செவ்வாய், 3 செப்டம்பர், 2013

தோட்டாக்கள் பாதம் பணிந்த சரஸ்வதி ராஜாமணியும், சிறைக்கு அஞ்சா அஞ்சலையம்மாளும்...



மறக்கப் பட்ட மறவர்கள்-5

தோட்டாக்கள் பாதம் பணிந்த சரஸ்வதி ராஜாமணியும்,
சிறைக்கு அஞ்சா அஞ்சலையம்மாளும்...

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. என்றாலும், அவர்களின் பெயரும் புகழும் தமிழகம் தாண்டி எந்த அளவு பரவி இருக்கிறது என்று ஆராயப் போனால் விரக்தியே மிஞ்சும். இந்தியாவின் எந்தப் பகுதியில் புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சீர்குலைந்தது என்று கேள்விப்பட்டாலும், உடனடியாக தமிழர்கள் தங்கள் தயாள குணத்தை எல்லா வகையிலும் காண்பிப்பதற்கும் அள்ளி வழங்குவதற்கும் தயங்கியதேயில்லை. ஆனால், தமிழர்களின் தியாகம், ஈகை, வீரம் இவற்றைப் பற்றி பேசினால் இன்றைக்கு பிற்போக்குத்தனம் என்றும், பத்தாம்பசலித் தனம் என்றும் இகழப்படும் அவலம் தமிழகத்துக்கு உள்ளேயே அறிவு(!) ஜீவிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

         ஒரு இனம் தன்னை மேம்படுத்திக் கொள்ள தன்னை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதில் தவறேதுமில்லை. ஆனால், தனது தகைசார்ந்த பெருமைகளை தனது அடுத்த சந்ததியினர்க்கு எடுத்துச் செல்வது கூட இங்கு கேலிக்குரிய செயலாகிவிட்டது. இத்தகைய சூழலில் தமிழ்ப் பெண்களின் வீரம் செறிந்த சுதந்திரப் போராட்டப் பங்களிப்பை நாம் எந்தளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்கிற சுய பரிசோதனையில் இறங்க வேண்டியது மிக அவசியம்.

          இரங்கூனில் மிகக் குறிப்பிடத் தக்க செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்கு 1937 ஆண்டு வாக்கில் காந்தியடிகள் சென்றிருந்தார். தங்கச் சுரங்கமொன்றை சொந்தமாக வைத்திருந்த அந்த செல்வந்தரின் செல்ல மகள் தோட்டத்தில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு பயிற்சி செய்து கொண்டிருந்தாள். காந்திக்கு மிக ஆச்சர்யமாகவும் அதே நேரம் மிக அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த சிறுமியை அழைத்து “நீ சிறு பெண் அல்லவா, துப்பாக்கியை வைத்துக் கொண்டு விளையாடுவது ஆபத்து ஆயிற்றே?” என்று அக்கறையோடு கேட்டார்.

       “நான் துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தாள் அந்த சிறுமி.
“இந்த வயதில் ஏன் உனக்கு துப்பாக்கிப் பயிற்சி?”
“நான் வெள்ளைக் காரர்களை இந்தியாவை விட்டு விரட்டுவதற்காக துப்பாக்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.”
“அது மிகவும் வன்முறையான வழியில்லையா? நாம் அவர்களை அகிம்சா வழியில் வெளியேற்ற வேண்டும்.”
“கொள்ளைக்காரர்கள் வீட்டுக்குள் புகுந்துவிட்டால், அவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தானே விரட்ட வேண்டும்?! நான் வளர்ந்து பெரியவளானதும் நிச்சயம் ஒரு வெள்ளைக்காரனையாவது சுடுவேன்.”
காந்தியடிகள் திகைத்துப் போனார்.
அந்த சிறுமியின் பெயர் ராஜாமணி.


காந்தியை சந்தித்த அடுத்த சில நாட்களில் நேதாஜி ரங்கூனில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். அங்கு வாழும் இந்தியர்களிடையே தனது எழுச்சி மிக்க உரையின் மூலம் அவர்களின் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்புகிறார். தனது போராட்ட முயற்சிகளுக்கு நிதிதர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். நேதாஜியின் உரை, அந்தக் கூட்டத்திலிருந்த சிறுமி ராஜாமணியை வெகுவாகக் கவர்ந்தது. உடனடியாக தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி அவரிடம் கொடுக்கிறாள். அதனை மறுக்காமல் வாங்கிக் கொண்ட நேதாஜி மறுநாள் அந்த சிறுமியின் வீட்டுக்கு வந்து அவளது தந்தையைச் சந்திக்கிறார்.

         “ஐயா, உங்கள் மகள் வயதில் மிகச் சிறியவள். இந்த நகைகள் எத்தனை மதிப்பு மிக்கவை என்பது அவளுக்குத் தெரியாது. எங்கள் போராட்டத்துக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டாள். அவளது அறியாமையை மன்னித்து நகைகளைத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் நேதாஜி.

        ஆனால், அச்சிறுமியின் தந்தையோ அவற்றை வாங்கிக் கொள்ளாமல் புன்னகை பூக்கிறார். அவரது மகளின் மன உறுதியும் அறிவாற்றலும் அவர் அறிந்தது தானே!

        ராஜாமணி அந்த சமயம் அந்த அறைக்கு வந்து நேதாஜியிடம், “அந்த நகைகள் எனக்காக எனது தந்தை கொடுத்தவை. அன்றிலிருந்து அந்த நகைகள் என்னுடையவை. அதன் மதிப்பு தெரிந்து தான் உங்களிடம் கொடுத்திருக்கிறேன்.  திருப்பி வாங்குவது என்னுடைய வழக்கமில்லை” என்று கோபமாக கூறினாள். அவளது தீர்க்கமான பதிலைக்கண்டு வியந்து போன நேதாஜி, “லக்ஷ்மி, (செல்வம்) வரும் போகும். ஆனால், சரஸ்வதி கடாட்சம் அப்படியல்ல. அது நிலையானது. உன்னிடம் சரஸ்வதியின் அருட்பார்வை நிரம்பியிருக்கிறது. இனி உன்னுடைய பெயர் சரஸ்வதி” என்று அவளைப் பாராட்டிவிட்டு வெளியேறினார். அன்றிலிருந்து அவரை சரஸ்வதி ராஜாமணி என்றுதான் எல்லோரும் அழைத்தனர்.

          சில நாட்கள் கழிந்த பிறகு அவர் நேதாஜியின் இந்திய தேசியப் படையில் அவரது ஐந்து தோழிகளுடன் இணைந்தார். அவருக்கும் அவரது தோழிகளுக்கும் பிரிட்டிஷ் உயரதிகாரிகளை உளவு பார்க்கும் பணி தரப்பட்டது. சரஸ்வதியும் அவரது தோழிகள் ஐவரும் ஆணுடை தரித்து பிரிட்டிஷாரின் குடியிருப்புகளில் தங்களது உளவுப் பணியைத் துவக்கினர். சரஸ்வதி தனது ஆண் வேடப் பெயராக ‘மணி' என்று வைத்துக் கொண்டார்.

saraswathy rajamani.jpg

       கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவர்கள் அந்தப் பணியை செவ்வனே செய்தனர். உளவுப் பணியின் போது அவர்களில் யாராவது ஒருவர் பிரிட்டிஷாரிடம் அகப்பட்டுக் கொண்டால் அந்தப் பெண்ணை மற்றவர் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குள் இருந்த இரகசிய உடன்படிக்கை. ஒரு சமயம் சரஸ்வதியின் தோழி ஒருத்தியை பிரிட்டிஷ் அதிகாரி அடையாளம் கண்டு அவளை விசாரணைக்காக தனது அறைக்கு அழைத்துச் செல்கிறார். ஏற்கனவே செய்த உடன்படிக்கையின் படி சரஸ்வதி அவளை சுட வேண்டும். ஆனால், சரஸ்வதி, தனது ஆண் வேடத்தைக் கலைத்து விட்டு, ஒரு நடன மாதுவைப் போல் விசாரணை நடந்த அறைக்குள் செல்கிறாள். பிரிட்டிஷ் அதிகாரிகள் அருந்திக்கொண்டிருந்த மதுவில் மயக்க மருந்து கலந்து அவர்களை மயங்க வைத்து விட்டு தோழியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விடுகிறாள். ஆனால், காவலுக்கு இருந்த பிரிட்டிஷ் படை வீரன், அவர்களை துரத்தி வந்து துப்பாக்கியால் சுடுகிறான். சரஸ்வதி ராஜாமணியின் கால்களில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அடிபட்டக் காலோடு இனி தப்ப முடியாது என்று உணர்ந்த சரஸ்வதியும் அவளது தோழியும் அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவர்கள் இருவரும் மரத்தை விட்டு இறங்கவேயில்லை. அதன் பிறகு தப்பி வந்து, நேதாஜியை சந்திக்கிறார்கள். அறுவை சிகிச்சையின் மூலம் சரஸ்வதியின் காலில் இருந்த குண்டுகள் எடுக்கப்பட்டன. என்றாலும், அவரால் அதன் பிறகு இயல்பாக நடக்க முடியவில்லை. நேதாஜி அவர்களின் சாதுர்யமான வீரம் மிக்க செயலைப் பாராட்டியதோடு, நேதாஜியுடன் இணக்கமாக இருந்த ஜப்பானிய அரசரிடம் அவர்களை அறிமுகப்படுத்துகிறார். ஜப்பானிய அரசரின் கையால் சரஸ்வதி ராஜாமணிக்கு விருது கிடைக்கிறது.

           இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு நேதாஜி கேட்டுக் கொண்டதன் பேரில், சரஸ்வதி ராஜாமணி இந்தியாவுக்குத் திரும்பிவிடுகிறார். அவருக்கு ஒரு சொற்ப தொகை ஓய்வூதியப் பணமாகத் தரப்பட்டு வந்தது. தனது செலவு போக மிஞ்சும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அவர் வழங்கி வந்தார். சுநாமியின் போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கா தனது ஒரு மாத ஊதியத்தை நிதியாகத் தந்து விட்டு, உணவருந்தப் பணமின்றி, பட்டினியாகக் கிடந்திருக்கிறார்.
அவரைப் பற்றி செய்தியை பத்திரிகையில் பார்த்த அன்றைய முதல்வரின் அலுவலக அதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு அவரது நிலையை பற்றிய செய்தியை கொண்டு சென்றனர். 2005-ம் ஆண்டு ஜுன் 21-ம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவருக்கு அரசு அடுக்கக வீடு ஒன்றை இலவசமாகவும், ரூபாய் 5,00,000-த்தை அவரது வாழ்வாதாரத் தொகையாக கொடுத்தார்.
saraswathi rajamani 3.jpg

         என்றாலும் பரபரப்புச் செய்திகள், அதிர்ச்சியூட்டும் கொலைகள் பல்டியடிக்கும் அறிக்கைகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டிருக்கும் பலராலும் சரஸ்வதி ராஜாமணி பற்றிய செய்தி தவறவிடப்பட்டிருக்கலாம்.


        ஒரு குடும்பமே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்காக சிறை தண்டனை பெற்றதும் அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் பெரிய புகழ் வெளிச்சம் ஏதுமின்றி இயல்பாக வாழ்வதும் தமிழகத்தில் இருக்கின்ற பலர் அறியாத செய்தி.

anjalai ammaal 2.jpg

        1890-ம் ஆண்டில் கடலூர் முதுநகரில் பிறந்த அஞ்சலையம்மாள் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக பல்வேறு  போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை தண்டனை அனுபவித்தவர். குறிப்பாக ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், நீல் சிலை அகற்றும் போராட்டம், கள்ளுக்கடைகளை எதிர்த்து போராட்டம்,தனி நபர் சத்தியாகிரகப் போராட்டம் ஆகிய  போராட்டங்களில் ஈடுபட்டு கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர். அவரது கணவர் முருகப்படையாச்சியும் அவரோடு சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் சிறைபுகுந்தவர்தான்.
1933 ஆம் ஆண்டு வேலுரில் அவர் சிறையிலிருந்த போது அவர் நிறைமாத கர்ப்பிணி. குழந்தை பிறக்கப்போகின்ற சமயம் அவர் வெளியே அனுப்பிவைக்கப்பட்டு, குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலத்தில் அந்த குழந்தை பிறந்ததால், ஜெயில் வீரன் என அக்குழந்தைக்கு பெயரிட்டார். ( தற்போது அவரது பெயர் ஜெயவீரன்).காங்கிரஸ் இயக்கப் பணிகளுக்காக செலவிடவேண்டிய சூழ்நிலை வந்தபோது, தயங்காமல் தனது வீட்டை அடமானம் வைத்து அந்த செலவுகளை சமாளித்து இருக்கிறார். அஞ்சலையம்மாள் சிறையிலிருந்த சமயம் கடனை திருப்பித்தர இயலாத காரணத்தால்அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. இஸ்லாமிய சமூக நண்பரொருவரின் முயற்சியால் அந்த வீடு ஏலத்தில் பறிபோகாமல்  தடுக்கப்பட்டது. நெசவுத்தறிதான் அஞசலையம்மாள் குடும்பத்தின் வாழ்வாதாரம். கைத்தறித் துணிகளின் அருமையாஇ உணர்த்த அவர் தந்தை பெரியாரோடு இணைந்து, அலைந்து திரிந்து கைத்தறித் துணிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். கள்ளுக்கடை மறியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு போராடியிருக்கிறார்
அஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாபொண்ணு தனது ஒன்பதாவது வயதிலேயே நீல் சிலையகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். அவர் சிறையிருந்து வெளிவந்த பின் காந்தியடிகள் அவரை அழைத்து, அம்மாபொண்ணை  தன்னோடு அழைத்துகொண்டு தனது சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்க வைத்துக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி ஆசிரமத்தில் காந்தியடிகளின் நேரடிப்பார்வையில் வளர்ந்த அவருக்கு லீலாவதி என்று காந்தியடிகள் பெயரிட்டார். ஆசிரமத்திலிருந்து வந்த பிறகு லீலாவதி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு வீரரான பன்மொழிப் புலவர் ஜமதக்கனியை மணந்து கொண்டார்.

         அஞ்சலையம்மாள் தன் வாழ்நாள் முழுக்க எதற்கும் அஞ்சாத அம்மாளாகவே இருந்திருக்கிறார். காந்தியடிகள் ஒருமுறை கடலூர் வந்தபோது அவரைச் சந்திக்க அப்போது தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால், அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளை ஏமாற்றி விட்டு, துணிச்சலாக காந்தியடிகளைச் சந்தித்ததோடு அவரை குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு, அடுத்து செல்ல வேண்டிய ஊருக்கு அவரை அழைத்து சென்றாராம். இதன்காரணமாக, காந்தியடிகள் அவரை ‘தென்னாட்டின் ஜான்சி' என்று பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார்.

        மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, போராட்டங்களையும் தாண்டி, சமூகக் கடமைகளை நிறைவேற்ற அவர் முயற்சித்திருக்கிறார். கடலூர் அரசு பொது மருத்துவமனையில் எக்ஸ்-ரே கருவி அஞ்சலையம்மாளின் பெருமுயற்சியால் தான் தருவிக்கப் பட்டது. வீராணம் ஏரியிலிருந்து புவனகிரி பாசனத்துக்கு செல்லும் வாய்க்காலில் கிளை பிரித்து தீர்த்தாம்பாளையம் என்ற ஊருக்கு பாசன வசதிக்காக ஒரு வாய்க்காலை ஏற்படுத்தித் தந்தவர் அஞ்சலை அம்மாள்தான். அதனால் தான் அந்த வாய்க்காலுக்கு அஞ்சலை வாய்க்கால் என்று பெயர். உலகமே வர்த்தகரீதியாக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கையில், வலைபதிவர்கள் பலர் தன்னலம் கருதாமல், தன்னிச்சையாக இப்படி மறைக்கப்பட்ட வரலாறுகளை, செய்திகளை தோண்டியெடுத்து பதிவு செய்கிறார்கள். சந்தனமுல்லை, டாக்டர் இரத்தினப்புகழேந்தி, கடலூர் எழில் போன்றவர்களின் வலைப்பதிவுகள் வழியே அஞ்சலையம்மாள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

         வரலாற்றில் அவரது சிறை வாழ்வு குறித்து பதிவு செய்யப்படும்போது, சிறைத் தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு சமைத்துக்கொடுத்தார் அதன் காரணமாகத்தான் அவர் சிறைத் தண்டனை பெற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

       வேண்டுமென்றே கள்ள அரசியல் புரியும் சுயலாபக்காரர்களால் நம் வரலாறு  அனுதினமும் கற்பழிக்கப்படுகிறது. அரசியலைத்தாண்டிய  அரசியல் வாதிகளால் நாம் நம்மை அறியாமல் கடத்தப்படுகிறோம். ஜடாமுடியற்ற கோடங்கிகளால் நமக்கு பாடம் அடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

         திரிபுகளும், புரட்டல்களும் அரசியலில் இன்று சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த தேசத்துக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்களின் மகத்தான தியாகங்கள் மீது கருத்துத் திணிப்புகளும்,உள்நோக்க விமர்சன வன்முறைகளும் நிகழ்த்தப்படுவது நம்மை நாம் புதைத்துக்கொள்வதற்கு சமம்...

நன்றி: 'காக்கை சிறகினிலே' செப்.2013

4 கருத்துகள்:

  1. வட இந்திய வீரர்களை ப்பற்றி நீங்கள் பதிவிட்டபோது நினைத்தேன் ஏன் தென்னிந்தியர்கள் பற்றி எழுதவில்லை என்று. ஒன்றும் செய்யாமல் இதை என் செய்யவில்லை என்று கேட்க வெட்கப் பட்டு கேட்கவில்லை. நல்ல அருமையான தகவல்கள் நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜோதி அறியப்படாத அந்த தியகச்சுடர்களைப் பற்றி எழுதப்பணித்த இறைவனுக்கு நன்றி

      நீக்கு
  2. ஒரு குடும்பமே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்காக சிறை தண்டனை பெற்றதும் அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் பெரிய புகழ் வெளிச்சம் ஏதுமின்றி இயல்பாக வாழ்வதும் தமிழகத்தில் இருக்கின்ற பலர் அறியாத செய்தி.

    அரிய செய்திகளை
    அறியத்தந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி.. தொடர்ந்து எனது வலைப்பூவை வாசித்து ஊக்கமளிக்கும் பின்னூட்டம் இடுகிறீர்கள் மீண்டும் நன்றி

      நீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...