செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

எல்லாத் தடைகளையும் தாண்டி ...

கலகக்காரக் கலைஞர்கள்-5
                                    

மன்ஹாஸ் மஹம்மதி ( ஈரான்)



            2011 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் தேதி டெஹ்ரான் நகரில் ஈரானிய பெண் இயக்குனர் மன்ஹாஸ் மஹம்மதி மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த முறை அவர் கைது செய்யப்பட்டதற்கு உரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ஈரானின்  விளையாட்டுத்துறையின் ஒரே புகைப்படக்கலைஞரும், பெண்ணுரிமைப் போராளியுமான மரியம் மஜித் கைது செய்யப்பட்டிருந்தார். மரியம் மஜித் ஜெர்மனியில் நடைபெறவிருந்த உலக பெண்கள் கால்பந்து போட்டி நிகழ்வுகளை புகைப்படம் எடுப்பதற்காக ஜெர்மன் கிளம்புவதற்கு சில மணி நேரம் முன்பாக கைது நடவடிக்கை நிகழ்ந்தது.
            காரணமற்ற கைதுகள், சமூகப் போராளிகள் வெளி நாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பயணம் தடை செய்யப்படுவது என்பது ஈரானில் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்த சமயம் அது. மன்ஹாஸ் மஹம்மதி பிரதான வேடத்தில் நடித்திருந்த "Wedding Ephemerals"'  என்ற திரைப்படம் கேன்ஸ் படவிழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருந்தது. அந்த படத்தை ஈரானின்  மற்றொரு பெண் இயக்குனர்  ரேசா இயக்கி இருந்தார். அந்த படம் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட்ட போது சிறப்பு பார்வையாளராக கலந்து கொள்ள மஹம்மதிக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால் அந்த விழாவுக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
            ஜனவரி 1, 1975 ஆம் ஆண்டு டெஹ்ரானில் பிறந்த  மஹம்மதி ஒரு நடிகையல்ல. இயக்குவதில்தான் அவருக்கு நாட்டம் அதிகம். குறிப்பாக ஆவணப்படங்கள் மூலம் தனது கருத்துக்களை எளிதாக பதிவு செய்யமுடியும் என்பதால் அதில்தான் அவரது கவனம் குவிந்திருந்தது. அவரது முதல் ஆவணப்படம் women without shadows 2003இல் வெளிவந்திருந்தது. ஈரானில் கைவிடப்பட்ட மற்றும் வீடற்ற பெண்களின் நிலை குறித்து அந்த படம் விரிவாக பதிவு செய்திருந்தது. பல்வேறு சர்வதேச விருதுகளை அந்த படம் பெற்றிருந்தது.
            அதற்குப் பிறகு அவர் எடுத்த ஆவணப்படம் வித்தியாசமான களத்தில் எடுக்கப்பட்டது. டெஹ்ரானிலிருந்து துருக்கியிலுள்ள அங்காரா வரை வாரம் ஒரு முறை (வியாழன் மட்டும்) செல்லும் ரயில் எப்பொழுதும் கூட்டமாகவே செல்லும். ஆனால் திரும்புகையில் பெரும்பாலும் காலியாகவே இருக்கும். காரணம் ஈரானிலிருந்து பலரும் துருக்கியிலேயே பிழைப்புத்தேடி அங்கேயே வாழவிரும்பி சென்றுவிடுவதுதான். மஹம்மதி அந்த புகைவண்டியிலேயே பயணித்து அந்த ரயிலில் செல்லும் பயணிகளின் மனநிலை, டெஹ்ரானில் அவர்களது துயரமிக்க வாழ்க்கை நிலை எல்லாவற்றையும் படமாக்கினார். அந்த படத்துக்கு Travelogue என்று பெயர். அவர்தான் அந்த படத்துக்கு ஒளிப்பதிவாளரும் கூட.
            ஈரானின் முதல் பெண் இயக்குனர் ரெக்ஷான் நேசா அவர் இயக்கிய  we are half the Iran population  என்ற படத்திலும் மஹம்மதியின் பங்கு பெருமளவு இருந்தது. அந்த படம் ஈரான் பெண்களின் உரிமைகள், சுதந்திரம் குறித்து ஈரானின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அரசியல்கட்சிகளின் கொள்கைகளை விவாதித்தது. மொஜன் ஜமாதி இயக்கிய crossing the line என்ற படத்திலும் மஹம்மதியின் பேட்டி பதிவாகியிருந்தது. அந்த படம் ஈரான் பெண் இயக்குனர்கள் சந்தித்த சவால்களைப்பற்றிய மிகச்சிறந்த ஆவணமாக இருந்தது.
            ஆவணப்படம் எடுப்பது மட்டும் அவரது பணியில்லை அதையும் தாண்டி நேரடியான சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். பெண்ணுரிமைப் போராளிகளுடன் இணைந்து மறுக்கப்பட்ட நீதிக்காக போராடத்துவங்கினார். அதிலிருந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.
            அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் அவர் 2007 இல் கைதானது.  2009 இல் ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மஹமூத் அஹமதிஜத் -ஐ எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டபோது நேடா அகா சுல்தானி என்ற இளம் பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கல்லறையில் கூடிய பெண்ணுரிமைவாதிகளுடன் மஹம்மதியும் இருந்ததால் இரண்டாவது முறை அவர் கைது செய்யப்பட்டார். ( அவருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு இயக்குனர் ஜாஃபர் பனாஹி) ஆனால் ஒரே நாளில் மஹம்மதி விடுதலை செய்யப்பட்டார்.
            சுட்டுக்கொல்லப்பட்ட நேடாவைப்பற்றி இந்த இடத்தில் நாம் அறிந்து கொள்வது நல்லது. நேடா ஜனவரி 23 1983 ஆம் வருடம் டெஹ்ரானில் பிறந்தவர். நேடா என்பதற்கு குரல் அல்லது கடவுளின் செய்தி என்று பெர்சிய மொழியில் பொருள். மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட நேடாவுக்கு படிப்பதிலும், இசையின் மீதும்  நாட்டம் அதிகம். திருமணத்துக்குப்பின்  இஸ்லாமியக் கோட்பாடுகள் பற்றிய ஒரு பாடப்பிரிவினை விரும்பி எடுத்து இஸ்லாமிக் அஸாத் பல்கலைக் கழகத்தில் படித்தார். ஆனால் அவரது கணவரின் குடும்பத்தினர் அவர் படிப்பதை ஆட்சேபித்ததால் அவர் தனது படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. அவர் விரும்பியவாறு உடைகள் அணிய பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்தது இன்னொரு காரணம்.
            கணவருடன் கருத்துவேறுபாடுகள் நாளடைவில் அதிகரித்துக்கொண்டே போனதால் அவரது மணவாழ்க்கை முறிந்து போனது. விவாகரத்து ஆன பின் அவர் வயலின் வாசிக்கவும், பியானோ வாசிக்கவும் இசைப்பயிற்சி நிலையங்களை தேடிப் போனார். துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கும் அவர் செல்ல நேர்ந்தது அங்குதான் அவர் காஸ்பியன் மக்கான் என்னும் புகைப்பட நிபுணர்  மற்றும் ஆவணப்பட இயக்குனரை சந்திக்க நேர்ந்தது. அவரது வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையாக அந்த சந்திப்பு இருந்தது.
            புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்தையும் அரசியல் ஈடுபாட்டினையும் அந்த சந்திப்பு அவருக்குள் மூட்டியது. இரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட முறை அவருக்குள் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அதிபருக்கு எதிரான போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த பேரணியில் கலந்து கொள்ள அவர் டெஹ்ரான் வந்திருந்தார். 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி அன்று அவரும் அவரது இசை ஆசிரியை ஹமிது ஹவேதியும் அந்த போராட்டத்தில் பங்கேற்றனர். வெய்யிலின் உக்கிரம் தாங்காமல் சுல்தானி மட்டும் தன் காருக்கு வந்து ஓய்வெடுத்துக்கொண்டு நின்ற போது அதிபரின் ஆதரவு குழுவைச் சேர்ந்த ஒருவன் சுல்தானியை சுட்டுவிட்டான். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.
            சுல்தானியின் மரணம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் சுடப்பட்ட காட்சி அங்கிருந்த ஊடக செய்தியாளர் ஒருவரால் வீடியோ படமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த படம் இணையதளம் வழியாக தீயைப்போல் பரவியதால் இன்னும் கொதிப்பு அதிகமானது. அவரது கல்லறைக்கு தினமும் கூட்டம் வந்து போனபடி இருந்தது. மஹம்மதி, ஜாஃபர் பனாஹி போன்றவர்கள் அங்கு வருவது இன்னும் எதிர்ப்பை பலமாக்கிவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
            மஹமதியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. கடைசியாக அவரது Travelogue படம் பிரான்சில் 2010-இல் திரையிடப்பட்ட போது அவர் அங்கு அவர் சென்றிருந்தார். அதற்குப்பிறகு அவர் வெளிநாடு செல்வதை தடுக்கவே அவர் கைது செய்யப்பட்டு, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக நாடு முழுதும் உள்ள ஜனநாயகவாதிகள் கருதினார்கள்.
            கேன்ஸ் படவிழாவின் தலைவர் காச்டோ கவ்ராஸ்  மஹம்மதியை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ராபர்ட் நீரோ உள்ளிட்ட கலைஞர்களும் மஹம்மதியை விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர்.  பல்வேறு சமூக அமைப்புகள், மனித உரிமை போராளிகள் அவர் விடுதலைக்காக முயற்சி செய்தனர். அவர் தேச நலன், பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. என்றாலும் அவர் தனிப்பட்ட முறையில் செய்த குற்றம் என்ன என்பது பற்றி எவரும் வாய்திறக்கவே இல்லை. பல்வேறு எதிர்ப்புக்குரலுக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து ஜூலை 28 ஆம் தேதி ( 2011 ஆம் ஆண்டு) அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவரது பாஸ்போர்ட் அவரிடம் திரும்பித் தரப்படவில்லை. காச்டோ கவ்ரஸ்க்கு மஹம்மதி எழுதிய கடிதத்தில் தான் ஒரு ஆவணப்பட இயக்குனராகவும், பெண்ணாகவும் இருப்பதுதான் எங்கள் நாட்டில் மாபெரும் குற்றம்' என்று மிகுந்த மனவேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

            பெண்களுக்கெதிரான குற்றங்கள், பெண்களின் உரிமைகள், அவர்களின் சுய பாதுகாப்பு குறித்த அச்சம் ஆகியவற்றுக்காக இறங்கிப் போராடியமைக்காக  மஹம்மதிபோன்ற படைப்பாளிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி அவர்கள் தங்கள் இருப்பை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மஹம்மதியின் குரல் எல்லாத் தடைகளையும் தாண்டி தன்னை விடுதலை செய்யும்...

நன்றி: 'நிழல்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...