வனப்பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தும்போதும்,
அமுல் படுத்தும்போதும்
இன்றைக்கு மனித
உரிமை அமைப்புகள்,
பழங்குடி இன
ஆதரவு இயக்கங்கள்
அச்சட்டங்களை எதிர்த்து வலுவாக குரல் கொடுத்து
வருகின்றன. கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு முன்னதாக வனப்பாதுகாப்புச் சட்டம் பிரிட்டிஷ் அரசால் முதன்
முறையாக கொண்டுவரப்பட்டு,
மிகக் கடுமையாக
ஈவு இரக்கமின்றி
நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதற்காக வீரம்
செறிந்த போராட்டங்களை
நடத்தி தன்
உயிரையும் தந்தவர்
அல்லூரி சீதாராம
ராஜு. கோண்ட்
இன பழங்குடி
மக்களால் அன்போடு
‘வன ராஜா'
அன்று அழைக்கப்பட்ட
ராஜுவுக்கு அல்லூரி ரெம்பா ராமராஜு, ராமச்
சந்திர ராஜு
என்ற வேறு
பெயர்களும் உண்டு. அல்லூரி ராமராஜு என்பதுதான்
அவரது இயற்பெயர்.
சீதாம்மா என்ற
பெண்ணை அவர்
தீவிரமாக காதலித்து
வந்ததாகவும், அந்த பெண் இளம் வயதிலேயே
ஏதோ ஒரு
கொடிய நோய்
காரணமாக இறந்துவிட்டதால்
அவரது பெயரை
தனது பெயரோடு
இணைத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுவதும்
உண்டு.
இந்தியாவின் அதிகபட்சமான
தட்பவெப்பச்சூழலை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள், மலைப்பகுதிகளில்
தங்கள் ஓய்வு
நாட்களைக் கழிக்க
உல்லாச வீடுகளை
கட்ட பரபரத்தனர்.
அவர்களது களியாட்டங்களுக்கு
இடைஞ்சலாக பழங்குடி
இன மக்களின்
நடமாட்டம் இருப்பதை
அவர்கள் விரும்பவில்லை.
1882-ல் பிரிட்டிஷ் அரசு
வனங்களை பாதுகாப்பதற்காக ‘மதறாஸ்
வனப் பாதுகாப்புச்
சட்டம்' என்ற
பெயரில் ஒரு
வன்முறையான சட்டத்தை அமுல்படுத்தியது. அதன்படி காடுகளில்
சுதந்திரமாக இயங்கியும், வேளாண்தொழிலில்
ஈடுபட்டும் வந்த பழங்குடி இன மக்களின்
நடமாட்டம் பல
இடங்களில் தடை
செய்யப்பட்டது.
பொதுவாக சமதளமான
நிலப்பகுதிகளில் குறிப்பிட்ட விவசாய நிலங்களில் பருவநிலையை பொருத்து
வெவ்வேறு வகையான
பயிர்களை
விதைத்து அறுவடை செய்வது நம் மக்களின்
இயல்பு. ஆனால்
மலைப் பகுதிகளில்
உள்ள பயிர்
நிலங்களில் அன்றைய காலகட்டத்தில் ‘பொடு' எனப்படும்
‘இடமாற்ற விவசாயம்'
என்ற முறையை
பழங்குடி இன
மக்கள் நடைமுறைப்
படுத்தி வந்தனர்.
அதன்படி எவருக்கும்
எந்த நிலமும்
சொந்தமாய் இருக்காது.
குழுவாக இருக்கும்
பழங்குடியினர் ஒரு இடத்தின் சூழல், மண்
தன்மை ஆகியவற்றை
கருத்தில் கொண்டு
சில நாட்கள்
அதற்கேற்ற பயிர்வகைகளை
விளைவிப்பர். பின்னர் அந்த மண்ணின் வளத்தைப்
பெருக்க அதனை
அப்படியே விட்டுவிட்டு
வேறு ஒரு
இடத்துக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள நிலத்தில்
பயிர் செய்வார்கள்.
ஐரோப்பிய நாடுகளில்
சிலவற்றில் 1920 வரைகூட இந்த
நடைமுறை இருந்ததாக
வரலாற்று ஆய்வாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாகத்தான்
பழங்குடி இன
மக்களிடம் அவர்களுக்குச்
சொந்தமென சொல்லும்படியான
சட்டரீதியான ஆவணங்கள் இருப்பதில்லை. காலச்சூழலலுக்கு ஏற்ப
நகர்தலும், அதற்கு தக்க தொழில்களை ( பயிரிடுதல்,
வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல்) தற்காலிகமாகவும் நிர்ணயித்துக்
கொள்வார்கள்.
ஆந்திராவின் கிழக்கு
கோதாவரி மாவட்டங்களில்
உள்ள பழங்குடி
மக்கள் (குறிப்பாக
கோண்ட் இனத்தவர்கள்)
நிலங்களை தேர்வு
செய்வதிலும், மண்வளத்தை ஆய்வு செய்வதிலும் அனுபவ
ரீதியான திறமைசாலிகள்
என்று கூறப்படுவதுண்டு.
மதறாஸ் வனப்பாதுகாப்புச்சட்டத்தை
கொண்டு வந்ததன்
மூலம், அவர்களது
வாழ்வாதாரப்பகுதிகள் கையகபடுத்தப்பட்டன. அவர்களது சுதந்திரமான நடமாட்டம் தடை
செய்யப்பட்டது. காடுகளில் சுற்றிச் சுழன்றவர்களை, வீடுகளுக்குள்
முடக்கிப்போட்டது பிரிட்டிஷ் அரசு.
இந்த கொடுமைகளை
எதிர்த்தும், வனப்பாதுகாப்புச்சட்டங்களை திரும்பப்
பெற வலியுறுத்தியும்
அந்த மக்களை
ஒருங்கிணைத்து ஆயுத வழிப்போராட்டங்களை முன்னிறுத்தியவர் அல்லூரி சீதாராம ராஜு. ஆயுதம்
என்றால் துப்பாக்கிகளோ,
வெடிகுண்டுகளோ, பீரங்கிகளோ அல்ல.. அவர்களது பாரம்பரிய
வில், அம்பு,
ஈட்டி ஆகியவற்றை
மட்டும் பயன்படுத்தி
வெள்ளையர்களை கதிகலங்கச் செய்தவர் அல்லூரி.
பிரிட்டிஷ் ஆட்சியை
எதிர்த்து ஆந்திராவின்
பலபகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் பல புரட்சிகள்
வெடித்திருக்கின்றன. குறிப்பாக 1800-ல் ராயல
சீமா போராட்டம்,
1919-ல் செரலா மற்றும்
பெரலா ஆகிய
இடங்களில் நடைபெற்ற
வரிகொடா இயக்கம்,
1921-ல் அல்லூரி ராஜு
தலைமையில் நடந்த
‘ரெம்பா புரட்சி',
விஜயவாடா மற்றும்
ஓங்கோல் மாவட்டங்களில்
1927-ல் நிகழ்ந்த ‘சைமனே
திரும்பிப் போ' போராட்டம், 1930-ல் மேற்கு கோதாவரி
மாவட்டங்களில் இடதுசாரிகள் முன்னிறுத்திய
‘தெனாலி போராட்டம்'
ஆகியவற்றை சொல்லலாம்.
ரெம்பா கோதாவரம்
என்ற பகுதியில்
தீர்மானிக்கப்பட்டு, வெற்றிகரமாக அல்லூரி
ராஜுவால் வடிவமைக்கப்பட்டு
பிரிட்டிஷ் இராணுவத்தை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக
மிரளவைத்தது ‘ரெம்பா புரட்சி'.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில்
பாண்டுரங்கி கிராமத்தில் 1897 ஆம் ஆண்டு
ஜூலை 4-ந்தேதி ஆந்திராவின்
சத்ரிய குலத்தில்
பிறந்தவர் அல்லூரி.
அவரது தந்தை
ராஜமுந்திரியிலுள்ள சிறைச்சாலையின் அதிகாரப்பூர்வ
அரசு புகைப்படக்
கலைஞராக பணியாற்றியவர்.
தந்தையின் ஊரான
மாகெல்லுவில் பங்காரய்யா பள்ளியில் தன் ஆரம்பக்
கல்வியை முடித்தார்.
அல்லூரியின் இளம் வயதிலேயே அவரது தந்தை
திடீரென மரணமடைந்தார்.
அல்லூரியி தாய்மாமன்
ராமகிருஷ்ண ராஜு மேற்கு கோதாவரி மாவட்டத்தின்
நரசப்பூரில் தாசில்தாராக பணிபுரிந்துவந்தார்.
அவர்தான் அல்லூரிக்கு
ஆதரவளித்து நரசப்பூரில் படிக்க வைத்தார். அல்லூரியின்
15- வது வயதில்
தாயின் ஊரான
விசாகப்பட்டினத்துக்கு வந்து அங்குள்ள
ஏவிஎன் கல்லூரியில்
சேர்ந்தார். அந்த காலகட்டத்தில்தான் நாட்டில் கொழுந்துவிட்டு
எரிந்த சுதந்திரப்போர்
அவருள்ளும் பற்றியது.
ஒன்பதாம் வகுப்பில்
தோல்வியுற்ற அல்லூரி அத்துடன் படிப்பை மூட்டைகட்டி
வைத்துவிட்டு, போராட்ட இயக்கங்களின் கூட்டங்களில் கலந்துகொண்டுவிட்டு
அவர்களின் தீர்மானங்களின்படி
செயல்படத்துவங்கினார். அப்பொழுதுதான் ஆந்திராவின்
புகழ்பெற்ற போராட்டக்காரர்களான மத்தூரி
அன்னப்பூர்ணய்யா மற்றும் அச்சுத ராமய்யா ஆகியோரின்
தொடர்புகள் கிடைத்தன.
1857-ல் நடந்த சிப்பாய்
கலகத்தின் விளைவாக
கோண்ட் இன
பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட அராஜகமான சித்திரவதைகள்
காரணமாக பாதிக்கப்பட்ட
மக்களை அடிக்கடி
சந்தித்து வந்தார்
அல்லூரி. அவர்களது
பரிதாபகரமான நிலை பரவலாக இந்தியா முழுவதும்
அறியப்படவில்லை என்று உணர்ந்தார். 1916-ல் கயாவில் நடந்த
காங்கிரஸ் தேசிய
மாகாண சபை
கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய தலைவர்களின்
அறிமுகத்தின் மூலம் அந்த மக்களின் பிரச்சினைகளை
பரவலாக கொண்டு
செல்ல முடியும்
என அவர்
நம்பினார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த
அளவு நிறைவேறவில்லை.
வங்காளத்தில் ஆங்காங்கே நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களப்பற்றிக்
கேள்விப்பட்ட அல்லூரி அதே போன்றதொரு இயக்கத்தை
முன்னெடுத்து, தமது மக்களின் வலிகளை தாமே
உணரச்செய்வோம் என முடிவெடுத்தார்.
கிழக்கு கோதாவரி
மற்றும் விசாகப்பட்டினம்
மாவட்டத்திலுள்ள மலைவாழ் மக்களை பல்வேறு சாம,
தான, பேத,
தண்ட வழிமுறைகளை
பயன்படுத்தி கிட்டதட்ட 500 பேர் கொண்ட
அமைப்பை ஆரம்பித்தார்.
பாஸ்டியன் என்ற
ஆங்கிலேய அதிகாரி
மலையின மக்களில்
சிலரை விலங்குகளைப்போல
வேலை வாங்கிவிட்டு,
உரிய ஊதியத்தை
கொடுக்க மறுத்ததோடு
மிருகத்தனமாக அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினான். அவனால் பாதிக்கப்பட்ட கம்மல்லு தோரா
மற்றும் அவரது
சகோதரர் கந்தம்
தோரா ஆகியோர்
அல்லூரியோடு இணைந்து இயக்கத்துக்கு வலு சேர்த்தனர்.
அல்லூரி ராஜுவின்
துணிச்சலான நடவடிக்கைகளால் கவரப்பட்டு அவரை குருவாக
மதித்து இணைந்த
சூரிய நாராயண
ராஜு என்கிற
அக்கி ராஜு
என்பவர் அல்லூரியின்
முக்கிய தளகர்த்தர்
ஆனார்.
1922 ஆம் வருடம் ஆகஸ்டு
22 ந் தேதி முதலில்
சிந்தாபள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்கி
அங்குள்ள ஆயுதங்களைக்
கைப்பற்றினர். அடுத்த நாளே கிருஷ்ணதேவிப் பேட்டா
காவல் நிலயத்தையும்,
24-ந்தேதி ராஜவம்மங்கி காவல்
நிலையம் ஆகியவற்றைத்
தாக்கி பலத்த
சேதங்களை ஏற்படுத்தினர்.
கைப்பற்றிய துப்பாக்கிகளை அல்லூரியும் அவரது தோழர்களும்
அதிகம் பயன்படுத்தவில்லை.
வெறும் வில்,
அம்பு, ஈட்டி
கொண்டுதான் எல்லாவற்றையும் அவர்கள் சாதித்தனர். பிரிட்டிஷ்
அரசை இச்செயல்
நிலைகுலையச் செய்ததோடு, அவர்கள் இதனை அவமானகரமான
தோல்வியாக கருதினர்.
அல்லூரியின் தலைக்கு 10,000 ரூபாய் அறிவித்தனர்.
அன்றைய தேதிக்கு
இது பெரிய
தொகைதான்.
டிசம்பர் 1922-ல் அல்லூரியையும்
அவரது குழுவினரையும்
பிடிக்க அஸ்ஸாமிலிருந்து
ரைபிள் பிரிவுப்படை
தருவிக்கப்பட்டது. பெடாபள்ளி என்னும்
இடத்தில் அல்லூரி
பதுங்கி இருப்பதாக
தகவல் கிடைத்து
சுற்றி வளைத்தனர்.
ஆனால் தோரா
சகோதரர்கள் சமயோசிதமாக அவர்களை திசைதிருப்பி அல்லூரி
மற்றும் குழுவினரை
தப்பிக்க வைத்து
அவர்களும் தப்பிவிட்டனர்.
மீண்டும் ஒரு
அவமானகரமான தோல்வியை சந்தித்தது பிரிட்டிஷ் படை.
பிரிட்டிஷ் அதிகாரி
பாஸ்டியன் மற்றும்
அவனோடு சில
உயரதிகாரிகள் வரும் வழியில் இடைமறித்து அல்லூரி
குழுவினர் தாக்கினர்.
அதில் பாஸ்டியன்
படுகாயமடைந்தான். அவனோடு வந்த மற்றொரு அதிகாரி
பலியானார். இந்த நிகழ்ச்சி பிரிட்டிஷாரிடம் பெரும்
கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூடுதல் படைகளை வரவழைத்து
தேடுதல் வேட்டையை
நடத்தியது. ஆனாலும் அவர்கள் இருக்குமிடத்தை செப்டெம்பர்
1923 வரை நெருங்க முடியவில்லை.
பழங்குடி மக்களின்
இஷ்ட தெய்வமான
காளி பூஜைக்கு
அல்லூரி வருவதாக
தகவல் கிடைத்து
அங்கு போலீஸார்
ரகசியமாக போனார்கள்
ஆனால்
எப்படியோ செய்தி தெரிந்து அங்கு அல்லூரி
வரவில்லை. உக்கிரத்தின்
எல்லைக்கேப் போனார்கள் பிரிட்டிஷார்.
1923- செப்டம்பர் 18 ஆம் தேதி
தோரா சகோதரர்களும்,
பின்னர் ஒரு
மாதம் கழித்து
அக்கிராஜுவும் கைதானர்கள். ஆனால் அடர்ந்த வனப்பகுதியில்
இருந்த அல்லூரியை
அவ்வளவு எளிதாக
பிடிக்க முடியவில்லை.
நீண்ட தேடுதலுக்குப்
பிறகு யாரோ
ஒருவன் அவர்
இருக்கும் இடத்தைக்
காட்டிக்கொடுக்க 1924 ஆம் வருடம்
மே மாதம்
7-ந்தேதி அவரைச் சுற்றி
வளைத்து பிடித்த
பிரிட்டிஷ் போலிஸார் அவரை மரத்தில் கட்டி
வைத்து அங்கேயே
சுட்டுக்கொன்றனர்.
சேகுவேரா போல்
வனங்களில் சுற்றித்
திரிந்து அந்த
மக்களுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து, அவரைப்போலவே
சுட்டுக்கொல்லப்பட்டார் அல்லூரி. அவரை
சுட்டுக்கொன்றதற்காக கணேஷ்வர ராவ்
என்ற காவல்துறை
அதிகாரிக்கு ‘ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது.
அவரது மரணத்துக்குப்பின்
எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம் ஒன்று ஹைதராபாத்தில்
உள்ள ஆந்திர
அரசின் மாநிலக்
காப்பகத்தில் வைக்கப்ப்ட்டுள்ளது. அல்லூரியின்
உருவச்சிலை விசாகப்பட்டினம் சீதம்மா ஜங்ஷனிலும், கடற்கரை
சாலையிலுள்ள பார்க் ஹோட்டல் அருகே நிறுவப்பட்டுள்ளன.
அவரது புகைப்படம்
இடம் பெற்ற
சிறப்பு தபால்
தலை ஒன்றும்
அஞ்சல் துறையால்
வெளியிடப்பட்டிருக்கிறது. அல்லூரியி வாழ்க்கை
வரலாறு தெலுங்குத்
திரை உலகின்
பிரபலமான நடிகர்
கிருஷ்ணா நடிக்க
திரைப்படமாக வெளியாகி உள்ளது.
அல்லூரியைச் சுடுவதற்கு முன் “ நன்றாகச்
சுடுங்கள். ஆனால் எனக்கு மரணம் என்பதே
கிடையாது. எம்
மக்கள் விடுதலை
ஆகும் வரை,
நீங்கள் இங்கிருந்து
துரத்தப்படும் வரை நான் மீண்டும், மீண்டும்
பிறந்து கொண்டே
இருப்பேன்” என்று சொன்னாராம். உண்மைதான் போராட்டக்காரர்கள்
எந்த தேசத்திலும்
புதைக்கப்படுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள். அல்லூரி மிக உயர்ந்த மலைப்பிரதேச
மக்களின் எளிய
இதயங்களில் விதைக்கப் பட்டிருக்கிறார்.
நன்றி: 'காக்கை சிறகினிலே' ஜூலை - 2013.
சிறப்பு...
பதிலளிநீக்குநன்றி...
மிக்க நன்றி சார் உங்கள் வலைப் பூ மிக வனப்புடன் அனுதினமும் புத்தம்புதிதாக இருக்கிறது வாழ்த்துகள்
நீக்குஒரு போராளி பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குநன்றி.
மிக்க நன்றி சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
பதிலளிநீக்கு