தந்திருக்கின்றார்.

     சமூகத்தில் பெண்ணின் நிலையும் கூட அவ்வாறேதான் இருக்கிறது. உண்மையில் அவர்கள் தாங்கள் அழுத்தப்பட்ட இடத்திலிருந்து, அலட்சியப்படுத்தப்பட்ட உதாசீனங்களிலிருந்துதான் தாங்களாக வெடித்துக் கிளம்ப வேண்டியிருக்கிறது. உலகம் முழுக்க ஜனநாயகம் செழித்து, தழைத்தோங்குவதாக முழங்கும் தேசங்களில் கூட பெண்கள் தங்களுக்கான நியாயமான உரிமைகளை போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அப்படியான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், வழி நடத்திய பெண்கள் தங்களது சுயநலத்துக்காக இல்லாமல் முழுக்க, முழுக்க சமூக நலன் சார்ந்தே இயங்கி இருக்கிறார்கள் என்பது அவர்கள் மீதான மரியாதையை மேலும் உயர்த்துகிறது. யதார்த்தத்தில் சுயநலம் சாராமல் பொது நலன் இல்லை என்னும் கூற்று சமூகத்தில்  ஒரு அங்கீகரிக்கப்பட்ட பண்பாகவே இருக்கிறது. ஆனால் பெண்போராளிகள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள் பணியில் பெரும்பாலும் அந்தக் கூற்று அர்த்தமற்று போயிருப்பதைக் நான் கவனித்திருக்கின்றேன். அவர்களின் இயல்பான தாய்மையுணர்வு எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராத அர்ப்பணிப்புத்தன்மைக் கொண்டது. அந்தத் தன்மைதான் இந்தக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது. உலகம் முழுக்க பெண்போராளிகள், பெண் சமூக செயற்பாட்டாளர்களின் வலி மிகுந்த போராட்டங்கள் நீர் மேல் எழுத்து போல் மறைந்தே இருக்கின்றன. எனவே அவற்றை ஓரளவேயாகிலும் வாசிப்பது, வாசிக்க வைப்பது நம் கடமை என்றே தோன்றியதன் விளைவே இந்த நூல்.

     இந்தக் கட்டுரைகளை தொடராக வெளியிட அனுமதித்த ஊக்குவித்த ‘ கிழக்கு வாசல் உதயம்’ திங்களிதழின் ஆசிரியர் திரு உத்தமசோழன் அவர்கள் என்றும் என் நன்றிக்கு உரியவர். அவர் அந்த பத்திரிகையைத் துவங்கிய காலக் கட்டத்தில் இந்தத் தொடரை எழுத என்னை அனுமதித்தார். இதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் ‘கிழக்கு வாசல் உதயத்தில்’ வெளியானவை. ஒரு சில கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழ் மற்றும் அம்ருதா, தாமரை. காக்கைச் சிறகினிலே. திருப்புமுனை ஆகிய  சிற்றிதழ்களில்  பிரசுரமானவை. அந்தந்த இதழ் ஆசிரியர்களுக்கு என் நன்றிகளை இந்த நேரத்தில் சமர்ப்பிக்கிறேன்.

     பதிப்புலகில் இன்றைக்கு நிலவும் சவால்கள் அனைத்தையும் ஒரு புன்னகையோடு எதிர்கொள்ளும் தேவகி ராமலிங்கம் அவர்களை தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்திருக்கும். நிவேதிதா, ஊருணி ஆகிய பதிப்பகங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ஆனால் அது பற்றி எந்தப் புகாருமின்றி தவம் போல் நிர்வகித்து வருகிறார். எம்.ஆர் என்று பத்திரிகை உலகில் எல்லோராலும் அறியப்படும் அவரது கணவர் இராமலிங்கம் அவர்கள் இடப்பாகத்தை அல்ல எல்லா பாகத்தையும் தந்து அவரை சுயமாக இயங்கத் துணை நிற்கின்றார். இருவருமே எனது மரியாதைக்கும், நன்றிக்கும் உரியவர்கள். இந்த இருவரையும் எனக்கு அறிமுகம் செய்த பல்லவிகுமாருக்கு பிரத்தியேகமான நன்றிகள்.

   அன்பின் அம்மா சாந்தாவுக்கும், எனது எல்லா இலக்கியப் பணிகளுக்கும் தனது உள்ளார்ந்த ஈடுபாட்டால் துணை செய்யும் எனது மனைவி நிலாமகள் என்னும் ஆதிலட்சுமிக்கும் எனது பேரன்பு பெருஞ்செல்வங்கள் பிருத்வி மதுமிதா மற்றும் சிபிக்குமாருக்கும் எனது பிரத்தியேக நன்றிகள்.

     இந்தக் கட்டுரைகள் வெளியான தருணத்தில் ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியும் நெகிழ்வோடு தனதுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பரமக்குடி பா.உஷாராணி மற்றும் தனது பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கட்டுரைகளை வாசித்துக் காண்பித்த அவரது சகோதரி மதிப்பிற்குரிய பா.சரசுவதி அவர்களுக்கும்...

எனது படைப்புகள் மீதும் என் மீது பெரிதும் நம்பிக்கை வைத்து செல்லும் இடம் தோறும் என்னைப்பற்றி பெருமிதமாக குறிப்பிடும் அன்புக்குரிய தோழி கவிஞர் கிருஷ்ணப்பிரியா அவர்களுக்கும்...

தன்னைவிட ஒருபடி மேலே வைத்து என்னை மதிக்கும் அன்புக்குரிய எழுத்தாளர் மாலா உத்தண்டராமன் மற்றும் சக எழுத்தாளர்கள் ஜீவகாருண்யன், நளினி சாஸ்திரி, ஓவியர் கோவிந்தன், புகைப்படக் கலைஞர் நெய்வேலி என். செல்வன், மருதூர் அரங்கராசன், குறிஞ்சி வேலன் மற்றும் குறிஞ்சி ஞான வைத்தியநாதன், நாகை வெற்றிச்செல்வன்,புலியூர் முருகேசன், நண்பர்கள் பாலு, ஐயப்பன், பாபு ஆகியோருக்கும்..

என் நூல்கள் வெளிவரும்தோறும் அவற்றுக்கு ஒரு விமர்சன அரங்கை அமைத்துத் தருகிற செஞ்சி குறிஞ்சி இலக்கிய வட்டத் தோழர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவரது நண்பர்கள் செந்தில்பாலா, நினைவில் வாழும் செஞ்சி செல்வன், இயற்கை சிவம், பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழினியன், ரிஷபன், தயாளன், நிழல் திருநாவுக்கரசு  இன்னபிற நண்பர்களுக்கும்.

இந்த நூலுக்கான அட்டை வடிவமைப்பு செய்த நண்பர் கீர்த்தி அவர்களுக்கும் அச்சிட்ட அச்சக ஊழியர்களுக்கும் என் நன்றிகள். 

நான் பணியாற்றும் என். எல்.சி. நிறுவனத்துக்கும், எனக்கு தமிழூட்டிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எனை உயிர்ப்போடு வைத்திருக்கும் என் இனிய தமிழுக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்..

                                           மிக்க அன்புடன்

                                     நெய்வேலி பாரதிக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...