வியாழன், 13 செப்டம்பர், 2012

பனிரெண்டு மின்னல்கள்

                                                            


பனிரெண்டு மின்னல்கள்

கி. பி. 2139, ஏப்ரல்-5
        
        விண்வெளிப்  பயண அனுமதிக்கூடம்  எந்த பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. நேரம் 11-03. செக்-இன் பகுதியில் M 192030 தன் அடையாள அட்டையை செலுத்தி நுழைவு அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்தான். சில நொடிகள் கழிந்து 11-08க்கு உள்செல்ல அனுமதி கிடைத்தது. பின் W 649122 தன் கார்டை செலுத்தினாள். 11-10க்கு நுழையலாம் என பதில் வந்தது.  இருவரும் தங்கள் ஆவணங்களை சரிபார்த்தனர். CC கேமரா இருவரையும் zoom செய்து அறைகளின் ப்ளாஸ்மா டி.வி.க்களில் காட்சிப்படுத்தியது. அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது.
          “ இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு” என்றான்
          “ ஆச்சர்யமா இருக்கு... நம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கதரிசிகள்? தேனிலவு என்று பெயரிட்டிருக்கிறர்கள். இப்ப நம்ம தேனிலவுக்கு நிஜமான நிலவுக்குப் போறோம்”
           “நமக்கு தரப்பட்ட 15 நாட்களை நீட்டிக்க முடியாதா?”
          “ ரெண்டாவது முறையா அப்ளை பண்ணியும் அனுமதி கெடைக்கலை. நமக்கு கல்யாணம் முடிஞ்சு  ரெண்டு வருஷம் ஆனப்புறம் இப்பத்தான் முதலிரவுக்கு அனுமதி கெடைச்சிருக்கு. ஒரு காலத்துல கர்ப்பமான அப்புறம் ஸ்கேன் பண்ணி ஆணா பெண்ணான்னு பார்ப்பாங்க. இப்பல்லாம் இன்னின்னாருக்கு இன்ன குழந்தைதான்னு அரசுதானே முடிவு பண்ணுது. நமக்கு பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு எண் கூட ஒதுக்கிட்டாங்களாம். அதற்கு இடது கன்னத்தில் குழி விழுமாம் . உதட்டோரத்தில் ஒரு மச்சம் இருந்தால் நல்லதுங்கற உன்னோட ஆசையைக்கூட அரசு ஏத்துகிச்சு.”
          “ சந்திரனில் ஹனிமூன் கொண்டாடுவோர் பட்டியலில் நாம் எத்தனையாவது பேர்?”
          “ஹும்.. பெயர்களின் காலமெல்லாம்தான் முடிஞ்சுபோச்சே. சாதனை பட்டியல்ல பெயர் என்கிற தாகம் தனிமனிதனை விட்டுச்சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. எத்தனையாவது பேர்னு தெரிஞ்சு என்ன ஆகப்போவுது? இனிம  சரித்திரத்தில் பெயர்களுக்கு சாத்தியமில்லை. எண்கள் வந்தபிறகு என்னை மறந்தேன் அப்படின்னு தமிழில் ஒரு வரி கவிதை உண்டு. உன்னோட குஜராத்தி மொழியில இந்த வரி மொழி பெயர்த்து வரும்போது இதன் கவித்துவம் புரியாது.”
           வாய்ஸ் சிந்தஸைசரில் எந்த மொழியில் பேசப்படும் வார்த்தைகளையும் கேட்பவர் மொழிக்கு மாற்றி குரல் வரும்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டிருப்பதைச் சுட்டுகிறான் என்று புரிந்தது.
          “குஜராத்தில் பிறந்த என்னையும், தமிழ்நாட்டில் பிறந்த உங்களையும் எந்த அடிப்படையில் ப்ரைம் பவர் தலைமையகம் இணைத்தது என்று புரியவில்லை”
         “ கேட்டால் கெமிஸ்ட்ரி என்பார்கள். டி.வி. சானல்களோட பாதிப்பு எந்த யுகத்துல ஒழியும்னு தெரியல. எனி ஹவ் ஐ லவ் யூ ஹனி..”
          “ ஐ டூ..”
 11-08 ஆனதை டிஜிட்டல் எண்கள் காட்ட ஆட்டோமேடிக் கதவுதிறந்தது. அவன் உள்ளே சென்றான்.
          அவனது ஆவணங்கள் அடங்கிய சிப்-ஐ ஸ்கேனரில் நுழைத்தான். சில நிமிடங்களில் ‘வெயிட் ஃபார் என்கொயரி' என்று திரையில் மின்னியது.
          என்கொயரி அறைக்குள் நுழைந்தான். சுடச் சுட காஃபி அவன் இருக்கைக்கு முன் வைக்கப்பட்டிருந்தது. “ காலங்கள் மாறினாலும் காஃபியின் அடிமைகள் மாறுவதில்லை” அங்கிருந்த உயர் அதிகாரி புன்னகையுடன் கேட்டார்.
           “ யெஸ் சார்”  காஃபியை அருந்தியபடி பதிலளித்தான்.
           “ உங்கள் பெர்மிட் கார்ட் செக் - இன் கம்ப்யூட்டரில் அனுப்பியிருக்கிறோம்.
           சில நொடிகளில் declined என்று சிவப்பு எழுத்துக்கள் தோன்றின.
           “ வாட் ஹேப்பன்ட் டூ மிஷின் சார்”
          “ இட் இஸ் பெர்ஃபெக்ட் மை பாய். ப்ளீஸ் ஸிட்டவுன். மன்னிக்கவும். உங்கள் சந்திர மண்டல பிரயாணம் சில காரணங்களால் மறுக்கப்படுகிறது”
         “ மே ஐ நோ த ரீஸன் சார்?”
           “ நீங்கள் சீஃப் -ஐ பார்க்கும்போது அதன் விபரங்கள் உங்களுக்குப்புரியும். உங்களுக்கு இஸ்ரோவில்தானே பணி”
         “ ஆவணங்களை பார்த்திருப்பீர்களே”
          “ அஃப்கோர்ஸ். நீங்கள் சீஃப்- ஐ  11-13 க்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அது வரை நாம் கேஷூவலா பேசிட்டிருக்கலாம்”
         “ இரண்டு வருடங்களுக்கு முன்பே அப்ளை செய்து, சென்ற மாதம் ஃபைனல் அப்ரூவலும் மெயில் பாக்ஸ்சில் கிடைத்தது. இப்பொழுது திடீர்னு...”
          “ காஃபி அஸ்ஸாம் -ன் மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்ட உயர்ந்த தரமான காஃபிச்செடிகளில் இருந்து தருவிக்கப்பட்ட காஃபிக் கொட்டைகளில் தயாரிக்கப்பட்டது. சுவையாக இருந்ததா?”
         இனி இவரிடத்தில் எந்த உருப்படியான பதிலும் கிடைக்காது என்று புரிந்தபோது ஆயாசமாக இருந்தது.
         11-13-க்கு சீஃப் -ன் அறை கதவு திறந்தது. உள்ளே நுழைந்தான்.
        “ வெல்கம் மை பாய் ஹௌ ஆர் யூ?”
        “ நீங்கள் தமிழர்தானே'
         “ ஷ்யூர்”
        “ நெனச்சேன். எனக்கும் சமயத்துல இப்படித்தான் டக்குன்னு இங்க்லீஷ்தான் வரும்”. ஆங்கிலம் என்கிற பொது மொழி அப்படியே சிந்தஸைசரில் கிடைத்தது.
        “ காஃபி எப்படி இருந்தது?”
       உன் காஃபியைத் தூக்கி உடைப்பில் போடு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். நல்லவேளை மனதில் நினைப்பதை சென்ஸ் செய்யும் தொழில்நுட்பத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான்.
        “ சந்திர மண்டலத்தில் பறக்கும் காஃபி அருந்தலாம் என்று நினைத்தோம்.”
        “அதற்கென்ன  அடுத்த வாரம் ஸ்பேஸ் எக்ஸிபிஷன் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வான மண்டலத்தில் எந்த கிரகம் எப்படி இருக்குமோ அதைப்போல் செயற்கையாக வடிவமைக்க இருக்கிறார்கள். உன் ஆசை விரைவில் நிறைவேற வாய்ப்பிருக்கிறது.”
        “ அனுமதி மறுப்பிற்கான காரணத்தை சட்டப்படி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது”
         “ அஃப்கோர்ஸ். அதற்கு பதிலளிக்கும் கடமையும் எனக்கு இருக்கிறது. நீ இஸ்ரோவில் இருப்பதால் என் வேலை சுலபமாக இருக்கும் என நம்புகிறேன் டெலிமஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
        “ தெரியும் செவ்வாய் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு அஸ்ட்ராயிடுகளில் ஒன்று”
         “ அஸ்ட்ராயிடுகள் பற்றி உனக்கு எந்த அளவுத் தெரியும்?”
         “ இது இண்டர்வ்யூ இல்லை சீஃப்”
          “ தெரியும் ஆனால் விசாரணை என்று வந்தால் எல்லாவற்றையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவற்றை சொல்லுங்கள்”
         “ நம் சூரிய குடும்பத்தில் பூமி உட்பட எட்டு கிரகங்கள். சந்திரன் உட்பட 31 உப கிரஹங்கள். பல லட்சம் அஸ்ட்ராயிடுகள், நட்சத்திரங்கள். மிகச்சிறிய அளவுள்ள அஸ்ட்ராயிடுகளில் கனிம வளங்கள் மிகுதியாக உள்ளன. பூமியில் மிகத்தட்டுப்பாடான நிக்கல், சிலிகன், நைட்ரேட், அமோனியா, எண்ணற்ற ஆக்ஸைடுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாடும் இந்த அஸ்ட்ராயிடுகளை தன் வசப்படுத்த முயற்சிக்கின்றன.”
          “ இந்த அஸ்ட்ராயிடுகள் சுற்றுப்பாதையை விட்டு கொஞ்சம் விலகி பூமியை நோக்கி நகர்ந்தால் என்ன நடக்கும்?”
          “ அதி பயங்கரமான பூகம்பங்கள் தோன்றும். புழுதி நிறைந்த வாயுமண்டலம் ஆக்ரமித்து சூரியக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுத்து பூமியில் குளிர் மிகுந்து பனிசகாப்தம் உருவாகி மொத்த உயிரினங்களும் விறைத்து செத்துப்போகும். ஒரு காலத்தில் டினோஸர்கள் மட்டுமே இருந்து பின் அழிந்து போனதற்கு அஸ்ட்ராயிடுகள் தாக்குதல்தான் காரணமாக இருக்கலாம். 19-ம் நூற்றாண்டில் இரண்டு முறை பூமிக்கு அருகில் வந்து பின் நகர்ந்துவிட்டது அதிர்ஷ்ட வசமாக தப்பியிருக்கிறோம்”
         “டெலிமஸ் அஸ்ட்ராயிடு தன் சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வருவதும் உனக்குத்தெரியும் என்று நினைக்கிறேன்”
 சற்றுத் தயங்கி “ தெரியும் “
          “ யு. எஸ்சில் உள்ள நாசா அதனைத் தடுப்பதற்கு ராக்கெட்டுகளில் ஹைட்ரஜன் குண்டுகளை நிரப்பி அதைத்தாக்கி திசைத்திருப்பத் திட்டமிட்டுள்ளது என்பது தெரியுமா?”
         “ மன்னிக்க வேண்டும் சீஃப் இது வரை நான் சொன்னவை தகவல்கள். இப்பொழுது நீங்கள் கேட்பது அரசுத் துறை சம்பந்தப்பட்டவை. அது பற்றி உங்களிடம் பேச எனக்கு அனுமதி இல்லை”
         உள்ளங்கையைப் பிரித்து  அதிலுள்ள ஃபிங்க்டிப் கம்ப்யூட்டரை திறந்து சிகப்பு  பக்கங்களை பாஸ் வேர்ட் கடந்து ஓபன் செய்கிறார். அதன் வழியே தன் ஆணையை அனுப்புகிறார்.
        ஒரு சில நொடிகளில் ‘நோ அப்ஜெக்ஷன்' கிடைத்துவிடுகிறது.
        “ ஓ.கே, சில விஷயங்களில் வெளிப்படையான விவாதம் பொது மக்களுக்குள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் நீங்கள் பேச யோசித்தீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது தொடரலாமா?”
        “ யு.எஸ். இதன் முழு பொருளாதார பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது. சில தொழில்நுட்ப உதவிகளுக்காக நம்மைப்போன்ற சில நாடுகளை அணுகியிருக்கிறது.”
          “ அந்த ஆபரேஷனுக்கு  டிசம்பர் 21 நாள் குறிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?”
         “ அன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பது கூட முழுவதுமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. சரியாக 2 மி.மீ மழை பெய்யும், பனிரெண்டு மின்னல்கள் வெட்டும் என்பது வரை கண்டறியப்பட்டுள்ளது. அறிவியலில் நம் வளர்ச்சி பற்றி உங்களுக்கு அடிப்படையில் சந்தேகம் இருக்கிறது போலிருக்கிறது”
          “ சந்தேகம் அதிலில்லை ஜெண்டில்மேன். இந்த ஆபரேஷனை செய்யப்போகும் யு.எஸ். மீதுதான்.”
         “ புரியலையே”
         “ அமெரிக்கா ஆதாயம் இல்லாமல் ஆற்றிலும் இறங்காது, ஆகாயத்திலும் ஏறாது. உலகத்துக்கு வரும் இந்த ஆபத்தை ஒண்டியாய் தன் தலையில் ஏன் தூக்கிவைத்துக்கொள்ளவேண்டும் என்று யோசித்தீர்களா?”
         “ தன் அறிவியல் பராக்கிரமத்தை காட்டத்தான்”
         “ உங்களுக்கு அறிவியல் மட்டும்தான் தெரியும். எங்களுக்கு அரசியலும் தெரியும்.”
        “ இந்தியா முழுக்க பாலிட்டிஷீயன்களை ஒழித்தாகிவிட்டது. இன்னும் பாலிடிக்ஸ்-ஐ ஒழிக்கவில்லை என்பது உண்மைதான் போலிருக்கிறது.”
          “ நோ ஜோக்ஸ் ப்ளீஸ்... பணத்தைக் கேட்டால் எந்த நாடும் ஜகா வாங்கும்.. தொழில்நுட்ப உதவி என்றால், அதற்கென்ன தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று தாரை வார்த்துவிடுவார்கள்.. அவர்களின் சூட்சுமம் அங்குதானிருக்கிறது.”
         “ புரியலையே”
         “ இப்பொழுது அவர்களுக்கு இருக்கும் அறிவியல் திறத்தில் அஸ்ட்ராயிடுகளை திசைத் திருப்பி சிறு தவறு நிகழச்செய்தால் போதும், பூமியின் ஒரு பகுதி மட்டும் சேதாரமாகிவிடும்”
         “ அப்படிச் செய்தால்..?”
          “ உலக வரைபடத்தில் ஆசியப் பகுதியை மட்டும் சிரைத்துவிடுவார்கள்.”
          “ அட கடவுளே, அவர்களுக்கு சவாலாயிருக்கிற இந்தியா, சீனா, ஜப்பான் மொத்தமும் காலி”
          “ எல்லாம் முடிஞ்சபிறகு மொத்த உலகத்தை காப்பாத்த நடந்த முயற்சியில  தெரியாம நடந்து போச்சுன்னு கண்ணீர்  வடித்து, தப்பி பிழைத்த நாடுகளுக்கு நிவாரணம் தரலாம்கறதுதான் அவங்க திட்டம்”
          “ நம் இந்திய விண்வெளிஆய்வுக்கூடங்களில் மிக எளிதாக இந்த தவறு முன்கூட்டியே கண்டுபிடித்துவிடக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறதே. இந்த சின்ன விஷயம் கூட அவர்களுக்குத் தெரியாதா?”
         “ அப்படியான ஆற்றல் பெற்ற ஒரு சிலரை ஒரு நல்ல விலைக்கு வாங்கிவிட்டால்...”
        “ என்னது..”
         “ விண்வெளியில் ஆய்வுக்கூடங்கள் வைத்திருக்கும் நம்மைப்போன்ற ஒரு சில நாடுகளிடம் மட்டும் அமெரிக்கா தொழில்நுட்ப உதவியை கேட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நம் விண்வெளி ஆய்வுகூடத்தை அந்த சமயத்தில் பயன்படுத்திகொள்ள அனுமதி கேட்டிருக்கிறார்கள். சர்வதேச ஒப்பந்தபடி நம் இந்திய நிபுணர்கள்தான் அதில் பணியாற்ற முடியும். ஆசியாவின் மீது டெலிமஸ் அஸ்ட்ராயிடு தாக்கும்போது அவர்கள் பாதுகாப்பாக செவ்வாயில் இருப்பார்கள்.”
           “ நம்மாட்கள்தானே..”
         “ முழு ஆபரேஷனையும் யு.எஸ்.தான் ஏற்றிருக்கிறது. எனவே நாசாவில் அவர்களது விஞ்ஞானிகளோடு இணையாக பணியாற்ற வேண்டியிருப்பதால், செவ்வாய் கிரகத்தில் இருக்கப்போகிற நம் இந்திய நிபுணர்களை யு.எஸ்.தான் தேர்வு செய்கிறது”
          “ என்ன சார் இது இந்த துரோகத்தை யார் செய்யப்போகிறார்கள். அதுவும் ப்ரைம் பவரின் க்ளோஸ்டு சர்க்யூட் நெட்வொர்க்கில் எல்லாமும் கண்காணிக்கப்படுகிறது எப்படி இது சாத்தியம்?”
          “ துரோகிகளுக்கு எல்லாம் துச்சம். சில சாஃப்ட்வேர் க்ராக் ப்ரோக்ராம்கள் உதவியோடு இந்த பேரத்தில் இறங்கியிருக்கிறார்கள்”
          “ இன்னும் ஏன் இந்த தேசம் அவர்களை விட்டுவைத்திருக்கிறது?”
 “ இது ஒரு யுத்த தந்திரம்தான். அவர்களை அப்படியே அனுமதிப்பது. அவர்களின் அந்த திட்டத்தை அவர்கள் வழியிலேயே முறியடிப்பது. இதுதான் இப்பொழுது நம் யுக்தி”
          “ சரி, நான் இதில் எங்கு வருகிறேன்?”
          “ சந்தேக வளையத்தில் நீங்களும் இருந்தீர்கள்”
         “ சார்...” திடுக்கிட்டு எழுந்தான்
         “ கூல் டவுன் அண்ட் சிட்டவுன். சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து போயின. நீங்கள் க்ளீன் சிலேட் என்று கண்டறியப்பட்டுள்ளது.”
          “ அப்ப எங்களை சந்திரனுக்குப் போகவிடுங்க. ரெண்டு வருஷமா கட்டி வச்சிருக்கிற கனவுக்கோட்டை. கொஞ்ச நேரத்துல ஆட்டம் கண்டுடுச்சு”
         “இன்னும் இருக்குது மை பாய். நீங்கள் சந்திரனுக்கு போகப்போவதில்லை”
          “ அப்ப எங்க ஹனிமூன் கேன்சலா?”
         “ ஹனி உண்டு.... மூன்தான் இல்லை”
         “ நீங்கள் புதிர்களின் சீஃபா”
 மெல்ல சிரித்து, “ நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு போகப்போகிறீர்கள்”
         “ என்ன செவ்வாய்க்கா....?” மறுபடி எழுந்தான்.
          “இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது. நின்றுகொண்டே பேசமுடியாது.. உட்காருங்கள். செவ்வாய் கிரகத்தில் முதலிரவு கொண்டாடப்போகும் முதல் இந்தியத் தம்பதி நீங்கள்தான்”
         “ இதுவரைக்கும் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கமட்டும்தான் தெரியும்னு நெனச்சேன். இன்ப அதிர்ச்சியும் கொடுப்பீர்கள் போலிருக்கிறது”
          “ போன வாரம் நம்ம ப்ரைம் பவர் ஒரு ஃபங்ஷன்ல செவ்வாயில் ஒரு ஸ்பேஸ் ரிஸார்ட் அமைச்சிருக்கோம்னு சொன்னாரில்லையா. அது செவ்வாயில் உள்ள நம் விண்வெளி ஆய்வுகூடத்துக்கு இணையா அமைச்சிருக்காங்க அப்படிங்கறது உங்களுக்கேத் தெரியும். அதில் இன்னொரு ஆய்வுகூடத்தை எதுக்கும் இருக்கட்டும்னு அமைச்சிருக்கோம்கறதும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாத இன்னொரு விஷயமும் அதில் உண்டு. மெயின் ஆய்வுக்கூடம் இயங்கமுடியாத பட்சத்தில் இதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆய்வைத் தொடரலாம். அதற்கான சகல தொழில்நுட்பமும் அதில் இருக்கு. அங்க தங்கறதுக்கு ஆறு ஜோடிகளை தேர்வு செய்திருக்கிறோம். அதில் ஒரு ஜோடி நீங்கள்.”
         “ தொன்னை கிடைக்கும்னு வந்தோம். வெண்ணையே கிடைக்குது. ஆனா எங்க சீனியாரிட்டி ரொம்ப பின்னாடி ததிங்கனத்தோம் போடுதே”
          “ அதெல்லாம் ப்ரைம் பவரின் சிறப்பு அனுமதியின் பேரில் ஓவர்லூப் செய்யப்படும்”
         “ எப்படி இந்த லக்கி ப்ரைஸ் எங்களுக்கு?”
          “ சந்திரனுக்கு செல்வதற்கு அனுமதி பெற்றவர்களில் ஒரு சிலர் தேதி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சிலர் டிசம்பர் 20-ந் தேதி கேட்டிருந்தார்கள். அதாவது இந்த ஆபரேஷனுக்கு முதல் நாள் இங்கிருந்து தப்பிக்க ஏதுவாக... அவர்களில் பெரும்பான்மை பார்த்தால் விண்வெளி ஆய்வுத்துறை நிபுணர்களின்  உறவினர்கள்.  திட்டப்படி செவ்வாய் கிரஹத்தில் ஆபரேஷன் முடிந்ததும் அப்படியே சந்திரனுக்குச் சென்றுவிடுவார்கள். அங்கு அவர்களுக்காக அவர்களது உறவினர்கள் காத்திருப்பார்கள்”
           “ அடப்பாவிகளா?”
         “நீங்கள் தேதி நீட்டிப்பு பெற்றாலும், டிசம்பர் 10- ந்தேதியே திரும்புவதாக உங்கள் ப்ரோக்ராம் உள்ளது. ஆக டெலிமஸ் அஸ்ட்ராயிடு தாக்குதல் நிகழ்ந்தால் அதில் நீங்களும் பலியாகக்கூடும். எனவே இந்த சதியில் உங்களுக்கு தொடர்பு இல்லை என்று புரிந்தது. என்றாலும் பல கட்டங்களாக கண்காணித்தாகிவிட்டது.”
         “ அற்புதம். இப்பொழுது எங்கள் பணி என்ன?”
         “ உங்கள் விண்ணப்பங்கள் திருத்தப்பட்டு செவ்வாய் இணை ஆய்வுகூடத்தில் இறக்கப்படுவீர்கள். நீங்கள் உங்கள் டெஸ்ட்டுகளை முடித்தபிறகு ரெடி என்று சிக்னல் கிடைத்தவுடன் இங்கிருந்து உங்களுக்கு கட்டளைகள் வரும். மெயின் ஆய்வுகூடத்தை சகல இணைப்புகளிலிருந்து துண்டிக்கவேண்டும். இது எதிர்பாராமல் நடந்தது போல் இருக்கவேண்டும். அமெரிக்க ஆய்வுக்குழுவினருடன் நீங்கள் இணைந்து  டெலிமஸ் அஸ்ட்ராயிடினை வேறு பாதைக்கு திருப்ப வேண்டும். உங்கள் பணி முடிந்ததும் உங்கள் முதலிரவுக்காக கூடுதலாக சில நாட்கள் தங்க அனுமதிக்கப்படுவீர்கள்”
         “ பேசாமல் அந்த அஸ்ட்ராயிடை அமெரிக்க கண்டத்தின் பக்கம் திருப்பிவிட்டால் என்ன?”
          அவனது தோளைத் தட்டி, “ வீ ஆர் இண்டியன்ஸ். நாமெல்லாம் இந்தியர்கள். எத்தனை மிஷின்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், மனதால் ஈரமிக்க இந்தியர்கள்.”
          “யெஸ் சார்” செல்லமாக ஒரு ராணுவ சல்யூட் அடித்தான். “ இது பற்றி என் மனைவியிடம்....”
         “ இந்நேரம் விளக்கியிருப்பார்கள் இன்னொரு அறையில்”
         “ எங்களோடு வரப்போகிறவர்கள்...”
         “ பொறுத்திருங்கள். இன்னும் நாலு ஜோடிகள். அதாவது நீங்கள் மொத்தம் பனிரெண்டு பேரும் சந்திக்கின்ற நேரம் வரும். இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் இங்கேயே பயிற்சி பெறப்போகிறிர்கள். பயணம் புறப்படும் வரை வெளி செல்ல அனுமதி இல்லை.இந்த ஆபரேஷனுக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர் பனிரெண்டு மின்னல்கள். அமெரிக்க விண்வெளி தந்திரத்தை தகர்க்கப்போகும் மின்னல்கள் நீங்கள்தான்”
         “ தேங்க் யூ சார், திடீர்னு உடம்பெல்லாம் பாரமா ஆயிட்ட மாதிரி இருக்கு.. எவ்வளவு பெரிய பொறுப்பு. நம்மால முடியுமான்னு பயமா இருக்கு”
          “ டோண்ட் வொர்ரி மை பாய்..நம்மால சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பமுடியுமான்னு சந்தேகப்பட்ட காலம் ஒண்ணு இருந்துச்சு. சந்திராயனை அனுப்பலையா? இப்படி பயந்திருந்தா அன்னைக்கு நடந்திருக்குமா? நிச்சயம் நம்மால முடியும் யெஸ் வீ கேன்... ஆல் த பெஸ்ட்”
         மீண்டும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு உற்சாகமாக பயிற்சிக்களத்துக்கு நடந்தான்

ஞாயிறு, 15 ஜூலை, 2012

மடல் அவிழ் பொழுது - 2

திரு. கோவை ஞானி அவர்கள் 7/10/02-ல் எனக்கு எழுதிய கடிதமொன்று...

அன்பு நண்பருக்கு வணக்கம்,

      உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. இடையில் நிறைய வேலைகள். உடனடியாக பதில் எழுதவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். தங்கள் கேள்விகளுக்கு சுருக்கமான பதில் எழுதுகிறேன்.

      உங்கள் உணர்வுகள் நேர்மையானவை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக என் பாராட்டுக்கள். இனி என் பதில்கள்.

       1. தமிழகத்தில் மார்க்சியர் எப்பொழுது எப்படி எல்லாம் தடம் புரண்டு போனார்கள் என்பது பற்றி நிறையச் சொல்ல வேண்டும். திராவிட இயக்கத்தோடு அவர்கள் கடுமையாக முரண்பட்டது ஒரு பெரும் தவறு. திராவிட இயக்கத்தின் இனப்பார்வைதான் இவர்களுக்குப் புலப்பட்டதே தவிர அதன் உள்ளடக்கமாக இருந்த தமிழ்த் தேசிய இனப் பார்வையை இவர்கள் பார்க்கவில்லை. தமிழின் தொன்மை மேன்மை முதலியவற்றை இவர்கள் வெறுத்தனர். மார்க்சியம் வந்த பிறகுதானே உலகத்திற்கு ஒளி வரமுடியும் என்று இவர்கள் உண்மையாகவே நம்பினர். வள்ளுவர் பற்றி எல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை.

       சோவியத் ரஷ்யா எதைக் கொண்டாடுகிறதோ அதையே இவர்கள் கொண்டடினர். மேற்கத்திய மார்க்சியரை இவர்கள் மதிக்கவில்லை. மார்க்சின் மொழிப்பற்றைக் கூட இவர்கள் ஏற்கவில்லை. மார்க்சியத்தை அதன் உள் ஆழங்களோடு இவர்கள் கற்கவில்லை. இந்திய வரலாற்றின் தனித்தன்மை இவர்களுக்கு புலப்படவில்லை. கட்சிக்கு மட்டுமே இவர்கள் முதல்மரியாதை தந்தனர். கட்சிக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. இன்றளவும் இவர்களுக்கு ஆழமான தமிழ்ப்பற்று இல்லை. பாரதிதாசனை இவர்கள் இன்றுதான் மதிக்கின்றனர். மக்களுக்கு எதிராக கட்சி செயல்பட்டதை இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்களை மார்க்சியர் என்று நாம் மதிக்க வேண்டியதில்லை. இவர்களுக்குத் தமிழ்ப்பற்று இல்லை, தமிழ்த்தேசிய உணர்வு இல்லை, இயற்கை மீது அக்கறை இல்லை. இந்தியா தான் இவர்கள் தேசம். பா.ஜ.வினரை விட இவர்கள் நேசம் அதிகம். இவர்களைப் பற்றி நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

       2. தி.க.சி. என்னைப் பாராட்டியது எனக்கு வியப்பளிக்கிறது. தி.க.சி.யின் மதிப்பீடு எப்பொழுதுமே கேள்விக்குரியது. எனினும் அவரது அன்பை நான் மதிக்கிறேன். மார்க்சியர், தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றை பெரும் சங்கடத்தோடு தான் ஏற்கத் தொடங்கினார். வர்க்கப் பார்வைக்குள் இவை எப்படி வரும் என்ற கேள்வியைக் கூட ஒதுக்கிவிட்டுத் தலித்தியம் முதலானவற்றை இன்று ஆதரிக்கின்றனர். மக்களிடம் கட்சி செல்வாக்குப் பெறுவதற்கு வேறு என்ன செய்ய முடியும்? எனினும் இவர்களுக்குப் பின்நவீனத்துவம் முதலியவற்றோடு இன்னும் உடன்பாடில்லை. பின்நவீனத்துவத்தினுள்ளும் இருக்கிற இடதுசாரிப் பார்வை எனக்கு உடன்பாடு. அப்புறம் இந்துத்துவம் ஒரு பெரிய சிக்கல். இந்து மதம் வேறு, இந்துத்துவம் வேறு என்று நாம் வேறுபடுத்த வேண்டும். இந்துமதம் பன்முகப் பார்வைகளைக் கொண்டது. நாத்தீகனும் இதற்க்குள் இடம் பெறலாம். கடவுளர்க்கு உருவங்கள் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். இந்துத்துவத்திற்கு ஒரே முகம் தான் உண்டு. அது முதலும் முடிவுமாக மதவாத அரசியல், ஆதிக்க அரசியல். இவர்களுக்கு மதம் என்பது கூடப் புரியாது. இப்படி நாம் வேறுபடுத்திப் பார்ப்பதை பலர் ஒப்புக்கொள்வதில்லை. தி.க.சி. அவர்களுக்கும் இது புரியவில்லை.

        நான் இந்துத்துவத்தை அணு அளவும் ஏற்கவில்லை. இந்து மதத்தோடும் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் கடவுள் முதலியவை இன்றும் தேவை. கட்சி இவர்களுக்கு இன்னும் விடுதலை தரவில்லை. அரசு இருக்கும் வரை வர்க்க வேறுபாடுகள் இருக்கும் வரை மதமும் இருக்கும் என்று கூறியவர் மார்க்ஸ். ஆதிக்கத்தோடு ஒத்துழைக்கிற மதத்தோடு நமக்கு உடன்பாடில்லை. மக்களின் விடுதலைக்கு மதமும் பணிபுரிய முடியும். கிறிஸ்த்துவத்தினுள் விடுதலை இறையியல் என்று ஒரு போக்கு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயமோகன் இந்துத்துவவாதி என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஜெயமோகன் மார்க்சியத்திற்கு எதிரி இல்லை.

       3. கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனிலும் சரி, இங்கும் சரி வரலாற்று இயக்கத்தோடு ஒத்துச் செல்லவில்லை. மாஸ்கோ விசாரணை என்ற பெயரில் ஸ்டாலின் தன் கருத்தோடு முரண்பட்டவர்களை ஒழித்துக் கட்டினார். இப்படி ஒழிக்கப்பட்டவர்களில் ஒருவர் புகாரி. இவர் ஒரு அசலான தத்துவ அறிஞர். லெனினால் மதிக்கப்பட்டவர். கோர்பசேவ் காலத்தில் ஸ்புட்னிக் இதழில் இவரைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை வெளிவந்தது. கோர்பசேவ் ஆவணக் காப்பகத்தைத் திறந்து விட்டு குறுகிய காலத்தில் மூடிவிட்டார்.

        புகாரின் முதலிய ஆயிரக்கணக்கானவர் பழைய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெற்றனர். கோர்பசேவ் காலத்தில் “மாஸ்கோ நியூஸ்” என்ற ஓர் இதழ் வெளிவந்தது. முன்பு மறைக்கப்பட்ட எத்தனையோ உண்மைகள் அந்த இதழில் வெளிவந்தன. பிறகு அந்த இதழும் மூடப்பட்டது. வரலாற்றை மூடி மறைப்பதில் எல்லா அரசியல்வாதிகளும் திறமையானவர்கள் தான். இதில் கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு சொல்ல வேண்டியதில்லை. ஆவணக் காப்பகத்திலிருந்து எதுவும் வெளிப்படவில்லை என்பது வடிகட்டிய பொய். இதையெல்லாம் உண்மையா பொய்யா என்று தெளிபடுத்துவதற்கு இவை பற்றிப் பேசுபவர் எந்தளவுக்கு நேர்மையானவர் என்பதை அவரோடு பழகும்போது  நாமே அளந்து கொள்ளலாம். எனக்கு அவர்களைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரியும். மார்க்சியன் இப்படிப் பொய்யனாக இருப்பதன் மூலம் மார்க்சியத்தின் மரியாதையைக் கெடுக்கிறான். மார்க்சியம் இன்று மதிக்கப்படாததற்கு இப்படியும் ஒரு காரணம். தமிழ்நேயத்திற்கு நன்கொடை தேவை. தமிழ்நேயம் அனுப்புகிறேன்.

                                       தங்கள்,
                                      ஞானி (கி. பழனிச்சாமி).
                                      கோவை.
                                       7. 10. 02.

ஞாயிறு, 24 ஜூன், 2012

மடல் அவிழ் பொழுது

(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. )
அன்புள்ள பாரதிகுமார் அவர்களுக்கு,

       தங்கள் கடிதம் கிடைத்தது. நட்புடனும் உரிமையுடனும் தாங்கள் எழுதியதைக் கண்டேன்.
          தமிழில் இலக்கிய வாதிகளைக் கூர்ந்து கவனித்தால் ஏறத்தாழ 45 வயதில் அவர்களுக்கு பெரிய தேக்கமொன்று நிகழ்வதைக் காணலாம். அந்த ‘கண்டத்தை' தாண்டி எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. நா. பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற சிலரே திரும்பி வந்தனர். பிறர் அப்படியே நின்றுவிட்டனர். பிடிவாதமாக எழுதிய சிலரோ தங்களையே பிரதியெடுத்தனர், ஒப்புக்கு எழுதி நீர்த்துப் போயினர். இது தமிழில் உள்ள தவிர்க்க இயலாத இரும்புவிதி ஒன்றையே காட்டுகிறது.
நான் முன்னரே அதைப் பற்றி சிந்தனை செய்துள்ளேன். பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அவ்வயதில் அவர்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகமாகிறது. குழந்தைகள் உயர்நிலைப்பள்ளி தாண்டுகிறார்கள். பணச்செலவு கூடுகிறது. இரண்டு, அலுவலகத்தில் முதல் பதவி உயர்வு கிடைக்கிறது. புதிய வேலையும் புதிய பொறுப்புகளும் வந்து சூழ்கின்றன. இதையொட்டி குடும்பத்தின் அழுத்தம் அவன் மீது ஏறுகிறது. வாசிக்க, எழுத, பயணம் செய்ய நேரமும் மனநிலையும் கூடுவதில்லை. மன எழுச்சிகள் நிகழ்வதில்லை.
         இவை புறக் காரணங்கள். இலக்கியம் சார்ந்தும், சில காரணங்கள் இருக்கலாம். ஒன்று, எல்லா எழுத்தாளர்களும் இளமைப் பருவம் தொடங்கி வாலிபப் பருவம் வரை சுற்றியலைந்து அறிந்தவற்றை எழுதுகிறார்கள். பதினைந்து வருடங்களுக்குள் அவை எழுதி எழுதிக் காலியாகிவிடுகின்றன. இரண்டு, அவனது எழுத்தைச் சுற்றி ஒரு எதிர்பார்ப்பு வளையம் உருவாகிவிடுகிறது. அவன் என்ன எழுதுவதென்பது அவ்வாறாகத் தீர்மானமாகி விடுகிறது. அதைத் தாண்ட முடிவதில்லை. மூன்று, அவனைச் சுற்றிய கோபதாபங்களின் வலையில் அவனுடைய உணர்ச்சிகளும் சிக்கிக் கொள்கின்றன. அவற்றுக்குத் தன்னை அறியாமலேயே எதிர்வினையாற்றி அவன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் தேங்கி விடுகிறான்.
          மேலும் முக்கியமான ஒரு சிக்கல் உள்ளது. அது ஆன்மீகமானது. எழுத்தாளனை இப்படி வகைப்படுத்திக் கொள்ளலாம். அவன் உலகியல் சார்ந்த தளத்துக்கும் அதைத் தாண்டிய ஓர் ஆன்மீகத் தளத்திற்கும் இடையே ஆடும் ஊசல். இங்கிருந்து அங்கு நோக்கி எழுகிறான். அங்கே நின்றபடி இந்த தளத்தை மதிப்பிடுகிறான். இதில் ஏதேனும் ஒரு தளத்தை முற்றாகச் சாரும்போது அவனுடைய எழுத்து நின்றுவிடுகிறது. தல்ஸ்தோய் ஆன்மீகம் நோக்கி நகர்ந்தவர். நம் எழுத்தாளர்கள் உலகியல் நோக்கிச் செல்கிறார்கள்.
          உலகியலில் ஆழ்ந்த பற்று எழுத்தாளர்களின் வரமும் சுமையுமாகும். அறவுணர்வு, அழகுணர்வு என்னும் இரு தளங்களில் அவனில் இது வெளிப்படுகிறது. அதுவே அவன் ஆக்கங்களின் சாரம். ஆனால் அது அவனைக் கட்டிப் போடுகிறது. ஏதோவொரு கட்டத்தில் உலகியல் பல மடங்கு விசை கொண்டு அவனை இழுத்து மேலெழாது செய்துவிடுகிறது. ஆகவே தான் துறவிகளுக்கு இணையாகவே எழுத்தாளனுக்கும் நிலையின்மை நெறியாக வகுக்கப்பட்டுள்ளது. அவன் அலைய வேண்டும், ஓடியபடியே இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
          புதிய நிலக் காட்சிகள் புதிய மனிதர்கள் வழியாக சென்றபடியே இருப்பது எழுத்தாளனுடைய கற்பனைக்கு உரமூட்டுவது. அறிந்த வாழ்க்கை, பழக்கத்தின் களிம்பால் மூடப்பட்டுள்ளது. புதிய நிலம், புதிய மனிதர்கள் அவன் முன் புதிதாகப் பிறந்து எழுகிறார்கள். ஆகவே தான் துறவி மூன்று நாட்களுக்கு மேல் ஓர் ஊரில் தங்கலாகாது என வகுத்தது மரபு. பாவலர் பரிசில் வாழ்க்கையை தேர்ந்தனர். கம்பனும் காளிதாசனும் அப்படித்தான் வாழ்ந்தனர். நாமறியும் எல்லா ஐரோப்பிய படைப்பாளிகளும் அப்படித்தான் வாழ்கிறார்கள். தமிழ் எழுத்தாளனுக்கு அந்த வாய்ப்பே இல்லை.  மாறாக, அவனுக்கு விதிக்கப்பட்ட எளிய வாழ்வின் ஓயாத லெளகீகப் போராட்டத்தில் அவன் தன் நேரத்தையெல்லாம் இழக்கிறான். உள்ளத்து ஆற்றலை சிதறடிக்கிறான். சில துளிகளை எப்படியோ மீட்டுக் கொண்டு சிலவற்றை எழுதுகிறான்.
நான் நிறைய எழுதினேன் என்றால் அதற்கு இரு புறக்காரணங்கள் உள்ளன. ஒன்று, என் வழி எழுத்துதான் என முடிவு செய்துகொண்டு பிற அனைத்தையும் விலக்கினேன். பதவி உயர்வோ பிற உலகியல் வெற்றிகளோ வேண்டாமென மறுத்துக் கொண்டேன். அதற்கேற்ப தனிப்பட்ட தேவைகளை சுருக்கிக் கொண்டேன். இரண்டு, என் குடும்பமும் வேலையும் எனக்கு நேரமும் மனநிலையும் அளிக்கக் கூடியனவாக அமைந்தன. ஓரளவு பயணங்களும் வாய்த்தன.
         இப்போது என் 44வது வயதில் என் வாழ்க்கையில் ஒரு தேக்கத்தை நானே உணர்கிறேன். மாறாத அலுவலக வாழ்க்கை சலிப்பு அளிக்கிறது. வீடு-அலுவலகம்-வீடு என என் அகநிலக்காட்சிகள் எல்லை கொள்கின்றனவா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. பயணங்களுக்காக, புதியனவற்றுக்காக அகம் ஏங்குகிறது. தமிழில் எழுதி இதிலிருந்து நான் விடுதலை பெற இயலாது. எழுதி நான் பயணங்களுக்காக பொருளீட்ட இயலாது. (இப்போது கிடைக்கும் மிக சொற்பத் தொகையைக் கண்டே இலக்கிய வணிகம் என்று இகழ ஆளிருக்கிறது)
          இத்தருணத்தில் ஒரு முக்கியமான வாய்ப்பு எனக்கு வந்துள்ளது. வரவிருக்கும் பாலாவின் திரைப்படம். அதிகமில்லையேனும் பொருட்படுத்தத் தக்க அப்பணம் எனக்கு ஏராளமான பயண  வாய்ப்புகளை அளிக்கிறது. முழுக்க முழுக்க சுற்றியலைந்து அதை செலவிட எண்ணியுள்ளேன். என் இருபது வயதில் இருந்த அதே வேகத்துடன் அலைய வேண்டுமென்ற கனவு. அமர கால் தரிக்கவில்லை. வீட்டில், அலுவலகத்தில், எங்கும்.
         திரைப்படச் செயல்பாடு சார்ந்து எனக்கு எவ்விதமான கனவுகளும் எதிர்பார்ப்புகளுமில்லை. உண்மையில் திரைப்படத்தையே நான் ஒரு பொருட்படுத்தத் தக்க கலைவடிவமாகக் கருதவில்லை. ஆனால் அதன்மீது நன்றியுடனிருக்கிறேன். என்னை இவ்வயதுக்குரிய தேக்கத்திலிருந்து மீட்பது அது அளிக்கும் பணம்தான்.
         எழுதுவதை மீண்டும் தோன்றினாலொழிய தொடர்வதில்லை என்று முடிவு செய்ய பல உடனடிக் காரணங்கள் இருக்கலாம். சுந்தர ராமசாமியின் மரணம் முதல் உருவானதொரு மீள் நோக்கு ஒன்று. அதுவொரு அதிர்ச்சிதான். கோபங்கள் மோதல்கள் மூலம் நீளும் விவாதங்களைப் பற்றிய ஒரு ஐயம் ஆழமாக எழுந்துவிட்டது. இன்னொன்று, ‘கொற்றவை'. நான் இப்போதிருக்கும் சிறகுகளால் பறக்க சாத்தியமான உச்சகட்ட உயரமிதுவே. இனி இதை பிரதி செய்ய முயலக்கூடாது. மீண்டும் கூடிருந்து புதிய சிறகடைய வேண்டும்.
இன்னொரு எண்ணம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிராக கூடிய கும்பலின் வேகத்தைக் கண்ணுற்றதும் எழுந்தது. குட்டி ரேவதி, பிரபஞ்சன், வெளி.ரங்கராஜன், பா.செயப்பிரகாசம், அ. மார்க்ஸ் எத்தனை தரப்புகள் அதில். அந்த ஒற்றுமை! அது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிரான கோபமல்ல. எந்த சிக்கலிலும் மாட்டாத எம்.யுவனுக்கு எதிராக எல்லா படைப்பிலக்கியவாதிகளுக்கும் எதிராக நிகழ்ந்த வன்முறை. தொடர்பே இல்லை என்றாலும் ‘பரீக் ஷா  ஞாநி' என்னையும் வசைபாடினார். அது அவர்களால் புரிந்து கொள்ள முடியாத படைப்புத் திறன் என்ற ஒன்றுக்கு எதிரான சினம். ஆனால் அது உண்மையான ஆங்காரம்தான். ஒரு முறையேனும் ஒரு எழுத்தாளனையேனும் பாராட்டாதவர்கள் வசைபாட மட்டும் ஒன்று திரண்டெழுகிறார்கள். எழுத்தாளனே தமிழ்நாட்டின் ஆகப்பெரிய நசிவு சக்தி என்கிறார்கள் இவர்கள். ஒழித்துக் கட்டுவோம் என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
          எப்போதுமே நான் இவர்களை இம்மி கூடப் பொருட்படுத்தியதில்லை. இப்போதும் அப்படித்தான். ஆனால் ஒரு கணத்தில் அது தமிழ்ச் சமூகத்தின் ஒரு பெரும்பான்மையின் குரலாகக் கேட்டது. படைப்பு சக்திக்கு தடைபோடுவதையே அது எக்காலமும் செய்து வந்துள்ளது. இதனுடன் போராடித்தான் கம்பன் எழுதினான், பாரதி எழுதினான், புதுமைப்பித்தன் எழுதினான். இன்று படைப்பூக்கத்துடன் எழுதும் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். ஒருபோதும் இக்கும்பலால் படைப்பு சக்தியை தடுக்க, வெல்ல இயலாது. ஆனால் ஒருகணம் தோன்றியது, சரி கொஞ்ச நாள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று அவர்களிடம் சொல்ல. ஒரு தற்காலிக வெற்றியை அவர்களுக்கு தரலாமே. சரி, ஒருவனை ஒழித்து விட்டோம் என அவர்கள் விட்டு விடட்டுமே. இவர்களிடமிருந்து துண்டித்து ஓடிவிட வேண்டும் என்று ஒரு தருணத்தில் பட்டது. இவர்களை நினைப்பது கூட எப்படியோ என் ஆழத்தை தூர்க்கச் செய்துவிடும். கொஞ்ச நாள் மேலும் வசை. மேலும் அவதூறு. அவ்வளவுதான். அந்த அவகாசத்தில் என் ஊற்றை வேறு எங்கோ நானே தேடிக் கண்டடைகிறேன்.
**

         இந்நாட்களில் மீண்டும் பயணம் செய்தபடி இருக்கிறேன். மண்ணில், மதநூல்களில். இருபது வயதில் நான் பேரிலக்கியங்களில் அலைந்தேன். இவ்வயது மதம் நோக்கி செலுத்துகிறது. பைபிள் (1995ல் புதுத் தமிழாக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க பைபிள் ஒரு பேரிலக்கிய ஆக்கம்) வேதங்கள், உபநிடதங்கள், சமண நூல்கள்...
         இவ்வருடம் முழுக்க சமணத் தலங்களுக்குச் செல்ல திட்டம். தமிழக சமணக் கோயில்களுக்கு சென்று மீண்டபின் சிரவண பெலகொலா சென்று கர்நாடக மாநிலச் சமணத் தலங்களில் நீண்ட பயணம் மேற்கொண்டு இப்போதுதான் திரும்பினேன். உடனே மீண்டும் கிளம்பவிருக்கிறேன்.
மீண்டும் எழுதலாம். எங்கோ அதன் விதை ஈரம் காத்துப் புதைந்திருக்கிறது. பார்ப்போம்.

அன்புடன்,
ஜெயமோகன்,
28/02/2006.

ஞாயிறு, 3 ஜூன், 2012

பாலை என்றொரு பசுமை



               

        திரைப்படங்களும் தமிழர் வாழ்வும் பின்னிப் பிணைந்திருப்பவை. அதனால் விளைந்த நன்மைகளும் தீமைகளும் வெவ்வேறு அளவுகளால் மதிப்பிடப்பட வேண்டியவை. உலக வரலாற்றில் திரைப்படமென்கிற கலைச்சாதனம் தோன்றிய சில வருடங்களிலேயே தமிழரொருவரால் (வின்செண்ட் சின்னதுரை) அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகு தமிழர் வாழ்வின் சகல பகுதிகளிலும் இன்றுவரை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவை திரைப்படங்களே. ஆனால், உலகத் திரைப்படங்களின் பாய்ச்சலோடு ஒப்பிட்டால் நமது திரைப்படங்களின் போக்கும் நோக்கும் மிகப் பின் தங்கியிருக்கின்றன. இந்த மதிப்பீடு தமிழர்களின் திறமை மற்றும் ரசனை சார்ந்தவையல்ல. திரைப்படத் துறையில் நுழைந்த அரசியலும், திரைப்படங்கள் அரசியலில் நுழைந்ததும் தான் காரணம்.
       உலகத் தரத்தில் திரைப்படமென்பது, தொழில்நுட்ப பிரம்மாண்டங்களை கணக்கிட்டே நம் மனம் பழகிவிட்டது. ஹீரோயிசம் விரவிக் கிடக்கும் திரைப்படச் சூழலில், உலகளவில் தரப்படும் திரைப்பட விருதுகளையும், ஏதேனுமொரு கதாநாயகன் வென்றெடுத்து வருவான் என்கிற மனோபாவம் பெருகிவிட்டது.
        உலகத்தரமென்பது கதாநாயகர்களின் அசாத்தியத் திறன்களை முன்னிறுத்துவதாலோ, கருவிகளின் அதிநுட்ப வெளிப்பாடுகளாலோ நிர்ணயிக்கப் படுவதில்லை. உலகின் மிகச் சிறந்த திரைப்படங்கள் உன்னத இலக்கியப் பிரதிகளின் காட்சி வடிவமாகவோ, வரலாற்றைப் பதிவு செய்யும் அக்கறையை அடிப்படையாகக் கொண்டவை என்பது உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் அறிவர்.

இந்த சூழலில் சமீபத்தில் ‘செம்மை வெளியீட்டகம்' சார்பில் தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கும் ‘பாலை' திரைப்படம் பல்வேறு வகைகளில் தமிழ்த் திரைப்படத்தை நகர்த்திச்செல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

      
         தமிழ்த்திரையுலகம் இதுவரை பதிவு செய்யாத வரலாறு என்பதோடு எவரும் துணிந்திராத முயற்சி ‘பாலை'. மற்ற விமர்சனங்களைப் போல இது இந்தத் திரைப்படத்தின் கதை பற்றிப் பகிரும் போக்கில் எழுதப்பட்ட கட்டுரையல்ல. திட்டமிட்டு வேண்டுமென்றே கவனிக்கப் படாத ஒரு திரைப்படம் பற்றிய குமுறல்.
        பாலை ஒரு இனத்தின் வரலாற்றை பதிவு செய்யும் ஆவணம் மட்டுமல்ல. வந்தேறிகளால் இன்னும் சிதைந்து கொண்டிருக்கும் நம் இனம் பற்றிய எச்சரிக்கையும் கூட. தமிழ், தமிழ் சமூகம், இன வரலாறு பற்றிப் பேசுவது இன்றைக்கு அறிவுஜீவித் தனமில்லை என்ற பிற்போக்கான மனப்போக்கு நிலவுகிறது. அழித்தொழிப்பு சகல வழிகளிலும் நிகழ்கிற போது 'கள்ள மெளனம்' சாதிக்கும் மெத்தப் படித்தவர்கள்,' வலி'யால் துடித்துக் குரலெழுப்பும் போது ஆவேசமாக நம் குரல்வளையை நெரிக்கும்  அராஜகம், மனிதத் தன்மையற்ற மற்றொரு படையெடுப்பாகவே கருதமுடியும். எனவே தான், 'பாலை' ஒரு பதிவு மட்டுமல்ல. அவசியமான 'கலை போரும்' கூட.
       
           இயக்குநர் செந்தமிழன் வணிக நோக்கோடு திரையுலகுக்கு வந்த வியாபாரியல்ல. தஞ்சையைச் சார்ந்த இயற்கை வேளாண் விவசாயி, நல்ல கவிஞர், தமிழிய ஆய்வாளர், பத்திரிகையாளர். அவரது 'பாலை', மேலோட்டமாகப் பார்த்து விட்டுக் கடந்துவிடக் கூடிய படைப்பு அல்ல. மிகச் சரியாக அடையாளப்படுத்தப் படவேண்டிய திரைப்படம்.
        வந்தேறிகளால் ஆயக்குடியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் தமிழ் சமூகம் ஒரு பாலை நிலத்தை முல்லைக் குடியாக மாற்றியதோடு, இழந்த ஆயக்குடியை மீட்டெடுக்கும் போருக்கு தள்ளப்பட்டனர் என்பதுதான் பாலையின் ‘ஒருவரி'க்கதை.
        ஆனால், பாலையின் உள்ளீடாக செந்தமிழன் முன்வைக்கும் பல செய்திகள் தமிழ்ச் சமூகம் அறிந்து விடாமலிருக்க, மிகச் சாமர்த்தியமாக புறக்கணிக்கப் படுகிறது.
        சிந்துவெளிச் சமூகமென்பது தமிழ்ச் சமூகமே என்பதை செந்தமிழன் தனது கட்டுரைகள் வழி பல சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார். பாலைத் திரைப்படத்தில் காட்சிகள் வழி அதனை உறுதி செய்கிறார்.
         ஆதிதமிழர்களிடையே வேள்விகளில்லை. சடங்குகளில்லை. மத நம்பிக்கைகளில்லை. அதுபோல தமிழர்களுக்கென்று மிகச் சிறந்த பண்பாடு, கலாச்சாரம் இருந்தது. எனவே, அதனைக் கட்டிக் காக்க வேண்டிய கடப்பாடு இருந்ததால், தமிழர்களின் போர்முறையென்பது தற்காப்பதாகவே இருந்ததே ஒழிய, அழித்தொழிப்பாக இருந்ததில்லை. அத்துடன், பெண்கள் எல்லா நிலைகளிலும் சமமாக நடத்தப் பட்டனர். தமிழர்களின் இயற்கை சார்ந்த அறிவும், சமயோசித புத்தியும் பறந்துபட்டது என்பது மறுக்க முடியாது.
        பாலைத் திரைப்படத்தில் வரும் காட்சிகள், தமிழ்ச் சமூகத்தின் ஆதிகால வாழ்வை அழகாகப் பதிவு செய்திருக்கின்றன.
        முல்லைக்குடி நிலப் பகுதியில் மீன் வளம் பெருக, இயற்கை அன்னையை வழிபடும் காட்சியும், வலன் - காயாம்பு திருமணக் காட்சியும், வேள்விகளும் சடங்குகளும் பிற்காலத்தில் புகுத்தப் பட்டவை என்பதை உணர்த்துகின்றன. செந்தமிழன் வெறும் கேள்விஞானத்தில் இந்தக் காட்சிகளை வைக்கவில்லை. தனது கட்டுரையொன்றில் (‘காட்சி' இணையதளம்) வைகை ஆற்றங்கரையில் அந்தணர்கள் வளர்க்கும் வேள்வித் தீயில், ஆற்றில் குளித்து விளையாடிய இளம் தமிழ்ப் பெண்கள் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக பரிபாடலின் பாடலொன்றைக் குறிப்பிடுகிறார்  செந்தமிழன்.
          “விரிநூல் அந்தணர் விழவுத் தொடங்கப்
           புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப...”
                                                                  -பரிபாடல் - 11
         வேள்வித் தீயென்பது ஆதிகால தமிழ்ச் சமூகத்தில் கேலிக்குரிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.
        போர் குறித்து முதுவனும், விருத்திரனும் உரையாடும் காட்சி மிக முக்கியமான காட்சி. 'போரென்பது என்ன?' என்று முதுவன் கேட்கும் போது, விருத்திரன், 'எதிரியைத் தாக்குவது' என்று பதிலளிக்கிறார். இது தமிழரின் மனப்போக்கில் வெளியாகும் இயல்பான பதில். ஏனெனில், தமிழர்களைப் பொறுத்தவரை போரென்பது தங்களைத் தாக்க வரும்போது மட்டும் திருப்பித் தாக்குவது. எனவேதான், முதுவன் திருத்துகிறார்: 'எதிரியைத் தாக்குவதல்ல; வீழ்த்துவது' என்று முதுவனின் அடுத்த கேள்வியான 'போரில் ஆயுதங்கள் எதற்கு?' என்பதற்கு விருத்திரன், 'தற்காப்புக்கு' என்று பதிலளிக்கிறார். மறுபடியும் முதுவன் திருத்துகிறார்... 'தற்காப்புக்கல்ல; அழிப்பதற்கு' என்று.
        தமிழ்ச்சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அடிமை முறை இல்லை. என்பதை பின்னணிக் குரல் மூலம் வலியுறுத்தும் செந்தமிழன், காட்சிகள் வழியிலும் இதைப் பதிவு செய்திருக்கிறார். வந்தேறிகள் முல்லைக் குடி மீது வன்மம் தீர்க்க, வலனைக் கடத்திச் சென்று அடிமையாக வைத்திருக்கின்றனர். ஆனால், வலனை மீட்க, முல்லைக்குடி மறவர்கள் ‘ஆநிரை கவர்தல்' (பசுக்களைக் கவர்தல்) உத்தியைப் பின்பற்றுவதோடு, அவைகளை பாதுகாக்கவும் செய்கின்றனர்.
        அதுபோல வந்தேறிகளின் உற்பத்தித் தொழிலென்பது மேய்த்தலாக இருக்கிறது. குடியிருக்க வீடு கட்டத் தெரியாத, கூடாரம் அமைத்து தங்கும் கூட்டமாகவும், மாட்டை அறுத்துத் தின்னும் வழக்கமும் கொண்டவர்கள் என்பதைக் காட்சிப் படுத்தும் செந்தமிழன், முல்லைக்குடி மக்கள் குடியிருக்க வீடு கட்டும் அறிவும், வேளாண் தொழில் செய்து உண்ணும் பழக்கமும் (பாலை வந்தால் திங்க சோறு இருக்காது, குடிக்க தண்ணீர் இருக்காது என்று முதுவன் ஒரு காட்சியில் எச்சரிக்கிறார்) உடையவர்களென்பதைத் தெளிவுபடுத்துகிறார். கூடாரம் அமைத்து வாழ்பவர்கள் என்பதால் போரென்று வந்தால், வந்தேறிகள் எதையும் கட்டிக் காக்கவேண்டிய நிர்பந்தமில்லாமல் அழித்தொழிக்கும் உத்தியைக் கையாள்கிறவர்கள் என்பது மறைமுகமான மற்றொரு செய்தி.
        என்றாலும், போரென்று வந்துவிட்டால், தமிழர்கள் பின்பற்றும் உத்திகள் யுத்த தந்திரத்தின் உச்சங்கள் என்று புலப்படுத்தும் காட்சியையும் வைத்துள்ளார். புகைவழி செய்தி பரிமாற்றம், காலடித் தடம் மூலம் திசை திருப்பல், தேளையும் ஆயுதமாகப் பயன்படுத்தல், நெருப்புக் கணைகளை எறியும் திறன் என்று பல விதத்தில் ஆரவாரமில்லாமல் எளிமையாக அடையாளப் படுத்தியிருக்கிறார்.
         ஈழப் போரில், தனியொருவனாக மாட்டிய சிறுவனொருவன், தன்னைச் சுற்றி வளைத்த எதிரிகளை திசைதிருப்ப தன்னை சுற்றிலும் ஆயுதங்களை மட்டும் வைத்துவிட்டு (பல வீரர்கள் தன்னுடன் இருப்பது போல் பொய்யாக உருவகித்து) அவர்களை அச்சத்தின் வழி ஓட வைத்ததாக ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். செந்தமிழன் பாலை திரைப்படத்தில் சமயோசிதமாக இப்படியொரு காட்சியை வைத்துள்ளார்.
         பெண்களின் நிலை அன்றைய கால கட்டத்தில் மேம்பட்டதாக இருந்தது என்பதை உணர்த்தும் விதமாக, போர் செய்யும் பயிற்சி எடுத்தலையும், ஆண்களை தோழர்களாக பாவிக்கும் வழக்கத்தையும், கள்ளருந்துதலையும், உடன்போக்கு என்னும் புரிந்துணர்வு காதலையும், மன்றக் கூட்டங்களில் பங்கேற்று கருத்துக்களை பகிரும் சமநிலை ஆகியவற்றையும் காட்சிப் படுத்தியிருக்கிறார் செந்தமிழன்.
 பாத்திரங்களுக்கான பெயர் சூட்டலில், ஒரு தேர்ந்த படைப்பாளியாக நான் செந்தமிழனைக் காண்கிறேன். சிந்துவெளித் தமிழர்கள் தங்கள் தலைவனாக இருப்பவனை ‘விருத்திரன்' என்றழைப்பது தான் வரலாறு. நீர்நிலை காப்பவன் ‘அகி'. வந்தேறிகள் முதலில் கொல்வது ‘அகி' என்ற முல்லைக்குடி வீரனைத்தான். வந்தேறிகளின் பழக்கம் முதலில் எதிரியின் நீர்நிலையை அழிப்பது என்பது இதன்மூலம் சொல்லாமல் சொல்லப்பட்ட தகவல்.
          ஆனால் வந்தேறிகள் தங்கள் தலைவனை ‘இந்திரன்' என்றே குறிப்பிடுவர். செந்தமிழனோ அவனுக்கு ‘அரிமாவன்' என்று பெயரிட்டிருக்கிறார். திரைக்கதையாளர் செந்தமிழன் ஏன் அவனது பெயரை மாற்றினார் என்பது படம் பார்த்து முடித்தபிறகு எல்லோருக்கும் புரிந்துவிடும். அதுபோலவே அரிமாவன் தமிழ் உச்சரிப்பு, தமிழல்லாத பிறமொழியினர் பேசுவது போல அமைத்திருப்பது இயக்குநர் செந்தமிழனின் சாமர்த்தியம்!
         
        முதுமக்கள் தாழி, தமிழ் எண்கள், இயற்கையை வைத்துக் குறிசொல்லல் எனப் பல தகவல்களை போகிற போக்கில் செந்தமிழன் காட்சிப்படுத்தியுள்ளார்.
          செந்தமிழனின் படக்குழு செம்மையான குழுவாக அமைந்திருப்பது தமிழ்த்திரையுலகுக்கு நல்ல செய்தி. அபிநந்தனின் ஒளிப்பதிவு, படம் துவங்கிய காட்சியிலிருந்து இறுதி வரை நெஞ்சை அள்ளுகிறது. ‘கொல்லேறே' பாடலில் பாத்திரங்களோடு குதியாட்டம் போட்டு கூடவே ஓடும் கேமரா, மன்றக் கூட்டத்தில்  பல்வேறு அண்மைக் காட்சிகள் மூலம் முதுவனின் உணர்வுகளைப் பதிவு செய்கிறது.  பல சமயங்களில் பயிர்களின் ஊடே சென்று காட்சியை பசுமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
 வேதிசங்கரின் பின்னணி இசையும் செந்தமிழனின் பாடல்வரிகளும் படத்திற்கு மிகப் பெரிய பலம். ‘கொல்லேறே', ‘யாதோ யாதோ' பாடல்கள் படமாக்கப் பட்ட விதமும் இசையும் கண்களை உறுத்தாத செவிகளைக் கெடுக்காத இனிமை.
       முதுவனாக வரும் பேராசிரியர் வை. நடராசன், காயாம்பூவாக வரும் ஷம்மு, விருத்திரனாக வரும் இளையராஜா ஆகியோர் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக வை.நடராசனின் முகபாவங்களும், உடல்மொழியும் ஒரு தேர்ந்த கலைஞனின் வெளிப்பாடுகளுக்கு இணையானது.
        திரைப்படத்தில் ஒரு சிலர் இயல்பாக நடிக்க முடியாமல் சிரமப்படுவதும், ஒலிப்பதிவில் சில தடுமாற்றங்களும் சிறு குறைகளாகத் தெரிந்தாலும் தமிழ் என்றொரு இனத்தின் வரலாற்றை  பதிவு செய்த விதத்தில் உலகத் தரத்திலொரு தமிழ்த்திரைப்படம் என்று ‘பாலை'யைக் கொண்டாடலாம்.
         செந்தமிழன் ‘நமது மரணம் குறித்து...' என்ற கவிதையில்,
              “இனம், மொழி, போர் ஆகியவை
               விஷம் தடவிய சிறு முட்களை
               உங்கள் முதுகில் குத்துவது போல
               வலிகொடுத்துக் கொல்லும்...” என்று எழுதியிருப்பார்.
         சமகால சூழலில் தமிழினத்துக்கு எதிரான நிகழ்வுகள் அன்றாடம் நம்மைக் கொன்றபடியிருக்கின்றன. ஆறாத காயங்களோடு அழுகிறது மனம். என்று ஆறுமோ... மாறுமோ... என்று தெரியாவிட்டாலும் ‘பாலை' மருந்திட்டிருக்கிறது

செவ்வாய், 15 மே, 2012

ஈரானிய சினிமாவின் புதிய எழுச்சி

          2011- ம் ஆண்டில் வெளிவந்த உலகத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுவிட்டது. எதிர்பார்த்தது போலவே ‘தி ஆர்ட்டிஸ்ட்' திரைப்படமும் ‘ஹ்யூகோ' திரைப்படமும் தலா ஐந்து விருதுகளை பங்கிட்டுக் கொண்டன. பிரபல ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் மூன்றாம் முறையாக ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
          மெளன மொழிப்படமாக எடுக்கப்பட்டிருந்த ‘தி ஆர்ட்டிஸ்ட்' திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் படத்தின் கரு, களம், பண்பட்ட நடிப்பு, எடுக்கப்பட்ட விதம் என்று பல காரணங்கள் இருந்தாலும் சலனப்படங்கள் வெளியான கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ‘ஆர்ட்டிஸ்ட்', மெளனப் படங்களுக்கான அஞ்சலி என்றுதான் கருதுகிறார்கள்.
        மார்ட்டின் ஸ்கார்ஸஸியின் ‘ஹ்யூகோ' படமும் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட படம்தான். ஆனால் ஆஸ்கர் படவிழாவில் மட்டுமல்ல; பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் மிக அதிகமான அளவில் பார்வையாளர்களை கவர்ந்த படம் என்றால் அது ஈரானின் ‘SEPERATION'  -ஐ தான் குறிப்பிட வேண்டும்.
        பொதுவாக ஈரானியத் திரைப்பட இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களுக்கான கருவை மிக எளிதாக கட்டமைத்துக் கொள்வார்கள். சிக்கலான திருப்பங்களோ, பரபரப்பான காட்சிகளோ இருக்காது. அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளின் ஒரு வரிச் செய்தியிலும் அவர்களால் மெலிதான ஒரு திரைக்கதையைத் தந்துவிட முடியும்.
        CLOSE-UP என்றொரு திரைப்படம். ஈரானின் பிரபல இயக்குநர் மக்மல் பஃப் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் அடிப்படையில் உருவானது.
         மக்மல் பஃப்-ஐ பார்த்தே இராத ஒரு குடும்பத்திடம் நான் தான் மக்மல் பஃப் என்று ஏமாற்றுகிறான் ஒருவன். பணத்துக்காகவும், சில சலுகைகளுக்காகவும் அவன் அப்படி பொய் சொல்கிறான். ஆனால் சில நாட்களிலேயே அவன் மக்மல் பஃப் இல்லையென்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறான். இது செய்தியாக ஈரானியப் பத்திரிகைகளில் வெளிவந்தது.
        இதனை ஈரானின் மற்றொரு பிரபல இயக்குநர் கியாஸ்தர்வஸ்கி வாசிக்கிறார். அவ்வளவுதான். கேமரா, பட யூனிட் சகிதம் கைதான நபர் அடைபட்டிருக்கும் சிறைச்சாலைக்கு செல்கிறார். அந்த வழக்கின் விசாரணையையும், பிடிபட்டவனின் அதற்குப் பிறகான நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பிந்தைய நிலைமையையும் அப்படியே நேரிடையாகப் படம் பிடிக்கிறார். (சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன்) விசாரணைக்கு முந்தைய சம்பவங்களை சுருக்கமான திரைக்கதையினால் படமாக்குகிறார்.
       ஈரானில் சட்டப்படி குற்றம் சுமத்தியவர்களே பிற்பாடு குற்றவாளியை மன்னிப்பதாக முடிவெடுத்தால் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த அடிப்படையில் குற்றவாளி விடுதலையாகிறான். விடுதலையான பின் தான் ஏமாற்றிய விதத்தை இயக்குநர் கியாஸ்தர்வஸ்கியிடம் விவரிக்கிறான். அவனையே முன்பாதி கதையிலும் நடிக்க வைக்கிறார். அதோடு இல்லாமல் குற்றவாளியை நிஜ மக்மல் பஃப்-இடம்  அழைத்துச் சென்று அறிமுகப் படுத்துகிறார். இதுவும் படத்தில் ஒரு காட்சியாகிறது.
         உலகத் திரைப்பட வரலாற்றில் நானறிந்த வரையில் ஒரு திரைப்படத்தின் பாதி பகுதி வழமையான முறையில் காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு படமாக்கப்பட்டு, மீதமுள்ள பகுதி நேரிடையான சம்பவங்களை படமாக்கிய உத்தி, ‘குளோசப்' படத்தில்தான் இடம் பெற்றதாகக் கருதுகிறேன். விசாரணை நடக்கும் நீதிமன்றக் காட்சியைக் கூட நேரடியாகவே படம்பிடித்துள்ளனர்.
       படத்தின் இயக்குநர் க்யாஸ்தர்வஸ்கி ஒரு புதுமை விரும்பி. இப்படியான புதுமைகளை எப்படிக் கண்டடைகிறீர்கள் என்று ஒரு நண்பர் அவரைக் கேட்டதற்கு, ‘தேவையும் சூழலும்தான் மனிதனை புதுமையை நோக்கித் துரத்துகிறது' என்று பதிலளித்தாராம்.
         உண்மைதான், ஈரானிய திரைப்படத் தணிக்கைக் குழு மிகக் கடுமையான விதிகளைப் பின்பற்றி இயங்குகிறது. ஆண் பெண் தொடுதலோ, பெண்களின் உடலுறுப்புகளை ஆபாசமாக வெளிப்படுத்துதலோ, அரசியலை- நிர்வாகத்தை நேரடியாக விமர்சித்தலோ எந்தக் காட்சியிலும் இடம் பெறக் கூடாது என்பது முக்கியமான விதி. ஈரானின் தேசியம், மதம் மற்றும் பண்பாடுகளையும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வசனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதில் யாருக்கும் விதிவிலக்கும் இல்லை.
        கிட்டதட்ட சர்க்கஸில் ஒரு நபரை நிற்கவைத்து அவரைச் சுற்றிலும் கத்திகள் வீசப்படுவது போல, ஈரானில் தணிக்கை விதிகள் படைப்பாளிகளைச் சுற்றி வீசப்படுகின்றன.
        ஈரானின் இயக்குநர்கள் தங்களின் கருத்துக்களை, விமர்சனங்களை விதிகளின் சூறைக்காற்றில் சிதைவுறாமல் மிதக்கும் இலைகளைப்போல் மிக நுட்பமாக திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவை உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்களிடையே பலத்த அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
        உலகின் மிகச் சிறந்த பத்துத் திரைப்படங்களை பட்டியலிடும்படி எந்த விமர்சகரிடம் கேட்டாலும் அதில் நிச்சயமொரு ஈரானியத் திரைப்படமிருக்கும்.  குறிப்பாக Children of Heaven, Colour of Paradise, Cyclist, Apple, White Balloon, Baran ஆகிய திரைப்படங்களுக்கு உலகம் முழுக்க மொழிகள் கடந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.
         ஆனால், இத்தனை சிறப்பான படங்களிருந்தும், ஈரானியப் படங்கள் 2011 வரை ஆஸ்கார் விருதினை வென்றதில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் இவ்வாண்டு ‘Seperation' திரைப்படம் ஆஸ்காரில் பிறமொழிப் படங்கள் வரிசையில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது.
         ஆஸ்கார் என்பது முடிவான அங்கீகாரம் என்று சொல்லிவிட முடியாது. ஆஸ்கார் விருது இன்னும் அதிகமான கவனத்தை ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
        ‘Seperation' திரைப்படத்தின் கதை ஒரு பயணச்சீட்டின் பின்புறம் எழுதிவிடக் கூடிய அளவு மிகச் சுருக்கமானதுதான். எல்லா மனிதருக்குள்ளும் ஒரு குற்றவாளியும் ஒரு நீதிபதியும் மறைந்தே இருக்கிறார்கள் என்பது  படத்தின் ஒரு வரி நீதி.
         விவாகரத்து கோரி மனு செய்திருக்கும் நடேர் மற்றும் சிமின் ஆகியோரின் ஒரே பெண் டெர்மே. இருவரின் பிரிதலுக்குப் பிறகு யாருடன் மகள் இருக்க வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. வழக்கு நீதிமன்றத்திலிருக்கும் போது சிமின், பிரிந்து சென்று விடுகிறார். தனது வயதான நோயுற்ற தந்தையை கவனிப்பதற்காக ரசையா என்ற கர்பிணிப் பெண்ணை பணிக்கமர்த்துகிறார் நடேர். அவர் அலுவலகம் சென்றிருக்கும் தருணத்தில் நடேரின் நோயுற்ற தந்தை கட்டிலை விட்டு இறங்கிவிடாமலிருக்க அவரது கைகளை கட்டிலோடு வைத்து பிணைத்து விட்டு, தனக்காக மருத்துவரைப் பார்க்க சென்றுவிடுகிறார் ரசையா. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் டெர்மே தாத்தா கட்டிலிலிருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சற்று கிடப்பதைப் பார்த்து அலறுகிறாள். நடேர் தனது தந்தையின் நிலையைப்பார்த்து மிகுந்த கோபமடைகிறார். வீட்டுக்கு திரும்பிய ரசையாவிடம் சண்டை போடும்போது ரசையா மாடிப்படியில் தவறி விழுகிறார்.
        அடுத்த மருத்துவப் பரிசோதனையில் ரசையாவின் கர்ப்பம் கலைந்துவிடுவது தெரிகிறது. நடேர் தள்ளி விட்டதால் தான் இப்படியானதாக ரசையா புலம்ப, அவளது கணவன் நடேர் மேல் வழக்கு தொடுக்கிறார். குற்றம் நிரூபிக்கப் பட்டால் நடேருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை நிச்சயம் என்ற நிலையில் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் இரண்டு குடும்பத்தினரும் ஒரு உடன்பாட்டுக்கு முயற்சிக்கிறார்கள்.
        இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வழக்கைத் திரும்பப் பெற ஒப்புக் கொள்கிறார் ரசையாவின் கணவன் ஹுஜட். நடேரின் மனைவி சிமின் தான் இந்த ஏற்பாட்டினை செய்கிறார். ஆனால் நடேருக்கு ஒரு தீர்மானமான நம்பிக்கை இருந்தது. நிச்சயம் ரசையாவின் இந்த நிலைக்குத் தான் காரணமில்லை என்று. எனவே ரசையாவிடம் தொகைக்கான காசோலையைத் தரும்போது, ரெசையாவை  குரான் மீது ஆணையிட்டு ‘நடேர்தான் குற்றவாளி' என்று கூறிவிட்டு பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார். ரெசையாவின் உள்மனம் உறுத்துகிறது. ஏனெனில் இந்த நிகழ்ச்சி நடக்கும் சில நாட்களுக்கு முன்புதான் கார் மோதிய சம்பவம் ஒன்று நடந்து, அதன் பிறகான மருத்துவப் பரிசோதனையில் கர்ப்பம் கலைந்ததை அறிந்ததால்தான்.

        குடும்பக் கடன், கணவரின் வற்புறுத்தல் காரணமாக நடேர் மீது வழக்கு தொடுக்க சம்மதித்திருந்தாள். ஆனால், பணத்தை பெறும் சமயம், அது பாவத்தின் பணம்; அதன் காரணமாக தன் குழந்தையின் எதிர்காலம் சூன்யமாகி விடும் என்று சத்தியம் செய்ய மறுக்கிறாள்.
         நடேர், சிமின் விவாகரத்து நீதிமன்றத்தில் சட்டப்படி உறுதி செய்யப் படுகிறது. இறுதிக் காட்சியில் மகள் டெரிமேவிடம் நீதிபதி, “நீ யாருடன் செல்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் தன் பெற்றோரை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு நீதிபதியிடம் தனியே தன் விருப்பத்தைக் கூற விழைகிறாள். நடேர், சிமின் வெளியே காத்திருக்க, படம் நிறைவடைகிறது.
        ஈரானின் திரைப்படங்கள் வழக்கமாக ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்பங்களில் பெரிதாக கவனம் செலுத்தப்படாதவையாக இருக்கும். ஆனால், Seperation  திரைப்படத்தில் அற்புதமான ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு, அருமையான இசை, மிகப் பொருத்தமான இயல்பான நடிப்பு என்று எல்லாத் துறைகளிலும் உலகத் தரத்துக்கு சவால் விடுபவையாக இருக்குமாறு இயக்குநர் அஸ்கர்ஃபர்ஹாதி கவனமாக அணிசேர்த்திருக்கிறார். தொழில்நுட்ப பங்களிப்புகளும் ஒரு திரைப்படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்க்க அத்தியாவசியம் என்பதை ஈரானியின் திரையுலகிற்கு  அஸ்கர் நிரூபித்திருக்கிறார்.
       அஸ்கரின் இந்த புதிய எழுச்சி ஈரான் திரைப்படத்துறைக்கு புத்துணர்வைத் தந்திருக்கும். அதற்கான சான்றே ஆஸ்கார் விருது!

நன்றி: 'காக்கை சிறகினிலே ' மே - 2012

வெள்ளி, 4 மே, 2012

புதிய கடலில் எனது அலை

                                               
                                                              
                                                     மன்னார் வளைகுடா 

                                    கதை திரைக்கதை இயக்கம் : த. தனசேகரன் 

                                              வசனம் : நெய்வேலி பாரதிக்குமார்         

        எல்லா விமர்சகர்களையும் நோக்கி எறியப்படும் எதிர் விமர்சனம் ஒன்றுண்டு. “ சொல்லாதே: செய்து பார்என்பதே அது. ஆனால் அந்தக் கோபம்  சரியானதல்ல என்பதும் உண்மை.  இன்னொரு சொல் வழக்கும் உண்டு செய்யத்தெரிந்தவன் வித்தகன் ஆகிறான். செய்யத்தெரியாதவன் விமர்சகன் ஆகிறான் என்பது. இந்த எள்ளலை ரசிக்கலாம்.ஆனால் கற்றறியாமல் ஒன்றை நேர்த்தியாக, நேர்மையாக விமர்சிக்க முடியாது.

                படைப்பாளியாகவும், விமர்சகனாகவும் இருக்கின்ற சிலர் இரண்டு பக்கமும் உள்ள நியாயங்களை எளிதாக புரிந்து கொள்ள இயலும்.

                உலகத் திரைப்படங்கள் குறித்து பல்வேறு கட்டுரைகளை, வெவ்வேறு இதழ்களில் நான் எழுதி வந்திருக்கிறேன். ஆனால் அவற்றின் நோக்கம் தமிழ் மற்றும் பிற மொழி இந்திய திரைப்படங்களை கீழானவை என்று அறிவிக்கும் வெற்று கூச்சல் மூலம் விளம்பரம் தேடுவதல்ல...

                நான் எல்லோரையும் போல நல்ல திரைப்படங்களின் ரசிகன். என் ரசனைக்கு சிறந்ததெனப்படும் திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறேன் நல்ல புத்தகம் வாசிக்க கிடைத்தால் நண்பனுக்கு மகிழ்வுடன் அளிப்பது போல.. அப்படியான திரைப்படங்கள் வெளிவரும் சூழல், அந்தந்த தேசங்களின் அரசியல் நிலவரங்கள், பொருளாதார சாத்தியக்கூறுகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டே என் விமர்சனக் கட்டுரைகளை படைக்கிறேன். எல்லா தேசங்களிலும் மிக தரமான திரைப்படங்கள் சிலவும், மோசமான திரைப்படங்கள் பலவும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றிலிருந்து நாமும் நமக்கான நல்லத் திரைப்படங்களை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை விதைக்கவே முயற்சிக்கிறேன்.
           நான் முதலில் ஒரு சிறுகதை படைப்பாளி, கவிதைகள் மற்றும் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். அதற்குப்பிறகுதான் விமர்சகன். எனவே இரண்டு தளங்களிலும் இயங்குவது சரி நிகர் மகிழ்வை தரக்கூடிய விஷயம்.. ஏனெனில் ஓன்றை தாக்குவதற்கு மற்றொன்றை ஆயுதமாக பயன்படுத்துவதில்லை.  தர்க்க ரீதியாக சிலரோடு வாதிட்டிருக்கிறேன் அதனையும் சில வருடங்களாக தவிர்த்து வருகிறேன். வாதங்கள் ஒரு போதும் எதிராளியின் நியாயங்களை கணக்கில் கொள்வதே இல்லை... தன் கையிலிருக்கும் ஆயுதத்தை மட்டுமே தீட்டிக்கொண்டிருக்கும் சாணைக்கல் போலத்தான் அவரவர் வாதங்கள்.. எனவே என் விமர்சனங்கள் பெரும்பாலும் ரசனை சார்ந்தவையே..

                இந்த சூழலில் என் படைப்புகளின் களங்களை பல சமயம் வேறு எவரேனும் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதனை விலங்காக கருதாமல் புதிய சிறகுகளாக கருதி அவற்றில் என்னை பொருத்தி பறக்க எத்தனிக்கிறேன். அவை என்னை வெவ்வேறு உலகங்களுக்கு இட்டுச் சென்றுஇருக்கின்றன. அந்த புதிய அனுபவங்களுக்காகவும், நட்புக்காகவும் என் நியாயமான உழைப்பை தந்திருக்கிறேன்.

                அந்த வகையில் எனக்கு கிடைத்த புதிய சிறகுமன்னார் வளைகுடாதிரைப்படத்தின் வசனம் எழுதும் பணி.. இயக்குனர் . தனசேகரன் தமிழின் ஜனரஞ்சகமான இயக்குனர் மாதேஷிடம் உதவி இயக்குனராக பல காலம் பணியாற்றியவர். வாழ்வின் அடிமட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறவர். கடுமையான உழைப்பாளி. தன்னம்பிக்கைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் தாராளமாக தனசேகரனை சொல்லலாம்.

                என்னை என்னுடைய படைப்புகள் வழியாக மட்டுமே அறிந்தவர். என் எழுத்தின் மீது அபாரமான நம்பிக்கையுடையவர்.  அவர் ஏற்கனவேரதம்என்றொரு தலைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று, அதில்  நான்தான் வசனம் எழுதவேண்டும் என்ற மிகப்பெரிய ஆவலில் என்னுடைய இல்லத்திலேயே அதற்கான திரைக்கதை வடிவம் உருவானது. அதற்கான வசனங்களை முழுமையாக எழுதி அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால்  தயாரிப்பாளரின் ஒத்துழையாமையால் அந்த படம் துவக்க நிலையிலேயே நின்றுபோனது.

                அதற்கு சில வருடங்களுக்குப்பிறகு என்னை தொடர்பு கொண்ட தனசேகரன் மன்னார் வளைகுடா என்ற தனது புதிய திரைப்படத்தின் சுருக்கமான திரைக்கதையை உணர்ச்சிகரமாக சொல்லி அதற்கான வசனம் எழுதும் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.. தனசேகரனிடம் எனக்கு பிடித்தமான இரண்டு பண்புகளை நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று அவரதுஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்' மற்றொன்றுதான் ஏற்றுக்கொண்ட விஷயத்தை இன்னார்தான் எனக்கு சொன்னார்' என்று பறை சாற்றும் பண்பு.

              முதன்முதலில் அவர் தனது ரதம் படத்தின் சுருக்கமான திரைக்கதையை எழுதி என்னிடம் காண்பித்தபோது அதிலுள்ள 23 காட்சிகளை தயவு தாட்சண்யமில்லாமல் நான் மாற்றி புதிய வடிவத்தில் அதை உருவாக்கி தந்தேன் அதனை அப்படியே ஏற்றுக்கொண்ட அவர் பார்ப்போரிடமெல்லாம், என்னுடைய திரைக்கதை மற்றும் வசனங்களை சிலாகித்து சொல்வார். அந்த படம் கைவிடப்பட்டதில் இருவரும் சோர்ந்தோம்.. என்றாலும் இருவரும் தளரவில்லை.. மன்னார் வளைகுடாவை முடிந்தவரை மெருகேற்றியிருக்கிறோம்.. மன்னார் வளைகுடாவில் பணியாற்றும்போதும் அவர் என்னுடைய ஆலோசனைகளை மதித்தார். நான் குறிப்பிட்ட ஒன்றிரண்டு கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் புதிதாக அப்படத்தில் சேர்த்ததற்கு தனசேகரனின்நல்லதை ஏற்கும் பண்பே' காரணம். படைப்பை நேசிக்கிறவர்களால் மட்டுமே அது சாத்தியம்..

         மன்னார் வளைகுடாவின் மையக்கரு இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. ஒன்று விளைநிலங்களை மனைகளாக்கும் தற்கால போக்கினை எதிர்த்து தன் குரலை பதிவு செய்கிறது. அனேகமாக தமிழ்த் திரையுலகில் இது முதல் குரலாக இருக்கலாம்.  மற்றொன்று இழந்த நம் கலாச்சாரங்களை, நம் மாண்பை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒரு அயல்நாட்டு கதாபாத்திரம் மூலம் முயற்சித்திருக்கிறோம். அதாவது நம்முடைய பழக்க வழக்கங்களை நமக்கே கற்றுத்தருகிற ஒரு நபராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி நடித்திருக்கிறார். காந்தி திரைப்படம் வந்தபோது விளையாட்டாக ஒருவர் சொன்னார்காந்தியை சுட்டு நாம படமாக்கிட்டோம் ( போட்டோ ), வெள்ளைக்காரன்தான் காந்தியை ஷூட் பண்ணி படமாக்கினான் (சினிமா).” அதுதானே இப்பவும் நடக்கிறது.

         தமிழ் திரையுலகில் நிலவும்  வணிக நெருக்கடிகளை கணக்கில் கொண்டே படம் உருவாகியிருக்கின்றது. எனவே இந்த படம் தலைகீழாக புரட்டும் படமில்லை என்றாலும் இத்தனை நெருக்கடிகளுக்கு இடையில் இயன்றவரை நல்ல விஷயங்களை அடிப்படையாக கொண்ட படம்.

         கஞ்சா கருப்பு இதில் விளைநிலத்தை பணத்துக்காக மனைகளாக்க மாட்டேன் என்ற பிடிவாதமான விவசாயியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது திரையுலக வாழ்வில் இது முக்கியமான திரைப்படமாக அமையும். 

                சந்திரா என்ற புதுமுக நடிகை பெற்றோரால் சிறுவயதிலேயே அயல் நாட்டு தம்பதிக்கு தத்துகொடுக்கப்பட்ட பெண்ணின் வேடம். உண்மையில் அவரும் அவ்வாறாக தத்துக்கொடுக்கப்பட்ட பெண்தான்.
         படபிடிப்பில் இரண்டு தினங்கள் மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. படத்தின் இயக்குனர் தனசேகரன், இணை இயக்குனர் மகேஷ் பெரியசாமி, ஒளிப்பதிவாளர் வெங்கட் , உதவி இயக்குனர்கள் சேரன் , கல்கி , கிருஷ்ண பிரசாத் , சக்தி  ஆகியோர் பிரம்மிக்கத்தக்க அளவில் பணியாற்றியதை பார்க்க முடிந்தது. இரண்டு நிமிடங்கள் வரவேண்டிய காட்சிக்காக இரண்டு மணி நேரம் பேயாய் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாள் படபிடிப்புக்காகவும் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க, ஒரு திருமணத்தை நடத்துவது போல் முன் தயாரிப்புகள் அவசியமாகின்றன. எல்லாவற்றையும் தாண்டி படம் சிறப்பாக, நினைத்தது போல் வந்துவிட்டால் அதற்கிணையாய் வெறொன்றுமில்லை என்று வானம் வரை எகிறி குதிக்க தோன்றும்.. படக்குழுவினர் அப்படியான மகிழ்ச்சியில் திளைப்பதாக சொன்னார்கள். எல்லா தடைகளையும் தாண்டி மன்னார் வளைகுடா வரும் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வேளையில் வலைப்பூ வாசகர்களோடு இந்த இனிமையான செய்தியை பகிர்ந்துகொள்வது மனதுக்கு நிறைவளிக்கிறது.

           திரைப்படம் என்பது ஒரு கடல், அதில் எல்லோரது வியர்வைத் துளிகளும் கலந்தே இருக்கின்றன.. ஆர்ப்பரிக்கும் அலை கால் நனைக்கையில், படும் துளியில் என்னுடையதும் ஒன்று என்ற சிலிர்ப்போடு....

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...