திங்கள், 13 ஜூன், 2011

IN THIS WORLD

      நீங்கள் இந்த உலகில் பெளதீக ரீதியாக மனிதன் என்கிற அடையாளத்தைத் தவிர சமூகத்தில் என்னவாக அடையாளப்படுத்தப் படுகிறீர்கள்? உங்கள் பெயர், முகம், பதவி தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் வாழும் தேசத்தின் குடிமகனாக, நீங்கள் சார்ந்த இனத்தவராக உங்களுக்கென்று ஒரு அடையாளம் நிச்சயமிருக்கும்.
       ஆனால் பெயரையோ, முகத்தையோ, இனத்தையோ, வாழும் ஊரையோ, தேசத்தையோ அடையாளமாக சொல்லமுடியாதபடி எத்தனையோ லட்சம் பேர் ஏதோ ஒரு தேசத்தின் எல்லைப் பகுதியில் அல்லது ஜனசஞ்சாரத்தில் ஒளிந்து கொண்டபடி, தங்கள் இயல்பான அடையாளத்தை தொலைத்துவிட்டு ‘அகதிகள்' என்ற பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
       உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வாழ்பவர்கள் பாலஸ்தீனியர்கள். அதற்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள். பொதுவாக ஆப்கான் என்றால் தாலிபான்கள், பழமைவாதிகள் என்கிற பிம்பங்களைத் தாண்டி வேறெதுவும் பெரும்பாலோனோர்க்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில், அங்குப் புகைப்படக்காரர்கள், நிருபர்களுக்கு அனுமதியில்லை. இரண்டாவது அதிமுக்கிய காரணம், வல்லரசுகளின் கடைக்கண் பார்வை படுமளவு அங்கு எண்ணெய் வளமோ, பரவலான சந்தைப் பொருளாதாரமோ இல்லை. எனவே, ‘ஜனநாயகக் காவலர்கள்' பொருட்படுத்தக் கூடிய தேசமாக ஆப்கான் இல்லை. லிபியாவில் ‘ஜனநாயகம் தழைக்க' உள்ளே புகுந்த உலக நாடுகள் ஆப்கன் பக்கம் திரும்புவதேயில்லை. ஈழத்தைப் போலவே புறக்கணிக்கப்பட்ட தேசமான ஆப்கானின் அவலமான இன்றைய நிலைக்கு மிக முக்கியக் காரணங்கள் அதன் ஒழுங்கற்ற நில அமைப்பு (Gelogical Structure). ஒன்றையொன்று எதிரிகளாகக் கருதிக்கொள்ளும் பழங்குடிப் பிரிவுகள், போதை மருந்து கடத்தல், மத அடிப்படைவாதிகள் என்பனவற்றைச் சொல்லலாம்.
       ஆப்கானில் இரண்டு கோடிபேர் தற்பொழுது வசித்து வருவதாக ஒரு கணக்கு கூறப்பட்டாலும், ஆப்கானைப் பொறுத்தவரை எந்தக் கணக்கும் உண்மையாக இராது. ஏனெனில், உள்நாட்டுப் போரினாலும் பட்டினியாலும் ஒரு மணிநேரத்துக்குப் பதினான்கு ஆப்கானியர்கள் இறக்கின்றனர். அறுபது ஆப்கானியர்கள் தங்கள் உடைமைகளை விட்டு அகதிகளாக ஏதோ ஒரு தேசத்துக்குள் அபாயங்களைச் சந்தித்தபடி நுழைய முற்படுகிறார்கள். எனவே, ஆப்கானின் மிகச் சரியான மக்கள்தொகையை யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. உலகெங்கிலும் ஆப்கான் அகதிகள் அறுபத்தேழு லட்சம் பேர் இருப்பதாக உலக அகதியமைப்பு கணக்கிட்டுச் சொல்கிறது.
       ஆப்கன் நாட்டின் அதிகபட்சப் பழங்குடி இனமாக ‘பஷ்தூன்' மக்கள் அறுபது லட்சம் பேர் இருக்கின்றனர். அடுத்தபடியாக ‘தாஜிக்குகள்' நாற்பது லட்சம் பேரும், பத்து லட்சம் பேர் கொண்ட ‘ஹஜாரக்'குகளும், ‘உல்பெக்கு'களும் அதற்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட ‘இமாக்', ‘பார்ஸ்', ‘பலூச்', ‘துர்க்மன்', ‘க்யுசெல் போச்' போன்ற சிறு குழுக்களும் உள்ளனர்.
       கடந்த கால வரலாற்றில், ஒட்டு மொத்த ஆப்கானை ஆண்டவர்கள் ‘பஷ்தூன்' இனத்தைச் சார்ந்தவர்கள்தான். இவர்களுக்கு மற்ற பழங்குடி இனத்தவர் மேல் அக்கறையில்லை. அதே போல் மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்வதேயில்லை. தங்கள் இனத்திற்கென்று தனியாகத் தலைவர்களை உருவாக்கி அவர்கள் சொல்படி மட்டுமே நடப்பார்கள். இதனால் ஒரு இனம் மற்றொரு இனத்துக்கு எப்பொழுதுமே நேரெதிர்தான். எந்த அளவுக்கு என்றால், ஒரு பொது மருத்துவமனை இருப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு இனம் வைத்தியத்துக்காக வரும்போது, பிற இனத்தவர் வருவதற்கு அனுமதிப்பதில்லை. எனவே ‘பஷ்தூன்'களுக்கு ஒரு நாள் வைத்தியமென்றால், மற்றொரு நாள் ‘தாஜிக்கு'களுக்கு என்று முறை வைத்துதான் பார்ப்பது.
       இப்படியான சூழலில் இவர்களுக்கு தாங்கள் ‘ஆப்கானியர்கள்' என்ற உணர்வே அவர்களது நாட்டில் இருக்கும் வரை இருப்பதில்லை. தாங்கள் சார்ந்த இனம் என்னவோ அதைத்தான் தங்கள் அடையாளமாகக் கூறுவார்கள். இவர்களுக்குள் நடக்கும் உள்நாட்டுச் சண்டைகள், மற்றும் நாட்டின் அதிகபட்ச பணம் புரளும் தொழிலான அபின் பயிரிடுதல் வியாபாரமிருக்கின்றன. இதன் காரணமாகவும் கொலைகளும், வன்முறைகளும் அதிகம். எனவே இவர்கள் அபாயகரமானவர்களாக உலகின் பார்வையில் இருக்கிறார்கள்.
        உலகத்தின் கவனத்தைப் பெறும் கவர்ச்சிகரமான விஷயங்களெதுவும் இல்லாததால், அன்றாடம் நிகழும் பட்டினிச்சாவுகள் காரணமாக ‘புலம் பெயர்தல்' ஒவ்வொரு நிமிடமும் நிகழ்கிறது.
        ஆனால் ஆப்கானியர்கள் என்றால் பல நாடுகளும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. எனவே, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையும் ஆப்கானியர்கள், தங்களை பாகிஸ்தானிகள் என்றோ அல்லது அங்கிருந்து ஈரானுக்குள் புகுந்து பின் ‘ஈரானியர்கள்' என்றோ பொய் சொல்லி லண்டனுக்கோ, பாரிசுக்கோ அகதிகளாக நுழைய முற்படுகிறார்கள்.
        ஆப்கானின் பெரும்பகுதியான நிலம் மலைகளால் ஆனது. எனவே சரிசமமான சாலைப் போக்குவரத்து சாத்தியமில்லாத ஒன்று. இதன் காரணமாக எந்த ஒரு தொழில் நிறுவனமும் அங்கு முதலீடுகளுக்கு முன்வருவதில்லை. போதை மருந்து பயிரிடுதலுக்கும், கடத்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு போதை மருந்து வர்த்தகம் மட்டுமே அங்கே அமோகமாக நடக்கிறது.
       போதாதற்கு, அடிப்படைவாதிகளின் கெடுபிடிகள். பெண்கள் பர்தா இல்லாமல் நடமாட முடியாது. அதாவது ஒரு கோடி பேர் முகங்களை மற்ற ஒரு கோடி பேர் பார்க்க முடியாது. நாட்டில் திரையரங்குகள், பொதுவான பத்திரிகைகளுக்குத் தடை. பெண்கள் வேலை பார்க்க அனுமதியில்லை. அத்தியாவசியமான மருத்துவத் துறையில் கூட பெண்கள் பணியாற்ற முடியாது. ஆண் மருத்துவர்கள் மட்டுமே என்பதால் அவர்களிடம் மருத்துவம் பார்க்கும் பெண்கள் கூடவே சகோதரன், மகன், கணவன், தந்தை என யாரையாவது அழைத்துவர வேண்டும். மருத்துவருக்கும், நோயாளிப் பெண்ணுக்கும் இடையே திரைச்சீலை இருக்கும். மருத்துவரின் கேள்விகளுக்கு உடன் வரும் ஆண் பதில் சொல்ல வேண்டும்.
        ஆப்கான் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஈரான் இயக்குநர் மக்மல் பஃப், பல இன்னல்களுக்கிடையே, ஆப்கான் அரசிடம் அனுமதி பெற்று எடுத்த படங்கள் ‘தி சைக்கிளிஸ்ட்' மற்றும் ‘காந்தஹார்'  . பின்னர் சித்திக் பர்மர் இயக்கிய ‘ஒசாமா'. இதற்குப் பிறகு சில ஆவணப் படங்கள்.

       அதற்குப் பிறகு வெளிவந்த படம் IN THIS WORLD-. பாஃப்டா விருது பெற்றது. ஆப்கானின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஓரளவு பிரதிபலித்த படங்கள், ‘தி சைக்கிளிஸ்ட்', ‘காந்தஹார்', ‘ஒசாமா' என்றால், ஆப்கானியர்கள் அகதிகளாக தேசம் விட்டு தேசம் பயணிக்கும் போது ஏற்படும் சிக்கல்களைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் IN THIS WORLD-.

       ஜமால் மற்றும் இனாயத்துல்லா இருவரும் ஆப்கானிலிருந்து பாகிஸ்தானின் பெஷாவரில் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தவர்கள். நிச்சயமற்ற அந்தச் சூழலில் இருந்து அவர்கள் தப்பிக்க, லண்டன் சென்றால் மட்டுமே முடியும் என்று அவர்கள் குடும்பம் கருதுகிறது. தங்களது கையிருப்பில் உள்ள சேமிப்பிலிருந்து கள்ளத்தனமாக எல்லை கடந்து அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மூலம் அனுப்புகிறார்கள். ஹவாலா முறையில் அவர்களுக்குப் போகின்ற இடங்களில் பணம் கிடைக்கும் அளவு புரோக்கர்கள் தொடர்பு பலமாக இருக்கிறது.
        15 வயது ஜமாலும், 20 வயது இனாயத்துல்லாவும் குவாட்டா வருகிறார்கள். அங்கிருந்து ஈரானின் எல்லை நகரான டாஃப்பின், அதன் பிறகு பேருந்து வழியாக ஈரானுக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். ஆனால் எல்லையோர காவல்படையிடம் அகப்பட்டு மறுபடி பெஷாவருக்கே திரும்புகிறார்கள்.
 கண்டெய்னர் லாரியில் இவர்களைப் போன்றே இன்னும் சில அகதிகளும் இருக்கின்றனர். காற்றுப் புகவும் வசதியில்லாத அந்த இடத்தில் தொடர்ந்து 40 மணி நேரம் பயணம் செய்ய முடியாமல் பலரும் மூச்சுத் திணறி, கதவைத் திறக்கும்படி கதவுகளைத் தட்டுகின்றனர். ஆனால் அவர்களது ஓலம் கேட்கப்படாமல் காற்றில் கரைந்து விடுகிறது. கண்டெய்னர் தன் இலக்கை அடையும் போது உள்ளிருந்த இனாயத்துல்லாவும் இன்னும் சிலரும் மரணமடைந்து விடுகின்றனர். ஜமால் மட்டும் குதித்த வேகத்தில் தப்பித்து நகரை அடைகிறான். அங்கு ஒரு பெண்ணின் கைப்பையைத் திருடி, கிடைக்கும் தொகையில் ஸன்கெட்டா அகதிகள் முகாமில் தஞ்சமடைகிறான்.
       அங்கு யூசுப் என்னும் இளைஞன் பழக்கமாகிறான். இருவரும் சேர்ந்து ஒரு லாரியின் அடிப்பகுதியில் படுத்தவாறே இலண்டன் வந்தடைகின்றனர்.
       ஜமால் லண்டன் வந்ததும் தன் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கிறான். இனாயத்துல்லாவின் உறவினர்கள் ஜமாலிடம், இனாயத்துல்லா அங்கு இருக்கிறானா என்று ஆவலுடன் கேட்கிறார்கள். அவன் இந்த உலகத்திலேயே இல்லை (He is not in this World) என்று பதிலளிக்கிறான். கேமரா திரும்பவும் பெஷாவர் அகதிகள் முகாமைக் காண்பிக்க, படம் முடிகிறது.        ஆப்கன் நிலைமை இதுதான். ஆப்கானில் வசித்தால் பசியோ, ஏதேனுமொரு தோட்டாவோ எந்த நேரத்திலும் மரணத்தைப் பரிசளிக்கும். வாழ்வைத் தேடிப் பயணித்தாலும் மரணம் இருகை நீட்டி வரவேற்கும். ஆப்கானில் அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு ஆப்கானியர்கள் என்ற அடையாளமில்லை. ஏதோ ஒரு பழங்குடி இனத்தவன் என்றுதான் அவர்கள் அழைக்கப் படுவார்கள். ஆப்கானுக்கு வெளியேயும் அவர்கள் ஆப்கானியர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. முகங்களற்ற உருவங்களோடு திரியும்படி சபிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
        திடுக்கிடும் திருப்பங்களோ, இரத்தம் உறையும் காட்சிகளோ படத்திலில்லை. ஆனால், பதட்டத்துடனே தான் ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கும். படத்தின் உண்மைத் தன்மைக்காக எதனோடும் சமரசம் செய்யாத இயக்குநர் மைக்கேல் விண்டர் பாட்டம்-ஐப் பாராட்ட வேண்டும்.
        படத்தில் ஜமாலாகவும், இனாயத்துல்லாவாகவும் வருகிற இருவரும் நடிகர்கள் அல்ல. அவர்கள் தான் நிஜ கதாபாத்திரங்கள்.(இனாயத்துல்லா இறந்துவிடுவதாகக் காட்டப்பட்டாலும், நிஜத்தில் திரும்ப பெஷாவர் அனுப்பப் படுகிறான்). இன்னமும் ஜமால் சவுத் ஈஸ்ட் லண்டன் பகுதியில் ‘தஞ்சமடைந்தவர் பட்டிய'லில் சேர்க்கும்படி இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பித்து விட்டுக் காத்துக் கொண்டிருக்கிறான்.
 பிறப்பும் இறப்பும் தீர்மானிக்க முடியாத நிலையற்ற ஒன்றாக இருப்பது இயற்கை. ஆனால், ஒவ்வொரு நிமிடமும் இருப்பே நிலையற்றது எனில் அது என்ன வாழ்க்கை?!

மைக்கேல் விண்டர் பாட்டம்:

இங்கிலாந்தின் லங்காஷையரில் பிறந்த விண்டர் பாட்டம் திரைப்படப் பள்ளியில் பயின்று, பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பணியில் சேர்ந்தார். பிரபல திரைப்பட இயக்குநர் இங்க்மர் பெர்க்மன் பற்றி இரண்டு ஆவணப்படங்களை எடுத்தார். பிறகு திரைத்துறையில் வர்த்தகரீதியாக சில படங்களை இயக்கினாலும், புறக்கணிக்கப்பட்ட மக்களைப்பற்றிய அக்கறையுடன் சில படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ‘வெல்கம் டூ சரஜேவா', ‘தி ரோட் குவாண்டனமோ' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. பாலஸ்தீனியர்களின் பிரச்சினைகள் குறித்த ‘தி பிராமிஸ் டு லேண்ட்' என்ற படத்தை தற்போது இயக்கி வருவதோடு, இந்தியாவின் ஜெய்ப்பூரை மையமாகக் கொண்டு ‘திரிஷ்னா' என்ற படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

1 கருத்து:

  1. புதிதாக கேள்விபட்ட படம்..தங்களது அறிமுகமும் அருமை..அதுவும் ஒரு சிறப்பான விமர்சனமாக.
    தங்களது ரசிகர்களில் ஒருவனாக மாறியதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்..இயக்குனரை பற்றிய தகவலும் நன்று.
    இன்னும் நிறைய படங்களை பற்றி எழுதுங்கள் படிக்க ஆவலோடு இருக்கின்றேன்..நன்றிகள்..

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

 எனது நூல்கள்                                                                       (மின்னூல்)