வெள்ளி, 3 மே, 2013

‘நாம்' நின்றாக வேண்டும்... (வ.உ.சி. நாடகம் - தொடர்ச்சி )


                  காட்சி - 2
பாத்திரங்கள்:
                  ..சி, பாண்டித்துரை தேவர், சுப்பிரமணிய சிவா

..சி. :
                வாருங்கள்... பாலவநந்தம் ஜமீன் பாண்டித்துரை ஐயா அவர்களே.... வணக்கம்! தோழமைக்கும் ஆளுமைக்கும் உரிய சுப்பிரமணிய சிவா, தூத்துக்குடி தன்மானச் சிங்கம் கோபால்சாமி ஐயா, நட்புக்கொரு இலக்கணம் நல்லபெருமாள் ஐயா எல்லோரும் வாருங்கள்...! அனைவரையும் ஒருசேர பார்க்கின்ற பாக்கியத்தை கடவுள் இன்று எனக்கு அருளியிருக்கிறார். எல்லோரும். அமருங்கள்

சிவா:
                சிதம்பரனாரே... நீங்கள் நிற்கிறீர்களே...

..சி.
           நான் நின்றாக வேண்டும் சிவா... நான் மட்டுமல்ல... ‘நாம்' நின்றாக வேண்டும்... நிற்க விடாமல் எத்தனை சதிகள்... எத்தனை தடைகள்...!

பாண்டித்துரை:
         வெள்ளைக்காரர்கள் பணபலமும் படைபலமும் மிக்கவர்கள். அவர்களை எதிர்த்து நாம் நிற்பதென்பது பேரலைக்கு எதிரே சிறுபிள்ளை மணலில் எழுதுவது போல. அடுத்த அலை வந்தால் அடித்துச் சென்று விடுகிறதே...

..சி. :
        பாண்டித் துரையாரே... நாம் எழுத வேண்டியது மணலில் அல்ல   கடலில். இந்தியா முழுக்க அவர்கள் வெறும் ஐம்பதினாயிரம்                            பேர் மட்டும். நாமோ முப்பது கோடி. எது பலம்?

பாண்டித்துரை:
          வெள்ளைக்காரக் கம்பெனிக்கு எதிராக நாம் கப்பல் விடுவது எந்த வகையில் நமக்கு ஏற்றம் தரும்? அது வீண் போராட்டமென்று நமது முதலீட்டாளர்களில் பெரும்பாலானோர் ஐயப்படுகிறார்கள்.

..சி. :
         இங்கே சம்பாதிக்க முடியுமென்ற எண்ணம் உள்ள வரை தான் அவன் இங்கு அதிகாரம் செய்வான். இலாபம் இல்லாத இடத்தில் அவன் ஒருநாளும் இருக்க மாட்டான்.

பாண்டித்துரை:
       ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள். கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போல.... இருக்கிறது....


..சி. :
        தொலைநோக்குத் திட்டங்கள் யாவும் இப்படித்தான் இருக்கும். உடனடிப் பலன் தராத எதையும் நாம் ஏற்கத் தயாராய் இருப்பதில்லை. நீங்கள் சொன்னீர்களே... அவனுக்குப் பணபலம்     அதிகமென்று... அந்த பலத்தை சாய்ப்பது தான் எனது குறிக்கோள்.

பாண்டித்துரை:
         ஏற்கனவே நமக்கு கப்பலை வாடகைக்குத் தந்த டாஜ்பாய்   ஒப்பந்தத்தை மீறி  இப்பொழுது கப்பல் தர மறுக்கிறான். ஷாலைன், இப்ஸ்விச் கப்பல்கள் நம் கைவிட்டுப் போய் விட்டன...   கொழும்பிலிருந்து சார்ட்டர் கப்பலை வரவழைத்தோம். ஆனால் அது நம்மை கடலில் மூழ்கடித்து விடும் போலிருக்கிறதே... வேறு வழியில்லை. அதையும் நாம் கைவிட வேண்டியது தான்.

..சி. :
          உண்மைதான். வெள்ளைக்காரன் பணம் தின்னும் வியாபாரி. பணம் சம்பாதிக்க அவன் எந்த எல்லைக்கும் போவான். ஆனால், நாம் செய்வது வியாபாரமல்ல; போராட்டம். அதில் நம் சொந்த தேசத்து மக்களுக்கு பங்கம் வராமல் மிகக் கவனமாக செய்ய வேண்டியிருக்கிறது. சில இழப்புகள் தவிர்க்க முடியாதவை.

சிவம்:
        போராடுவதற்கு ஆயுதங்கள் இருக்கின்றன. இன்னொரு பக்கம் அஹிம்சை இருக்கிறது. இரண்டையும் விட்டுவிட்டு இதென்ன  புது யுக்தி?
..சி. :
        சுப்பிரமணிய சிவா... நீங்கள் அறியாததல்ல. ஆயுதங்கள்     இரத்தம் கேட்கின்றன... அஹிம்சையோ பொறுமை கேட்கிறது.       அவரவர், அவரவர் உத்தியில் போராடட்டும். என்னுடைய             திட்டம் வாணிபத்தை வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவர்களை, அதே வாணிபத்தை  வைத்துதான்  விரட்ட வேண்டும்.
பாண்டித் துரை:
                அதெப்படி சாத்தியம்?

..சி. :
      நமக்கெல்லாம் தெரியும். வெள்ளையர்கள் துவக்கிய அர்பனாட் வங்கி நஷ்டத்தின் காரணமாக  இன்னும் சிலநாட்களில் இழுத்து    மூடும் நிலையில் இருக்கிறது. அதில் முதலீடு செய்த எத்தனை இந்திய அப்பாவி மக்கள் இன்று கலங்கி நிற்கின்றனர்?!                 வெள்ளையனுக்கு வேண்டியது இலாபம். அது இல்லையேல் எந்த வியாபாரத்தையும் இழுத்து மூடி விடுவான். அவனுக்கு  நம் மக்களைப் பற்றி என்ன கவலை? ‘நமக்கென்று ஒரு வங்கியை நாமே உருவாக்குவோம்' என்று சென்னையில் இருக்கும்  ஸ்ரீலாட்  கோவிந்த தாஸ் கடும் முயற்சியில் இருக்கிறார்.

சிவம்:
                ஆமாம். மகாகவி சுப்பிரமணிய பாரதி கூட அதற்காக குரல்                                 கொடுத்திருக்கிறாரே...

..சி. :
       வெள்ளைக்காரன் அது கண்டு அஞ்சி நடுங்குகிறான். பொருளாதார ரீதியாக தொழில்துறை ரீதியாக நாம் தன்னிறைவு பெற்று விட்டால் எவனும் நம்மை அடிமையாக்க முடியாது.
சிவம்:
       உண்மையில் உமது திட்டம் உன்னதமானது! தரணியில்        எவருக்கும் அஞ்சாத நிலையை நாம் எட்டி விடுவோம்.

..சி. :
       உறுதியாக நாம் எட்டி விடுவோம் சிவம்! வெள்ளைக்காரனை                          விரட்டுவது மட்டுமல்ல நம் பணி. நம்மை நாமே ஆளக் கற்றுக்                        கொள்ள வேண்டும். சுதந்திரம் நமது இலக்காக இருக்கலாம்.  அதைவிட முக்கியம் சுயாட்சித் திறன்.

பாண்டித்துரை:
       பிள்ளைவாள்... நீர் ஒரு சமூக விஞ்ஞானி.  நமக்கு அந்த திறன் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கே இருக்கிறது...

..சி. :
        பாண்டித்துரை அவர்களே! சந்தேகமே வேண்டாம். ஒரு காலத்தில் மேற்கே ரோம நாட்டிலிருந்து, கிழக்கே ஜாவா சுமந்திராவுக்கு அப்பாலும் தமிழ்க் கலங்கள் போய் வந்தன. அப்பொழுதெல்லாம் தமிழர்கள் சுதந்திரமாகத் தான் வாழ்ந்து                 வந்தனர். அந்த நிலை திரும்ப வேண்டுமென்றால், கடல் மேல்       நாம் ஆதிக்கம் செலுத்தியே ஆக வேண்டும். அதற்காகத் தான்   சுதேசி நேவிகேஷன்ஸ் கம்பெனி.

சிவம்:
                கம்பெனியின் நோக்கம்?

..சி. :
        நியாயமான கட்டணத்தில் இந்தியர்கள் ... ஏன், ஆசியர்கள் முழுக்க பயணம் செய்ய வேண்டும். நமது வியாபாரத் தொடர்புகள் இதன்மூலம் பெருகும்; உறுதி படும். இரண்டாவதாக, கப்பல் கட்டவும், கப்பல் ஓட்டவும் பயிற்சி நிலையங்கள், கலாசாலைகள் அமைக்க வேண்டும். மூன்றாவதாக, ஆசிய தேசங்கள் அத்தனையும் இதன்மூலம் ஒற்றுமைப் படுத்த         வேண்டும். நான்காவதாக, ஆசியாவைத்  தவிர  உலகின் பிற              தேசங்களோடும், இந்தியா வாணிபம் செய்து வல்லரசாக  நிற்க வைக்க வேண்டும்.

பாண்டித்துரை:
        இலட்ச இலட்சமாக சம்பாதித்து தனவந்தராக வேண்டும் என்று                    ஒரு வரி கூட உங்கள் வாயிலிருந்து வரவில்லையே...!\


..சி. :
                (சிரித்தபடி)
                 நாமெல்லாம் இலட்சியவாதிகள்  பாண்டித்    துரையாரேஇலட்சங்களைப் பற்றிப்பேசுவது   ...          இலட்சணமில்லை.                                                                       

சிவம்:
                இதற்கெல்லாம் எப்படிப் பணம் திரட்டுவது?

..சி. :
       ஆளுக்கு இருபத்தைந்து ரூபாய் வீதம் பங்குகள் திரட்ட வேண்டும். அதிக அளவு முதலீடு செய்ய நிறைய தனவந்தர்கள் தயாராக இருக்கிறார்கள். தென்னாப்ரிக்கத் தமிழர் செல்வந்தர்  வேதமூர்த்தி முதலியார் கூட பெரும் தொகைதர முன் வந்திருக்கிறார்கள்அதுமட்டுமல்ல... லாடு கோபால்தாஸ்               துவங்க உத்தேசித்திருக்கும்  பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து நமக்குக் கடன் தர பேசி வருகிறேன்.

சிவம்:
         பங்குகள் திரட்டுவதா... அடடா! என்ன ஒரு அற்புதமான திட்டம்! அது மட்டும் தொடர்ந்துவிட்டால் இந்தியர்கள் எல்லோரும் முதலாளிகள் தான்!

..சி. :
         ஆமாம் சிவம். சேலம் விஜயராகவாச்சாரியார், பால்பீட்டர் பிள்ளை, சங்கரன் நாயர் ஆகியோர் சட்ட ஆலோசகர்களாக                   இருக்க சம்மதித்திருக்கிறார்கள். அவர்கள் இருப்பது ஆயிரம் கோடி ரூபாய்க்குச் சமம். பாலவனந்தம் பாண்டித் துரைத் தேவரே... நீங்கள்தான் நம் கம்பெனிக்கு செயலராக இருந்து வழிகாட்டி பலமூட்ட வேண்டும்.


பாண்டித்துரை
:
        நீங்கள் தலைவராக இருக்கும் ஒரு அமைப்பில் நான் செயலராக                                இருக்க  பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். என்னுடைய கேள்விகள் உங்களை சங்கடப்படுத்த அல்ல. சிலருக்கு       ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்ய. பிழை இருந்தால்                  பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வழக்குரைஞர் மட்டுமல்ல; ஒரு பொருளாதார மேதையும் கூட! என்பதை இந்த உலகம்  ஒருநாள்  உணரத்தான் போகிறது.

..சி. :(சிரித்தபடி)
         சுதேசிக் கப்பல் கம்பெனி நான் யாரென்று நிரூபிப்பதற்காக                                அல்ல. நாம் யார் என்று நிரூபிப்பதற்காக. ஐயா நல்லபெருமாள்                     பிள்ளையவர்களே... கப்பல் வாங்குவதில் ஏற்கனவே நல்ல அனுபவமுள்ள ஜோசப் லூயிஸை உடனடியாகப் பம்பாய்க்கு அனுப்புங்கள். நானும் பம்பாய் செல்கிறேன். வந்தால் கப்பலோடு                 தான் வருவேன். இல்லையேல் கடலில் வீழ்ந்து மாய்வேன். வந்தே மாதரம்!

(அனைவரும்) :
                வந்தே மாதரம்!

(வளரும் ...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

 எனது நூல்கள்                                                                       (மின்னூல்)