ஞாயிறு, 2 ஜூலை, 2017

பியர் பாவ்லோ பசோலினி (இத்தாலி)


                               


1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி இத்தாலியின் திரேனியன் கடலை ஒட்டிய ஒஸ்டியா கடற்கரையில் பியர் பாவ்லோ பசோலினி கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை கொலைக்கருவி கொண்டு கடுமையாக தாக்கிய தோடல்லாமல் அவர் மீது பலமுறை காரை ஏற்றி சிதைத்திருந்தனர். ஜியுசெப்பி என்னும் பதினேழு வயது இளைஞன் அவரைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டான். ஓரின சேர்க்கையாளரான பசோலினி தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தினார் என அவன் வாக்குமூலம் தந்திருந்தான், என்றாலும் அவனது குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக காவல்துறையும் பொதுமக்களும் நம்பவில்லை.        முப்பது ஆண்டுகள் கழித்து, 2005 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி அவன் தனது வாக்குமூலத்தை மாற்றி மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் தனது குடும்பத்தை மிரட்டி, பசோலினி என்கிற அசிங்கம் பிடித்த கம்யூனிஸ்ட்டை கொன்றுவிடு என நெருக்கடி தந்தார்கள் என்று சொன்னான். அவர்கள் தெற்கு இத்தாலியின் வட்டார மொழியில் பேசியதாக கூறினான். ஆனால் அதுவும் கூட ஆதாரமற்ற செய்தி என விசாரணைக்கு பின் காவல் துறை தெரிவித்துவிட்டது. அப்படியானால் பசோலினி எதற்காக கொல்லப்பட்டார்? அது இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பசோலினி இத்தாலியின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர், நடிகர், நாவலாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், அரசியல்வாதி, ஓவியர் என பன்முகம் கொண்ட ஆளுமை. அதைக் காட்டிலும் அவர் ஒரு புரியாத புதிர். அவரது கொள்கைகளும் நடவடிக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. பலராலும் விளங்க முடியாத கவிதை அவர்.
 பசோலினி 1922 ஆம் வருடம் பொலொக்னா என்னும் இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆல்பெர்ட்டா கடுமையான குணம் கொண்ட இத்தாலிய இராணுவ அதிகாரி. அவரது தாய் சுசானா கலூசி ஒரு ஆசிரியை. பொலொக்னா இடது சாரி சிந்தனையாளர்கள் கொண்ட நகரம். பசோலினி இயல்பாகவே இடதுசாரி சித்தாந்தத்தின் மீது ஈர்க்கப்பட்டார். அவரது குடும்பம் கசார்சாவுக்கு இடம் பெயர்ந்தது. கசார்சா ஒரு இயற்கை சூழல் மிக்க ஊர். அது மட்டுமல்லாமல் ஃப்ரியூலி மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற பிராந்தியம். ஃப்ரியூலி எழுத்துக்கள் இல்லாத வெறும் பேச்சு மொழி கொண்டது. இருப்பினும் எட்டு லட்சம் மக்கள் பேசுகின்ற மொழி. பசோலினி அம்மொழி மீது தீராத காதல் கொண்டவர். தமிழகத்தில்தான் மொழிப்பற்றோடு இருப்பது பிற்போக்குத்தனமாக கருதப்படுகிற அவலம் தொடர்ந்து அறிவுஜீவிகளால் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் இத்தாலியில் ஃப்ரியூலி மொழி அறிவு ஜீவிகள் தங்கள் தாய்மொழிக்கான உரிமைக்காக குரல் கொடுப்பதை தார்மீகக் கடமையாக கருதினார்கள்.     
 பசோலினி ஃப்ரியூலி மொழி பேசும் மக்களின் தனித்த கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் பிரதானப்படுத்தி ஃப்ரியூலி பிராந்தியத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது முதல் கவிதைத் தொகுதி ஃப்ரியூலி மொழியில்தான் வெளியிடப்பட்டது. ஃப்ரியூலி மொழிக்கு எழுத்துக்கள் இல்லாததால் இலத்தீன் மொழி எழுத்துக்கள்தான் நூல் வடிவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஃப்ரியூலி மொழிக்  கவிஞராக பசோலினி கருதப்படுகிறார். அல்போன்சா கேட்டி, அண்டானியோ ரஸ்சி, பிராங்கோ காட்டினி ஆகிய அறிவுஜீவிகளும் விமர்சகர்களும் அவர் இத்தாலியின் குறிப்பிடத்தக்க கவியாளுமை எனப் புகழ்கிறார்கள். 
 பசோலினியின் தந்தை அல்பெர்ட்டோ மதப்பற்றாளர். அதேசமயம் தாய் கலூசி தேவாலயங்களுக்கு செல்வதை மறுக்கக்கூடியவர். அல்பர்ட்டோ தீவிரமான தேசப்பற்றாளர். சர்வாதிகாரி முசோலினியை கொலை செய்ய நடந்த முயற்சியிலிருந்து அல்பர்ட்டோ ஒரு முறை அவரைக் காப்பாற்றினார் என்பதால் பாசிஸ்ட்டுகளிடையே அல்பெர்ட்டோவுக்கு நல்ல மரியாதை இருந்தது. பசோலினி ஒரு முறை செடாசியோ என்கிற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். ஆனால் அந்த பத்திரிகையின் அதிபர் முசோலினியின் ஆதரவாளர். வெகுவிரைவில் பசோலினி அப்பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டார். அதுவரை பசோலினி ஒரு பாசிச இலக்கியவாதி போலவே இயங்கிவந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அவர் தன்னை முழுமையான பொதுவுடமையாளனாக மாற்றிக் கொண்டார். தாய்,தந்தை இருவரின் கலவையாகவே பசோலினி வளர்ந்து வந்தார் அவரது இறுதிக்காலம் வரையிலும் இந்த குழப்பமான தோற்றம் அவர் மீது  படிந்திருந்தது.
      சர்ச்சைகளுக்கும், சாகசங்களுக்கும் பசொலினியின் வாழ்வு முழுவதும் அசைக்க முடியாத இடமுண்டு. 1942 ஆம் வருடம் ஜெர்மனின் நாஜிப்படையினரால் பசோலினி கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே ஒரு விவசாயியைப் போல வேடமிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அடுத்து இத்தாலியின் உதின் மாகாணத்துக்கு வந்த அவர் ஃப்ரியூலி மொழிக்கு சம அந்தஸ்து வேண்டும் என்பதற்காகப் போராடினார். 1945 ஆம் ஆண்டு பசோலினியின் சகோதரன் க்யுட்டி கொல்லப்பட்டார். அவர் இறந்த ஆறாம் நாளிலேயே ஃப்ரியூலி மொழிக்காக ஒரு அகாதமி ஆரம்பித்து அதன் பணிகளைத் தொடங்கினார். இவையாவும் அவரது கல்லூரி காலத்திலேயே நடந்தது.
1947 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்துடனான தொடர்புகள் கிடைத்தன. அதன் பிறகு கட்சி சார்ந்த பல போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். இயக்கத்தினர், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் அரசுக்கும் பல போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டங்களின்போது காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பல்வேறு மோதல்கள் நடந்தன. இதன் காரணமாக பல போராட்டக்காரர்கள் அடிபட்டனர். இந்த காட்சிகள் பசோலினிக்கு மன அதிர்வை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1955-இல்  ரகாசி டி விட்டா என்கிற நாவலை எழுதுகிறார். இந்த நாவல் காரணமாக அவர் மீது அவதூறு வழக்குகள் பாய்ந்தன. இருப்பினும் 1959 ஆம் ஆண்டு அவரது இரண்டாவது நாவல் தி வயலன்ட் லைப் வெளியாகிறது.   
1957 –இல் பெடரிக்கோ ஃபெலினியின் திரைப்படமான லே நோடி டி காப்ரியா வுக்கு குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு மட்டும் வசனம் எழுதுகிறார். அதிலிருந்துதான் அவருக்கு திரைப்பட ஆர்வம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. கோபோ II என்ற படத்தில் ஒரு நடிகராக அறிமுகம் ஆகிறார். அவரது இயக்குனர் முகம் வெளிப்பட்டது அக்கொட்டான் (1961) என்னும் முதல் படம் மூலமாகத்தான். அதே வருடம் அவர் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். அப்பொழுது இந்தியா பற்றி முப்பது நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படம் (Visual notes for a film in India) ஒன்றை இயக்கினார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பான நிலை மற்றும் அப்போதைய வறுமை ஆகியவற்றைப் பற்றி அப்பட்டமாக இப்படம் பேசியது. 1961 ஆம் ஆண்டு உலகின் பெரும்பான்மை நாடுகளுக்கு அவர் சுற்றுப்பிரயாணம் சென்றார். அதன் பிறகு சுமார் பத்து படங்களுக்கு மேல் அவர் இயக்கினார். தொடர்ந்து ஆவணப்படங்கள் ஆறு, நாடகங்கள் ஏழு, அரசியல் கட்டுரைகள் என அவரது பங்களிப்பு இடைவிடாத அர்ப்பணிப்பான ஒன்று. தி காஸ்பல் அக்கார்டிங் டு மாத்யூ  என்கிற அவரது திரைப்படத்துக்கு வெனிஸ் உலகப்பட விழாவில் விருது கிடைத்தது.
ஆனால் பசோலினி எப்பொழுதும் அதிர்ச்சியூட்டுகிற. முரண்பாடான மனிதராகவே காட்சியளித்தார். 1947ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் 1949ஆம் ஆண்டு நீக்கப்படுகிறார். காரணம் அவர் தன்னை ஓரின சேர்க்கையாளர் என்று வெளிப்படுத்திக் கொண்டதுதான். தி காஸ்பல் அக்கார்டிங் டு மாத்யூ என்கிற அவரது திரைப்படத்துக்கு கிருத்துவ மதப் பாதிரியார்கள் பலத்த கரவொலியோடு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். இதனால் அவர் கம்யூனிஸ்ட்டுகளின் பலத்த எதிர்ப்பை சம்பாதிக்கிறார். ஆனால் இயேசுவை ஒரு புரட்சியாளராக மட்டுமே பார்ப்பதாகவும்  மற்றபடி தான் ஒரு நாத்திகர் என்பதில் எந்த ஒரு மாற்றமுமில்லை என பசோலினி குறிப்பிடுகிறார்.
பசோலினி தொடர்ந்து தனது படைப்புகளில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் இருள் பக்கங்களையே பதிவு செய்து வந்தார். அவரது கதாபாத்திரங்கள் தூய்மையான கனவு நாயகர்கள் அல்ல. அவரது முதல் நாவலான ராக்காசி டி விட்டாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் அடுத்தடுத்த சமூகத்தில் ஒழுக்ககேடான விஷயங்களாக கருதப்பட்ட பாலியல், வன்முறை ஆகியவற்றில் அவர்கள் ஈடுபடுவதினை விவரிக்கின்றது. அவரது இரண்டாவது  நாவலான தி வயலன்ட் லைப்பில்  டோமஸோ புஸிலி என்பவன் பாலியல் தொழிலில் இருக்கும் ஒரு பெண்ணின் மகன், அவன் சமூகத்தில் எப்படி தன் எதிர்வினைகளை ஆற்றுகிறான் என்பது குறித்து பேசுகிறது.
            

அவரது திரைப்படங்களும் கூட இப்படியான எதிர் நாயகர்களின் வாழ்வையே அதிகம் பதிவு செய்திருக்கிறது. அதோடு அந்தக் காட்சிகள் அதீத வன்முறை நிறைந்ததாகவும் இருந்தன. அவரது மம்மா ரோமா திரைப்படம் பிரபல இயக்குனர் ரோபார்ட்டினி இயக்கிய ரோமா சிட்டா அபார்ட்டா என்னும் திரைப்படத்தில் உள்ள பெண் கதாபாத்திரத்தின் நீட்சியாக அல்லது அவளின் மற்றொரு பக்கமாக எடுக்கப்பட்டதுதான். ரோபார்ட்டினி அப்படத்தை தேசபக்தியை பிரதானமாக கொண்ட படமாக உருவாக்கியிருந்தார். ஆனால் பசோலினி அவர்களையெல்லாம் மக்களுக்கானவர்கள் அல்ல என தோலுரித்திருந்தார். லா ரிகார்ட்டா என்னும் குறும்படத்தில் கிருத்துவர்களின் மனம் புண்படும்படி காட்சிகள் அமைத்திருந்தார் என்று வழக்குத் தொடரப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவை எல்லாம் அவரைப்பற்றிய குரூரமான சித்தரிப்புகளுக்கு காரணமாயின. அவரது திரைப்படங்கள் திரையிடப்படும் அரங்குகளில் எல்லாம் அவருக்கெதிரான போராட்டங்கள், கோஷங்கள் எழுப்பப்பட்டன. வன்முறையில் முடிந்த திரையிடல்களும் உண்டு.
ஒரு சமயம் இத்தாலியில் மாணவர் அமைப்புகள் சேர்ந்து ஒரு பெரும் தேசிய போராட்டத்தை முன்னெடுத்து நடத்தின. அவர்களது போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்தனர். ஆனால் இடதுசாரி சிந்தனையாளரான பசோலினி இந்தப் போராட்டம் நியாயமற்றது என்று கருதினார். ஆகவே பசோலினி வெளிப்படையாக அந்த போராட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.   
பசோலினி ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடும் குறிப்பிட்ட இடங்களில் அதிகம் காணப்பட்டார். அது விஷயத்தில் அவரது கொள்கைகள், செயல்பாடுகள் எதையும் அவர் மறைக்க முயலவில்லை. ஆனால் இதுவே இவர் மீது பல்வேறு வதந்திகளை, யூகங்களை பரப்பக் காரணமாயிற்று. அவர் சில இளைஞர்களுடன் திடீரென ஒரு நாள் மாயமானார். அவர், அவர்களை கடத்திச் சென்றுவிட்டதாக பரபரப்பான தகவல்கள் பரவின. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மையானதில்லை என நிரூபிக்கப்பட்டது. மீண்டும் அவர் ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டு அதுவும் உண்மை இல்லை என்று உறுதியானது. நியோ பாசிஸ கட்சியினர் அவர் மீது பல தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்கள்தான் அவர் மரணத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
இவையெல்லாம் தாண்டி எழுத்தாளர் இடாலோ கால்வினோ, இயக்குனர் பெர்னாண்டோ பெர்ட்லூசி, ஆங்கிலக் கவிஞர் எஸ்ரா பவுண்ட் ஆகியோருக்கு  அவர் மீது  ஆத்மார்த்தமான மரியாதை  இருந்தது. அவர்கள் பசோலினி மீது எதிர்மறையான கருத்துக்கள் கொண்டவர்கள் இல்லை.
பசோலினி உண்மையில் ஒரு சுதந்திரமான சிந்தனையாளர், செயல்பாட்டாளர் என்றே அவதானிக்க முடிகிறது. அவர் எந்த சுயலாபம் கருதியும் எந்த கொள்கையையும் வடிவமைக்கவில்லை. தன்னலம் கருதாத சிந்தனையாளர்கள் எந்த அமைப்போடும் நீண்ட நாட்கள் இயைந்து செல்ல முடியாது. எனவேதான் அவரது செயல்பாடுகள் அனைத்தும், எல்லாத் தரப்பினர் மத்தியிலும் எல்லா நேரத்திலும் அங்கீகரிக்க முடியாததாக இருந்தது. அச்சமற்ற அவரது மனநிலை எதுகுறித்தும் அவரால் எதிர்வினையாற்றும் துணிச்சலைத்  தந்திருந்தது.
பெர்லின் திரைப்பட விழா, கேன்ஸ் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழாக்களில் பசோலினியின் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. சில திரைப்பட விழாக்களில் நடுவராக இருந்திருக்கிறார். கேரளா திரைப்பட விழாவில் அவருக்கான நினைவஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. எப்பா டேமன்ட் என்பவர் பசோலினி பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். செப்பா பாட்டியாகிலி என்னும் இசையமைப்பாளர் பசோலினிக்காக ஒரு இசைத்தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அபெல் பெரைரா என்னும் அமெரிக்க இயக்குனர் பசோலினியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 2014 ஆம் ஆண்டில் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படி அவர் மரணம் நிகழ்ந்து முப்பது ஆண்டுகளுக்குப்  பின்னும் இத்தாலியைத் தாண்டியும் அவர் கொண்டாடப்படுகிறவராக, விவாதிக்கப்படுகிறவராக பசோலினி திகழ்கிறார். அவர் தி ஆஷஸ் ஆப் கிராம்சி என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில்
“நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் இடையில் உன்னை அணுகிக்கொண்டு இருக்கிறேன்” என்று துவங்குவார். அவரைப்பற்றிய சித்திரத்தை உலகம் எப்படி உள்வாங்குகிறது என்பதை இந்த வரிகள் அழகாக புலப்படுத்துகின்றன.  
கலகக்காரர்கள் எப்பொழுதுமே உலகை, மறைமுகமாக மனதை ஆள்பவர்களாகவே இருக்கிறார்கள். பியர் பாவ்லோ பசோலினி அதற்கு விதிவிலக்கு இல்லை.     
         

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...