ஞாயிறு, 2 ஜூலை, 2017

ஜூலியானோ மெர் காமிஸ்

                       

                                                                         
                                        

                     இரு தேசங்களுக்கு இடையே தீராத பகை இருக்கிறது, இரண்டு தேசத்து மக்களும் வெவ்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் எனில் அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் என்பது ஒரு பொது வரையறைக்குள் அடங்கிவிடும். பிரச்சினை சார்ந்த மக்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்துவிடுவர். ஆனால் அந்த இரண்டு இனத்தவர்களில் பாதிக்கப்பட்ட மக்களை  மனிதாபிமான முறையில் அரவணைக்க முயலுபவர்கள் அந்தந்த இனங்களில் துரோகிகளாகவே சித்தரிக்கப்படுவார்கள். இயக்குனர், நடிகர் ஜூலியானோ மெர் காமிஸ் அப்படித்தான் தவறாகக் கருதப்பட்டு கொல்லப்பட்டார்.
               ஜூலியானோ மெர் காமிஸ் 1958 ஆம் வருடம் மே மாதம் 29 ஆம் தேதி  இஸ்ரேலின் வடமாகாணத்திலுள்ள மிகப்பெரிய நகரமான நாசரேத்தில் பிறந்தவர். இயேசு கிருஸ்துவின் இளமைப்பருவம் நாசரேத்தில்தான் கழிந்தது என்பதால் நாசரேத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. மெர்காமிஸ்-இன் தந்தை சலிபா காமிஸ் பிறப்பால் பாலஸ்தீனியன், இவரது மூதாதையர்கள் கிருத்துவ மதத்தைத் தழுவியவர்கள். சிந்தனையால் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர். சலிபா காமிஸின் வசிப்பிடம் இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. என்றாலும் சலிபாவின் கொள்கை மாறவே இல்லை அவர் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். சலிபா இஸ்ரேலின் குறிப்பிடத்தக்க அறிவுஜீவியாக கருதப்பட்டவர்.
                ஜூலியானோவின் தாய் ஆர்னா காமிஸ் சிறந்த நாடக நடிகை மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர். இளம் வயதில் ஆர்னா இன்றைய இஸ்ரேலை ஆக்ரமித்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக இயங்கி வந்த பால்மா என்கிற ஆயுதக்குழுவில் இடம்பெற்று தீவிரமாக பணியாற்றியவர். போரின் உக்கிரத்தை நேரில் கண்டதாலோ என்னவோ அவரது பிந்தைய காலம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகளில் இயங்க  ஆர்னா காமிஸ் இஸ்ரேல் ஆக்ரமித்தப் பகுதியான ஜெனின்-இல் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக்கொண்டு ஒரு நாடகக்குழுவை நடத்தி வந்தார். ஆர்னா காமிஸ்-இன் பணிகளைப் பாராட்டி அவருக்கு ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாட்டினர் இணைந்து ஏற்படுத்திய வாழும் உரிமைகளுக்கான' சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது மனித உரிமை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் உலகம் முழுக்க தன்னலம் பாராமல் சமூகத்துக்காக இயங்கி வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆர்னாவின் தந்தை ஜிடோன் மெர் ஒரு அறிவியல் விஞ்ஞானி மற்றும்  சமூக சேவகர். 
               இப்படி ஜூலியானோவின் பாரம்பரியம் சமூகத்துக்காக பணியாற்றுகிற, போராடுகிற நீண்ட பின்னணியைக் கொண்டது என்பதால் இயல்பாகவே சமூகத்தின் மீதான அக்கறைக் கொண்டவராகவும், அதிகாரத்துக்கு எதிரான போராளியாகவும் அவரை உருவாக்கியது. ஆர்னா நிர்வகித்த நாடகக்குழு இஸ்ரேல் ஆக்ரமித்தப் பகுதியான ஜெனின் -இல் இயங்கி வந்தது. ஆர்னா இறந்த பிறகு ஜூலியானோ ஃபிரீடம் தியேட்டர் என்ற பெயரில் அம்மாவின் நாடகப் பள்ளியில் படித்த சகாரியா சுபைதியுடன் இணைந்து ஜூலியானோ நடத்தி வந்தார்.
               ஃபிரீடம் தியேட்டர் குழுவில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலியத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இணைந்தே படித்தார்கள். அதோடு இருபாலரும் இணைந்தே நாடகங்களில் நடத்தினர். இது மத அடிப்படைவாதிகளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மறுபுறம் அவர்கள் நடத்திய நாடகங்களின் மையக்கருத்து, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இது இஸ்ரேலிய அதிகார வர்க்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் நாடகப்பள்ளியில் படித்த சிறுவர்கள் ஜெனின் பகுதிகளில் நடந்த இன்ஃபெடிடா என அழைக்கப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டங்களில் தன்னிச்சையாக ஈர்க்கப்பட்டு அதிகார படைகளுக்கு எதிராக கல்வீச்சுக்களில் ஈடுபட்டனர். சகாரியா சுபைதி அப்படியான கல்வீச்சில் சிறுவயதில் ஈடுபட்டு இளம் சிறார்களுக்கான சிறையில் மூன்று முறை அடைக்கப்பட்டவர்.
               சுபைதியின் தாயாரும் அவரது சகோதரரும் அரசு பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர் என்பதால் அவருக்கு இயல்பாகவே அதிகாரத்துக்கு எதிரான மனநிலையுடனே இருந்து வந்தவர். வளர்ந்தபிறகு தன்னை ஒரு ஆயுதப் போராட்டக்குழுவுடன் இணைத்துக் கொண்டார். ஒரு தாக்குதலின் போது தனது காலில் குண்டு பாய்ந்து அறுவை சிகிச்சையால் குறைக்கப்பட்டு அதன் காரணமாக வாழ்நாள் முழுதும் ஒரு கால் குட்டையாக நடக்கும்போது தாங்கி, தாங்கி நடப்பவராகவே இருந்தார். ஆனால் பிற்காலத்தில் அவரது மனநிலை ஆர்னாவால் பக்குவப்பட்டதால் மனம் மாறி தனது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் எண்ணத்தால் ஜூலியானோவுடன் இணைந்து ஃபிரீடம் தியேட்டர் நாடகக்குழுவை நடத்த முன் வந்தார். ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஒரு புறம் அவர் இஸ்ரேலிய படைகளால் சந்தேக கண்ணுடன் கண்காணிக்கப்பட்டார், மறுபுறம் மத அடிப்படைவாதிகளால் வெறுப்புடன் பார்க்கப்பட்டார்.
               சிறுவர்களை தீவிரவாதிகளாக உருவாக்குகிறார்கள் என அரசு அதிகாரம் குற்றம் சாட்டியது, மத அடிப்படைவாதிகள் மதக் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என ஜூலியானவையும் சகாரியாவையும் வறுத்து எடுத்தார்கள். சமூகத்தின் மீதான மெய்யான அக்கறையோடு செயல்பட்ட அவர்கள் இரு பக்கத்திலும் வெறுப்பினை சம்பாதித்தார்கள்.  
                இந்த இடத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையேயான பிரச்சினையை சுருக்கமாக பார்க்கலாம். வரலாற்றை நெருக்கமாக கவனிக்கிறவர்கள், செய்தித்தாள்களை அன்றாடம் தவறாமல் வாசிக்கிறவர்கள் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சினைகள் குறித்து அறிந்திருப்பார்கள். ஜெருசலேம்தான் பாலஸ்தீன இஸ்ரேலிய பிரச்சனைக்கு ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. ஜெருசலேம் நகரம் யூதர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் புனித நகரமாக இருக்கிறது. அங்கிருக்கும் அல் அக்ஸா என்ற பள்ளிவாசல் நபிகள் நாயகம் பாலஸ்தீன பயணத்தின்போது  அங்கு வந்திருந்தார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. அதே சமயம்  அங்குதான் சாலமன் தேவாலயம் இருந்ததாக  சொல்லி யூதர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்கள். யூத பாரம்பரியம் நவீன இஸ்ரேலை, பைபிளில் வரும் மூன்று நாயகர்களில் முதல்வரான , ஆப்ரகாம் மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் உருவான நாடாகக் கருதுகிறது. யூதர்களைப் பொறுத்தவரை, பழைய பாலஸ்தீனத்துக்குத் திரும்புவதை, தங்களுக்கு பைபிளில் உறுதி அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திரும்புவதாக கருதுகிறது.
               இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய யூதர்கள் அனுபவித்த யூதஎதிர்ப்பு நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்று, யூதர்களுக்கு ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு சொந்த நாடொன்றை நிறுவும் நோக்கில் சியோனிச ( Zionism) இயக்கம் உருவானது. அவர்கள் பாலஸ்தீனிய பிராந்தியத்தில் தங்களது தேசத்தை கட்டமைக்க தீர்மானித்தார்கள். அந்தக் காலகட்டத்தில், பாலஸ்தீனப் பிராந்தியம் ஆட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அரபு தேசிய வாதிகளுக்கும் சியோனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதல்கள், யூத மற்றும் அரபு ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான மோதல்களால் வலுப்பெற்றன. ஆட்டோமான் பேரரசு வீழ்ந்தபின், பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், யூத நாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் வலுத்தன.
               பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்குமிடையே பிரித்துத் தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  1948 மே 14ம் தேதி இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாக இந்த முடிவு  காரணமாயிருந்தது. இதற்கடுத்த நாள், எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் பிரிட்டிஷாரின் முந்தையக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல் அரபு-இஸ்ரேலிய யுத்தம் உருவாகக் காரணமாக இருந்தது.
               இந்த மோதலுக்குப் பின்னர், அரபு நாடு என்ற ஒன்றுக்காக ஐநா முதலில் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பு பாதியாகக் குறைக்கப்பட்டது. சுமார் 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் அண்டைநாடுகளுக்கு வெளியேறிவிட்டனர் அல்லது யூதப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
               1967ல் நடந்த ஆறு நாள் போரில்இஸ்ரேல் பெற்ற வெற்றி அது காசா நிலப்பரப்பையும் சினாய் தீபகற்பத்தையும் ஆக்ரமிக்க உதவியது. இவை 1948லிருந்து எகிப்து கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரை ஜோர்டான் கட்டுப்பாட்டில் இருந்தது. கோலான் குன்றுகள் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவை அனைத்தையும் இஸ்ரேல் கைப்பற்றிவிட்டது.
               இந்தப் போரை அடுத்து, 1973ல் ' கிப்பூர்' போர் நடந்தது இதில் எகிப்தும் சிரியாவும், இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்தப் போரில் எகிப்து சினாய் தீபகற்பத்தில் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியது. ( மீதமிருந்த பகுதியை இஸ்ரேல் 1982ல் திருப்பி அளித்துவிட்டது). ஆனால் காசா நிலப்பரப்பையோ அல்லது சிரியாவின் கோலன் குன்றுகளையோ இஸ்ரேலிடமிருந்து பெற முடியவில்லை.
                 1994க்கு பின்னர் திரும்ப ஒப்படைக்கப்பட்ட காசா நிலப்பரப்பில் 2008, 2009,2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது ஆயுத மோதல்கள் நடந்தன.
             

                மேற்குக் கரை (west bank) தற்போது பாலஸ்தீன தேசிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதன் முக்கிய குழு என்பது மதசார்பற்ற ஃபத்தா கட்சி (FATA party) ஆகும்.  பாலஸ்தீன விடுதலை அமைப்பும், இஸ்ரேலும் 1993ல் ஆஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, பாலஸ்தீன விடுதலை அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது. மேலும் அது இஸ்ரேல் நாட்டினையும் அது சார்ந்த நிலப்பகுதிகளில்  அதற்கிருக்கும் உரிமையையும் அங்கீகரித்தது. தற்போது ஹமாஸ் என்ற முக்கிய பாலஸ்தீன இஸ்லாமியவாத அமைப்பு காசா நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பு  பாலஸ்தீன குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் அங்கீகரிக்கவில்லை.
                இப்பொழுதுள்ள மிகவும் சிக்கலான பிரச்சினை, ஜெருசலேத்துக்கு உள்ள  வரலாற்று முக்கியத்துவம்தான். பாலஸ்தீன நிர்வாகம் மற்றும் ஹமாஸ் குழு ஆகிய இரண்டுமே கிழக்கு ஜெருசலேத்தை தங்களது தலைநகராகக் கோருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதை 1967லிருந்து ஆக்ரமித்து வைத்திருக்கிறது. எனவே ஜெருசேலம் யாராவது ஒருவருக்கு விட்டுக் கொடுக்கப்படாத வரை அங்கு பிரச்சினைகள் தீராது. யெருசேலம் என்றால் எபிரேய மொழியில் அமைதியின் உறைவிடம்' என்று பொருளாம். ஆனால் இன்றைக்கு அமைதியிழந்து தவிக்கின்ற இடமாக இருக்கின்றது.
               பிரச்சினைகள் சீறிக்கொண்டிருக்கும் இடமான ஜெனின் -இல் காயம் பட்ட மனதுக்கும் உடலுக்கும் இதமான கருணை உள்ளங்களின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் பணியைத்தான் ஜூலியானோ, அவரின் தாய் ஆர்னா, சகாரியா ஆகியோர் செய்து கொண்டிருந்தனர்.
               ஜூலியானோ தனது வாலிபப் பருவத்தில் கட்டாய இராணுவப் பணியை இஸ்ரேல் படையில் முடிக்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு அவர் தனக்குப் பிடித்தமான நாடகத்துறையில் இறங்கினார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தன. அமெரிக்கப் படமான தி லிட்டில் ட்ரம்மர் கேர்ள்தான் அவர் நடித்த முதல் படம். இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சினைகளை பின்புலமாகக் கொண்டது அந்தத் திரைப்படம். அதற்குப்பிறகு 51 Bar, Wedding Galilie, Kedma, Easther, Kippur உட்பட சுமார் 20 திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த Seat of this sea  என்ற இஸ்ரேலிய படம் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
               பின்னர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி ஃபிரீடம் தியேட்டர் குழுவை சகாரியாவுடன் இணைந்து துவக்கியதிலிருந்து அவருக்கு தொல்லைகளும் தொடங்கின. ஃபிரீடம் தியேட்டர் குழு இயங்கிய இடத்தை பல முறை மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களது நாடகங்களை நடத்த விடாமல் தடுத்தனர். அப்பொழுதுதான் தனது தாயார் ஆர்னா மெர்காமிஸ் எத்தனை எதிர்ப்புகளைத் தாண்டி இத்தகைய பணிகளில் ஈடுபட்டிருப்பார் என்பது ஜூலியானோவுக்குப் புரிந்தது. ஆர்னாவின் சமூக மற்றும் நாடகப்பணிகள், அவற்றுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து Arna's Children என்கிற ஆவணப்படத்தை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனது நண்பர் டேனியல் டேனியல் என்பவரோடு இணைந்து இயக்கினார். அந்தப் படம் பல உண்மைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியது என்பதால் அந்தப் படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டது. மீறி யாருக்கும் தெரியாமல் பொதுப் பார்வையாளர்களுக்கு திரையிட்டார். அது தெரிந்து மெர்காமிஸ் மிரட்டப்பட்டார். திரையிடப்பட்ட இடங்களை பின்னர் தெரிந்து கொண்டு அங்கும் தாக்குதல்கள் நடந்தன. எனவே அந்தப் படத்தை இஸ்ரேல் தாண்டி வெளிநாடுகளுக்கு திரையிடும் முயற்சியில் மெர்காமிஸ் ஈடுபட்டார்.
               Arna's Children வெளிநாடுகளில் பலத்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான ராபர்ட் நீரோ துவக்கி, நடத்திவந்த ட்ரிபெக்கா திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்றது. (ட்ரிபெக்கா அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகருக்கருகே அமைந்துள்ள வனப்புமிக்க இடமாகும். அங்கு ஆண்டு தோறும் ஆவணப்படங்களுக்கான போட்டியும், வெற்றி பெறும் படங்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.)
               அந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் மெர்காமிஸ் நடத்திவந்த நாடகக்குழுவை கலைக்க வேண்டும் என்றும் மிரட்டல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஆனால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதி இளைஞர்களிடம் மெர்காமிஸ்-க்கு ஆதரவுப் பெருகியது. மெர்காமிஸ்  போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் அரபுக் குழந்தைகளுக்கு தொடர்ந்து கலை ஆர்வத்தை வளர்க்கும் பயிற்சியிலும், அவர்களை உள ரீதியாக பண்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுவதிலிருந்து பின் வாங்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். இது ஒரு கலாச்சாரப் போர் என்றும் அறிவித்தார். இதனால் இரண்டு தரப்பிலிருந்தும் எதிர்ப்பினை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
               2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி தொலைக்காட்சிக்காக தனது நாடகக்குழு சிறுவர், சிறுமியர்களை பேட்டி எடுத்து அதனை ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பும் எண்ணத்தில் ஜெனின் -இல் உள்ள தனது நாடகப்பள்ளியில் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு திரும்புகையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
               அவரது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டால் இன்னும் பலத்த எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. அவரது இறுதிச் சடங்கில் இரண்டு தரப்பு இளைஞர்களும் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். எல்லாப் பக்கமும் அவருக்கு எதிரிகள் இருந்ததால் அவரைக் கொன்றது எதிர் அமைப்பினர்தான் என்று சொல்லி எல்லா அமைப்புகளும் தங்களுக்கு எதிரான அமைப்புகளை கைகாட்டிவிட்டு தப்பித்துக்கொள்கின்றன. இன்னமும் அவரைக் கொன்றது எந்தப்பிரிவினர் என்பது தெரியாமல் மர்மம் நீடிக்கிறது. விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கின்றது இருப்பினும் உண்மையான குற்றவாளிகள் எங்கிருக்கிறார்கள், என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.
               மெர்காமிஸ் உச்சரித்த கலாச்சாரப் போர் என்கிற வார்த்தை வலிமை மிக்கது.  எந்த ஆயுதத்தையும் எடுக்காமல் எதிரிகளை நடுங்கவைத்தது. பொதுவாக கலை, இலக்கியம் ஆகியன ஒவ்வொரு தேசத்திலும் மௌனப் புரட்சிகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் வீச்சை மெர்காமிஸ் போன்ற மெய்யான கலைஞனின் மரணம்தான் வரலாற்றில் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது.
                 

                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...