ஞாயிறு, 2 ஜூலை, 2017

ஜூலியானோ மெர் காமிஸ்

                       

                                                                         
                                        

                     இரு தேசங்களுக்கு இடையே தீராத பகை இருக்கிறது, இரண்டு தேசத்து மக்களும் வெவ்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் எனில் அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் என்பது ஒரு பொது வரையறைக்குள் அடங்கிவிடும். பிரச்சினை சார்ந்த மக்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்துவிடுவர். ஆனால் அந்த இரண்டு இனத்தவர்களில் பாதிக்கப்பட்ட மக்களை  மனிதாபிமான முறையில் அரவணைக்க முயலுபவர்கள் அந்தந்த இனங்களில் துரோகிகளாகவே சித்தரிக்கப்படுவார்கள். இயக்குனர், நடிகர் ஜூலியானோ மெர் காமிஸ் அப்படித்தான் தவறாகக் கருதப்பட்டு கொல்லப்பட்டார்.
               ஜூலியானோ மெர் காமிஸ் 1958 ஆம் வருடம் மே மாதம் 29 ஆம் தேதி  இஸ்ரேலின் வடமாகாணத்திலுள்ள மிகப்பெரிய நகரமான நாசரேத்தில் பிறந்தவர். இயேசு கிருஸ்துவின் இளமைப்பருவம் நாசரேத்தில்தான் கழிந்தது என்பதால் நாசரேத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. மெர்காமிஸ்-இன் தந்தை சலிபா காமிஸ் பிறப்பால் பாலஸ்தீனியன், இவரது மூதாதையர்கள் கிருத்துவ மதத்தைத் தழுவியவர்கள். சிந்தனையால் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர். சலிபா காமிஸின் வசிப்பிடம் இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. என்றாலும் சலிபாவின் கொள்கை மாறவே இல்லை அவர் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். சலிபா இஸ்ரேலின் குறிப்பிடத்தக்க அறிவுஜீவியாக கருதப்பட்டவர்.
                ஜூலியானோவின் தாய் ஆர்னா காமிஸ் சிறந்த நாடக நடிகை மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர். இளம் வயதில் ஆர்னா இன்றைய இஸ்ரேலை ஆக்ரமித்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக இயங்கி வந்த பால்மா என்கிற ஆயுதக்குழுவில் இடம்பெற்று தீவிரமாக பணியாற்றியவர். போரின் உக்கிரத்தை நேரில் கண்டதாலோ என்னவோ அவரது பிந்தைய காலம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகளில் இயங்க  ஆர்னா காமிஸ் இஸ்ரேல் ஆக்ரமித்தப் பகுதியான ஜெனின்-இல் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக்கொண்டு ஒரு நாடகக்குழுவை நடத்தி வந்தார். ஆர்னா காமிஸ்-இன் பணிகளைப் பாராட்டி அவருக்கு ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாட்டினர் இணைந்து ஏற்படுத்திய வாழும் உரிமைகளுக்கான' சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது மனித உரிமை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் உலகம் முழுக்க தன்னலம் பாராமல் சமூகத்துக்காக இயங்கி வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆர்னாவின் தந்தை ஜிடோன் மெர் ஒரு அறிவியல் விஞ்ஞானி மற்றும்  சமூக சேவகர். 
               இப்படி ஜூலியானோவின் பாரம்பரியம் சமூகத்துக்காக பணியாற்றுகிற, போராடுகிற நீண்ட பின்னணியைக் கொண்டது என்பதால் இயல்பாகவே சமூகத்தின் மீதான அக்கறைக் கொண்டவராகவும், அதிகாரத்துக்கு எதிரான போராளியாகவும் அவரை உருவாக்கியது. ஆர்னா நிர்வகித்த நாடகக்குழு இஸ்ரேல் ஆக்ரமித்தப் பகுதியான ஜெனின் -இல் இயங்கி வந்தது. ஆர்னா இறந்த பிறகு ஜூலியானோ ஃபிரீடம் தியேட்டர் என்ற பெயரில் அம்மாவின் நாடகப் பள்ளியில் படித்த சகாரியா சுபைதியுடன் இணைந்து ஜூலியானோ நடத்தி வந்தார்.
               ஃபிரீடம் தியேட்டர் குழுவில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலியத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இணைந்தே படித்தார்கள். அதோடு இருபாலரும் இணைந்தே நாடகங்களில் நடத்தினர். இது மத அடிப்படைவாதிகளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மறுபுறம் அவர்கள் நடத்திய நாடகங்களின் மையக்கருத்து, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இது இஸ்ரேலிய அதிகார வர்க்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் நாடகப்பள்ளியில் படித்த சிறுவர்கள் ஜெனின் பகுதிகளில் நடந்த இன்ஃபெடிடா என அழைக்கப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டங்களில் தன்னிச்சையாக ஈர்க்கப்பட்டு அதிகார படைகளுக்கு எதிராக கல்வீச்சுக்களில் ஈடுபட்டனர். சகாரியா சுபைதி அப்படியான கல்வீச்சில் சிறுவயதில் ஈடுபட்டு இளம் சிறார்களுக்கான சிறையில் மூன்று முறை அடைக்கப்பட்டவர்.
               சுபைதியின் தாயாரும் அவரது சகோதரரும் அரசு பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர் என்பதால் அவருக்கு இயல்பாகவே அதிகாரத்துக்கு எதிரான மனநிலையுடனே இருந்து வந்தவர். வளர்ந்தபிறகு தன்னை ஒரு ஆயுதப் போராட்டக்குழுவுடன் இணைத்துக் கொண்டார். ஒரு தாக்குதலின் போது தனது காலில் குண்டு பாய்ந்து அறுவை சிகிச்சையால் குறைக்கப்பட்டு அதன் காரணமாக வாழ்நாள் முழுதும் ஒரு கால் குட்டையாக நடக்கும்போது தாங்கி, தாங்கி நடப்பவராகவே இருந்தார். ஆனால் பிற்காலத்தில் அவரது மனநிலை ஆர்னாவால் பக்குவப்பட்டதால் மனம் மாறி தனது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் எண்ணத்தால் ஜூலியானோவுடன் இணைந்து ஃபிரீடம் தியேட்டர் நாடகக்குழுவை நடத்த முன் வந்தார். ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஒரு புறம் அவர் இஸ்ரேலிய படைகளால் சந்தேக கண்ணுடன் கண்காணிக்கப்பட்டார், மறுபுறம் மத அடிப்படைவாதிகளால் வெறுப்புடன் பார்க்கப்பட்டார்.
               சிறுவர்களை தீவிரவாதிகளாக உருவாக்குகிறார்கள் என அரசு அதிகாரம் குற்றம் சாட்டியது, மத அடிப்படைவாதிகள் மதக் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என ஜூலியானவையும் சகாரியாவையும் வறுத்து எடுத்தார்கள். சமூகத்தின் மீதான மெய்யான அக்கறையோடு செயல்பட்ட அவர்கள் இரு பக்கத்திலும் வெறுப்பினை சம்பாதித்தார்கள்.  
                இந்த இடத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையேயான பிரச்சினையை சுருக்கமாக பார்க்கலாம். வரலாற்றை நெருக்கமாக கவனிக்கிறவர்கள், செய்தித்தாள்களை அன்றாடம் தவறாமல் வாசிக்கிறவர்கள் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சினைகள் குறித்து அறிந்திருப்பார்கள். ஜெருசலேம்தான் பாலஸ்தீன இஸ்ரேலிய பிரச்சனைக்கு ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. ஜெருசலேம் நகரம் யூதர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் புனித நகரமாக இருக்கிறது. அங்கிருக்கும் அல் அக்ஸா என்ற பள்ளிவாசல் நபிகள் நாயகம் பாலஸ்தீன பயணத்தின்போது  அங்கு வந்திருந்தார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. அதே சமயம்  அங்குதான் சாலமன் தேவாலயம் இருந்ததாக  சொல்லி யூதர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்கள். யூத பாரம்பரியம் நவீன இஸ்ரேலை, பைபிளில் வரும் மூன்று நாயகர்களில் முதல்வரான , ஆப்ரகாம் மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் உருவான நாடாகக் கருதுகிறது. யூதர்களைப் பொறுத்தவரை, பழைய பாலஸ்தீனத்துக்குத் திரும்புவதை, தங்களுக்கு பைபிளில் உறுதி அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திரும்புவதாக கருதுகிறது.
               இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய யூதர்கள் அனுபவித்த யூதஎதிர்ப்பு நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்று, யூதர்களுக்கு ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு சொந்த நாடொன்றை நிறுவும் நோக்கில் சியோனிச ( Zionism) இயக்கம் உருவானது. அவர்கள் பாலஸ்தீனிய பிராந்தியத்தில் தங்களது தேசத்தை கட்டமைக்க தீர்மானித்தார்கள். அந்தக் காலகட்டத்தில், பாலஸ்தீனப் பிராந்தியம் ஆட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அரபு தேசிய வாதிகளுக்கும் சியோனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதல்கள், யூத மற்றும் அரபு ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான மோதல்களால் வலுப்பெற்றன. ஆட்டோமான் பேரரசு வீழ்ந்தபின், பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், யூத நாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் வலுத்தன.
               பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்குமிடையே பிரித்துத் தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  1948 மே 14ம் தேதி இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாக இந்த முடிவு  காரணமாயிருந்தது. இதற்கடுத்த நாள், எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் பிரிட்டிஷாரின் முந்தையக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல் அரபு-இஸ்ரேலிய யுத்தம் உருவாகக் காரணமாக இருந்தது.
               இந்த மோதலுக்குப் பின்னர், அரபு நாடு என்ற ஒன்றுக்காக ஐநா முதலில் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பு பாதியாகக் குறைக்கப்பட்டது. சுமார் 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் அண்டைநாடுகளுக்கு வெளியேறிவிட்டனர் அல்லது யூதப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
               1967ல் நடந்த ஆறு நாள் போரில்இஸ்ரேல் பெற்ற வெற்றி அது காசா நிலப்பரப்பையும் சினாய் தீபகற்பத்தையும் ஆக்ரமிக்க உதவியது. இவை 1948லிருந்து எகிப்து கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரை ஜோர்டான் கட்டுப்பாட்டில் இருந்தது. கோலான் குன்றுகள் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவை அனைத்தையும் இஸ்ரேல் கைப்பற்றிவிட்டது.
               இந்தப் போரை அடுத்து, 1973ல் ' கிப்பூர்' போர் நடந்தது இதில் எகிப்தும் சிரியாவும், இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்தப் போரில் எகிப்து சினாய் தீபகற்பத்தில் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியது. ( மீதமிருந்த பகுதியை இஸ்ரேல் 1982ல் திருப்பி அளித்துவிட்டது). ஆனால் காசா நிலப்பரப்பையோ அல்லது சிரியாவின் கோலன் குன்றுகளையோ இஸ்ரேலிடமிருந்து பெற முடியவில்லை.
                 1994க்கு பின்னர் திரும்ப ஒப்படைக்கப்பட்ட காசா நிலப்பரப்பில் 2008, 2009,2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது ஆயுத மோதல்கள் நடந்தன.
             

                மேற்குக் கரை (west bank) தற்போது பாலஸ்தீன தேசிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதன் முக்கிய குழு என்பது மதசார்பற்ற ஃபத்தா கட்சி (FATA party) ஆகும்.  பாலஸ்தீன விடுதலை அமைப்பும், இஸ்ரேலும் 1993ல் ஆஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, பாலஸ்தீன விடுதலை அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது. மேலும் அது இஸ்ரேல் நாட்டினையும் அது சார்ந்த நிலப்பகுதிகளில்  அதற்கிருக்கும் உரிமையையும் அங்கீகரித்தது. தற்போது ஹமாஸ் என்ற முக்கிய பாலஸ்தீன இஸ்லாமியவாத அமைப்பு காசா நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பு  பாலஸ்தீன குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் அங்கீகரிக்கவில்லை.
                இப்பொழுதுள்ள மிகவும் சிக்கலான பிரச்சினை, ஜெருசலேத்துக்கு உள்ள  வரலாற்று முக்கியத்துவம்தான். பாலஸ்தீன நிர்வாகம் மற்றும் ஹமாஸ் குழு ஆகிய இரண்டுமே கிழக்கு ஜெருசலேத்தை தங்களது தலைநகராகக் கோருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதை 1967லிருந்து ஆக்ரமித்து வைத்திருக்கிறது. எனவே ஜெருசேலம் யாராவது ஒருவருக்கு விட்டுக் கொடுக்கப்படாத வரை அங்கு பிரச்சினைகள் தீராது. யெருசேலம் என்றால் எபிரேய மொழியில் அமைதியின் உறைவிடம்' என்று பொருளாம். ஆனால் இன்றைக்கு அமைதியிழந்து தவிக்கின்ற இடமாக இருக்கின்றது.
               பிரச்சினைகள் சீறிக்கொண்டிருக்கும் இடமான ஜெனின் -இல் காயம் பட்ட மனதுக்கும் உடலுக்கும் இதமான கருணை உள்ளங்களின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் பணியைத்தான் ஜூலியானோ, அவரின் தாய் ஆர்னா, சகாரியா ஆகியோர் செய்து கொண்டிருந்தனர்.
               ஜூலியானோ தனது வாலிபப் பருவத்தில் கட்டாய இராணுவப் பணியை இஸ்ரேல் படையில் முடிக்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு அவர் தனக்குப் பிடித்தமான நாடகத்துறையில் இறங்கினார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தன. அமெரிக்கப் படமான தி லிட்டில் ட்ரம்மர் கேர்ள்தான் அவர் நடித்த முதல் படம். இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சினைகளை பின்புலமாகக் கொண்டது அந்தத் திரைப்படம். அதற்குப்பிறகு 51 Bar, Wedding Galilie, Kedma, Easther, Kippur உட்பட சுமார் 20 திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த Seat of this sea  என்ற இஸ்ரேலிய படம் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
               பின்னர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி ஃபிரீடம் தியேட்டர் குழுவை சகாரியாவுடன் இணைந்து துவக்கியதிலிருந்து அவருக்கு தொல்லைகளும் தொடங்கின. ஃபிரீடம் தியேட்டர் குழு இயங்கிய இடத்தை பல முறை மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களது நாடகங்களை நடத்த விடாமல் தடுத்தனர். அப்பொழுதுதான் தனது தாயார் ஆர்னா மெர்காமிஸ் எத்தனை எதிர்ப்புகளைத் தாண்டி இத்தகைய பணிகளில் ஈடுபட்டிருப்பார் என்பது ஜூலியானோவுக்குப் புரிந்தது. ஆர்னாவின் சமூக மற்றும் நாடகப்பணிகள், அவற்றுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து Arna's Children என்கிற ஆவணப்படத்தை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனது நண்பர் டேனியல் டேனியல் என்பவரோடு இணைந்து இயக்கினார். அந்தப் படம் பல உண்மைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியது என்பதால் அந்தப் படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டது. மீறி யாருக்கும் தெரியாமல் பொதுப் பார்வையாளர்களுக்கு திரையிட்டார். அது தெரிந்து மெர்காமிஸ் மிரட்டப்பட்டார். திரையிடப்பட்ட இடங்களை பின்னர் தெரிந்து கொண்டு அங்கும் தாக்குதல்கள் நடந்தன. எனவே அந்தப் படத்தை இஸ்ரேல் தாண்டி வெளிநாடுகளுக்கு திரையிடும் முயற்சியில் மெர்காமிஸ் ஈடுபட்டார்.
               Arna's Children வெளிநாடுகளில் பலத்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான ராபர்ட் நீரோ துவக்கி, நடத்திவந்த ட்ரிபெக்கா திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்றது. (ட்ரிபெக்கா அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகருக்கருகே அமைந்துள்ள வனப்புமிக்க இடமாகும். அங்கு ஆண்டு தோறும் ஆவணப்படங்களுக்கான போட்டியும், வெற்றி பெறும் படங்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.)
               அந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் மெர்காமிஸ் நடத்திவந்த நாடகக்குழுவை கலைக்க வேண்டும் என்றும் மிரட்டல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஆனால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதி இளைஞர்களிடம் மெர்காமிஸ்-க்கு ஆதரவுப் பெருகியது. மெர்காமிஸ்  போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் அரபுக் குழந்தைகளுக்கு தொடர்ந்து கலை ஆர்வத்தை வளர்க்கும் பயிற்சியிலும், அவர்களை உள ரீதியாக பண்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுவதிலிருந்து பின் வாங்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். இது ஒரு கலாச்சாரப் போர் என்றும் அறிவித்தார். இதனால் இரண்டு தரப்பிலிருந்தும் எதிர்ப்பினை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
               2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி தொலைக்காட்சிக்காக தனது நாடகக்குழு சிறுவர், சிறுமியர்களை பேட்டி எடுத்து அதனை ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பும் எண்ணத்தில் ஜெனின் -இல் உள்ள தனது நாடகப்பள்ளியில் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு திரும்புகையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
               அவரது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டால் இன்னும் பலத்த எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. அவரது இறுதிச் சடங்கில் இரண்டு தரப்பு இளைஞர்களும் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். எல்லாப் பக்கமும் அவருக்கு எதிரிகள் இருந்ததால் அவரைக் கொன்றது எதிர் அமைப்பினர்தான் என்று சொல்லி எல்லா அமைப்புகளும் தங்களுக்கு எதிரான அமைப்புகளை கைகாட்டிவிட்டு தப்பித்துக்கொள்கின்றன. இன்னமும் அவரைக் கொன்றது எந்தப்பிரிவினர் என்பது தெரியாமல் மர்மம் நீடிக்கிறது. விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கின்றது இருப்பினும் உண்மையான குற்றவாளிகள் எங்கிருக்கிறார்கள், என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.
               மெர்காமிஸ் உச்சரித்த கலாச்சாரப் போர் என்கிற வார்த்தை வலிமை மிக்கது.  எந்த ஆயுதத்தையும் எடுக்காமல் எதிரிகளை நடுங்கவைத்தது. பொதுவாக கலை, இலக்கியம் ஆகியன ஒவ்வொரு தேசத்திலும் மௌனப் புரட்சிகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் வீச்சை மெர்காமிஸ் போன்ற மெய்யான கலைஞனின் மரணம்தான் வரலாற்றில் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது.
                 

                                                         

செசில் வில்லியம்ஸ் (தென்னாப்பிரிக்கா)




               1962 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5 -ந்தேதி தென்னாப்பிரிக்காவின் க்வாசுலு நடால் மாகாணத்தில் ஹோவிக் நகரத்தை நோக்கி  R 103 சாலை வழியே அந்த ஆஸ்டின் கார் சென்றுகொண்டிருந்தது. R103 சாலை ஜோஹன்னஸ்பர்க்கையும் தென்னாப்பிரிக்காவின் மற்றொரு முக்கிய நகரான டர்பன் -ஐயும் இணைக்கக் கூடியது. செடிரா என்கிற மிகச்சிறிய ஊரைக் கடந்து ஹோவிக் நகரை அடையும் போது, தென்னாப்பிரிக்க காவல்துறையின் ஃபோர்ட் V8 கார், ஆஸ்டினை முந்திச் சென்று, அந்தக் காரை வழிமறித்து நின்றது.
           ஃபோர்ட் காரிலிருந்து இறங்கிய காவல்துறை சார்ஜண்ட் வோர்ஸ்டர், ஆஸ்டினை நெருங்கி காரில் அமர்ந்திருந்த கறுப்பு நிற மனிதனை நெருங்கி,
                              “ உங்கள் பெயர் என்ன?” எனக் கேட்கிறார்
                              “ என்னுடைய பெயர்.. டேவிட் மோட்ஸமாய்
                              “ எங்கே உங்களது பாஸ்போர்ட்?”
                              “ நான் வெளிநாடு செல்லவில்லை..
                              “மிஸ்டர், உங்கள் பெயர் நெல்சன் மண்டேலா என்பது எங்களுக்குத் தெரியும்.. நீங்கள் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி.. நீங்கள் இந்த தேசத்தைவிட்டு சட்ட விரோதமாக தப்பிச்செல்கிறீர்கள்.. ஆகவே உங்களை கைது செய்கிறோம்.
               மண்டேலா தப்பிக்கவோ அல்லது அவர்களை எதிர்த்துப் போராடவோ முயற்சி செய்யவில்லை. துப்பாக்கியோடு மிக அருகில் மற்றொரு காவல்துறை சார்ஜண்ட் நின்றிருந்தார். ஒருவேளை மண்டேலா ஏதாவது முரண்டு பண்ணினால் அவர்கள் சுடத் தயங்கமாட்டார்கள் என்பது நன்றாக புரிந்தது. அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தான் மட்டுமல்ல தனக்காக மாறுவேடமிட்டு தன்னைக் காப்பாற்றத் துணை வரும் செசில் வில்லியம்ஸ்- சும் கொல்லப்படுவார் என்பதால் பொறுமை காத்தார். மண்டேலாவும், செசில் வில்லியம்ஸ்சும் கைது செய்யப்பட்டனர். இந்த கைதின்போதுதான் மண்டேலா 27 ஆண்டு சிறை வாசம் அனுபவிக்க வேண்டியிருந்தது. தென்னாப்பிரிக்காவின் வரலாற்றையும், மண்டேலாவின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட இந்த சம்பவத்தில் மண்டேலாவுடன் இருந்த நாடகக்கலைஞர் செசில் வில்லியம்ஸ் பற்றி அதிகம் பேர் அறிந்திருக்க மாட்டார்கள். செசில் எத்தனை பெரிய ஆபத்தான காரியத்தை செய்துகொண்டிருந்தார் என்பதும் பலருக்கும் தெரியாது.
               மண்டேலாவை ஒரு தீவிரவாதிபோல சித்தரித்து தென்னாப்பிரிக்க காவல்துறை அவரை சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்த நேரம் அது. மண்டேலா தான் சார்ந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும், அதன் ஆயுதப் போராட்டப் பிரிவான உம்காண்டோ வே சிசுவே ( தேசத்தின் ஈட்டி) வின் வீரர்களையும் ரகசியமாக சந்திக்க வேண்டியிருந்தது. காவல்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு, தென்னாப்பிரிக்கா முழுக்க செல்ல வேண்டியிருந்தது. செசில் வில்லியம்ஸ்தான் மண்டேலாவை பத்திரமாக மிகத்துணிச்சலுடன் ரகசியமாக தன்னோடு அவரை அழைத்துச் சென்றார். செசில் வில்லியம்ஸ் ஒரு வெள்ளைக்காரர் என்பதால் அவரது காரை அதிகம் கவனிக்க மாட்டார்கள்.
               செசில் வில்லியம்ஸ் பற்றியும் அவர் பங்கெடுத்த துணிச்சலான காரியங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு முன் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான தருணமான ஆயுதப் போராட்ட வழியை அவர்கள் தேர்ந்தெடுத்த சூழல் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
         தென்னாப்பிரிக்காவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்திய போது அவர்களின் எதேச்சதிகார ஆட்சியின் சட்டங்கள் அனைத்தும் நிற வெறிக்கு தூபம் போடுவது போலத்தான் இருந்தன. அதில் மிக முக்கியமானதும் கொடூரமானதுமான பாஸ் லா (Pass Law)  1797-லேயே கொண்டுவரப்பட்டது.
               அந்தச் சட்டத்தின்படி கறுப்பர் இன மக்களுக்கென்று தனித்தனியே கடவுச் சீட்டு  வழங்கப்பட்டது. அந்த சீட்டு இல்லாமல் கறுப்பர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அந்தக் கடவுச் சீட்டை எப்பொழுது வேண்டுமானாலும் காவல்துறை ஆய்வு செய்யும், அந்தக் கடவுச் சீட்டும் சில இடங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. மீறினால் சட்ட விரோதம் என கைது செய்யப்படுவார்கள்.
    ANC  எனப்படும் தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கம் துவங்கப்பட்டப்பிறகு ஏற்பட்ட எழுச்சியில் அந்த கடவுச்சீட்டு முறையை கறுப்பர் இன மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அதன் ஒரு பகுதியாக 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி ஷார்ப்வில்லி என்னும் இடத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட கறுப்பனர் இன மக்கள் கடவுச் சீட்டு இல்லாமல் வெளியே வருவோம் என்கிற கோஷத்தோடு, ஷார்ப்வில்லி காவல் நிலையம் முன்பாக கூடினர். கூட்டத்தை கலைப்பதாகக் கூறி வெள்ளையர் அரசு காவல்துறை அவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டது. 69 பேர் இந்த சம்பவத்தின்போது பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தென்னாப்பிரிக்க வரலாற்றில் துயர்மிகு சம்பவமாக கருதப்பட்ட ஷார்ப்வில்லி படுகொலை நடந்த மார்ச் 21 ஆம் நாளைத்தான் விடுதலைக்குப் பிந்திய தென்னாப்பிரிக்க அரசு மனித உரிமை தினமாக இப்பொழுது அனுசரித்துவருகிறது.
               ஷார்ப்வில்லி சம்பவத்திற்கு முன்புவரை ANC இயக்கம் அறப்போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகுதான் மண்டேலாவும் இன்னுமுள்ள  துணிச்சல் மிக்க இளைஞர்களும் கூடி தேசத்தின் ஈட்டி என்னும் பொருள்படும் உம்காண்டோ வே சிசுலுவே என்னும் ஆயுதப்போராட்டப் பிரிவை ANC இயக்கத்துக்கு உள்ளேயே ஆரம்பித்தார்கள். இனி சாத்வீகமாக ஆங்கிலேயே அரசுடன் பேசிப் பயனில்லை, ஆயுதங்கலை கையில் எடுத்தால்தான் அவர்கள் பணிவார்கள் என அவர்கள் உறுதியாக நம்பினார்கள். MK  என்னும் ரகசிய பெயரை அந்தப் பிரிவுக்கு சுருக்கமாக வைத்துக்கொண்டு அவர்கள் கொரில்லா மூறை தாக்குதல்களை ஆங்காங்கே அவர்கள் நடத்தத் தொடங்கினார்கள்.
               தாக்குதலின் ஒரு பகுதியாக 1961 ஆம் வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி ஒரு தாக்குதலை திட்டமிட்டு நடத்தி அன்றைய தென்னாப்பிரிக்க அரசை திகைக்க வைத்தனர். அந்த தாக்குதலை முன்னின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு மண்டேலா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மண்டேலா தலைமறைவானதுடன்  அரசாங்கத்துக்கு தெரியாமல் எத்தியோப்பியாவுக்கு சென்றார்.  எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் நடந்த பசிபிக் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க விடுதலை மாநாட்டிலும் பங்கெடுத்தார். தொடர்ந்து அவர் எகிப்து, மொராக்கோ, கீனியா, சியாரா லியான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஆயுதப்போராட்டத்துக்கான நிதியை திரட்டினார். மீண்டும் எத்தியோப்பியா வந்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டார்.
               எத்தியோப்பியாவிலிருந்து மறுபடி தென்னாப்பிரிக்கா திரும்பிய மண்டேலா இயக்கத் தோழர்களை சந்தித்து அடுத்தக்கட்ட போராட்டங்களைப்பற்றி திட்டமிட வேண்டியிருந்தது. அதற்காக தென்னாப்பிரிக்க நகரங்களிடையே பயணிக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில்தான் ANC இயக்கத்தின் உறுப்பினரும் கறுப்பர் இன விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த செசில் வில்லியம்ஸ் ஒரு யோசனையை தெரிவித்தார். அதன்படி செசில் வெள்ளைக்கார செல்வந்தர் போலவும், மண்டேலா அவரது ஓட்டுனர் போலவும்  மாறு வேடமிட்டு  வில்லியம்ஸ் -இன் புதிய காரில் தேவைப்படும் இடங்களுக்குச் செல்வது என முடிவெடுத்தார்கள். இந்த திட்டத்தின் படி இருவரும் பயணித்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மண்டேலா அனைவரையும் சந்தித்து வந்தார். ஆகஸ்ட் மாதம் 5 -ந்தேதி அந்த சம்பவம் நடைபெறும்வரை இந்த நாடகம் சிக்கல் இல்லாமல் நடக்க வில்லியம்ஸ்-இன் பங்கு குறிப்பிடத்தக்கது.
               செசில் வில்லியம்ஸ் இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால்ட் என்னும் நகரில் 1909 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்த அவர் 1929 ஆம் வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு ஆசிரியர் பணிக்காக வந்தார். ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ல எட்வர்ட் பள்ளியில்  ஆங்கில ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.
             இயல்பிலேயே மனிதாபிமானமும். தேசப்பற்றும் மிக்க வில்லியம்ஸ் தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் மனசாட்சிப்படியே இயங்கிவந்தார். நிறவெறி தாண்டவமாடிய தென்னாப்பிரிக்காவில் அவர் கறுப்பர் இன மாணவர்கள் மீது பரிவோடு இருந்தார். பள்ளிகளில் அவர் நடத்திய கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் யாவிலும் கறுப்பர் இன மாணவர்கள் பங்குபெறும் வகையிலேயே அமைத்தவர். அவரது நாடகங்கள் சக மனிதர்களை நேசிப்பதைப் பற்றியே இருந்தன. இதன் காரணமாக அவர் பல பள்ளிகள் இடம் மாற வேண்டியிருந்தது.
               இரண்டாம் உலகப்போர் சமயம் அவர் ஆசிரியர் பணியை உதறிவிட்டு தென்னாப்பிரிக்க கடற்படையின் தகவல் தொடர்புப் பிரிவில் பணியாற்றினார். 1940-இல் அவர் அந்தப்பணியிலிருந்து விடுபட்டு மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பியபோது, கறுப்பர்களின் நிலை மிகவும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தது. அந்த சமயம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டச் சட்டம் ஒன்று கறுப்பர்களின் உரிமைகளை முழுமையாக பறிப்பதாக இருந்தது. வில்லியம்ஸ் அச்சட்டத்தினை எதிர்த்து தைரியமாக குரல் கொடுத்தார். ஸ்பிரிங்போக் லெஜின் என்கிற கட்சியை ஆங்கிலேயே அரசுக்கு எதிராகத் துவங்கினார். பாசிச சட்டங்களுக்கு எதிரான துணிச்சலான முதல் குரல் என வில்லியம்ஸ்-இன் இயக்க முழக்கங்களைப் பற்றி தென்னாப்பிரிக்க வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
               இயக்கத்தின் கொள்கைகளை பரப்பும் விதமாகவும் தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலை உணர்வுகளை தட்டி எழுப்பும் விதமாகவும் நாடகங்களை உருவாக்கி  வில்லியம்ஸ் நாடெங்கும் நடத்துவங்கினார். அவரது நாடகங்களில் நடிப்பவர்களும், நடத்துபவர்களும் மிரட்டப்பட்டனர். இங்கிலாந்திலிருந்து புகழ்பெற்ற நாடக நடிகைகள் குவான் டேவிஸ் மற்றும் மார்தா வெனி ஆகியோரை அழைத்து வந்து நாடகங்களை தொடர்ந்து தடைபடாமல் நடத்தினார். வில்லியம்ஸின் கிம்பர்லி ட்ரெயின் என்னும் நாடகம் இன்றைக்கும் தென்னாப்பிரிக்க நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாடகமாக கருதப்படுகிறது. ஒரு வெள்ளைக்கார இளைஞனுக்கும், கறுப்பர் இன பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஆத்மார்த்தமான காதலையும், அதன் வலிமையையும், அதனூடே தென்னாப்பிரிக்க அரசின் நிறவெறியையும் புலப்படுத்தும் கலைவடிவமாக அந்த நாடகம் விளங்கியது.
              

               அவரது நாடகத்தில் நடித்தால் கறுப்பர்களுக்கு தண்டனை, வெள்ளையர்களுக்கு எச்சரிக்கை என்ற இருவேறு நிலை இருந்ததால், வெள்ளை இளைஞர்களுக்கு கறுப்பர் போல ஒப்பனை செய்து நடிக்க வைத்தார். பல சமயம் நடிகர்கள் மாறுவார்கள். ஆனால் நாடகம் மாறாது. கிட்டத்தட்ட நூறு முறைகளுக்கு மேல் அரசாங்கத்தின் அச்சுறுத்தலையும் மீறி நெருக்கடியான அந்த காலக் கட்டத்தில் அந்த நாடகம் நடத்தப்பட்டது பெரும் சாதனைதான் என்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். அவர்களை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது.
               ANC இயக்கம் துவங்கப்பட்ட போது தனது அரசியல் இயக்கத்தை அதனோடு இணைத்துக்கொண்டார். ANC இயக்கத்தின் ஆயுதக்குழுவான உம்காண்டோ வே சிசுலுவேவின் தீவிர உறுப்பினராகவும் ஆனார். அதன் தொடர்ச்சியாகத்தான் மண்டேலாவை அழைத்துச் செல்லும் பணியை தானே முன்வந்து ஏற்றுக்கொண்டார்.       மண்டேலாவுடன் கைதான வில்லியம்ஸ் அடுத்த நாளே விடுதலை செய்யப்பட்டார் என்றாலும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
          வில்லியம்ஸ்-ஐ யாரும் சந்திக்கக்கூடாது, அவரது நாடகங்களை எங்கும் நடத்தக்கூடாது, அவரைப்பற்றிய செய்திகளை பத்திரிகைகள் வெளியிடக்கூடாது என ஏகப்பட்ட கூடாதுகளை அவருக்காக ஆங்கிலேய அரசு நிபந்தனைகளாக விதித்தது. ஆனால் வில்லியம்ஸ் எப்படியோ ஆங்கிலேய காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அங்கிருந்து தப்பி தனது ஸ்காட்லாந்து காதலியோடு சேர்ந்துவிட்டார். ஆனால் மறுபடி அவர் தென்னாப்பிரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவரது எஞ்சிய காலம் நாடகத்துறையோடு கழிந்துவிட்டது. 1979-இல் அவர் மரணமடைந்தார்.
               மண்டேலாவும், வில்லியம்ஸ்-சும் கைதான ஹோவிக் சாலை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறிவிட்டது. 2012-இல் ஆகஸ்ட் 5-ந்தேதி மண்டேலா கைதான 50 ஆம் வருட நினைவு நாளாக தென்னாப்பிரிக்க மக்கள் கொண்டாடினர். அங்கு உயரமான மண்டேலாவின் இரும்புச்சிலையை நிறுவி உள்ளார்கள். அந்தக் கைதுக்குப்பிறகுதான் மண்டேலா மீண்டும் அறவழிப்போராட்டத்துக்குத் திரும்பினார்.
           மண்டேலா தனது தி லாங் வாக் டூ ஃபிரீடம் என்னும் சுயசரிதையில் வில்லியம்ஸோடு பயணித்த சாகச அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார். வில்லியம்ஸ் என்னும் நாடகக்கலைஞனுடைய கலையாற்றல் மண்டேலாவின் போராட்ட வாழ்விலும், தென்னாப்பிரிக்க வரலாற்றிலும் மிக முக்கியமானது என்பதால்தான், அவரைப்பற்றி  “The man who drove with mandela” என்னும் ஆவணப்படத்தை இயக்குனர் க்ரேட்டா ஷில்லர் உருவாக்கினார். அந்த ஆவணப்படத்திற்கு 1999 இல் பெர்லின் உலகப்பட விழாவில் விருது கிடைத்தது. 50க்கும் மேற்பட்ட படவிழாக்களில் அப்படம் திரையிடப்பட்டது. மண்டேலாவின் மிக நீண்ட சுதந்திர வேட்கை பயணத்தில் வில்லியம்சின் துணிச்சல் மிக்க துணை மதிப்பு மிக்கது.      
                    


               

சனி, 28 ஜனவரி, 2017

ஷின் சாங் ஓக் ( தென் கொரியா)



            ஷின் சாங் ஓக் ( தென் கொரியா)


      சிலர் பிறக்கும்போதே கலகக்காரர்களாகப் பிறக்கிறார்கள். சமூகத்தின் சூழல் ஒரு சிலரை கலகக்காரர்களாக உருவாக்குகிறது. இன்னும் ஒரு சிலரை இந்த உலகம் கலகம் செய்யத்தள்ளுகிறது. இந்த மூன்றாவது பிரிவைச் சேர்ந்தவர்தான் தென் கொரியாவில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஷின் சாங் ஓக். தென் கொரியா ஜப்பானின் ஆளுமையிலிருந்து விடுதலைப் பெற்ற பிறகு தயாரான முதல் திரைப்படமான  Viva Freedom இல் தயாரிப்பு நிர்வாகியாக துவங்கிய ஷின்னின் திரைப்பட வாழ்க்கை அவர் 2006 ஆம் ஆண்டு இறக்கும் வரை இயக்குனராக, தயாரிப்பாளராக பல பரிமாணங்களில் தொடர்ந்தது.
      கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஷின், 300க்கும் அதிகமான படங்களை தனது ஷின் ஸ்டூடியோ மூலம் தயாரித்தவர். வர்த்தக ரீதியாகவும் கலாப்பூர்வமாகவும் அவரது படங்கள் அமைந்தன. கொரியப் படங்களை ஷின் சினிமா அவரல்லாத சினிமா என்று இரண்டாகப் பிரித்துவிடலாம் என கொரிய சினிமா விமர்சகர்கள் வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு.  The Evil Night, Prince Yeonsan, To the last day, Rice, 3 Ninjas Knuckle up, Pulgasari,  A Flower in Hell, Phantom queen  ஆகியன அவரது குறிப்பிடத்தக்க படங்களில் சில.. கொரிய சினிமாவின் பேரரசன் எனப் புகழப்பட்டவர் ஷின். அவரது காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த ஸோய் யூன் லீயை மணந்தார். ஸோய் யூன் ஹி 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். Sogum படத்தில் நடித்ததற்காக மாஸ்கோ திரைப்பட விழாவில் சிறந்த நடிகை பட்டம் பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மனக்கசப்புக் காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
      1952இல் துவங்கி 1970 வரை கொரிய திரைப்பட உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் ஷின். தென்கொரியாவின் ஆட்சி அதிகாரத்தை இராணுவ ஜெனரல் பார்க் சங் லீ பிடித்தப் பிறகு சட்டத்திட்டங்கள் கெடுபிடியாகின. திரைப்படத் தணிக்கைத் துறையில் அரசின் தலையீடுகள் துவங்கின. சுதந்திரமான திரைப்பட இயக்கத்தை கொள்கையாகக் கொண்டிருந்த ஷின்னின் திரைப்படங்கள் பலகடுமையான தணிக்கைக்கு ஆளாயின. இதனால் தனது அதிருப்தியை வெளிப்படையாக சொல்லத் தொடங்கினார் ஷின். அரசு ஷின்னின் படத் தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்டூடியோக்களை மூடச்செய்தது.
      1977ஆண்டின் இறுதி நாட்களில் ஷின்னின் மனைவி ஸோய் யூன் ஹி யை ஹாங்காங்க்- ஐச் சேர்ந்த  வாங்க் டாங் யில் என்பவர் சந்தித்தார். தான் ஹாங்காக்கில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன் சார்பாக ஒரு படத்தை இயக்கித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்காக ஸோய் யூன் ஹி எதிர்பார்க்காத, நம்பவே முடியாத ஒரு தொகையைத் தருவதாக உறுதி அளித்தார். ஸோய் யூன் ஹி விவாகரத்து பெற்றிருந்தாலும் ஷின்னின் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார். ஷின்னின் திரைப்பட நிறுவனத்தின் அலுவலகம் ஒன்று ஹாங்காக்கிலும் இருந்தது. எனவே ஷின்னிடம் இது குறித்து பேசிவிட்டு சொல்வதாக வாக்களித்தார் ஸோய் யூன் ஹி.
      ஷின்னிடம் இது குறித்து ஸோய் யூன் ஹி விவாதித்த போது ஷின்னுக்கு தாங்கமுடியாத ஆச்சரியம். கூடவே கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. தென்கொரியாவின் நம்பர் ஒன் இயக்குனர் தான்தான் தம்மிடம் கேட்காமல், ஒரு நடிகையாக மட்டும் பிரகாசித்த ஸோய் யூன் ஹி-க்கு அந்த வாய்ப்பு வந்ததை ஷின்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
      இருப்பினும் யூன் லீ வந்த வாய்ப்பை விடுவதாயில்லை. 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹாங்காக் பிரயாணமானார். வாங்க் அவருக்கு இரத்தினக் கம்பள வரவேற்பினைத் தந்தான். சொகுசான தங்கும் விடுதி, விருந்து, பரிசுப்பொருட்கள் என அவரைக் கொண்டாடினான். இரண்டு நாட்கள் அவனது உபசரிப்பில் திளைத்த யூன் லீ தான் வந்த வேலையைக் கூட மறந்து போனார். இடையில் ஷின்னின் அலுவலகம் சென்று அங்கு கம்பெனியின் நிர்வாகியை சந்தித்தார்.  மூன்றாவது நாள் வாங்க் அனுப்பியதாக லீ சாங் ஹீ என்னும் பெண்மணி தனது 12 வயது மகளுடன் வந்து யூன் லீயை சந்தித்தார். ஸோய் யூன் ஹி யை வானளாவப் புகழ்ந்தார். இந்த சந்திப்புதான் ஸோய் யூன் ஹி மற்றும் ஷின்னின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. சந்தித்த ஒரே நாளில் இருவரும் ரொம்பவும் நெருங்கிப்பழகிய தோழிகள் போல் ஆகினர். அடுத்த நாளும் மகளுடன் வந்த அந்தப் பெண் ஸோய் யூன் ஹியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு யூன் ஹி கிளம்பிய அந்த நொடியிலிருந்து யூன் ஹி மற்றும் ஷின்னின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு திகில் திரைப்படத்தின் திரைக்கதைக்கு இணையானவை. ஒரு வாடகைக்காரில் மூவரும் கிளம்பினார். செல்கிற வழியில் Repulse Bay என்கிற கடற்கரை அருகே சென்றதும் லீ சாங் திடீரென காரை நிறுத்தச் சொன்னாள். ஸோய் யூன் ஹியை இறங்குமாறு கேட்டுக்கொண்டாள். காரை திருப்பி அனுப்பியும் விட்டாள்.
      எதற்காக இங்கே இறங்கச் சொன்னீர்கள்?”
      இங்கே ஒருவரை சந்திக்கிறோம்
      முன்னரே நீங்கள் சொல்லவில்லையே.. நான் மாலை ஒரு விருந்துக்குச் செல்லவேண்டும்
      அதற்குள் கிளம்பிவிடலாம்.. நேரம் இருக்கிறது
      அந்தக் கடற்கரை போதைமருந்து கும்பல்களுக்கும், வழிப்பறிச் செயல்களுக்கும் பெயர் பெற்றது. Repulse Bay  என்ற பெயர் கூட அது ஆபத்தான இடம் என்னும் காரணத்தால் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்ட பெயர் பின்னாளில் நிலைத்துவிட்டது.
      அப்பொழுது நீண்ட தலைமுடியுடன் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அலைகளினூடே பறந்தபடி வந்தனர். ஒரு மோட்டார் படகு கடலில் அவர்களை நோக்கி வந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஸோய் யூன் ஹி- யை படகில் ஏறுமாறு கூறினர். யூன் ஹிமறுத்தபோது வலுக்கட்டாயமாக அதில் ஏற்றினர். அவ்வளவுதான் யூன் ஹி எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற தகவலே இல்லை. தென்கொரியாவெங்கும் யூன் ஹி காணாமல் போய்விட்டார் என்றுதான் தெரியுமே தவிர என்ன நடந்தது என்று தெரியாது.
      ஷின் சாங் ஓக் நிலைமையோ பரிதாபகரமாகிவிட்டது. ஏற்கனவே அவர் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்துவிட்டதால் லீ காணாமல் போனதற்கும் இவருக்கும் சம்மந்தம் உண்டோ என்ற பேச்சு பரவலாக கிளம்பிவிட்டது. அதுவுமல்லாமல் ஸோய் ஹாங்காக்கில் ஷின்னின் அலுவலகம் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. அப்போதைய தென்கொரிய அரசாங்கத்துடன் ஷின்னுக்கு நல்ல உறவில்லை எனவே ஷின்னுக்கு எதிரான வதந்திகளை அவர்கள் ரசித்தனர் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆக ஷின் தான் இப்பொழுது ஸோய் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
      ஷின் ஒரு திரைப்படக் கதாநாயகன்  போல ஸோய்யைக் கண்டுபிடிக்க ஹாங்காக் கிளம்பிவிட்டார். முதலில் அங்குள்ள தன் அலுவலகம் சென்று விசாரித்தார். ஏற்கனவே தென்கொரிய அரசாங்கத்தால் அது செயல்படவிடாமல் முடக்கப்பட்டதால், அங்குள்ள நிர்வாகிகள் பெயரளவுக்குத்தான் இயங்கிவந்தனர். அவர்களுக்கு ஸோய் தங்கியிருந்த ஹோட்டலில் என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
      ஹோட்டலில் அவர் யாருடனோ வாடகைக்காரில் சென்றதுவரை சொன்னார்கள். ஷின் அதே ஹோட்டலில் ஏதாவது தகவல் கிடைக்குமா என்ற தேடலுடன் தங்கியிருந்தார். ஒரு நாள் லீ Repulse Bay பக்கம் சென்றதை பார்த்ததாகக் கூறி சிலர் ஷின்னிடம் கூறினார்கள். அவர்களுடன் காரில் சென்றார். லீ கடத்தப்பட்ட அன்று என்ன நடந்ததோ அதுவே மறுபடி நடந்தது.  இந்த முறை ஷின்னிடம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கவில்லை. மயக்கமருந்து தூவிய சிறிய கர்ச்சீஃப்பை அவரது மூக்கில் வைத்து படகில் ஏற்றிவிட்டனர்.
      ஷின்னை அழைத்துச் சென்ற இடத்தில் டியர் லீடர்' என வந்தவர்களால் அழைக்கப்பட்ட கிம் ஜோங் யில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். வடகொரியாவின் அடுத்த அதிபர் என கருதப்பட்ட கிம் புன்னகையுடன் வடகொரியாவுக்கு வருகைத் தந்திருக்கும் ஷின் சாங் ஒக்கை அன்புடன் அழைக்கிறேன்என்றார். அப்பொழுதுதான் ஷின் தான் வந்திருப்பது வடகொரியாவின் தலைநகர் பியான்யோங் என்பது புரிந்தது. சர்வாதிகார நாடான வடகொரியாவில் கிம் மற்றும் அவரது தந்தை சங் யில் வைத்ததுதான் சட்டம். இரும்புத்திரை கொண்ட நாடு என்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பது வெளி உலகுக்குத் தெரியாது.

      கிம் ஐ பார்த்து கேள்வி கேட்கக்கூட யாருக்கும் தைரியம் அங்கு கிடையாது. அவராக பார்த்து என்ன சொல்கிறாரோ அதுதான்.. அவ்வளவுதான்.. ஷின் எதுவும் பேசாமல் இருந்தார். வடகொரியாவில் தயாரிக்கப்படும் படங்கள் அத்தனை சிறப்பானதாய் இல்லை.. உங்கள் திரைப்படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. எனவே நீங்கள் எங்கள் நாட்டிலேயே தங்கியிருந்து சில படங்களை இயக்கவேண்டும்என்றார் கிம். மறுபேச்சு பேசினால் என்ன நடக்கும் என்பதை எல்லாம் சொல்லித்தான் அங்கு ஷின்னை அழைத்து வந்திருந்தார்கள். 
      கிம் தனது பிரம்மாண்டமான வீடியோ லைப்ரரிக்கு ஷின்னை அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 19000 உலகத்திரைப்பட வீடியோ கேசட்டுகள் இருந்தன. சில படச்சுருள்களும் இருந்தன. ஷின்னின் அனைத்துப் படங்களின் வீடியோ கேசட்டுகளும் இருந்தன. அங்குதான் Tale of Shimchoeng  என்ற ஷின்னின் படச்சுருள்களும் இருந்தன. ஷின் அந்தப் படத்தின் பிலிம்களை சப்டைட்டில் போடுவதற்காக ஹாங்காங் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது ஹாங்காங் அலுவலகத்துக்கு செல்லாமலேயே அது தொலைந்துவிட்டது. அந்த படச்சுருள்கள் எப்படி கிம்மின் லைப்ரரிக்கு வந்தது என்பது ஆச்சர்யமாக இருந்தது ஷின்னுக்கு. கிம்மின் அதிகார வரம்பு எல்லைத் தாண்டியது என்பது ஷின்னுக்கு புரிந்தது.
      ஷின்னுக்கு உரிய மரியாதை தந்து அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் 24 மணி நேரமும் கண்காணிக்கப் பட்டபடியே இருந்தார். யாரிடமும் எதுவும் பேசமுடியாது. ஏனெனில் அரசாங்க உத்தரவு இல்லாமல் அவர்கள் தண்ணீர் குடிக்கக்கூட வாய்த் திறக்கப் பயந்தார்கள். ஸோய் எங்கிருக்கிறார் என்று ஒரு தகவலும் இல்லை. ஒருவேளை அவர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சினார். எப்படியாவது அங்கிருந்து தப்ப வேண்டும் என நினைத்துக்கொண்டார். அதுவரை கிம் சொன்னபடி திரைப்படங்களை உருவாக்கும் பணியில் இருப்பது என்று முடிவு செய்தார்.
      ஒரு நாள் அவர் திரைப்பட வேலையாக காரில் சென்று கொண்டிருந்தார். அருகில் அரசாங்க காவல் அதிகாரி. கடைத்தெருவில் ஏதோ வாங்குவதற்காக இறங்கியவர். சட்டென தப்பிக்கும் முயற்சியில் நடக்கத் துவங்கினார். ஆனால் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் அரசாங்க அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என்ற விஷயம் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. மூன்றாவது சோதனைச் சாவடியில் அவர் மாட்டிக்கொண்டார். அவ்வளவுதான் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார்.
      ஒரு வகை புல், கொஞ்சம் அரிசி சோறு, கொஞ்சம் உப்பு அவ்வளவுதான் அவருக்கான உணவு. சிறை அதிகாரிகளிடம் முழந்தாளிட்டபடி, தலையை குனிந்து கொண்டுதான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவேண்டும். கடுமையான தனிமைச் சிறை அவருக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. சிறையில் வடகொரியாவின் வீரம், வரலாறு இவற்றை எல்லாம் படிக்கச் சொன்னார்கள். சில சமயம் சக கைதிகளுக்கு வகுப்பெடுத்தார்.
      ரொம்ப நல்ல பிள்ளையாக இருக்கிறார் என்பது தெரிந்து மீண்டும் அவரை கிம் சந்திக்க அழைத்தார். இந்த முறை கண்டிப்பாக தப்பிக்க முயற்சிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியின் பேரில் அவர் திரைப்பட வேலைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டார்.
      வடகொரியாவை பொறுத்தவரை கிம்மின் ஆலோசனை பெறாமல் ஒரு திரைக்கதை கூட அங்கு உருவாகாது. ஆனால் ஷின் சுதந்திரமாக படங்களை இயக்க அனுமதிக்கப்பட்டார். ஷின் கேட்ட அத்தனை உதவிகளும் தரப்பட்டன. அங்கிருந்த போதுதான் அவரது திரைப்பட வாழ்நாளின் மிகச்சிரந்த படம் எனக் கருதப்பட்ட  RUN AWAY உருவானது. ஜப்பான் ஆக்ரமிப்பினால் கொரியர்கள் பட்ட துயரங்களின் வலியை பதிவு செய்த படம் அது. புகழ் பெற்ற கோட்சில்லா படமான PULGASARI யும் வெளியானது.
      கிம்மின் நம்பிக்கையை பெற்ற சில நாளில் அவர் வைத்த விருந்து ஒன்றில் கலந்துகொண்ட போதுதான் ஷின் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸோய்யை சந்தித்தார். கிம்மினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வெளி உலகம் அறியாமல் தனிமையில் உழன்ற லீக்கும் அன்றுதான் பிறரைப்பார்த்து பேச அனுமதித் தரப்பட்டது. கிம் தனது இருபுறமும் ஸோய் மற்றும் ஷின் ஐ நிற்கவைத்து பெருமிதமாய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சொன்னபடி சிறந்த படங்களை இயக்கியதால் லீயுடன் இனி சுதந்திரமாக ஷின் இருக்கலாம் என கிம் அங்கு அறிவித்தார். ஆனால் அதற்கு ஷின் மீண்டும் ஸோய் யூன் ஹி யை மணக்கவேண்டும் என கிம் நிபந்தனை விதித்தார். ஆக அங்கு மறுபடி அவர்களுக்குத் திருமணம் நடந்தது.
      தொடர்ந்து கிம்மின் நம்பிக்கையைப் பெற சில படங்களை இயக்கினார் ஷின். இருவரும் சரியான சந்தர்ப்பத்தில் தப்பிக்க முடிவு செய்திருந்தனர். ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 1986-இல் நடக்கும் படவிழாவில் கலந்து கொண்டு வட கொரிய படங்களுக்கான ஒரு மார்க்கெட்டிங்- ஐ செய்தால் உலகம் முழுக்க அது கவனத்தை ஈர்க்கும் என ஷின் ஒரு யோசனையை கிம்மிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்ப கிம் ஒப்புக்கொண்டார்.
      வியன்னாவில் இருந்தபடி தப்பிப்பது எளிது என்பதால் அதற்கானத் திட்டத்தை நிதானமாக இருவரும் வகுத்தனர். தங்களுக்கு அறிமுகமான ஜப்பானிய திரைப்பட விமர்சகர் ஒருவர் மூலம் வியன்னாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைய முன்கூட்டி அனுமதி பெற்றனர். தப்பிப்பதற்கு முன் தங்களை கிம்தான் கடத்தினார் என்பதற்கு ஆதாரம் வேண்டுமே, இல்லை என்றால் உலகம் நம்பாது. முக்கியமாக தென்கொரிய மக்கள் நம்பவே மாட்டார்கள். ஆகவே ஸோய் ஒரு சிறிய ரக டேப் ரெக்கார்டரை ரகசியமாக வாங்கினார். கிம் ஐ அடுத்த முறை சந்திக்கும்போது அவரோடு உரையாடுவதை ரகசியமாக பதிவு செய்வது என தீர்மானித்து ஸோய்யின் ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டார். வடகொரியாவை பொறுத்தவரை அது மரணத் தண்டனையைத் தருமளவு மாபெரும் குற்றம். ஏனெனில் அதற்கு முன்னர் கிம்மின் இரண்டே இரண்டு குரல் பதிவுகள்தான் வெளி உலகுக்குத் தெரியும். ஒருமுறை அவர் இராணுவ வீரர்களுக்கான கூட்டத்தில் உரையாடியது, மற்றொன்று ஒரு விளையாட்டு விழாவில் பேசியது.  இரண்டையும் வடகொரிய அரசுதான் வெளியிட்டு இருந்தது.
      மிகுந்த ஆபத்தான சூழலில் அந்தக் குரல் பதிவு ஸோய்யினால் செய்யப்பட்டது. இருவரும் வியன்னா கிளம்பினார்கள். அங்கு அவர்கள் தங்கியிருந்த விடுதி வரவேற்பாளருக்கு துண்டுச் சீட்டில் தாங்கள் தஞ்சமடையும் விபரத்தை எழுதி அமெரிக்க தூதரகத்தில் சேர்க்க வைத்தனர். அவர்கள் சென்ற காரை பின்னிருந்து வடகொரிய அதிகாரிகள் வேறொரு காரில் கண்காணித்தபடி தொடர்ந்தனர். ஒரு சிக்னலில் சாமர்த்தியமாக  பின் தொடர்ந்தவர்களை தனிமைப் படுத்திவிட்டு ஷின் மற்றும் ஸோய் இருந்த காரை அமெரிக்கத் தூதரகம் நோக்கி வேகமாக செலுத்தினார் ஓட்டுனர். அங்கே தயாராக இருந்த ஜப்பானிய விமர்சகர் அவர்களை அழைத்துச் சென்று அமெரிக்க தூதரிடம் சேர்ப்பித்தார்.
      கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகு அவர்கள் சுதந்திரக் காற்றை அனுபவித்தனர்.  இந்த எட்டு ஆண்டு இடைவெளியில்  5 ஆண்டுகள் சிறையில் இருந்தாராம் ஷின்.. 7 திரைப்படங்களையும், சில அரசாங்கப் படங்களையும்  வடகொரியாவுக்காக இயக்கித் தந்தார் ஷின். அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைந்த ஷின் சில வருடங்கள் அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படங்களை இயக்கினார். அங்குதான் நிஞ்சா திரைப்படங்களை தொடர்ச்சியாக உருவாக்கினார் ஷின்.
      ஆனால் கிம் அதற்குப்பிறகு ஷின் ஐ தொல்லைப்படுத்தவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் இது பற்றி அவரிடம் கேட்டபோது ஷின் மிகத் திறமையான இயக்குனர். அவரை அமெரிக்காதான் கடத்திக்கொண்டு போய் இப்பொழுது அருமையான திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறதுஎன்று ஜாலியாக சொல்லிவிட்டு போய்விட்டார்.
      தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு கும்பல் ஒரு நடிகையை கடத்திவைத்திருக்கும் படத்தையும், மற்றொரு படத்தில் ஒரு தாதா ஒரு இயக்குனரை மிரட்டி படமெடுக்கும் கதையையும் பார்த்திருப்பீர்கள். அந்த சம்பவங்கள் இரண்டுமே ஷின் மற்றும் லீயின் வாழ்வில் நிஜமாகவே நடந்ததுதான்.
      தென்கொரியாவின் அரசியல் நிலைமை சீரானதும் 1994 இல் இருவரும் தென்கொரியா திரும்பினர்.  கடத்தல் சம்பவம் குறித்துக் கேட்டபோது ஷின் நகைச்சுவையாக விவாகரத்து ஆன பின்னர் ஸோய் திரும்பவும் என்னுடன் சேர விரும்பியிருந்தால் நேரடியாக என்னிடம் தெரிவித்திருக்கலாம். கிம் ஜோங் யில் லிடம் சொல்லிவிட்டார் போலும் அவர் எங்களைத் தூக்கிப்போய் திருமணம் செய்து வைத்துவிட்டார்என்றாராம்..
      வாழ்க்கை பல சமயம் கற்பனையையும் விஞ்சி சுவாரசியங்கள் மிகுந்தது என்பது ஷின் மற்றும் லீ யின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன இல்லையா
        

      

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...