வியாழன், 23 ஜூன், 2022

 கைநாட்டு

                  - நெய்வேலி பாரதிக்குமார்

 

 

ஒரு கைரேகை சோதிடன்

சொல்லக்கூடும்

பிரம்மாவின் கையொப்பம்

விரல் மீதான கோடுகள்தான் என்று

 

ஆனாலும் அப்பாவை

அழைத்துச் செல்வதில்லை

எந்த அலுவலகத்துக்கும்

 

ஒவ்வொரு மனுவின் அடியிலும்

கையொப்பமிடும் இடத்தில்

மேலேயா.. கீழேயா

என்று கேட்டபடி உருட்டும்

அவரது கட்டை விரல்

நீல வண்ணத்தில் குளித்து குளித்து

நிறம் மாறி இருந்தது

 

‘கைநாட்டா’ என்று குத்தலாய் கேட்கும்

குரலின் ஒலியை குறைக்க வழியறியாமல்

கூனிக்குறுகி எங்கோ பார்க்கும்

அவரது முகத்தை ஒரு நாளும்

நிமிர்ந்து பார்க்க துணிந்ததேயில்லை..

 

ஒவ்வொரு கட்டைவிரல் ரேகைப்  பதிவும் 

வரி வரியாய் கவலைகள் பூசி 

ஏதேனும் ஒரு சோக முகத்தின் சாயலில்

அழுது கொண்டிருப்பது போன்ற

பிரம்மையை உதறமுடியாமல்

நீள்கிறது இரவு 

 

கைப்பேசியின்

கடவுச்சொல்லைக் கூட

விரலால் பதிக்க சோம்பல்பட்டு

கைரேகையைத் தடவும் தருணங்களில்

ஏனோ நினைவுக்கு வருகின்றன

ஒவ்வொரு எழுத்தும் என்னுள் பதிய 

பத்திரங்களில் உருட்டிய

அப்பாவின் தேய்ந்த விரலின்

நீலக்கோடுகள்... 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...