பஸ்ஸல் அல்- ஷாடே ( சிரியா )
“யுத்த பூமியில்
ஒரு துப்பாக்கியையோ
நீண்ட வாளையோ
தூக்கிச் செல்வீர்கள்
என்றால் உங்களை
ஆயுதமேந்திய போராளி என்று அழைப்பார்கள். ஆனால்,
எங்களது தேசத்தில்
ஒரு கேமராவைத்
தூக்கிச் சென்றாலே
நாங்கள் தீவிரவாதி
தான்.”
வெள்ளிக் கிழமையொன்று
மெல்ல இறந்து
கொண்டிருக்க சனிக்கிழமை பிறந்து கொண்டிருக்கும் நேரம்.
புலர்ந்தும் புலராமலும், உலர்ந்தும் உலராமலும் இருக்கும்
பனிபடர்ந்த
அதிகாலை. சிறுவனொருவன்
தனியே தனது
படுக்கையில் உறக்கம் கலையாமல் படுத்திருக்கிறான். அவனது மனம் மட்டும் விழித்திருக்கிறது.
அவனது சிறு
உதடுகளின் கடைக்கோடியில்
புன்முறுவல் வழிந்தோடுகிறது. அம்மா இப்பொழுது வந்து
எழுப்புவாள். எழுந்திருக்காமல் சிணுங்க வேண்டும். அம்மா
கொஞ்சுவாள். புரண்டு படுக்க வேண்டும். காபியோ
பிஸ்கட்டோ கையில்
வைத்துக் கொண்டு
கெஞ்சுவாள். முரண்டு பிடிக்க வேண்டும். கோபிக்காமல்
முத்தமிடுவாள். பிறகு எழுந்திருக்கலாம். என்றெண்ணிய படி
கண்களை மூடிக்கொண்டிருக்கிறான்.
அம்மா இன்னும்
வரவில்லை.
சூரியனின் கதிர்கள்
ஜன்னல் வழியே
பாய்ந்து அவனை
அதட்டி எழுப்புகின்றன.
படுக்கையை விட்டு
இறங்கி தூக்கக்
கலக்கத்துடன் நடந்து செல்கிறான். வெளியே அவனது
தாயும் குடும்பத்தாரும்
போர் விமானங்கள்
வீசிய குண்டு
மழையில் இறந்து
கிடக்கிறார்கள். சனிக் கிழமை விடிகையில் அவனுக்குக்
கிடைத்த பரிசு
தாயின் மரணம்.
தொடர்ந்து அவனது
நேர்காணல். அவ்வளவுதான். படம் முடிந்து விடுகிறது. Satuarday morning gift என்ற
குறும்படத்தின் சுருக்கமான கதையிது. இந்தப் படத்தின்
இயக்குநர் சிரியாவின்
மிக இளவயது
மாணவன். பஸ்ஸல்
அல்-ஷாடே.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும்
நடந்த போரின்
விளைவால் உறவுகளை
இழந்த குடும்பங்களின்
அவல நிலையை
துயரத்துடன் பதிவு செய்த இப்படத்தை திரைமொழிக்
கவிதை என்று
திரைப்பட விமர்சகர்கள்
பாராட்டுகிறார்கள். கொடூரம் என்ன
என்றால் படம்
வெளிவந்து சில
வருடங்கள் கழித்து
யுத்த பூமியில்
ரத்தம் சிதற
செத்துக் கிடந்தார்
பஸ்ஸல்.
சிரியாவின் டமாஸ்கஸ்
நகரில் 1984-ம் வருடம்
பிறந்தார் பஸ்ஸல்.
ஒரு சகோதரன்,
ஒரு சகோதரி,
தாயார் என
அழகான அளவான
குடும்பம். பெரிய வசதிகள் எதுவுமற்ற மத்தியதர
வர்க்கக் குடும்பத்தின்
வருவாயைக் கருத்தில்
கொண்டு கம்ப்யூட்டர்
இன் ஜினியரிங்
பட்டப் படிப்பை
டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில்
படித்து முடித்தார்.
கணினித் துறையில்
திறமையாகக் கற்றுத் தேர்ந்து இணைய தள
வடிவமைப்பாளராக ஐ.நா. நிறுவனத்தின் டமாஸ்கஸ்
அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார் என்றாலும் அவரது
கவனம் புகைப்படக்
கருவி மீதே
இருந்தது. ஓய்வு
கிடைத்தால் கேமராவைத் தூக்கிக் கொண்டு சிரியாவின்
பிரதான நகரங்களைச்
சுற்றி படங்களை
எடுத்துவருவார். சிரியாவின் வனப்பு மிக்க பகுதிகளை
வாரிச் சுருட்டுவதற்காக
அவர் கேமராவைத்
தூக்கவில்லை,. மாறாக, சிரியாவின் ஜனநாயக விரோத
அரசை எதிர்த்து
நடந்த உள்நாட்டுக்
கலவரங்கள், லெபனான், இஸ்ரேல் போர்க் காட்சிகள்
ஆகியவற்றை தனது
கேமராவில் பதிவு
செய்தார். சிரியாவின்
திரைப்படக் கழகத்தைத் தோற்றுவித்து உலகின் சிறந்த
படங்களையும் ஆவணப் படங்களையும் திரையிட்டார்.
யுத்த பூமியின்
அவலங்களை ஆவணப்படமாக
எடுப்பதும், அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து
கொள்வதுமே அவரது
மனதுக்கு உவப்பான
காரியங்களாக இருந்தன. அவரது ‘பிரேக்ஸ்' எனும்
ஆவணப்படத்திற்கு டமாஸ்கஸில் நடந்த டக்ஸ் - பக்ஸ்
திரைப்பட விழாவில்
சிறந்த ஆவணப்
படத்திற்கான விருது கிடைத்தது.
சிரியாவில் நடந்து
வந்த உள்நாட்டுப்
போரைப் பற்றி
அறிவதற்கு முன்
சிரியாவின் பின்புலம் பற்றி அறிந்து கொள்வது
நல்லது. மேற்கு
ஆசியாவின் வளம்
மிக்க பழமையான
நாகரீக பின்னணி
கொண்ட சிரியாவுக்கு
வடக்கே துருக்கியும்,
கிழக்கே ஈராக்கும்,
தெற்கே ஜோடானும்,
மேற்கே லெபனான்
மற்றும் தென்மேற்கே
இஸ்ரேல் என்று
அந்த நாட்டைச்
சுற்றிலும் பற்றியெரியும் பிரச்சனைகள் கொண்ட தேசங்கள்
இருப்பதாலோ என்னவோ, சிரியாவுக்குள்ளும்
பிரச்சினைகள் கொழுந்து விட்டெரிகின்றன.
சிரியாவின் வரலாற்றைப்
புரட்டினால், பண்டைய காலத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களால் ஆளப்பட்டும் சீரழிக்கப் பட்டும் இருந்திருக்கிறது.
எகிப்தியர்கள், அசிரியர்கள், சுமேரியர்கள்,
பாபிலோனியர்கள், பெர்சியன்கள், ஆர்மீனியன்கள்
என்று வரிசையாக
வந்தேறி சிரியாவை
தங்கள் இஷ்டம்போல்
அடுத்த இனம்
வரும் வரை
ஒழுங்கற்றும் நெறியற்றும் நிர்வாகத்தை நடத்தி வந்திருக்கின்றனர்.
1946-க்கு முன்பு வரை
ஆக்கிரமிப்பாளர்கள் ஆட்சியில் சிரியா
சின்னாபின்னமாயிற்று. அதற்குப் பிறகு
சிரிய மக்கள்
தங்களுக்கான அரசை தேர்ந்தெடுத்தனர். அதுவும் நெடுநாள்
நீடிக்கவில்லை. 1971-ல் ஹஃபஸ்
அல் அஸத்
ஆட்சிக்கு வரும்போதே
சிரியாவில் நெருக்கடி நிலை பிரகடனத்தில் இருந்தது.
அதற்குப் பிறகு
ஜனநாயகமென்பது மருந்துக்கும் இல்லாமல் போனது. இராணுவ
பலத்துடன் எதையும்
அணுகி வந்த
ஹஃபஸ் கொஞ்சம்
கொஞ்சமாக மக்களின்
உரிமைகளைக் காக்கும் சட்டங்களையெல்லாம்
தூக்கியெறிந்து விட்டு சர்வாதிகாரப் போக்கைக் கடைபிடித்தார்.
ஹஃபஸ் இறந்த பிறகு
ஆட்சி அவரது
மகன் பஸ்ஸிர்
அல் அஸத்திடம்
வந்து சேர்ந்தது.
ஊழலும் நிர்வாக
சீர்கேடுகளும் எதிர்ப்பவர்கள் மீது கடுமையான தண்டனைகள்
கண்மூடித் தனமான
துப்பாக்கிச் சூடுகள் என்று கலவரக் காடாயிற்று
சிரியா. தொடர்
ஜனநாயக அத்துமீறல்களால்
சொந்த நாட்டு
மக்களையே கொன்று
குவித்ததால் ஐ.நா. மற்றும் அரபு
லீக் நாடுகள்
சிரியாவைக் கண்டித்தன. ஆனால், சிரிய அரசின்
போக்கில் மாற்றம்
ஏதுமில்லை. எதிர்த்துப் போராட வலிமையான அமைப்பை
ஏற்படுத்த யாரும்
துணியாததால், ஆங்காங்கே மக்கள் அற வழியில்
போராடினர்.
ஒரு முறை
வெள்ளிக் கிழமை
பிரார்த்தனையை முடித்து விட்டு அப்படியே பேரணியாக
அரசு அலுவலகங்களை
நோக்கி மெளனமாக
மக்கள் நடந்து
சென்றனர். வெள்ளிக்
கிழமை பிரார்த்தனைப்
பேரணி என்றழைக்கப்பட்ட
அந்தப் போராட்டத்தின்
போதும் அரசுப்
படைகள் தாக்கியதில்
ஒன்பது பேர்
இறந்து போயினர்.
இளைஞனாகிய பஸ்சல்
தன் பங்குக்கு
ஒரு சிறிய
ஆர்ப்பாட்டத்தை எகிப்து தூதரகத்துக்கு அருகே நடத்திக்
கைதாகி பின்
மூன்று நாட்கள்
கழித்து விடுதலையானார்.
சேகுவேரா மீது
மிகுந்த பற்று
கொண்ட பஸ்ஸல்
அவர் பல்வேறு
தென்னமெரிக்க நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்று
வந்தது போல்
தானும் சில
தேசங்களுக்குச் செல்லப் பிரியப்பட்டார். அதற்கு முன்னோட்டமாக
அல் பேரா
வரை 220 மைல்கள் பயணம்
செய்தார்.
பின், ஆப்கான்
வரை செல்லத்
திட்டமிட்டு, சிரியாவிலிருந்து கிளம்பி, இலெனின் என்று
பெயரிடப்பட்ட இரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட
தனது மோட்டார்
சைக்கிளில் துருக்கி ஈரான், பாகிஸ்தான் வழியாக
இந்தியாவின் நியூ தில்லி வந்தடைந்தார். அந்த
சமயத்தில் சிரியாவில்
போராட்டம் வலுவடைந்திருந்தது.
எனவே அவர்
ஆப்கான் செல்லாமல்
திரும்ப சிரியாவிற்கே
திரும்பினார்.
மார்ச் 15, 2011-ல் தற்செயலாக
ஏற்பட்ட தெருச்சண்டை
மூலம் சிரியாவின்
தன்னெழுச்சிப் போர் தோன்றியது. மார்ச் 18, 2011-ல் (அன்று
வெள்ளிக்கிழமை) சிரியாவின் ஹோம்ஸ் நகரில் துவங்கிய
போராட்டம், மேன்மை மிக்க வெள்ளி என்று
பெயரிடப்பட்டு, சிரியாவின் பிற நகரங்களான டெர்ரா,
இட் லெப்
மற்றும் ஹாரா
ஆகியவற்றுக்கும் பரவியது.
சிரியாவின் முன்னாள்
கால்பந்து வீரர்
அப்துல் பாஸித்
தலைமையில் வீதிப்
போராட்டங்கள் நடந்தன. தில்லியிலிருந்து சிரியா திரும்பிய
பஸ்ஸல் அந்தப்
போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
அதே சமயம்
அமெரிக்காவில் உள்ள சிராக்கஸ் பல்கலைக் கழகத்தில்
உதவித் தொகையுடன்
கூடிய திரைத்
தொழில்நுட்பப் பயிற்சியில் (Fulbright scholarship)
தனது குறும்படங்கள்,
ஆவணப்படங்கள் மூலம், போராட்ட உணர்வைத் தூண்டி,
அதன் மூலம்
சிரியாவில் ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்ய வேண்டும்
என்பது அவனது
நோக்கமாக இருந்தது.
எனவே சிறையிலிருந்து
வந்ததும், சிராக்கஸ்
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கிருந்தபடி,
சிரியாவின் மீது சர்வதேச கவனத்தை ஈர்க்கும்
நோக்கில்
Singing to Freedom என்ற
ஆவணப் படத்தை
எடுத்தான். அதில் அமெரிக்க அறிவு ஜீவிகளான
நோம் ஸாம்ஸ்கி,
நார்மன் ஃப்ராங்க்கைஸ்டின்,
அமி குட்மேன்
மற்றும் சிரியாவின்
போராட்டக்காரர் ரஸ்ஸன் சைத்தோனன் ஆகியோரது நேர்காணல்களைப்
பதிவு செய்தார்,
சிரியா பற்றி
வெளியுலகம் அறிய அந்தப் படம் உதவியது.
இதனிடையே சிரியாவில்
புதிய எழுச்சியாக
மாணவர்கள் போராட்டக்
களத்தில் குதித்தனர்.
அவர்களின் பங்களிப்பு
சிரியாவெங்கும் பேரெழுச்சியை ஏற்படுத்தியது.
போராட்டங்கள் பெருகப் பெருக, துப்பாக்கிச் சூடுகளும்
சித்திரவதைகளும் அதிகமாயின. . மார்ச் 2011 முதல் ஏப்ரல் 2012 வரை பல்வேறு
தாக்குதல்களில் 20,000 பேருக்கு மேல்
இறந்திருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது. எல்லையில் உள்ள
நாடுகளான லெபனான்,
இஸ்ரேல், ஈராக்,
துருக்கி ஆகியன
அகதிகளை ஏற்க
மாட்டோமென கதவுகளை
சாத்தின. ஐந்து
லட்சம் பேர்
தங்கள் உடமைகளை
விட்டுவிட்டு சிரியாவுக்கு உள்ளேயே அகதிகளாக இடம்
விட்டு இடம்
நகர்ந்தனர். 30க்கும் மேற்பட்ட
தொலைக்காட்சி நிருபர்கள், பத்திரிகையாளர்கள்,
தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த உள்நாட்டுக் கலவரத்தில்
ஏதாவது ஒருவகையில்
கொல்லப்பட்டனர், குறிப்பாக, ஃபர்செட் ஜர்பான் (டி.வி.நிருபர்),
மெரி கால்வின்
(அமெரிக்கா), ஜவான் முகமத் (சிட்டிசன் நிருபர்),
மிக்கா யமமோகி
(ஜப்பான் நிருபர்),
பாசினோ பர்கத்
(மீடியா செண்டர்)
ஆகியோர் கொல்லப்பட்டவர்களில்
சிலர்.
சிரியாவின் போராட்டம்
உச்சகட்ட உத்வேகத்தை
அடைந்ததைக் கேள்விப்பட்ட பஸ்ஸல், இது நாடு
திரும்ப வேண்டிய
தருணம் என்று
படிப்பை பாதியில்
விட்டுவிட்டு சிரியாவுக்குத் திரும்பினார்.
சிரியாவுக்குள் நடக்கும் போராட்டங்கள் மற்றும் போராளிகள்
பற்றியும் அமி
குட்மேனின் நேர்காணலுடன் Syria Through Lens எனும் ஆவணப்படத்தை
எடுத்தார்.
போராட்டத்தின் தலைநகர்
என்று அழைக்கப்பட்ட
ஹோம்ஸ் நகருக்குச்
சென்றார். அங்கு
நிகழ்ந்த அறவழியிலான
ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார்.
ஓய்வு நேரத்தின்
போது அங்குள்ள
இளைஞர்களுக்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய
தொழில்நுட்பங்களைக் கற்றுத் தந்தார்.
தினந்தோறும் நடக்கும் போராட்டம் குறித்து நேரடியாக
சென்று பதிவு
செய்தார். தன்னிடம்
கற்றுக் கொண்டவர்களிடம்
வெட்டி ஒட்டி
அதை உருவாக்கும்படி
கேட்டுக் கொண்டார்.
மே 2012-ல் நடந்த
போராட்டத்தில் பதினைந்து மாணவர்களைக் கைது செய்து
அரசுப் படை
அழைத்துச் சென்றது.
அதில் சிலர்
பின்னர் பிணமாகக்
கிடைத்தனர். பலர் காணாமல் போயினர். போராட்டத்தின்
வலு இன்னும்
அதிகமானது.
மே 29, 2012 அன்று தனது
நண்பர்களுடன் போராட்டக்காரர்களுக்கும் இராணுவத்துக்கும்
இடையே நடந்த
சண்டையை பதிவு
செய்யச் சென்ற
பஸ்ஸலை அவனது
நண்பர்கள் எச்சரித்தனர்.
அதையும் மீறி
கேமராவை மட்டும்
கையில் எடுத்துக்
கொண்டு நிராயுதபாணியாக
களத்தில் குதித்தார்.
கூட்டம் மிகுதியாக
மிகுதியாக, விமானம் மூலம் குண்டு வீசப்பட்டது.
ஏகப்பட்ட சிரிய
பிரஜைகள் அதில்
பிணமாயினர். பஸ்ஸலும் அவரது நண்பரும் கலவரத்தின்
போது காணாமல்
போயினர். மற்றொரு
செய்தியாளரான ஹசன் அவர்களைத் தேடித் தவித்தார்.
அவர் எப்படியும்
தப்பிப் பிழைத்திருப்பார்
என்ற நம்பிக்கையோடு
இரத்தச் சகதியில்
கிடந்த பிரேதங்களை
புரட்டிப் பார்த்தபடி
அவர் நடந்தார்.
இறுதியில் அந்த
துயரமான நிமிடங்கள்
ஹசனின் வாழ்வில்
வந்தே விட்டன.
அடையாளம் காண
முடியாதபடி படுகாயங்களுடன் பஸ்ஸலும் அவரது நண்பரும்
பிரேதங்களிடையே கிடந்தனர். மருத்துவமனைக்கு
அவர்களை தூக்கிச்
சென்றபோது அவர்கள்
இருவரும் ஏற்கனவே
இறந்து விட்டதாக
மருத்துவர்கள் உறுதிப்படுத்தத் தான் முடிந்தது. போர்க்காலத்தில்
பத்திரிகையாளர்களை தாக்கவோ அவர்களை
நோக்கி குண்டு
வீசவோ கூடாது
என்பது சர்வதேச
நடைமுறை. அதிகார
மமதை கொண்ட
ஆட்சியாளர்கள் எல்லா விதிகளின் மீதும் குண்டுகளை
வீசி மனசாட்சியில்லாமல்
பிரேதங்களின் மீது தங்களின் ஆணவச் செறுக்குகளை
அரங்கேற்றுகின்றனர்.
எண்ணெய் வளமோ
சுரண்டுவதற்குத் தோதான கனிம வளமோ அதிகம்
இல்லையென்றால் அங்கு நிகழும் மனித உரிமை
மீறல்களை, ஜனநாயகப்
படுகொலைகளை சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது.
கடைசியாக, சிராக்கஸ்
பல்கலைக்கழகத்தில் தன்னோடு படித்த
கொரிய நண்பனுக்கு
அனுப்பிய ஈ.மெயிலில் “ இங்கு
கலவரங்களும் குண்டு வீச்சும் அன்றாடம் நிகழ்ந்து
வருகின்றன. ஒருவேளை நான் அங்கு திரும்பி
வர இயலாவிட்டால்
நான் தங்கியிருந்த
அறையில் உலகின்
மிகச் சிறந்த
திரைப்படங்களின் டிவிடிகள் இருக்கின்றன. அவை விலைமதிப்பற்றவை.
அவற்றைப் பத்திரமாக
எடுத்து வைத்துக்
கொள்” என்று
குறிப்பிட்டிருந்தார் பஸ்ஸல்.
பதிலுக்கு அந்தக்
கொரிய நண்பர்,
“பத்திரமாக இருக்கின்றன. உனக்காக அவை காத்திருக்கின்றன.
விரைவில் திரும்பி
வா” என்று
சுருக்கமாக பதில் அனுப்பி இருக்கிறார்.
உலகத் திரைப்பட
டிவிடிக்கள் மட்டுமல்ல; திரைப்பட உலகமே அவரது
உன்னதமான படைப்புகளுக்காக
காத்துக் கொண்டிருந்தது.
ஆனால் பஸ்ஸல்
தான் வரவேயில்லை.
ஒரு மகத்தான
கலைஞனை மரண
பூமி விழுங்கி
விட்டது……
நன்றி: 'நிழல்' -ஜூலை-ஆகஸ்ட்-2013
அருமையான கட்டுரை....
பதிலளிநீக்குஎத்தனையோ சாதித்து இருக்க வேண்டியவரை யுத்தபூமி விழுங்கிவிட்டதே...... :(
தொடர்ச்சியான தங்கள் வாசிப்பும், பின்னூட்டமும் என்னை உற்சாகப்படுத்துகிறது மிக்க நன்றி சார்
பதிலளிநீக்கு