திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ரேமுண்டோ கிளேசியர்

கலகக்கார கலைஞர்கள் -8

            

               சிறுகுழந்தைகள் கூட்டம் மிகுந்த சூழல்களில் தொலைந்து போவதும், பின்னர் பதற்றத்துடன் கண்டுபிடிக்கப்படுவதும் அனேகமாக எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்கிற சம்பவம்தான். தொலைந்து போனவர்கள் திரும்பவே இல்லை என்றால் அந்த துயரத்தை யாரால் தாங்கிக் கொள்ளமுடியும்? அதுவும் நல்ல வாலிபமான வயதில், ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கின்ற பொறுப்பில், சமூகத்தின் சொத்தாக விளங்கும் கலைஞனாகவோ, இலக்கியவாதியாகவோ இருந்துவிட்டால் எப்படியான இழப்பாக இருக்கும்?
               தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 1976 க்கும் 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்படியாக தொலைந்து போனவர்களின் எண்ணிக்கை 30000 க்கும் மேற்பட்டவர்கள் என்கிறார்கள். மேற்கண்ட காலகட்டத்தில் அர்ஜெண்டினாவை ஆண்டுவந்த இராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து வந்த சிந்தனையாளர்கள், இடதுசாரிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என பலரும் இதில் அடங்குவர். ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் ரேமுண்டோ கிளேசியரும் அதில் ஒருவர்.

               1976 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி தனது வீட்டில் இருந்த கிளேசியரை அடையாளம் தெரியாத சில நபர்கள், அவரது வீட்டை அடித்து நொறுக்கிவிட்டு அவரை கடத்திச் சென்றுவிட்டனர். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பது இன்று வரை தெரியவே இல்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என யூகிக்கிறார்கள். அர்ஜெண்டினாவில் இப்படியான சிந்தனையாளர்கள் தொலைந்து போவது அன்றாட நடவடிக்கையாக அன்றைய காலக்கட்டத்தில் இருந்தது.
               இப்படியாக கடத்தப்பட்டவர்கள் அடையாளம் தெரியாதபடி சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கடலில் தூக்கி எறியப்படுவதாக சொல்லப்பட்டது. கிளேசியரை கடைசியாக ஊடகங்கள் பார்த்தது லத்தீன் அமெரிக்க எழுத்தாளரும் இடதுசாரி சிந்தனையாளருமான ஹாரலடோ காண்டியை வெசூவியஸ் சித்திரவதை சிறைக்கூடத்தில், 1976 ஆம் ஆண்டு மே 5 ந்தேதி சந்தித்தபோதுதான். பின்னாளில் ஹாரலடோவும் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அவரும் என்ன ஆனார் என்பது தெரியவே இல்லை.
               அர்ஜெண்டினாவின் அரசியல் பின்னணியைப் பற்றி அறிந்து கொண்டால்தான் கிளேசியர் மாயமானது பற்றி புரிந்து கொள்ள முடியும். ஒரு காலத்தில் அர்ஜெண்டினா உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனாலும் சமமான ஏற்றத்தாழ்வற்ற சமூகமாக இல்லை. 1945 வரை அதிகாரம்  குறிப்பிட்டவர்களின் கையில்தான் இருந்தது. ஜூவான் டொமிங்கோ பெரோன் என்பவர் முதல் முறையாக தொழிலாளர்கள் கையில்தான் சகல அதிகாரங்கள், சௌகர்யங்கள் இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் புதியதொரு இயக்கத்தை துவக்கினார். அவரது கொள்கைகள் பெரோனிசம் எனப்பட்டது. கிட்டத்தட்ட பொதுவுடைமை சிந்தனைகளை அடியொற்றியே அவரது கொள்கைகளும் இருந்தன. எனவே அவரது பின்னால் அர்ஜெண்டினா இயல்பாக திரண்டது. 1946 இல் நடந்த தேர்தலில் அவர் மிகப்பெரும்பான்மை வாக்குகள் பெற்று அதிபரானார். அவரது துணைவியார் ஈவா பெரோன் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுத்தருவதில் முனைப்பாக இருந்தார்.
               தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம், சலுகைகள், வேலை நேரத்தில் நியாயமான கையாளுகைகள் என எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அர்ஜெண்டினாவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. இதற்கு பெரோனிசம்தான் காரணம் என தொழிலதிபர்கள் நினைத்தனர். எனவே அவர்கள் பெரோனை ஆட்சியிலிருந்து இறக்க கடுமையாக முயற்சித்தார்கள். அவர்களுக்கு சில அரசியல் இயக்கங்களும் துணை போயின. எதிர்பாராதவிதமாக ஈவா பெரோன் 1951-இல் புற்று நோய் காரணமாக மரணம் அடைந்தது பெரோனுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்தது.
               1951 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் பெரோன் தனது பழைய செல்வாக்கின் காரணமாக வெற்றிப் பெற்றார். ஆனால் முன்பு போல் ஆட்சி செய்வது அத்தனை சுலபமாக இல்லை. நாடெங்கும் ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. அதனை அடக்கும் சக்தி பெரோனுக்கு இல்லை. இதனைக் காரணமாக வைத்து தேசிய பாதுகாப்பு படையினர் அதிகாரத்தைக் கைப்பற்றினர். பெரோனை கொலை செய்யவும் முயற்சி நடந்தது. எனவே பெரோன் 1955 ஆம் ஆண்டு  நாட்டை விட்டு தப்பி ஸ்பெயினுக்கு ஓடிவிட்டார்.
               பெரோனின் இயக்கம் வலது சாரி இடதுசாரி என இரண்டாக பிளவுபட்டது. 1973 வரை பெர்ரொனின் இயக்கம் தலை தூக்க முடியவில்லை. நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தால் மீண்டும் தேர்தல் வரும் சூழல் ஏற்பட்டது. பெரோன் நாடு திரும்பினார். பெரோன் ஸ்பெயினில் இருந்த சமயம் இசபெல் என்கிற நாட்டியக்காரியை மணந்திருந்தார். இசபெல்லும் அவருடன் வந்ததோடு அவரது அரசியல் நடவடிக்கைகளிலும் தலையிட்டார். இசபெல்லின் பாதுகாவல் அதிகாரியும் அவரது ஆஸ்தான ஜோசியருமான ஜோஸ் லோபஸ் ரெக்கா என்பவருக்கு வானாளாவிய அதிகாரத்தை தந்திருந்தார்.
               1974 இல் பெரொன் மரணமுற்ற பிறகு இசபெல் கையில் ஆட்சியும், கட்சியும் வந்தது. அவரே அதிபரானார். துணை அதிபர், உயர் காவல் துறை அதிகாரி, சமூக நலத்துறை அமைச்சர் என சகல பதவிகளும் ரெக்கோ கையில் வந்தது. முழுவதும் வலதுசாரி கொள்கைகளை பின்பற்றிய ரெக்கொ யார் எதிர்த்தாலும் அவர்களை கொல்லவோ, தலைமறைவாக்கவோ தனியாக டிரிபிள் என்றொரு படையையே வைத்திருந்தார். அதாவது அலையன்ஸ் அர்ஜெண்டினா ஆன்டி கம்யூனிஸ்ட் என்பது அந்த படைக்குப் பெயர். இடதுசாரிகளை குறிவைத்து தாக்குவதே அவர்களது வேலை. இதனால் நாடு ஒரு கொந்தளிப்பான நிலைக்கு மாறியது. எனவே இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இசபெல்லும், ரெக்கோவும் நாட்டை விட்டு தப்பித்துவிட்டார்கள். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
               ஆட்சிக்கு எதிரான சிந்தனையாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், படைப்பாளிகள் காணாமல் போவது தொடர்ந்தது. அதன் ஒரு பகுதிதான் ரேமுண்டோ கிளேசியர் காணாமல் போனதும்.
               ரேமுண்டே கிளேசியர் 1941 ஆம் வருடம் செப்டெம்பர் 25 ஆம் தேதி ப்யூனர்ஸ் அயர்ஸில் பிறந்தார். அவரது தந்தை உக்ரேனியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜோசப் கிளேசியர், தாய் சாரா ஏஜென். இருவருமே நாடகக் கலைஞர்கள். எனவே இயல்பாகவே சிறுவயதிலிருந்து நாடக அரங்குகளில் வளர்ந்து வந்தார் ரேமுண்டே. தனது கல்வியை உரிய காலத்தில் முடித்து பொருளியல் துறை பேராசிரியராக பணியாற்றினார். ஆனாலும் அவரது நாடக ஆர்வம் அவரை அந்த வேலையை விட்டு வெளியேற வைத்தது.
               நாடகங்களில் பங்கேற்பதோடு கேமராவை கையாளவும் ஆர்வமுடன் கற்றார். எனவே அவரது நாட்டம் குறும்படங்கள், ஆவணப்படங்கள் மீது திரும்பியது. கூடவே கம்யூனிஸ்ட் கட்சியின் மீது இருந்த பற்றுதலால் இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். ஃபாக்லாண்ட் பற்றி முதன்முதலாக ஆவணப்படம் எடுத்தவர் கிளேசியர்தான். அது மட்டுமல்லாது க்யூபாவில் உள்ள சர்க்கரை ஆலைகளில் தொழிலாளர்களின் அவல நிலையை முதன் முதலாக படமாக்கியதும் கிளேசியர்தான். சேனல் 7 என்கிற தொலைக்காட்சி நிறுவனத்துக்காக பல ஆவணப்படங்களை எடுத்தார். எல்லாமே இடதுசாரி சிந்தனைகளை வலியுறுத்துவதாகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்ததாலும் அவர் மீது ஆட்சியாளர்கள் பெரும் கோபத்துடன் இருந்தனர்.
               மெக்சிகோ தி ஃப்ரோசன் ரெவ்லியூஷன் என்கிற அவரது ஆவணப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தென் அமெரிக்க நாடுகள் முழுக்க எதேச்சதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து தொடர்ச்சியாக அவர் படங்களை  எடுத்து வந்தார்.
               தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் முதலாளிகளுக்கு அடிபணியாத காரணத்தால் கொலை செய்யப்படும் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த ட்ரைட்டர்ஸ் என்கிற படம்தான் அவரது ஒரே திரைப்படம். ஆனால் அந்தப்படமும் திரை அரங்குகளில் திரையிடப்படாமல் முடக்கப்பட்டது. வர்த்தக ரீதியாக அவர் பெரும் நட்டங்களை சந்தித்தார். என்றாலும் அவர் தனது முற்போக்கான படங்கள் எடுக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கவே இல்லை. ட்ரைட்டர்ஸ்  முடக்கப்பட்டபின்னும் அரசின் போக்கைச் சாடி Neither Forget Nor Forgive  என்கிற குறும்படம் சர்வதேச அளவில் தனிக்கவனம் பெற்றது. அவரது ஆவணப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இடது சாரி அரசியலை முன்வைத்து படங்களை உருவாக்குவதற்காக Cinie da la base  என்கிற இயக்கத்தை அவர் ஆரம்பித்தார். அந்த இயக்கத்தின் மூலம் புற்றீசல் போல பலரும் ஆட்சியாளர்களுக்கு எதிரான படங்களை எடுத்தனர். மறுபுறம் ஃபெர்னாண்டோ சொலானஸ் என்னும் மற்றொரு இயக்குனர் இடதுசாரி சிந்தனைகளுடன் வேறொரு கோணத்தில் திரைப்படங்களை எடுக்க Cinie Liberation  என்கிற இயக்கத்தை கெட்டினோ என்னும் புகழ் பெற்ற இயக்குனரோடு துவக்கினார்.
               இந்த இரண்டு இயக்கங்களும் ஒரு புதிய எழுச்சியை அர்ஜெண்டினாவெங்கும் ஏற்படுத்தின. இதன் காரணமாக ரேமுண்டே மற்றும் சொலானஸ் இருவரும் அரசின் கண்காணிப்புக்கு உள்ளாயினர். சொலானஸ் இதை யூகித்து பாரிசுக்கு தப்பி ஓடிவிட்டார். ஆனால் ரெமுண்டே துணிச்சலோடு அர்ஜெண்டினாவிலேயே இருந்தார். 1976 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி கடத்தப்பட்டார் பின்னர் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. 1983இல் மீண்டும் அர்ஜெண்டினாவில் ஜனநாயகம் திரும்பியபோது, காணாமல் போனவர்கள் பற்றி ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. CONDEP என்கிற அந்த கமிஷனின் முன்பு தரப்பட்ட புகார்களின் படி 8960 பேர் அதிகாரப்பூர்வமாக காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதில் ரெமுண்டே, காண்டி ஆகியோரின் பெயர்கள் இருந்தன. ஆனால் 30, 000 பேருக்கு மேல் காணாமல் போயிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
               1983இல் நாடு திரும்பிய சொலானஸ் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதன்காரணமாக குண்டர் படைகளால் காலில் சுடப்பட்டார். உலக திரைப்பட கலைஞர்கள் இந்த தாக்குதல் தொடர்பாக தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். சொலானஸ் இன்றைக்கும் தனி இயக்கம் கண்டு தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். அவரது கட்சி தோல்வியுற்றாலும் அவரது ஆக்ரோஷமான செயல்பாடுகள் நிற்கவே இல்லை.
               தென் அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்களுக்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்பார்கள் ஆய்வாளர்கள். அதில் முக்கியமானது எளிதில் உணர்ச்சி வசப்படுவது. கலைஞர்கள் இயல்பாகவே உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்தான். ஆனாலும் தென் அமெரிக்க கலைஞர்கள் ஆக்ரோஷமான போராளிகள் என்பதை ரேமுண்டேவும், சொலானஸ்-ம் நிரூபித்தவர்கள்..

பிரசுரம் : 'நிழல்'               


               

1 கருத்து:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...