புதன், 10 ஜூலை, 2013

காகோரி சதிவழக்கும் கொலையுண்ட மறவர்களும்

      1925-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஷாஜஹான்பூர் செல்லும் புகைவண்டி காகோரி இரயில் நிலையத்தை அடையும் நேரம் அலம் நகர் என்ற பகுதியை கடக்கும் சமயம் திடீரென அவ்வண்டி ஒரு பயணியால் அவசர சங்கிலி பிடித்திழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. வண்டியின் கார்டு தனது பெட்டியிலிருந்து இறங்கி வந்து இழுக்கப் பட்ட பெட்டியை நோக்கி நகர்கிறார். அவர் மீது இரு இளைஞர்கள் வண்டியிலிருந்து குதித்து அமுக்குகிறார்கள். வலுவான உடலும் முரட்டுத் தோற்றமும் கொண்ட அஷஃபுல்லாகான் பாய்ந்து கார்டு இருந்த பெட்டிக்குள் நுழைகிறார். அங்கிருந்த இரும்புப் பெட்டியை வெளியே எடுத்து வந்து அதன் பூட்டை உடைக்க முயல்கிறார். அவரது தோழர்கள் புகைவண்டியின் இரு முனைகளிலும் நின்று கொண்டு பயணிகளை எச்சரிக்கிறார்கள், “அன்பார்ந்த இந்திய சகோதரர்களே, நாங்கள் உங்கள் தோழர்கள். நாங்கள் உங்களை எதுவும் செய்து விட மாட்டோம். இங்கு நடப்பவை பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான போராட்டம். தயவு செய்து இரயில் பெட்டிகளிலிருந்து வெளியே வந்து விடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்திருங்கள்.” என்கிறார்கள்.
                அந்த நேரம் அடுத்த இருப்புப் பாதையில் ஒரு இரயில் வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் அவர்கள் அந்தப் பெட்டியை உடைத்து அதிலிருந்த பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பணப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, அவசரமாகப் பூட்டை உடைக்க முயல்கிறார்கள்.
                பெட்டியை உடைக்க இரயிலில் வந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை மிரட்டுவதற்காக வானை நோக்கிச் சுடுகிறார்கள். H.R.A. எனப்படும் இந்துஸ்தான் ரெவில்யூஷனரி அசோஷியேஷன் என்ற அமைப்பின் உறுப்பினர்களான அந்த இளைஞர்கள். பயத்தின் காரணமாக வெளியே வந்த ஒருவர் மீது எதேச்சையாக குண்டு பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே மரணமடைகிறார். இறுதியாக பெட்டி உடைக்கப்பட்டு அதிலுள்ள பண மூட்டைகளை எடுத்துக் கொண்டு தோழர்களுடன் பறக்கிறார் அஷஃபுல்லா கான்.
                காக்கோரி இரயில் கொள்ளை சதி வழக்கு என்று சுதந்திரப்போராட்ட காலத்தில், பரபரப்பாக பேசப்பட காரணமாயிருந்த இந்த சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டவர் இராம்ப்ரசாத் பிஸ்மல்.
                காந்தியடிகள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரவலாக அதற்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன. 1922-ம் வருடம், செளரிசோரா எனுமிடத்தில் விவசாயிகள் மீது பலத்த தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டதால் பலர் காயமுற்றனர், ஊனமுற்றனர். இதற்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் புறப்பட்டு, செளரிசோரா காவல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். இதில் சில காவலர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் காந்தியின் மனதில் பெரும் கசப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமில்லை என்றாலும் பிஸ்மல், அஷஃபுல்லா கான் போன்றோரின் உணர்ச்சிகரமான உரைகள், செயல்பாடுகள் காரணமாகத் தான் மக்கள் அந்த கட்டுப்பாடற்ற நடவடிக்கையில் இறங்கியதாக காந்தி நினைத்தார்.
                எனவே, காந்தி தனது போராட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தார். 1922-ல் நடந்த கயா-காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக காந்திக்கு எதிரான குரல்கள் எழும்பின. பிஸ்மல் மற்றும், அவரது தோழர்கள் மாநாட்டை விட்டு வெளியேறினர்.
                இனி, அஹிம்சாவழிப் போராட்டத்தின் மூலம், பிரிட்டிஷ் அரசைப் பணிய வைக்க முடியாது. அநீதியான, அடக்குமுறைக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துவது அவசியம் என்று புறப்பட்ட இராம் ப்ரசாத் பிஸ்மல் அன்றைக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் இருந்தபடி இந்திய சுதந்திரத்துக்கான அடித்தளமான வேலைகளை செய்துக்கொண்டிருந்த லாலா ஹர்தயாளின் அறிவுரைப்படி இந்துஸ்தான் புரட்சிகரக் கழகம் (H.R.A.) வை துவக்கினார். பின்னாளில் HSRA என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்த அமைப்பில் தான் பகத்சிங் இயங்கினார்.
                HRA அமைப்பை முன்னெடுக்கும் போராட்ட நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்பட்டது. எனவே, அநியாயமாக இந்தியரிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் வசூலித்த பணத்தையே எடுத்து, அவர்களுக்கெதிரான பணிகளை செய்வது என முடிவெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, சிட்டகாங்கில் உள்ள தபால் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த பணத்தைக் கவர்ந்தனர். ஒரு முறை பிஸ்மல் ஷாஜஹான்பூரிலிருந்து லக்னோ செல்லும் போது ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் அரசாங்கப் பணியாளர்கள் சிறு மூட்டைகளில் பணத்தை எடுத்து வந்து குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மேல் துவாரம் வழியே போட்டுச் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக அந்தப் பெட்டியையே களவாடி விட்டால் அது அமைப்பைப் பலப்படுத்த உதவும் என்று நினைத்த பிஸ்மில் அதற்காகத் தீட்டிய திட்டத்தின் செயல்வடிவமே காகோரி இரயில் சம்பவம்.
                பிரிட்டிஷ் அரசு இந்திய இளைஞர்களின் உத்வேகத்தை குறிப்பாக H.R.A. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பெரிதும் அஞ்சியது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், பிரிட்டீஷ் அரசு விரைவில் வலு இழந்து வெளியேற நேரிடும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ஸ்கார்ட்லாண்ட் யார்டிலிருந்து பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவை வரவழைத்து காகோரி இரயில் சம்பவம் குறித்து விசாரிக்க நியமித்தனர்.
                செப்டம்பர் 16, 1925-ல் பிஸ்மில் மற்றும் அவரது தோழர்கள் ரோஷன் சிங், சச்சீந்திர பக்ஷ், சந்திரசேகர ஆசாத், கேசாப் சக்ரவர்த்தி, பன்வாரிலால், முகுந்தி லால், மன்மத் நாத் குப்தா ஆகியோரையும் இன்னும் வழக்குக்கு சம்பந்தப்படாத சிலரையும் என மொத்தம் 42 பேரைக் கைது செய்தது. அஷஃபுல்லா கான் மட்டும் சமயோசிதமாக கரும்புக் கொல்லையில் பதுங்கி பின், காசிக்குத் தப்பிச் சென்று விட்டார். அங்கு பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் அவரைக் காப்பாற்றி வந்தனர். அங்கிருந்து பீகாருக்குச் சென்ற அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்தார். என்றாலும், சுதந்திர வேட்கை தணியாத அஷஃபுல்லா தோழர்களைக்காப்பாற்றவும், அமைப்பை மறுகட்டமைப்பு செய்யவும் தில்லி வந்து சேர்ந்தார். எப்படியாவது அமெரிக்காவிலுள்ள லாலா ஹர்தயாளை சந்தித்து விட்டால் அமைப்பை வலுப்படுத்தி விடலாம் என்பதற்காக சில நண்பர்களை சந்தித்தார். அதில் அவருடைய ஊரைச் சேர்ந்த ஒரு வகையில் அவருடைய உறவினரான ஒருவன் காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் போலீஸிடம் சிக்கிக் கொண்டார். வழக்கு தீவிரமடைந்து இராம் ப்ரசாத் பிஸ்மல், அஷஃபுல்லா கான், இராஜேந்திர லகரி, ரோஷன் சிங் ஆகிய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது. பிரிவி கவுன்சில் வரை தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. 1927-ம் வருடம் டிசம்பர் மாதம் அவர்கள் நால்வரும் வெவ்வேறு நாட்களில் தூக்கிலிடப்பட்டனர்.

இராம் ப்ரசாத் பிஸ்மல்:

                1897-ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி .பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர். தந்தை  முரளீதர், தாய் மூல்மதி. சிறு வயது முதல் இலக்கியம், கவிதை எழுதுதல் ஆகியவற்றில் ஈடுபாடு  கொண்ட பிஸ்மல், அமெரிக்காவிலிருந்த லாலா ஹர்தயாளின் ஆன்மீக மற்றும் அரசியல் உரைகளால் பெரிதும் கவரப்பட்டார். ஆரிய சமாஜ் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினராக இயங்கிய அவர் இராம், அக்லத், பிஸ்மல் என்ற புனைப்பெயர்களில் எழுதிய கவிதைகள் அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் பிரபலமாயிருந்தன. வங்காளி மற்றும் ஆங்கிலத்திலிருந்து பல படைப்புகளை இந்தியில்  மொழிபெயர்த்தார்.
                லாகூரில் பரமானந்த் என்கிற நண்பருடன் சேர்ந்து அரசுக்கு எதிரான தடைசெய்யப்பட்ட, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பொதுக்கருணை ஆணைப்படி விடுதலை செய்யப்பட்டார். சுவாமி சோமதேவ் மூலம் பண்டிட் ஜண்டாலால் தீட்சித்தின் அறிமுகம் கிடைத்தது. தீட்சித் சிவாஜி சமிதி என்ற பெயரில் ஒரு தீவிர அமைப்பை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடத்தி வந்தார். 1918-ல் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்ற தலைப்பில் அந்த அமைப்பின் துண்டுப்பிரசுரங்களைப் பதிப்பித்து தில்லி முதல் ஆக்ரா வரை மறைந்து கொண்டே பொதுமக்களிடம் கொடுத்து வந்தார். அதுபற்றி அறிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்த போது யமுனை நதியில் குதித்து தலைமறைவானார். அவர் இறந்து விட்டாரென நினைத்து பிரிட்டிஷ் போலிஸ் அங்கிருந்து வெளியேறியது. ஆனால், தண்ணீருக்குள்ளேயே நீந்தி, வேறிடத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
                தன் வாழ்நாள் முழுக்க சாகச செயல்களால் பிரிட்டிஷ் அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்த பிஸ்மில்லைப் பற்றி தனது அண்ணன் ரியா ராத் உல்லாகான் மூலமறிந்த அஷஃபுல்லா கான் வலியச் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆனால், பிஸ்மல் தனது நண்பரின் இளைய சகோதரனை ஆபத்துகள் நிறைந்த இந்தப் பணிகளில் ஈடுபடுத்த விரும்பவில்லை. எனவே, அஷஃபுல்லா கானை முடிந்தவரை தவிர்த்தபடியிருந்தார். இருந்தாலும், அஷஃபுல்லா தனது விடாமுயற்சியால் பிஸ்மல்லுடன் சுதந்திரப்போராட்ட வேள்வியில் இணைந்து கொண்டார்.

அஷஃபுல்லா கான்:

                1900 வருடம், அக்டோபர் 20-ல் .பி.யிலுள்ள ஷாஜஹான்பூரில் பிறந்த அஷஃபுல்லா கானின் தந்தை ஷஃபீஸ் உல்லா கான்.தாய் மஸூர் உன்னிசா. நான்கு மகன்களில் இளையவரான அஷஃபுல்லா அடிப்படையில் கவிஞர். வார்சி, மற்றும் ஹஸரத் என்கிற புனைப்பெயர்களில் கவிதைகளை எழுதிவந்தார். ஆரம்பகாலங்களில் பிஸ்மல்லிடம் கவிதைகளைக் காண்பித்து அதில் திருத்தங்கள் பெறுபவராக அவரிடம் நட்பு பாராட்டினார். போகப்போக பிஸ்மல்லின் நம்பிக்கைக்குரிய தோழனாக மாறினார். காகோரி இரயில் கொள்ளை வழக்கில் பிரிட்டிஷ் போலிசார் இவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்ற  ஒரு இஸ்லாமிய போலீஸ்காரரை அனுப்பிபிஸ்மல் நம்பிக்கைக்குரிய நபரல்ல; அவரால் கிடைக்கும் சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது' என்றெல்லாம் சொல்ல வைத்து அஷஃபுல்லா கானை பணிய வைக்க முயற்சித்தனர். எந்த சூழலிலும் பிஸ்மல்லையும் தோழர்களையும் காட்டிக் கொடுக்க மறுத்த அஷஃபுல்லா அதன் காரணமாகவே தூக்கிலிடப்பட்ட பட்டியலில் நால்வரில் ஒருவரானார்.
 இராஜேந்திர லஹரி:

                1901-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வங்காளத்தின் பாப்னா மாவட்டத்திலுள்ள மோகன்பூர் கிராமத்தில் பிறந்தார். ( தற்சமயம் இது பங்களாதேஷில் உள்ளது). அவரது தந்தை சிதிஷ் மோகன் லஹரி ஊரிலேயே மிகுந்த செல்வந்தர். பனாரஸ் உட்பட பல்வேறு ஊர்களில் அவருக்கு விலை மதிப்புமிக்க சொத்துக்கள் இருந்தன. எம். வரை பனாரஸ்-ல் பாடித்த ராஜேந்திர லஹரி சுகபோகமாக வாழ சல வசதிகளும் உடையவராக வளர்ந்தார். ஆனால் அவற்றையெல்லாம் உதறி எறிந்துவிட்டு இந்திய சுதந்திர போருக்காக போராடிய தீவிர அமைப்புகளில் இணைந்து இயங்கினார். தக்ஷினேஷ்வர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
                காகோரி ரயில் கொள்ளை சம்பவத்தில் அவரும் இருந்தார் என்றாலும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அளவு பெரும் தவறுகள் எதுவும் செய்யவில்லை. சாட்சியங்களையும், வாதங்களையும் அவருக்கு எதிராக திருப்பிவிட்டு தனது வெறியை தீர்த்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி கோண்டா மாவட்டச் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ரோஷன்சிங்:

                1892-ம் வருடம் ஜனவரி மாதம் 23-ந் தேதி ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நவதா எனும் கிராமத்தில் பிறந்த ரோஷன்சிங்-கின் தந்தை ஜாங்கி சிங் தாய் கௌசல்யா தேவி. துப்பாக்கி சுடுதலிலும், மல்யுத்தத்திலும் திறன் பெற்ற ரோஷன் சிங் ஆர்ய சமாஜம் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினர். இந்திய தேசிய காங்கிரசின் தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கிய ரோஷன் சிங் .பி அரசுக்கு எதிரான போராட்டங்களில் இயங்கிவந்தார். 1921 ஆம் வருடம் இதன் காரணமாக கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.
                சிறையிலிருந்து வெளிவந்ததும் ஷாஜகான்பூர் சென்று பிஸ்மல்லை சந்தித்து தன்னை H.R.A.  அமைப்பின் உறுப்பினாராக இணைத்துக் கொண்டார். அமைப்பின் நிதி திரட்டலுக்காக உள்ளூரில் கந்து வட்டி தொழில் செய்து கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பால்தியா பிரசாத் என்பவனைத் தாக்கினார். இதன் காரணமாக அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. திடீரென எந்த முகாந்திரமும் இல்லாமல் அவரது பெயர் காகோரி இரயில் கொள்ளை வழக்கில் சேர்க்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டது.
                அதிகார மையம் நினைத்தால் எவரையும் தூக்கு மேடையில் நிறுத்திவிட முடியும் என்பதற்கு ராஜேந்திர லஹரி ,ரோஷன்சிங், ராம் பிரசாத் பிஸ்மல், அஷஃபுல்லா கான் ஆகியோரின் மரணமே சாட்சி.
                இன்னொரு மறுவிசாரணை செய்யப்பட்டால் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று நிரூபிக்கப்படலாம். ஆனால் தூக்குக் கயிறு தின்ற உயிர்களை திரும்ப வரவழைத்து அவர்கள் இன்னொரு முறை இந்த் உலக வாழ்வை அனுபவிக்க வைக்க முடியுமா என்ன?
                மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் ஒரு கணம் வரலாற்றை புரட்டினால், எத்தனை உயிர்கள் நியாயமற்ற முறையில், காழ்ப்புணர்ச்சி மற்றும் துவேஷங்கள் காரணமாக, உணர்ச்சி வசப்பட்ட சூழலின் பொருட்டு பலியாகியிருக்கும் என்பதை உணரமுடியும்.
                ரோஷன் சிங் தனது இறுதி காலத்தில் அலகாபாத் சிறையிலிருந்தபடி தனது மாமாவுக்கு எழுதிய கடிதத்தில்கடவுளின் படைப்பில் அதி உன்னதமானது மனிதப்பிறவி. சக மனிதர்களின் சுதந்திரத்துக்காக தன்னையே தியாகம் செய்ய இயலுமெனில், அதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமிதம் அடைகிறேன். என் மரணத்துக்காக வருந்த வேண்டாம். நான் கடவுளின் மடியில் உறங்கப்போகிறேன்என்று எழுதியிருந்தார்.
                கடவுளின் மடியில்தான் அழிக்கமுடியாமல் இப்படி எத்தனை இரத்தக்கறைகள் ..?...


                                                                                

6 கருத்துகள்:

  1. //கடவுளின் படைப்பில் அதி உன்னதமானது மனிதப்பிறவி. சக மனிதர்களின் சுதந்திரத்துக்காக தன்னையே தியாகம் செய்ய இயலுமெனில், அதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமிதம் அடைகிறேன். என் மரணத்துக்காக வருந்த வேண்டாம். நான் கடவுளின் மடியில் உறங்கப்போகிறேன்//

    ”சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களின் வரலாறு... பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. //கடவுளின் மடியில்தான் அழிக்கமுடியாமல் இப்படி எத்தனை இரத்தக்கறைகள் ..?...//

    அப்பப்பா... ஒவ்வொருவரின் சரித்திரத்தினையும் படிக்கும்போது உணர்ச்சி மிகுந்தது.....

    நமது சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை மனிதர்கள் போராடி இருக்கிறார்கள்... எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறார்கள்.... எத்தனை மனிதர்கள் மாண்டிருக்கிறார்கள்.....

    நல்லதோர் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி சகோதரி .. சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் மட்டுமல்ல .. சரித்திரத்தில் மறக்கப்பட்டவர்களும் கூட ... தொடர்ந்து காக்கைச் சிறகினிலே இதழில் இப்படியானவர்களைப்பற்றி எழுதிவருகிறேன் உங்கள் ஆதரவான பதிவு என் எழுத்துக்கு உரமஊட்டுகிறது .. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி சார் .. இன்னும் கண்ணில் ரத்தம் வருமளவு சில தியாகச்சீலர்களின் வரலாறு இருக்கிறது வரிசையாக எழுத உள்ளேன் . உங்கள் உணர்வுக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. எத்தனை சின்ன வயது? படிக்கும் போதே மனது துடிக்கிறது எனக்கு.... சின்ன சின்ன பிள்ளைகள், வரலாற்றில் மறக்கப்பட்ட பிள்ளைகள் செய்த ஈடு செய்ய முடியாத தியாகத்தால் தான் இப்போது நாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்று நினைக்கவே செஞ்சு வலிக்கிறது.... மீண்டும் மீண்டும் அந்த பிள்ளைகளைப் பார்க்கிறேன்.... அழகான இளங்குருத்துகள், வளர்ந்து ஆளாகி எத்தனையோ சாதனைகளைச் செய்து இருக்க கூடிய கண்மணிகள்...... தாய்த் திரு நாட்டிற்காக நெஞ்சுரத்துடன் உயிர்த் தியாகம் செய்த அந்த வீரர்களைக் கண்கள் பனிக்க வணங்குகிறேன்.....
    இப்படிப் பட்ட மறைந்து போன தியாகிகளின் மறைக்கப் பட்ட வரலாற்றைத் தேடி எழுதி அவர்களுக்கு பெருமை சேர்க்கும் உங்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள் பாரதி.....

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி ப்ரியா ... தினமணிகதிர் சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள் .. காக்கையில் தொடர்ந்து இப்படியான தியாகிகளைப்ப்றி எழுதுகிறேன் வரும் ஆகஸ்ட் இதழில் வரப்போகும் கட்டுரை இன்னும் பல அபூர்வமான தகவல்கள் அடங்கியது . அவசியம் வாசியுங்கள்

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...