வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பட்டை தீட்டியவர்களுக்கு ஒரு பாமாலை


வாழ்க்கைச் சோலையில் பாடசாலை

அந்த மைதானத்தின் மண் துகள்களில்
கலந்து, கரைந்துவிட்டிருந்தது
எங்கள் இளம்பிராயம்..

மர பெஞ்சுகளில்
குச்சித் தூரிகைகள்
வரைந்த மகத்தான ஓவியமாய்
எங்கள் பெயர்கள்.

சிராய்ப்புகளின் மீது எச்சில் மருந்து தடவி
திரும்பத் திரும்ப பாடிச் சென்ற
கபடிப்பாட்டுப் போல
இனிக்கவேயில்லை
வேறு எந்தப் பாடலும்...

சட்டை மடித்து காக்காய் கடிகடித்து
பகிர்ந்த நெல்லிக்காய் போல்
சுவைக்கவில்லை எந்தக் கனியும்...

தடித்த மஞ்சள் சட்டையுடனும்
புடைத்த நீலவர்ண கால்சராயுடனும்
நகர்ந்து சென்ற
சிறுவயது புகைவண்டி போல்
வாய்க்கவேயில்லையொரு
உவப்பான பயணம்...

சூரியன் வருவது யாராலே
என்று எங்கேனும் குரல் ஒலித்தால்
சட்டென்று பனிக்கின்றன கண்கள்
எல்லோருக்காகவும் எல்லோரும்
பிரார்த்தித்த அந்த பேதமற்ற பொழுதுகள்...

எங்களின் எல்லா வெற்றிகளிலும்
சேர்ந்தே வருகிறது
ஏதோவொரு ஆசிரியரின் விரல்...

எங்கள் எல்லா அறங்களிலும்
உரக்கக் கேட்கிறது
ஏதோவொரு ஆசிரியரின் குரல்...

எங்கள் எல்லா அறிதல்களிலும்
உணர முடிகிறது
ஏதோவொரு ஆசிரியரின் அக்கறை...

நெகிழ்வான தருணங்களில் எல்லாம்
கண்ணீருடன் அசைபோடுகிறோம்
சந்தோஷங்களை மட்டும் சுமந்து திரிந்த
இளம்பிராயத்தை திரும்பத் தரும்படி
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!

-24.02.2014-ல் வெளியான என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளி, மந்தாரக்குப்பம் (எனது பள்ளி!) -58வது ஆண்டுவிழா மலரில் வெளியானது.
-------------------

கண்ணுக்குத் தெரியாத காற்று

இயங்கும் வரை எவரும் பொருட்படுத்துவதில்லை
உள்ளோடும் மின்சாரத்தை
நின்ற பிறகுதான் நினைத்துப் பார்க்கிறோம்

உரசிப் பற்றிக் கொள்ளும் வரை
பத்திரமாய் தான் வைத்திருக்கிறோம்
தீக்குச்சிகளை
பள்ளிப் பருவம் வரை
எதிர்ப்படும் ஆசிரியரை வணங்குவது போல்.

உயரப் பறக்கும் தருணங்களுக்கு
இடையில் முளைக்கும்
சிறகுகள் மட்டுமே காரணமென்று
பறவை நினைப்பது போல்
நம் ஒவ்வொரு அசைவுக்கும்
‘நான்' மட்டுமே காரணமென்று
இறுமாந்திருக்கிறோம்.

எல்லாவற்றையும் இயக்கியபடி
நம்முள் நகரும் காற்று
நம் கண்ணுக்குத் தெரிவதேயில்லை.

வர்ணம் தீட்டினால்
கூழாங்கல்லுக்கும் இடமளிப்போம்
வரவேற்பறையில்
உயர்த்திவிட்ட ஏணியை வைப்பதோ
கொல்லைப்புற சுவரோரம்

ஆனாலும்
அடுத்தவர் ஏற வாகாய்
சாய்ந்திருக்கிறது ஏணி-
வகுப்பறையில்
கரும்பலகையோரம்
காத்திருக்கும் ஆசிரியர்போல்.

('செம்மொழி நிலத்தில் செந்தமிழ்க் கவிதைகள்' தொகுப்பில் வெளியானது.)




2 கருத்துகள்:

  1. அருமையான கவிதைகள்....

    உங்கள் கவிதை மூலம் நானும் எனது ஆசிரியர்களை நினைவு கூர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் சார் .. படைப்பின் இலக்கும் படிப்பவர்களின் நினைவலைகளை பிடித்து இழுப்பதுதானே... உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் நன்றி

      நீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...