புதன், 9 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 4



உன் தோழன்

       வேறொரு உருவாய்
       உருமாற முடிந்தால்
       ஏதேனும் ஒரு வண்ணத்துப் பூச்சிக்கு
       சிறகாக...
       ஏதேனும் ஒரு பூஞ்செடிக்கு
       வேராக...
       இருப்பேன் சுமைகளற்று...
       பறந்தோ...
       மறைந்தோ...

           parjana2003@yahoo.com

மின்னஞ்சல் தளம் திரையில் விளம்பரப்படங்களின் நடுவே ஓடிற்று. இதுவும் நீ உனக்கே அனுப்பி வைத்த மெயில்தான்.


இந்தியாவை விட்டு நீ புறப்படுவதாக முடிவானபின் தகவல் பரிமாற்றத்துக்காக நீ தொடங்கிய ஈ-மெயில் தளத்தை மேய்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு அந்த உரிமையைத் தந்தவனும் நீதான். எனக்கு அனுப்பப் படும் தகவல்களுக்காகவும், உனக்காக அனுப்பப் படும் தகவல்களுக்காகவும் ஒரே முகவரி இருந்து விட்டுப் போகட்டுமே. நீயும் நானும் இணைபிரியாமலேயே இருந்து விடுவோமே... இணைய தளத்திலாவது... என்ற உன் குரல் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்னுள்... இன்னுமொருமுறை அந்தக் குரலுக்காக ஏங்குகிறதென் மனசு.

‘வேலை மெனக்கெட்டு ஏன் இப்படி உனக்கு நீயே மெயில் அனுப்புகிறாய் பார்த்தி' என்று கேட்ட போது, ‘அடிக்கடி உபயோகப் படுத்தலேன்னா அந்த ஈ-மெயில் தளம் அழிந்துபோயிடுமாமே' என்று நீ பதிலளித்தது, ஒவ்வொரு முறை ஈ-மெயில் தளத்தை விரிக்கும் போதும் நினைவுக்கு வருகிறது. புதிய தகவல்கள், உன் கவிதைகள் எதுவுமில்லாமல் நம் ஈ-மெயில் தளம் வெறுமையாக இருக்கிறதே... பார்த்தி, ஏதேனும் சொல் பார்த்தி. உன் கனவினை, எனக்குப் புரியும் படியாக உன் ஆலோசனைகளை, உன் காதலைப் பற்றி, அந்த தேசத்தைப் பற்றி, நீ படித்த புத்தகத்தைப் பற்றி, கவிதைகள் பற்றி... எதையேனும் சொல்... மரணத்தைப் பற்றி மட்டும் தவிர்த்து வேறு எதையேனும் சொல்.

உனக்கும் எனக்கும் எந்த ஒளிவு மறைவுமில்லாத பல விஷயங்களை இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பாரதியார் கவிதைகளிலிருந்து, நம் மனக் கவலைகள் வரை... ஆனால் எனக்கு ஒரு அசட்டுத் தனமான நம்பிக்கை ... எல்லாத் தளைகளிலிருந்தும் உன்னை நீ பிடுங்கிக் கொண்டு இந்த தளத்தில் நிச்சயம் நீ நடமாடுவாய் என்று...

உன் பொருளாதாரத் தேவைகள், சூழலின் நிர்பந்தங்கள் உன்னை இந்த தேசத்தை விட்டு வெளியே தள்ளியிருக்கலாம்... ஆனாலும் நீ இந்த தேசத்தை வெறுத்ததில்லை.

ஊழல் மிகுந்த இந்த தேசத்தில் குற்றவாளியாக நீ கைகாட்டப் பட்டிருந்தால், தப்பி வெளியேற ஆயிரம் துளைகள் இருக்கின்றன. பணத்தின் கனம் உன்னைக் கவனமாக வெளியேற்றியிருக்கும் என்று இதே தளத்தில் உனக்கு தகவல் அனுப்பியிருக்கிறேன். நிச்சயம் உனக்கு இந்த விமர்சனம் கோபத்தைக் கிளறுமென்று எனக்குத் தெரியும். உன் மனதைக் கிளறும் பொருட்டு நீ மரணத்தின் பிடியிலிருந்து தப்பி, விடும் பெருமூச்சினை உணரும் பொருட்டு அனுப்பினேன். இதற்கான பதில் மெயில் எதுவென்று கூட என்னால் யூகிக்க முடியும். ஏதேனும் ஒன்றுக்காக நம்மை நாமே இகழ்ந்து கொள்வது, நம் முகத்தின் மீது நாமே உமிழ்வது போல... என்றுதான் என்னைக் கண்டிப்பாய்.

எனக்கும் விருப்பமில்லை தான். ஆனால், உன்னைக் காப்பாற்ற முடியாத துக்கம், தன் ரணங்களை இது போன்ற காரணங்களால் தான் தன்னை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

உன் பழைய மெயில்களைக் ‘க்ளிக்' செய்தேன்.

      நெருக்கம் புழுக்கம்
      சதா கூட்டம் வியர்வை
      என்று கைவிரித்தபடி
      ததும்ப ததும்ப
      வழிய வழிய
      நிரம்பிய என் தேசம்
      என்னைத் துப்பியது
      வான் நோக்கி...
      விரித்த புடவைத் தலைப்பைப் போல
      வானம் மிக அருகில்...
      காலடியில் நழுவுமென் சுவடுகள்...
      வறுமையின் கோடுகள்
      எத்தனை மிகுந்தாலும்
      எப்படியுன்னைக் கிழித்தாலும்
      உன்னைப் போல அழகு வருமா?
      எத்தனையெத்தனை இடம் மாறினாலும்.
     
உன் கவிதைகள் உன் கனவின் சுவடுகள் தானே!

கண்ணீர்த் துளித்துளியாய் சுட்டது. எப்பொழுதும் எதையும் உனக்கு வெறுக்கத் தெரியாது. யதார்த்தத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உன்னை ஒரு ஞானியைப் போலாக்கி விட்டது. உன்னிடத்தில் நானிருந்தால் என் பதற்றத்தால் எல்லா அதிர்வுகளையும் எழுப்பியிருப்பேன். இந்த உலகமே என் துக்கத்தைப் பகிரவோ, சுமக்கவோ தயாராக வேண்டுமென்று எதிர்பார்த்திருப்பேன்.

எல்லாவற்றுக்கும் பயந்தவனாக இருந்தாலும் நீ மரணத்துக்குப் பயந்தவனில்லை. எத்தனை துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தபோதும் நீ மரணத்தைத் தேடியதேயில்லை. வாழ்வையும் மரணத்தையும் உன்னால் ஒரே தராசில் நிறுத்த முடிந்தது. எது வரினும் எதிர்கொள்ளத் தயாராகவேயிருந்தாய்.

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்தவன் நீ. சாலையின் மீது வரையப்படும் ஓவியங்களை நின்று நிதானமாகக் கவனிப்பாய். எந்த திருமணத்திலும் மணமக்களை நீ வாழ்த்தியதை விட சமையல்காரர்களையும் நாதஸ்வரம் வாசிப்பவர்களையும் பாராட்டியதுதான் அதிகம். உன்னைப் போல் நட்சத்திரங்களோடு பேசியவர்கள் குறைவு. உன்னோடு படிக்கும் காலங்களில் தங்கியிருந்து படிப்பு முடிந்து பிரிய நேர்கையில் நண்பர்களுக்காக அழுததைவிடவும் நீ போடும் உணவு மிச்சங்களுக்காகக் காத்திருக்கும் அணில்களுக்காகவும், குருவிகளுக்காகவும் அழுதது மிக அதிகம்.

விவாதங்களில் உனக்கு அவ்வளவாய் நம்பிக்கையில்லை. தவறான பார்வையோடு ஒரு விஷயத்தை அணுகுபவர்களைப் பேசிச் சரி பண்ணிவிட அவ்வளவு சுலபத்தில் முடியாது. விவாதங்கள் அவர்களின் முட்டாள்தனமான நம்பிக்கைகளை உறுதிப்படுத்தவே உதவும். அனுபவமும், காலமும் மட்டுமே எந்த ஒன்றையும் எளிதாக உணர்த்த முடியுமென்பாய். பிற்பாடு நானும் கூட அதை உணர்ந்தேன். எந்த விவாதத்தின் இறுதியிலும் யாரும் இன்னொருவரின் கருத்தை விசாலமான மனதுடன் அணுகுவதோ, ஏற்பதோயில்லை. தன்னுணர்தலே எதையும் அடைவதற்கான மார்க்கமென்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள நீ எப்படி இன்னொருவரின் விஷயங்களில் குறுக்கிட்டிருப்பாய்? நான் நம்பவில்லை. யாரால் உன்னோடு பகை பாராட்டியிருக்க முடியும்?!

உன்னை இந்த தேசம் மதிக்கவில்லை என்ற குறை உனக்கிருந்திருக்கலாம். அது உன்னை இன்னொரு தேசத்துக்குத் துரத்தியிருக்கலாம்... இந்தக் குறை எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு. ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். நீங்களே உங்களைக் குறைவாக மதிப்பிடும் போது, இந்த தேசம் மட்டும் எப்படி உங்களை உயர்வாக மதிப்பிடுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

தேசம்தான் ஒரு தனிமனிதனைத் தூக்கிப் பிடிக்க முடியும் என்ற மனோபாவம் கிளர்க்குகளை உருவாக்கும் ஆட்சிகள் வந்தபின் தான் பரவியது. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையிழந்து இந்த தேசத்தை எதிர்பார்த்தபடி இருந்துவிட்டார்கள். நீயும் அவர்களில் ஒருவனாக மாறிய போது, நீ எதிர் கொள்ள புதிய புதிய சவால்கள் உருவாகின. மரணமும் அதிலொன்று.

எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் மனோதிடம் உனக்குண்டு. எல்லாப் போராட்டங்களிலிருந்தும் விடுபட மரணம்தான் தீர்வு என்று ஒருபோதும் கருதியதில்லை. உன் வலிமை உன்னைக் கரையேற்றும்.

நானும் கூட இந்த தேசத்தை மிக அதிகமாகத் திட்டியிருக்கிறேன். ஆனால் அது, இந்த தேசம் எனக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆற்றாமையினாலில்லை. இந்த தேசத்தின் ஒழுக்கக் கேடுகள் மீது, பொறுப்பற்ற தன்மை மீது, அடைக்க வழியில்லாமல் பொங்கிப் பிரவாகமாய் வழியும் ஊழலின் மீது, அதிகாரங்களின் மீது... எப்போதும் என் கோபம் தணியாமல் கொதித்தபடியிருக்கும்.

இருப்பினும் புதைகுழி போன்ற உன் உள்மனம் எத்தனை துக்கங்களை, எத்தனை கனவுகளை, எத்தனை ஆதங்கங்களை அழுத்தி கொதிக்கிறதென்று நீ கோடிட்டுக் காட்டியிருக்கலாம். நீ விட்ட இடத்தில் துவங்க என்னைச் செலுத்தியிருப்பேன்.

ஏதாவது ஒரு கோயில் வாசலில் எதிரே வருவது யாரென்று கூட கவனிக்காமல் பிரார்த்தித்தபடி புலம்பிக் கொண்டிருக்கும் உன் அப்பாவை சமயங்களில் காண நேர்கையில் தழுதழுக்கிறது மனம். இத்தனை வெப்பத்தை அவரது வயோதிகம் தாங்காது. எல்லாம் முடியப் போகிற நேரத்தில், இடத்தில் அவரால் மறுபடி புதிதாகத் துவங்க முடியாது.

கண்ணீர்க் கறையேறிய கன்னங்களுடன் உன் தங்கையை பார்க்கும் போது ஏதோ ஒன்று அடிவயிற்றிலிருந்து கிளம்பி தொண்டைக்குழியை நிரடுகிறது. கடவுளே... அழுவதற்குக் கூட முடியாமல் நாக்கை உள்வாங்கிக் கடித்தபடி துக்கத்தை மறைக்கும் அவள் மீது கூட உனக்கு கருணையில்லையா?

பார்த்தி! உன்னைப் பெற்ற வயிறு துவண்டு கிழிந்த நாராய் கட்டிலில் கிடத்தப்பட்டு இருக்கிறது. மரணம் தனக்கா... உனக்கா என்பது கூட தெரியாமல் வாயில் வழிந்தோடும் உமிழ்நீரையும் துடைக்காமல் சரிந்து கிடக்கிறது. கடவுளின் கணிதம் எந்த ஃபார்முலாவிலும் அடங்காமல் தறிகெட்டு அலைகிறது.

உன் அபியைப் பார்த்தேன். தெம்பாக இருப்பதுபோல் நடிக்கும் அவளது பாவனை மேலும் அவளைப் பரிதாபத்துக்குள்ளாக்குகிறது. ரகசியமாக என்னிடம் வந்து ஈ-மெயிலில் தகவலேதுமுண்டா என்று கேட்கிறாள் . கூர்மையான அவளது குரல், ஒலி குறைந்தாலும் வலி மிகுந்தது. அறுப்பவனுக்குத் தெரியுமா மரத்தின் வலி... மரத்துக்கும் தெரியாது அறுப்பவனின் விரல் ரணம். ஆனால் இரண்டுமாக இருப்பது நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம் தானே பார்த்தி!

யாருக்கும் புரியவில்லை உன் மெளனத்தின் கனம். ஆனால் என்னால் உணர முடிகிறது பார்த்தி... உன் முடிவை நீ வரவேற்கத் தயாராகிவிட்டாய்.

யாருடைய அனுதாபமும் பரிதாபமும் உனக்குத் தேவையில்லை. உலகத்தின் எந்த மொழியிலும் உன் மனதில் புதைந்து போன சொற்களுக்கான விளக்கமில்லை. வலுக்கட்டாயமாகப் பிரிந்து போக முடிவு செய்துவிட்டாய். எந்தத் தகவலும் தராமல்... எந்தத் தொடர்புக்கும் வழியில்லாமல்... உனது பிரிவின் வலி கனமறியாமலிருக்க எங்களைக் கோபமூட்டிப் பிரிந்து போவது உன்னுடைய யுக்தியாக நீ கருதியிருக்கலாம். என்றாலும் உன் வெற்றிடம் யாராலும் நிரப்ப முடியாத கனபரிமாணம் கொண்டது. எதையும் இழந்த பிறகுதானே அதன் பெருமையை சிலாகிப்பது பெரும்பாலும் நமது வழக்கம்...!

நீ இங்கிருந்து கிளம்புமுன் கடைசி கடைசியாக கேட்ட கேள்வி எனக்கு உலகமகா நகைச்சுவையாக இருந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது அது எத்தனை பொருள் பொதிந்தது என்று என்னால் உணர முடிகிறது. இந்த சமூகத்தில் எனக்குள்ள பொறுப்பை, நமக்குள்ள... எல்லார்க்குமுள்ள பொறுப்பை நினைவூட்டியபடியே இருக்கிறது உனது அந்தக் கேள்வி.

“இந்த தேசத்தை விட்டுச் செல்கிறேன் ஜனா... காப்பாற்றுவாயா?”

(இன்னும் ஒன்று...)

4 கருத்துகள்:

  1. உங்கள் வலைப்பதிவின் தலைப்பாய் இருக்கும் வாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள் என்பது எனக்கே எனக்காக என்று தோன்றும் , யுகமாயினி ஒரு 2 மாதமாக எனக்கு கிடைக்கவில்லை . இருந்தாலும் படித்து விட்டு அதை ஹேமா, குப்பு.வீரமணி மாமா சமயத்தில் சுகனுடன் சிலாகிப்பது என்று முடிந்து போய்விடும். இணையத்தின் மூலம் நிறைய வாசித்தாலும் எல்லாவற்றுக்கும் உடன் விமர்சனம் எழுதாத என் சோம்பேறித் தனத்தை கூட முறியடித்து விடுகிறது உங்கள் படைப்பு. நன்றி. மிக நன்றாக வந்துள்ளது உங்கள் தொடர் .

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி உங்கள் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி .. நீங்கள் சொல்வது போல எனக்கும் அந்த பிரச்சினை உண்டு நிறைய வாசித்தாலும் பல சமயங்களில் நல்ல படைப்புகளுக்கு பின்னுட்டம் இட முடியாமல் போய் விடுகிறது. இருப்பினும் உங்கள் உள்ளார்ந்த கருத்துக்கு நன்றி நானும் சோம்பல் உதறி உங்களைப் போல் கருத்துரை இட தூண்டுகிறது.. கடைசி ஐந்தாவது அத்தியாயம் இன்று பதிவில் .. வாய்ப்பு இருந்தால் அவசியம் வாசியுங்கள்

    பதிலளிநீக்கு
  3. அது சரி மணிச்சுடர் ... ஏன் உங்கள் வலைப்பூ வாசிக்க முடியாமல் ... இடுகைகள் இல்லை என்ற தகவல் வருகிறது?

    பதிலளிநீக்கு
  4. என்ன இப்படி சொல்கிறீர்கள் , புதிதாக 3 இடுகைகள் போட்டு உள்ளேன், கிருஷ்ணப்ரியா கூட கருத்து விடுத்துள்ளார்.

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...