செவ்வாய், 30 ஜூன், 2015

அறை

                                                           

                                                                              

                அந்த அறையின் சுவர் வண்ணம் மிக நேர்த்தியாக பூசப்பட்டிருந்தது. யாரோ ஒரு நுணுக்கமான வேலைக்காரன் பார்த்துப் பார்த்து பூசியிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு எந்திரத்தின் வேலையாகவும் இருக்கக் கூடும். இறுக மூடப்பட்டிருந்த ஜன்னல் கண்ணாடியின் வழியே வெளியே தெரிந்த மலர்கள் சுதந்திரமாக ஆடிக்கொண்டிருந்தன. பெயர் தெரியாத பூச்சி ஒன்று மலரக் காத்திருக்கும் மொட்டு ஒன்றை சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.குளிர் சாதனக்கருவி இன்னும் அறையைக் குளுமையேற்றிக் கொண்டிருந்தது. அறைக் கதவுகள் அத்துனையும் சாத்தப்பட்டு காற்று தவித்துக்கொண்டிருந்தது.
                அவளது பூர்வீக அறை இப்படியானது அல்ல. காரை பெயர்ந்தும், ஆங்காங்கே வீறல் விட்டும் இருக்கும். இடையே புகுந்து கரையான் ஏதோ ஒரு கவிதையை கோடு போல எழுதிவிட்டுப் போயிருக்கும். அதன் புரியாத மொழியில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு பொருள் புரியும். ஒழுங்கற்றவற்றில் தெரியும் உயிர்ப்பு சில சமயம் ஒழுங்கானவற்றில் இருப்பதில்லை.
                அவளது இளம்பிராயத்து அறையில் காற்று ஏதேனுமொரு பூவின் வாசத்தை கர்ம சிரத்தையாக உள்ளே அழைத்து வந்து முகத்தில் மோதியபடி இருக்கும். ஜானு இதற்காகவே முகம் கழுவிய பின் துடைக்கவே மாட்டாள். பனி பூத்த ரோஜாவென அவள் முகம் மலர்ந்திருக்கும்.
                பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது திடீரென ஜன்னல் வழி விழும் கிரிக்கெட் பந்தை பணயமாக வைத்துக் கொண்டு, தெருச் சிறுவர்களின் மழலையை மிரட்டிப் பெறுவாள். வீட்டருகே ஓடும் சிற்றோடையில் வெயில் நேரத்தில் ஏதேனுமொரு தவிட்டுக் குருவி, சூடு தணித்துக் கொண்டிருக்கும்பல்லியின் வேட்டையில் ஏதேனுமொரு பூச்சி தனது ஆயுளை இழந்து கொண்டே இருக்கும்
                இங்கே... செய்வதற்கு வேலையொன்றும் இப்பொழுது கையிருப்பில் இல்லை. எல்லாவற்றுக்கும் ஏதேனுமொரு இயந்திரம் தயாராக இருந்தது. வகைவகையாய் சமையல் செய்ய மெனு தயாரித்தாலும், அனைத்தையும் அரைமணி நேரத்தில் முடித்து விட முடிகிறது. போதாததற்கு, இந்த வேலைக்கு ஒரு வேலைக்காரியை வேறு சொல்லியிருந்தான் ராம்குமார். ஆனால், ஜானு தான் வேண்டாமென மறுத்திருந்தாள். இந்த ஊர் வேலைக்காரிகளுக்கு வம்பு பேசும் வழக்கமில்லை என்பதால் அதிகம் பேசுவதில்லை. ஒரு உயிருள்ள இயந்திரம் உள்ளே நுழைந்து வெளியேறுவது போலத்தான் இங்கு வேலைக்காரிகளின் பங்கு இருக்கிறது. இருக்கும் ஒன்றிரண்டு வேலையையும் மற்றவரிடம் கொடுத்து விட்டால், பைத்தியம் பிடித்துவிடுமென வேலைக்காரியை நிறுத்தச் சொல்லி விட்டாள் ஜானு.
                கீரை வியாபாரியோ, மீன் வியாபாரியோ வராத தெரு என்ன தெரு என்று சலிப்பேற்பட்டது. அடுத்த வீடு கூட கூப்பிடு தூரத்தில் இல்லை. எந்த உதவியானாலும், அழைப்பதற்கென்று சில சேவை நிறுவனங்கள் இருக்கின்றன. சொன்ன வேலையை முடித்து விட்டு கொள்ளை விலையை பில்லாகத் தருவார்கள்.
                சிறு வயதில் ஜானுவோடு ஒத்த சிறுமிகள் விளையாட வந்தால், அம்மா லக்ஷ்மி அவர்களுக்குள் வைக்கும் போட்டி, ஜானுவுக்கு அலுக்கவே அலுக்காத விளையாட்டு.
                எல்லாச் சிறுமிகளும் எதாவது ஒரு அறைக்குள் ஐந்து நிமிடம் நின்று நிதானித்து பார்க்க அனுமதிக்கப் படுவார்கள். பின்னர் அவர்களை வெளியே அனுப்பி அறைக்கதவு சாத்தப்படும்.
                ஆளுக்கொரு தாளில் அறையிலுள்ள பொருட்களை நினைவிலிருந்து மீட்டு, பட்டியலிட வேண்டும். யார் அதிக எண்ணிக்கை எழுதுகிறார்களோ அவர்களுக்குத் தேன் மிட்டாய் பரிசு நிச்சயம்.
                பெரும்பாலும், ஜானுதான் பரிசைத் தட்டிச் செல்வாள். ஞாபக சக்தியை பெருக்கும் இந்த விளையாட்டில் ஜானுதான் ரொம்ப கெட்டிக்காரி. அறையைப் படிப்பதில்தான் எத்தனை சுகம். கட்டிலிடம், சுவர்ப் பல்லியிடம், நிலைக் கண்ணாடியிடம், மூலையில் கசங்கிக் கிடக்கும் காகிதங்களிடம்,அடிக்கப்படாத ஒட்டடையிடம்....  என எல்லா பொருள்களிலும் தான் எத்தனைக் கதைகள் இருக்கும்! நினைவுகளற்ற மனதால் கூர்ந்து கேட்டபடியிருப்பாள் ஜானு.
                செல் ஒலிக்கிறது.
                “ஜானு…..”   ராம்குமார்தான்.
                “ம்
                “எப்படியிருக்கே... ஏதாவது  ப்ராப்ளம்?”
                “ம்ஹும்
                “சாப்பாடு செய்ய முடியலன்னா சிரமப் படாதே. உனக்கு குடுத்த டைரியில, ஹோட்டல் நம்பர் இருக்கு. போன் பண்ணினா வித் இன் ஆஃப் அன் அவர்ல ஸ்டஃப் வந்துடும்.”
                “ம்... செஞ்சிட்டேன்.”
                “ஃபைன், நான் வர மணி எட்டாயிடும்.”
                “ம்...”
                “நம்ம ஊர் ரேஷன்ல கூட 200 கிராம் சேர்த்துப் போட்டுடுவான் போலிருக்கு. உன்கிட்ட வார்த்தையைப் பிடுங்கறது அவ்வளவு கஷ்டமா இருக்கு.”
                “--------------”
                “ம்... சரி, ஓகே. ஈவ்னிங் என்ன வேணும்?”
                “ஒண்ணும் வேணாம். எல்லாம் இருக்கு.”
                “ஓகேவைத்துவிடுகிறான்.
                வெள்ளைச் சுவரைப் பார்த்தால் நந்துவின் ஞாபகம் வந்துவிடும். நந்துவுக்கு வெள்ளைச் சுவரில் கிறுக்குவது கொள்ளைப் பிரியம். அவன் வரைந்த உருவங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல ஒரே தினுசாகத் தோன்றும். பாட்டிக்கு அப்படி சுவரில் கிறுக்கி வைப்பது பிடிக்காது. இப்படியான புரியாத மொழி ஏதாவது துர்தேவதைக்கு அழைப்பாக மாறிவிடுமென்பாள் அடிக்கடி.
                கடிகாரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட இயந்திரக் குரல், மணி 10.00 என்றது. இன்னும் 10 மணி நேரத்தை ஓட்டியாக வேண்டும். கற்பகத்தைப் போல் கவிதை எழுதவோ, வனஜாவைப் போல் படம் வரையவோ ஜானுவுக்குத் தெரியாது. அறையின் மேல் பகுதியில் இருளில் ஜொலிக்கும் பொய் நட்சத்திரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிறிது நேரம் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு அண்ணாந்து வேடிக்கை பார்த்தாள். மெல்லிய மெத்தை அவளை குழந்தையைப்போல் உள்வாங்கிகொண்டது. அக்கடாவென்று சில்லென்ற தரையில் உருளவேண்டும் போல் இருந்தது. ஆனால் கிச்சன் பாத்ரூம் தவிர எல்லா அரைகளிலும் கார்பெட் விரிக்கப்பட்டிருந்ததால் மருந்துக்கும் கண்ணுக்கு தரை தெரிவதில்லை. நவீனப் படுத்தப் பட்ட சிறைபோலிருந்தது அந்த அறை. மீண்டும் கிச்சனுக்குள் வந்தாள். புகை, பிசுக்கு, ஒட்டடை எதுவுமற்று சடலமாயிருந்தது சமையலறை. அடுப்படிக்கு புகையும், உருளும் பாத்திரங்களும்தானே உயிர்..?.
                ஃபிரிஜைத் திறந்து அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப் பட்டிருந்த ஏதோ ஒன்றை எடுத்து வாயில் போட்டாள். புரிபடாத சுவை. நாவை வருடி உள்ளிறங்கிற்று. மறுபடி செல் ஒலித்தது. அம்மா....
                “அம்மா
                “எப்படிடா  இருக்கே?”
                “இருக்கேம்மா. நந்து, கற்பகம், வனஜா எல்லாரும் எப்படியிருக்காங்க?”
                “எல்லாரும்  க்யூவில நிக்கறாங்க. உன் கிட்ட  பேசனுமாம்.”
                “அக்கா,  நான் கற்பகம். அக்கம் பக்கத்துல பழக ஆளிருக்காங்களா?”
                “ம்...  அரை கிலோமீட்டர்  தாண்டி.”
                “அப்பறம்...சமைக்கிறதுக்கு சிரமமாயிருக்கா? நம்மூரு பொருள்களெல்லாம் கிடைக்குதா?”
                “எல்லாம்  கிடைக்குது. காசு கொடுத்தா போதும். டாண்ணு வந்திடும்.”
                நந்து போனைப் பிடுங்கிப் பேசுவது தெரிந்தது.
                “அக்கா  அங்க பவர் கட் இருக்கா?”
                “ம்ஹும். ”
                “தப்பிச்ச. நாங்களெல்லாம் இங்க இருட்ல நடக்கப் பழகிட்டிருக்கோம். ஐஸ் பாய் எல்லாம் தெனம் வெளையாட முடியுது. எல்லோரும் ஆந்தை மாதிரி ஆயிட்டோம். பளிச்சுன்னு கண்ணு தெரியுது எங்களுக்கு. எங்க ஒளிஞ்சாலும் கண்டுபிடிச்சுடுவோம்.”
                அடக்கமாட்டாமல் சிரித்தே விட்டாள் ஜானு.
            “ஜானு, வனஜா பேசறேண்டி. வீட்டுக்காரர் நல்லபடியா வெச்சிருக்காரா?”
                “ம்.”
         “உனக்கென்ன, ராசாத்தியாட்டம் பறந்துட்ட... நாங்க தான் இங்க உள்ளூர்ல அல்லாடிகிட்டிருக்கோம். உனக்கு அங்க வேலை கிடைக்குமா?”
  “நான் படிச்ச எம்.. ஹிஸ்டரிக்கு இங்க கிடைக்காது. அவரும் தேவையில்லேன்னுட்டார்.”
                “அப்பறமென்ன... கொடுத்துவச்சவ நீ.  அமெரிக்கான்னா சும்மாவா?
           “பொம்பளைங்களுக்கு அமெரிக்கா ஆஸ்திரேலியா வித்தியாசமெல்லாம் இல்லக்கா. எல்லாம் ஒண்ணுதான். பெட் ரூம், பாத் ரூம், கிச்சன்னு ரூம்தான் மாறும். கூண்டுக் கிளிக்கு தேசமெல்லாம் தெரியாதுக்கா. எங்க மாத்தி வச்சாலும் அதுக்கு வாழ்க்கை கம்பிக்கு பின்னாடிதான். நமக்கு ஏதாச்சும் ஒரு அறை. பயப்படாத.  ஒரு குறையும் இல்ல. பெரிய தங்கச்சி அமெரிக்காவுல இருக்கா, சின்ன தங்கச்சி சிங்கப்பூர்ல இருக்கா அப்படின்னு சொல்லிக்கறதெல்லாம் சுத்த ஹம்பக். நீ உசிலம்பட்டி அறை. நான் இங்க பாஸ்டன் அறை. பீத்திக்க ஒண்ணுமில்ல....”
                மறுபக்கம் மெளனம் ஒரு மொழியாக உலவியது. ஒருவேளை வனஜா தானிருக்கும் அறையை சுற்றிப் பார்த்து உறுதி செய்வாளாயிருக்கும்....

                                                                                           நன்றி: கல்கி 05-07-2015 

வியாழன், 23 ஏப்ரல், 2015

கள்வனுக்காகக் காத்திருக்கிறேன்



கள்வனுக்காகக்  காத்திருக்கிறேன்
பூட்டுகளுக்கான கொத்துச் சாவியைத்
தேடிக்கொண்டிருக்க வேண்டாம்
கதவுகளைத் திறந்தே வைத்திருக்கிறேன்
அமாவாசை இரவுக்காக
காத்திருக்கவும் வேண்டாம்
சுட்டெரிக்கும் உச்சி வெயில் கூட
சாதகமானதுதான்..
ஆயுதங்களைத்  தீட்டிக்கொண்டிருக்கும்
அவசியமும் இல்லை
நிராயுதபாணியாகவே வருவது உத்தமம்..
சுவரேறிக் குதிக்கும்
வித்தை எதுவும் தேவைப்படாது
கண்ணி வெடி இருக்குமோ
என்ற அச்சமும் தேவையில்லை
காவல்துறையிடம் புகார் தரும்
உத்தேசம் எதுவுமில்லையென
உத்தரவாதம் தருகிறேன்
வீட்டிற்கு வருவோர் போவோரிடம்
ஜாடைமாடையாகக்  குறிப்புகள் தருகிறேன்
எல்லா அறைகளையும்
துருவித்துருவிப்  பார்ப்பவர்கள் கூட
பொக்கிஷங்கள் நிரம்பியிருக்கும் அந்தஅறையின் 
நிலைப்படியிலேயே நின்றுவிடுகிறார்கள்
பேசுவதற்கு ஏதுமற்றவர்களும்
என் பொக்கிஷங்களைப் பற்றி
பேச்செடுத்தால் மௌனிக்கிறார்கள்
எடுத்துப்போகிறவர்களுக்கு ஏதுவாக
என் புத்தக அறையை திறந்து வைத்திருக்கிறேன்
விலைமதிப்பற்ற வரிகளைத் திருடிச்செல்லும்

அந்தகள்வனுக்காக இன்னமும் காத்திருக்கிறேன்..

(உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்)

திங்கள், 20 ஏப்ரல், 2015

ருசி



ஆற்று மணலில் வீடுகட்டி
போட்டிபோட்டு கலைக்கும்போது
ஒட்டியிருந்த  மண் ருசியை
வயது முதிர்ந்ததும்
கல்வியும், பதவியும் தடுக்கின்றன

நீர்விட்டுப் பிசைந்து, பிடித்த ரூபத்தில்
உருட்டி செதுக்கி தேற்றிய உருவத்தை
தாழ்வாரமெங்கும் பதித்ததுண்டு

விரல்களில் மிச்சமிருந்த மண்துகள்கள்
எந்த உப உணவுமின்றி உள்ளே சென்றுவிடும்..

வளர்ந்தபின் மண்ணோடு இருந்த
தொடர்புகள் யாவும் அறுந்து போயின
ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்ட
குடும்பத்தை புறக்கணிப்பது போல
கால்களில் மிதிபடுவதோடு சரி..

விவசாயம் லாபகரமானது இல்லை
என்று போதிக்கப்பட்டதால்
தோட்டம் சீர் செய்யக்கூட
தொடுவதில்லை உபகரணங்களை..

பளிங்குத்தரைகளை
பெயர்க்க முயற்சிப்பதில்லை பெருச்சாளிகள்...

மழைவந்தால் , இறுக்க மூடிக்கொண்டு
தொலைக்காட்சிகளோடு  சங்கமித்துவிடுகிறோம்
மண்வாசனை மடிந்துபோய்விடுகிறது
குளிர்சாதன அறைக்குள் வராமலேயே....

எத்தனைக் கழுவினாலும்                  
சாமர்த்தியமாக தப்பிய
ஒரு நாவற்பழம்
நாவினில் சேர்த்துவிடுகிறது
மண்ணின் ருசியையும்
நழுவிப்போன பால்யத்தையும்...

நன்றி: 'கல்கி' 19.04.2015.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

வாங்க, படிக்கலாம்!

     

உழவர்களுக்கு அறுவடை நாள் எவ்வளவு முக்கியமும் கொண்டாட்டமுமாக இருக்கிறதோ அதைப் போன்றதே வாசிப்பதை நேசிப்பவர்களுக்கு புத்தகச் சந்தையில் தத்தம் அறிவின் விசாலத்துக்கேற்ற நூல்களை  தேடிக் கண்டடைந்து வாரிக் கொண்டு வருவது. அறிவை அழகூட்டும் புதுப் புதுப் புத்தகங்களே எங்கள் பண்டிகைப் புத்தாடைகளுக்கான சரியான மாற்று ஏற்பாடாக உள்ளது . சென்னைப் புத்தகச் சந்தையில் நேற்றைய என் அறுவடை உங்கள் பார்வைக்கும்.

1. க.நா.சு. புதுக்கவிதைகள்
                         - ஞானச்சேரி வெளியீடு

2. மார்க்கோபோலோ பயணக் குறிப்புகள்
                       - பொன். சின்னத்தம்பி  - 'அகல்'

3. எண்ணும் மனிதன் -மல்பா தஹான் -
                        தமிழில்: கயல்விழி - 'அகல்'

4. ஒரு தோழியின் கதை -
                   இரா. நடராசன்  - பாரதி புத்தகாலயம்

5. யுரேகா கோர்ட் -
                     இரா. நடராசன்  - விகடன் பிரசுரம்

6. ஹிக்ஸ் போஸான்  வரை இயற்பியலின் கதை
                  - இரா. நடராசன்   - பாரதி  புத்தகாலயம்  
                                                                                   
7.    டார்வின் ஸ்கூல்  - இரா.நடராசன்
                          - பாரதி புத்தகாலயம்

8. ஆயிரம் ஆண்டு அதிசயம்
                      - அமுதன் -தினத்தந்தி

9. மாகடிகாரம் - விழியன்
                 - பாரதி புத்தகாலயம்

10. மனிதக் கதை - பிரபாகர் சான்ஸ்கிரி
                                  - பாரதி புத்தகாலயம்

11. உலக வரலாற்றுக் களஞ்சியம்
              - ஐ. சண்முகநாதன் - விகடன் பிரசுரம்

12. வேங்கைச் சவாரி - கன்னடம்: விவீகி ஷன்பேக்,
                             தமிழில்: ஜெயமோகன் - வம்சி
                                                                                     
13. ஜெயம் (மகாபாரதம் ஒரு மறுபார்வை)
          -ஆங்கிலம்: தேவ் தத் பட் நாயக்
          -தமிழில்: சாருகேசி - விகடன் பிரசுரம்

14. மகாபாரதம் - பிரபஞ்சன்
           -நற்றிணை பதிப்பகம்

15. அயல் மகரந்த சேர்க்கை
      (உலக எழுத்தாளர்களின் நேர்காணல்கள்)
      -தமிழில்; ஜி.குப்புசாமி - வம்சி

16. அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்
       -ஜி.எஸ். எஸ். -விகடன் பிரசுரம்

17. அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்
           -நற்றிணை பதிப்பகம்

18. 6174 - க. சுதாகர் - வம்சி

19. தேம்பி அழாதே பாப்பா - கூ கி வா தியாங்கோ
                தமிழில்: எஸ்.பொ . - 'நிழல்'

20. ஆன்மாக்களின் அடித்தட்டில்
       (பன்மொழிச் சிறுகதைகள்)
      தொகுப்பு: ப.திருநாவுக்கரசு - 'நிழல்'

21. சிலுவையில் தொங்கும் சாத்தான்கள்
                     -கூ கி வா தியாங்கோ
                    -தமிழாக்கம்: அமரந்தா-சிங்கராயர்
                    - தாமரைச் செல்வி பதிப்பகம்

22. நம் நலம் நம் கையில் - பாகம் - 1
          -Dr. தேவேந்திர வோரா - நவநீத் பதிப்பகம்

23. ஆயிரம் உணவு தானிய பதார்த்த மூலிகை குண விளக்கம்
          - முல்லை முத்தையா - NCBH
24. பறளியாற்று  மாந்தர் - மா. அரங்கநாதன் - முன்றில்  பதிப்பகம்




வெள்ளி, 2 ஜனவரி, 2015

'பெண்ணியம் பேசிய பேரறிவு

                
                                                            


                முட்டாள்களுக்கென்று ஒரு தினம் இருப்பதில் தவறில்லை. அறியாமைதான் முட்டாள்தனத்தின் அளவுகோல் என்றால், எல்லோருமே ஒரு விதத்தில் அறியாமையின் நிழலில்தான் அமர்ந்திருக்கிறோம். சதவிகிதமே வேறுபடுகின்றன. முட்டாள்தினத்தின் நோக்கம் அறியாமையிலிருந்து அறிதலுக்கு' என்பதாக இருக்குமாயின், முட்டாள்களுக்கென்று ஒரு தினம்' இருப்பதில் தவறில்லை.
                பிரச்சினை என்னவென்றால் அடுத்தவர்களை முட்டாளாக்கும் கொண்டாட்டம் மட்டுமே இருக்கின்றவரையில் முட்டாள்கள் தினத்தை அனுசரிப்பதில் பிரயோஜனம் எதுவுமில்லை. ஏனெனில் முட்டாளாக்குவது அன்றாட செயலாக பழகிவிட்ட உலகில் அனுதினமும் முட்டாள்கள் தினமே.
                அறியாமை ஒரு கடலைப்போல் அலை மோதிக்கொண்டிருக்கிறது. பற்றுவதற்கு ஒரு மரத்துண்டுகூட இல்லாத போதும், எதிர்நீச்சல் போட்டு போராடியவர்களால் இன்று நாம் சுதந்திரமாக மிதவைகளில் பயணிக்கின்றோம். கல்விதான் இருளை போக்கும் ஒளி, கல்விக்கூடங்கள்தான் ஒளியை காக்கும் அனல்வெளி என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கல்விச்சாலையின் நிழலில் கூட ஒதுங்காமல், அறிவுச்சுடராக ஒளிர்ந்த மேதைகளின் பட்டியலும் பெரிதுதான். அப்படியான மேதைகளில் ஒருவர் மேரி சோஃபியா ஜெர்மெயின்.
                பிரான்சில் 1776 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி சோஃபியா, பாங்க் ஆஃப் பிரான்சில் இயக்குனராக இருந்த  அம்புரோஸ் ஃபிரான்காயிஸ் மகளாக பிறந்தார். அவரது தாயின் பெயர் மேரி மெட்லின் ஜெர்மெயின். உப தொழிலாக பட்டு வியாபாரம் செய்து வந்த அம்புரோஸ்பாரிஸ் நகர நிர்வாக குழுவிலும்  இடம்பெற்றிருந்தார். இத்தனை செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவரது பெண்கள்  கல்வி கற்கும் சூழல் பிரான்சில்  இல்லை. பதினாறாம் லூயியின் தவறான நிர்வாகத்தினால், பிரான்சு முழுக்க கிளர்ச்சி தோன்றிய காலம் அது. பிரெஞ்சு புரட்சியின் துவக்க காலகட்டம். அன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை. ஆனாலும் சோஃபியா சுயமாக மொழியை கற்றுக்கொண்டார்.
                அம்புரோஸ் தனது இல்லத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றை அமைத்திருந்தார். சோஃபியா 13 வயதை நெருங்கும் தருணத்தில் (1789) பிரான்சில் பெண்கள் வெளியே நடமாடக்கூட முடியாத அளவுக்கு கலவரக்காடாக இருந்தது. சோஃபியா தனது பொழுதுகளை நூலகத்தில் கழிக்க நேரிட்டது. கணிதம் மற்றும் வரலாற்று நூல்கள் அவரை வாசிக்கத்தூண்டின. குறிப்பாக ழீன் எடினோ மாண்டுக்லே எழுதிய ஹிஸ்டரி ஆஃப் மேத்தமேடிக்ஸ் நூலை வாசித்தார். அதில்தான் ஆர்க்கிமிட்டிஸ்-இன் துயர மரணம் குறித்து அவர் அறிந்துகொண்டார். பொதுவாக ஆர்க்கமிட்டிஸ் கணித ஆய்வில் ஈடுபட்டால் சாப்பாடு, தூக்கம், தண்ணீர் என அனைத்தையும் மறந்துவிடுவார். அவர் வாழ்ந்த சிராக்கஸ் நகரை ரோமானிய படைகள் ஆக்ரமித்த சமயம்ஆர்க்கமிட்டீஸ் மும்முரமாக மணலில், வடிவ இயல் குறித்து சில புதிர்களை விடுவிக்க முனைந்து கொண்டிருக்கையில்  ஒரு ரோமானிய சிப்பாய் அவர் யாரென்று அறியாமல் அவரை கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் ஆர்க்கமிட்டீஸ் அந்த சிப்பாயை கவனிக்கவே இல்லை. கோபமுற்ற சிப்பாய் அந்த கணித சக்கரவர்த்தியை வெட்டி வீழ்த்திவிட்டான்.
                தன்னை கொல்லவந்தவனை கவனிக்க முடியாத அளவுக்கு கணிதம் அத்தனை சுவாரசியமானதா என்று வியப்படைந்த சோஃபியா, கணித நூல்களை வாசிக்கத்துவங்கினார். நுழைய, நுழைய ஆலிஸ்-இன் அதிசய உலகம் போல அவரை உள்ளிழுத்துக்கொண்டே போனது கணக்கு. ஜாக்குவஸ் ஆண்டனி ஜோசப் என்பவர் எழுதிய லே கால்குலஸ் டிஃபரன்ஷியல்' என்ற நூலை வாசித்ததிலிருந்து கால்குலஸ் மீது அபரிமிதமான நாட்டம் ஏற்பட்டது. அவரது தொடர்ந்த வாசிப்பு ஆர்வம் அவரது பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அவர் ஏதோ தேச விரோத செயலில் ஈடுபட்டிருந்தது போல பதறினார்கள். அவர் தொடர்ந்து படிக்க முட்டுக்கட்டை போட்டனர். ஆனால் சோஃபியா இரவு நேரத்தில் மெழுகுவர்த்திகளையும், புத்தகங்களையும், குறிப்பு ஏடுகளையும் தனது போர்வைகளோடு மறைத்து எடுத்துச்சென்று இரவு முழுக்க புத்தகங்களை வாசிப்பதிலும், குறிப்புகள் எடுப்பதிலும், கணிதப்புதிர்களை பயிற்சி செய்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டபடியே இருந்தார். சில நாட்களில் விடிந்தபிறகும் தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பவந்த பெற்றோர்கள் அவரது விரல்களில் படர்ந்திருந்த பேனா மையை பார்த்துவிட்டு இனி அவரது படிக்கும் ஆர்வத்தை தடை செய்ய முடியாது என புரிந்துகொண்டு அவரை அவரது வழியிலேயே விட்டுவிட்டனர்.
                பாரிசில் 1794-இல் இகோல் பாலிடெக்னிக் என்ற தொழில் நுட்பக்கல்லூரி கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொண்டவர்கள் படிப்பதற்காக துவங்கப்பட்டது. 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே அதில் சேரமுடியும். சோஃபியாவுக்கும் அந்த ஆண்டுதான் 18 வயது. எனவே அவர் அந்த கல்லூரியில் சேர மனு செய்திருந்தார். ஆனால் அவர் பெண் என்கிற காரணத்தினால் கல்லூரியில் சேர்க்க மறுத்துவிட்டது நிர்வாகம். வீட்டிலிருந்தபடியே பாடத்திட்டங்களை பெற்று கற்கும் முறையையும் அந்த கல்லூரி அறிமுகம் செய்திருந்தது. ஆனால் அதிலும் பெண்களுக்கு அனுமதியில்லை. சோர்ந்து போயிருந்த சோஃபியாவுக்கு ஒரு உபாயம் கிடைத்தது. வீட்டிலிருந்து கற்கும் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்த ஆண்டோனி அகஸ்ட் ப்ளான்க் என்கிற மாணவன் ஏதோ சில காரணங்களால் பாரிசைவிட்டு வெளியே செல்ல நேரிட்டது. அவன் கல்லூரிக்கு தகவல் தெரிவிக்காமல் பாதியில் படிப்பை விட்டுவிட்டான். அது பற்றி அறிந்த சோஃபியா அவனது பெயரில் பாடத்திட்டங்களை பெற்று கற்கத் தொடங்கினார். அவர் பாடத்திட்ட வினாக்களுக்கு பதில் அனுப்பிய தாள்களைப் பார்த்து வியந்துபோன கல்லூரி ஆசிரியர் லாகரேங் அவரை நேரில் வரச்சொன்னார்.
                சோஃபியா வேறு வழியில்லாமல் தான் ஒரு பெண் என்பதை அவருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். லாகரேங் முதலில் அவரை கண்டித்தாலும் பிறகு அவருக்கு கணிதம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தார்.
                ஒருமுறை ஜெர்மானிய கணித அறிஞர் காஸ் என்பவரது அரித்மாடிக் டிஸ்கஷன்ஸ்' என்ற நூலை வாசித்து அதில் உள்ள கணித விளக்கங்கள் குறித்து அவரோடு கடிதத் தொடர்புகொண்டு விவாதித்தார். அவரோடு தொடர்ந்து நட்பில் இருந்தார் சோஃபியா. அவரிடமும் ப்ளான்க் என்ற பெயரிலேயே தொடர்பில் இருந்தார்.  நெப்போலியனின் படை ஒருமுறை காஸ் வசித்த நகரை சுற்றி வளைத்த போது, ஆர்க்கிமிட்டீஸ்க்கு ஏற்பட்ட நிலை அவருக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சிய சோஃபியா தனது தந்தையின் நண்பரும் ராணுவ அதிகாரியுமான ஜெனரல் பெர்னெட்டியிடம் முறையிட்டு காஸ்' ஐ பத்திரமாக காப்பாற்றினார்.  நன்றி சொல்வதற்காக காஸ் முயன்றபோதுதான் சோஃபியா தன் ஒரு பெண் என்பதை வெளிப்படுத்தினார். காஸ் பின்னர் பாரிஸ்-இல் உள்ள காடிங்டன் பல்கலைக் கழகத்தில் வானியல் பேராசிரியராக சேர்ந்ததோடு, கணிதம் குறித்த ஆய்வுதாள்களை சமர்ப்பிக்கும்முன் சோஃபியாவை கலந்து ஆலோசித்து சில திருத்தங்களை  சேர்த்துக்கொண்டார். எல்லாமே கடிதங்கள் மூலம்தான். இருவரும் கடைசி வரை சந்திக்கவேயில்லை
                அட்ரின் மேரி லெகந்தர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் ஃபெர்மட் எண்ணியல் தேற்றத்தின் இறுதி சமன்பாட்டை (FLT)தீர்க்கவே முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். சோஃபியா அதை சவாலாக எடுத்துக்கொண்டு அதனை தீர்க்கும் வழியை கண்டுபிடித்தார். X3 + Y3 = Z3  என்கிற சமன்பாட்டுக்கான தீர்வுதான் கணித உலகம் சோஃபியாவை நோக்கித் திரும்பிப்பார்க்கவைத்தது.

                ஜெர்மனைச் சேர்ந்த எர்னஸ்ட் சால்ட்னி 1808 -இல் பிரான்ஸ் வந்தபோது கண்ணாடி தட்டு ஒன்றில் நுண்ணிய மணல்துகளைக் கொட்டி வயலின் கருவியை வாசிப்பது போல, சிறு குச்சி ஒன்றின் மூலம் வாசித்தார். அதிலிருந்து இனிய இசை ஒன்று தோன்றியது. இந்த நிகழ்வை ஒட்டி பிரான்ஸ் அரசன் நெப்போலியன் ஒரு போட்டி ஒன்றை அறிவித்தான். சால்ட்னி செய்துகாட்டிய  நிகழ்வை கணிதம் மூலம் கண்டடைய முடியுமா? அப்படி முயன்று வென்றவர்களுக்கு பரிசும் அறிவித்திருந்தான்.
                சோஃபியா அந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பி அதற்கான தாள்களை சமர்ப்பித்தார். ஆனால் அவருடைய கணிதத் தீர்வுகளுக்கான வழிமுறைகள் தவறானவ என நிராகரித்துவிட்டார்கள். இரண்டாவது முறையாக மீண்டும் புதிய தாள்களை அனுப்பினார். ஆனால் அதுவும் ஏற்கப்படவில்லை. மூன்றாவது முறையாக வேறொரு கோணத்தில் அதற்கான தீர்வுகளை சமர்ப்பித்தார். நடுவர்கள் இந்த முறை பரிசுக்குரியது என்று தேர்வு செய்தனர். ஆனால் சோஃபியா பெண் என்பதாலும், பள்ளிக்கல்வியை முறையாக கற்றவரில்லை என்பதாலும் இளக்காரமான கருத்துக்களையே வெளிப்படுத்தினர் என்பதால் சோஃபியா பரிசு வழங்கும் நிகழ்வுக்கு செல்லவே இல்லை. தன்னால் முடியும் என்பதை நிருபித்துவிட்டேன் பரிசுக்காக நான் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை என்று அவர் கூறிவிட்டார்.
                 பிற்காலத்தில், உலோகங்களின் நீட்சி குறித்த அவரது கணித நிரூபணங்கள் அவரைப்பற்றிய மதிப்பை உயர்த்தின. இதன் காரணமாக அவரை பிரான்சின் புகழ் பெற்ற இன்ஸ்டியூட் ஆஃப் அகாடமி அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் பெண் உறுப்பினர் சோஃபியாதான். இதைத்தவிர அவருக்கு எவ்வித கௌரவமும் அவர் உயிருடன் இருக்கும் வரை வழங்கப்படவில்லை. பொதுவாக புகழ்பெற்றவர்கள், அறிவுஜீவுகள் இறந்தால் பிரான்சில் அவரது மரண சான்றிதழில் அதனை கௌரவமாக குறிப்பிடுவார்கள். ஆனால் சோஃபியாவின் மரண சான்றிதழில் அவர் ஒரு தொழிலும் இல்லாத ஒற்றைப்பெண்மணி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
                  திருமணமே செய்துகொள்ளாமல் கணித ஆய்வுகளிலேயே தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை செலவிட்ட சோஃபியா இறுதிகாலத்தில்  புற்று நோயால் நலிவுற்றார். 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி அவர் மரணமுற்றார். அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப்பிறகு காஸ்'-ன் கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு காடிங்கன் பல்கலைக்கழகம் சோஃபியாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. எந்த கல்லூரி அவருக்கு கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க மறுத்ததோ அந்த கல்லூரியின் பெயர் பிற்காலத்தில் இகோல் சோஃபியா ஜெர்மெயின் பாலிடெக்னிக் என்று மாற்றமானது. ஒரு காலத்தில் சோஃபியா நுழைய  அனுமதிக்காத அந்த கல்லூரியின் நுழைவாயிலில் இன்று அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது இல்லம் சரித்திர சின்னமாக அறிவிக்கப்பட்டு, இன்று  தவிர்க்க முடியாத இடமாக ஆகிவிட்டது. அவரது பெயர் பாரிஸ்-இன் முக்கிய தெரு ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.
                பெண்களுக்கான உரிமைகளுக்காக பலரும் பல கோணங்களில் போராடியிருக்கிறார்கள். சோஃபியா போராடியது தனது பேரறிவினால். இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சுடராய் ஒளிர்ந்த சோஃபியாவின்   பிறந்த நாளான ஏப்ரல் 1 ஐ வேறெதோ காரணங்களுக்காக முட்டாள்கள் தினமாக அனுசரிப்பது அநீதி என்றே படுகிறது.
         வேடிக்கை என்னவென்றால் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது  முதன் முதலாக பிரான்சில்தான் 1500 களில் ஆரம்பித்ததாம்...
                                                  நன்றி : தமிழ் இந்து  நாளிதழ்  18-05-2014

                

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...