திங்கள், 20 ஜூன், 2011

PEEPLI (LIVE)

    PEEPLI (LIVE)

       சமீப காலமாக தேநீர்க் கடைகள், திரையரங்கங்கள், திருமணக்கூடங்களில் சக மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் சலிப்பான உரையாடல் ஒன்றை நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இந்தியா எந்திரமயமாகி வருகிறது. நகரங்களில் மக்கள் நிமிடங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அவசரகதியில் சக மனிதர்களைப் பற்றிய அக்கறையில்லாமல் பறக்கிறார்கள். வீடுகள் நெருக்கமாகி இருக்கின்றன. மனிதர்கள் தூரம்தூரமாக விலகிவிட்டார்கள் என்ற அர்த்தம் தொனிக்கிற பேச்சுக்களை வெவ்வேறு குரல்களில் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள்.
       தொழில் பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சியென்று இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகளோடு சமபலத்தில் மோதும் அளவிற்குப் பெருகிவிட்டது. ஆனால் மனிதம் வீழ்ந்து கொண்டிருக்கிறதே என்ற கவலை, இரண்டு மூன்று தலைமுறைகளை ஒருங்கே பார்க்க முடிந்தவர்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இது இயல்பாகி விடலாம்.
       யோசித்துப் பார்க்கையில் எல்லாப் பொருளாதாரக் காரணங்கள் சமகால நியாயங்களையும் தாண்டி, மூலகாரணமாய் ஒன்று தோன்றுகிறது. சில பத்து வருடங்கள் முன் வரை ‘இந்தியா ஒரு விவசாய நாடு' என்பதுதான் சர்வதேச அரங்கில் நமக்கான அடையாளமாக இருந்தது. ஆனால் இன்று இந்தியா ஒரு வளர்ந்து வரும் தொழில்துறைகள் சார்ந்த நாடு என்பதுதான் சரியாக இருக்கும். வயல்கள் நிரம்பியிருந்த ஊர்களில் இன்று ‘கான்கிரீட் காடுகள்' என்னும் அளவுக்கு கட்டடங்கள் பெருகி விட்டன. உயிர்ப்பான ‘பயிர்கள்' நம் பிரதான உற்பத்திப் பொருளாக இருந்தவரை நம்மிடையே ‘மனிதமும்' உயிர்ப்புடன் இருந்தது. விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘உயிரற்ற' பொருட்களின் உற்பத்திப் பெருகப்பெருக மனிதமும் செத்துவிட்டதோ என்று தோன்றுகிறது.
       தை மாதம் பிறந்துவிட்டால் திரும்பிய பக்கமெல்லாம் பசேசென்று வயல்கள் பூத்துக் குலுங்க இந்த தேசமே உயிர்ப்புடனிருப்பது போல் பார்க்கச் சிலிர்ப்பாக இருக்கும். நாற்று நடும்போதும், களைபறிக்கும் போதும், அறுவடையின் போதும் பாட்டு, கேலி, கிண்டல் என்று பணிபுரியும் சூழலில் கூட சகமனிதர்களோடு கலந்து உறவாடுவது நம் வாழ்வின் மரபாக இருந்து வந்தது. கூட்டமாக, குதூகலமாக கொண்டாடப்படவேண்டிய திருவிழாக்கள் கூட இன்று 14”,21” பெட்டிகளுக்குள் சுருங்கி விட்டன. தேசத்தின் பசுமைக் குறையக் குறைய மனிதர்களின் மனதிலும் பச்சையம் குறைந்து விட்டது.
      இது வழக்கமாகக் கேட்கும் பழமையின் குரலல்ல... இழப்பின் வலி.
 உணவுதான் மனிதனின் அத்தியாவசியத் தேடல். ஆனால், அதனை இலக்காகக் கொண்டு இயங்கும் விவசாயம் இன்று ஏளனத்துக்கும், அலட்சியத்துக்கும் உரிய சொல்லாகிவிட்டது. நம் கல்வித் திட்டத்தில் கூட விவசாயம் ஒரு அத்தியாவசியமான பாடமாயில்லை. எப்படி நம் தமிழ்க் குழந்தைகள் தமிழையே புறக்கணித்துவிட்டுப் பட்டப் படிப்பை முடித்து விடும் சூழல் இருக்கிறதோ அதுபோல, விவசாயம் என்றால் என்னவென்று கடுகளவும் தெரியாமல் ஒரு மனிதனின் ஆயுட்காலம் கடந்துவிடுமளவு நம் பிழைப்புலகம் முற்றிலும் வேறாக விவசாயத்திலிருந்து விலகி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனில், ஒரு விவசாயியின் துயரங்களை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை எப்படி ஒரு சராசரி மனிதன் உணர்ந்து கொள்வான்?
       எங்கோ ஓர் ஊரில், ஏதோவொரு சாலையில், யாரோ ஒரு முகமறியாத மனிதன் விபத்தில் மரணமடைவதைச் செய்திகளில் கேட்டுக் கடந்து விடுவதைப் போல், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை எளிதாகக் கடந்து விடுகிறோம்.
       கடந்த ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர், விவசாயிகள் பட்டினிச் சாவு பட்டியலை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கிறார். வருந்துவதைக் காட்டிலும் அவமானப்பட வேண்டிய செய்தியிது. நமக்கான பருக்கைகளை அனுப்பிவிட்டு, பட்டினியால் கடன் தொல்லையால் சாகிறான் என்றால், நாமெல்லாம் நன்றிகெட்டவர்கள் ஆகிவிட்டோமோ என்ற உறுத்தல், ஒவ்வொரு கவளத்தை உண்ணும் போதும் நமக்கு ஏற்பட வேண்டும்.
       இந்த உறுத்தல் இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கானுக்கு இருந்ததன் விளைவுதான் PEEPLI (LIVE) என்கிற படம். உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் ரித்விக் கட்டக், சத்யஜித்ரே, ஷ்யாம் பெனகல், மிருணாள்சென், அடூர் கோபால கிருஷ்ணன், மீரா நாயர், தீபாமேத்தா என்று நம் இந்திய இயக்குநர்களை எந்தச் சலனமுமின்றிச் சேர்க்கலாம். நம் தமிழில் கூட, ருத்ரய்யா, ஜெயபாரதி, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா என்று சிலரைக் குறிப்பிட முடியும். என்ன பிரச்சினை என்றால், இவர்கள் விருதுப்பட இயக்குநர்கள் என்று முத்திரையிடப்பட்டு இவர்களுடைய திரைப்படங்கள் என்றாலே மிதமிஞ்சிய சோகம் அல்லது மெதுத் தன்மை இருக்கும் என்று பெரும்பாலான பார்வையாளர்கள் ஒரு அச்சத்துடன் புறக்கணிக்கிறார்கள்.
        அமீர்கானின் இந்தித் திரைப்படங்கள் (அவரது தயாரிப்பில் உருவானவை) பிரதானமான பிரச்சினையை எப்படி ஜனரஞ்சகமாக பொதுப் பார்வையாளர்கள் மிரண்டுவிடாதபடி தருவது என்கிற அறிதலோடு உருவாக்குகிறார். அவரது முந்தைய படங்களான லகான், தாரே ஸமீன் பர் ஆகியன இப்படியான ஜாக்கிரதையோடு எடுக்கப்பட்டவை தான். அவை விமர்சகர்கள், வெகுஜன ரசிகர்கள் இருதரப்பாலும் வரவேற்பைப் பெற்றன.
       முழுக்க முழுக்க கலைத்தன்மை என்று சொல்ல முடியாமலும், முழுதும் ஜனரஞ்சகமான படமென்று சொல்ல முடியாமலும் ஒரு சமரச பாணியில் அவரது  படங்கள் இருக்கின்றன. PEEPLI (LIVE) சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்ட நல்ல திரைக்கதைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
       முக்கியப் பிரதேசமென்னும் கற்பனையான மாநிலத்தில் ‘பீபிலி' என்ற கிராமத்தில் நந்தா தாஸ் மற்றும் அவரது அண்ணன் புதியா தாஸ் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். இருவருக்கும் விவசாயம்தான் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கான மூலாதாரம். பொதுவான அவர்களின் நிலத்தில் விளைச்சல் குறைந்து தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. வங்கிக் கடனுக்காக அலைகின்றனர். ஆனால் எதுவும் கிடைத்தபாடில்லை. உள்ளூர் அரசியல் தலைவரிடம் வங்கிக் கடன் பெற்றுத் தரும்படி கேட்கிறார்கள். ஆனால் அவரோ ‘அது சாத்தியமில்லை; எனினும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அரசு ஒரு லட்சம் உதவித் தொகை தருகிறது' என்று நக்கலாகக் கூறி அனுப்பி விடுகிறார்.
        சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கடைசியில், நந்தாதாஸ் தான் தற்கொலை செய்து கொள்வதால் கிடைக்கும் ஒருலட்ச ரூபாய் பணத்தில் இருவரது குடும்பத்தையும் காப்பாற்றும்படி அண்ணனிடம் கூறிச் சம்மதிக்கச் செய்கிறான். இருவரும் அந்த முடிவுக்கு வந்தபின், சாராயம் குடிக்கிறார்கள். போதையோடு ஒரு தேநீர்க்கடையில் அவர்கள் நந்தாதாஸ் தற்கொலை செய்யப் போகும் விஷயத்தை உளறி விடுகிறார்கள். தேநீர்க் கடையில் தற்செயலாக அமர்ந்திருந்த உள்ளூர் நிருபர் ராகேஷ், இந்தப் பரபரப்பான செய்தியை பெரிய அளவு கொண்டு செல்வதன்மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம் என்ற முடிவோடு ITVN எனும் ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நந்திதா மாலிக்கிற்குத் தகவல் தெரிவிக்கிறான்.
       முக்கியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர்தொல்லை காரணமாக, மாநிலத்தின் இடைத்தேர்தல் அறிவிக்கப் படுகிறது. இந்தச் சூழலில் நந்தாதாஸ் தற்கொலைச் செய்தியைப் பரபரப்பாகத் தருவது சேனலுக்கு பெரியதொரு பெயரைத் தருமென யோசித்த நந்திதா, பீபிலி கிராமத்துக்கு நேரலை ஒளிபரப்புச் சாதனங்களோடு வருகிறார்.
        பாரத் லைவ் என்னும் ஹிந்திச் சேனலுக்கும் இந்த ஆசை தொற்றிக் கொள்ள அவர்களும் நேரடி ஒளிபரப்புச் சாதனங்களோடு பீபிலி கிராமத்துக்குள் நுழைகின்றனர்.
        உள்ளூரிலிருக்கும் ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு இது பெரிய தலைவலியைத் தருகிறது. காவல்துறைத் துணையோடு நந்தா தாஸ் மற்றும் புதியா தாஸை அழைத்து மிரட்டுகிறார். ஆனால் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் இதை லேசில் விடுவதாயில்லை. ஒரு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் தாங்களே தீர்த்துக் கட்டி விடுவோம் என்று அச்சுறுத்துகிறார்கள்.
       சேனல்காரர்கள் மாற்றி மாற்றி இருவரது பேட்டியையும் ஒளிபரப்பப் போட்டி போடுகிறார்கள். ஆனால் இரண்டு பேரும் அரசியல் கட்சிகளின் மிரட்டல்களுக்குப் பயந்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.
 ITVN-ன் நந்திதா, உள்ளூர் நிருபர் ராகேஷின் உதவியோடு எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் எதிர்பார்த்த நாட்டை அதிரச் செய்யும் நந்தாதாஸ் பேட்டி கிடைக்கவில்லை.
       பாரத் லைவ் சேனல்காரர்கள் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்து நந்தாதாஸின் அண்டை வீட்டார்கள், சிறுபிராய நண்பர்கள் ஆகியோரின் பேட்டியை ஒளிபரப்புகிறார்கள். அதோடு, உயரமான மரக்கோபுரம் அமைத்து அதன் வழியே ஊர் முழுக்கத் தெரியும்படி நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்.
       ஆளுங்கட்சி ஏதாவது செய்து இதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயம். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்கின்றன. எனவே, இருக்கின்ற உதவித் திட்டங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு கைப்பம்பு தரலாம் என முடிவெடுத்து, அரசு அதிகாரியொருவர் ஒரு ஜீப்பில் அரசுப் பட்டாளத்துடன் வந்து கைப்பம்பை நந்தா தாஸின் தலையில் கட்டிவிடுகிறார். இதை நிலத்தில் இறக்க பண உதவி கிடைக்குமா என்று கேட்கிறான் நந்தாதாஸ். கோப்புகளைப் புரட்டிப் புரட்டிப்  பார்த்துவிட்டு, விதிமுறைகளின்படி இல்லை என உதட்டைப் பிதுக்கிவிட்டுக் கிளம்புகிறார்கள்.
        எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தந்து விட்டுப் போகிறார். தட்டுமுட்டு சாமான்கள் கூட வைக்க இடம் போதாத அவர்களின் சிறிய வீட்டில் நடுநாயகமாக பிரயோஜனமற்ற கைப்பம்பும், டி.வி.யும்!
        ஆளும் சம்மான் கட்சியின் முதல்வர் ராமபாவு யாதவ், இந்தத் தலைவலியைத் தீர்க்கும் பொறுப்பை விவசாயத் துறை அமைச்சர் சலீம் இத்வாய் (நசுருதீன் ஷா) வசம் ஒப்படைக்கிறார்.
         நந்தாதாஸின் ஒவ்வொரு அசைவும் நேரடி ஒளிபரப்பாகிறது. தற்கொலைக்கான தினத்தின் அதிகாலை மலம் கழிக்கச் செல்லும் நந்தாதாஸ், திடீரென தலைமறைவாகி விடுகிறார். எல்லோரும் எதிர்பார்த்த பரபரப்பு நாடு முழுதும் பரவுகிறது.
       பீப்லி கிராமத்தில் தன் விவசாய நிலத்துக்காகக் கிணறு வெட்டும் பணியைத் தன்னந்தனியாக ஆரம்பித்து, முடிப்பதற்கு முன் பசிக் கொடுமையில் இறந்து போகிறார் இன்னொரு விவசாயி.
        ராகேஷ் அவரைப் பற்றிய செய்தியை ஒளிபரப்பலாமென நந்திதாவிடம் சொல்கிறான். ஆனால், நாடு முழுக்க நந்தாதாஸ் மேல் கவனத்துடன் இருக்கும் சூழலில், இறந்து போன விவசாயியைப் பற்றி செய்தி தயாரிப்பது அத்தனை புத்திசாலித்தனமில்லை என்று நந்திதா மறுத்து விட, ராகேஷ் ஏமாற்றமடைகிறான்.
        சலீம் தான் நந்தாதாஸை கடத்தி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார்.
        நந்தாதாஸை எல்லோரும் தேடிக் கொண்டிருக்கும் போது, ஊரில் பூட்டிக் கிடந்த கூரை வீடொன்று தற்செயலாகத் தீப்பிடித்துக் கொள்கிறது. தீ விபத்தில் எதேச்சையாக மாட்டிக்கொண்ட ராகேஷ் அடையாளம் தெரியாதபடி கருகிவிடுகிறான். இறந்து போனது நந்தாதாஸ் என்றும் அது எதிர்பாராத விபத்து என்றும் தவறாக நினைத்துக் கொள்ளும் சேனல்காரர்கள், நந்தாதாசுக்குக் காவலாக வந்த காவல்துறையினர், அவர்களை எல்லாம் நம்பி தற்காலிகமாக ஆரம்பிக்கப் பட்ட கடைகள் எல்லாம் ஒரே நேரத்தில் ஊரை விட்டுக் கிளம்பி விடுகின்றனர்.
         நந்தாதாஸின் மரணம் விபத்துதான்; தற்கொலையல்ல என்று முடிவெடுத்த அரசு, தற்கொலைக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஒரு லட்சத்தைத் தர முடியாது எனக் கைவிரித்து விடுகிறது. கடைசிக் காட்சியில் நந்தாதாஸ் சாகவில்லை. அவனது தாடி மீசை எடுக்கப்பட்டு, ஒரு பாலம் கட்டும் பணியில் தினக்கூலியாக அடையாளம் தெரியாத நபரைப்போல காட்டப்படும் போது நாம் அதிராமல் இருக்கவே முடியாது.
       
      படத்தின் இயக்குநர் அனுஷா ரிஸ்விக்கு இதுதான் முதல்படம். அமீர்கான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் என்றாலும், அவர் தான் தயாரிக்க எடுத்துக் கொள்ளும் படங்களின் திரைக்கதை மீது செலுத்தும் அதீத கவனம் நல்ல சினிமாவுக்கான சிறந்த முயற்சி எனலாம். தமிழில் பிரகாஷ்ராஜ் இப்படியான கவனத்தோடு தயாரிக்க முயல்கிறார்.
        படத்தில் நந்தாதாஸ் காணாமல் போனபிறகு, தொலைக்காட்சிச் சேனல் தொகுப்பாளர், நந்தா மலம் கழித்த இடத்தை வட்டமிட்டு, ‘இது தான் அவர் மலம் கழித்த இடம்' என்று சென்ஷேஷனல் நியூஸ் சொல்லும் காட்சி இந்தச் சமூகத்தின் மீதான, அரசியல் வாதிகள் மீதான, ஊடகங்கள்  மீதான சவுக்கடி விமர்சனம்.
        ஒரு ஜீவாதாரமான பிரச்சினையை, எப்படி ஒரு பொதுப்பார்வையாளனின் ரசனைக்கும், புரிதலுக்குமான பக்குவத்தோடு சொல்வது என்று, தீர்க்கமாக யோசித்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘பீபிலி லைவ்' பாணி, திரைப்படக் கலைஞர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தமிழில் சேரனும், வசந்தபாலனும் இந்த வகை பாணியைக் கையாள்கிறார்கள்.
 சற்று எள்ளலுடன் சொல்லப்பட்டாலும் ‘பீபிலி லைவ்' மிகச் சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாக, அது எடுத்துக் கொண்ட பிரச்சினையின் அடிப்படையில் சொல்லலாம்.
        ‘ஒரு விவசாயியின் மரணமென்பது ஒரு தேசத்தின் மரணம்' என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்?

அனுஷா ரிஸ்வி:

தில்லி பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்ற அனுஷா, பத்திரிகையாளராகத்தான் தன் இலட்சியப் பணியைத் துவங்கினார். பீப்லி லைவ் படத்துக்கான கதையுடன் அமீர்கானை அணுகியபோது, முதலில் இவரால் டைரக்ட் செய்ய முடியுமா என்று தயங்கினார். அதன் பிறகு சற்று தயக்கத்துடன் படம் எடுக்கச் சம்மதித்தார். படப்பிடிப்பின் போது இவரது சுறுசுறுப்பான உழைப்பைக் கண்ட பிறகு, நம்பிக்கையுடன் முழு பணியையும் ஒப்படைத்தார். தனது முதற் படத்திலேயே ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப் படும் பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.(2011 ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் போட்டியில்,  சிறந்த அயல்மொழிப் படத்துக்கான போட்டியில் கலந்து கொள்ள இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.)


 

4 கருத்துகள்:

  1. மிக அருமையான பார்வை நண்பரே,
    மிகவும் தீவிரமான ஒரு விடயத்தை நையாண்டி மேளமாக வாசித்திருந்தாலும் மிகவும் முக்கியமான படம்,அதனால் தானே மன்மோகனசிங்கும் கூட இதைபார்த்து ரசித்து சிரித்தார்,சிலாகித்தார்.

    பசிக்காக தன் நிலத்தின் மண்ணை தோண்டி விற்க முயன்று பசியாலேயே செத்தும் போகும் அந்த விவசாயியின் நடிப்பு அருமை,நிலையோ மிகவும் கவலைக்குரியது,விவசாயியின் தற்கொலையை தீவிரமாக உரைத்த காப்ரிஸ்சா பாவூஸ் என்னும் மராத்தியமொழிப்படம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், பார்த்திருந்தால் அதையும் எழுதவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கீதப்ப்ரியன் உங்கள் தளத்தை அறிமுகம் செய்தார்.

    மிக அருமையான விமர்சனம் நண்பரே. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி கீதப்பிரியன் சார், வாசிப்பதிலும், பின்னுட்டம் இடுவதிலும் உங்கள் வேகம் பிரம்மிக்க வைக்கிறது, வாசித்ததை நண்பர்களிடம் பகிந்து அவர்களையும் வாசிக்க வைக்கும் பண்புக்கு நன்றி. நீங்கள் சொல்லும் மராத்திய படத்தை இன்னும் பார்க்கவில்லை . பார்க்கும் வாய்ப்பு கிட்டினால் அவசியம் அது பற்றி எழுதுவேன்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி சரவணக்குமார் .. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...