ஞாயிறு, 2 ஜூலை, 2017

படைப்பாற்றலை பலி கேட்கும் பாகுபலி

                                         

      அனேகமாக இந்தியா முழுமைக்கும் ஒரு நாளில் ஒரு முறையேனும் உச்சரிக்கப்படும் பெயராக பாகுபலி அமைந்துவிட்டது. தென்னிந்தியாவிலிருந்து இப்படி ஒரு பிரம்மாண்டம் வெளிவந்து, ஆக்கிரமிப்பு மொழியான இந்தியைத் தாண்டி கோடிகளை வாரிக் குவித்ததில் மும்பைத் திரையுலகம் முழுக்க புகைச்சலான மௌனம் படர்ந்திருக்கிறது. சம்பிரதாயமாகக் கூட ஒரு ‘கானு’ம் வாழ்த்துத் தெரிவிக்க வில்லை அல்லது கருத்துத் தெரிவிக்கவில்லை. ‘இறுதிச்சுற்று’ அளவுக்கு காத்திரமான படைப்பாக இல்லாவிட்டாலும் அமிர்கான் நடித்ததால் ‘டங்கல்’ பெருமளவு பேசப்பட்டது. நாமும் கொண்டாடித் தீர்த்தோம். தருண் விஜய் சொன்னது போல தென்னிந்தியர்களை ரொம்பவுமே பொறுத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள் போலிருக்கிறது.
      உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் முந்தைய சாதனையின் அளவுதான் புதிய வீரனுக்கான இலட்சியக் கோடாக இருக்கும். அதுபோல இனி இந்தியத் திரையுலகம் முழுக்க நேரடியான அல்லது மறைமுகமான புதிய எல்லையாக ‘பாகுபலி’ அமைந்துவிட்டது. இப்பொழுதே இயக்குனர் சேரன் தமிழில் பாகுபலியை விஞ்சிய படைப்பு ஒன்று வரவேண்டும் என பிரம்மாண்ட இயக்குனரை மறைமுகமாக உசுப்பேற்றி இருக்கிறார். எப்படியாகிலும் அதைத்தாண்டிய ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற   இலட்சியக்கனவை தனது கண்களில் தேக்கி  ஒவ்வொரு தேநீர்க் கடையிலும் அக்கவுண்ட் புக்கில் அன்றைய தேனீர்க் கடனை எழுதிவிட்டு காத்திருக்கும் உதவி இயக்குனர்களின் தாகமுகம் என் மனதில் நிழலாடுகிறது.
      உண்மையில் இந்த பிரம்மாண்ட போதை இதுவரை இருந்ததைவிட அதிகம் தலைக்கேற பாகுபலி காரணமாகிவிட்டது. இதுவரை ஒரு பிராந்திய மொழியில்  மிக அதிக முதலீட்டில் ஒரு திரைப்படம் உருவாக்குவதில் பலருக்கும் ஒரு தயக்கம் இருந்தது. வணிக சாத்தியங்கள் குறைவான இந்த டிஜிட்டல் சமூகத்தில் ஒரு படம் தனது மொத்தத் தயாரிப்பு செலவு மற்றும் லாபத்தை ஒரு வாரத்தில் ஈட்டியாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எல்லா பிராந்திய மொழி திரையுலகமும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பிறந்த குழந்தை ஐசியூ வார்டில் தனது உயிர் குறித்த உத்திரவாதத்தை எதிர் நோக்கி இருப்பது போல.
      ஆனால் பாகுபலி ஒரு வாரத்தில் அதன் தயாரிப்பு செலவு போல இரண்டு மடங்குக்கு மேலே சம்பாதித்துவிட்டது. அதன் இயக்குனர் ராஜமவுலி தனது அடுத்த அணுகுண்டை ‘ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மகாபாரதம்’ என எறிந்து விட்டார். ஆக எல்லா ‘பிரம்மாண்டங்க’ளும் அடுப்பு மேல் அமர்ந்து நெருப்பை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகுக்கும் இது ஆரோக்கியமான சூழலா? ஏன் பிரம்மாண்டங்களின் மேல் இத்தனைக் காதல்?
      திரை உலகம் என்பது குதிரைப் பந்தயம் போல, ஓடுகிற வரைதான் குதிரையின் மேல் பணம் கட்டக் கூட்டம் காத்திருக்கும். நடிகர், நடிகைகள் தங்களது முந்திய தோல்வியில் விட்ட இடத்தை வேறொரு படத்தில் பிடித்துவிட முடியும். ஆனால் ஒரு இயக்குனர் மற்றும் ஒரு  தொழில் நுட்பக்கலைஞன் ஒவ்வொரு படத்தையும் வணிக ரீதியாக வெற்றிப் படமாக  ஆக்குவதில்தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. ஆகவே ஒரு பிரம்மாண்டம் உருவாகி அது வெற்றியும் பெற்றுவிட்டால் தன் எஞ்சிய வாழ்நாளுக்குத் தேவையான தொகையை அடுத்த படத்தில் சம்பளமாக பெற்றுவிட முடியும் என்கிற கனவு, மறைமுகமாக இயக்குனர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அந்தக் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது பிராந்திய மொழித் திரைப்படங்களின் குறுகிய வியாபாரத் தளம்தான். பாகுபலி அந்தத் தடையை இப்போழுது உடைத்து  இருக்கிறது. இனி ஒவ்வொரு இயக்குனரும் பாகுபலியை முன்னுதாரணமாகக் காட்டுவார்கள். பிரம்மாண்டங்களின் தயாரிப்புச் செலவு கண்மண் தெரியாமல் எகிறும். எத்தனை கோடியில் தயாராகிறது என்பது இயக்குனரின் கவுரவப் பிரச்சினை ஆகிவிடும். இனி பாட்டி வடை சுட்ட கதையை திரைப்படமாக்குவது கூட கோடியில்தான்  சாத்தியம் என்கிற மனோபாவம் பிசாசைப் போல் எல்லோரையும் ஆட்டிவைக்கும். அதன் தொடர்ச்சியாக அதிகம் சம்பளம் பெறுவதும், அதனை மீடியாக்களில் கேட்பவர், வாசிப்பவர்களுக்கு  விழிகள் தெறிக்கும் அளவுக்கு அவர்களின் சம்பளம் இருந்தாக  வேண்டிய கட்டாயமும் உருவாகும். கிட்டத்தட்ட அரசியலில் திருமங்கலம் ஃபார்முலா போல இந்தியத் திரை உலகுக்கு பாகுபலி.
      பணமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக எந்தத் துறையில் தலைவிரித்து ஆடுகிறதோ அந்தத் துறையில் மக்களுக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்றும் எந்த நன்மையையும் கிடைக்காது. குறிப்பாக கலைத்துறையில் ஒரு உன்னதப் படைப்பு உருவாக விடாமல் தடைக்கற்களை பண எல்லைகள் உருட்டிவிடும். கதைக்கும், திரைக்கதைக்கும் உள்ள முக்கியத்துவத்தை  குறைத்து கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகளால் நிரம்பிய மாயாஜால வித்தையாக மாற்ற எல்லா படைப்பாளிகளும் முனைவார்கள். நாம் ஹாலிவுட்டுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் முயற்சி ஒரு காய்ச்சலைப் போல எல்லோரையும் ஆக்ரமிக்கும்.
      உண்மையில் ஒரு கலைப்படைப்பில் அறிவியல் ரீதியான தொழில்நுட்ப சாதனை எல்லோருக்கும் ஒருகாலகட்டத்தில் சாத்தியமாகும். சிலருக்கு வருடங்களில்.. சிலருக்கு மாதங்களில்.. இன்னும் கர்வமாக சொல்வதானால் தமிழர்களுக்கு எந்தத் தொழில்நுட்பமும் பெரிய சவாலில்லை. இந்தியத் திரையுலகில் எல்லாத் தொழில்நுட்ப சாதனைகளிலும் ஏதேனும் ஒரு தமிழ்க்கலைஞன் பின்னாலிருப்பான். இந்திய மொழிகளில் கணினிப் பயன்பாடு, இணைய ஆக்கங்களில் இந்தியையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்தான் முன் நிற்கிறது என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அதனை ஆராய்ந்து பார்க்கத் தேவையே இல்லை. அது உண்மையாக இருக்க நூறு சதவிகித வாய்ப்பு உண்டு. எனவே தொழில் நுட்ப ஈடுபாட்டில் தமிழர்கள் சுயம்பு லிங்கங்கள். ஆகையினால் தமிழ்த் திரையுலகினர் பாகுபலியை எல்லையாக கொள்ள வேண்டியதில்லை.  சில்ட்ரன் ஆஃப் ஹெவன் தொடங்கி இன்றைய தி சேல்ஸ் மேன்  வரையிலான ஈரானின் திரைப்படங்கள், ‘தி வே ஹோம்’ மாதிரியான கொரியன் திரைப்படங்கள். ‘தி போப்ஸ் டாய்லட் ’ மாதிரியான தென்னமெரிக்கத் திரைப்படங்கள்தான் நமது எல்லையாக இருக்க வேண்டும்.
      உண்மையில் ஆஸ்கார் கூட நமது எல்லையாக இருக்க வேண்டியதில்லை. ஆஸ்கார் விதிகளில் முக்கியமானது தேர்வுக்கு அனுப்பப்படும் திரைப்படம் அமெரிக்கத் திரையரங்குகளில் ஒரு வாரகாலம் மூன்று காட்சிகள் ஓடியிருக்க வேண்டும் என்கிறது. மேலும் அதன் பிரதான உறுப்பினர்கள் (அமெரிக்கத் திரையுலக பிரமுகர்கள் இடம் பெற்ற குழு) பரிந்துரைக்க வேண்டும் என்று அதன் சட்டத் திட்டங்கள் பிற நாட்டு திரைப்படங்கள் கலந்துகொள்ள  முடியாதவாறு கவனமாக தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு பிரிவில் (பிறமொழித் திரைப்படங்கள் பிரிவு) மட்டுமே நாம் கலந்துகொள்ள முடியும். அதாவது உலகின் பல்லாயிரக்கணக்கான மொழித் திரைப்படங்களுக்கு ஒரேஒரு விருது மட்டுமே சாத்தியம். ‘விசாரணை’ திரைப்படம் விருது பெறமுடியாமைக்குக் காரணம் அதன் தரம் அல்ல அதற்கும் மேலே உள்ள பல விதிகளே காரணம்.
      உலகின் பல உன்னதத் திரைப்படங்கள் உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ள, காலங்கள் கடந்தும் காவியங்களாக போற்றப்படக் காரணம், அவை எடுத்துக்கொண்ட கதைக்கரு மற்றும் அதன் உயரிய சமூக நேயம்தான். இன்னும் சொல்லப்போனால் அவை பெரும்பாலும் ஏதேனும் ஒரு நாவலை அல்லது சுயசரிதை போன்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை என்பதுதான் மிக முக்கியக் காரணம் . இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படங்கள் என எடுத்துக்கொண்டால் இன்னமும் நாம் பதேர் பாஞ்சாலி, தீன் கன்யா, சாருலதா, மேக தக்க தாரா, தி ப்ளு அம்ப்ரல்லா, மதிலுகள் ஆகியவற்றைதான் சொல்கிறோம். இவை அனைத்துமே நாவல்களை அடிப்படையாகக் கொண்டவைதான். தமிழிலும் நாம் ஒருமித்தக் குரலில் சொல்லும் படம் ‘ உதிரிப்பூக்கள்.’ அது புதுமைப் பித்தனின் சிற்றன்னை சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்தப்பாதையில் பாலா (நான் கடவுள்) , வசந்த பாலனின் அரவான் (காவல் கோட்டம் ஒரு பகுதி) , வெற்றிமாறன் (விசாரணை) என பயணிக்க எத்தனிக்கையில் எல்லாவற்றையும் புரட்டிப்போட பாகுபலி வந்திருக்கிறது.
      பாகுபலி தன் பிரம்மாண்டத்துக்கான பலியாக கேட்பது இந்த படைப்பாற்றல்தான். இனி கதையை எப்படி திரைக்கதையாக்குவது என்று யோசிப்பதற்குப் பதில் எப்படி கண்கவர் காட்சியாக்குவது என்று கனவு காண ஆரம்பித்துவிடுவான். ஒரு படைப்பாளி மரணிக்கத்துவங்கும் புள்ளி அதுதான். சமீபத்தில் எனக்கு அலைபேசி மூலம் அவசரமாக உரையாடிய ஒரு வெளியூர் புகைப்படக் கலைஞர் ‘காற்று வெளியிடை திரைப்படம் ஒரு காட்சி ஊடக அற்புதம் அவசியம் பாருங்கள் என்று பரிந்துரை செய்தார். அறிவுஜீவிகளின் மூட நம்பிக்கைகளில் ஒன்று சினிமா என்பது காட்சி ஊடகம் ஆகவே காட்சியினால் மட்டுமே எல்லாவற்றையும் உணர்த்திவிட வேண்டும் என்பது. சமூக பொறுப்புள்ள எல்லா கலைக்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது அதன் உள்ளடக்கம்தான். அவற்றின் நோக்கம் பார்வையாளனை பரவசமாக்குவதல்ல. கேட்கவும் பார்க்கவும் மட்டுமே உள்ள கேளிக்கைகள் கேள்விக்கு உள்ளாக்கப் படவேண்டியதில்லை. உதாரணமாக ஒரு மேஜிக் கலைஞன் செய்யும் அத்தனையையும் நாம் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டியதில்லை. அவை கண நேர கேளிக்கை. ஆனால் திரைப்படம், நாடகம், எழுத்து ஆகியவை ஒரு உயரிய நோக்கத்தோடு உன்னத கலையாக படைக்கப்பட வேண்டியவை. இதை நான் கவனமாக எழுதுகிறேன் எல்லாவற்றிலும் ஒரு செய்தி இருக்க வேண்டும் என்னும் மொண்ணையான வாதமில்லை என்னுடையது.  ஒரு படைப்பின் மைய இலக்கு பார்ப்பவனை அல்லது வாசிப்பவனை ஒரு கணமேனும் சிந்திக்க வைப்பதாக  (தொடர்ச்சியாகவோ.. எதிராகவோ) இருக்க வேண்டும். அந்த உயரிய நோக்கத்துக்கு தொழில்நுட்பம் கலாப்பூர்வமாக துணை நிற்க வேண்டும்.
      அப்படியானால் ஒரு தொழில்நுட்பக்கலைஞன் தனது ஆகச்சிறந்த சாதனையை எப்படி நிகழ்த்துவது? என்ற கேள்வி எழலாம். கர்நாடக இசைக்கச்சேரியில் ஒரு பாடகனுக்கு பின்னிருக்கும் இசைக்கலைஞனின் வெளிப்பாட்டுக்கும், தனியே ஒரு இசைக்கருவி கச்சேரி செய்யும் போது அந்தக் கலைஞனின் தனி ஆவர்த்தனத்துக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டால் எப்படி ஒரு தொழில் நுட்பம் சினிமா போன்ற கூட்டுக் கலையில் பங்களிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
      டைட்டானிக்  போன்ற மாபெரும் திரைக்கலையை நாம் நிகழ்த்துவதும் ஒரு நியாயமானக் கனவுதானே என்ற கேள்வியும் எழலாம். அப்படியானால் ஒரு உண்மையான வரலாற்றை நம் தலைமுறைக்கு கண்முன் கொண்டுவர உங்கள் பிரம்மாண்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்துங்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சின்ன சின்ன கூறுகளை, தனித் தனி ஆளுமைகளை பற்றிய திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் ஒட்டு மொத்த வரலாற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் இது வரை இல்லை. அவற்றை பாகம் பாகமாக எடுத்துத் தள்ளலாம். புத்தத்தின் வரலாற்றை, சமணத்தின் வரலாற்றை, சோழர்களின் சாம்ராஜ்யத்தை கண்முன் கொண்டு வாருங்கள். சரித்திரத்தை மறந்த தலைமுறைக்கு அது பாடமாக இருக்கும். ஆயிரம் துப்பாக்கிகள் முளைக்கும் எந்திரனுக்கும், நான்கு அம்புகளை ஒரே சமயத்தில் எய்யும் பாகுபலிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உடைகளை, ஒப்பனைகளைத்  தவிர...  பேராசைகளின் கனவு அவை.  
      பிரம்மாண்டமே பேரின்பம் என்றிருப்பவர்கள் தயவு செய்து ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கை பின்பற்றலாம். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈடி போன்ற பிரம்மாண்ட படங்களை (அவை கூட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஃபேண்டசி வகைத்  திரைப்படங்கள்)   இயக்கிய  அதே சமயத்தில் அவரது செவ்வியல் திரைப்படங்களான ஷின்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், லிங்கன் ஆகியவற்றையும் அவரால் தரமுடிகிறது. பாவத்தைக் கழுவி பரிகாரம் தேட அங்கேயே வழியும் இருக்கிறது, முன்னோடிகளும் இருக்கின்றனர்.   
      திரைப்பட இயக்குனர்களை நூலகம் நோக்கி திருப்ப பகீரதப் பிரயத்தனத்தைப் பலரும் செய்து கொண்டிருக்கையில் இப்படியான பிரம்மாண்டங்கள் பரவசத்துக்குப் பதில் சோர்வையே அளிக்கின்றன. இப்பொழுது நம் கையிலிருக்கும் ஒரே நன்னம்பிக்கை முனை மாற்று சினிமாதான். என்னை சந்திக்கும்  குறும்பட இயக்குனர்களிடம் சிறுகதைகளை வாசியுங்கள் .. கவிதைகளை படமாக்க முயற்சியுங்கள் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரு கோடி பட்ஜெட்டில் பத்து நிமிடக் குறும்படம் ஒன்றை யாரும் இயக்காமல் இருக்க வேண்டுமே என பிரார்த்தித்துக் கொண்டும் இருக்கின்றேன்...
        
                   
            
             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...