புதன், 10 ஜூலை, 2013

காகோரி சதிவழக்கும் கொலையுண்ட மறவர்களும்

      1925-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஷாஜஹான்பூர் செல்லும் புகைவண்டி காகோரி இரயில் நிலையத்தை அடையும் நேரம் அலம் நகர் என்ற பகுதியை கடக்கும் சமயம் திடீரென அவ்வண்டி ஒரு பயணியால் அவசர சங்கிலி பிடித்திழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. வண்டியின் கார்டு தனது பெட்டியிலிருந்து இறங்கி வந்து இழுக்கப் பட்ட பெட்டியை நோக்கி நகர்கிறார். அவர் மீது இரு இளைஞர்கள் வண்டியிலிருந்து குதித்து அமுக்குகிறார்கள். வலுவான உடலும் முரட்டுத் தோற்றமும் கொண்ட அஷஃபுல்லாகான் பாய்ந்து கார்டு இருந்த பெட்டிக்குள் நுழைகிறார். அங்கிருந்த இரும்புப் பெட்டியை வெளியே எடுத்து வந்து அதன் பூட்டை உடைக்க முயல்கிறார். அவரது தோழர்கள் புகைவண்டியின் இரு முனைகளிலும் நின்று கொண்டு பயணிகளை எச்சரிக்கிறார்கள், “அன்பார்ந்த இந்திய சகோதரர்களே, நாங்கள் உங்கள் தோழர்கள். நாங்கள் உங்களை எதுவும் செய்து விட மாட்டோம். இங்கு நடப்பவை பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான போராட்டம். தயவு செய்து இரயில் பெட்டிகளிலிருந்து வெளியே வந்து விடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்திருங்கள்.” என்கிறார்கள்.
                அந்த நேரம் அடுத்த இருப்புப் பாதையில் ஒரு இரயில் வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் அவர்கள் அந்தப் பெட்டியை உடைத்து அதிலிருந்த பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பணப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, அவசரமாகப் பூட்டை உடைக்க முயல்கிறார்கள்.
                பெட்டியை உடைக்க இரயிலில் வந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை மிரட்டுவதற்காக வானை நோக்கிச் சுடுகிறார்கள். H.R.A. எனப்படும் இந்துஸ்தான் ரெவில்யூஷனரி அசோஷியேஷன் என்ற அமைப்பின் உறுப்பினர்களான அந்த இளைஞர்கள். பயத்தின் காரணமாக வெளியே வந்த ஒருவர் மீது எதேச்சையாக குண்டு பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே மரணமடைகிறார். இறுதியாக பெட்டி உடைக்கப்பட்டு அதிலுள்ள பண மூட்டைகளை எடுத்துக் கொண்டு தோழர்களுடன் பறக்கிறார் அஷஃபுல்லா கான்.
                காக்கோரி இரயில் கொள்ளை சதி வழக்கு என்று சுதந்திரப்போராட்ட காலத்தில், பரபரப்பாக பேசப்பட காரணமாயிருந்த இந்த சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டவர் இராம்ப்ரசாத் பிஸ்மல்.
                காந்தியடிகள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரவலாக அதற்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன. 1922-ம் வருடம், செளரிசோரா எனுமிடத்தில் விவசாயிகள் மீது பலத்த தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டதால் பலர் காயமுற்றனர், ஊனமுற்றனர். இதற்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் புறப்பட்டு, செளரிசோரா காவல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். இதில் சில காவலர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் காந்தியின் மனதில் பெரும் கசப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமில்லை என்றாலும் பிஸ்மல், அஷஃபுல்லா கான் போன்றோரின் உணர்ச்சிகரமான உரைகள், செயல்பாடுகள் காரணமாகத் தான் மக்கள் அந்த கட்டுப்பாடற்ற நடவடிக்கையில் இறங்கியதாக காந்தி நினைத்தார்.
                எனவே, காந்தி தனது போராட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தார். 1922-ல் நடந்த கயா-காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக காந்திக்கு எதிரான குரல்கள் எழும்பின. பிஸ்மல் மற்றும், அவரது தோழர்கள் மாநாட்டை விட்டு வெளியேறினர்.
                இனி, அஹிம்சாவழிப் போராட்டத்தின் மூலம், பிரிட்டிஷ் அரசைப் பணிய வைக்க முடியாது. அநீதியான, அடக்குமுறைக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துவது அவசியம் என்று புறப்பட்ட இராம் ப்ரசாத் பிஸ்மல் அன்றைக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் இருந்தபடி இந்திய சுதந்திரத்துக்கான அடித்தளமான வேலைகளை செய்துக்கொண்டிருந்த லாலா ஹர்தயாளின் அறிவுரைப்படி இந்துஸ்தான் புரட்சிகரக் கழகம் (H.R.A.) வை துவக்கினார். பின்னாளில் HSRA என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்த அமைப்பில் தான் பகத்சிங் இயங்கினார்.
                HRA அமைப்பை முன்னெடுக்கும் போராட்ட நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்பட்டது. எனவே, அநியாயமாக இந்தியரிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வசூலித்த பணத்தையே எடுத்து, அவர்களுக்கெதிரான பணிகளை செய்வது என முடிவெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, சிட்டகாங்கில் உள்ள தபால் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த பணத்தைக் கவர்ந்தனர். ஒரு முறை பிஸ்மல் ஷாஜஹான்பூரிலிருந்து லக்னோ செல்லும் போது ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் அரசாங்கப் பணியாளர்கள் சிறு மூட்டைகளில் பணத்தை எடுத்து வந்து குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மேல் துவாரம் வழியே போட்டுச் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக அந்தப் பெட்டியையே களவாடி விட்டால் அது அமைப்பைப் பலப்படுத்த உதவும் என்று நினைத்த பிஸ்மில் அதற்காகத் தீட்டிய திட்டத்தின் செயல்வடிவமே காகோரி இரயில் சம்பவம்.
                பிரிட்டிஷ் அரசு இந்திய இளைஞர்களின் உத்வேகத்தை குறிப்பாக H.R.A. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பெரிதும் அஞ்சியது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், பிரிட்டீஷ் அரசு விரைவில் வலு இழந்து வெளியேற நேரிடும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ஸ்கார்ட்லாண்ட் யார்டிலிருந்து பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவை வரவழைத்து காகோரி இரயில் சம்பவம் குறித்து விசாரிக்க நியமித்தனர்.
                செப்டம்பர் 16, 1925-ல் பிஸ்மில் மற்றும் அவரது தோழர்கள் ரோஷன் சிங், சச்சீந்திர பக்ஷ், சந்திரசேகர ஆசாத், கேசாப் சக்ரவர்த்தி, பன்வாரிலால், முகுந்தி லால், மன்மத் நாத் குப்தா ஆகியோரையும் இன்னும் வழக்குக்கு சம்பந்தப்படாத சிலரையும் என மொத்தம் 42 பேரைக் கைது செய்தது. அஷஃபுல்லா கான் மட்டும் சமயோசிதமாக கரும்புக் கொல்லையில் பதுங்கி பின், காசிக்குத் தப்பிச் சென்று விட்டார். அங்கு பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் அவரைக் காப்பாற்றி வந்தனர். அங்கிருந்து பீகாருக்குச் சென்ற அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்தார். என்றாலும், சுதந்திர வேட்கை தணியாத அஷஃபுல்லா தோழர்களைக்காப்பாற்றவும், அமைப்பை மறுகட்டமைப்பு செய்யவும் தில்லி வந்து சேர்ந்தார். எப்படியாவது அமெரிக்காவிலுள்ள லாலா ஹர்தயாளை சந்தித்து விட்டால் அமைப்பை வலுப்படுத்தி விடலாம் என்பதற்காக சில நண்பர்களை சந்தித்தார். அதில் அவருடைய ஊரைச் சேர்ந்த ஒரு வகையில் அவருடைய உறவினரான ஒருவன் காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் போலீஸிடம் சிக்கிக் கொண்டார். வழக்கு தீவிரமடைந்து இராம் ப்ரசாத் பிஸ்மல், அஷஃபுல்லா கான், இராஜேந்திர லகரி, ரோஷன் சிங் ஆகிய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது. பிரிவி கவுன்சில் வரை தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. 1927-ம் வருடம் டிசம்பர் மாதம் அவர்கள் நால்வரும் வெவ்வேறு நாட்களில் தூக்கிலிடப்பட்டனர்.

இராம் ப்ரசாத் பிஸ்மல்:

                1897-ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர். தந்தை  முரளீதர், தாய் மூல்மதி. சிறு வயது முதல் இலக்கியம், கவிதை எழுதுதல் ஆகியவற்றில் ஈடுபாடு  கொண்ட பிஸ்மல், அமெரிக்காவிலிருந்த லாலா ஹர்தயாளின் ஆன்மீக மற்றும் அரசியல் உரைகளால் பெரிதும் கவரப்பட்டார். ஆரிய சமாஜ் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினராக இயங்கிய அவர் இராம், அக்லத், பிஸ்மல் என்ற புனைப்பெயர்களில் எழுதிய கவிதைகள் அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் பிரபலமாயிருந்தன. வங்காளி மற்றும் ஆங்கிலத்திலிருந்து பல படைப்புகளை இந்தியில்  மொழிபெயர்த்தார்.
                லாகூரில் பரமானந்த் என்கிற நண்பருடன் சேர்ந்து அரசுக்கு எதிரான தடைசெய்யப்பட்ட, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பொதுக்கருணை ஆணைப்படி விடுதலை செய்யப்பட்டார். சுவாமி சோமதேவ் மூலம் பண்டிட் ஜண்டாலால் தீட்சித்தின் அறிமுகம் கிடைத்தது. தீட்சித் சிவாஜி சமிதி என்ற பெயரில் ஒரு தீவிர அமைப்பை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடத்தி வந்தார். 1918-ல் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்ற தலைப்பில் அந்த அமைப்பின் துண்டுப்பிரசுரங்களைப் பதிப்பித்து தில்லி முதல் ஆக்ரா வரை மறைந்து கொண்டே பொதுமக்களிடம் கொடுத்து வந்தார். அதுபற்றி அறிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்த போது யமுனை நதியில் குதித்து தலைமறைவானார். அவர் இறந்து விட்டாரென நினைத்து பிரிட்டிஷ் போலிஸ் அங்கிருந்து வெளியேறியது. ஆனால், தண்ணீருக்குள்ளேயே நீந்தி, வேறிடத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
                தன் வாழ்நாள் முழுக்க சாகச செயல்களால் பிரிட்டிஷ் அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்த பிஸ்மில்லைப் பற்றி தனது அண்ணன் ரியா ராத் உல்லாகான் மூலமறிந்த அஷஃபுல்லா கான் வலியச் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆனால், பிஸ்மல் தனது நண்பரின் இளைய சகோதரனை ஆபத்துகள் நிறைந்த இந்தப் பணிகளில் ஈடுபடுத்த விரும்பவில்லை. எனவே, அஷஃபுல்லா கானை முடிந்தவரை தவிர்த்தபடியிருந்தார். இருந்தாலும், அஷஃபுல்லா தனது விடாமுயற்சியால் பிஸ்மல்லுடன் சுதந்திரப்போராட்ட வேள்வியில் இணைந்து கொண்டார்.

அஷஃபுல்லா கான்:

                1900 வருடம், அக்டோபர் 20-ல் உ.பி.யிலுள்ள ஷாஜஹான்பூரில் பிறந்த அஷஃபுல்லா கானின் தந்தை ஷஃபீஸ் உல்லா கான்.தாய் மஸூர் உன்னிசா. நான்கு மகன்களில் இளையவரான அஷஃபுல்லா அடிப்படையில் கவிஞர். வார்சி, மற்றும் ஹஸரத் என்கிற புனைப்பெயர்களில் கவிதைகளை எழுதிவந்தார். ஆரம்பகாலங்களில் பிஸ்மல்லிடம் கவிதைகளைக் காண்பித்து அதில் திருத்தங்கள் பெறுபவராக அவரிடம் நட்பு பாராட்டினார். போகப்போக பிஸ்மல்லின் நம்பிக்கைக்குரிய தோழனாக மாறினார். காகோரி இரயில் கொள்ளை வழக்கில் பிரிட்டிஷ் போலிசார் இவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்ற  ஒரு இஸ்லாமிய போலீஸ்காரரை அனுப்பி ‘பிஸ்மல் நம்பிக்கைக்குரிய நபரல்ல; அவரால் கிடைக்கும் சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது' என்றெல்லாம் சொல்ல வைத்து அஷஃபுல்லா கானை பணிய வைக்க முயற்சித்தனர். எந்த சூழலிலும் பிஸ்மல்லையும் தோழர்களையும் காட்டிக் கொடுக்க மறுத்த அஷஃபுல்லா அதன் காரணமாகவே தூக்கிலிடப்பட்ட பட்டியலில் நால்வரில் ஒருவரானார்.
 இராஜேந்திர லஹரி:

                1901-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வங்காளத்தின் பாப்னா மாவட்டத்திலுள்ள மோகன்பூர் கிராமத்தில் பிறந்தார். ( தற்சமயம் இது பங்களாதேஷில் உள்ளது). அவரது தந்தை சிதிஷ் மோகன் லஹரி ஊரிலேயே மிகுந்த செல்வந்தர். பனாரஸ் உட்பட பல்வேறு ஊர்களில் அவருக்கு விலை மதிப்புமிக்க சொத்துக்கள் இருந்தன. எம்.ஏ வரை பனாரஸ்-ல் பாடித்த ராஜேந்திர லஹரி சுகபோகமாக வாழ சல வசதிகளும் உடையவராக வளர்ந்தார். ஆனால் அவற்றையெல்லாம் உதறி எறிந்துவிட்டு இந்திய சுதந்திர போருக்காக போராடிய தீவிர அமைப்புகளில் இணைந்து இயங்கினார். தக்ஷினேஷ்வர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
                காகோரி ரயில் கொள்ளை சம்பவத்தில் அவரும் இருந்தார் என்றாலும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அளவு பெரும் தவறுகள் எதுவும் செய்யவில்லை. சாட்சியங்களையும், வாதங்களையும் அவருக்கு எதிராக திருப்பிவிட்டு தனது வெறியை தீர்த்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி கோண்டா மாவட்டச் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ரோஷன்சிங்:

                1892-ம் வருடம் ஜனவரி மாதம் 23-ந் தேதி ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நவதா எனும் கிராமத்தில் பிறந்த ரோஷன்சிங்-கின் தந்தை ஜாங்கி சிங் தாய் கௌசல்யா தேவி. துப்பாக்கி சுடுதலிலும், மல்யுத்தத்திலும் திறன் பெற்ற ரோஷன் சிங் ஆர்ய சமாஜம் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினர். இந்திய தேசிய காங்கிரசின் தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கிய ரோஷன் சிங் உ.பி அரசுக்கு எதிரான போராட்டங்களில் இயங்கிவந்தார். 1921 ஆம் வருடம் இதன் காரணமாக கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.
                சிறையிலிருந்து வெளிவந்ததும் ஷாஜகான்பூர் சென்று பிஸ்மல்லை சந்தித்து தன்னை H.R.A.  அமைப்பின் உறுப்பினாராக இணைத்துக் கொண்டார். அமைப்பின் நிதி திரட்டலுக்காக உள்ளூரில் கந்து வட்டி தொழில் செய்து கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பால்தியா பிரசாத் என்பவனைத் தாக்கினார். இதன் காரணமாக அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. திடீரென எந்த முகாந்திரமும் இல்லாமல் அவரது பெயர் காகோரி இரயில் கொள்ளை வழக்கில் சேர்க்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டது.
                அதிகார மையம் நினைத்தால் எவரையும் தூக்கு மேடையில் நிறுத்திவிட முடியும் என்பதற்கு ராஜேந்திர லஹரி ,ரோஷன்சிங், ராம் பிரசாத் பிஸ்மல், அஷஃபுல்லா கான் ஆகியோரின் மரணமே சாட்சி.
                இன்னொரு மறுவிசாரணை செய்யப்பட்டால் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று நிரூபிக்கப்படலாம். ஆனால் தூக்குக் கயிறு தின்ற உயிர்களை திரும்ப வரவழைத்து அவர்கள் இன்னொரு முறை இந்த் உலக வாழ்வை அனுபவிக்க வைக்க முடியுமா என்ன?
                மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் ஒரு கணம் வரலாற்றை புரட்டினால், எத்தனை உயிர்கள் நியாயமற்ற முறையில், காழ்ப்புணர்ச்சி மற்றும் துவேஷங்கள் காரணமாக, உணர்ச்சி வசப்பட்ட சூழலின் பொருட்டு பலியாகியிருக்கும் என்பதை உணரமுடியும்.
                ரோஷன் சிங் தனது இறுதி காலத்தில் அலகாபாத் சிறையிலிருந்தபடி தனது மாமாவுக்கு எழுதிய கடிதத்தில் “ கடவுளின் படைப்பில் அதி உன்னதமானது மனிதப்பிறவி. சக மனிதர்களின் சுதந்திரத்துக்காக தன்னையே தியாகம் செய்ய இயலுமெனில், அதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமிதம் அடைகிறேன். என் மரணத்துக்காக வருந்த வேண்டாம். நான் கடவுளின் மடியில் உறங்கப்போகிறேன்” என்று எழுதியிருந்தார்.
                கடவுளின் மடியில்தான் அழிக்கமுடியாமல் இப்படி எத்தனை இரத்தக்கறைகள் ..?...


                                                                                

திங்கள், 8 ஜூலை, 2013

'குமரி'யில் இருப்பவளே...

இன்றும் சூரியன் உதிக்கிறது
இன்றும் கிழக்கு வெளுக்கிறது
இன்றும் காற்று வீசுகிறது
இன்றும் நிலா வரும்
எல்லா நாட்களையும் போல்
இன்றும் கடந்து போகும்

ஆனாலும்,
இன்று எங்களுக்கு இனிய தினம்!
‘மதுமிதா' என்ற தங்க மகள்
எங்கள் வீட்டில் பிறந்த தினம்!!

மற்ற யாருக்கும் நீயும் ஒரு பெண்
எங்களுக்கோ ‘நீ' தான்
நாங்கள் வாழ்ந்த வாழ்வின் அடையாளம்!

எங்களின் ‘மகள்' என்று
இன்று ஊர்சொல்லும்
நாளை
‘ப்ருத்வி மதுமிதா'வின் பெற்றோர் என்று
இந்த உலகம் சொல்லட்டும்!

நாட்களைக் கழிக்க
பிறந்தவள் இல்லை நீ
ஒவ்வொரு நாளையும்
கணித்து சிறக்கச் செய்கிறவள் நீ...

இந்த வானம்
மேகத்தால் நிறைந்திருக்கிறது
இந்த பூமி
கனிமங்களால் நிறைந்திருக்கிறது
மரங்கள் யாவும்
விதைகளால் நிறைந்திருக்கின்றன
புத்தகங்கள்
ஞானத்தால் நிறைந்திருக்கின்றன
மனிதர்கள்
அன்பால் மட்டுமே நிறைந்திருக்கின்றார்கள்

அன்பு மகளே
எங்கள் உலகம்
உன்னால் நிறைந்திருக்கிறது!!

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”

சனி, 6 ஜூலை, 2013

வில்லோடும், அம்போடும் விளையாடிய அல்லூரி


     வனப்பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தும்போதும், அமுல் படுத்தும்போதும் இன்றைக்கு மனித உரிமை அமைப்புகள், பழங்குடி இன ஆதரவு இயக்கங்கள் அச்சட்டங்களை எதிர்த்து வலுவாக குரல் கொடுத்து வருகின்றன. கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு முன்னதாக வனப்பாதுகாப்புச் சட்டம் பிரிட்டிஷ் அரசால் முதன் முறையாக கொண்டுவரப்பட்டு, மிகக் கடுமையாக ஈவு இரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதற்காக வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி தன் உயிரையும் தந்தவர் அல்லூரி சீதாராம ராஜு. கோண்ட் இன பழங்குடி மக்களால் அன்போடு ‘வன ராஜா' அன்று அழைக்கப்பட்ட ராஜுவுக்கு அல்லூரி ரெம்பா ராமராஜு, ராமச் சந்திர ராஜு என்ற வேறு பெயர்களும் உண்டு. அல்லூரி ராமராஜு என்பதுதான் அவரது இயற்பெயர். சீதாம்மா என்ற பெண்ணை அவர் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண் இளம் வயதிலேயே ஏதோ ஒரு கொடிய நோய் காரணமாக இறந்துவிட்டதால் அவரது பெயரை தனது பெயரோடு இணைத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுவதும் உண்டு.


                இந்தியாவின் அதிகபட்சமான தட்பவெப்பச்சூழலை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள், மலைப்பகுதிகளில் தங்கள் ஓய்வு நாட்களைக் கழிக்க உல்லாச வீடுகளை கட்ட பரபரத்தனர். அவர்களது களியாட்டங்களுக்கு இடைஞ்சலாக பழங்குடி இன மக்களின் நடமாட்டம் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. 1882-ல் பிரிட்டிஷ் அரசு வனங்களை பாதுகாப்பதற்காக  ‘மதறாஸ் வனப் பாதுகாப்புச் சட்டம்' என்ற பெயரில் ஒரு வன்முறையான சட்டத்தை அமுல்படுத்தியது. அதன்படி காடுகளில் சுதந்திரமாக இயங்கியும், வேளாண்தொழிலில் ஈடுபட்டும் வந்த பழங்குடி இன மக்களின் நடமாட்டம் பல இடங்களில் தடை செய்யப்பட்டது.
                பொதுவாக சமதளமான நிலப்பகுதிகளில் குறிப்பிட்ட விவசாய நிலங்களில் பருவநிலையை  பொருத்து வெவ்வேறு வகையான பயிர்களை  விதைத்து அறுவடை செய்வது நம் மக்களின் இயல்பு. ஆனால் மலைப் பகுதிகளில் உள்ள பயிர் நிலங்களில் அன்றைய காலகட்டத்தில் ‘பொடு' எனப்படும் ‘இடமாற்ற விவசாயம்' என்ற முறையை பழங்குடி இன மக்கள் நடைமுறைப் படுத்தி வந்தனர். அதன்படி எவருக்கும் எந்த நிலமும் சொந்தமாய் இருக்காது. குழுவாக இருக்கும் பழங்குடியினர் ஒரு இடத்தின் சூழல், மண் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நாட்கள் அதற்கேற்ற பயிர்வகைகளை விளைவிப்பர். பின்னர் அந்த மண்ணின் வளத்தைப் பெருக்க அதனை அப்படியே விட்டுவிட்டு வேறு ஒரு இடத்துக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள நிலத்தில் பயிர் செய்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றில் 1920 வரைகூட இந்த நடைமுறை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாகத்தான் பழங்குடி இன மக்களிடம் அவர்களுக்குச் சொந்தமென சொல்லும்படியான சட்டரீதியான ஆவணங்கள் இருப்பதில்லை. காலச்சூழலலுக்கு ஏற்ப நகர்தலும், அதற்கு தக்க தொழில்களை ( பயிரிடுதல், வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல்) தற்காலிகமாகவும் நிர்ணயித்துக் கொள்வார்கள்.
                ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள பழங்குடி மக்கள் (குறிப்பாக கோண்ட் இனத்தவர்கள்) நிலங்களை தேர்வு செய்வதிலும், மண்வளத்தை ஆய்வு செய்வதிலும் அனுபவ ரீதியான திறமைசாலிகள் என்று கூறப்படுவதுண்டு. மதறாஸ் வனப்பாதுகாப்புச்சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம், அவர்களது வாழ்வாதாரப்பகுதிகள் கையகபடுத்தப்பட்டன. அவர்களது சுதந்திரமான நடமாட்டம் தடை செய்யப்பட்டது. காடுகளில் சுற்றிச் சுழன்றவர்களை, வீடுகளுக்குள் முடக்கிப்போட்டது பிரிட்டிஷ் அரசு.
                இந்த கொடுமைகளை எதிர்த்தும், வனப்பாதுகாப்புச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அந்த மக்களை ஒருங்கிணைத்து ஆயுத வழிப்போராட்டங்களை முன்னிறுத்தியவர் அல்லூரி சீதாராம ராஜு. ஆயுதம் என்றால் துப்பாக்கிகளோ, வெடிகுண்டுகளோ, பீரங்கிகளோ அல்ல.. அவர்களது பாரம்பரிய வில், அம்பு, ஈட்டி ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி வெள்ளையர்களை கதிகலங்கச் செய்தவர் அல்லூரி.
                பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஆந்திராவின் பலபகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் பல புரட்சிகள் வெடித்திருக்கின்றன. குறிப்பாக 1800-ல் ராயல சீமா போராட்டம், 1919-ல் செரலா மற்றும் பெரலா ஆகிய இடங்களில் நடைபெற்ற வரிகொடா இயக்கம், 1921-ல் அல்லூரி ராஜு தலைமையில் நடந்த ‘ரெம்பா புரட்சி', விஜயவாடா மற்றும் ஓங்கோல் மாவட்டங்களில் 1927-ல் நிகழ்ந்த ‘சைமனே திரும்பிப் போ' போராட்டம், 1930-ல் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இடதுசாரிகள் முன்னிறுத்திய ‘தெனாலி போராட்டம்' ஆகியவற்றை சொல்லலாம்.
                ரெம்பா கோதாவரம் என்ற பகுதியில் தீர்மானிக்கப்பட்டு, வெற்றிகரமாக அல்லூரி ராஜுவால் வடிவமைக்கப்பட்டு பிரிட்டிஷ் இராணுவத்தை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிரளவைத்தது ‘ரெம்பா புரட்சி'.
                விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பாண்டுரங்கி கிராமத்தில் 1897 ஆம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி ஆந்திராவின் சத்ரிய குலத்தில் பிறந்தவர் அல்லூரி. அவரது தந்தை ராஜமுந்திரியிலுள்ள சிறைச்சாலையின் அதிகாரப்பூர்வ அரசு புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர். தந்தையின் ஊரான மாகெல்லுவில் பங்காரய்யா பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியை முடித்தார். அல்லூரியின் இளம் வயதிலேயே அவரது தந்தை திடீரென மரணமடைந்தார். அல்லூரியி தாய்மாமன் ராமகிருஷ்ண ராஜு மேற்கு கோதாவரி மாவட்டத்தின் நரசப்பூரில் தாசில்தாராக பணிபுரிந்துவந்தார். அவர்தான் அல்லூரிக்கு ஆதரவளித்து நரசப்பூரில் படிக்க வைத்தார். அல்லூரியின் 15- வது வயதில் தாயின் ஊரான விசாகப்பட்டினத்துக்கு வந்து அங்குள்ள ஏவிஎன் கல்லூரியில் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில்தான் நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திரப்போர் அவருள்ளும் பற்றியது.
                ஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்ற அல்லூரி அத்துடன் படிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டு, போராட்ட இயக்கங்களின் கூட்டங்களில் கலந்துகொண்டுவிட்டு அவர்களின் தீர்மானங்களின்படி செயல்படத்துவங்கினார். அப்பொழுதுதான் ஆந்திராவின் புகழ்பெற்ற போராட்டக்காரர்களான மத்தூரி அன்னப்பூர்ணய்யா மற்றும் அச்சுத ராமய்யா ஆகியோரின் தொடர்புகள் கிடைத்தன.
                1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தின் விளைவாக கோண்ட் இன பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட அராஜகமான சித்திரவதைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை அடிக்கடி சந்தித்து வந்தார் அல்லூரி. அவர்களது பரிதாபகரமான நிலை பரவலாக இந்தியா முழுவதும் அறியப்படவில்லை என்று உணர்ந்தார். 1916-ல் கயாவில் நடந்த காங்கிரஸ் தேசிய மாகாண சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய தலைவர்களின் அறிமுகத்தின் மூலம் அந்த மக்களின் பிரச்சினைகளை பரவலாக கொண்டு செல்ல முடியும் என அவர் நம்பினார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த அளவு நிறைவேறவில்லை. வங்காளத்தில் ஆங்காங்கே நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களப்பற்றிக் கேள்விப்பட்ட அல்லூரி அதே போன்றதொரு இயக்கத்தை முன்னெடுத்து, தமது மக்களின் வலிகளை தாமே உணரச்செய்வோம் என முடிவெடுத்தார்.
                கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மலைவாழ் மக்களை பல்வேறு சாம, தான, பேத, தண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கிட்டதட்ட 500 பேர் கொண்ட அமைப்பை ஆரம்பித்தார்.
                பாஸ்டியன் என்ற ஆங்கிலேய அதிகாரி மலையின மக்களில் சிலரை விலங்குகளைப்போல வேலை வாங்கிவிட்டு, உரிய ஊதியத்தை கொடுக்க மறுத்ததோடு மிருகத்தனமாக அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினான். அவனால் பாதிக்கப்பட்ட கம்மல்லு தோரா மற்றும் அவரது சகோதரர் கந்தம் தோரா ஆகியோர் அல்லூரியோடு இணைந்து இயக்கத்துக்கு வலு சேர்த்தனர். அல்லூரி ராஜுவின் துணிச்சலான நடவடிக்கைகளால் கவரப்பட்டு அவரை குருவாக மதித்து இணைந்த சூரிய நாராயண ராஜு என்கிற அக்கி ராஜு என்பவர் அல்லூரியின் முக்கிய தளகர்த்தர் ஆனார்.
                1922 ஆம் வருடம் ஆகஸ்டு 22 ந் தேதி முதலில் சிந்தாபள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்கி அங்குள்ள ஆயுதங்களைக் கைப்பற்றினர். அடுத்த நாளே கிருஷ்ணதேவிப் பேட்டா காவல் நிலயத்தையும், 24-ந்தேதி ராஜவம்மங்கி காவல் நிலையம் ஆகியவற்றைத் தாக்கி பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். கைப்பற்றிய துப்பாக்கிகளை அல்லூரியும் அவரது தோழர்களும் அதிகம் பயன்படுத்தவில்லை. வெறும் வில், அம்பு, ஈட்டி கொண்டுதான் எல்லாவற்றையும் அவர்கள் சாதித்தனர். பிரிட்டிஷ் அரசை இச்செயல் நிலைகுலையச் செய்ததோடு, அவர்கள் இதனை அவமானகரமான தோல்வியாக கருதினர். அல்லூரியின் தலைக்கு 10,000 ரூபாய் அறிவித்தனர். அன்றைய தேதிக்கு இது பெரிய தொகைதான்.

                டிசம்பர் 1922-ல் அல்லூரியையும் அவரது குழுவினரையும் பிடிக்க அஸ்ஸாமிலிருந்து ரைபிள் பிரிவுப்படை தருவிக்கப்பட்டது. பெடாபள்ளி என்னும் இடத்தில் அல்லூரி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து சுற்றி வளைத்தனர். ஆனால் தோரா சகோதரர்கள் சமயோசிதமாக அவர்களை திசைதிருப்பி அல்லூரி மற்றும் குழுவினரை தப்பிக்க வைத்து அவர்களும் தப்பிவிட்டனர். மீண்டும் ஒரு அவமானகரமான தோல்வியை சந்தித்தது பிரிட்டிஷ் படை.
                பிரிட்டிஷ் அதிகாரி பாஸ்டியன் மற்றும் அவனோடு சில உயரதிகாரிகள் வரும் வழியில் இடைமறித்து அல்லூரி குழுவினர் தாக்கினர். அதில் பாஸ்டியன் படுகாயமடைந்தான். அவனோடு வந்த மற்றொரு அதிகாரி பலியானார். இந்த நிகழ்ச்சி பிரிட்டிஷாரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூடுதல் படைகளை வரவழைத்து தேடுதல் வேட்டையை நடத்தியது. ஆனாலும் அவர்கள் இருக்குமிடத்தை செப்டெம்பர் 1923 வரை நெருங்க முடியவில்லை. பழங்குடி மக்களின் இஷ்ட தெய்வமான காளி பூஜைக்கு அல்லூரி வருவதாக தகவல் கிடைத்து அங்கு போலீஸார் ரகசியமாக போனார்கள் ஆனால்  எப்படியோ செய்தி தெரிந்து அங்கு அல்லூரி வரவில்லை. உக்கிரத்தின் எல்லைக்கேப் போனார்கள் பிரிட்டிஷார்.
                1923- செப்டம்பர் 18 ஆம் தேதி தோரா சகோதரர்களும், பின்னர் ஒரு மாதம் கழித்து அக்கிராஜுவும் கைதானர்கள். ஆனால் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த அல்லூரியை அவ்வளவு எளிதாக பிடிக்க முடியவில்லை. நீண்ட தேடுதலுக்குப் பிறகு யாரோ ஒருவன் அவர் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுக்க 1924 ஆம் வருடம் மே மாதம் 7-ந்தேதி அவரைச் சுற்றி வளைத்து பிடித்த பிரிட்டிஷ் போலிஸார் அவரை மரத்தில் கட்டி வைத்து அங்கேயே சுட்டுக்கொன்றனர்.
                சேகுவேரா போல் வனங்களில் சுற்றித் திரிந்து அந்த மக்களுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து, அவரைப்போலவே சுட்டுக்கொல்லப்பட்டார் அல்லூரி. அவரை சுட்டுக்கொன்றதற்காக கணேஷ்வர ராவ் என்ற காவல்துறை அதிகாரிக்கு ‘ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது.
                அவரது மரணத்துக்குப்பின் எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம் ஒன்று ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர அரசின் மாநிலக் காப்பகத்தில் வைக்கப்ப்ட்டுள்ளது. அல்லூரியின் உருவச்சிலை விசாகப்பட்டினம் சீதம்மா ஜங்ஷனிலும், கடற்கரை சாலையிலுள்ள பார்க் ஹோட்டல் அருகே நிறுவப்பட்டுள்ளன. அவரது புகைப்படம் இடம் பெற்ற சிறப்பு தபால் தலை ஒன்றும் அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டிருக்கிறது. அல்லூரியி வாழ்க்கை வரலாறு தெலுங்குத் திரை உலகின் பிரபலமான நடிகர் கிருஷ்ணா நடிக்க திரைப்படமாக வெளியாகி உள்ளது.

                  அல்லூரியைச் சுடுவதற்கு முன் “ நன்றாகச் சுடுங்கள். ஆனால் எனக்கு மரணம் என்பதே கிடையாது. எம் மக்கள் விடுதலை ஆகும் வரை, நீங்கள் இங்கிருந்து துரத்தப்படும் வரை நான் மீண்டும், மீண்டும் பிறந்து கொண்டே இருப்பேன்” என்று சொன்னாராம். உண்மைதான் போராட்டக்காரர்கள் எந்த தேசத்திலும் புதைக்கப்படுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள். அல்லூரி மிக உயர்ந்த மலைப்பிரதேச மக்களின் எளிய இதயங்களில் விதைக்கப் பட்டிருக்கிறார்.

 நன்றி: 'காக்கை சிறகினிலே' ஜூலை - 2013.

ஞாயிறு, 16 ஜூன், 2013

நூறைக் கடந்து.... வேரை மறந்து....


                               1913 ஆம் ஆண்டு மே -3 ந்தேதி சனிக்கிழமை அன்று மாலை தெற்கு மும்பையின் கிர்கான் பகுதியிலுள்ள காரனேஷன் வெரைட்டி ஹால் அரங்கில்தான் முதன் முதலில் இந்தியாவின் முழு நீள சலனத் திரைப்படம் திரையிடப்பட்டது. ராஜா ஹரிச்சந்திரா என்கிற அந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் தாதா சாகிப் பால்கே. அவரது பெயரால்தான் இந்திய அரசு சினிமாத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
                முதல் முழுநீள சலனத் திரைப்படம் திரையரங்கில் திரையிட்டு மிகச்சரியாக 100 ஆவது ஆண்டினை எட்டும் இந்த வேளையில் இந்திய சினிமாவின் துவக்கத்தையும், அதற்காக துணிந்து சில அசாத்திய முயற்சிகளில் இறங்கிய இருவரைப்பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
                இந்திய சினிமா 100 என்கிற நீண்ட பயணத்தின் முதல் அடியை எங்கிருந்து துவங்குவது என்பது சற்று கடினமான விஷயம்தான். பால்கேவின் ராஜா ஹரிச்சந்திரா திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் முழு நீள மௌனப்படம் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பாகவே  சிறு சிறு சினிமா முயற்சிகள் துவங்கிவிட்டன.
                1896-ல் அகஸ்டி நிக்கோலஸ் லூமியர், லூயிஸ் ழீன் லூமியர் சகோதரர்கள் எடுத்திருந்த ஆறு மௌனப்படங்களை, அவரது குழுவினர் இந்தியாவில் திரையிடும்பொருட்டு மும்பை வந்தனர். ஜூலை 7, 1896 அன்று மும்பை காலாகோடா பகுதியில் இருந்த வாட்சன் ஹோட்டலில் சில பார்வையாளர்களுக்கு அந்த படங்களை காண்பித்தனர்.  அங்கு பார்வையாளர்களில் ஒருவராக இருந்த ஹெச்.எஸ்.பி. வடேகர் ஒரு மூவி கேமராவை லண்டனில் வாங்கி, அதில் அன்றாட நிகழ்வுகளை சிறு சிறு செய்திப்படங்களாக எடுத்து திரையிட்டார்.
                1897-ல் எம். எட்வர்ட் என்கிற ஐரோப்பியர் தான் எடுத்த துண்டு படங்கள் சிலவற்றை சென்னை விக்டோரியா ஹாலில் திரையிட்டார். 1898 ஆம் ஆண்டு ஸ்டீவன்ஸன் என்பவர் கல்கத்தா வந்திருந்தார். அங்கு திறந்தவெளி மைதானம் ஒன்றில் தனது flower of persia  என்ற குறும்படத்தை திரையிட்டார்.
                அதே ஆண்டு கல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஹீராலால் சென் என்பவர் ஸ்டீவன்ஸனிடமிருந்து ஒரு கேமராவை விலைக்கு வாங்கி அதன் மூலம் A dancing scene  என்ற குறும்படத்தை எடுத்து, அதனை ஒரு சிலருக்கு போட்டு காண்பித்தார். அதுதான் இந்தியாவின் முதல் குறும்படமாக இருக்கக்கூடும். பிற்பாடு அவர் தனது சகோதரர் மோதிலாலுடன் சேர்ந்து ராயல் பயாஸ்கோப் என்ற கம்பெனி மூலம் சுமார் 42 சிறு படங்களை எடுத்தார்.
    1902-ல் ஜாம்ஷெட் ஃபிரேம்ஜி மதன் என்பவர் துண்டு படங்களை திரையிடுவதற்காகவே கெட்டித்துணியிலான கூடாரம் (டெண்ட்) ஒன்றை கல்கத்தாவில் அமைத்து வணிக ரீதியாக படங்களை காண்பித்தார். லாபகரமான தொழிலாக அது இருக்கவே நிரந்தரமான அரங்கை கட்டத் தீர்மானித்த ஜாம்ஷெட்ஜி கல்கத்தாவில் 1907-ல் எஸ்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் திரையரங்கு ஒன்றைக் கட்டினார். அதுதான் இந்தியாவின் முதல் திரையரங்கம், இன்றும் கல்கத்தாவில் புகழ்பெற்று விளங்கும் அந்த திரையரங்கின் இன்றைய பெயர் சாப்ளின் சினிமாஸ்.
                லூமியர் சகோதரர்கள் தயாரித்த சில துண்டு படங்களை அவரது குழுவினர் இந்தியாவெங்கும் ‘டூர்' அடித்து திரையிட்டனர். அதனால்தான் ‘டூரிங் சினிமா' என்ற பெயர் வந்தது.  அவ்வாறு அவர்களால் காண்பிக்கப்பட்ட life of jesus  என்ற படத்தைப் பார்த்து திரைப்படத்துறைக்கு இந்தியாவில் வித்திட்டவர்கள் மஹாராஷ்ட்ராவின் திரையாம்பகேஷ்வரில் பிறந்த பால்கேவும், கோவையில்  பிறந்த சாமிக்கண்ணு வின்சென்ட்-டும்தான்.
                1870-ல் பிறந்த பால்கே பரோடாவிலுள்ள கலாபவன் பயிற்சிப்பள்ளியில் சிற்பம், ஓவியம், புகைப்படக்கலை ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக்கொண்டார். தொல்லியல் துறையில் பணிக்குச்சேர்ந்த பால்கே ஒரு அச்சகத்தை ஆரம்பித்தார். அச்சகம் குறித்த தொழில்நுட்பங்களை அறிய ஜெர்மன் சென்ற அவர் அங்கு நவீன புகைப்படக் கருவிகள் பற்றி அறிந்தார். அதற்குப்பிறகு இந்தியா வந்த அவர்  life of jesus  படத்தைப் பார்த்தது முதல் தனது இலக்கு ஒரு திரைப்படத்தை இயக்குவதுதான் என்று தீர்மானித்தார். அந்த முயற்சியின் விளைவே ‘ராஜா ஹரிச்சந்திரா'
                1883-ல் பிறந்த சாமிக்கண்ணு வின்சென்ட் இரயில்வே துறையில் திருச்சி நகரில்  பணியாற்றிகொண்டிருந்த போது 1905-ஆம் ஆண்டு ஃபதே எனும் சினிமா ப்ரொஜெக்ஷன் கம்பெனியின் ஊழியர் ‘ டூபாண்ட்' என்பவர்  life of jesus  படத்தை இந்தியாவெங்கும் திரையிட்டபடி திருச்சி வந்து சேர்ந்தார். இந்தியாவின் தட்பவெப்பம், இடைவிடாத ஊர்சுற்றல் காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட டூபாண்ட் வின்சென்ட் ஐ சந்தித்தார். தன்னால் தொடர்ந்து திரையிடல் பணியை செய்ய முடியாது என்பதால் தன்னிடமுள்ள கருவிகள், திரைப்படச் சுருள்களை 2000 ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளும்படி கூறினார். மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் இருந்த வின்சென்ட்க்கு  அது இமாலயத் தொகைதான். ஆனாலும் எதிர்காலத்தில் இது இந்தியாவெங்கும் ஈர்க்கக்கூடிய துறை என்பதை முன் கூட்டியே உணர்ந்த வின்சென்ட், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தொகையைத் திரட்டி அவற்றை வாங்கினார். இரயில்வே வேலையை விட்டுவிட்டார். ஊரூராக டெண்ட் அடித்து, மக்களைக்கவர மின்விளக்குகள் வைத்து திரையிடல் பணியை செய்தார். மௌனப்படங்கள் என்பதால் சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் சில மேஜிக் நிகழ்ச்சிகளை இடையிடையே செய்து காண்பித்தார். நிரந்தர திரையரங்கம் கட்டவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கோவையில் 1914-ல் வெரைட்டி ஹால் என்ற பெயரில் ( இன்றைய பெயர் டிலைட்) ஒரு திரையரங்கை கட்டினார்.. சினிமா புரஜெக்ஷன் கருவிகளை தருவிக்கும் வினியோகஸ்தராகவும் இருந்தார்.
                பேசும் படங்கள் வர ஆரம்பித்த காலத்தில் ‘ வள்ளித்திருமணம்' என்ற படத்தையும், பின்னர் ‘ஹரிச்சந்திரா மற்றும் சுமத்திர பரிணயம்' போன்ற படங்களையும் தயாரித்தார்.
                சாமிக்கண்ணு வின்சென்ட் ஒரு சினிமாக்காரர் மட்டுமல்ல.. அவர்தான் முதன் முதலில் மின் அச்சகத்தை நிறுவியவர். அதோடு மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலையையும் கட்டியவர். இரண்டுக்கும் தேவைப்படும் மின்சாரத்துக்காக மின்னுற்பத்தி ஆலையையும் உருவாக்கியவர். ஆலைகளுக்கு பயன்பட்டதுக்குப் போக  உபரி மின்சாரத்தை பள்ளி உபயோகத்துக்கும், கோவையின் பொதுமக்கள் உபயோகத்துக்கும் தந்தார். நவீன அறிவியல் தொழில்நுட்பங்களின் சாத்தியப்படும் கூறுகள் பெரும்பாலனவற்றை முயற்சித்து அதில் வெற்றி கண்டவர் சாமிக்கண்ணு.
                பால்கேவுக்கும், சாமிக்கண்ணு வின்சென்ட்டுக்கும் ஆச்சர்யகரமான பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும்  life of jesus  படத்தால் ஈர்க்கப்பட்டு திரைத்துறையை தேர்வு செய்தவர்கள். இருவரும் அடிப்படையில் புகைப்படக்காரர்கள். இருவருமே ட்ராஃப்ட்ஸ்மேனாக வேலை பார்த்து சினிமாவுக்காக பாதியில் வேலையை விட்டவர்கள். இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் ஹரிச்சந்திராவை தயாரித்தவர்கள். அச்சகம் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தவர்கள். இருவருக்கும் மேஜிக்கில் சிறிது பரிச்சயம் உண்டு. இளம் வயதில் மனைவியை இழந்தவர்கள். இப்படி பல...
                இருவருக்கும் உள்ள வேற்றுமை பால்கே பெயரால் சினிமாத்துறையினருக்கு விருது வழங்கப்படுகிறது. ஆனால் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பெயர் அவரளவுக்கு பரவலாக கவனப்படுத்தப்படவில்லை. தியோடர் பாஸ்கரன், இயக்குனர் செந்தமிழன் ( பாலை ), நியாஸ் அகமது போன்ற ஒரு சிலரே அவரைப்பற்றி விரிவாக பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

                திரையிடல் கலை நூறாண்டைக் கடக்கும் நிலையில், சாமிக்கண்ணு வின்சென்ட் பெயரால் கௌரவமிக்க விருது ஒன்று வழங்கப்படவேண்டும். அவரது  படங்களும், இன்னும் அரிய பொக்கிஷங்களாக விளங்கும் துவக்க கால படங்களும்  ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.  வருடங்கள் உருண்டோட, உருண்டோட கொண்டாட்டங்களால் நிறைவதல்ல வரலாறு. சரித்திரத்தை மாற்றியமைத்தவர்களை மறக்காமல் அங்கீகரிப்பதன் மூலம் வரலாறு நிறைவுகொள்கிறது.

நன்றி: கல்கி- 19,மே -2013.

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...