செவ்வாய், 13 ஜூலை, 2010

U-571

இயக்கம் : JONATHAN MOSTOW
ஒளிப்பதிவு : OLIVER WOOD

இசை : RICHARD MARVIN


இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற சமயம் ஹிட்லரின் U-BOAT எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்க, இங்கிலாந்து மற்றும் பிறநாடுகளின் கூட்டுப்படைகளைச் சார்ந்த சுமார் 1000 கப்பல்கள் அழிந்தன. இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான கப்பல் வழிப்போக்குவரத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சியாக செய்யப்பட்ட இந்த தாக்குதலால் அமெரிக்காவின் கூட்டுப்படைகள் விழிபிதுங்கி நின்றன. ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல்களில் தொழில்நுட்ப தரமும் மிக நவீனமாக இருந்தது அதற்கு மிக முக்கியமான காரணமாகும். அதோடு ஜெர்மனியின் படைகளுக்கு இடையே பரிமாறிக்கொள்ளும் சங்கேத குறியீடுகளை அமெரிக்க உளவுப்படை யூகிக்க முடியவில்லை. எனவே அவர்களுக்கு இடையே நடக்கும் ரேடியோ அலைச்செய்திகளை உருவாக்கும் ‘எனிக்மா’ (ENIGMA) எனும் கருவியை கைப்பற்றினால் மட்டுமே அந்த சங்கேத குறியீடுகளை இனம்காண முடியும் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது.

ஜெர்மனியின் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று அமெரிக்க கப்பல்களை தகர்த்துவிட்டு திரும்ப யத்தனிக்கையில் அந்த கப்பலின் இரண்டு மிக முக்கியமான டீசல் என்ஜின்கள் பழுதுபட்டுவிட, பேட்டரிகளும் செயல் இழந்துவிட்டன. எனவே அந்த நீர்மூழ்கிகப்பலை சீர்செய்ய ஜெர்மனியின் தலைமையகத்துக்கு (BERLIN) செய்தி அனுப்பிவைத்துவிட்டு கப்பல் நடுக்கடலில் மிதந்தபடி இருந்தது என்கின்ற செய்தி அமெரிக்க உளவுப்படைக்கு கிடைத்துவிடுகிறது. அது போன்றதொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அமெரிக்க கப்பற்படை ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பலைப்போன்றே ஒரு கப்பலை தயார் செய்து அதில் அமெரிக்க வீரர்களை ஜெர்மனியின் வீரர்கள் போல் உடையணியச்செய்து அந்த கப்பலை தகர்க்க திட்டமிடுகிறது. இதன் மூலம் எனிக்மா இயந்திரத்தை கைப்பற்றி விட்டால் செய்திகளை இடைமறித்து கேட்பதும் அதன்படி யுத்த யுக்திகளை வகுப்பதும் எளிதாகிவிடும் என்பது அமெரிக்க இராணுவத்தின் கணக்கு. ஜெர்மனியிலிருந்து பழுது நீக்க வரும் கப்பல் அந்த இடத்தை அடைவதற்குள் அமெரிக்க கப்பல் அங்கு சென்றுவிடவேண்டும் என்பதால் அமெரிக்க வீரர்கள் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் புறப்படுகின்றனர்.

S-26 எனப்படும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் பல சாகசங்களைப் புரிந்த எக்ஸிகியூட்டிவ் ஆபீஸர் ஆன்ட்ரு (ANDREW TYLER) தனக்குத்தான் CAPTAIN பதவி வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். ஆனால் S-33 எனும் புதிய நீர்மூழ்கிக்கப்பலுக்கு பணியாற்ற வரும் பொழுதுதான் அவனுக்கு CAPTAIN பதவி தரப்படவில்லை என்ற தகவல் கிடைக்கிறது. அவனை வெகுவாக விரும்பும் சக வீரர்களை இந்த செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அவனோடு பணியாற்றும் CHIEFக்கும் இது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. ஆன்ட்ருவும் மற்றும் அவனது சகவீரர்களும் எனிக்மா இயந்திரத்தை கைப்பற்றும் மிக முக்கியமான அதிரடி வேலைக்கு ஆன்ட்ருவிற்கு பதவி உயர்வு தர மறுத்த டெல்காம் தலைமையில் செல்ல வேண்டிய விசித்திரமான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இருந்தாலும் தலைமையின் ஆணைக்கு கட்டுப்படவேண்டும் என்கின்ற விதியை மதித்து அனைவரும் அந்த பணிக்கு ஆயத்தமாகின்றனர்.

ஜெர்மனியின் நாசகார கப்பலை சில மணி நேரங்களில் அடையும் அமெரிக்க கப்பலில் ஜெர்மன் மொழி தெரிந்த இரண்டு பேரும் உடன் வருகின்றனர். சிறிய லைஃப் போட் (LIFE BOAT) மூலம் அந்த கப்பலை அடையும் சமயத்தில் ஜெர்மனியின் படைவீரர்களால் அடையாளம் காணப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்றாலும் வெற்றிகரமாக கப்பலை தங்கள் வசம் கைப்பற்றும் அவர்கள் எனிக்மா இயந்திரத்தையும் சங்கேத குறியீட்டு மத்தகத்தையும் எடுத்துவிடுகின்றனர். ஆனால் அவற்றை எடுத்து தாங்கள் வந்த கப்பலுக்கு மாற்ற முயற்சிக்கும்போது ஜெர்மனியின் கப்பல் வந்து அமெரிக்க கப்பலை தூள் தூளாக்கிவிடுகின்றன. வேறு வழியில்லாமல் ஜெர்மனியின் கப்பலிலேயே தொடர்ந்து முயற்ச்சித்து தப்பிக்க நினைக்கிறார்கள். எனவே ஜெர்மனியின் கப்பலில் ஏற்பட்ட பழுதினை நீக்கி அதனை கடல் மட்டத்துக்கு உள்ளே இறக்குகின்றனர். ஜெர்மனியின் கப்பற்படை நீரினுள் வெடிக்கும் குண்டுகளை தொடர்ந்து வீசியபடி இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க தங்கள் நோக்கத்தை நினைத்தபடி நிறைவேற்றி நாடு திரும்புவதோடு படம் முடிகிறது.

வர்த்தக நோக்கில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தாலும் படை வீரர்கள் என்பவர்கள் தலைமையின் ஆணையை அப்படியே ஏற்பதும், அதன் வழி நடக்க உயிரையே பணயம் வைப்பதும், காட்சியின் பிரமாண்டமும் பிரமிக்க வைக்கிறது. எதிர்பாராமல் இவர்களது தாக்குதலுக்கு தயாராகும் ஆன்ட்ரு வழியில் CAPTAIN இறந்து போவதால் கப்பலின் முழு பொறுப்பையும் ஏற்கிறான். அவன் மீது எழும் அவதூறு பேச்சுக்களை அமெரிக்க கப்பல்படையின் CHIEF கடுமையாக அடக்குவதுடன் அவனுக்கு பல்வேறு யோசனைகளையும் வஞ்சனையில்லாமல் சொல்கிறார்.
180 மீட்டர் ஆழம் வரை மட்டுமே நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலுக்கு கீழே செல்லமுடியும். ஆனால் நீரில் வெடிக்கும் குண்டுகளை ஜெர்மனியின் கப்பற்படை வீசும்போது கப்பலை 200மீக்கும் கீழே போகும்படி ஆணையிடுகிறான் ஆன்ட்டி. ஜெர்மனியின் தொழில் நுட்பம் நிச்சயம் அமெரிக்க தொழில் நுட்பத்தைவிட உயர்ந்ததாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் 200மீக்கு ஆழத்தில் கப்பலை இறக்குமாறு பணிக்கிறான். அச்சம் பீடித்தபடி அதனை செய்யும் வீரர்கள் ஜெர்மனியின் தாக்குதலிருந்து தப்பி விடுகின்றனர். எனிக்மா இயந்திரம் மற்றும் சங்கேத குறிப்புகளைக் கைப்பற்றி சிறிய படகில் வெற்றிகரமாக நாடு திரும்பும் அவர்கள் புள்ளியாக மறைகையில் படம் முடிகிறது.

தனி மனித வீர சாகசமாக இதனை மிகைப்படுத்தாமல் ஒரு யதார்த்தமான வரலாற்று நிகழ்வாக இயக்குநர் ஜோனாதன் மாஸ்டோ (JONATHAN MOSTOW) பதிவு செய்ததினால் இதனை முக்கியமான படமாக கருதுகிறேன். படத்தினை எடுப்பதற்கு முன் 1941 மே மாதம் 9ந்தேதி u-110 எனம் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து எனிக்மா இயந்திரத்தையும் குறியீட்டு குறிப்புகளையும் கைப்பற்றிய லெப்டினென் ஜெனரல் டேவிட் பால்மேவையும் அமெரிக்காவின் அப்போதைய உதவி அட்மிரல் பேடிக் ஹான்ஃபின்னையும் சந்தித்து அதற்கான தகவல்களை சேகரித்திருக்கிறார். தொல்பொருள் ஆய்வாளர்கள் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோரை சந்தித்து படத்தினை உண்மைத்தன்மையுடன் உருவாக்க முனைந்திருக்கிறார்.

படத்தின் கலை இயக்குநர்கள் லாடோ ஸ்கின்னர், கோட்ஸ் வெயிட்னர் ஆகியோர் இரண்டாம் யுத்த காலத்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரிங்கோப் டார்பிட்டே குண்டுவீசும் பீரங்கிகள் என்று நம் கண் முன்னே நிறுத்துகின்றனர். இணையற்ற ஆலிவர் வுட்டின் ஒளிப்பதிவு நம்மை கடலுக்குள் இட்டுச்சென்று இரண்டு மணி நேரம் நனைத்துவிடுகிறது. படம் முடிந்தும் கூட ஈரம் உலராமல் நாம் சட்டையை பிழிய முனைந்தால் ஆச்சர்யமில்லை என்கிற அளவுக்கு உன்னதமான படப்பிடிப்பு ரிச்சர்ட் மர்வினின் இசை அற்புதமான ஒத்திசைவு. உடைகளை வடிவமைத்த ஏரியல் ஃபெர்ரியும் பாராட்டுதலுக்குரியவர்.

ஒரு டைப்ரைட்டிங் மெஷினுக்காக அத்தனை உயிர் பலியாக வேண்டுமா? என்று படத்தில் ஒரு கதாபாத்திரம் சலித்துக்கொள்ளும். அதற்கு அந்த கப்பலின் இட்ன்ச் தலைமையிலிருந்து உன்னையும் என்னையும் விட எனிக்மா இயந்திரம்தான் மிக முக்கியம என உத்தரவிட்டிருக்கிறது. அப்படியானால் அதுதான் நம தேசத்துக்கு மிக முக்கியம் என்பதைத் தவிர வேறு எண்ணம் உனக்கு வரக்கூடாது. அதுதான் ஒரு இராணுவ வீரனின் கடமை என எச்சரிக்கிறார். படத்தின் ஒற்றை வரி கவிதையும் இதுதான்.

இராணுவத்துக்காக ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்கள் செலவிடப்படும் மனித சக்தி குறித்து மாறுபாடான எதிர் கருத்துகள் பரவலாக சிந்தனையாளர்கள் மத்தியில் இருப்பது நியாயமானதுதான் என்றாலும் யதார்த்ததில் ஆற்றி மூளும் பகை நெருப்புக்கு எதிராய் பாதுகாப்பாய் இருக்கும் ஒவ்வொரு தேசத்தின் இராணுவ வீரர்களின் தியாக வரலாறும் நீரின் அடியில் அமிழ்ந்துகிடக்கும் கண்ணுக்குத் தெரியாத தகவல்கள் போல் ஈரமிக்கது. இரவுக்காவல்காரர்களின் உறக்கமற்ற இரவுகளைக்கூட அலட்சியமாய் புறக்கணிக்கும் நமக்கு எலிமையில் விழித்திருக்கும் இராணுவ வீரர்களின் அச்சமிக்க பொழுதுகள் பற்றி எபபொழுது கவலைப்பட்டிருக்கிறோம்? நட்சத்திரங்களின் அழகை ரசிக்கும் கண்களுக்கு ஒரு போதும் இமைகள் தெரிவதில்லை என்பது உண்மைதானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...