காட்சி: 15
பாத்திரங்கள் :
வ.உ.சி, ஜெயிலர்
ஜெயிலர்:
சிதம்பரனாரே, ஜெயிலுக்குள்
கட்டுக்கடங்காத கலவரம் நடக்கிறது. நீங்கள் உங்கள்
வேலையை இங்கும்
காண்பித்து விட்டீர்களா?
வ.உ.சி:
கலவரமா? எதனால்?
யார் யாருக்கு?
ஜெயிலர்:
ஒன்றும் புரியாதது
போல் நடிக்காதீர்கள்.
ஜெயில் சுப்பரிடெண்டெண்ட் மிஞ்சேலை யாரோ
நையப் புடைத்து
விட்டார்கள். அவரை மருத்துவ மனைக்குத் தூக்கிச்
செல்லும் அளவுக்குப்
படுகாயம் அடைந்து
விட்டார்.
வ.உ.சி:
அடடே... கைதிகள்
நிலை கவலைக்கிடமாகிவிடுமே...!
தேவையில்லாமல் எதற்கு இப்படியொரு பிரச்சினை?
ஜெயிலர்:
யார் ஆரம்பித்தது
என்று தெரியாது.
ஆனால் எப்படி
முடிக்க வேண்டுமென்று
எங்களுக்குத் தெரியும்.
வ.உ.சி:
(மனசுக்குள்) சரிதான்.
வடுகராமன் விளையாடி
விட்டான் போலிருக்கிறதே.
ஜெயிலர்:
என்ன சொல்கிறீர்கள்?
வ.உ.சி:
ஒன்றுமில்லை... வடுகராமனுக்கு
என்னாயிற்றோ என்று கவலைப்பட்டேன்.
ஜெயிலர்:
அவன் தான்
கன்விக்ட் வார்டன்
ஆயிற்றே... அவனுக்கு எதுவும் ஆகவில்லை. மிஸ்டர்
சிதம்பரம், கலவரத்தை தூண்டிவிட்டு நிலவரத்தை கேட்டுக்
கொண்டிருக்கிறீர்களா?
வ.உ.சி:
எனக்கே என்ன
நடந்தது என்று
இப்பொழுது தான்
தெரியும்.
ஜெயிலர்:
ஓஹோ... நீங்கள்
சொன்னதைச் செய்திருக்கிறார்களா
என்று சரிபார்த்துக்
கொண்டிருக்கிறீர்களா?
வ.உ.சி:
அபாண்டமாகப்
பேசாதீர்கள். கலவரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை.
ஜெயிலர்:
ஏற்கனவே கைதிகளுக்குத்
தரப்படும் உணவு
தரமில்லை என்று
உண்ணாவிரதம் இருக்கத் தூண்டியவர்தானே நீங்கள்... உங்களை
தனிமைச் சிறையில்
அடைக்கும்படி உத்தரவு.
வ.உ.சி:
எங்கே இடி
இடித்தாலும் என் தலையில் தான் மழையா?!
ஜெயிலர்:
அங்கே உங்களுக்கு
கைராட்டை தரப்படும்.
தனிமையில் நூல்
நூற்றுக் கொண்டு
கிடங்கள்.
வ.உ.சி:
சிறையில் நூல்
தயாராவது வழக்கம்
தானே... என்னுடைய
நூலும் வரட்டும்.
ஜெயிலர்:
உங்கள் தத்துவ
போதனைகள் தேவையில்லை.
வ.உ.சி:
நூல் நூற்கும்
பணி சுதேசிப்
பொருட்களை உற்பத்தி
செய்வதில் மிக
முக்கியமானது. சுதேசிப் பொருட்களைத் தான் உற்பத்தி
செய்ய வேண்டும்;
சுதேசிப் பொருட்களைத்
தான் விற்பனை
செய்ய வேண்டும்...
என்று நாங்கள்
வெளியே சொல்லிக்
கொண்டிருந்தோம். அதைத்தான் நீங்கள் சிறைக்கு உள்ளே
சொல்லிக் கொண்டு
இருக்கிறீர்கள். நீங்களும் எங்கள் வழிக்கு வந்து
விட்டீர்கள்.
ஜெயிலர்:
வ.உ.சி.யின்
எலும்பு கூட
ஒருவனின் உணர்வுகளை
தட்டியெழுப்பி அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வைத்துவிடும்
என்று நீதிபதி
பின்ஹேய் சொன்னது
சரியாகத்தான் இருக்கிறது. விரைவில் உங்களை கண்ணனூர்
சிறைக்கு மாற்றப்
போகிறோம். அங்கு
உங்கள் தமிழ்ப்
பேச்சைக் கேட்க
ஒருவர் கூட
இருக்க மாட்டார்கள்.
காட்சி: 16
பாத்திரங்கள் :
வ.உ.சி, மலபார் மாப்பிள்ளை, சிவம்
மலபார் மாப்பிள்ளை:
ஐயா நீங்கள்
இந்தக் கண்ணனூர்
சிறைக்கு வந்து
ஒன்றரை வருடங்கள்
ஓடிவிட்டன. இன்று உங்களுக்கோர் மகிழ்ச்சியான செய்தி.
பிரிவியூ கவுன்சிலில்
தண்டனைக் குறைப்பு
காரணமாக, உங்களுடைய
சிறைவாசம் முடிவுக்கு
வருகிறது. இன்று
உங்களுக்கு விடுதலை.
வ.உ.சி:
அப்படியா மலபார் மாப்பிள்ளை
அவர்களே, இன்றைக்கு என்ன கிழமை,
என்னதேதி?
மாப்பிள்ளை:
ஐயா, சிறைவாசம்
உங்களை நாள்
கிழமை என்னவென்று
கூட மறந்து
போகுமளவுக்கு மாற்றி விட்டது. இன்றைக்கு 1912-ம்
வருடம் டிசம்பர்
4-ம் தேதி.
வ.உ.சி:
அப்படியா! உங்களுக்கு
எப்போது விடுதலை?
மாப்பிள்ளை:
நான் கொலைக்
குற்றவாளி. என் மீது கணக்கற்ற கொலை
வழக்குகள் உள்ளன.
நீங்கள் சிறைக்கு
வந்த போது
எனக்குத் தரப்பட்ட
வேலையென்ன என்பது
உங்களுக்குத் தெரியுமா?
வ.உ.சி:
தெரியாதே... என்ன
மாதிரி வேலை?
மாப்பிள்ளை:
முரண்டு பிடிக்கும்
கைதிகளை விடுதலைப்
போராட்டத்தில் பங்கு பெற்ற அரசியல் கைதிகளை
கம்பளிகளைக் கொண்டு போர்த்தி விட்டு கண்மண்
தெரியாமல் அடிப்பது.
வெளிக்காயங்கள் எதுவும் தெரியாது. ஆனால் உள்ளே
உள்ள மிகச்
சிறிய எலும்புகள்
கூட முறியக்
கூடும். இரக்கமற்ற
குணமுடையவன் என்று என்னிடம் இந்த வேலையை
ஒப்படைத்திருக்கிறார்கள். நான் முதலில்
உங்களைச் சந்தித்தது
உங்களையும் கம்பளி கவனிப்புக்கு ஆளாக்குமாறு சிறை
அதிகாரிகள் உத்தரவிட்டதன் காரணமாகத் தான்.
வ.உ.சி:
அப்படியா! நீ
ஒரு முறை
கூட அது
போல் என்னை
செய்ததில்லையே...
மாப்பிள்ளை:
உண்மைதான். உங்கள்
மென்மையான குணமும்
எளிமையான நடவடிக்கைகளும்
என்னை மிகவும்
கவர்ந்து விட்டன.
நீங்கள் வெள்ளையர்களை
எதிர்த்து கப்பல்
ஓட்டியவராமே... உஙக்ள் பேச்சுக்கும் எழுத்துக்கும் அவ்வளவு
மரியாதையாமே.. இங்கு வந்த பிறகு நீங்கள்
எழுதிய உங்கள்
சுயசரிதையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப்
படித்ததும் என் மனம் நெகிழ்ந்தது. இந்த
நாட்டுக்காக எவ்வளவு இழப்புகளைத் தாங்கியிருக்கிறீர்கள்! அதனால்தான் எந்த அச்சுறுத்தலும் என்னால்
உங்களுக்கு வரக்கூடாதென நினைத்தேன்.
வ.உ.சி:
ரொம்ப நன்றியப்பா!
நீர் நீடூழி
வாழ்க!
மாப்பிள்ளை:
என்னைப் பற்றிக்
கேள்விப்பட்டவர்களெல்லாம் நான் எப்போது
செத்து ஒழிவேன்
என்றுதான் விரும்புவார்கள்;
பேசுவார்கள்; நிந்திப்பார்கள். ஆனால் நீங்கள் மட்டும்
நான் எத்தனை
கொலைகள் செய்தேன்,
எப்படிச் செய்தேன்
என்றெல்லாம் கேட்டுத் துன்புறுத்தவில்லை.
உனக்கு எப்பொழுது
விடுதலை? நீ
எப்போது உன்
குடும்பத்தைப் பார்ப்பாய்? என்றுதான் கேட்டுக் கொண்டு
இருந்தீர்கள். நீங்களும் இப்போது சென்று விட்டால்,
என்னை யார்
இப்படி பரிவோடு
கேட்க இருக்கிறார்?
வ.உ.சி:
(சிரித்துக் கொண்டே)
வேண்டுமானால், உனக்காக என் தண்டனையை நீட்டிக்கச்
சொல்கிறேன். வெள்ளையர்கள் சந்தோஷப் படுவார்கள்.
மாப்பிள்ளை:
(பதறியபடி) ஐயய்யோ...
நீங்கள் இத்தனை
ஆண்டுகள் சிறைதண்டனை
பெற்றதே அநீதி.
இதில் இன்னும்
நீங்கள் இங்கு
இருக்க வேண்டுமா?!
வெளியே சென்று
நாட்டு மக்களுக்கு
சுதந்திர வேட்கையை
ஊட்டுங்கள். உங்களை வரவேற்று அழைத்துச் செல்ல
உங்கள் நண்பர்
காத்துக் கொண்டிருக்கிறாராம்.
வ.உ.சி:
மகிழ்ச்சி. நீயும்
விரைவில் விடுதலையாகி,
எல்லோரையும் போல சந்தோஷப் பறவையாக இருக்க
வாழ்த்துகிறேன்! வருகிறேன்.
சிவம்:
ஐயா, வாருங்கள்.
எத்தனை ஆண்டுகளாயிற்று
உங்களைப் பார்த்து!
எப்படி
மெலிந்து உருக்குலைந்து போய் விட்டீர்கள்!
வ.உ.சி:
ஆமாம். நீங்கள்
யார்?
சிவம்:
ஐயா, என்னைத்
தெரியவில்லையா? தொழுநோய் மெல்ல மெல்ல என்
உடலை அரித்துத்
தின்றுகொண்டிருக்கிறது. இந்த வியாதிதான்
என்னை விரைவில்
சிறையை விட்டு
வெளியே வரவழைத்திருக்கிறது.
நான் தான்
உங்கள் சிவம்.
சுப்பிரமணிய சிவா.
வ.உ.சி:
அடக்கொடுமையே! சிவமா?!
சிங்கம் போல
பிடறி சிலிர்க்க
முகத்தில் எப்போதும்
கனல் வீச
நீங்கள் நடந்து
வருவதே அத்தனை
அழகாக இருக்கும்.
இப்படியொரு கொடுமையா உங்களுக்கு?! அருகே வாருங்கள்
சிவம்.
சிவம்:
வேண்டாம் ஐயா..
என்னைத் தொடாதீர்கள்.
தொழுநோய் உங்களையும்
தீண்டிவிடக் கூடாது.
வ.உ.சி.:
உங்கள் அன்பும்
நட்பும் மட்டும்
வேண்டும்; ஆனால்
நீங்கள் படும்
துன்பம் மட்டும்
வேண்டாம் என்றால்
எப்படி? தொழுநோய்
தொடுவதால் பரவாது
சிவம்.. தோழமைதான்
பெருகும்.. நெருங்கி வாரும் உம்மை ஆரத்தழுவி
எத்தனை நாட்களாகின்றன..
அருகே வாருங்கள்
சிவம்.
சிவம்:
உமது கரங்கள் பட்டு எனது தனிமை நோய் தீர்ந்தது அய்யா இந்த
உலகம் மாறி
விட்டது. இந்த
மனிதர்கள் மாறி
விட்டார்கள். எத்தனை அளப்பரிய தியாகம் செய்திருக்கிறீகள்.
ஆனால் உங்களை
வரவேற்க இந்த
ஜனங்கள், நண்பர்கள்
... எவருமே வரவில்லையே...! கப்பல் கம்பெனியை இழுத்து
மூடிவிட்டார்கள். அந்த செய்தி தெரியுமா உங்களுக்கு?
வ.வு.சி:
கேள்விப் பட்டு
நெஞ்சம் பதைபதைத்தது.
அதைவிடக் கொடுமை
எந்த பிரிட்டிஷ்
காரர்களை எதிர்த்து
கப்பல் வாணிபம்
நடத்த வேண்டுமென்று
அரும்பாடு பட்டேனோ
அவர்களிடமே நான் வாங்கி வந்த கப்பல்களை
விற்று விட்டதாக
கேள்விப்பட்ட போது என் நெஞ்சில் ஆயிரம்
ஈட்டிகள் பாய்ந்தது
போல் துடித்துப்
போனேன்.
சிவம்:
உங்களை சிறையில்
வைத்து கொடுமைப்
படுத்தியதற்காகவும், உங்கள் கப்பல்
கம்பெனியை நஷ்டமடையச்
செய்ய சதி
செய்ததற்காகவும் ஆஷ் துரையை நமது தீரமிக்க
தம்பி வாஞ்சி
சுட்டுக் கொன்று
விட்டு தன்னையும்
மாய்த்துக் கொண்டான்.
வ.உ.சி:
அது இன்னொரு
கொடுமை. வாஞ்சி
போன்ற வீர
வேங்கைகள் நம்
நாட்டின் சுதந்திரப்
போருக்கு எத்துணை
அவசியம்! அவர்
தன்னுயிர் மாய்த்ததைத்
தான் என்னால்
தாங்கிக் கொள்ளவே
முடியவில்லை. திடமும் தெளிவும் கொண்ட அவரைப்
போன்ற தீரம்
மிக்கவர்கள் ஒருபோதும் தங்கள் உயிரை மாய்த்துக்
கொள்ளக் கூடாது.
விடுதலைப் போரில்
நானும் நீங்களும்
தீவிரவாதிதான். ஆனால், பயங்கர வாதம் நம்
கொள்கையல்ல. இனி வெள்ளையர்களை ஒருபோதும் கொல்லக்
கூடாது. அதன்பொருட்டு
நம் இளைஞர்கள்
உயிரிழப்பு ஏற்பட்டால் அது இந்தியாவுக்குத் தான்
நஷ்டம். ஆயிரம்
கயவர்கள் ஆஷ்
போல் தோன்றுவார்கள்.ஆனால் , ஒரு
வாஞ்சி கிடைப்பது
கடினமல்லவா! சுதந்திரப் போராட்டத்துக்காக
மட்டுமல்ல, சுதந்திரம் பெற்ற பிறகு நாம்
சுயமாக எழுந்து
நிற்க இன்னும்
பல இலட்சம்
இளைஞர்கள் தேவை.
சிவம்:
உண்மைதான். வாஞ்சியின்
இடத்தை எவர்
நிரப்ப முடியும்?!
வ.உ.சி:
சுதந்திர இந்தியா
வல்லரசாகத் திகழ, நாம் நமது கவனத்தை
ஆயுதங்களின் மீது செலுத்தக் கூடாது. பொருளாதார
ரீதியாக நம்மை
வலுப்படுத்த வேண்டும். தொழில் ரீதியாக ஒரு
புதிய புரட்சியை
ஏற்படுத்த வேண்டும்.
விவசாய வளங்களை
இன்னும் அதிகப்படுத்த
வேண்டும். இத்தனை
பணிகள் இருக்கின்றன.
தன்னலம் கருதாத
தியாகிகள் கையில்
இந்த தேசம்
வீறு கொண்டு
எழவேண்டும். எவன் நம்மை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினானோ,
அவன் நம்மைப்
பார்த்துக் கலங்கி ஒதுங்கி நிற்க வேண்டும்.
இதுவே என்
கனவு. இதுவே
இந்த நாட்டு
இளைஞர்களுக்கு என் செய்தி.
சிவம்:
உங்கள் கனவு
நனவாகும் காலம்
வெகு தூரத்திலில்லை.
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!!
வ.உ.சி:
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வாழ்க பாரதம்!
வாழ்க நம்
மணித்திரு நாடு!!
பாத்திரங்கள் :
அப்பா, மகன்
சிறுவன் சிதம்பரம்:
வந்தே
மாதரம்! வந்தே
மாதரம்!! வாழ்க
பாரத மணித்திருநாடு!!
அப்பா, இப்படியும்
கூட ஒருவர்
கஷ்டப்பட முடியுமா?!
இப்படியும் கூட தைரியமாக ஒருவர் இருக்க
முடியுமா?!
அப்பா:
இருந்தாரே...! அவர்தான்
செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! பொருளாதார
மேதை! தன்னலமற்ற
தன்மானச் சிங்கம்!
வ.உ.சிதம்பரனார்.
சிறுவன்
சிதம்பரம்:
எங்களுடைய காலத்தில்
இந்த நாட்டுக்கு
எது வேணும்னு எப்படி
இவ்வளவு வருஷங்களுக்கு
முன்னாலேயே யோசிச்சிருக்கிறார்?! வ.உ.சி.ன்னா
என்னன்னு இப்பதான்
புரியுது. வந்தே
மாதரம் உணர்த்திய
சிதம்பரனார்; வந்தேறிகளை உலுக்கிய சிதம்பரனார்; வரும்பொருள்
உரைத்த சிதம்பரனார்...
எல்லாமே ரொம்பப்
பொருந்துதுப்பா.
அப்பா:
இப்ப புரியுதா...?
நான் உனக்கு
ஏன் சிதம்பரம்ன்னு
பேர் வெச்சேன்னு?!
சிறுவன்:
புரியுதுப்பா. எனக்கு
இப்ப ரொம்ப
பெருமையா இருக்கு.
இனிமே யாராவது
சிதம்பரம்ங்கற பேரை கிண்டல் பண்ணினா கோபப்பட
மாட்டேன். அவங்களுக்கு
பொறுமையா வ.உ.சி.யோட வரலாற்றைச்
சொல்லுவேன். வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
அப்பா: வந்தே
மாதரம்! வந்தே
மாதரம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>