அந்த அறையின் சுவர் வண்ணம் மிக நேர்த்தியாக பூசப்பட்டிருந்தது. யாரோ ஒரு நுணுக்கமான வேலைக்காரன் பார்த்துப் பார்த்து பூசியிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு எந்திரத்தின் வேலையாகவும் இருக்கக் கூடும். இறுக மூடப்பட்டிருந்த ஜன்னல் கண்ணாடியின் வழியே வெளியே தெரிந்த மலர்கள் சுதந்திரமாக ஆடிக்கொண்டிருந்தன. பெயர் தெரியாத பூச்சி ஒன்று மலரக் காத்திருக்கும் மொட்டு ஒன்றை சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.குளிர் சாதனக்கருவி இன்னும் அறையைக் குளுமையேற்றிக் கொண்டிருந்தது. அறைக் கதவுகள் அத்துனையும் சாத்தப்பட்டு காற்று தவித்துக்கொண்டிருந்தது.
அவளது பூர்வீக அறை இப்படியானது அல்ல. காரை பெயர்ந்தும், ஆங்காங்கே வீறல் விட்டும் இருக்கும். இடையே புகுந்து கரையான் ஏதோ ஒரு கவிதையை கோடு போல எழுதிவிட்டுப் போயிருக்கும். அதன் புரியாத மொழியில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு பொருள் புரியும். ஒழுங்கற்றவற்றில் தெரியும் உயிர்ப்பு சில சமயம் ஒழுங்கானவற்றில் இருப்பதில்லை.
அவளது இளம்பிராயத்து அறையில் காற்று ஏதேனுமொரு பூவின் வாசத்தை கர்ம சிரத்தையாக உள்ளே அழைத்து வந்து முகத்தில் மோதியபடி இருக்கும். ஜானு இதற்காகவே முகம் கழுவிய பின் துடைக்கவே மாட்டாள். பனி பூத்த ரோஜாவென அவள் முகம் மலர்ந்திருக்கும்.
பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது திடீரென ஜன்னல் வழி விழும் கிரிக்கெட் பந்தை பணயமாக வைத்துக் கொண்டு, தெருச் சிறுவர்களின் மழலையை மிரட்டிப் பெறுவாள். வீட்டருகே ஓடும் சிற்றோடையில் வெயில் நேரத்தில் ஏதேனுமொரு தவிட்டுக் குருவி, சூடு தணித்துக் கொண்டிருக்கும். பல்லியின் வேட்டையில் ஏதேனுமொரு பூச்சி தனது ஆயுளை இழந்து கொண்டே இருக்கும்.
இங்கே... செய்வதற்கு வேலையொன்றும் இப்பொழுது கையிருப்பில் இல்லை. எல்லாவற்றுக்கும் ஏதேனுமொரு இயந்திரம் தயாராக இருந்தது. வகைவகையாய் சமையல் செய்ய மெனு தயாரித்தாலும், அனைத்தையும் அரைமணி நேரத்தில் முடித்து விட முடிகிறது. போதாததற்கு, இந்த வேலைக்கு ஒரு வேலைக்காரியை வேறு சொல்லியிருந்தான் ராம்குமார். ஆனால், ஜானு தான் வேண்டாமென மறுத்திருந்தாள். இந்த ஊர் வேலைக்காரிகளுக்கு வம்பு பேசும் வழக்கமில்லை என்பதால் அதிகம் பேசுவதில்லை. ஒரு உயிருள்ள இயந்திரம் உள்ளே நுழைந்து வெளியேறுவது போலத்தான் இங்கு வேலைக்காரிகளின் பங்கு இருக்கிறது. இருக்கும் ஒன்றிரண்டு வேலையையும் மற்றவரிடம் கொடுத்து விட்டால், பைத்தியம் பிடித்துவிடுமென வேலைக்காரியை நிறுத்தச் சொல்லி விட்டாள் ஜானு.
கீரை வியாபாரியோ, மீன் வியாபாரியோ வராத தெரு என்ன தெரு என்று சலிப்பேற்பட்டது. அடுத்த வீடு கூட கூப்பிடு தூரத்தில் இல்லை. எந்த உதவியானாலும், அழைப்பதற்கென்று சில சேவை நிறுவனங்கள் இருக்கின்றன. சொன்ன வேலையை முடித்து விட்டு கொள்ளை விலையை பில்லாகத் தருவார்கள்.
சிறு வயதில் ஜானுவோடு ஒத்த சிறுமிகள்
விளையாட வந்தால், அம்மா லக்ஷ்மி அவர்களுக்குள் வைக்கும் போட்டி, ஜானுவுக்கு அலுக்கவே அலுக்காத விளையாட்டு.
எல்லாச் சிறுமிகளும் எதாவது ஒரு அறைக்குள் ஐந்து நிமிடம் நின்று நிதானித்து பார்க்க அனுமதிக்கப் படுவார்கள். பின்னர் அவர்களை வெளியே அனுப்பி அறைக்கதவு சாத்தப்படும்.
ஆளுக்கொரு தாளில் அறையிலுள்ள பொருட்களை நினைவிலிருந்து மீட்டு, பட்டியலிட வேண்டும். யார் அதிக எண்ணிக்கை எழுதுகிறார்களோ அவர்களுக்குத் தேன் மிட்டாய் பரிசு நிச்சயம்.
பெரும்பாலும், ஜானுதான் பரிசைத் தட்டிச் செல்வாள். ஞாபக சக்தியை பெருக்கும் இந்த விளையாட்டில் ஜானுதான் ரொம்ப கெட்டிக்காரி. அறையைப் படிப்பதில்தான் எத்தனை சுகம். கட்டிலிடம், சுவர்ப் பல்லியிடம், நிலைக் கண்ணாடியிடம், மூலையில் கசங்கிக் கிடக்கும் காகிதங்களிடம்,அடிக்கப்படாத ஒட்டடையிடம்.... என எல்லா பொருள்களிலும் தான் எத்தனைக் கதைகள் இருக்கும்! நினைவுகளற்ற மனதால் கூர்ந்து கேட்டபடியிருப்பாள் ஜானு.
செல் ஒலிக்கிறது.
“ஜானு…..” ராம்குமார்தான்.
“ம்”
“எப்படியிருக்கே...
ஏதாவது ப்ராப்ளம்?”
“ம்ஹும்”
“சாப்பாடு செய்ய முடியலன்னா சிரமப் படாதே. உனக்கு குடுத்த டைரியில, ஹோட்டல் நம்பர் இருக்கு. போன் பண்ணினா வித் இன் ஆஃப் அன் அவர்ல ஸ்டஃப் வந்துடும்.”
“ம்... செஞ்சிட்டேன்.”
“ஃபைன், நான் வர மணி எட்டாயிடும்.”
“ம்...”
“நம்ம ஊர் ரேஷன்ல கூட 200 கிராம் சேர்த்துப் போட்டுடுவான் போலிருக்கு. உன்கிட்ட வார்த்தையைப் பிடுங்கறது அவ்வளவு கஷ்டமா இருக்கு.”
“--------------”
“ம்... சரி, ஓகே. ஈவ்னிங் என்ன வேணும்?”
“ஒண்ணும் வேணாம்.
எல்லாம் இருக்கு.”
“ஓகே” வைத்துவிடுகிறான்.
வெள்ளைச் சுவரைப் பார்த்தால் நந்துவின் ஞாபகம் வந்துவிடும். நந்துவுக்கு வெள்ளைச் சுவரில் கிறுக்குவது கொள்ளைப் பிரியம். அவன் வரைந்த உருவங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல ஒரே தினுசாகத் தோன்றும். பாட்டிக்கு அப்படி சுவரில் கிறுக்கி வைப்பது பிடிக்காது. இப்படியான புரியாத மொழி ஏதாவது துர்தேவதைக்கு அழைப்பாக மாறிவிடுமென்பாள் அடிக்கடி.
கடிகாரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட இயந்திரக் குரல், மணி 10.00 என்றது.
இன்னும் 10 மணி நேரத்தை ஓட்டியாக வேண்டும். கற்பகத்தைப் போல் கவிதை எழுதவோ, வனஜாவைப் போல் படம் வரையவோ ஜானுவுக்குத் தெரியாது. அறையின் மேல் பகுதியில் இருளில் ஜொலிக்கும் பொய் நட்சத்திரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிறிது நேரம் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு அண்ணாந்து வேடிக்கை பார்த்தாள். மெல்லிய மெத்தை அவளை குழந்தையைப்போல் உள்வாங்கிகொண்டது. அக்கடாவென்று சில்லென்ற தரையில் உருளவேண்டும் போல் இருந்தது. ஆனால் கிச்சன் பாத்ரூம் தவிர எல்லா அரைகளிலும் கார்பெட் விரிக்கப்பட்டிருந்ததால் மருந்துக்கும் கண்ணுக்கு தரை தெரிவதில்லை. நவீனப் படுத்தப் பட்ட சிறைபோலிருந்தது அந்த அறை. மீண்டும் கிச்சனுக்குள் வந்தாள். புகை, பிசுக்கு, ஒட்டடை எதுவுமற்று சடலமாயிருந்தது சமையலறை. அடுப்படிக்கு புகையும், உருளும் பாத்திரங்களும்தானே உயிர்..?.
ஃபிரிஜைத் திறந்து அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப் பட்டிருந்த ஏதோ ஒன்றை எடுத்து வாயில் போட்டாள். புரிபடாத சுவை. நாவை வருடி உள்ளிறங்கிற்று. மறுபடி செல் ஒலித்தது. அம்மா....
“அம்மா”
“எப்படிடா இருக்கே?”
“இருக்கேம்மா. நந்து,
கற்பகம், வனஜா எல்லாரும் எப்படியிருக்காங்க?”
“எல்லாரும் க்யூவில நிக்கறாங்க. உன் கிட்ட பேசனுமாம்.”
“அக்கா, நான் கற்பகம். அக்கம் பக்கத்துல பழக ஆளிருக்காங்களா?”
“ம்... அரை கிலோமீட்டர் தாண்டி.”
“அப்பறம்...சமைக்கிறதுக்கு சிரமமாயிருக்கா? நம்மூரு பொருள்களெல்லாம் கிடைக்குதா?”
“எல்லாம் கிடைக்குது. காசு கொடுத்தா போதும். டாண்ணு வந்திடும்.”
நந்து போனைப் பிடுங்கிப் பேசுவது தெரிந்தது.
“அக்கா அங்க பவர் கட் இருக்கா?”
“ம்ஹும். ”
“தப்பிச்ச. நாங்களெல்லாம் இங்க இருட்ல நடக்கப் பழகிட்டிருக்கோம். ஐஸ் பாய் எல்லாம் தெனம் வெளையாட முடியுது. எல்லோரும் ஆந்தை மாதிரி ஆயிட்டோம். பளிச்சுன்னு கண்ணு தெரியுது எங்களுக்கு. எங்க ஒளிஞ்சாலும் கண்டுபிடிச்சுடுவோம்.”
அடக்கமாட்டாமல் சிரித்தே விட்டாள் ஜானு.
“ஜானு, வனஜா பேசறேண்டி. வீட்டுக்காரர் நல்லபடியா வெச்சிருக்காரா?”
“ம்.”
“உனக்கென்ன, ராசாத்தியாட்டம் பறந்துட்ட... நாங்க தான் இங்க உள்ளூர்ல அல்லாடிகிட்டிருக்கோம். உனக்கு அங்க வேலை கிடைக்குமா?”
“நான் படிச்ச எம்.ஏ. ஹிஸ்டரிக்கு இங்க கிடைக்காது. அவரும் தேவையில்லேன்னுட்டார்.”
“அப்பறமென்ன... கொடுத்துவச்சவ நீ. அமெரிக்கான்னா சும்மாவா?
“பொம்பளைங்களுக்கு அமெரிக்கா
ஆஸ்திரேலியா வித்தியாசமெல்லாம் இல்லக்கா. எல்லாம் ஒண்ணுதான். பெட் ரூம், பாத் ரூம், கிச்சன்னு ரூம்தான் மாறும். கூண்டுக் கிளிக்கு தேசமெல்லாம் தெரியாதுக்கா. எங்க மாத்தி வச்சாலும் அதுக்கு வாழ்க்கை கம்பிக்கு பின்னாடிதான். நமக்கு ஏதாச்சும் ஒரு அறை. பயப்படாத. ஒரு குறையும் இல்ல. பெரிய தங்கச்சி அமெரிக்காவுல இருக்கா, சின்ன தங்கச்சி சிங்கப்பூர்ல இருக்கா அப்படின்னு சொல்லிக்கறதெல்லாம் சுத்த ஹம்பக். நீ உசிலம்பட்டி அறை. நான் இங்க பாஸ்டன் அறை. பீத்திக்க ஒண்ணுமில்ல....”
மறுபக்கம் மெளனம் ஒரு மொழியாக உலவியது. ஒருவேளை வனஜா தானிருக்கும் அறையை சுற்றிப் பார்த்து உறுதி செய்வாளாயிருக்கும்....
நன்றி: கல்கி 05-07-2015
கல்யாணம் முடித்து வெளி நாட்டிற்குச் செல்லும் பெண்ணின் நிலையை கண் முன்னே நிறுத்தும் கதை. பக்கத்து வீட்டிலுள்ள பெண் இப்படி சில நாட்கள் முன்னர் தான் சென்றார். அவர் அம்மா இப்படித்தான் மகள் நிலை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்.. பல பெண்களுக்கு வாழ்க்கையின் பெரும்பகுதி அறைகளுக்குள் முடிந்துவிடுகிறது
நீக்குஅறை... அருமை... பெண்களின் வாழ்க்கையை பேசும் கதை..
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்
நீக்குReview Of Wynn Casino - Woori Casino
பதிலளிநீக்குIf you are looking 가상 화폐 란 to experience the excitement of Las Vegas, then you are in the right place. Wynn Casino is one of the 네이버 룰렛 돌리기 top 12bet gaming 오피주소 destinations in 텍사스 홀덤 the world