வியாழன், 23 ஏப்ரல், 2015

கள்வனுக்காகக் காத்திருக்கிறேன்



கள்வனுக்காகக்  காத்திருக்கிறேன்
பூட்டுகளுக்கான கொத்துச் சாவியைத்
தேடிக்கொண்டிருக்க வேண்டாம்
கதவுகளைத் திறந்தே வைத்திருக்கிறேன்
அமாவாசை இரவுக்காக
காத்திருக்கவும் வேண்டாம்
சுட்டெரிக்கும் உச்சி வெயில் கூட
சாதகமானதுதான்..
ஆயுதங்களைத்  தீட்டிக்கொண்டிருக்கும்
அவசியமும் இல்லை
நிராயுதபாணியாகவே வருவது உத்தமம்..
சுவரேறிக் குதிக்கும்
வித்தை எதுவும் தேவைப்படாது
கண்ணி வெடி இருக்குமோ
என்ற அச்சமும் தேவையில்லை
காவல்துறையிடம் புகார் தரும்
உத்தேசம் எதுவுமில்லையென
உத்தரவாதம் தருகிறேன்
வீட்டிற்கு வருவோர் போவோரிடம்
ஜாடைமாடையாகக்  குறிப்புகள் தருகிறேன்
எல்லா அறைகளையும்
துருவித்துருவிப்  பார்ப்பவர்கள் கூட
பொக்கிஷங்கள் நிரம்பியிருக்கும் அந்தஅறையின் 
நிலைப்படியிலேயே நின்றுவிடுகிறார்கள்
பேசுவதற்கு ஏதுமற்றவர்களும்
என் பொக்கிஷங்களைப் பற்றி
பேச்செடுத்தால் மௌனிக்கிறார்கள்
எடுத்துப்போகிறவர்களுக்கு ஏதுவாக
என் புத்தக அறையை திறந்து வைத்திருக்கிறேன்
விலைமதிப்பற்ற வரிகளைத் திருடிச்செல்லும்

அந்தகள்வனுக்காக இன்னமும் காத்திருக்கிறேன்..

(உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்)

திங்கள், 20 ஏப்ரல், 2015

ருசி



ஆற்று மணலில் வீடுகட்டி
போட்டிபோட்டு கலைக்கும்போது
ஒட்டியிருந்த  மண் ருசியை
வயது முதிர்ந்ததும்
கல்வியும், பதவியும் தடுக்கின்றன

நீர்விட்டுப் பிசைந்து, பிடித்த ரூபத்தில்
உருட்டி செதுக்கி தேற்றிய உருவத்தை
தாழ்வாரமெங்கும் பதித்ததுண்டு

விரல்களில் மிச்சமிருந்த மண்துகள்கள்
எந்த உப உணவுமின்றி உள்ளே சென்றுவிடும்..

வளர்ந்தபின் மண்ணோடு இருந்த
தொடர்புகள் யாவும் அறுந்து போயின
ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்ட
குடும்பத்தை புறக்கணிப்பது போல
கால்களில் மிதிபடுவதோடு சரி..

விவசாயம் லாபகரமானது இல்லை
என்று போதிக்கப்பட்டதால்
தோட்டம் சீர் செய்யக்கூட
தொடுவதில்லை உபகரணங்களை..

பளிங்குத்தரைகளை
பெயர்க்க முயற்சிப்பதில்லை பெருச்சாளிகள்...

மழைவந்தால் , இறுக்க மூடிக்கொண்டு
தொலைக்காட்சிகளோடு  சங்கமித்துவிடுகிறோம்
மண்வாசனை மடிந்துபோய்விடுகிறது
குளிர்சாதன அறைக்குள் வராமலேயே....

எத்தனைக் கழுவினாலும்                  
சாமர்த்தியமாக தப்பிய
ஒரு நாவற்பழம்
நாவினில் சேர்த்துவிடுகிறது
மண்ணின் ருசியையும்
நழுவிப்போன பால்யத்தையும்...

நன்றி: 'கல்கி' 19.04.2015.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

வாங்க, படிக்கலாம்!

     

உழவர்களுக்கு அறுவடை நாள் எவ்வளவு முக்கியமும் கொண்டாட்டமுமாக இருக்கிறதோ அதைப் போன்றதே வாசிப்பதை நேசிப்பவர்களுக்கு புத்தகச் சந்தையில் தத்தம் அறிவின் விசாலத்துக்கேற்ற நூல்களை  தேடிக் கண்டடைந்து வாரிக் கொண்டு வருவது. அறிவை அழகூட்டும் புதுப் புதுப் புத்தகங்களே எங்கள் பண்டிகைப் புத்தாடைகளுக்கான சரியான மாற்று ஏற்பாடாக உள்ளது . சென்னைப் புத்தகச் சந்தையில் நேற்றைய என் அறுவடை உங்கள் பார்வைக்கும்.

1. க.நா.சு. புதுக்கவிதைகள்
                         - ஞானச்சேரி வெளியீடு

2. மார்க்கோபோலோ பயணக் குறிப்புகள்
                       - பொன். சின்னத்தம்பி  - 'அகல்'

3. எண்ணும் மனிதன் -மல்பா தஹான் -
                        தமிழில்: கயல்விழி - 'அகல்'

4. ஒரு தோழியின் கதை -
                   இரா. நடராசன்  - பாரதி புத்தகாலயம்

5. யுரேகா கோர்ட் -
                     இரா. நடராசன்  - விகடன் பிரசுரம்

6. ஹிக்ஸ் போஸான்  வரை இயற்பியலின் கதை
                  - இரா. நடராசன்   - பாரதி  புத்தகாலயம்  
                                                                                   
7.    டார்வின் ஸ்கூல்  - இரா.நடராசன்
                          - பாரதி புத்தகாலயம்

8. ஆயிரம் ஆண்டு அதிசயம்
                      - அமுதன் -தினத்தந்தி

9. மாகடிகாரம் - விழியன்
                 - பாரதி புத்தகாலயம்

10. மனிதக் கதை - பிரபாகர் சான்ஸ்கிரி
                                  - பாரதி புத்தகாலயம்

11. உலக வரலாற்றுக் களஞ்சியம்
              - ஐ. சண்முகநாதன் - விகடன் பிரசுரம்

12. வேங்கைச் சவாரி - கன்னடம்: விவீகி ஷன்பேக்,
                             தமிழில்: ஜெயமோகன் - வம்சி
                                                                                     
13. ஜெயம் (மகாபாரதம் ஒரு மறுபார்வை)
          -ஆங்கிலம்: தேவ் தத் பட் நாயக்
          -தமிழில்: சாருகேசி - விகடன் பிரசுரம்

14. மகாபாரதம் - பிரபஞ்சன்
           -நற்றிணை பதிப்பகம்

15. அயல் மகரந்த சேர்க்கை
      (உலக எழுத்தாளர்களின் நேர்காணல்கள்)
      -தமிழில்; ஜி.குப்புசாமி - வம்சி

16. அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்
       -ஜி.எஸ். எஸ். -விகடன் பிரசுரம்

17. அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்
           -நற்றிணை பதிப்பகம்

18. 6174 - க. சுதாகர் - வம்சி

19. தேம்பி அழாதே பாப்பா - கூ கி வா தியாங்கோ
                தமிழில்: எஸ்.பொ . - 'நிழல்'

20. ஆன்மாக்களின் அடித்தட்டில்
       (பன்மொழிச் சிறுகதைகள்)
      தொகுப்பு: ப.திருநாவுக்கரசு - 'நிழல்'

21. சிலுவையில் தொங்கும் சாத்தான்கள்
                     -கூ கி வா தியாங்கோ
                    -தமிழாக்கம்: அமரந்தா-சிங்கராயர்
                    - தாமரைச் செல்வி பதிப்பகம்

22. நம் நலம் நம் கையில் - பாகம் - 1
          -Dr. தேவேந்திர வோரா - நவநீத் பதிப்பகம்

23. ஆயிரம் உணவு தானிய பதார்த்த மூலிகை குண விளக்கம்
          - முல்லை முத்தையா - NCBH
24. பறளியாற்று  மாந்தர் - மா. அரங்கநாதன் - முன்றில்  பதிப்பகம்




வெள்ளி, 2 ஜனவரி, 2015

'பெண்ணியம் பேசிய பேரறிவு

                
                                                            


                முட்டாள்களுக்கென்று ஒரு தினம் இருப்பதில் தவறில்லை. அறியாமைதான் முட்டாள்தனத்தின் அளவுகோல் என்றால், எல்லோருமே ஒரு விதத்தில் அறியாமையின் நிழலில்தான் அமர்ந்திருக்கிறோம். சதவிகிதமே வேறுபடுகின்றன. முட்டாள்தினத்தின் நோக்கம் அறியாமையிலிருந்து அறிதலுக்கு' என்பதாக இருக்குமாயின், முட்டாள்களுக்கென்று ஒரு தினம்' இருப்பதில் தவறில்லை.
                பிரச்சினை என்னவென்றால் அடுத்தவர்களை முட்டாளாக்கும் கொண்டாட்டம் மட்டுமே இருக்கின்றவரையில் முட்டாள்கள் தினத்தை அனுசரிப்பதில் பிரயோஜனம் எதுவுமில்லை. ஏனெனில் முட்டாளாக்குவது அன்றாட செயலாக பழகிவிட்ட உலகில் அனுதினமும் முட்டாள்கள் தினமே.
                அறியாமை ஒரு கடலைப்போல் அலை மோதிக்கொண்டிருக்கிறது. பற்றுவதற்கு ஒரு மரத்துண்டுகூட இல்லாத போதும், எதிர்நீச்சல் போட்டு போராடியவர்களால் இன்று நாம் சுதந்திரமாக மிதவைகளில் பயணிக்கின்றோம். கல்விதான் இருளை போக்கும் ஒளி, கல்விக்கூடங்கள்தான் ஒளியை காக்கும் அனல்வெளி என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கல்விச்சாலையின் நிழலில் கூட ஒதுங்காமல், அறிவுச்சுடராக ஒளிர்ந்த மேதைகளின் பட்டியலும் பெரிதுதான். அப்படியான மேதைகளில் ஒருவர் மேரி சோஃபியா ஜெர்மெயின்.
                பிரான்சில் 1776 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி சோஃபியா, பாங்க் ஆஃப் பிரான்சில் இயக்குனராக இருந்த  அம்புரோஸ் ஃபிரான்காயிஸ் மகளாக பிறந்தார். அவரது தாயின் பெயர் மேரி மெட்லின் ஜெர்மெயின். உப தொழிலாக பட்டு வியாபாரம் செய்து வந்த அம்புரோஸ்பாரிஸ் நகர நிர்வாக குழுவிலும்  இடம்பெற்றிருந்தார். இத்தனை செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவரது பெண்கள்  கல்வி கற்கும் சூழல் பிரான்சில்  இல்லை. பதினாறாம் லூயியின் தவறான நிர்வாகத்தினால், பிரான்சு முழுக்க கிளர்ச்சி தோன்றிய காலம் அது. பிரெஞ்சு புரட்சியின் துவக்க காலகட்டம். அன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை. ஆனாலும் சோஃபியா சுயமாக மொழியை கற்றுக்கொண்டார்.
                அம்புரோஸ் தனது இல்லத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றை அமைத்திருந்தார். சோஃபியா 13 வயதை நெருங்கும் தருணத்தில் (1789) பிரான்சில் பெண்கள் வெளியே நடமாடக்கூட முடியாத அளவுக்கு கலவரக்காடாக இருந்தது. சோஃபியா தனது பொழுதுகளை நூலகத்தில் கழிக்க நேரிட்டது. கணிதம் மற்றும் வரலாற்று நூல்கள் அவரை வாசிக்கத்தூண்டின. குறிப்பாக ழீன் எடினோ மாண்டுக்லே எழுதிய ஹிஸ்டரி ஆஃப் மேத்தமேடிக்ஸ் நூலை வாசித்தார். அதில்தான் ஆர்க்கிமிட்டிஸ்-இன் துயர மரணம் குறித்து அவர் அறிந்துகொண்டார். பொதுவாக ஆர்க்கமிட்டிஸ் கணித ஆய்வில் ஈடுபட்டால் சாப்பாடு, தூக்கம், தண்ணீர் என அனைத்தையும் மறந்துவிடுவார். அவர் வாழ்ந்த சிராக்கஸ் நகரை ரோமானிய படைகள் ஆக்ரமித்த சமயம்ஆர்க்கமிட்டீஸ் மும்முரமாக மணலில், வடிவ இயல் குறித்து சில புதிர்களை விடுவிக்க முனைந்து கொண்டிருக்கையில்  ஒரு ரோமானிய சிப்பாய் அவர் யாரென்று அறியாமல் அவரை கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் ஆர்க்கமிட்டீஸ் அந்த சிப்பாயை கவனிக்கவே இல்லை. கோபமுற்ற சிப்பாய் அந்த கணித சக்கரவர்த்தியை வெட்டி வீழ்த்திவிட்டான்.
                தன்னை கொல்லவந்தவனை கவனிக்க முடியாத அளவுக்கு கணிதம் அத்தனை சுவாரசியமானதா என்று வியப்படைந்த சோஃபியா, கணித நூல்களை வாசிக்கத்துவங்கினார். நுழைய, நுழைய ஆலிஸ்-இன் அதிசய உலகம் போல அவரை உள்ளிழுத்துக்கொண்டே போனது கணக்கு. ஜாக்குவஸ் ஆண்டனி ஜோசப் என்பவர் எழுதிய லே கால்குலஸ் டிஃபரன்ஷியல்' என்ற நூலை வாசித்ததிலிருந்து கால்குலஸ் மீது அபரிமிதமான நாட்டம் ஏற்பட்டது. அவரது தொடர்ந்த வாசிப்பு ஆர்வம் அவரது பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அவர் ஏதோ தேச விரோத செயலில் ஈடுபட்டிருந்தது போல பதறினார்கள். அவர் தொடர்ந்து படிக்க முட்டுக்கட்டை போட்டனர். ஆனால் சோஃபியா இரவு நேரத்தில் மெழுகுவர்த்திகளையும், புத்தகங்களையும், குறிப்பு ஏடுகளையும் தனது போர்வைகளோடு மறைத்து எடுத்துச்சென்று இரவு முழுக்க புத்தகங்களை வாசிப்பதிலும், குறிப்புகள் எடுப்பதிலும், கணிதப்புதிர்களை பயிற்சி செய்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டபடியே இருந்தார். சில நாட்களில் விடிந்தபிறகும் தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பவந்த பெற்றோர்கள் அவரது விரல்களில் படர்ந்திருந்த பேனா மையை பார்த்துவிட்டு இனி அவரது படிக்கும் ஆர்வத்தை தடை செய்ய முடியாது என புரிந்துகொண்டு அவரை அவரது வழியிலேயே விட்டுவிட்டனர்.
                பாரிசில் 1794-இல் இகோல் பாலிடெக்னிக் என்ற தொழில் நுட்பக்கல்லூரி கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொண்டவர்கள் படிப்பதற்காக துவங்கப்பட்டது. 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே அதில் சேரமுடியும். சோஃபியாவுக்கும் அந்த ஆண்டுதான் 18 வயது. எனவே அவர் அந்த கல்லூரியில் சேர மனு செய்திருந்தார். ஆனால் அவர் பெண் என்கிற காரணத்தினால் கல்லூரியில் சேர்க்க மறுத்துவிட்டது நிர்வாகம். வீட்டிலிருந்தபடியே பாடத்திட்டங்களை பெற்று கற்கும் முறையையும் அந்த கல்லூரி அறிமுகம் செய்திருந்தது. ஆனால் அதிலும் பெண்களுக்கு அனுமதியில்லை. சோர்ந்து போயிருந்த சோஃபியாவுக்கு ஒரு உபாயம் கிடைத்தது. வீட்டிலிருந்து கற்கும் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்த ஆண்டோனி அகஸ்ட் ப்ளான்க் என்கிற மாணவன் ஏதோ சில காரணங்களால் பாரிசைவிட்டு வெளியே செல்ல நேரிட்டது. அவன் கல்லூரிக்கு தகவல் தெரிவிக்காமல் பாதியில் படிப்பை விட்டுவிட்டான். அது பற்றி அறிந்த சோஃபியா அவனது பெயரில் பாடத்திட்டங்களை பெற்று கற்கத் தொடங்கினார். அவர் பாடத்திட்ட வினாக்களுக்கு பதில் அனுப்பிய தாள்களைப் பார்த்து வியந்துபோன கல்லூரி ஆசிரியர் லாகரேங் அவரை நேரில் வரச்சொன்னார்.
                சோஃபியா வேறு வழியில்லாமல் தான் ஒரு பெண் என்பதை அவருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். லாகரேங் முதலில் அவரை கண்டித்தாலும் பிறகு அவருக்கு கணிதம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தார்.
                ஒருமுறை ஜெர்மானிய கணித அறிஞர் காஸ் என்பவரது அரித்மாடிக் டிஸ்கஷன்ஸ்' என்ற நூலை வாசித்து அதில் உள்ள கணித விளக்கங்கள் குறித்து அவரோடு கடிதத் தொடர்புகொண்டு விவாதித்தார். அவரோடு தொடர்ந்து நட்பில் இருந்தார் சோஃபியா. அவரிடமும் ப்ளான்க் என்ற பெயரிலேயே தொடர்பில் இருந்தார்.  நெப்போலியனின் படை ஒருமுறை காஸ் வசித்த நகரை சுற்றி வளைத்த போது, ஆர்க்கிமிட்டீஸ்க்கு ஏற்பட்ட நிலை அவருக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சிய சோஃபியா தனது தந்தையின் நண்பரும் ராணுவ அதிகாரியுமான ஜெனரல் பெர்னெட்டியிடம் முறையிட்டு காஸ்' ஐ பத்திரமாக காப்பாற்றினார்.  நன்றி சொல்வதற்காக காஸ் முயன்றபோதுதான் சோஃபியா தன் ஒரு பெண் என்பதை வெளிப்படுத்தினார். காஸ் பின்னர் பாரிஸ்-இல் உள்ள காடிங்டன் பல்கலைக் கழகத்தில் வானியல் பேராசிரியராக சேர்ந்ததோடு, கணிதம் குறித்த ஆய்வுதாள்களை சமர்ப்பிக்கும்முன் சோஃபியாவை கலந்து ஆலோசித்து சில திருத்தங்களை  சேர்த்துக்கொண்டார். எல்லாமே கடிதங்கள் மூலம்தான். இருவரும் கடைசி வரை சந்திக்கவேயில்லை
                அட்ரின் மேரி லெகந்தர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் ஃபெர்மட் எண்ணியல் தேற்றத்தின் இறுதி சமன்பாட்டை (FLT)தீர்க்கவே முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். சோஃபியா அதை சவாலாக எடுத்துக்கொண்டு அதனை தீர்க்கும் வழியை கண்டுபிடித்தார். X3 + Y3 = Z3  என்கிற சமன்பாட்டுக்கான தீர்வுதான் கணித உலகம் சோஃபியாவை நோக்கித் திரும்பிப்பார்க்கவைத்தது.

                ஜெர்மனைச் சேர்ந்த எர்னஸ்ட் சால்ட்னி 1808 -இல் பிரான்ஸ் வந்தபோது கண்ணாடி தட்டு ஒன்றில் நுண்ணிய மணல்துகளைக் கொட்டி வயலின் கருவியை வாசிப்பது போல, சிறு குச்சி ஒன்றின் மூலம் வாசித்தார். அதிலிருந்து இனிய இசை ஒன்று தோன்றியது. இந்த நிகழ்வை ஒட்டி பிரான்ஸ் அரசன் நெப்போலியன் ஒரு போட்டி ஒன்றை அறிவித்தான். சால்ட்னி செய்துகாட்டிய  நிகழ்வை கணிதம் மூலம் கண்டடைய முடியுமா? அப்படி முயன்று வென்றவர்களுக்கு பரிசும் அறிவித்திருந்தான்.
                சோஃபியா அந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பி அதற்கான தாள்களை சமர்ப்பித்தார். ஆனால் அவருடைய கணிதத் தீர்வுகளுக்கான வழிமுறைகள் தவறானவ என நிராகரித்துவிட்டார்கள். இரண்டாவது முறையாக மீண்டும் புதிய தாள்களை அனுப்பினார். ஆனால் அதுவும் ஏற்கப்படவில்லை. மூன்றாவது முறையாக வேறொரு கோணத்தில் அதற்கான தீர்வுகளை சமர்ப்பித்தார். நடுவர்கள் இந்த முறை பரிசுக்குரியது என்று தேர்வு செய்தனர். ஆனால் சோஃபியா பெண் என்பதாலும், பள்ளிக்கல்வியை முறையாக கற்றவரில்லை என்பதாலும் இளக்காரமான கருத்துக்களையே வெளிப்படுத்தினர் என்பதால் சோஃபியா பரிசு வழங்கும் நிகழ்வுக்கு செல்லவே இல்லை. தன்னால் முடியும் என்பதை நிருபித்துவிட்டேன் பரிசுக்காக நான் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை என்று அவர் கூறிவிட்டார்.
                 பிற்காலத்தில், உலோகங்களின் நீட்சி குறித்த அவரது கணித நிரூபணங்கள் அவரைப்பற்றிய மதிப்பை உயர்த்தின. இதன் காரணமாக அவரை பிரான்சின் புகழ் பெற்ற இன்ஸ்டியூட் ஆஃப் அகாடமி அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் பெண் உறுப்பினர் சோஃபியாதான். இதைத்தவிர அவருக்கு எவ்வித கௌரவமும் அவர் உயிருடன் இருக்கும் வரை வழங்கப்படவில்லை. பொதுவாக புகழ்பெற்றவர்கள், அறிவுஜீவுகள் இறந்தால் பிரான்சில் அவரது மரண சான்றிதழில் அதனை கௌரவமாக குறிப்பிடுவார்கள். ஆனால் சோஃபியாவின் மரண சான்றிதழில் அவர் ஒரு தொழிலும் இல்லாத ஒற்றைப்பெண்மணி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
                  திருமணமே செய்துகொள்ளாமல் கணித ஆய்வுகளிலேயே தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை செலவிட்ட சோஃபியா இறுதிகாலத்தில்  புற்று நோயால் நலிவுற்றார். 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி அவர் மரணமுற்றார். அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப்பிறகு காஸ்'-ன் கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு காடிங்கன் பல்கலைக்கழகம் சோஃபியாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. எந்த கல்லூரி அவருக்கு கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க மறுத்ததோ அந்த கல்லூரியின் பெயர் பிற்காலத்தில் இகோல் சோஃபியா ஜெர்மெயின் பாலிடெக்னிக் என்று மாற்றமானது. ஒரு காலத்தில் சோஃபியா நுழைய  அனுமதிக்காத அந்த கல்லூரியின் நுழைவாயிலில் இன்று அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது இல்லம் சரித்திர சின்னமாக அறிவிக்கப்பட்டு, இன்று  தவிர்க்க முடியாத இடமாக ஆகிவிட்டது. அவரது பெயர் பாரிஸ்-இன் முக்கிய தெரு ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.
                பெண்களுக்கான உரிமைகளுக்காக பலரும் பல கோணங்களில் போராடியிருக்கிறார்கள். சோஃபியா போராடியது தனது பேரறிவினால். இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சுடராய் ஒளிர்ந்த சோஃபியாவின்   பிறந்த நாளான ஏப்ரல் 1 ஐ வேறெதோ காரணங்களுக்காக முட்டாள்கள் தினமாக அனுசரிப்பது அநீதி என்றே படுகிறது.
         வேடிக்கை என்னவென்றால் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது  முதன் முதலாக பிரான்சில்தான் 1500 களில் ஆரம்பித்ததாம்...
                                                  நன்றி : தமிழ் இந்து  நாளிதழ்  18-05-2014

                

வியாழன், 13 நவம்பர், 2014

டிம் ஹெதரிங்டன் & க்ரிஸ் ஹோண்ட்ராஸ்

கலகக்கார கலைஞர்கள் -6
                      
Displaying timhetherington1.jpg
 டிம் ஹெதரிங்டன்

       தங்கள் சொந்த தேசத்திற்காக அல்லது தாங்கள் சார்ந்த கொள்கைகளுக்காக போராடி பாதிப்புகளுக்குள்ளான கலைஞர்கள் பலர் இருக்கின்றனர். அதே நேரம் பற்றியெரியும் பிரச்சினை பூமிகளுக்கு பயணித்து, அங்கு பாதிக்கப்படும் அப்பாவி மக்களைப் பற்றியும், அங்கு நடக்கும் அநீதிகள் பற்றியும் வெளி உலகுக்கு வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் கலைஞர்களும் இருக்கிறார்கள். டிம் ஹெதரிங்டனும் க்ரிஸ் ஹோண்ட்ராஸ்-ம் இந்த இரண்டாவது பிரிவைச் சார்ந்தவர்கள்.
           
    சதா சர்வ காலமும் ஆபத்தான கலவர பூமிகளில் சுற்றித்திரிபவர்கள் பத்திரிகை நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள் மற்றும் ஆவணப்படக் கலைஞர்கள். சாவை ஒவ்வொரு நொடியும் உரசிச்செல்லும் துணிச்சலும், உயிரை துச்சமாக நினைக்கும் தியாக மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே இந்த பணிகளில் ஈடுபடுகிறார்கள். அப்படியானவர்கள் டிம் ஹெதரிங்டனும், ஹோண்ட்ராஸ்-ம்
            
    2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந்தேதி அவர்கள் இருவரும் லிபியாவிலுள்ள மிஸ்ரடா நகரில் சிறிய ரக ராக்கெட் வீச்சுக்களினாலும் துப்பாக்கி குண்டுகளாலும் துளைக்கப்பட்டு இறந்த போது அவர்களுக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை.
           
    டிம் ஹெதரிங்டன் 1970 ஆம் வருடம் டிசம்பர் 5-ந்தேதி இங்கிலாந்திலுள்ள பிர்கன் ஹெட் நகரில் பிறந்தவர். என்றாலும் அவர் வளர்ந்தது சவுத் போர்ட்டில் உள்ள செஃப்டானில்.. அவரது முழுப்பெயர் சற்று நீளமானதுடிமோத்தி அலிஸ்டர் டெலிமாச்சூஸ் டிம் ஹெதரிங்டன்' என்பதுதான் அவரது பெயர். அவரது பள்ளிப்பருவம் செயிண்ட் பாட்ரிக் பள்ளியிலும் பின்னர் ஆங்கில இலக்கியம் மற்றும் செவ்வியல் துறையில் பட்டப்படிப்பினை ஜேசூயிஸ்ட் கல்லூரியிலும் முடித்தார்.
            
    பாட்டியின் செல்லமாக வளர்ந்த அவருக்கு அன்பும், அரவணைப்பும், ஆசைப்பட்ட பொருட்களும் பாட்டியின் வழியே கிடைத்தன. இப்படித்தான் டிம் ஹெதரிங்டன் ஆசியாவைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிளர்ந்த போது, அவரது பாட்டிதான் 5000 யூரோ டாலர்கள் கொடுத்து அனுப்பி வைத்தார். இந்தியா, சீனா, திபேத் ஆகிய நாடுகளைச் சுற்றிவந்தார். அந்த பயணம்தான் அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
            
     அந்த பயணத்தில் ஒரு சாதாரண சுற்றுப்பயணியாக தனது கையடக்க கேமராவில் படமெடுத்து வந்த அவருக்கு புகைப்படம் எடுக்கும் கலையில் ஆர்வம் பிறந்தது. மாலை நேர வகுப்பில் புகைப்படக்கலை பற்றி கற்றுக்கொள்வதற்காக சேர்ந்தார். அதன் பிறகு அப்போது பத்திரிகைத் துறையில் பிரபலமாய் இருந்த புகைப்படக்கலைஞர்கள் டேனியல் மெடோவல் மற்றும் காலின் ஜெய்சன் ஆகியோரிடம் புகைப்படக்கலையின் நுணுக்கங்கள் பற்றி கற்றுக்கொண்டார்.
            
     பிக் இஷ்யூ என்ற என்ற பத்திரிகையில் அவருக்கு வேலை கிடைத்தபோது அவருக்கு அமைந்த முதல் பணியே சவாலானதுதான். லைபீரியா, சியாரோ லியான்  போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுக்கலவரங்கள் தலைவிரித்தாடின. கலவரங்களுக்கிடையே பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றியும் அவர்களது இழப்புகள், துயரங்கள் பற்றியும் தகவல்களை புகைப்படங்களோடு சேகரிப்பதுதான் அவருக்கு இடப்பட்ட பணி.
            
   லைபீரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகளைக் கொண்டு ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. The devil came on camel back  என்ற பெயரில் ஒளிபரப்பான அந்த படம் டிம் ஹெதரிங்டன்னுக்கு ஒரு புதிய அடையாளத்தை தந்தது.
            
     அதற்குப்பிறகு நைஜீரியா பற்றிய அவரது பதிவுகள் Unreported world என்ற பகுதியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த இரண்டு படங்களில் அவரது பணியினைப்பார்த்து மனித உரிமை அமைப்பு அவரை புதிய பணிகளுக்காக அழைத்தது. அவர்களது ஆலோசனைக்கு ஏற்ப இலங்கை சென்றார். அங்கு உள்நாட்டுப்போர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். கொடூரமான இன அழிப்பு பற்றிய தகவல்களுக்காக அவர் சென்றிருந்தபோது, அவரை அங்கு அனுப்பிய மனித உரிமை அமைப்பே அங்கு அவரது உயிருக்கு பாதுகாப்பில்லை, எனவே மேற்கொண்டு எந்த பணியிலும் ஈடுபடவேண்டாம், உடனே நாடு திரும்பவேண்டும் என அழைத்தது. அந்த அழைப்பை மீறமுடியாமல் திரும்பினார்.
            
    சர்வதேச மனித உரிமை அமைப்பில் சேர்ந்தபிறகுதான் அவர் பிரச்சினை பூமிகளுக்கு அதிகம் பயணிக்க நேரிட்டது. இராக்கில் அமெரிக்க தாக்குதல்களின் போதும், ஆப்கனில் உக்கிரமாக நிகழ்ந்த உள்நாட்டு யுத்தத்தின் போதும் அந்த பகுதிகளில் செய்தி சேகரிக்க அங்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் எடுத்த புகைப்படங்கள்தான்  உண்மை நிலைமைகளை பிரதிபலிப்பதாக இருந்தன. இதன் காரணமாக உலக பத்திரிகையாளர் கழகம் அவருக்கு அந்த ஆண்டுக்கான (2007) சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை அளித்து கௌரவித்தது.
            
    ஆப்கானின் உள்நாட்டு யுத்தங்கள், அதன் விளைவுகள் குறித்து அவர் தேசம் முழுக்க சுமார் 15 மாதங்களுக்கு மேலாக சுற்றித்திரிந்து, அவரது பத்திரிகை உலக நண்பர் செபாஸ்டியன் ஜங்கர் என்பவருடன் இணைந்து 300 மணி நேரம் கொண்ட வீடியோ பதிவுகளை எடுத்தனர். அதனை  இருவரும் சேர்ந்து ஒரு மணி நேரம் ஓடக்கூடிய ஆவணப்படமாக உருவாக்கினர். அந்த படத்துக்கு Restrepo  என்று பெயரிட்டு 2010-இல் திரையிட்டனர். அந்த படம் ஆஸ்கார் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியது. பரிசு கிடைக்காவிட்டாலும், அதன் தாக்கம் பலமாக இருந்தது. சண்டான்ஸ் படவிழாவில் சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
            
    அதே 2010-இல் தனது பத்திரிகை உலக அனுபவங்கள் மற்றும் யுத்த பூமியில் தான் சந்தித்த அபாயகரமான நிகழ்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கிட்டதட்ட ஒரு சுயசரிதம் போல “ The Diary”  என்ற குறும்படத்தை எடுத்தார்.
            
    பற்றியெரிந்து வறண்டு தவித்துக் கிடக்கும் சோமாலியாவைச் சேர்ந்த இடில் இப்ராஹி என்ற பெண்ணைத்தான் அவர் காதலித்து, மணம் செய்து கொள்ளாமல் மனமொத்து வாழ்ந்துவந்தார்.
            
    இந்த தருணத்தில் அவர் லிபியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது40 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்துவந்த கடாஃபியை எதிர்த்து லிபியாவில் 2011- பிப்ரவரி மத்தியில் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டது. அவரை எதிர்த்துப் போராடிய குழுக்களோடு லிபிய இராணுவத்தின் ஒரு பிரிவினரும் இணைந்து கொண்டதால், உலகத்தின் பார்வையில் அது முக்கியமான நிகழ்வாக கவனத்தை ஈர்த்தது. கடாஃபி தனக்கென உருவாக்கிய பாதுகாப்புப் படைக்கு எல்லா அதிகாரத்தையும் தந்திருந்தார்.
            
    ஆயுதம் ஏந்திய அவரது படை அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியது. போராளிகளுக்கும் மக்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. அங்கு நடக்கும் புரட்சியின்போது மீறப்படும் மனித உரிமைகள் குறித்து உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமை இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கருதின. எனவே டிம் ஹெதரிங்டன் அங்கு பயணப்பட்டார். அவரோடு கெட்டி நியூஸ் என்ற அமைப்பின் புகைப்படக்காரர் கிரிஸ் ஹோண்ட்ராஸ்-ம் இணைந்துகொண்டார்.
           
Displaying hondros020708a.jpg
க்ரிஸ் ஹோண்ட்ராஸ்

    கிரிஸ் ஹோண்ட்ராஸ் மார்ச் 14, 1970 ஆம் வருடம் பிறந்தவர். அமெரிக்காவின் வட கரோலினாவைச் சார்ந்தவர். அவரது பெற்றோர்கள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது அகதிகளாக அமெரிக்கா வந்தவர்கள். அவரது தந்தை கிரேக்கத்தையும், தாய் ஜெர்மனியையும் சார்ந்தவர்கள். ஆங்கில இலக்கியம் மற்றும் காட்சி ஊடக தொடர்பியலில் பட்டம் பெற்ற ஹோண்ட்ராஸ் மிக ஆர்வத்துடன் கெட்டி நியூஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். யுத்தத்தின் கொடுமையால் அகதிகளான தந்தை தாயின் இரத்தம் அவரது உடலிலும் ஓடுவதாலோ என்னவோ, அவரும் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளின்மீது அதீதமான வெறுப்பை கொண்டிருந்தார். அதன் காரணமாக டிம் ஹெதரிங்டன் போல யுத்தபூமிகளின் கொடூரமான மறுபக்கத்தை உலகுக்கு காட்டும் முயற்சியில் தனது உயிரைப்பற்றிய அச்சமின்றி இருந்தார்.
            
     கொசாவா, அங்கோலா, சியாராலியோன், லெபனான், ஆப்கான், காஷ்மீர், பாலஸ்தீனம், இஸ்ரேல் என அவர் பயணிக்காத போர்க்களங்களே இல்லை என்னும் அளவுக்கு சுற்றித்திரிந்தவர். லிபியாவின் மிஸ்ரடா நகருக்கு வந்த பிறகு அவருக்கு சரியான துணையாக ஹெதரிங்டன் விளங்கினார். இருவரும் சேர்ந்து போராளிக்குழுவுடன் பயணித்து அவர்கள் சந்திக்கும்  காட்சிகளை பதிவு செய்யும் ஆவலில் இருந்தனர்.
            
     அதற்கான வாய்ப்பு ஏப்ரல் 20 -ந்தேதி ( 2011) யில் கிடைத்தது. அன்று புதன் கிழமை. கடாஃபியின் பாதுகாப்புப் படையினரிடம் பலம் வாய்ந்த ஆயுதங்கள் இருந்தன. போராளிகளிடம் ஆயுதபலம் இல்லை.ஆனால் துணிச்சலும், அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற ஆக்ரோஷமும் அவர்களிடம் பொங்கி வழிந்தது.
            
    ஏற்கனவே குண்டுவீச்சால் சிதிலமடைந்திருந்த ஒரு கட்டடத்தில் மறைந்த படியே புரட்சிப்படையினர் முன்னேறிக்கொண்டிருந்தனர். அவர்களோடு ஹெதரிங்டன்னும், ஹோண்ட்ராஸும் இணைந்து கொண்டனர். சிறிய ரக ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் அவர்களை நோக்கி அனல் மழையென பொழிந்தன. அந்த தாக்குதலில் மேற்கண்ட இருவர் உட்பட சுமார் 20 பேரின்மீது குண்டுகள் பாய்ந்தன. ஹெதரிங்டன் கடுமையாக குண்டடிப்பட்டு அந்த இடத்திலேயே இறந்தார். ஹோண்ட்ராஸ் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர்களோடு சேர்ந்து அந்த தாக்குதலின் போது மொத்தம் 12 பேர் இறந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிரிஸ்டோபர் பிரவுன் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களோடு தப்பித்த ஒரே பத்திரிகையாளர்.
            
   இருவரது உடல்களும் அமெரிக்கா வந்த போது அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் (2008இல் இவர்தான் அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலில்  போட்டியிட்டார்) மதிப்புமிக்க அமெரிக்க கொடி ஒன்றை அனுப்பிவைத்தார். அது வீரச்செயல் புரிந்தவர்களுக்கு மட்டும் அளிக்கும் கௌரவம் மிக்க செயல்.
            
   லிபிய புரட்சி 2011 அக்டோபர் மாதம் கடாஃபி கொல்லப்பட்டபிறகு முடிவுக்கு வந்ததும், புரட்சியாளர்கள் மிஸ்ரடா நகரில் உள்ள அஜ்டேபியா சதுக்கத்துக்கு டிம் ஹெதரிங்டன் பெயரைச்சூட்டினர்.
            
   சர்வதேச மனித உரிமை அமைப்பு டிம் ஹெதரிங்டன் நினைவாக புகைப்படக்கலைஞர்களுக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் தொகையுடன் ஒரு விருதை ஆண்டு தோறும் தருவதாக அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு பிரெஞ்சு புகைப்படக்காரர் ஓலிவர் ஜோபார்ட்  என்பவர் அந்த விருதைப் பெற்றார்.
           
    Here I Am   என்கிற தலைப்பில் ஹெதரிங்டன் வாழ்க்கை வரலாற்று நூலை  ஆலன் ஹாஃப்மன் என்பவர் எழுதியிருக்கிறார். செபாஸ்டியன் ஜங்கரும், ஹெதரிங்டன்னும் இணைந்து ஆப்கனில் எடுத்த வீடியோ பதிவுகளின் எஞ்சிய பகுதிகளை ஜங்கர் ஒழுங்கு செய்து மற்றொரு ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்.
            
    ஹோண்ட்ராஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அடிக்கடி
நான் முதுமையை வெறுக்கிறேன். ஏனெனில் அது ஒரு மனிதனை இயங்கவிடாமல் செய்துவிடும்என்பாராம். அவர் சொன்னது போல கடைசி வரை இயங்கியபடி தனது மரணத்தை இளம் வயதில் தழுவினார்
           

  நன்றி: 'நிழல்'           

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...