வெள்ளி, 4 மே, 2012

புதிய கடலில் எனது அலை

                                               
                                                              
                                                     மன்னார் வளைகுடா 

                                    கதை திரைக்கதை இயக்கம் : த. தனசேகரன் 

                                              வசனம் : நெய்வேலி பாரதிக்குமார்         

        எல்லா விமர்சகர்களையும் நோக்கி எறியப்படும் எதிர் விமர்சனம் ஒன்றுண்டு. “ சொல்லாதே: செய்து பார்என்பதே அது. ஆனால் அந்தக் கோபம்  சரியானதல்ல என்பதும் உண்மை.  இன்னொரு சொல் வழக்கும் உண்டு செய்யத்தெரிந்தவன் வித்தகன் ஆகிறான். செய்யத்தெரியாதவன் விமர்சகன் ஆகிறான் என்பது. இந்த எள்ளலை ரசிக்கலாம்.ஆனால் கற்றறியாமல் ஒன்றை நேர்த்தியாக, நேர்மையாக விமர்சிக்க முடியாது.

                படைப்பாளியாகவும், விமர்சகனாகவும் இருக்கின்ற சிலர் இரண்டு பக்கமும் உள்ள நியாயங்களை எளிதாக புரிந்து கொள்ள இயலும்.

                உலகத் திரைப்படங்கள் குறித்து பல்வேறு கட்டுரைகளை, வெவ்வேறு இதழ்களில் நான் எழுதி வந்திருக்கிறேன். ஆனால் அவற்றின் நோக்கம் தமிழ் மற்றும் பிற மொழி இந்திய திரைப்படங்களை கீழானவை என்று அறிவிக்கும் வெற்று கூச்சல் மூலம் விளம்பரம் தேடுவதல்ல...

                நான் எல்லோரையும் போல நல்ல திரைப்படங்களின் ரசிகன். என் ரசனைக்கு சிறந்ததெனப்படும் திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறேன் நல்ல புத்தகம் வாசிக்க கிடைத்தால் நண்பனுக்கு மகிழ்வுடன் அளிப்பது போல.. அப்படியான திரைப்படங்கள் வெளிவரும் சூழல், அந்தந்த தேசங்களின் அரசியல் நிலவரங்கள், பொருளாதார சாத்தியக்கூறுகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டே என் விமர்சனக் கட்டுரைகளை படைக்கிறேன். எல்லா தேசங்களிலும் மிக தரமான திரைப்படங்கள் சிலவும், மோசமான திரைப்படங்கள் பலவும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றிலிருந்து நாமும் நமக்கான நல்லத் திரைப்படங்களை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை விதைக்கவே முயற்சிக்கிறேன்.
           நான் முதலில் ஒரு சிறுகதை படைப்பாளி, கவிதைகள் மற்றும் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். அதற்குப்பிறகுதான் விமர்சகன். எனவே இரண்டு தளங்களிலும் இயங்குவது சரி நிகர் மகிழ்வை தரக்கூடிய விஷயம்.. ஏனெனில் ஓன்றை தாக்குவதற்கு மற்றொன்றை ஆயுதமாக பயன்படுத்துவதில்லை.  தர்க்க ரீதியாக சிலரோடு வாதிட்டிருக்கிறேன் அதனையும் சில வருடங்களாக தவிர்த்து வருகிறேன். வாதங்கள் ஒரு போதும் எதிராளியின் நியாயங்களை கணக்கில் கொள்வதே இல்லை... தன் கையிலிருக்கும் ஆயுதத்தை மட்டுமே தீட்டிக்கொண்டிருக்கும் சாணைக்கல் போலத்தான் அவரவர் வாதங்கள்.. எனவே என் விமர்சனங்கள் பெரும்பாலும் ரசனை சார்ந்தவையே..

                இந்த சூழலில் என் படைப்புகளின் களங்களை பல சமயம் வேறு எவரேனும் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதனை விலங்காக கருதாமல் புதிய சிறகுகளாக கருதி அவற்றில் என்னை பொருத்தி பறக்க எத்தனிக்கிறேன். அவை என்னை வெவ்வேறு உலகங்களுக்கு இட்டுச் சென்றுஇருக்கின்றன. அந்த புதிய அனுபவங்களுக்காகவும், நட்புக்காகவும் என் நியாயமான உழைப்பை தந்திருக்கிறேன்.

                அந்த வகையில் எனக்கு கிடைத்த புதிய சிறகுமன்னார் வளைகுடாதிரைப்படத்தின் வசனம் எழுதும் பணி.. இயக்குனர் . தனசேகரன் தமிழின் ஜனரஞ்சகமான இயக்குனர் மாதேஷிடம் உதவி இயக்குனராக பல காலம் பணியாற்றியவர். வாழ்வின் அடிமட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறவர். கடுமையான உழைப்பாளி. தன்னம்பிக்கைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் தாராளமாக தனசேகரனை சொல்லலாம்.

                என்னை என்னுடைய படைப்புகள் வழியாக மட்டுமே அறிந்தவர். என் எழுத்தின் மீது அபாரமான நம்பிக்கையுடையவர்.  அவர் ஏற்கனவேரதம்என்றொரு தலைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று, அதில்  நான்தான் வசனம் எழுதவேண்டும் என்ற மிகப்பெரிய ஆவலில் என்னுடைய இல்லத்திலேயே அதற்கான திரைக்கதை வடிவம் உருவானது. அதற்கான வசனங்களை முழுமையாக எழுதி அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால்  தயாரிப்பாளரின் ஒத்துழையாமையால் அந்த படம் துவக்க நிலையிலேயே நின்றுபோனது.

                அதற்கு சில வருடங்களுக்குப்பிறகு என்னை தொடர்பு கொண்ட தனசேகரன் மன்னார் வளைகுடா என்ற தனது புதிய திரைப்படத்தின் சுருக்கமான திரைக்கதையை உணர்ச்சிகரமாக சொல்லி அதற்கான வசனம் எழுதும் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.. தனசேகரனிடம் எனக்கு பிடித்தமான இரண்டு பண்புகளை நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று அவரதுஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்' மற்றொன்றுதான் ஏற்றுக்கொண்ட விஷயத்தை இன்னார்தான் எனக்கு சொன்னார்' என்று பறை சாற்றும் பண்பு.

              முதன்முதலில் அவர் தனது ரதம் படத்தின் சுருக்கமான திரைக்கதையை எழுதி என்னிடம் காண்பித்தபோது அதிலுள்ள 23 காட்சிகளை தயவு தாட்சண்யமில்லாமல் நான் மாற்றி புதிய வடிவத்தில் அதை உருவாக்கி தந்தேன் அதனை அப்படியே ஏற்றுக்கொண்ட அவர் பார்ப்போரிடமெல்லாம், என்னுடைய திரைக்கதை மற்றும் வசனங்களை சிலாகித்து சொல்வார். அந்த படம் கைவிடப்பட்டதில் இருவரும் சோர்ந்தோம்.. என்றாலும் இருவரும் தளரவில்லை.. மன்னார் வளைகுடாவை முடிந்தவரை மெருகேற்றியிருக்கிறோம்.. மன்னார் வளைகுடாவில் பணியாற்றும்போதும் அவர் என்னுடைய ஆலோசனைகளை மதித்தார். நான் குறிப்பிட்ட ஒன்றிரண்டு கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் புதிதாக அப்படத்தில் சேர்த்ததற்கு தனசேகரனின்நல்லதை ஏற்கும் பண்பே' காரணம். படைப்பை நேசிக்கிறவர்களால் மட்டுமே அது சாத்தியம்..

         மன்னார் வளைகுடாவின் மையக்கரு இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. ஒன்று விளைநிலங்களை மனைகளாக்கும் தற்கால போக்கினை எதிர்த்து தன் குரலை பதிவு செய்கிறது. அனேகமாக தமிழ்த் திரையுலகில் இது முதல் குரலாக இருக்கலாம்.  மற்றொன்று இழந்த நம் கலாச்சாரங்களை, நம் மாண்பை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒரு அயல்நாட்டு கதாபாத்திரம் மூலம் முயற்சித்திருக்கிறோம். அதாவது நம்முடைய பழக்க வழக்கங்களை நமக்கே கற்றுத்தருகிற ஒரு நபராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி நடித்திருக்கிறார். காந்தி திரைப்படம் வந்தபோது விளையாட்டாக ஒருவர் சொன்னார்காந்தியை சுட்டு நாம படமாக்கிட்டோம் ( போட்டோ ), வெள்ளைக்காரன்தான் காந்தியை ஷூட் பண்ணி படமாக்கினான் (சினிமா).” அதுதானே இப்பவும் நடக்கிறது.

         தமிழ் திரையுலகில் நிலவும்  வணிக நெருக்கடிகளை கணக்கில் கொண்டே படம் உருவாகியிருக்கின்றது. எனவே இந்த படம் தலைகீழாக புரட்டும் படமில்லை என்றாலும் இத்தனை நெருக்கடிகளுக்கு இடையில் இயன்றவரை நல்ல விஷயங்களை அடிப்படையாக கொண்ட படம்.

         கஞ்சா கருப்பு இதில் விளைநிலத்தை பணத்துக்காக மனைகளாக்க மாட்டேன் என்ற பிடிவாதமான விவசாயியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது திரையுலக வாழ்வில் இது முக்கியமான திரைப்படமாக அமையும். 

                சந்திரா என்ற புதுமுக நடிகை பெற்றோரால் சிறுவயதிலேயே அயல் நாட்டு தம்பதிக்கு தத்துகொடுக்கப்பட்ட பெண்ணின் வேடம். உண்மையில் அவரும் அவ்வாறாக தத்துக்கொடுக்கப்பட்ட பெண்தான்.
         படபிடிப்பில் இரண்டு தினங்கள் மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. படத்தின் இயக்குனர் தனசேகரன், இணை இயக்குனர் மகேஷ் பெரியசாமி, ஒளிப்பதிவாளர் வெங்கட் , உதவி இயக்குனர்கள் சேரன் , கல்கி , கிருஷ்ண பிரசாத் , சக்தி  ஆகியோர் பிரம்மிக்கத்தக்க அளவில் பணியாற்றியதை பார்க்க முடிந்தது. இரண்டு நிமிடங்கள் வரவேண்டிய காட்சிக்காக இரண்டு மணி நேரம் பேயாய் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாள் படபிடிப்புக்காகவும் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க, ஒரு திருமணத்தை நடத்துவது போல் முன் தயாரிப்புகள் அவசியமாகின்றன. எல்லாவற்றையும் தாண்டி படம் சிறப்பாக, நினைத்தது போல் வந்துவிட்டால் அதற்கிணையாய் வெறொன்றுமில்லை என்று வானம் வரை எகிறி குதிக்க தோன்றும்.. படக்குழுவினர் அப்படியான மகிழ்ச்சியில் திளைப்பதாக சொன்னார்கள். எல்லா தடைகளையும் தாண்டி மன்னார் வளைகுடா வரும் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வேளையில் வலைப்பூ வாசகர்களோடு இந்த இனிமையான செய்தியை பகிர்ந்துகொள்வது மனதுக்கு நிறைவளிக்கிறது.

           திரைப்படம் என்பது ஒரு கடல், அதில் எல்லோரது வியர்வைத் துளிகளும் கலந்தே இருக்கின்றன.. ஆர்ப்பரிக்கும் அலை கால் நனைக்கையில், படும் துளியில் என்னுடையதும் ஒன்று என்ற சிலிர்ப்போடு....

4 கருத்துகள்:

  1. தாமதமாக வந்துவிட்டேன்..மன்னிக்கவும்.
    ஐயா.நலமா ? என்னை மறக்க மாட்டீங்கனு நம்புகிறேன்..

    எத்தனை முறைகள் இதுவரை சொல்லிருக்கேன் என்று ஞாபகம் இல்லை..உண்மையிலேயே தங்களது எழுத்துக்களை வாசிப்பதற்கு பெருமிதம் கொள்கிறேன்..எளிய தமிழில் நான் ரசிக்கும், மதிக்கும் பதிவர் நீங்கள்.

    @@ ஆனால் அதனை விலங்காக கருதாமல் புதிய சிறகுகளாக கருதி அவற்றில் என்னை பொருத்தி பறக்க எத்தனிக்கிறேன்.@@
    என்ன இயல்பான வார்த்தைகள்..ஞாயமான கருத்து..இது ஒன்று எல்லோரிடமும் கட்டாயம் வேண்டும்.இருந்தால் நல்ல தரமான படைப்புகளை நாம் பெற முடியுமென நம்புகிறேன்.

    @@ காந்தியை சுட்டு நாம படமாக்கிட்டோம் (போட்டோ), வெள்ளைக்காரன்தான் காந்தியை ஷூட் பண்ணி படமாக்கினான் (சினிமா) @@
    காந்தி படத்தை அந்த மாமனிதரின் இறந்த நாளான ஜனவரி 30 பார்த்தேன்..பார்த்துவிட்டு மறுநாள் என் அக்கா மற்றும் தாத்தாவிடம் நீங்கள் குறிப்பிட்ட ஏறக்குறைய இதைதான் அவர்களிடம் கூறினேன்.என்ன வருத்தமான ஒன்று..

    நீங்கள் திரைப்படத்தில் பணியாற்றுபவர் என்பதே இப்பொழுதுதான் நான் அறிந்தேன் ஐயா..படம் பார்க்க வேண்டுமே..கட்டாயம் காண்கிறேன்.பார்த்து முடித்த மறு நிமிடம் இங்கு வருகிறேன்..மிக்க நன்றி.

    Cast Away (2000) - திரைப்பார்வை

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி குமரன்.. படம் ஜூன் மாதம்தான் வெளியாகிறது . அதில் என் பங்களிப்பு வசனம் மட்டுமே . ஒரு வசனகர்த்த ஒரு திரைப்படத்தின் ஒட்டு மொத்த போக்கை நிர்ணயிக்கவோ மாற்றவோ முடியாது என்றாலும் வாய்ப்பு கிடைத்த இடங்களில் முடிந்தவரை என்னால் இயன்ற அளவு நல்ல விஷயங்களை தர முயன்றிருக்கிறேன். அவசியம் வெளியானதும் பாருங்கள். உங்கள் திரைப்பார்வை உலக சினிமா தரத்திற்கு பழகியிருக்கும் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் இருக்கின்ற இடத்தில் ஓரளவு சிறப்பாக தர முயன்றிருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. இப்பத்தான் கட்டுரைய வாசித்தேன்.அட்டகாசம். நீங்க சொல்றதை பார்த்தா படம் கண்டிப்பா நல்லா இருக்குமென்றே தோன்றுகிறது.கண்டிப்பா ஜெயிக்கும்.என்னால் முடிஞ்ச அளவுக்கு பப்ளிக்குட்டி பண்றேன்.வெள்ளிவிழா அன்னிக்கு பாத்து எதுனா செய்யுங்க :-) வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ம்.ரா கதையின் அடித்தளம் வலுவானது. அது திரைப்படமாக் எப்படி வந்திருக்கிறது என்பதை திரையில் பார்க்கும் நீங்கள்தான் சொல்லவேண்டும் . பார்த்தபிறகு உங்கள் வாழ்த்துக்களையோ திட்டுக்களையோ அன்புடன் எதிர்பார்க்கிறேன் மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...