வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பூதத்தாள்வார்

 


பூதத்தாள்வார்

நெய்வேலி பாரதிக்குமார்

 (ரியாத் தமிழ்ச் சங்க சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றச் சிறுகதை 

 கண்ணாமூச்சி சிற்றிதழில் பிரசுரமான சிறுகதை)

     மீனம்பட்டி என்று இந்த ஊருக்கு ஏன் பெயர் வந்தது என்று திருமால் யோசித்துப் பார்த்தார் ஒன்றும் புரிபடவில்லை. வெளியில் எட்டிப் பார்த்தபொழுது மணி பத்தரைக்கே கானல் நீர் வெய்யிலில் மின்னுவது தெரிந்தது. ஏரியோ குளமோ குட்டையோ கூட இல்லாத ஊர் இது. தேங்கும் மழைநீர் கூட வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் காற்றில் ஆவியாகிப் பறந்துவிடும் பேய் வெயிலடிக்கும் ஊர். வெய்யில் ஏற ஏற உடம்பின் வெப்பம் கூடும். மேலே படிந்திருக்கும் வெடி மருந்துக்கும் தரையில் குவிக்கப்பட்டிருக்கும் வெடி மருந்துக்கும் அவ்வளவாக ஆகாது. ஒரு சிறு பொறியின் சீற்றத்தில் பற்றிக்கொள்ளும் தீவிரத்துடிப்புடன் இருக்கும். அதற்குள் எத்தனை கிலோ மருந்தைக் கலக்க முடியுமோ அத்தனை கிலோ கலந்துவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

.     அவர்களது பூர்வீக வீடு பூதப்பாண்டியில் இருந்தது. நாகர்கோவிலில் இருந்து பத்து கிமீ தூரத்தில் பூதப்பாண்டி இருக்கிறது தென்னையும் வாழையும் அந்த ஊருக்கு பச்சை வண்ணத்தையும் குளிர்ச்சியையும் ஏற்றி இருப்பது மேலே சில்லெனப்படும் காற்றில் உணர முடியும். பாட்டி வீடு பள்ளிக்கூடக் காலத்தில் விடுமுறைச் சரணாலயம். பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள் என வீடு அதகளமாக இருக்கும். எல்லாம் பத்து பனிரெண்டு வயது வரைதான். அப்பா வேலைப்பார்த்த அரிசி ஆலை, முதலாளியின் குடும்ப வாரிசுகளின் சொத்துப் பிரச்சினை காரணமாக மூடப்பட்டப்பின்னர் வயிற்றுப்பாட்டுக்காக சிவகாசிக்கு அவர்களது குடும்பம் இடம் பெயர்ந்தாயிற்று.

     முன் நெற்றியில் வடியும் வியர்வையை அருகில் வைத்திருந்த காகிதத்துண்டால் மிகக் கவனமாக துடைத்துக் கொண்டார். ஒரு சொட்டு வியர்வை நழுவி உதட்டின் மீது பட்டுவிட்டால் போச்சு.. வெடி உப்பு, பொட்டாசியம் நைட்ரேட் ,999 பவுடர் கலவை வாய்க்குள் போய்விடும். அவர் பார்க்கிற பிழைப்புக்கு தாகமெடுத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியாது 

     தன்னுருவம் எப்படி இருக்கிறது என்று எதிரில் இருப்பவரைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். எதிரே இடுப்பில் அவரைப்போலவே ட்ரவுசருடன் இருதயராஜ் குனிந்தத் தலை நிமிராமல் பவுடரைக் கலந்து தனியே பிரித்து வைத்துக் கொண்டிருந்தார். அவரது உடல் முழுக்க வெடிமருந்துக் கலவை அலுமினிய பெயின்ட் அடிக்கப்பட்டது போல வெண்ணிறத்தில் காட்சியளித்தது. கண்கள், உதடுகள் தவிர உடம்பின் சகல பாகமும் அலுமினியத்தூள் போர்த்தியிருந்தது. ஒரே இடத்தில்தான் வேலை என்றாலும் இந்த கெமிக்கல் ரூமில் (வேதியல் அறை) ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாது. வெடிக்கடைகளில் மிகவும் இளக்காரமாக கருதப்படும் பிஜிலி வெடிகளுக்குத்தான் வேதியல் அறையில் பெரும்பாடு படவேண்டும்.

     வேதியல் அறை. அளவில்  பத்துக்கு பதினைந்துதான் இருக்கும். ஆனாலும் அந்த அறைக்கு நான்கு வாசல்கள். நான்கு கதவுகள். கதவுகளுக்குப் பக்கத்தில் அமர்ந்துதான் வெடிமருந்து கலக்கவேண்டும். அப்பொழுதுதான் ஏதேனும் அசம்பாவிதம் என்றால் எழுந்து அப்படியே ஓட வசதியாக இருக்கும். ஒவ்வொரு வெடி நிறுவனத்திலும் வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறையோ ஏதாவது விபத்து நடக்கும். சிலசமயம் பொருள் சேதாரம் மட்டும் இருக்கும். சில சமயம் உயிர்ப்பலியும் நடக்கும்.

     இருதயராஜின் மூக்கின் அருகே ஒரு வியர்வைக் கோடு நகர்ந்து உதட்டை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. வேலையின் மும்முரத்தில் கவனிக்காமல் இருதயராஜ் மருந்துக் கலவையில் கைகளை அளைந்து கொண்டிருந்தார். வாயைத் திறந்தால் பவுடரின் தூசி வாய்க்குள் போய்விடும். கைகளை தரையில் வேகமாகத் தட்டினார் திருமால். நல்லவேளையாக நிமிர்ந்து பார்த்தார் இருதயராஜ். மூக்கின் அருகே கைவைத்து சைகைக் காட்டினார் திருமால். சட்டென காகிதத்துண்டை எடுத்து வேகமாகத் துடைத்தார் இருதயம். அப்பாடி என்று தலையை ஆட்டி மகிழ்ச்சியைப் புலப்படுத்தினார் திருமால்.

     ஒரு ஊமையைப்போல சைகையில்தான் அங்கு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியும். கண்களை அகலமாகக் கூட விரித்து பெருமகிழ்ச்சியை தெரிவிக்க முடியாது. தலையை ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேலே ஆட்டவும் முடியாது. ஆனால் மிகக்கூரிய கேட்கும் திறன் இருக்கவேண்டும். சிறுபொறியின் ஒலியை கவனித்துக் கேட்டுவிட்டால் அசம்பாவிதம் எதுவும் நிகழ்வதற்குள் தப்பி ஓடிவிடலாம்.

அங்கிருக்கும் எட்டு மணிநேரமும் மனம்தான் அவர்களுக்கு உற்ற நண்பன். மனைவி பிள்ளைகளிடம் பேசுவதைக் காட்டிலும் அதிகம் மனதோடுதான் பேசி இருக்கிறார் திருமால். மனம் நகைச்சுவையாக எதையும் அசை போட்டுவிடக்கூடாது என்பதால் இளமைக்காலத்தை நினைவில் கொண்டுவராமல் கவனமாக இருப்பார். அவரது இளமைக்காலம் கேலியும் கலாட்டாக்களும் நிரம்பியது. நினைத்துப் பார்த்தால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் குபீரென சிரிக்க வைத்துவிடும்.

தன்னை அறியாமல் சிரித்துவிட்டால் உதடுகள் மூடும் போது வெடிமருந்தும் உள்ளே போய்விடும். மனம் குதூகலிக்கும் எந்த நிகழ்ச்சியும் மனக்கண்ணுக்கு வராமல் கவனமாகத் தடை செய்துவிடுவார் திருமால். கடனை எப்படி அடைப்பது. வரும் தீபாவளிக்கு யாரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்குவது என்று மிகவும் கவலையுடன் யோசித்துக் கொண்டிருப்பார். ஒரு தீர்வும் கிடைக்காது என்றாலும் புன்னகை போய்விடும் முகத்திலிருந்து. சிரிப்பதால் வாய் திறக்கும் அபாயத்திலிருந்து தற்காலிகமாகத் தப்பிவிடலாம்.  

வீட்டுக்கு மகளும் இரண்டு வயது பேத்தியும் இன்று மதியம் வருகிறார்கள். வள்ளியை கட்டிக்கொடுத்த காலத்தில் இருந்து சென்னைவாசி ஆகிவிட்டாள். மாப்பிள்ளைக்கு கிண்டியில் வேலை. எப்பொழுதோ ஒரு முறைதான் மகளையும் பேத்தியையும் பார்க்கமுடியும். கடைசியாக போன ஆகஸ்ட்டில் பார்த்தது. இப்பொழுது செப்டம்பர்  மாதம். கிட்டத்தட்ட பதினோரு மாதம் ஆகிவிட்டது. இன்று சனிக்கிழமை வாரச்சம்பளத்தை முதலாளி போட்டுவிடுவார். அதிலெல்லாம் எப்பொழுதும் குறைவைப்பதே இல்லை தாணுமலை முதலாளி. அதனால்தான் வேறு கம்பெனிக்கு அத்தனை சுலபத்தில் இங்கிருந்து யாரும் போக மாட்டார்கள்.

வள்ளி வருகிறாள் என்பதால் இன்னிக்கு பெருமாளுக்கு தளியல் போடுவதாக ஜெயம் சொல்லி இருந்தாள். அரை நாள் லீவு போட்டுவிட்டு வர முடியுமா என்று எப்பொழுதும் கேட்கிற கேள்வியை கேட்டுவைத்தாள் ஜெயம். அவளுக்கே தெரியும் அது சாத்தியமில்லை என்று. எப்பொழுதும் சனிக்கிழமை மாலையில்தான் முதலாளி சம்பளக் கவருடன் வருவார். அதைவிட்டால் திங்கட்கிழமை மாலை ஆகிவிடும். வார தண்டல்காரன் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வீட்டுக்கு வந்து வாகனத்தின் ஒலியை காது கிழியும்படி அழுத்தி சப்தமிடுவான். அது அவனது தந்திரமிக்க பாவனை. பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும்படி ஒலிக்க வைத்தால் அவமானம் தாங்க முடியாமல் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்கள் என்றுதான் அவனது வாகனத்தின் பிளிறும் ஒலியை அலறச் செய்வான்.

“என்னிக்கு மத்தியான சாப்பாடு சாப்பிட்டேன் இன்னிக்கு சாப்பிட..? வள்ளி வந்தப்புறம் நீங்க கும்பிடுங்க. ராத்திரிக்கு வந்து சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்லிவிட்டுத்தான் வேலைக்கு வந்திருந்தார் திருமால்.

மேலே ஒட்டியிருக்கும் வெடிமருந்தை சுத்தமாக கழுவ வேண்டும் என்றால் தேங்காய் எண்ணையை சலும்பர உடலில் தடவி சோப்பு போட்டு தேய்த்துக் குளிக்க வேண்டும். நிர்வாகம் வேலைநேரம் முடிந்த பிறகு இரண்டையும் கொடுத்துவிடும். ஆனால் அதற்குப் பிறகு கெமிக்கல் அறைக்குள் அவர் அனுமதி இல்லை. அடுத்த செட் ஆள் வந்துவிடுவார். கம்பெனியில் அதிக சம்பளம் கெமிக்கல் ரூமில் மருந்து கலப்பவர்களுக்குத்தான். பாதிநாள் சம்பளம் போனால் கையைக் கடிக்கும் என்பதால் மதியம் சாப்பிட  கெமிக்கல் அறையை விட்டு வெளியே வருவதில்லை.

தாகமெடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டுமே என்பதற்காகத்தான் காலை உணவை காரமாக சாப்பிட மாட்டார் திருமால். பழைய சோற்றைக் கூட நீராகாரத்தை இறுத்து வெறும் சாதத்தை மட்டும் உருட்டி சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவார். தண்ணீர் ஆகாரம் என்றால் அடிக்கடி ஒண்ணுக்குப் போகவேண்டும். தவிர்க்க முடியாத சமயத்தில் கைகளை மட்டும் எண்ணை மற்றும் சோப்புப் போட்டுக் கழுவிட்டு கழிவறை சென்று வருவார்.

ஞாயிற்றுக்கிழமையில் கூட மதியம் அவர் சாப்பிடுவதில்லை. எவ்வளவு வற்புறுத்தினாலும் “வேணாம் ஜெயம்.. பழகிட்டா அப்புறம் கெமிக்கல் ரூமிலேயும் பசிக்க ஆரம்பிச்சிடும்” என்று மறுத்துவிடுவார். அவரைப் பொறுத்தவரையிலும் மதியம் மிஞ்சிய சாம்பார்தான் இரவு சாப்பிடும்போது அவர் ருசிக்கும் சாம்பாராக இருக்கும்.

பேத்திக்கு சோன்பப்டி கேக் என்றால் ரொம்பப் பிடிக்கும். வள்ளிக்கு சோளக்கதிர் என்றால் இஷ்டம். வேகவைத்து கொடுத்தால் நினைப்பு வரும் போதெல்லாம் அடுப்பங்கரைக்குப் போய் சாப்பிடுவாள். மனதுக்குள் குறுகுறுப்பு நிரம்பி அவரது கண்களில் கொப்பளித்தது. ஆர்வம் மிகுதியாகி விரலால் வெடி மருந்து மீது

‘இன்றைக்கு சம்பளம் உண்டுதானே?’ என்று எழுதிக் கேட்டார்.

பதிலுக்கு இருதயராஜ் ‘ஆமாம், ரவி லெதர் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்’ என்று எழுதினார்.

அவர்களைப் பொறுத்தவரை அதுதான் சமிக்ஞை. மேனேஜர் ரவி சனிக்கிழமை காலை பெரிய லெதர் பையை எடுத்துக் கொண்டு கம்பெனி ஜீப்பில் கிளம்பிவிட்டால் அன்றைக்கு சம்பளம் உறுதி. அதன் பிறகு ஊரிலிருந்து வரும் விருந்தாளிகள் தின்பண்டம் வாங்கி வருவார்களே என்று பிள்ளைகள் பார்த்துக் கொண்டு இருப்பது போல ஆவலோடு பையோடு வரும் ரவிக்காக வாசல்படியை பார்த்தபடியே வேலை செய்வார்கள். பெரும்பாலும் இது தவறுவதே இல்லை. மற்ற சில கம்பெனிகளில் திங்கட்கிழமையோ சமயத்தில் செவ்வாய்க்கிழமை வரை கூட தாமதமாகும்.

உடம்பெல்லாம் நம நமவென்று அரித்தது. ஆசைத் தீர சொரிந்தால். நகக்கண்களில் மருந்து ஏறிவிடும். அருலிருந்த காகித அடுக்கில் இருந்து இன்னொரு காகிதத்துண்டை எடுத்து அரிக்கிற இடத்தில் எல்லாம் தேய்த்தார் திருமால். ஃபேன் கூட இல்லாத ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அறை என்பதால் வெய்யிலின் சூடு உடம்பெங்கும் பரவித் தோல் முழுக்க நெருப்பு பரவுவது போல எரிந்தது. வெளிக்காற்று வேகமாக வீசினால் கூட மருந்துத் தூள் பறக்க ஆரம்பித்துவிடும். இதில் எப்படி ஃபேன் போடமுடியும். மேனேஜர் ரவி அறையில் மட்டும் இரண்டு ஃபேன்கள் உண்டு. ஒன்று தலைக்கு மேலே சுழலும் இன்னொன்று டேபிள் ஃபேன்.

கெமிக்கல் ரூமில் இருந்து வெளியே வந்து குளித்துவிட்டு ஏதாவது சந்தேகம் கேட்பது போல ரவி ரூமில் சிறிது நேரம் நிற்பார் திருமால். அப்பொழுது கிடைக்கும் ஃபேன் காற்று அமிர்தமாக இருக்கும்.

தண்ணீர் குடிக்காமல் இருந்து பழகியதில் காலைக்கடன் கழிப்பது இடுப்புக்கு கீழே ஒரு யுத்தம் நடத்துவது போல இருக்கும். அன்று நல்லபடியாக வெளியே போய்விட்டால் அன்றைய தினம் பிரச்சினை இல்லாமல் போய்விடும் என்று நினைத்துக்கொள்வார் திருமால். நிர்வாகம் வாழைப்பழங்களை வேலை முடிந்ததும் தருவார்கள். உடல் வெப்பத்தைத் தணிக்கத்தான் என்றாலும் வயிற்றுப் பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கும். ஆனால் எத்தனை நாள்தான் இப்படி தண்ணீர் குடிக்காமல் பகல் பொழுதைக் கழிப்பது?

“திருமால்” என்ற அழகரின் குரல் கேட்டது. வாசல்படித் தாண்டி உள்ளே வரமாட்டார்கள். எட்டி நின்றே குரல் கொடுப்பார்கள். மருந்தின் நெடி பழக்கம் இல்லாத சிலருக்கு மூச்சடைக்கும்.

திருமால் எழுந்து காகிதத் துண்டுகளில் கைகளைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

“உன் பொண்ணு ஊரிலேர்ந்து வந்திருக்காம். ஊர்லேர்ந்து  வந்து இறங்கி வீட்டுக்கு உள்ள போன உடனே உங்க சம்மந்தியோட அண்ணார் காஞ்சிபுரத்துல இறந்துட்டதா தகவல் வந்திருக்கு. அதான் அவங்க உடனே கிளம்பறாங்கலாம். உன்கிட்ட சொல்ல சொல்றாங்க”

-இப்ப அவங்க எங்க?- என்பது போல சைகைக் காட்டி கேட்டார் திருமால்.

“ஆபீஸ் ரூம்ல இருக்காங்க ஆட்டோ வெயிட்டிங்க்ல இருக்கு. உங்க சம்சாரம் கூட வந்திருக்காங்க ரெண்டரை மணி பஸ்சுக்கு வரச் சொல்லித் தகவலாம். காஞ்சிபுரத்திலேர்ந்து பதினஞ்சு கிலோமீட்டர் உள்ளே போகணுமாம் அவங்க சொந்தக்காரவங்க அங்க வந்து கூட்டிக்கிறதா ஃபோன் பண்ணியிருக்காங்க. அதனால அவசரமா கிளம்பறேன்னு சொல்றாங்க”

-குளிச்சிட்டு வந்துடறேன்னு சொல்லுங்க- என்று ஜாடைக் காட்டினார்.

“என்னப்பா பேசறே சிவகாசியிலேர்ந்து காஞ்சிபுரம் பஸ் ரெண்டரை மணிக்கு இப்பவே மணி ஒண்ணே முக்கால். இங்கேர்ந்து சிவகாசிக்குப் போக ஆட்டோதான்னாலும் எப்படியும் கால் மணி நேரம் ஆகும் அவங்க காலுல வென்னித்தண்ணி ஊத்துனாப்புல நிக்கறாங்க... இப்ப நீ குளிக்க ஆரம்பிச்சா மருந்தெல்லாம் போக ஒரு மணிநேரம் ஆயிடும்”

-உள்ளே வரச் சொல்லுங்களேன் குழந்தையைப் பாக்கணும்-’

“கைக்குழந்தையா இருக்கு மருந்து வாடையிலே நமக்கே நிக்க முடியலை. உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா?

வெடிவிபத்து என்றால் பரவாமல் இருக்க, அந்த அறைக்கு வெளியே ஒரு காம்பவுண்ட் சுவர் உண்டு.. அதைத்தாண்டி வந்து நின்று பார்த்தார். பட்டாசு ஆலையின் கம்பிவேலிக்கு வெளியே மண்சாலை தெளிவாகத் தெரிந்தது. அந்தச் சாலையைக் காட்டி அங்கே வரச் சொன்னார் திருமால். அவசரமாக அழகர் ஆபீஸ் ரூம் நோக்கி நடந்தார். ரவி வெளியே சென்றிருந்தால் எல்லாவற்றுக்கும் அழகர்தான் பொறுப்பு... காம்பவுண்ட் சுவரில் ஒரு காந்தக்கல் பாதிக்கப்பட்டிருக்கும். அறைக்குள் வரும்முன் அதில் சிறிது நேரம் கைகளை வைத்துக் கொண்டு நின்றால். மனம் அமைதி கொள்ளும். உடல் வெப்பம் குறையும்.

இரண்டு நிமிடத்தில் ஆட்டோ அந்த சாலையில் வந்து நின்றது. திருமால் வேலியை நோக்கி நடந்து சென்றார். ஆட்டோவிலிருந்து ஜெயலட்சுமிதான் முதலில் இறங்கினாள். உள்ளிருந்து எட்டிப்பார்த்த வள்ளி தனியாக தயக்கத்துடன் இறங்கினாள்.

-‘குழந்தை எங்கம்மா?-

அதன்பிறகுதான் வள்ளி குழந்தையை ஆட்டோவிலிருந்து வெளியே தூக்கி வந்தாள்.

“நேரமாச்சுப்பா பஸ்-சை விட்டா அப்புறம் ரொம்ப லேட்டாயிடும். எங்க நாத்தனார் காஞ்சிபுரம் பஸ்ஸ்டான்ட்ல வந்து கூப்பிட்டுக்கறேன்னு சொல்லி இருக்காங்க. இதுக்கே பாதி ராத்திரி ஆயிடும் தனியா போகனும்லே”

ஆமா சென்னையிலேர்ந்து தனியா அனுப்பறாங்க எப்ப கேட்டாலும் மாப்பிள்ளைக்கு லீவு இல்லைன்னு சொல்றே என்று நினைத்துக் கொண்டார். சொல்ல முடியவில்லை.

ஜெயலட்சுமியைப் பார்த்து -தளியல் போட்டாச்சா- என்று சாமி கும்பிடுவது போல சைகைக் காட்டினார்.

“எங்க போடறது உள்ளே நுழையும் போதே சாவு சேதி.... போன் வந்ததிலேர்ந்து  பறக்குறா. எனக்கு பாதி சமையல்தான் முடிஞ்சுது. மோர் போட்டு சாப்பிட்டுட்டு கிளம்பியாச்சு. அடுத்த வாரம் பாத்துக்கலாம். அதான் பூதத்தாள்வார் உங்களைப் பார்த்தாச்சே”

இத்தனை வருட தாம்பத்யத்தில் ஒரு முறை கூட ஜெயலட்சுமி ஆலைக்கு வந்ததுமில்லை. இந்தக் கோலத்தில் பார்த்ததுமில்லை. அவள் கண்களில் ஓரம் நீர்த்துளி போலத் தெரிந்தது. அழுதாளா? இல்லை வியர்வைத்துளியா என்று புரியவில்லை.

பேத்தி வள்ளியின் தோளில் படுத்து அந்தப்பக்கம் தலையை வைத்திருந்தாள். அவள் தலையை தன் இரு கைகளாலும் வள்ளி அழுத்திப் பிடித்திருந்தது போல இருந்தது.

-பிள்ளையைத் திருப்பி முகத்தை காமிம்மா-

“இல்லைப்பா தெருவிலே ஒரு முறை இது மாதிரி பவுடர் எல்லாம் பூசிக்கிட்டு வேஷம் போட்டுட்டு ஒரு பூம் பூம் மாட்டுக்காரன் வந்தான் அவனைப் பார்த்துட்டு ஒரே அழுகை. அன்னிக்கு ராத்திரி ஜுரம் வந்துடுச்சுப்பா.. இப்படி உன்னைப் பார்த்தா பயந்துடப்போறா.. உடம்பு வந்துட்டா அப்புறம் நான்தான் கஷ்டப்படனும்”

ஒரு கணம் தன்னுடலை தானே முழுமையாகப் பார்த்தார். வெய்யில் தாங்காமல் வியர்வை ஆறாகப் பெருகி உடலெங்கும் நீர்க்கோடுகள் இறங்கின. நெற்றி வியர்வையைத் துடைக்கவும் மறந்து வள்ளியையே பார்த்தார்.

“நீ காஞ்சிபுரம் எல்லாம் வரவேணாம்பா.. மாமனாருக்கு ஒண்ணுவிட்ட அண்ணன்தான். எதாச்சும் செய்யனும்னா நானே செஞ்சுக்கறேன் அப்ப கிளம்பட்டுமா?”

தொண்டைக்குள் திரண்டு வந்த துக்கத்தை எச்சில் கூட்டி விழுங்கி அடக்கினார். வாய்விட்டு அழுதால் கண்ணீர்த் திரண்டு வந்து உதடுகளுக்குள் நிரம்பிவிடும் என்று அஞ்சி ஜடம் மாதிரி நின்றுக் கொண்டிருந்தார்.  அவரது தவிப்பைக்  கவனிக்கவும் நேரமின்றி சட்டென ஆட்டோவுக்குள் ஏறினாள் வள்ளி. மிகுந்த தயக்கத்துடன் பின்னால் சென்று ஏறிக்கொண்டாள் ஜெயலட்சுமி.

மீண்டும் ஒரு முறை தன்னுடலை முழுவதுமாகப் பார்த்தார் வெடிக்காமலே அதன் வீரியம் பரவி சத்தமில்லாமலே புகைந்தது போல இருந்தது. காம்பவுண்ட் சுவரில் பதிக்கப்பட்டிருந்த காந்தக்கல்லின் மீது கைகளை ஊன்றியபடி அப்படியே நின்றார். உடலின் வெப்பம் குறைவதாகத் தெரியவில்லை.

“குளிக்கறியா இல்லை அப்படியே பிஜிலி வெடிக்கு திரி கிள்ளி வச்சிடறியா?”

எதற்காகவும் சிரிக்காமல் எந்தத் துக்கத்துக்காகவும் அழாமல் மனதின் உரையாடல்களோடு வாழும் ஞானத்தை வெடிமருந்து கற்றுத் தந்திருப்பதாகவே உணர்ந்தார் திருமால்.

மிச்ச நேரத்தை வீணடிக்க விரும்பாமல் பிஜிலி வெடிகளுக்கான வட்டுக்களை எடுத்து திரிகளை வைக்கத் தொடங்கினார்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...