பிரிதலும்.... சேர்தலும்....
-
நெய்வேலி பாரதிக்குமார்
காற்று கரைத்திருக்குமோ
இலையின் பச்சையை....?
சேலை உருவப்பட்ட பாஞ்சாலியாய் படபடத்தது
தரையில் கிடந்த சருகு....
எந்த இடத்தில்
மறைந்திருக்கும்
என் அதிகாலை மலர்ச்சி?
என்ற இடையறாத துக்கத்தோடு
வாடி வதங்கிக் கிடந்தது மல்லி...
எங்குச் சென்று ஒளிந்திருக்கும்
காலையில் கேட்ட ஆலயமணியொலி?
எந்த நொடியில் கரிந்திருக்கும்
வானிலிருந்து விழுந்த எரிநட்சத்திரம்?
என்ன சொல்லி பிரிந்திருக்கும்
மேகத்திலிருந்து நழுவி வந்த அந்தத் துளி?
எல்லா கேள்விகளையும் சுமந்துகொண்டு
காத்திருக்கும் விழிகளில்
எல்லாமும் தெரிகின்றன
ஏதோ ஒரு ஜீவனின்
காத்திருத்தலை நிறைவு செய்ய
எதனிடமிருந்தாவது
ஏதேனும் ஒன்று
விலகி வரத்தான் வர வேண்டியிருக்கிறது...
*******************************************************************
சொந்தத் தலைப்பில் ஒரு கவிதை...
பரிமா(ஆ) றுதல்
ஆவி பறந்த தட்டில் இன்னொன்று விழாதா?
என்று ஆவலோடு நோக்குகையில்
கறாராய் வந்தது சொம்புநீர்
கை கழுவுவதற்காக...
ஒவ்வொரு முறை சாலையை
கடக்கும்போதும் மிரட்டியது.,
இனிப்பகங்களை அடுத்து அமைந்த
இரத்த பரிசோதனை நிலையங்கள்....
ஆசுவாசமாய் அருந்தமுடியவில்லை
என்னுடல் வெய்யிலைக்
குடிக்கும் ஒரு குளிர்பானத்தை...
தெரிந்தவர் அறிந்தவர் விருந்துகளில்
இனிப்புகளை பரிமாறுகிறவர்கள்
கவனமாக தாண்டிச்செல்கிறார்கள்
“ உங்களுக்குத்தான் ஒத்துக்காதே”
என்ற பரிதாபக்குரலுடன்...
மதுபானக் கடையில் நிற்பதுபோல்
மறைந்து மறைந்து நிற்கவேண்டியிருக்கிறது
டிகிரி காபிக் கடையில்...
பேத்தியின் வருகைக்காக காத்திருக்கிறேன்
கடைசியாக கற்றுத்தந்த
‘காக்காய் கடி' மிட்டாய்
பரிமாறும் விளையாட்டை
அவள் மறவாதிருக்கவேண்டும்...
*****************************************************
வணக்கம்
பதிலளிநீக்குதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி-
நீக்கு