பிரித்திலால்
தினசரி பத்திரிகைகளை வாசிப்பவர்கள், சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் 10-ம் தேதி
பினோத் செளத்ரி என்கிற விடுதலைப் போராட்ட வீரர் தனது 103-வது வயதில் கல்கத்தாவில்
இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்திருக்கக் கூடும்.
சுதந்திரத்துக்குப்பின் வங்கதேச
குடிமகனாக வாழ்ந்தாலும் மரணத்தின்போது மறுபடி இந்திய மண்ணில் சில நாட்கள் இருந்த
பினோத் செளத்ரி, ‘சிட்டகாங் ஆயுதப்
பறிப்பு' சம்பவத்தில்
ஈடுபட்ட போராளிகளில் நம்மிடமிருந்த கடைசி வீரர். இந்திய சுதந்திரப் போராட்ட
காலத்தில், வங்கத்திலிருந்து வெவ்வேறு கோட்பாடுகளின்
அடிப்படையில் வெவ்வேறு அணுகுமுறைகளில் இயங்கியவர்கள் பலர். அதில் மிக
முக்கியமானவர் சூரியாசென். ‘குரு அண்ணா'
என்று எல்லோராலும் அன்பாக
அழைக்கப்பட்ட சூரியாசென், அவர் வாழ்ந்த
காலத்தில் தீரமான பல நடவடிக்கைகளை பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக செயல்படுத்தியதன்
மூலம் வங்க மக்களிடையே ஒரு கதாநாயக அந்தஸ்துடன் உலவியவர்.
இந்திய புரட்சிகரப் படை (
ஐ.ஆர்.ஏ.) என்ற பெயரில் ஒரு வீரம் செறிந்த இளைஞர் படை அவர் தலைமையின் கீழ்
இயங்கியது. அரக்கத் தனமான பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளின் மீது தாக்குதல், ஆயுதக் கிடங்குகளைத் தாக்கி அங்கிருந்த
ஆயுதங்களைப் பறித்துச் செல்லுதல், இந்தியர்களை
அவமானப் படுத்தும் பிரிட்டிஷாரின் குடியிருப்புகளின் மீது தாக்குதல் என்று பல்வேறு
போராட்டங்களில் ஈடுபட்டது சூரியாசென்னின் ஐ.ஆர்.ஏ. படை. அவர்களின் மிக முக்கியமான
தாக்குதல்களில் புகழ்பெற்றது 1930-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற சிட்டகாங்
ஆயுதப் பறிப்பு சம்பவம். அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றவர்களில் ஒருவர்தான்
பினோத் செளத்ரி.
ஐ.ஆர்.ஏ. -ஐ துவக்கிய சூரியாசென்
1894-ம் ஆண்டு மார்ச்-22-ம் தேதி சிட்டகாங் மாவட்டத்தில் (இன்றைய வங்க தேசத்தில்
உள்ளது) போல்காலி என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை ரமணி ரஞ்சன் சென் என்பவர்
ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதால், சூரியாசென்னையும் ஆசிரியராக்க விரும்பி, உயர்கல்வியில் சேர்த்தார்.
1916-ல் பெஹராம்பூர் கல்லூரியில்
சூரியாசென் பி.ஏ. முடித்தார். அவர் படிக்கும் காலத்தில் இந்திய சுதந்திர வேட்கை
கொண்ட ஜுஹாந்தர் குழு பற்றி அறிந்தார். ஆயுத வழி போராட்டங்களின் மீது மிகுந்த
நம்பிக்கை கொண்ட ஜுஹாந்தர் குழுவின் அவ்வப்போதைய நடவடிக்கைகள் அவரை ஈர்த்தன.
சந்தன்பூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியிலிருந்தாலும் அவரது மனம்,
சுதந்திரப்
போராட்டங்களின் மீதே சுற்றிச் சுழன்றது. எனவே, தன்னோடு ஒத்த கருத்துக் கொண்ட இளைஞர்கள்,
குறிப்பாக பள்ளி
ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஐ.ஆர்.ஏ. என்ற
அமைப்பை துவங்கினார்.
‘கிரேக்' என்ற பிரிட்டீஷ் காவல்துறை ஐ.ஜி.
இந்தியர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதில் பிரதானமானவனாய்
இருந்தான். அவனுக்கு முன்பாக இந்தியர்கள்
நடந்து செல்வது கூட குற்றமாகக் கருதப்பட்டது. அப்பாவி இந்தியர்களை, அடித்துத் துன்புறுத்துவது அவனது பொழுதுபோக்காக
இருந்தது. சூரியாசென்னின் முதல் குறி ‘கிரேக்' மீதே இருந்தது.
கிரேக்கைக் கொல்வதன் மூலம் மற்ற பிரிட்டீஷ் அதிகாரிகளை அச்சுறுத்த முடியுமென்று
சூரியாசென் உறுதியாக நம்பினார்.
கிரேக்கைக் கொல்வதற்கு ஐ.ஆர்.ஏ.
-வில் இணைந்த இராமகிருஷ்ண பிஸ்வாஸ் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோரை நியமித்தார்.
அவர்களிருவரும் நடத்திய தாக்குதலில், கிரேக்குடன் வந்த சந்த்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் இறந்தார். ஆனால், கிரேக் தப்பிவிட்டான். பிஸ்வாஸும்,சக்ரவர்த்தியும் பிடிபட்டனர். பிஸ்வாஸுக்கு
தூக்கு தண்டனையும் சக்ரவர்த்திக்கு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது.
அன்றிலிருந்து சூரியாசென் தேடப்படும் குற்றவாளியாக, பிரிட்டீஷ் அரசின் மிக முக்கிய இலக்காக
கருதப்பட்டார்.
அவரது திட்டம் காரணமாக கிரேக்
தப்பி விட்டாலும் சற்று மிரண்டு போனான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த
சம்பவத்திற்குப் பிறகு காவல் துறை அதிகாரிகள் இந்தியர்களிடம் கடுமையாக நடந்து
கொள்ள யோசித்தனர். இதன் காரணமாக சூரியாசென் வங்க மக்களிடம் பிரபலமானார். அவரது
இயக்கத்தில் சேர இளைஞர்கள் பலரும் துடித்தனர்.
உயிரைத் துச்சமென மதித்து தங்களை
விடுதலை வேள்வியில் இணைத்துக் கொள்ள இளைஞர்கள் பலர் முன் வந்தாலும் ப்ரீத்திலதா
வதேதார் மற்றும் கல்பனா தத்தா ஆகிய இரண்டு இளம் பெண்களின் அர்ப்பணிப்பு இன்றைய
சமூகம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
கல்பனா தத்தா, 1913-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிட்டகாங்
மாவட்டத்தில் போல்காலி உபாசிலா வட்டத்தைச் சார்ந்த ஸ்ரீபுர் என்கிற மிகச்சிறிய
கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சிட்டகாங்கில் முடித்து விட்டு, கல்கத்தாவிலுள்ள பெதுனே கல்லூரியில் இளங்கலை
பட்டப் படிப்பு முடித்தார். படிக்கும் காலத்திலேயே ஷக்திசங் எனப்படும் மகளீர்
பொதுநலக் கழகத்தில் இணைந்து பல பொதுநலப் பணிகளில் ஈடுபட்டார். ஒருசில காலம்
பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய கல்பனாவுக்கு, சூரியாசென்னும் அவரது தோழர்களும் பங்குபெற்ற
ஐ.ஆர்.ஏ. அமைப்பின் மீது பற்றுதல் ஏற்பட்டது.
ஐ.ஆர்.ஏ. அமைப்பின் கட்டா கிராமக்
கிளையில் இணைந்து விரைவிலேயே சூரியாசென்னின் நம்பிக்கைக்குரிய போராளியாக
வளர்ந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஐ.ஆர்.ஏ. நடத்திய சிட்டகாங் ஆயுதப்
பறிப்பு வரலாற்றில் தடம்பதித்த மிக முக்கிய நிகழ்வாகும். 1930-ம் ஆண்டு ஏப்ரல்
10-ம் தேதி ஐ.ஆர்.ஏ.-வின் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஐந்து குழுவாகப்
பிரிந்தனர். மிகச் சரியாக அன்றிரவு பத்து மணிக்கு, ஒரு குழு கணேஷ் குப்தா தலைமையில் தம்பராவில்
உள்ள ஆயுதக் கிடங்கைத் தாக்கி, அங்குள்ள
ஆயுதங்களைக் கைப்பற்றினர். மற்றொரு குழு, லோக்நாத் பால் தலைமையில் சிட்டகாங்கின் இன்றைய சர்க்யூட் ஹவுசுக்கு அருகே
இருந்த ஆயுதக் கிடங்கைத் தாக்கினர்.
ஒரு குழு பிரிட்டிஷார் அதிகம்
புழங்கும், யூரோப்பியன்
கிளப்பைத் தாக்கியது. மற்றொரு குழு நங்கல் கோட் மற்றும் தாம் இரெயில் நிலையத்தில்
இருந்த தொழில்நுட்பத் தொடர்புகளைத் துண்டித்து இரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச்
செய்தது. மேலும் ஒரு குழு சிட்டகாங் நகரெங்கும் தங்களது தாக்குதல் நோக்கம்
பற்றியும் தேச விடுதலைக்கான அவசியம் குறித்தும் விளக்கிய துண்டறிக்கைகளை
விநியோகித்தது. கல்பனா தத்தா தலைமையிலான ஒரு குழு
தொலை தொடர்புகளை, வெற்றிகரமாகத்
துண்டித்தது. கிட்டதட்ட இரண்டு நாட்கள் பிரிட்டிஷ் அரசு செயலிழந்து போனது.
அனந்த் சிங் மற்றும் கணேஷ் குப்தா
ஒரு வண்டியிலும், சூர்யா சென்
மற்றொரு வண்டியிலும் ஆயிரக்கணக்கான ஆயுதங்களை அள்ளிச்சென்றனர். வெறியுடன் அலைந்த
பிரிட்டிஷ் படை சூர்யா சென்னும் அவரது தோழர்களும் மறைந்திருந்த ஜலாலாபாத்
மலைப்பகுதியை சுற்றி வளைத்தது. சூர்யா சென், கல்பனாதத்தா மற்றும் முக்கிய தலைவர்கள்
தப்பிவிட்டனர். ஒரு சில தொண்டர்கள் கைதானார்கள்.
கல்பனா தத்தா பலபகுதிகளில் சுற்றி
திரிந்துவிட்டு இறுதியாக 1933 ஆம் வருடம் பிடிபட்டார். கடுமையான
சிறைவாசத்துக்குப்பிறகு 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 1940=இல் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1943 ஆம் ஆண்டு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலராக இருந்த பூரன் சந்த் ஜோஷியை மணந்தார். 1995-இல் இறந்து போன கல்பனா
தத்தாவுக்கு சந்த் மற்றும் சூரஜ் சந்த் என்று இரண்டு மகன்கள். சந்த்-இன் மனைவி
மானினி எழுதிய do and die நூல் சிட்டகாங்
ஆயுதபறிப்பு சம்பவம் பற்றியது.
பிரிட்டிஷ் படையை மேலும்
அச்சுறுத்துவதற்காக தேவி பிரச்சாத் குப்தா, மனோரஞ்சன் தாஸ், சுதேஷ் ராய், பானிந்திர நந்தி, சுபோத் சௌத்ரின் ஆகியோர் ஐரோப்பிய
குடியிருப்புகள் மீது சரமாரியாக தாக்கினர். இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.
சுபோத் சௌத்ரி, பானிந்திர நந்தி
கைது செய்யப்பட்டனர் ஏனையோர் கொல்லப்பட்டனர். ஐ.ஆர்.ஏ வின் மற்றொரு முக்கியமான
தாக்குதல் ‘பஹர்தலி கேளிக்கை
விடுதி தாக்குதல்' ஆகும். அந்த
கேளிக்கை விடுதியில் ‘இந்தியர்களுக்கும்,
நாய்களுக்கும்
அனுமதியில்லை' என்று ஒரு
அறிவிப்பு பலகையை திமிர் பிடித்த பிரிட்டிஷ் பிரஜைகள் வெளியே தொங்கவிட்டிருந்தனர்.
அதைக்கண்டு ஐ.ஆர்.ஏ.வின் தீரமிக்க வீராங்கனையாக விளங்கிய பிரித்தீலால் வதேதார்க்கு
குருதி கொதித்தது.
1911 ஆம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி
சிட்டகாங் மாவட்டம் தால்காட் கிராமத்தில் பிறந்த பிரித்திலால் வதேதாரின் தந்தை நகர
நிர்வாக அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்தார். பிரித்திலால், கல்பனா தத்தாவின் பள்ளித்தோழி. படிக்கும்
காலத்தில் அவரது பிரியத்துக்குரிய ஆசிரியை உஷா டே, ராணி
லக்குமிபாயின் வீரமிக்க வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாக அடிக்கடி சொல்லி வந்தார்.
அதுவே அவர் ஐ.ஆர்.ஏவில் இணைய காரணமாயிற்று.
சிட்டகாங் ஆயுத பறிப்பு சம்பவத்துக்குப்பிறகு இயக்கம் தோய்வடைந்து விடவில்லை
என்பதை உணர்த்தும் விதமாக, பஹர்தலி கேளிக்கை
விடுதி தாக்குதலை பிரித்திலால் திட்டமிட்டார்.
1932 செப்டம்பர் மாதம் 23-ந்தேதி
பிரித்திலால் பஞ்சாபி ஆண் வேடம் புனைந்தார். அவரோடு காளிசங்கர் ராய், பிரபுல்ல தாஸ், பினேஷ்வர் ராய், சாந்தி சக்கரவர்த்தி ஆகியோர் வேட்டி
சட்டையிலும், மகேந்திர சௌத்ரி,
சுஷில் டே, பன்னா சென் ஆகியோர் லுங்கி சட்டையிலுமாக
தனித்தனி குழுவாக நான்கு புறத்திலும் விடுதிக்குள் நுழைந்தனர். பிரிட்டிஷ் போலிஸ்
எதிர்பாராத தருணத்தில் தங்கள் தாக்குதலை நடத்தினர். திருப்பி போலிசாரும் சுட அதில்
ஒரு குண்டு பிரித்திலால் மீது பாய்ந்தது. அவர் நகரமுடியாத அளவுக்கு இரத்தம்
வெளியேற எப்படியோ தவழ்ந்து சென்று ஒரு இடத்தில் மறைந்துகொண்டார், மற்றவர்கள் தப்பிவிட்டனர். மிகப்பலவீனமான
நிலையில் இனி தன்னால் தப்பிக்க முடியாது என்று முடிவு செய்த பிரித்திலால்
பிரிட்டிஷாரிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற உறுதியில் தயாராய் வைத்திருந்த
சயனைட் அருந்தி மரணமுற்றார்.
ஒரு இரவு முழுவதும் பனியில்
கேட்பாரற்றுக் கிடந்த அவரது உடல் மறுநாள் காலையில்தான் கண்டெடுக்கப்பட்டது.
உடற்கூறு சோதனையில்தான் அவர் சயனைட் அருந்தி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய
சுதந்திர வரலாற்றில் எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரை துச்சமென தூக்கி
எறிந்திருக்கின்றனர். இருப்பினும் சயனைட் அருந்தி உயிர்விட்ட முதல் வீராங்கனை
பிரித்திலால்தான்.
ஐ.ஆர்.ஏ வின் பிற உறுப்பினர்கள்
வெவ்வேறு காலகட்டங்களில் பிடிபட்டாலும், சூர்யா சென் மட்டும் பால்காரராக, கூலித்தொழிலாளியாக, இஸ்லாமியராக
பல்வேறு வேடங்களில் சுற்றித்திரிந்தார். கடைசியில் நேத்ரா சென் என்ற பணத்தாசைப்
பிடித்த கருங்காலி ஒருவன் 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, அவரை காட்டிக்கொடுத்துவிட்டான். சூர்யா
சென்னின் மீது அதீத பாசம் கொண்ட அவரது தொண்டர்களில் ஒருவர், நேத்ரா சென்னின் வீட்டுக்குள் நுழைந்து அவனது
மனைவியின் கண்ணெதிரிலேயே, அவனது கழுத்தை
அறுத்துக் கொன்றுவிட்டார். இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் நேத்ரா சென்னின்
மனைவி அவனுக்கு சூர்யா சென்-ஐ காட்டிக்கொடுத்ததற்காக அறிவிக்கப்பட்ட பரிசு பணத்தை,
கையால் தொடக்கூட
மறுத்துவிட்டதோடு நேத்ரா சென்-ஐ கொன்றவரை போலீசாருக்கு அடையாளம் காண்பிக்கவும்
மறுத்துவிட்டார். இறுதிவரை அவர் யாரென்பது நேத்ரா சென்னின் மனைவியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
வங்கத்தின் தவப்புதல்வன் சூர்யா சென் எங்கள் மூத்த சகோதரர் அவரைக்கொன்றவனை
என்னாலும் மன்னிக்க முடியாது என்று நேத்ரா சென்னின் மனைவி பகிரங்கமாகவே
அறிவித்துவிட்டார்.
சிறைக்கொடுமைகளில் மிக மோசமாக
சித்திரவதைப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியிலிடப்பட்டால், சூர்யா சென்னின் பெயர் பிரதான இடம்
பிடித்திருக்கும். அவர் மீது கொண்ட அடங்காத ஆத்திரம் காரணமாக அவரது பற்களை
சுத்தியால் அடித்து உடைத்தனர்.அவரது விரல் நகங்கள் பிடுங்கப்பட்டன. எலும்பு
மற்றும் நரம்புகள் உடைக்கப்பட்டன. நீதிமன்றத்தில்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட தினமான ஜனவரி 12, 1934 அன்று அவர் தூக்கு மேடைக்கு நடந்தும்
வரும் நிலையில் இல்லாததால், தரதரவென இழுத்து
வந்து தூக்கிலிட்டனர்.அதன் பிறகும் வெறி அடங்காத அவர்கள், அவரது உடலை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி
கடலில் தூக்கி எறிந்தனர்.
இறப்பதற்கு சில நாட்களுக்குமுன்
தன் நண்பருக்கு சூர்யா சென் அனுப்பிய கடைசிச்
செய்தியில் “ மரணம் என் கதவைத்
தட்டுகிறது. ஆனால் என் மனமோ சுதந்திரக்காற்றைத் தேடி வெளியே அலைகிறது. எனக்கு ஒரு
கனவு தோன்றுகிறது. அது தங்கமான கனவு. இந்தியா விடுதலைப் பெறும் பொன்னான கனவு.
தோழர்களே அந்தக் கனவை நோக்கி உங்கள் பாதங்களை உறுதியாக வையுங்கள். அதை ஒரு நாள்
நிச்சயம் கண்டடைவீர்கள்” என்று
குறிப்பிட்டிருந்தார்.
நாம் இன்று சுவாசிக்கும்
சுதந்திரக்காற்றில், அவர்களின்
கதறல்களும், ஓலங்களும் கலந்து எம்மைப் பதறச்செய்கின்றன. கருத்துக்குருடர்களால்
அவர்களது வலிமிகுந்த உயிர்க்கசிவை ஒரு போதும் உணரமுடியாது...
நன்றி "காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2013
நல்ல பகிர்வு...
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா
நீக்கு