பேரமைதியின்
ஓசை
-நெய்வேலி பாரதிக்குமார்
“கேக்குதா சார் ? கேக்குதுங்களா எனக்கு உங்க வாய்ஸ் க்ளியரா
கேக்குதே” என்றான் ஜகன்நாதன் சப்தமாக..
மறுமுனையில் பெருமாள் “ஹலோ.. ஹலோ” என்றபடி இருந்தான்.
“நான் ஜாக் சார்.. ஜகன்நாதன்.. ஃபோலி ஆர்ட்டிஸ்ட்..” அலைபேசி இணைப்பு
தொடர்பிழந்தது.
பி.ஆர்.ஓ பெருமாள் இந்தத் துறையில் இருபது வருடங்களுக்கு மேல் இருப்பவன்.
சினிமாத்துறையின் அத்தனை சித்துவேலைகளும் அறிந்தவன். யாருடைய அழைப்பை ஏற்க வேண்டும்,
யாருடைய அழைப்பை எப்படித் துண்டிக்க வேண்டும் என்கிற வித்தை எல்லாம் தெரிந்தவன்.
அவ்வளவு முக்கியமில்லாத நபர் என்றால் இப்படியாக கேட்காதது போல துண்டிப்பான்.
யாரிடம் கேட்பது என்று புரியவில்லை. இன்று மாலை ‘ஜகஜால தந்திரன்’ படத்தின்
திரையிடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள ப்ரிவியூ திரைஅரங்கில்.... இதுவரை அழைப்பு வந்து
சேரவில்லை. அப்பா எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கட்டிலில் அமர்ந்திருந்தார்.
அவரது முகத்தில் இருந்து அவ்வளவு சுலபமாக எதையும் கண்டுணர முடியாது. காலில்
புரையோடிய ஆணி பழுத்து சீழ்பிடித்து வீங்கி இருந்தபோது ஒரு ஆப்பிளை அரிவது போல
டாக்டர் வெட்டியபோதும் அந்த சலனமற்ற முகம் அப்படியே இருந்தது.
ஒரு சிற்பியைப் போல இறைவன் நிதானமாக
அப்பாவின் முகத்தை செதுக்கி இருக்கிறான் என்று பல சமயம் தோன்றும். அளவெடுத்தது போல
நாசி, உதடு, கண்கள், கன்னங்கள் அவருக்கு. அதனால்தானோ என்னவோ பல சமயம் ஒரு சிலை
அமர்ந்திருப்பது போலவே அவர் அமர்ந்திருக்கிறார் என்று தோன்றும். அவரது
பெரும்பான்மை அசைவுகள் அவர் ஃபோலி ஸ்டூடியோவில் ஒலிக்கலைஞனாக இருக்கும்போதுதான் தெரியும்.
பாத்திரங்கள் தவறி விழும் சப்தம், குதிரைகளின் குளம்பொலி, பட படவென பறவைகள்
மரத்திலிருந்து எழும்பி வானில் பறக்கும் சப்தம், துப்பாக்கியின் ட்ரிக்கரை இழுத்து
லோட் செய்யும் சப்தம் என்று அவர் பல்வேறு அவதாரங்கள் எடுத்திருப்பார்.
பலநேரம் உதவி இயக்குனர்கள். சில நேரம்
இயக்குனர்கள் அவரோடு அமர்ந்திருப்பார்கள். அவ்வளவுதான் அவருக்கும் சினிமாத்
துறையினருக்கும் உள்ள நேரடித் தொடர்பு. பலருக்கும் அவர் பெயர் தெரியும் ஆனால்
அவரது உருவம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. இப்பவும் நிலைமை மாறவில்லை.
அப்பாவுக்கு கேட்கும் சக்தி மெல்ல மெல்ல குறையத் தொடங்கியதில் இருந்து
ஜகன்நாதன்தான் இப்பொழுது அவரது ஸ்டூடியோவில் அவரது வேலைகளை செய்து
கொண்டிருக்கிறான் ஜகன்நாதனை ;ஜாக்’ என்று அப்பாதான் அதிகம் கூப்பிடுவார். ஜாக்
ஃபோலி(Jack Foley) தான் இந்தத் துறையின் பிதாமகன்
என்பதால் அவரது பெயரை வைக்கத்தான் அப்பா ஆசைப்பட்டாராம். ஆனால் நம்மவங்க பேரு
மாதிரியே இல்லியே என்று அம்மா பிடிவாதமாக மறுக்க ஜகன்நாதன் என்று வைத்துவிட்டார்,
ஆனாலும் அவனை ஜாக் என்றுதான் அழைப்பார்.
ஜகன்நாதனும் , ஜாக்கும் வேறு வேறு நபர்கள்
என்று பல உதவி இயக்குனர்கள் இங்கு வந்து குழம்பியதுண்டு. ஆனால் அவர்களும் கூட சில
வருடங்களுக்குப் பிறகு இரண்டு பெயர்களையும் மறந்துவிட்டு பழக்கப்பட்ட மாடு வீடு
வந்து சேர்வது போல ஒலிச்சேர்க்கையின் போது ஸ்டூடியோவுக்கு வந்து “பேருதான் சார்
மறந்துடுச்சு’ என்பார்கள். மறப்பதற்கென்றே வைக்கப்படும் பெயர்களில் தன்னுடைய
பெயரும் ஒன்று என அடிக்கடி நினைத்துக் கொள்வான் ஜகன்நாதன்.
”ஜாக் அந்த அசிஸ்டண்ட் டைரக்டர் பிரான்சிஸ்..
அவன் நம்பர் இருக்கா அவனைக் கேட்டுப்பாரேன்” என்றார் அப்பா
அதுவும் சரிதான் என்று தோன்றிற்று. அவனுக்கு
போன் செய்தான்.
”சார் சொல்லுங்க”
அப்பாடி இவன் மறக்கவில்லை.
”இன்னிக்குதானே ப்ரிவியூ?”
”ஆமா சார் ஏவிஎம் ஸ்டூடியோ தியேட்டர்
வந்துடுங்க”
”அதான்... ஆனா இன்னும் இன்விடேஷன் வரலையே”
”சார் அதெல்லாம் பெருமாள்கிட்ட
ஒப்படைச்சாச்சு.. அவன் அப்படித்தான்,, அதை எல்லாம் பாக்காதீங்க.. நீங்களும்
படத்துல ஒரு முக்கியமான ஆள்..வாங்க நான் அங்கதான் இருப்பேன் பாத்துக்கலாம்”
”அப்பாவையும் கூட்டிட்டு வரலாம்னு பாக்கறேன்”
”கூட்டிட்டு வாங்க சார்.. அப்பாவை டைரக்டரோட
அப்பாவுக்கு நல்லாத் தெரியும் அவர் டைரக்ட் பண்ணின படத்துல எல்லாம் வொர்க் பண்ணி
இருக்காரே.. நம்மளை எல்லாம் யாரும் கூப்பிடலைன்னு வருத்தப்படக் கூடாது சார்..
கிருஸ்துமஸ் தாத்தா மாதிரி நாம.. அந்த டிரஸ்சுக்குள்ள நாம இருக்கறது யாருக்கும்
தெரியாது.. நாம அவங்களை சந்தோஷப்படுத்தறோம் அதுல நாமளே சந்தோஷமாயிக்கறோம்
அவ்வளவுதான்” அழைப்பைத் துண்டித்தான்
”இன்விடேஷன் மிஸ் ஆகி இருக்கும் நீங்க
வாங்கன்னு சொல்றான்”
”இன்னிக்கு இல்லையாமா?”
அவருக்கு
கேட்கவில்லை என்று புரிந்த்து.
”இல்லைப்பா.. இன்விடேஷன் அனுப்பிட்டாங்களாம்
மிஸ் ஆகி இருக்கும்னு சொல்றான்” என்றான் சப்தமாக
”ஓஹோ.. அப்படித்தான் இருக்கும்.. நாம போகலாம் அந்த நெருப்பு எரியற சீனை மட்டும்
மூணு மணி நேரத்துக்கு மேல கஷ்டப்பட்டு பண்ணினேன்னு சொன்னே அதை பாக்கணும்னுதானே
அந்த டைரக்டர் இங்க ஸ்டூடியோவுக்கு வந்தார்”
ரவிசேகர் அந்த குறிப்பிட்ட சீன் நன்றாக வந்திருக்கிறதா
என்று பார்க்க இரண்டு முறை ஸ்டூடியோ வந்து பலமுறை கரெக்ஷன் சொல்லி அதன் பிறகுதான்
இறுதியாக்கப்பட்டது
பள்ளிக்கூடம் ஒன்றை வில்லனின் ஆட்கள் எரிப்பது போன்ற காட்சி. தீயின் நாவுகள்
கொழுந்துவிட்டு எரிவதும், பள்ளியின் நாற்காலிகள், மேஜைகள், மரக்கிளைகள், எரிந்து
முறிந்து விழுவதும், பிள்ளைகளும் பெற்றவர்களும் ஆசிரியர்களும் பதறி அங்கும்
இங்கும் ஓடுவதும் கையில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீர் விசிறி அடிப்பதும், கதவுகள்,
ஜன்னல் கண்ணாடிகள் உடைவதையும் ஒளிப்பதிவாளர் தத்ரூபமாக படமாக்கி இருந்தார். படத்தின்
மையமான காட்சி அது என்று ரவி சேகர் அந்த குறிப்பிட்ட காட்சி மிக சிறப்பாக
வரவேண்டும் என்று ஒவ்வொரு பிரேமிலும் தன் கவனத்தை செலுத்தி இருந்தார்.
காட்சியில் தேவையான ஒலி சேர்க்க ரொம்பவே சிரமப்பட்டிருந்தான் ஜாக். வழக்கமாக
கிஃப்ட் ரேப்பர் பேப்பரை கைகளில் கசக்கி பிரித்து ஒலி எழுப்பினாலே அந்த காட்சிக்கு
போதுமானது. ஆனால் ரவி சேகர் துல்லியமாக நெருப்பின் கோரத்தை மக்கள் உணரவேண்டும்
என்பதற்காக. மரப்பொருட்கள் முறிவது, கூரை பற்றி கீற்று உடையும் சப்தம் இதை எல்லாம்
அவர் நினைக்கும் அளவு கொண்டு வர பல புதிய உத்திகளை கையாள வேண்டி இருந்த்து. எல்லாம்
முடிந்தபிறகு ’எக்ஸலண்ட் எக்ஸலண்ட்’ என்று ஜாக்-ஐ ரவிசேகர் அணைத்துக் கொண்டபோது
கூச்சமாக இருந்தது
பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்க
ஜாக்-குக்கு ஆசையாக இருக்கும். திரையில் பார்க்கும் பல நட்சத்திரங்கள், பாடகர்கள்,
இசை அமைப்பாளர்கள் இப்படி சகலரையும் நேரடியாக பாக்கலாம். ஆனால் அப்பாவுக்கு அது
பிடிக்காது. ;தியேட்டர்ல போயி மக்களோட மக்களா பாக்கணும் அதுதான் த்ரில்; என்பார். சின்ன
வயசில் ஒன்றிரண்டு முறை பிரிவியூவுக்கு அப்பா கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்.
பெரியவனானதும் அழைத்துப் போக மறுத்துவிட்டார். அப்பா ஸ்டூடியோவுக்கு வருவதை
குறைத்த போது அப்பாவின் உதவியாளர்கள் சேது, புருஷோத்துமன், இளங்கோ ஆகியோர்தான் அவரது ஸ்டூடியோவில் வேலை செய்தார்கள். ஆனால்
அவர்களும் அப்பாவைப் போல பிரிவியூக்கு எல்லாம் வரமாட்டார்கள்.
அவர்கள் தனித்தனியாக படங்களுக்கு வேலை செய்ய போய்விட்ட பிறகு ஜாக் மட்டும் தனியே
படங்களுக்கு இந்த வேலைகள் செய்தாலும் அவை எல்லாம் சிறிய பட்ஜெட் படங்கள் என்பதால்
சவாலான வேலைகள் அவற்றில் இல்லை. மசாலா படங்கள்,
பெரிய பட்ஜெட் படங்களில்தான் நிறைய வேலைகள் இருக்கும். ‘ஜகஜ்ஜால தந்திரன்’
பெரிய நடிகர் நடிகைகள் நடிக்கும் பிரம்மாண்ட படம். ஐந்து நிமிடங்கள் வரக்கூடிய
அந்த காட்சிக்காக ஜாக் மூளையை கசக்கி பிழிய வேண்டி இருந்தது.
ஒலிகளுக்கும் அவனுக்கும் ஒரு நெருக்கமான உறவு வந்துவிட்டது போலத்தான்
தோன்றியது. காற்றும், அவனும் பல
பொருட்களை அசைத்து அசைத்து பார்த்தபடி இருந்தனர். அவனது செவிகள் முன்னெப்போதையும்
விட இப்பொழுது மிகக் கூர்மையாகின. உலகம் இத்தனை சப்தங்கள் நிரம்பியதா என
அதிசயித்துப் போனான். இலைகள் அசைவது கூட அவனுக்கு துல்லியமாக்க் கேட்டது. சுவரில்
அடையும் ஒட்டடைக்கு கூட மெல்லிய ஒலி இருப்பது போலவே தோன்றியது.
காட்சியையும் ஒலியையும் இணைப்பது உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் ஏற்றுவது
போல இருந்தது அவனுக்கு. மிகச் சரியாக கலக்கப்பட்ட மதுவைப் போல போதை ஏற்றியது.
பொருத்தமான சப்தங்களை உருவாக்க அப்பா கண்டுபிடித்த பொருட்கள் ஒலிக்கலைஞர்கள்
இடையே பிரபலமாயின. வைரம் ஸ்டைல் என்று அவற்றுக்கு பெயரும் கிடைத்தது. அப்பாவைப்
போலவே புதிது புதிதான ஒலிச் செல்வங்களை உருவாக்கி
தன் பெயரை அவற்றின் ஒலியில் கலந்துவிட வேண்டும் என்பதே அவனது லட்சியமாக
இருந்தது. காணும் பொருட்களில் எல்லாம், செவிகளை வருடும்
ஒலிகளை கண்டடையும் தணியாத தாகம் அவனுக்குள் கிளர்ந்தபடியே இருந்தது.
சாந்திக்கும் அவனுக்கும் இதில்தான் அடிக்கடி சச்சரவு எழும். பிள்ளைகள்
எதையாவது கையில் எடுத்துக்கொண்டு கதவிலோ சுவரிலோ தேய்க்கும்போது இவன் சட்டென
உற்சாகமாகி “இன்னும் கொஞ்சம் பலமா என்றோ அங்க இல்லே அந்த தகரத்திலே என்றோ
அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல கிளம்பினால் அப்படியே ருத்ர தாண்டவமாடிவிடுவாள்
சாந்தி. கதவினை சாத்தும் சப்தம், தாழ்ப்பாளை மூடித் திறக்கும் சப்தம், பாத்திரங்களை உருட்டும் சப்தம் தரையில் எதையாவது
தர தரவென இழுக்கும் சப்தம் இவை எல்லாம் அவளுக்கு ஆகவே ஆகாது. சரியான கிறுக்கு
குடும்பம் என்று பாடித் தள்ளிவிடுவாள்.
அப்பா தயாரானதும் அவரை பின்சீட்டில் ஏற்றிக்கொண்டு பைக்கில் நிதானமாக
கிளம்பினான். ஸ்டூடியோவுக்குள் நுழையும் போது எதற்கும் இருக்கட்டும் என்று வாசலில்
இருந்த செக்யூரிட்டிக்கு வணக்கமும் இல்லாத தயக்கமும் தெரியாத கையாட்டல் ஒன்றை
அளித்தான். அவர் நிதானித்து யோசிக்கும் முன் வண்டி சாமர்த்தியமாக உள்ளே நுழைந்தது.
தன் முதுகில் தானே தட்டிக் கொள்வது போல நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தியேட்டர் அருகே சென்ற போது திரையில் பார்த்த
ஒன்றிரண்டு முகங்கள் அங்கு தெரிந்தன. எந்த நடிகரையாவது சரியாக அடையாளம்
கண்டுபிடித்துவிட்டால் சட்டென குதூகலமானது மனது. இசை அமைப்பாளர் இமயவரம்பன் நின்று
கொண்டிருந்தது தெரிந்தது. குபீர் என ஒரு மகிழ்ச்சி வயிற்றிலிருந்து எழும்பி கண்கள்
வழியே எட்டிப் பார்க்க துடித்தது. இசைப் பிரளயம் என்று அவருக்கு ஒரு அடை மொழி
தந்திருப்பது பொருத்தமாகவே பட்ட்து, அவரது இசை அத்தனை துள்ளல்.. அத்தனை புதிதாக
இருக்கும், மனிதர் இருக்கும் இடமும் பிரளயமாகத்தான் தெரிந்தது. நிமிடத்துக்கு ஒரு
முறை வெடித்து சிரித்தார், அவரைச் சுற்றி நின்ற கூட்டமும் கொலேரென சிரித்தது.
பக்கத்தில் இருக்கும் நபரை அவரது முதுகில் தட்டி தட்டி வேறு சிரித்துக்
கொண்டிருந்தார், ப்ப்பா எத்தனை பெரிய கலைஞர். போவதற்குள் அவருடன் ஒரு செல்பி
எடுத்துவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
இயக்குனர் ரவிசேகர் தனது பென்ஸ் காரில் வந்து இமயவரம்பன் அருகில் நிறுத்தி
இறங்கிக் கொண்டார். இருவரும் அன்பு தெறிக்க தழுவிக் கொண்டனர். அவர்கள் இருவரையும்
கூட்டம் சூழ்ந்தது. இந்த சமயத்தில் ரவிசேகர் அருகில் சென்றால் அவர் அறிமுகப்படுத்த
வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே அவரருகே அப்பாவையும் அழைத்துக் கொண்டு
நடந்தான்.
ஆனால் அவன் நெருங்கும் சமயம் ஏதோ போன் வர ரவிசேகர் பேசிக்கொண்டே
தியேட்டருக்குள் நுழைந்தார்.. தன்னை அவர் பார்த்துவிட்டார் என்றுதான் ஒரு கணம்
தோன்றியது, ஆனால் அவர் சரியாக கவனிக்கவில்லை என்றும் தோன்றியது இமயவரம்பனை யாரோ
ஒரு பட்டோடபமான பெரும்புள்ளி நெருங்கி ஆக்ரமித்துக் கொண்டார். சிறிது நேரம்
அவர்கள் முன் நின்றுவிட்டு என்ன செய்வதென்று அறியாமல் தியேட்டருக்குள் நுழைந்தான்.
ஜாக்கிரதையாக ஆறு வரிசைகள் தள்ளி அப்பாவை அமரவைத்து அவனும் உட்கார்ந்து கொண்டான்.
சுற்றிலும் ஒரு பார்வை பார்க்க ஏதோ கல்லூரிக்குள் நுழைந்துவிட்ட பிரமை
ஏற்பட்டது. இருபதில் இருந்து முப்பது வயதுக்குள்ளான இளசுகள் விதவிதமான ஹேர்
ஸ்டையிலுடன் மிக இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டுகளுடன் காணப்பட்டனர். அவனும்
அவனுடைய அப்பாவும் மட்டுமே மிக அதிகபட்ச வயதுடன் இருப்பது போல தோன்றியது. தொழில்
நுட்பத்தின் அதீத வளர்ச்சியில் வயதானவர்களுக்கான இடம் மெல்ல மெல்ல நழுவிக்
கொண்டிருப்பதாகவே நினைத்தான். அந்த அந்நியமான சூழல் அசூசையாகப் பட்டது. வந்திருக்க
கூடாதோ என்று ஒரு கணம் தோன்றியது. பளீர் என விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது வேறு
அசௌகர்யமாக இருந்தது. சீக்கிரம் அணைத்துவிட்டால் தேவலாம் என்று தோன்றியது,
அவனது வரிசைக்கு அருகில் நின்று இவர்களையே குறு குறுவென பார்த்தான் ஒரு
இளைஞன். ஒரு வேளை அப்பாவிற்கு அறிமுகமானவனாக இருப்பானோ?.
”:எக்ஸ்க்யூஸ் மீ.. நீங்க யாரு?”
“ஃபோலி ஆர்ட்டிஸ்ட் ஜாக் .. இது என்னோட அப்பா வைரம் இவரும் ஃபோலி
ஆர்ட்டிஸ்ட்தான்”
“பார்டன்” புரியாமல் அவர்களையே பார்த்தான்.
“ஸ்பெஷல் சவுண்ட் எபக்ட்பா... நாங்கெல்லாம் ஆதிக்கலைஞர்கள். .பேசுற படமெல்லாம்
வர்றதுக்கு முன்னாடியே உள்ள கலைப்பா எங்களது”
அதற்குள் பிரான்சிஸ் வந்துவிட்டான்.
“அருண் .. நம்ம டைரக்டர் இருக்காருல்லே அவங்க அப்பாவோட கெஸ்ட். “ என்று ஃபிரான்சிஸ் ஆதரவாக சொல்ல
“ஓ சாரி“ என வேண்டா வெறுப்பாக சொல்லிவிட்டு நகர்ந்தான்
“சார் ஒண்ணும் நினைச்சுக்காதீங்க.. தகர டப்பா கொஞ்சம் சவுண்ட் விடத்தான்
செய்யும்.. ஆஹா.. ஹீரோ வந்துட்டார்” என்று
அவன் பாய்ந்து நகர
திரும்பிப் பார்த்து நிதானிப்பதற்குள் ஒரு மின்னலைப் போல ஹீரோ முன் வரிசைக்கு
சென்று அமர்வதைக் காண முடிந்தது. அவருக்காகவே காத்திருந்தது போல விளக்குகள்
அணைக்கப்பட்டன. திரையில் படம் ஒரு மாபெரும் ஒலிக்கலவையுடன் துவங்கிற்று.
தியேட்டரின் ஒலி அமைப்பு மிக நவீனமாக இருந்ததால் பிசிறில்லாமல் ஒலி தன்
பிரம்மாண்டத்தை அரங்கு முழுவதும் நிரப்பியது மிக திருப்தியாக இருந்தது
ஜகன்நாதனுக்கு.
ஹீரோ முதல் காட்சியில் தோன்றும்போதே கண்ணாடிக் கதவை உடைத்துக் கொண்டுதான்
ரசிகர் முன் தோன்றுவார். அவரது கை பட்டதும் சில்லு சில்லாக பெயர்ந்து விழும்
துண்டுகளின் ஓசையை ’ஜாக்’கினால் தன் காலருகே உணர முடிந்தது. தியேட்டரில் எழும்பிய
கைத்தட்டல் ஒலி ஹீரோவுக்குத்தான் என்றாலும் தனக்கான கைத்தட்டல் அதனுள் ஒளிந்திருப்பதாக
சந்தோஷப்பட்டான். அருகில் இருந்த அப்பாவின் தோளைத்தட்டி அந்தக்காட்சியை அவருக்கு
உணர்த்த முயன்றான். அறுநூறு படங்களுக்கு மேல் வேலை செய்தவர் இல்லையா? அவருக்குத்
தெரியாதா ஒலியின் நிழல்.? அவர் கண்களால் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு காட்சியிலும் ஜாக்கின் பங்கு ஏதோ ஒரு நுட்பமான துகளில் அணுவிலும்
அணுவாக கலந்திருப்பதை அவன் மட்டுமே முழுமையாக அடையாளம் கண்டிருப்பான்.
எப்பொழுதாவது கேட்கும் அவனது அப்பா வைரத்தின் காதுகள் இப்பொழுது கேட்கக்கூடாதா என
ஏங்கிற்று மனது.
இடைவேளைக்கு முன்னதாகவே அந்த நெருப்புக் காட்சி வந்துவிடும்.
அந்தக்காட்சிக்காக சுற்றும் பூமியை ஒரு கணம் நிறுத்த முடிந்தால் எத்தனை நன்றாக
இருக்கும் என நினைத்துக்கொண்டான். இருள் நிரம்பியிருந்த அரங்கில் ஆசுவாசமாக தன்னை
அமர்ந்திருந்த நாற்காலியில் இருத்திக் கொண்டான். ஏசியின் விர் சத்தம்
எல்லாவற்றையும் தாண்டி அவன் செவிகளை வந்தடைந்தது. குளிரின் ஒலி என்று தனக்குள்
சொல்லிக்கொண்டான்.
அவன் எதிர்பார்த்திருந்த அந்த நெருப்புக்காட்சி வர இருந்தது. வில்லனின் ஆட்கள்
கைகளில் பந்தங்களோடு பள்ளிச் சுவரின் அருகே பதுங்கி பதுங்கி வந்து
கொண்டிருந்தார்கள். பின்னணி இசை எதுவும் இல்லாமல் கம்மென்று நகர்ந்து
கொண்டிருந்தது காட்சி. கல்லூரியில் படிக்கும் போது கமால் சார் ‘ஐ வான்ட் பின்
ட்ராப் சைலன்ட் இன் மை கிளாஸ்” என்கிற குரல் ஏனோ இப்பொழுது நினைவுக்குள் வந்து
போனது.
பந்தத்தை கூரையில் வைத்த உடனேயே “ஆ... “ என்கிற பெண்குரல் சோக ராகம் பாட கூடவே
ஒற்றை புல்லாங்குழல், அதன் பிறகு வயலின் என்று ஒவ்வொரு கருவியாக இணைய நெருப்பு தக
தகவென எரிய அதன் தழல்கள் உயர அதற்கேற்றார் போல இசையும் உச்ச ஸ்தாயியை நோக்கி
நகர்ந்தது. ஜாக் இணைத்திருந்த ஒலியின் சுவடே இல்லை. முற்றிலுமாக நீக்கி விட்டு
ஐந்து நிமிடங்களுக்கு இசையால் ஆக்ரமித்திருந்தார் இமயவரம்பன். தனது தீம் இசையின்
பிரவாகம் எப்படி விழுந்து தெறிக்கிறது என்பதை அறிய, முன் வரிசையில் இருந்த இமய வரம்பன் ஒருகணம் பெருமிதத்துடன்
பின்பக்கம் திரும்பிப் பார்க்க, அரங்கிலிருந்த கூட்டம் கைத்தட்டல்களால் அவரது
இசையை அங்கீகரித்தது. ‘ஜாக்’கின் இதயம்
திகு திகுவென தீப்பிடித்து எரியும் சத்தமும், அவனது மூன்று மணிநேர உழைப்பு கரிந்து
காற்றில் அதன் சாம்பல், பறவையின் இறகு போல பறக்கும் சத்தமும் அதிரும் ஒலியில்
யாருக்கும் கேட்கவே இல்லை. பசியோடு இருக்கும்
குழந்தையின் கையில் இருந்த தின்பண்டத்தை தட்டிப் பறித்து தன் கோர பற்களில் குருதி
வழிய வழிய கடித்து தின்னும் குரூர பாவனையை
இமய வரம்பனின் முகத்தில் பார்க்க முடிந்தது.
அப்பாவின் முகத்தை மிகுந்த தயக்கத்துடன் இருளை ஊடுருவி பார்க்க முயன்றான் .
அந்த இருட்டிலும் அவரது சலனமற்ற முகம் எவ்வித உணர்வுகளையும் பிரதிபலிக்காமல்
அமைதியாக இருந்தது. பளிச்சென்று விளக்குகள் எரிந்து வெளிச்சம் அரங்கினை
ஆக்கிரமித்து கொடிய மிருகம் போல இருளை விழுங்கி விட்டது. அரங்கில் இருந்த அத்தனை
விளக்குகளும் இவனையே கேலியாக பார்ப்பது போல தோன்றியது.. அப்பாவை அழைத்துக் கொண்டு
வெளியே வந்தான். மிகச்சரியாக எதிரே இயக்குனரும் இசை அமைப்பாளரும் எதையோ பேசியபடியே
கதவருகே வந்தனர். அவர்களை பார்ப்பதை தவிர்த்துவிட்டு நடக்கத் தொடங்கினான்.
“வண்டியை எடுத்துட்டு வர்றேன் வீட்டுக்கு போகலாம்பா” என்று சொல்லிவிட்டு விறு
விறு என்று பார்க்கிங் நோக்கிச் சென்றான். வழியில் நின்றிருந்த ஹீரோயின்,, துணை
நடிகர்கள், இளைஞர்கள் எவருமே அவன் கண்களுக்கு தெரியவில்லை. டைரக்டர் தன்னை
நிச்சயம் பார்த்திருக்க வேண்டும். ஆனாலும் பார்க்காதது போல சென்றதற்கு அந்த
தீப்பிடிக்கும் காட்சியில் கருகிப்போன தனது ஒலியை பற்றி எதுவும் சொல்ல வேண்டி
இருக்கும் என தவிர்த்தது போலவே தோன்றியது. ஒருவேளை அழைப்பிதழ் வேண்டுமென்றே தவற
விடப்பட்டிருக்கலாம்.
வண்டியை எடுத்துக் கொண்டு அரங்கின் வெளியே தயாராய் நின்றுகொண்டிருந்த அப்பாவை
ஏற்றிக்கொண்டு கிளம்பினான். அப்பாவுக்கு கேட்டிருக்கலாம், கேட்காமலும்
போயிருக்கலாம். இனி தன் படைப்பு எப்படி வந்திருக்கிறது என்று ஸ்டுடியோ தவிர வேறு எங்குமே பார்க்க வேண்டாம் என்று மூர்க்கமாக
யோசித்தான்..
பைக்கின் தட தட சத்தத்தின் ஊடே ‘ப்ளக்’ ப்ளக் என்ற சப்தம் மெலிதாக கேட்டபடியே
இருந்தது. போனமுறை மெக்கானிக்கிடம் பிரேக் சரி செய்ய விட்ட பொழுது ட்ரையல்
ரன்னுக்காக மெக்கானிக்கே ஓட்டி வந்த சமயம், இப்படி ப்ளக் ப்ளக் என்று சப்தம்
வந்தால் ஆயில் சீல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்ன ஞாபகம் வந்தது.
நாளைக்கு செல்வத்திடம் வண்டியை விடவேண்டும் .என நினைத்துக் கொண்டான். கூடவே இனி
ஒலிச் சேர்க்கைக்காக வரும் படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் பைக்கின் ஆயில் சீல்
போய்விட்டதாக வசனம் பேசினால் அந்த சப்தத்தை சரியாக பதிவு செய்யவேண்டும் என்பதற்காக
பைக்கிலிருந்து வந்த அந்த ஒலியை கூர்ந்து
கவனிக்கத் தொடங்கினான்.
ப்ளக்
ப்ளக்...
பலக்.. ம்ஹூம்
ப்ளக்தான்
ப்ளக்.....
ப்ளக்...
.
..
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>