வியாழன், 21 ஜூலை, 2016

பெயரில் என்ன இருக்கிறது?!

பண்டைய ரோமானியர்களின்
பெயர் சூட்டு விழாவும்  பெயரீட்டு முறையும்
வெளியீடு: முகிலன் பதிப்பகம்
                              அடையாறு, சென்னை-20
பேசிட:      96002 44444, 044-24410248
மின்னஞ்சல்: marudurar@yahoo.com
பக்கங்கள்: 136
விலை: ரூ.80/-

      பெயரே இல்லாமல் மனித சமூகம் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் என்னவாக ஆகியிருக்கும்? மனிதர்கள் என்கிற இனமே இல்லாமல் போயிருக்கும்.. நமக்கென்று ஒரு வரலாறு உருவாகியிருக்காது.. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற ஒன்று நிகழ்ந்திருக்காது.. ஏனெனில் மனிதர்கள் என்கிற உயிரினத்துக்கே பெயர் சூட்டும் வழக்கம் இல்லாவிடில்.. நாம் எங்கே இயந்திரங்கள், உபகரணங்கள், வேதியல் தனிமங்கள், உயிரியல் உன்னதங்கள் ஆகியவற்றை வேறுபடுத்தி   பெயரிட்டிருப்போம்..? ஆக பெயர் என்பது வெறுமனே அடையாளம் மட்டுமல்ல.. அது கண்டுணர்தலின் துவக்கம். பெயரிடுதலின் வரலாற்றை ஆய்வதென்பது ஒரு சுவாரசியமான தேடல்.. அத்தகைய சுகமான அவசியமான தேடலை தனது ‘பண்டைய ரோமானியர்களின் பெயர் சூட்டு விழாவும்  பெயரீட்டு முறையும்’ நூலின் மூலம் நம்மையும் அழைத்துக்கொண்டு செய்திருக்கின்றார் மருதூர் அரங்கராசன் அவர்கள்...

      பெயர்கள் குறித்த அதிதீவிரமான சிந்தனை எனக்குள் உண்டு. உலகக் கால்பந்து போட்டிகளைப் பார்க்கும் போது இத்தாலிய அணியின் வீரர்களின் பெயர்கள் மனதுக்கு சற்று ரம்யமாக, நெருக்கமாக இருப்பதை பல நேரம் உணர்ந்திருக்கிறேன்  
     
                  பெயர்-சொல்

பெயரில் என்ன இருக்கிறது
என்று சொன்னாலும்
இன்னொருவரின் பெயர்
                  நன்றாக இருக்கும்போது
அதிருப்தி எழுகிறது
நம் மீது சுமத்தப்பட்ட பெயர் மீது......

     ............பெயர்களை மறப்பவர்கள்
     நினைவைச் சுண்ட நெற்றி சுருக்கி
          ‘சே... நல்ல பேருப்பா...' என்று
     புலம்புகையில்  தோன்றுகிறது
         ‘எல்லோரும் மறக்கட்டும் என் பெயரை...'

 -கல்கியில் பிரசுரமான என்னுடைய கவிதை வரிகள், அந்த எண்ணங்களின் வெளிப்பாடே.. எனவே கூடுதலான அதீத ஆர்வம் இந்த நூலை பார்த்தவுடனே எனக்குள் கிளர்ந்தது. இயல்பிலேயே வரலாற்றை அதிகம் வாசிக்கும் பழக்கமுள்ள எனக்கு இந்த நூல் அரிதாகக்  கிடைத்த பரிசு..
      தலைப்பில் பண்டைய ரோமானிய .. என்று ஒரு புள்ளியில் குவிக்கும் தன்மை இருந்தாலும் நூலாசிரியர், உலகம் தோன்றியதிலிருந்து துவங்கி, சைகை மொழி, எழுத்து, பெயரிடுவதற்கான அவசியம் என ஒழுங்கான வரிசையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தனித்த பெயர்களை உருவாக்கும் முன் எப்படி ஒவ்வொருவரும்  அடையாளப் படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதை தனக்கே உரிய மெல்லிய நகைச்சுவை உணர்வில் அனுமானமாய் சொல்லியிருப்பது அழகு...
      ஒரு தமிழ் உணர்வாளர் வரவு செலவு கணக்கை எழுதினால் அதிலும் பீறிட்டெழும் மொழி உணர்வை எப்படியாகிலும் நுழைத்திட முயலுவாரோ அது போல இன்றைய கனிமொழிகளின் குழந்தைகளுக்கு இடப்படும் வடமொழிப் பெயர்கள் குறித்த ஆதங்கத்தை தனக்கே உரிய அறச்சீற்றத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
      அதே சமயம் அவருள் உலவும் தமிழறிஞர், வரலாற்றுச் செய்திகளை தரும்போதும் சர்க்கரைப் பொங்கலின் நடுவே தட்டுப்படும் முந்திரியைப்போல  கூடவே தமிழிலக்கியங்களை தருவது அத்தனை சுகமான சுவை. இறையனார் அகப்பொருளின் உரை எப்படி வழிவழியாக பரிமாறப்பட்டது என்பதைச் சொல்லும் இடம் அதற்கான உதாரணம்.
      ரோம் என்னும் பெயர் எப்படி வந்திருக்கும் என்பதற்கான அவரது அலசல் பல புதிய விஷயங்களை நமக்கு தந்தபடியே செல்கிறது. இதுநாள் வரை ரோமுலஸ் புராணக்கதையை மட்டும்தான் அதற்கான காரணம் என நான் நம்பியிருந்தேன். எனது ‘பழம் பெருமை பேசுவோம்’ ( விகடன் வெளியீடு ) நூலில் அந்த முழுக் கதையும் அத்திப்பழம் பற்றியக் கட்டுரையில் உள்ளது. (ரோம் சாம்ராஜ்யத்தை  ஆண்டுவந்த நியுமிட்டர் என்ற அரசனின் மகள் ரியோ சில்வியா. நியுமிட்டரின் சகோதரன் அமோலியஸ் தந்திரமாக நியுமிட்டரைக்கொன்று ஆட்சியை பிடித்துவிடுகிறான். கொடுங்கோலனான அமோலியஸ் தனக்கு எதிராக அரசக்குடும்பத்தின் எந்த ஆண் வாரிசும் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறான்.
      அந்த சமயத்தில் ரியோ சில்வியா தான் வணங்கும் மார்ஸ் என்னும் தெய்வத்தை வணங்கி கன்னியாக இருக்கும் போதே கருத்தரிக்கிறாள். ரொமுலாஸ் மற்றும் ரெமுஸ் என இரண்டு ஆண் மகன்களை பெற்றெடுக்கிறாள். அமுலியாஸ் அந்த குழந்தைகள் இருவரையும் கொன்றுவிடும்படி கட்டளை இடுகிறான். ஆனால் எப்படியோ அவனது கண்களுக்குப்படாமல், தனது குழந்தைகளை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் மிதக்கவிடுகிறாள். அந்த பேழை மெல்ல ஒரு கரையில் ஒதுங்குகிறது. கிட்டத்தட்ட நம்ம மகாபாரதக் கதை மாதிரியான கதை) இது புராணம் சார்ந்தது ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல பொருத்தப்பாடுகள் உள்ள சரித்திரச் சான்றுகள், கிரேக்க மொழியில் அர்த்தம் நிறைந்த அந்த சொல்லின் மகத்துவம் என பல்வேறு புதிய செய்திகளை மின்னல் வெட்டு போல அடுக்கிக்கொண்டே போகிறார்.
      பெயர் பதிவுகளை செய்த சீசர் அகஸ்டஸ் பற்றி நாம் அட! என வியந்து கொண்டிருக்கும்போதே ஆதரவற்ற குழந்தைகளைப் பற்றியும் பதிவை செய்த மார்க்கஸ் ஔரெலியஸ் பற்றிய செய்தியை அடுத்த வரிகளில் தந்து திகைப்படைய செய்கிறார். செய்திகளை அள்ளித்தருவதில் அவர் எந்த ஒளிவு மறைவு தந்திரத்தையும் செய்வதே இல்லை. மடைதிறந்த வெள்ளம் போல் அது பாய்ந்து கொண்டே இருக்கிறது.
      ரோமானியரின் பெயர் சூட்டு விழா பலிச்சடங்கு ஆகியவற்றை குறிப்பிடும்போது தமிழ்க் கலாச்சாரத்துக்கும் அவர்களுக்குமான பல ஒற்றுமைகளை, பிரித்து பிரித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் உள்வாங்க முடிகிறது. பெயரிடுதலின் பல வேறுபாடுகளை அழகாக நமக்கு எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறார். குறிப்பாக ரோமானிய ஆண்பால் பெண்பால் பெயர் வித்தியாசங்களை இனி நாம் எளிதாக அடையாளம் காண இயலும் விதத்தில் சுலபமாக பதிவு செய்திருக்கின்றார். பலியிடப்படும் மிருகத்தின் தியாகத்தை மறக்காத நன்றி உணர்வுடன் தம் குழந்தைகளுக்கு பன்றி என்று பொருள்படும் பெயர்களை சூட்டும் ரோமானியர்களின் பண்பு வியப்புக்குரியது. நாம் தின்றுவிட்டு அதனை வசவு சொல்லாக அல்லவா பயன்படுத்துகிறோம்? ரோமானியப் பெயர்களின் தொகுப்புப் பட்டியலை இணைத்திருப்பது சிறப்பு..
      ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு இனத்திலும் புழங்கி வரும் இப்படியான பெயர்கள் பற்றிய ஆய்வும் அறிதலும் அவசியமான ஒன்று. இன்னும் பேசமாட்டாரா என்று நினைக்கும் நேரத்தில் பேச்சை முடித்துவிடும் சாமர்த்தியமும் பழக்கமும் உள்ள மருதூரார், இன்னும் கொஞ்சம் எழுதியிருக்ககூடாதா என்று எண்ணும் சமயத்தில் நூலை முடித்துவிட்டார்.. இது மருங்கூர் கண்ணன் சொன்னது போல அவரது எழுத்துப்பணியில் புதியதொரு பயணம்..உண்மையில் அவர் பெயர் சொல்லும் புத்தகம் ..
                  
            


4 கருத்துகள்:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...