செவ்வாய், 13 ஜூலை, 2010

Green Mile


“ஸ்டீபன் கிங்“ எழுதிய பிரபலமான நாவலான The Green Mile ஆறு தொகுதிகளாக வெளிவந்து பெரிதும் வாசிக்கப்பட்டவை. இந்த நாவலை தழுவி தலைச்சிறந்த திரைக்கதையாசிரியரான ஃபிராங்க் டாராபாண்ட் ( FrankDarabont) இயக்கத்தில் உருவான அற்புதமான திரைப்படம்தான் கிரீன் மைல்.



இயக்கம் : ப்ராங்க் டாராபேன்ட் ( FrankDarabont)



ஒளிப்பதிவு : டேவிட் டாட்டர்ஸால் (David Tattersall)


நாவல் : ஸ்டீபன் கிங் (Stephen King)
உலகின் மிகச் சிறந்த படங்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் ஏதேனும் ஒரு நாவலை அல்லது சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டவையாக இருக்கும். ஹாலிவுட்டின் குறிப்பிடத்தக்க பொழுதுபோக்கு படங்கள் கூட முடிந்தவரை நாவல்களை தழுவி எடுக்கப்பட்டவைதான்.


இந்தியாவின் சிறந்த படங்கள் என்று சுட்டிக்காட்டப்படும் படங்கள் கூட படைப்பிலக்கியங்களை தழுவி எடுக்கப்பட்டவைதான். பதோ் பாஞ்சாலியிலிருந்து தமிழின் உதிரிப்பூக்களை உதாரணமாக சொல்லமுடியும்.


மனிதன் தன்னை ஒழுங்குபடுத்தவும், வெளிப்படுத்தவும் சட்டங்களையும், விதிமுறைகளையும் வரையறுக்கிறான்.உலகின் எந்த நாட்டு சட்டமும் முழுமையாக கசிவுகளற்று, கச்சிதமாக வடிவமைக்கப்பட்டவை அல்ல. எல்லா விதிகளும், சட்டங்களும் வெவ்வேறு தருணங்களில் திருத்தி அமைக்கப்பட்டவைதான். இன்னமும் திருத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளோடு இருப்பவைதான் எனில் மரணதண்டனை என்கின்ற உயிர் பறிக்கும் தண்டனை சட்டப்படியான ஒன்றாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? யாரை ஒழுங்குபடுத்த? இந்த விடையற்ற கேள்விகளை எழுப்புகிற படம்தான் Green Mile.

குற்றவாளி உணர்ச்சி மேலிட்ட உள்மன உந்துதலால் தரும் தீர்ப்பு ஒரு குடும்பத்தை நிர்க்கதியாக்குகிறது என்றால் ஆய்ந்து தெளிந்து தரப்படும் மரணதண்டனை தீர்ப்பாகும் போது இரண்டு குடும்பங்கள் நிர்க்கதி ஆகின்றன.

ஒரு விதத்தில் பார்த்தால் மரணம் எப்படி குற்றவாளிக்கு தண்டனை ஆக முடியும்? உறுத்தலான குற்ற உணர்வில் உள் மனதில் எழும் போராட்டம் அவனைச்சார்ந்த பொறுப்புகள் யாவற்றிலிருந்தும் நொடிப்பொழுதில் கைநழுவி கழுவுவது அவனுக்கு விடுதலைதானே? எந்த வகையில் பார்த்தாலும் மரணதண்டனை என்று மனித சமூகத்தில் அறிவுடைமையான தீர்ப்பாக சொல்லி விடமுடியாது.

கிரீன் மைல் எனப்படும் சிறைக்கொட்டடி மரண தண்டனை கைதிகளுக்கென்றே கட்டப்பட்டது. அதில் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறான் பால். அவனது சகாக்களாக வாட்சன், ஏர்லன், புருட்டல், பெர்சி கொட்டடிக்கு கொண்டு வரப்படும் கைதிகள் மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டு உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சி கொல்லப்படுகிறார்கள். மின் நாற்காலியில் அமர்த்தப்படும் போது உச்சந்தலையில் தண்ணீரில் நனைக்கப்பட்ட ஸ்பான்ஜை வைத்து அதன் வழியே மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். இது கிட்டத்தட்ட மூளையை நோக்கி சுடப்படும் துப்பாக்கி குண்டுக்கு இணையாக உடனடி மரணத்தை சம்பவிக்கச் செய்கிறது.

கொட்டடிக்கு கொண்டு வரப்படுபவர்களில் ஜான் ஃகாபே, டெல், வார்ட்டன் ஆகிய மூன்று வெவ்வேறு வகையான கதாப்பாத்திரங்களை ஸ்டீபன் கிங்கும், இயக்குநர் பிராங்கும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். ஜான் ஃகாபே கறுப்பினத்தைச் சார்ந்த ஆஜானுபாகுவான தோற்றமுடையவனாக இருக்கிறான். இரண்டு பெண் குழந்தைகளை கொன்றதாக அவன் மீது குற்றச்சாட்டு. டெல் சராசரியான தோற்றமுடைய மென்மையான குணம் படைத்தவனாக இருக்கிறான். பில் வார்ட்டன் வாளிப்பான, அழகான தோற்றமுள்ள இளைஞன்.

இதில் ஜான் ஃகபேக்கு சில அபூர்வமான சக்திகள் இருக்கின்றன. அதன் மூலம் எத்தகைய நோயும் நொடிப்பொழுதில் குணமாகி விடுகிறது. சிறை அதிகார பால் சிறுநீரக தொற்று நோய் காரணமாக அவதிப்படுகிறார். இதையறிந்த ஃகபே அவரை எளிதில் அத்துன்பத்திலிருந்து விடுவிக்கிறான். இதனால் அவன் மீது அவருக்கு இனம்புரியாத அன்பு ஏற்படுகிறது.

டெல் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் ஒரு எலி புழங்க ஆரம்பித்துவிடுகிறது. அதனோடு வெகுவாக பழகிடும் டெல் ஒரு கட்டத்தில் அவன் சொல்லும்படியெல்லாம் செய்யும்படி எலியை பழக்குகிறான். அதற்கு Mr.Ingles என்று பெயரிடுகிறான்.

மிக சாது போல் தோற்றமளிக்கும் வார்ட்டன் எதிர்பாராத சமயத்தில் கிறுக்குத்தனமாக எதையேனும் செய்கிற மனநோய் பீடித்தவனாக நடந்து கொள்கிறான். இதன் காரணமாக தனிமைச் சிறையில் அவ்வபோது அடைக்கப்படுகிறான். இந்த முரண்பட்ட மூன்று கைதிகளோடு பால் என்கின்ற மென்மையான அதிகாரியின் பழகுகிற இயல்பு தன்மையும் பெர்சி என்கிற முரட்டுத்தனமாக மனவிகாரம் பிடித்த அதிகாரியின் கடினப்போக்கையும் ஊடாட வைத்து அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பிராங்க்.

பெர்சி எல்லா கைதிகளையும் ஏளனமாக நடத்தும் போதெல்லாம் அவனை பால் கண்டிப்பதும், அவன் இன்னும் உக்ரமாகி அதை விட மோசமாக வேறொரு சந்தர்ப்பத்தில் நடப்பதையும் காட்சிப்படுத்தும் பிராங்க் குற்ற மனநிலை என்பது எவர் மனதில் பேயோட்டம் போடுகிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். உளவியல் ரீதியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த பாத்திரங்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் பற்றிய அப்பட்டமான பதிவு உளவியல் மாணவர்களுக்கு பாடமாக வைக்கலாம் என்கிற அளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


குறிப்பாக ஃகாபேயை தரக்குறைவாக நடத்துவதையும், டெல் மீது எப்பொழுதும் ஏளன பார்வையோடு உரையாடுவதையும் பெர்சியாக நடித்த டவ் ஹெர்ட்சன் மிக அருமையாக முகபாவங்கள், வசனவெளிப்பாடுகள் மூலம் அனாயசமாக நடித்திருக்கிறார். குறிப்பாக சிறைக்கதவு அருகே பெர்சி நடந்து செல்கையில் எதிர்பாராவிதமாக வார்ட்டன் அவனது கழுத்தை கம்பி வழியே நெரிக்க, பயத்தில் சிறுநீர் கழித்துவிடும் பெர்சி அவனிடமிருந்து தப்பித்தபின் எதுவும் நடவாதது போல் பிறரை எச்சரிப்பதும், அடக்கமாட்டாமல் சிரித்த டெல்லை பார்வையால் விரட்டுவதும் நடிப்புக்கலை பயில்பவர்களுக்கு சரியானதொரு ஆசிரியர் போல் திகழ்கிறார்.

டெல்லின் எலியை அவனை பழிவாங்கும் பொருட்டு பெர்சி காலால் நசுக்குவதும், டெல் அதற்காக கதறி அழுவதும், ஜான் ஃகாபே தன் அபுர்வ சக்தி மூலம் எலியை குணப்படுத்துவதும், ஏமாற்றமடைந்த பெர்சி, டெல் மரணதண்டனை நிறைவேற்றத்தின் போது உச்சந்தலையில் நீரில் நனைக்கா ஸ்பான்ஜை வைப்பதும், அதன் காரணமாக டெல் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து உயிர்விடுவதும் நெகிழ்ச்சியான இடங்கள். திருத்த வேண்டிய இடத்தில் இருக்கும் ஒரு அதிகாரியின் குற்ற மனநிலையையும், குற்றம் சாட்டப்பட்டு கைதிகளாக இருப்பவர்களின் மென்மையான மனநிலையையும் இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

சிறையின் தலைமை அதிகாரியின் மனைவி மூளையி்ல் உள்ள கட்டியின் காரணமாக மரணப்படுக்கையில் இருக்கிறார். சிறை அதிகாரி பால், ஜான் ஃகாபேவினால் நிச்சயமாக அவளை குணப்படுத்தி விட முடியும் என்று நம்புகிறான். இதர அதிகாரிகளும் நம்புகிறார்கள். ஒரு நாள் இரவு நேரத்தில் ஜான் ஃகாபேயை தலைமை அதிகாரி வீட்டுக்கு அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள். அங்கு ஃகாபே எளிதில் அவளது நோயை குணப்படுத்துகிறான். அவன் மீதான பாசமும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

ஃகாபேயை மின்சார நாற்காலியில் அமர வைக்கும் நாளுக்கு முதல் நாள் இரவு பால் அவனிடம் தான் அவனுக்காக எதுவும் செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறான். .காபே அதனை மறுத்து சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனையை ஏற்க தயாராக இருப்பதாக சொல்கிறான். அதோடு மட்டுமில்லாமல் தான் அந்த பெண் குழந்தைகளை கொல்லவிலலை என்றும் மனநிலை பிறழ்ந்த வார்ட்டன்தான் கொன்றதாகவும் கூறுகிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் பால் அவன் குற்றமற்றவன் என்று தெரிந்தும் சட்டப்படியான மரணதண்டனை ஆணையை கையில் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாதவராய் திகைத்து நிற்கிறார். ஆனால் ஃகாபே தனக்கு வாழ விருப்பம் இல்லை என்றும், மரணத்தை ஏற்பதாகவும் கூறிவிட அவனுக்கான மரணதண்டனை சிறை உயர்அதிகாரி மற்றும் ஃகாபேயினால் காப்பாற்றப்பட்ட அவரது மனைவி முன்னிலையில் நிறைவேற்றப்படுகிறது.

காட்சி அமைப்பதிலும், பாத்திரங்களை உருவாக்குவதிலும் பிராங்க தலைசிறந்தவர் என்பதை நிரூபிக்கும் இடங்கள் படத்தி்ல் விரவிக்கிடக்கின்றன. முக்கியமாக டெல் முதல்நாள் எந்த பார்வையாளர்கள் முன் சுண்டெலியை வைத்து வித்தைகள் நிகழ்த்துகிறானோ அதே பார்வையாளர்கள் முன் மின் நாற்காலியில் அமர்த்தப்பட்டு பொசுக்கப்படும் காட்சி. மரண தண்டனைக்காக அவனை அழைத்து வரும் போது மனஇறுக்கத்தில் நடந்து வரும் போது அறையின் புழுக்கத்தைக் கூடதாளாமல் விசிறிக் கொண்டு இருக்கும் பார்வையாளர்களின் அலட்சிய மனநிலையை படம் பிடிக்கும் காட்சி என்று பலவற்றை சொல்ல முடியும். படத்தின் வசனங்கள் நறுக்கு தெறித்தாற் போலவும், எள்ளலுடனும் அமைத்திருக்கிறார். டுட்ரு என்கிற கதாப்பாத்திரம் மரண தண்டனைக்கு முன்னதான ஒத்திகையின் போது நடிப்பவராக காட்டப்படுகிறார். அவரது நடை, உடை, பாவனை வசனங்கள் அத்தனையும் எள்ளல். மின்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு போலியாக தண்டனை நிறைவேற்றுவது போல பாவனைக் காட்டி முடித்தவுடன் “Oh It is Shocking Experience!” என்று அந்த நிகழ்வை குறிப்பிடுவது எலலாமே காட்சிகளை உருவாக்குவதன் கலையை உணர்த்துகின்றன.

பால் என்கிற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் டாம் ஹாங்ஸ் (Tom Hanks) அற்புதமான உடல் மொழி அமையப்பெற்றவர். மார்லன் பிராண்டோ, டஸ்டின்ஹாப்மேனுக்கு பிறகு மிகச்சிறந்த நடிகர் என்று அவரை குறிப்பிடலாம். Forrest Gump, Cast Away போன்ற மிகச்சிறந்த பட வரிசையில் இந்த படத்தையும் குறிப்பிடலாம். இந்தி நடிகர் அமீர்கான் நடிப்புபாணி பெரும்பாலும் டாம்ஹாங்ஸ்ன் நடிப்பு பாணியை ஒத்திருப்பதை சிலர் உணரக்கூடும்.

டேவிட் டால்ட்ரஸால் (David Tattersall) ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். ஃகாபேயை அறிமுகப்படுத்தும் காட்சியில் இடம் பெற்ற எல்லோரும் ஃகாபேவை விட உயரம் குறைவானவர்கள் (உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும்) என்பது போல் ஃகாபேயின் முகத்தையே காட்டாமல் அவன் நடமாட்டத்தை காண்பிக்கும்படி அவர் வைத்த கோணங்களும், டெல்லை மரணதண்டனைக்கு அழைத்துவரும் காட்சியில் அவர் பயன்படுத்தியிருக்கும் காட்சி அமைப்பும் படத்தின் மையக்கருவை உள்வாங்கி கொண்டு அமைக்கப்பட்டவை.


உளவியல் ரீதியாகவும் திரைப்படக்கலையை மிக நோ்த்தியாக கட்டமைத்திருக்கும் விதத்திலும் The Green Mile மிக அற்புதமான படம் என்றே குறிப்பிடுவேன்.

4 கருத்துகள்:

  1. எளிமையாக சிறப்பாக தள வடிவமைப்பு உள்ளது.

    தொடர்கின்றேன்.

    அறிமுகம் செய்த அறிவுத்தேடலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜோதிஜி உங்கள் கருத்துக்கு நன்றி தொடர்ந்து வாசியுங்கள் நானும் உங்களை பின் தொடர்கிறேன் - பாரதிக் குமார்

    பதிலளிநீக்கு
  3. மிக சிறப்பான விமர்சனம்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி..
    தொடர்ந்து உங்க வலையையும் படிக்கிறேன்

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...