1962 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5 -ந்தேதி தென்னாப்பிரிக்காவின் க்வாசுலு நடால்
மாகாணத்தில் ஹோவிக் நகரத்தை நோக்கி R 103 சாலை வழியே அந்த ஆஸ்டின் கார்
சென்றுகொண்டிருந்தது. R103 சாலை ஜோஹன்னஸ்பர்க்கையும்
தென்னாப்பிரிக்காவின் மற்றொரு முக்கிய நகரான டர்பன் -ஐயும் இணைக்கக் கூடியது.
செடிரா என்கிற மிகச்சிறிய ஊரைக் கடந்து ஹோவிக் நகரை அடையும் போது, தென்னாப்பிரிக்க காவல்துறையின் ஃபோர்ட் V8 கார், ஆஸ்டினை முந்திச் சென்று, அந்தக் காரை
வழிமறித்து நின்றது.
ஃபோர்ட் காரிலிருந்து இறங்கிய காவல்துறை
சார்ஜண்ட் வோர்ஸ்டர், ஆஸ்டினை நெருங்கி
காரில் அமர்ந்திருந்த கறுப்பு நிற மனிதனை நெருங்கி,
“
உங்கள் பெயர் என்ன?”
எனக் கேட்கிறார்
“
என்னுடைய பெயர்.. டேவிட்
மோட்ஸமாய்”
“
எங்கே உங்களது பாஸ்போர்ட்?”
“
நான் வெளிநாடு
செல்லவில்லை..”
“மிஸ்டர், உங்கள் பெயர் நெல்சன் மண்டேலா என்பது
எங்களுக்குத் தெரியும்.. நீங்கள் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி.. நீங்கள்
இந்த தேசத்தைவிட்டு சட்ட விரோதமாக தப்பிச்செல்கிறீர்கள்.. ஆகவே உங்களை கைது
செய்கிறோம்.”
மண்டேலா தப்பிக்கவோ அல்லது அவர்களை எதிர்த்துப்
போராடவோ முயற்சி செய்யவில்லை. துப்பாக்கியோடு மிக அருகில் மற்றொரு காவல்துறை
சார்ஜண்ட் நின்றிருந்தார். ஒருவேளை மண்டேலா ஏதாவது முரண்டு பண்ணினால் அவர்கள்
சுடத் தயங்கமாட்டார்கள் என்பது நன்றாக புரிந்தது. அப்படி ஏதேனும் அசம்பாவிதம்
நடந்தால் தான் மட்டுமல்ல தனக்காக மாறுவேடமிட்டு தன்னைக் காப்பாற்றத் துணை வரும்
செசில் வில்லியம்ஸ்- சும் கொல்லப்படுவார் என்பதால் பொறுமை காத்தார். மண்டேலாவும்,
செசில் வில்லியம்ஸ்சும்
கைது செய்யப்பட்டனர். இந்த கைதின்போதுதான் மண்டேலா 27 ஆண்டு சிறை வாசம் அனுபவிக்க வேண்டியிருந்தது.
தென்னாப்பிரிக்காவின் வரலாற்றையும், மண்டேலாவின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட இந்த சம்பவத்தில் மண்டேலாவுடன்
இருந்த நாடகக்கலைஞர் செசில் வில்லியம்ஸ் பற்றி அதிகம் பேர் அறிந்திருக்க மாட்டார்கள்.
செசில் எத்தனை பெரிய ஆபத்தான காரியத்தை செய்துகொண்டிருந்தார் என்பதும் பலருக்கும்
தெரியாது.
மண்டேலாவை ஒரு தீவிரவாதிபோல சித்தரித்து
தென்னாப்பிரிக்க காவல்துறை அவரை சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்த நேரம் அது.
மண்டேலா தான் சார்ந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும், அதன் ஆயுதப் போராட்டப் பிரிவான உம்காண்டோ வே
சிசுவே ( தேசத்தின் ஈட்டி) வின் வீரர்களையும் ரகசியமாக சந்திக்க வேண்டியிருந்தது.
காவல்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு, தென்னாப்பிரிக்கா முழுக்க செல்ல
வேண்டியிருந்தது. செசில் வில்லியம்ஸ்தான் மண்டேலாவை பத்திரமாக மிகத்துணிச்சலுடன்
ரகசியமாக தன்னோடு அவரை அழைத்துச் சென்றார். செசில் வில்லியம்ஸ் ஒரு வெள்ளைக்காரர்
என்பதால் அவரது காரை அதிகம் கவனிக்க மாட்டார்கள்.
செசில் வில்லியம்ஸ் பற்றியும் அவர் பங்கெடுத்த
துணிச்சலான காரியங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு முன் தென்னாப்பிரிக்க
விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான தருணமான ஆயுதப் போராட்ட வழியை அவர்கள்
தேர்ந்தெடுத்த சூழல் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
தென்னாப்பிரிக்காவை ஆங்கிலேயர்கள்
அடிமைப்படுத்திய போது அவர்களின் எதேச்சதிகார ஆட்சியின் சட்டங்கள் அனைத்தும் நிற
வெறிக்கு தூபம் போடுவது போலத்தான் இருந்தன. அதில் மிக முக்கியமானதும்
கொடூரமானதுமான பாஸ் லா (Pass Law) 1797-லேயே கொண்டுவரப்பட்டது.
அந்தச் சட்டத்தின்படி கறுப்பர் இன
மக்களுக்கென்று தனித்தனியே கடவுச் சீட்டு
வழங்கப்பட்டது. அந்த சீட்டு இல்லாமல் கறுப்பர்கள் வீட்டை விட்டு வெளியே
வரக்கூடாது. அந்தக் கடவுச் சீட்டை எப்பொழுது வேண்டுமானாலும் காவல்துறை ஆய்வு
செய்யும், அந்தக் கடவுச்
சீட்டும் சில இடங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. மீறினால் சட்ட விரோதம்
என கைது செய்யப்படுவார்கள்.
ANC எனப்படும்
தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கம் துவங்கப்பட்டப்பிறகு ஏற்பட்ட எழுச்சியில் அந்த
கடவுச்சீட்டு முறையை கறுப்பர் இன மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அதன் ஒரு பகுதியாக 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி ஷார்ப்வில்லி என்னும் இடத்தில்
சுமார் 5000க்கும் மேற்பட்ட
கறுப்பனர் இன மக்கள் கடவுச் சீட்டு இல்லாமல் வெளியே வருவோம் என்கிற கோஷத்தோடு,
ஷார்ப்வில்லி காவல்
நிலையம் முன்பாக கூடினர். கூட்டத்தை கலைப்பதாகக் கூறி வெள்ளையர் அரசு காவல்துறை
அவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டது. 69 பேர் இந்த சம்பவத்தின்போது பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
தென்னாப்பிரிக்க வரலாற்றில் துயர்மிகு சம்பவமாக கருதப்பட்ட ஷார்ப்வில்லி படுகொலை
நடந்த மார்ச் 21 ஆம் நாளைத்தான் விடுதலைக்குப் பிந்திய
தென்னாப்பிரிக்க அரசு மனித உரிமை தினமாக இப்பொழுது அனுசரித்துவருகிறது.
ஷார்ப்வில்லி சம்பவத்திற்கு முன்புவரை ANC
இயக்கம்
அறப்போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகுதான்
மண்டேலாவும் இன்னுமுள்ள துணிச்சல் மிக்க
இளைஞர்களும் கூடி தேசத்தின் ஈட்டி என்னும் பொருள்படும் உம்காண்டோ வே சிசுலுவே
என்னும் ஆயுதப்போராட்டப் பிரிவை ANC இயக்கத்துக்கு
உள்ளேயே ஆரம்பித்தார்கள். இனி சாத்வீகமாக ஆங்கிலேயே அரசுடன் பேசிப் பயனில்லை,
ஆயுதங்கலை கையில்
எடுத்தால்தான் அவர்கள் பணிவார்கள் என அவர்கள் உறுதியாக நம்பினார்கள். MK என்னும் ரகசிய
பெயரை அந்தப் பிரிவுக்கு சுருக்கமாக வைத்துக்கொண்டு அவர்கள் கொரில்லா மூறை தாக்குதல்களை
ஆங்காங்கே அவர்கள் நடத்தத் தொடங்கினார்கள்.
தாக்குதலின் ஒரு பகுதியாக 1961 ஆம் வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி ஒரு தாக்குதலை திட்டமிட்டு நடத்தி
அன்றைய தென்னாப்பிரிக்க அரசை திகைக்க வைத்தனர். அந்த தாக்குதலை முன்னின்று
நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு மண்டேலா தேடப்படும் குற்றவாளியாக
அறிவிக்கப்பட்டார். மண்டேலா தலைமறைவானதுடன்
அரசாங்கத்துக்கு தெரியாமல் எத்தியோப்பியாவுக்கு சென்றார். எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் நடந்த
பசிபிக் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க விடுதலை மாநாட்டிலும் பங்கெடுத்தார்.
தொடர்ந்து அவர் எகிப்து, மொராக்கோ,
கீனியா, சியாரா லியான் ஆகிய நாடுகளுக்குச் சென்று
ஆயுதப்போராட்டத்துக்கான நிதியை திரட்டினார். மீண்டும் எத்தியோப்பியா வந்து ஆயுதப்
பயிற்சியில் ஈடுபட்டார்.
எத்தியோப்பியாவிலிருந்து மறுபடி
தென்னாப்பிரிக்கா திரும்பிய மண்டேலா இயக்கத் தோழர்களை சந்தித்து அடுத்தக்கட்ட
போராட்டங்களைப்பற்றி திட்டமிட வேண்டியிருந்தது. அதற்காக தென்னாப்பிரிக்க
நகரங்களிடையே பயணிக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில்தான் ANC இயக்கத்தின் உறுப்பினரும் கறுப்பர் இன
விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும்
தொடர்ந்து குரல் கொடுத்து வந்த செசில் வில்லியம்ஸ் ஒரு யோசனையை தெரிவித்தார்.
அதன்படி செசில் வெள்ளைக்கார செல்வந்தர் போலவும், மண்டேலா அவரது ஓட்டுனர் போலவும் மாறு வேடமிட்டு வில்லியம்ஸ் -இன் புதிய காரில் தேவைப்படும்
இடங்களுக்குச் செல்வது என முடிவெடுத்தார்கள். இந்த திட்டத்தின் படி இருவரும்
பயணித்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மண்டேலா அனைவரையும் சந்தித்து வந்தார்.
ஆகஸ்ட் மாதம் 5 -ந்தேதி அந்த
சம்பவம் நடைபெறும்வரை இந்த நாடகம் சிக்கல் இல்லாமல் நடக்க வில்லியம்ஸ்-இன் பங்கு
குறிப்பிடத்தக்கது.
செசில் வில்லியம்ஸ் இங்கிலாந்தில் உள்ள
கார்ன்வால்ட் என்னும் நகரில் 1909 ஆம் ஆண்டு
பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்த அவர் 1929 ஆம் வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு ஆசிரியர்
பணிக்காக வந்தார். ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ல எட்வர்ட் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.
இயல்பிலேயே மனிதாபிமானமும். தேசப்பற்றும் மிக்க
வில்லியம்ஸ் தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் மனசாட்சிப்படியே இயங்கிவந்தார்.
நிறவெறி தாண்டவமாடிய தென்னாப்பிரிக்காவில் அவர் கறுப்பர் இன மாணவர்கள் மீது
பரிவோடு இருந்தார். பள்ளிகளில் அவர் நடத்திய கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் யாவிலும் கறுப்பர் இன மாணவர்கள்
பங்குபெறும் வகையிலேயே அமைத்தவர். அவரது நாடகங்கள் சக மனிதர்களை நேசிப்பதைப்
பற்றியே இருந்தன. இதன் காரணமாக அவர் பல பள்ளிகள் இடம் மாற வேண்டியிருந்தது.
இரண்டாம் உலகப்போர் சமயம் அவர் ஆசிரியர் பணியை
உதறிவிட்டு தென்னாப்பிரிக்க கடற்படையின் தகவல் தொடர்புப் பிரிவில் பணியாற்றினார். 1940-இல் அவர் அந்தப்பணியிலிருந்து விடுபட்டு
மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பியபோது, கறுப்பர்களின் நிலை மிகவும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தது. அந்த
சமயம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டச் சட்டம் ஒன்று கறுப்பர்களின் உரிமைகளை
முழுமையாக பறிப்பதாக இருந்தது. வில்லியம்ஸ் அச்சட்டத்தினை எதிர்த்து தைரியமாக
குரல் கொடுத்தார். ஸ்பிரிங்போக் லெஜின் என்கிற கட்சியை ஆங்கிலேயே அரசுக்கு
எதிராகத் துவங்கினார். பாசிச சட்டங்களுக்கு எதிரான துணிச்சலான முதல் குரல் என
வில்லியம்ஸ்-இன் இயக்க முழக்கங்களைப் பற்றி தென்னாப்பிரிக்க வரலாற்றாளர்கள்
குறிப்பிடுகிறார்கள்.
இயக்கத்தின் கொள்கைகளை பரப்பும் விதமாகவும்
தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலை உணர்வுகளை தட்டி எழுப்பும் விதமாகவும் நாடகங்களை
உருவாக்கி வில்லியம்ஸ் நாடெங்கும்
நடத்துவங்கினார். அவரது நாடகங்களில் நடிப்பவர்களும், நடத்துபவர்களும் மிரட்டப்பட்டனர்.
இங்கிலாந்திலிருந்து புகழ்பெற்ற நாடக நடிகைகள் குவான் டேவிஸ் மற்றும் மார்தா வெனி
ஆகியோரை அழைத்து வந்து நாடகங்களை தொடர்ந்து தடைபடாமல் நடத்தினார். வில்லியம்ஸின்
கிம்பர்லி ட்ரெயின் என்னும் நாடகம் இன்றைக்கும் தென்னாப்பிரிக்க நாடக வரலாற்றில்
குறிப்பிடத்தக்க நாடகமாக கருதப்படுகிறது. ஒரு வெள்ளைக்கார இளைஞனுக்கும், கறுப்பர் இன பெண்ணுக்கும் இடையே ஏற்படும்
ஆத்மார்த்தமான காதலையும், அதன் வலிமையையும்,
அதனூடே தென்னாப்பிரிக்க
அரசின் நிறவெறியையும் புலப்படுத்தும் கலைவடிவமாக அந்த நாடகம் விளங்கியது.
அவரது நாடகத்தில் நடித்தால் கறுப்பர்களுக்கு
தண்டனை, வெள்ளையர்களுக்கு
எச்சரிக்கை என்ற இருவேறு நிலை இருந்ததால், வெள்ளை இளைஞர்களுக்கு கறுப்பர் போல ஒப்பனை செய்து நடிக்க வைத்தார். பல சமயம்
நடிகர்கள் மாறுவார்கள். ஆனால் நாடகம் மாறாது. கிட்டத்தட்ட நூறு முறைகளுக்கு மேல்
அரசாங்கத்தின் அச்சுறுத்தலையும் மீறி நெருக்கடியான அந்த காலக் கட்டத்தில் அந்த
நாடகம் நடத்தப்பட்டது பெரும் சாதனைதான் என்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல்
ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். அவர்களை
சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது.
ANC இயக்கம் துவங்கப்பட்ட போது தனது அரசியல்
இயக்கத்தை அதனோடு இணைத்துக்கொண்டார். ANC இயக்கத்தின் ஆயுதக்குழுவான உம்காண்டோ வே சிசுலுவேவின் தீவிர உறுப்பினராகவும்
ஆனார். அதன் தொடர்ச்சியாகத்தான் மண்டேலாவை அழைத்துச் செல்லும் பணியை தானே
முன்வந்து ஏற்றுக்கொண்டார்.
மண்டேலாவுடன் கைதான வில்லியம்ஸ் அடுத்த நாளே விடுதலை செய்யப்பட்டார்
என்றாலும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
வில்லியம்ஸ்-ஐ யாரும் சந்திக்கக்கூடாது,
அவரது நாடகங்களை எங்கும்
நடத்தக்கூடாது, அவரைப்பற்றிய
செய்திகளை பத்திரிகைகள் வெளியிடக்கூடாது என ஏகப்பட்ட கூடாதுகளை அவருக்காக ஆங்கிலேய
அரசு நிபந்தனைகளாக விதித்தது. ஆனால் வில்லியம்ஸ் எப்படியோ ஆங்கிலேய காவல்துறையின்
கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அங்கிருந்து தப்பி தனது ஸ்காட்லாந்து காதலியோடு
சேர்ந்துவிட்டார். ஆனால் மறுபடி அவர் தென்னாப்பிரிக்காவுக்குள் நுழைய
அனுமதிக்கப்படவில்லை. அவரது எஞ்சிய காலம் நாடகத்துறையோடு கழிந்துவிட்டது. 1979-இல் அவர் மரணமடைந்தார்.
மண்டேலாவும், வில்லியம்ஸ்-சும் கைதான ஹோவிக் சாலை சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறிவிட்டது. 2012-இல் ஆகஸ்ட் 5-ந்தேதி மண்டேலா கைதான 50 ஆம் வருட நினைவு நாளாக தென்னாப்பிரிக்க மக்கள்
கொண்டாடினர். அங்கு உயரமான மண்டேலாவின் இரும்புச்சிலையை நிறுவி உள்ளார்கள். அந்தக்
கைதுக்குப்பிறகுதான் மண்டேலா மீண்டும் அறவழிப்போராட்டத்துக்குத் திரும்பினார்.
மண்டேலா தனது தி லாங் வாக் டூ ஃபிரீடம் என்னும்
சுயசரிதையில் வில்லியம்ஸோடு பயணித்த சாகச அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
வில்லியம்ஸ் என்னும் நாடகக்கலைஞனுடைய கலையாற்றல் மண்டேலாவின் போராட்ட வாழ்விலும்,
தென்னாப்பிரிக்க
வரலாற்றிலும் மிக முக்கியமானது என்பதால்தான், அவரைப்பற்றி
“The man who
drove with mandela” என்னும்
ஆவணப்படத்தை இயக்குனர் க்ரேட்டா ஷில்லர் உருவாக்கினார். அந்த ஆவணப்படத்திற்கு 1999 இல் பெர்லின் உலகப்பட விழாவில் விருது
கிடைத்தது. 50க்கும் மேற்பட்ட
படவிழாக்களில் அப்படம் திரையிடப்பட்டது. மண்டேலாவின் மிக நீண்ட சுதந்திர வேட்கை
பயணத்தில் வில்லியம்சின் துணிச்சல் மிக்க துணை மதிப்பு மிக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>