ஞாயிறு, 2 ஜூலை, 2017

திக்குகள் எட்டும் பாயும் அம்பை
                  

(அம்பையின் ‘திக்கு’ மற்றும் ‘கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்’ கதைகளை முன்வைத்து) 
ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதியிலிருந்து வரையறுக்க முற்படுபவர்கள் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவற்றிலிருந்து தங்களுக்கான தரவுகளைக் கண்டடைவது மரபான ஒரு வழிமுறை . அவர்களின் மற்றொரு துழாவல் இலக்கியங்களின் ஊடே நிகழும். பொதுவாக எல்லா மொழியிலும், எல்லா தேசத்திலும் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் பதிவு செய்யும் அவர்களின் சமகால சமூகத்தின் வாழ்வியல் கூறுகள், பண்பாடு, ஆட்சிமுறை ஆகியவற்றின் வழியே வரலாற்றுக்கு உத்திரவாதமான முழுமையை ஆய்வாளர்களால் தர முடியும்.
சிங்களர்களின் காப்பியமான .‘மகாவம்சம்‘ நூலின் மூலம்தான் தமிழர்கள் இலங்கையை தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்த வரலாற்றை நிறுவ முடிகிறது. ஆக இலக்கியம் என்பது தனிமை அடர்ந்த நீண்டதொரு சாலையில் பயணிப்பவர்கள் இளைப்பாறிச் செல்லும் நிழல் பரப்பு மட்டுமல்ல. இருளைப் பிளந்து செல்லும் ஒளிச்சிதறலும் கூட. ஆனால் இன்றைய தமிழிலக்கியச் சூழலில் சமகால அரசியலைப் பேசுவது.. பதிவு செய்வது என்பது ஒரு ஆபத்தான விளையாட்டாக அல்லது இலக்கிய அந்தஸ்தை பெறத் தகுதியற்ற முயற்சியாக இருக்கிறது  என்பதே யதார்த்தம் . இன்று வெளியாகும் பல புத்தகங்களின் அட்டையை கிழித்துவிட்டால் அவை எந்தக் காலகட்டத்தில், யாரால்  எழுதப்பட்டவை  என்று யாராலும் அனுமானிக்க முடியாது.
அரசியலை விமர்சித்து எழுதப்படும் பல படைப்புகளில் திராவிட இயக்கங்களை மட்டும் பகடி செய்து எழுதும்  ஆபத்தில்லாத, எளிதான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் மேலோட்டமான அரசியல் பார்வையாளர்களால் அவை  ஆமோதிக்கப்படுவதும்  ஒரு  காரணம். தேசியம் பேசும் அரசியல்வாதிகளை அதிகம் கேலி செய்வதில்லை. தேசவிரோதி என்னும் பட்டத்துக்கு உரியவராகிவிடும் அச்சமும், சாகித்ய அகாதமி மற்றும் பத்ம விருதுகள் கானல் நீராகிவிடும் என்பதும் மற்றொரு காரணம். ஞானபீட விருது என்னும்  தொலை நோக்குத் திட்டத்தோடு இயங்கும் போலி தேசபக்தர்களின் கபட ஆட்டம் இன்னும் அட்டுழியமானது. எனவே பயனற்ற வெற்று படைப்புகள், நேர்மையற்ற விமர்சனங்கள், பொருத்தமற்ற விருதுகள் தமிழ் இலக்கிய சூழலின் சாபக்கேடாகி விட்டது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அம்பையின் ‘திக்கு’ மற்றும் ‘கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்’ ஆகிய சிறுகதைகள் அன்றைய காலகட்டத்தின் அரசியல் மற்றும் மதங்களின் பெயரால் நடத்தப்பட்ட சீரழிவுகளை துணிச்சலாகப் பேசியவை. தமிழ் இலக்கிய சூழலில் வெகு அபூர்வமாக காப்பிய நாயகர்களை, கடவுள்களை பகடி செய்தவை.
அம்பையின் பகடி என்பது வெறுப்பரசியலின் வெளிப்பாடு இல்லை. அது துவேஷத்தை தூவுகிற துஷ்டத்தனமும் இல்லை. ஒரு நேர்மையான மத நம்பிக்கையாளன், அரசியல் பார்வையாளனின் மனதிலும்  எழும் தவிர்க்க முடியாத  இயல்பான கேள்விகளின் பதிவு. ரசூலின்  மைலாஞ்சியில் எழுப்பும் கேள்விகளைப் போன்றே வாசகனை தெளிவு நோக்கிய தேடலுக்கு இட்டுச் செல்வது. இன்னொரு வகையில் பார்த்தால் பெரும்பான்மை கருத்துக்களின் மூச்சுத்திணறலிருந்து சற்றே நாசியை சுவாசத்துக்கு நகர்த்தும் முயற்சி எனலாம்.
அம்பையின் கதைகளை குறிப்பாக ‘திக்கு’ போன்றவற்றை வெறும் பிரச்சாரம் என்று புறந்தள்ளுவது ஒரு திட்டமிட்ட அரசியல். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவம், அந்தக் காலகட்டத்தில் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய சமநிலைக்குலைவு மற்றும் ஒரு நியாயமான நடுநிலையாளரின் மனதில் தோன்றும் கலவையான சிந்தனைகள் ஆகியவற்றை ஆழமாக பதிவு செய்த  கதை ‘திக்கு’. பொதுவாக அம்பை தன்னுடைய படைப்புகளில் ஆணுக்கு எதிராக மூர்க்கமாக பெண்ணை நிறுத்துவதோ, கடவுள் என்கிற தத்துவத்திற்கு எதிராக ஆவேசமாக ஒரு கதாபாத்திரத்தை புனைவதோ இல்லை. ஒரு எளிய மனிதனின் வெள்ளந்தியான வினாக்களை சற்று பகடித் தூவி பரிமாறிவிடுவார். எதிர்மறையான வாசகன் கூட ஒரு புன்முறுவலோடு கடந்து விடுகிற வரிகளை அனாயசமாக அழுத்தம் குறையாமல் எழுதிச் செல்லும் ஆற்றல் அம்பைக்கு உண்டு.
      கதையின் துவக்கத்தில், புறநகர் வீதியொன்றை காட்சிப் படுத்தும் போது, முந்தின இரவில் சுத்தமாகக் காணப்பட்ட நடைபாதை, விடியும்போது விழிக்கையில் திடுமென கூரை எழுப்பப்பட்ட ஒரு சிறிய கோயில் ஒன்று உருவெடுக்கும். இரண்டொரு நாளில் உண்டியலும், மணியும் வந்து சேர்ந்துவிடும் என்று குறும்பாகத் துவங்கும். கோயிலின் அருகிலேயே துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டி இருக்கும். ஒரு பக்கம் கடவுளைப் பார்ப்பவர்கள், கன்னத்தில் போட்டுக்கொண்டே மறுபுறம் மூக்கைப் பிடித்துக்கொள்வர் என எழுதிவிட்டு கோயிலை ஒப்புக்கொண்ட அதே ஏற்புடன் குப்பைத் தொட்டியையும் ஒப்புக்கொண்டனர் என எழுதியிருப்பார். இந்த வாக்கியங்களை வாசிக்கும் ஒரு மதப்பற்றாளன், மதநம்பிக்கையின் மீதான சாடலாக எடுத்துக்கொண்டான் எனில் அது மேலோட்டமான வாசிப்பாகத்தான் இருக்கும். ஒரு புனிதத்தை வணங்குகிறவர்கள், அதன் அருகில் கிடக்கும் குப்பையை அகற்ற முயலுகிற மனோபாவம் கூட இல்லாமல் தங்கள் சுயநல பிரார்த்தனைகளோடு நகர்ந்து செல்கிற பொறுப்பற்ற இந்திய மனநிலையை மறைமுகமாக புலப்படுத்துகிற வரிகள் அவை.        
அதற்குப்பிறகும் அம்பையின் பகடியான எழுத்து தொடர்கிறது. ‘கன்னத்துக்குப் பக்கத்தில் மூக்கை வைத்த இறைவனின் “அறிவாற்றலை வியந்தபடி” என்கிற எள்ளலை ரசிக்காமல் யாராலும் நகர்ந்துவிட முடியாது. இது கடவுள் நம்பிக்கையாளர்களை முற்றிலும் மறுதலிப்பவர்களின் இறுக்கமான குரல் இல்லை. பொதுக்காரியங்களை தட்டிக்கழித்துச் செல்லும் சகக் குடிமகனை உரிமையுள்ள ஒரு படைப்பாளி  நிமிண்டும் செல்லச் சீண்டல் அது.
இப்படியாகச் செல்லும் கதையில் உள்ளேயே மற்றொரு கதை கிடைக்கிறது. பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணுவுக்கு அருகில் வெய்யிலின் உக்கிரம் தாங்காமல். மகாலஷ்மி தனக்கும் வசதியாக புரண்டு படுக்க தனியே பாம்புப் படுக்கை வேண்டுமென ஆதிசேஷனனிடம் கேட்கிறாள். லக்ஷ்மியின் ஆதங்கங்கள் இதுவரை எந்த படைப்பாளியாலும் இதற்கு முன் சொல்லப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. தெய்வம் என்றாலும் அவளும் பெண்தானே?, விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி சிலாகிப்பவர்கள் கூடவே அவரது மனைவியின் பாடுகளை பேசியிருப்பார்களா? இராம அவதாரத்தில் அவரது தர்மபத்தினி அசோகவனத்தில் பாதங்கள் வெடித்து, கைகள் சொரசொரத்து, சருமம் வறண்டு கிடந்த தருணங்களைப் பற்றி... பிற அவதாரங்களின் போது ஆமையாகவும், மீனாகவும், பன்றியாகவும் உருமாறிய அவளது சிரமங்களைப் பற்றி யாராவது நினைத்திருப்போமா?. இந்தக் கவலை எல்லாம் ஏதுமற்று தான் மட்டும் வசதியாக தனியாக பாம்பு படுக்கையில் உறங்கும் விஷ்ணுவைப் பற்றி   ஆதிசேஷனிடம் புலம்பி தனக்கொரு படுக்கைக் கேட்கும் லக்ஷ்மியின் குரல் வாசகனின் அகக்கண்களை விழிக்கவைக்கும்.
மதநல்லிணக்கம் என்பது சமபந்தி போஜனம் என்கிற அரசு சடங்குகளில் சாத்தியமாகிற விஷயமில்லை. பாபர் மசூதி இடிப்புக்குப் பின் ஆங்காங்கே நடக்கும் இப்படியான விருந்துகள் மீடியா வெளிச்சத்துக்கான தீனியே ஒழியே வேறில்லை. அடிப்படை மனமாற்றம் நிகழாதவரை நல்லிணக்கம் என்பது ஒரு சம்பிரதாய சொல்லாகவே அர்த்தமற்றுவிடும். விஷ்ணுவின் காலடியிலிருந்து எழுந்து வந்து பாத்திமாவின் கைப்பிடித்து உலாவ முற்படும்போதோ, மேரியை இடுப்பில் தூக்கி கொஞ்சும் போதோ மட்டுமே அது சாத்தியமாகும் என லக்ஷ்மிக்குத் தெரியும். பாவம் மனிதர்களுக்கு மட்டும் ஏனோ புரிவதே இல்லை..
பாபர் மசூதி பிரச்சினைக்குப் பிறகு தனது நடைப்பயிற்சி பாதையை மாற்றிக்கொள்ளும் போது அங்குள்ள தெரு நாய் ஒன்று அவளையே முறைத்துக்கொண்டிருக்கும். புது ஆட்கள் உள்நுழைந்தால் நாய்கள் அப்படித்தான் விரோதமாக பார்க்கும். அத்துடன் அந்தக் கதை முடிந்து போகிறது. பல அர்த்தங்களுடன் அந்த வரியில்  வாசகனை சிந்திக்க வைத்துவிட்டு சட்டென நகர்கிறார் அம்பை.
. கடற்கரையில் ஒரு காவிநிறப் பிள்ளையார் என்கிற அவரது மற்றொரு கதையும் மதத்தின் பெயரால் நடக்கும் அரசியலின் மீதான எதிர்வினை. இதுவும் ஒரு நடைப்பயிற்சியின் போதான சிந்தனைப் பதிவுதான். பொதுவாக மனிதர்களின் சிந்தனை விரிவு அவர்களுக்கான தனிமை அவர்களுக்கு வாய்க்கும்போதுதான் சாத்தியமாகும். பெரும்பாலும் நடைப்பயிற்சியின்போது ஒரு புத்தனைப்போல் உருமாறும் சக்தி எல்லோருக்குள்ளும் ஒரு கணமாவது நிகழும். அத்தனை சிந்தனைகளையும் நாம் வியர்வைத் துளிகளைத் துடைத்தெறிவது போல விட்டுவிடுவோம். அன்றாடப்பணிகள் நம்மை இயல்பு நிலைக்குத் திருப்பிவிடும். ஆனால் ஒரு படைப்பாளியின் பணி நடைப்பயிற்சியின் போதே துவங்கிவிடும்.
இந்தக் கதையிலும் வழக்கமாக எதிர்ப்படும் நாய்கள், இரண்டடுக்கு பேருந்துகள் என அவரது வழமையான காட்சி விவரணைகள். கூடவே சமகால சமூக நிகழ்வுகளை அசை போடும் அவரது விரிந்த சிந்தனை என்று நாமும் அவருடன் நடந்து செல்வோம். விநாயகர் சதுர்த்தியின் போது நடக்கும் ஆர்ப்பாட்டமான ஊர்வலங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் முன்பு இல்லை. மும்பை போன்ற வட மாநிலங்களில் அவை மாபெரும் கொண்டாட்டங்கள். இப்பொழுது அங்கிருந்து இங்கே தொற்றிக்கொண்டதால் இங்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. முந்தின நாள் கடலில் கரைப்பதர்காகத் தள்ளப்பட்ட பிள்ளையார், கரை ஒதுங்கிவிட அதனை மீண்டும் கடலுக்குள்ளேயே செலுத்துகிறான் ஜோசப் என்கிற கிருத்துவன். ‘பாவம் அதுவும் யாரோடோ சாமிதானே .. (அனாதையாக ஏன் கரையில் கிடக்க வேண்டும்) என்கிற அவனது வார்த்தைகள் சமபந்தி போஜனம் போலல்லாத நிஜமான நல்லிணக்கம்.
அங்கிருக்கும் பத்து வயது சிறுமியின் மனதில் எழும் அச்சங்களை பதிவு செய்கையில் ‘சாமிக்குள்ளே இருக்கிற கம்பி மீனைக் குத்தி ரத்தம் வரும்.. அப்புறம் அந்த பிளாஸ்டிக் பையை மீன் சாப்பிட்டா செத்துடும் என்கிற கவலைகள் அசலானவை. ஆனால் அவற்றைப் பேசுவது இந்திய மண்ணில் சாத்தியமே இல்லை. பேசுபவரின் தேசபக்தியும், மெய்யறிவும் கேள்விக்குள்ளாக்கப்படும். முதுகெலும்புள்ள ஆண்களே பேசமுடியாத விஷயங்களை துணிச்சலாக பேசுகின்ற அம்பையை பெண் எழுத்தாளர் என்றோ பெண்ணியம் பேசுகிறவர் என்று மட்டுமே சுருக்குவது அவரை ஒரு ‘கேரிபேக்கில்’ அடக்கி பிராண்ட் செய்யும் தந்திரமான அரசியல். அந்த அரசியல்தான் அவர் முக்கியமற்ற படைப்புகளை படைத்திருப்பதாக, பிரச்சார நெடி வீசும் கதைகளை எழுதியிருப்பதாக புறக்கணிக்கச் செய்கிறது. இந்தப் புறக்கணிப்பு அவரது படைப்புகளை யாரும் வாசித்துவிடக்கூடாது என்பதற்காக குறுக்கே போடப்படும் சாலைத் தடுப்புக்கள். அவற்றைப்  புறந்தள்ளிவிட்டு அவரது படைப்புகள் வாசகனை தானே சென்றடையும். 
             நன்றி : பேசும் புதிய சக்தி 'மே' 2017                  
     

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...