வியாழன், 23 ஜூன், 2022

  சுவரில் எழுதாதீர்

- நெய்வேலி பாரதிக்குமார்





வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் !

‘பிறந்த தேதி எதுவென்று தெரியாதவர்கள்தான் பிறந்த நாள் வாழ்த்துக்களை தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்று ஃபாதர் ஆண்டனி அடிக்கடி இல்லத்திலிருக்கும்போது சொல்வார். இல்லம் என்ற சொல்லுக்கு ‘வீடு' என்று பொருள்படுத்தும் அப்பாவிகளுக்காக சொல்கிறேன், பெற்றவர்கள் ‘இல்'லை, உறவுகள் ‘இல்'லை, பிறந்ததேதி  ‘இல்'லை என்று எதுவும் இல்லாதவர்களுக்கான ‘இடம்' என்று நான் சொன்னால் ‘ஓ! அநாதைகளா?' என்று அலட்சியமாக அடையாளப்படுத்துவீர்கள்.

ஃபாதர் ஆண்டனியை சாமியார் என்று அழைப்பவர்கள் உண்டு. உறவுகளற்ற துறவுதான் அவரது வாழ்க்கை. என்றாலும் நாங்கள் ஃபாதர் என்று அழைப்பது உணர்வுப்பூர்வமான அர்த்தம் நிறைந்த சொல். 

‘உண்மையில் நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள். பெற்றவர்கள் என்று இருப்பார்களேயானால் அவர்கள் தங்கள் குழந்தைகளை, தாங்கள் நினைக்கும் வழிக்குத் திருப்பிவிடும் உக்கிரத்திலேயே இருப்பார்கள்.தங்களின் நிறைவேறாத கனவுகளின் சுமையை தங்கள் குழந்தைகளின் மீது ஏற்றியபடியே இருப்பார்கள். நான் உங்களை வளர்க்கவில்லை. நீங்கள் இயல்பாக வளர்வதற்கு துணை நிற்கிறேன். நீங்கள் எதுவாக ஆக விரும்புகிறிர்களோ அதுவாக ஆக முயற்சி செய்யுங்கள். அவற்றை வழி மறிக்கும் சவால்களை நான் சுமந்து செல்கிறேன்.' என்று ஒரு முறை இரவு உணவுக்கு முன்னதான பிரார்த்தனையின்போது எங்களுக்கு அறிவுறுத்தியது இப்பொழுதும் நினைவிலாடுகிறது.

ஃபாதர் ஆண்டனிதான் எனக்குள்ளிருந்த இன்னொரு ஜீவனை வெளிக்கொணர்ந்தவர். நான் ஒரு ஓவியனாக அறியப்படுகிற சாத்தியக்கூறுகளை உருவாக்கித் தந்தவர். 

இல்லத்திலிருந்து வெளியே வந்து எனக்கான வாழ்வுக்காக நான் என்னை நிலை நிறுத்த விளம்பர பேனர்கள், பெயர்ப் பலகைகள், சுவரெழுத்துக்கள் என்று என் பரிமாணங்கள் பரந்து விரிவதற்கு ஃபாதர் ஆண்டனிதான் வேர்.

ஆனால் எத்தனைப் பொய்யுரைகளை எழுத வேண்டியிருக்கிறது தன் வாழ்நாளுக்குள் ஒரு ஓவியனால்... ( அல்லது என்னை சுவரெழுத்தன் என்று அழைப்பதிலும் எனக்குச் சம்மதமே.. எனது வேலைத் திறனின் மிகுதியான களம் சுவரில்தானே)

ஒரு ஐம்பது வயதுக்காரன் தன்னுடைய நாற்பது வயது தலைவனுக்கு ‘ வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்' என்ற வாசகத்தை எழுதும்படி அடம் பிடிக்கும்போது அதிகம் சிரித்து விடாமல் எழுதப்பழக வேண்டும். 

‘ ஏம்பா இந்த பிறந்த நாள்னா வருஷத்துக்கு வந்துகிட்டுதான் இருக்குமா? அட, அஞ்சு வருஷத்துக்கு ஒருதரம் கொண்டாடினாப் போதும்னு எவன்னவது சட்டம் போட்டாப் புண்ணியமாப்போகும்.. தூத்தேறி, இந்தக் கருமாந்திரம் வந்துட்டா பேப்பர்காரனுக்கும், உன்னை மாதிரி ஆளுக்கும் கொட்டி அழறதுக்கே என் சம்பாத்தியம் பாதி போயிடும் போலிருக்கே. விட்டம்னா என்னைப் பொறுப்பிலேர்ந்து தூக்கிடுவானுங்க' என்று சலித்தபடி எழுதச்சொன்ன வேறொரு கட்சிக்காரன் எனக்குள் வேறொரு நினைவைத்தூண்டிவிட்டுப் போனான்.

பிறந்தத் தேதி தெரிந்தவனுக்குத்தானே வருஷம் ஒரு தினம், தெரியாதவனுக்கு மாதம் ஒன்று கூட கொண்டாடலாமே... எந்தத் தேதி வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாமே... தீபாவளி அன்று கொண்டாடினால் எனக்காக எல்லாரும் வெடி வெடித்துக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். வருஷபிறப்பன்று கொண்டாடினால் உலகமே கொண்டாடுகிறது என்று கூத்தாடலாம்.

காசு இருக்கும் தினமெல்லாம் பிறந்த தினம்தான்.. டப்பா பிடிக்கிறவனிலிருந்து சுவற்றை சுரண்டுகிறவன் வரைசாப்பாடு, டீ, பீடி இத்யாதி, இத்யாதி எல்லாம் என் செலவுதான். பிறந்தத்தேதி தெரியாமல் இருப்பதும் ஒரு செளகர்யந்தான். என்ன சொல்கிறீர்கள்?

எட்டாவது அதிசயமே... எங்களின் இதயமே!

இந்த எட்டாவது அதிசயமே என்கிற சொல் தமிழகத்தில் கொச்சைப்படுத்தப்பட்டது போல வேறெங்கும் நடந்திருக்காது நீங்கள் ஏதாவது ஒரு திரைப்படத்தில் உங்கள் கால்களை மட்டும் நீட்டிக்காண்பித்திருந்தால் போதுமானது. அனேகமாக இந்த அடைமொழிகள் உங்கள் பெயருக்கு முன் இடம் பெறும் தகுதிப் பெற்றுவிடுவீர்கள், அல்லது எதாவது ஒரு தலைவரின் மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கவேண்டும்.

ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஒரு நான்கு வயது சிறுமி சாலையைக் கடக்கும் போது, திடீரென்று ஒரு பேருந்து வேகமாக வருவதைக்கண்டு நெடுஞ்சாண்கிடையாக நீட்டுவாக்கில் இருபக்க டயர்களுக்கு இடையில் படுத்து சிறு சிராய்ப்பும் இல்லாமல் தப்பித்த போதும், ஏதோ ஒரு வட மாநிலத்தில் இரவு நேர மழையில் மண் சரிவில் வழுக்கி, நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து விடாமல் தன் தங்கையை ஒரு கையில் பிடித்தபடி வெடவெடத்த குளிரில் நடுங்கியபடி காப்பாற்றிய சிறுவனுக்கும், மஹாராஷ்டிர பூகம்பத்தின் இடிபாடுகளுக்கிடையில் நான்கு  நாட்கள்  தண்ணீர் கூட அருந்தாமல் உயிரைப் பிடித்துக்கொண்டு தப்பித்த கைக்குழந்தைக்கும் எட்டாவது அதிசயமே என்று வாழ்த்தி சுவரில் எழுதியபோது என் கூட்டாளிகள் கேலியாக சிரித்ததை நான் பொருட்படுத்தவில்லை. முதன்முறையாக உண்மையான நபர்களுக்கு அதைச் சேர்ப்பித்த திருப்தி எனக்கு.

   குருடர்கள் பார்க்கிறார்கள்.... செவிடர்கள் கேட்கிறார்கள்..


என்னோடு சிறுபிராயத்தில் இருந்த ஊனமுற்ற சகோதரர்கள் இருக்கும் இல்லத்திலோ, மருத்துவமனைகளிலோ அற்புதங்களை நிகழ்த்தாமல், அரசியல் தலைவர்கள் கூட்டங்கள் நடத்தும் திடல்களில் ஏன் நிகழ்த்துகிறார்கள் என்ற கேள்வி உங்களைப்போலவே எனக்கும் உண்டு. அப்படி நிகழ்த்தியிருந்தால் கட்டிட வேலைக்காக புதிதாக தோண்டியிருந்த தண்ணீர்க் குழியில் முத்து விழுந்து செத்திருக்கமாட்டான். கர்த்தரோ... கந்தனோ எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனல் அவரோ, அவரின் தூதுவர்களோ எல்லாவற்றையும் நமக்காக செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. செயல் எதுவானாலும் அதை நீங்களே செய்து முடிப்பீர்கள் என்றுதான் நீங்கள் படைக்கப் பட்டிருக்கிறீர்கள்.  நீங்கள் இயங்குவதற்கான சகல சூழல்களையும் கடவுள் படைத்திருக்கிறான் என்பதுதான் என் கொள்கை என்று பிரகடனப்படுத்தினால் என்னை சமூக விரோதி என்று சந்தேகிக்கிறீர்கள் 

ஊனமுற்றவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி தடியடிப் படுவதை பார்க்கிறவர்களையும், கேட்கிறவர்களையும் நீங்கள் அதிகாரிகள் என்கிறீர்கள். ஆனால் ஊனமுற்றவர்கள் அவர்களை எப்படி அழைப்பார்கள்?

மூலம், பவுத்திரம் வியாதிகளுக்கு அறுவையின்றி சிகிச்சை

காவலர்களுக்கு அடுத்தபடியாக இரவை முழுமையாக தரிசிக்கும் பாக்கியம் எங்களைப்போல சிலருக்குத்தான் உண்டு. பத்திரிகைகளில் பிரசுரமான பிரபலங்களின் புகைப்படங்களை டார்ச் கண்ணாடியின் வழியே மெழுகுவர்த்தியின் ஒளியில் சுவற்றில் பிரதிபலிக்கச்செய்து பெரிதாக வரைய இரவு நேரம்தான் எங்களுக்கு உகந்தது. சூரியக்கதிர்களின் சுட்டெரிப்பிலிருந்து தப்பித்து சுவற்றை சுரண்டி, அளவு பிரித்து,சாரம் கட்டி, எழுத்துக்களை வடிவமைப்பதற்கு டீயும், பன்னும், பீடித்துண்டும்தான் எங்களுக்கு உணவு.

பெயிண்டின் உஷ்ணமும், இரவின் சூடும் உணரக்கூடியது அல்ல... மலத்திற்குப்பதில் இரத்தம் வழிய, உயிர் கசியும் ரணம் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வெங்காயத்தை எண்ணையில் வதக்கி சாப்பிடுவது மட்டுமே எங்கள் வைத்தியம். வேலை முடித்து அறைக்குத் திரும்புவதும், சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதும் அவனவன் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. 

இப்பொழுது என்னுடன் என் கூட்டாளிகள் எவரும் இல்லை. சத்தமில்லாமல் மெளனமாக நிகழ்ந்த டிஜிட்டல் புரட்சியில் தங்களை மூழ்கடித்துக்கொண்டாகள். சுவரெழுத்துக்களைப் பெரிதும் நம்பியிருந்த குட்டித் தலைவர்களும் எங்களைத் தேடுவதில்லை. இதுகாறும் தங்கள் தலைவர்களின் முகங்களை மட்டும் பெரிதாக பார்த்தவர்கள் தங்களையும் விதவிதமாக ரசிக்கத் துடித்தார்கள். செல்ஃபோனில் பேசியபடி, கைவீசி நடந்தபடி, அபிமானவர்களுடன் நெருங்கி பவ்யமாக  சிரித்தபடி, கைகூப்பி வணங்கியபடி என்று அவரவர் ஆசை டிஜிட்டல் பேனர்களாக பிரகாசிக்கத் தொடங்கியது. என்னைப்போல இன்னும் ஓவியனாகவே இருப்பேன், சுவரெழுத்தனாகத்தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள்  பத்துக்கும், இருபதுக்கும் சைக்கிளில் பெயர் எழுதிக்கொண்டும், கதவுகளில் இலக்கமிட்டுக்கொண்டும்  இருக்கிறோம். நவீனம் புகும்போது, பழமையை எரித்துவிட வேண்டியதுதானே என்று  நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. காகிதத்தில் மலர்களும், பிளாஸ்டிக் பூக்களும் வந்த பின்னும் செடியில் பூத்த மலர்களை ஏன் தலையில் சூடிக்கொள்கிறீர்கள் என்று பெண்களைப் பார்த்து யாராவது கேட்பீர்களா? ஓவியம் தொழில் இல்லை சாமி அது கலை.. அதை விடுவதென்பது எனக்கு கையை இழப்பது போல..எங்கள் வியர்வையை குடித்து முடித்து மெளனமாக சிரிக்கும் சுவரோவியங்களை எட்டி இருந்து பார்க்கும் பொழுது கிடைக்கும் மனத்திருப்தி வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பிரிண்டர்களிலிருந்து வெளியேறும் பிரதிகளில் அதைப் பெறமுடியுமா? என்று கேட்டால் என்னைப் பைத்தியக்காரனென்று இங்கே கூட்டிவந்து விடுகிறார்கள்.

“ பீட்டர், பீட்டர் இது ஹாஸ்பிடல் சுவர் நீ பாட்டுக்கு எதைஎதையோ கிறுக்கிட்டிருக்கே. கட்டிலை விட்டு கீழ எறங்கு..” காசி பதட்டமாக கத்தினான்.

“ நோ, நோ... அவரை அதட்டாதீங்க காசி.. சின்ன வார்த்தைதானேன்னு நாம நெனைக்கிற ஒரு சொல் கூட அவரை காயப்படுத்திடும். மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.. என்ன எழுதிகிட்டிருக்கீங்க பீட்டர்.. ஹாஸ்பிடல்லேர்ந்து நாங்க ஒண்ணும் ஆர்டர் தரலியே...” டாக்டர்.

“சாரி டாக்டர்”

“ இட்ஸ் ஓ.கே. இப்ப நான் உங்களுக்கு ஒரு ஆர்டர் தரேன் அத செய்யுங்க”

காசி தணிந்த குரலில் “டாக்டர், அவன் ஏற்கனவே தனியா பேசிகிட்டுத் திரியிறானேன்னுதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன்.. நீங்க வேற அவனுக்கு நம்பிக்கைத் தர்ற மாதிரி பேசறீங்க.. அவன்கிட்ட நைஸாப் பேசி அவன் மனசை மாத்துங்க”

“ இப்ப அவருக்கு ஏற்பட்டிருக்கிறது லேசான மனப்பிறழ்வுதான். இப்ப அவ்ர் நெனைக்கறதுக்கு மாறா செய்ய நெனச்சா அப்புறம் முழு மனநோயாளி ஆயிடுவாரு. ஒருவகையில பாக்கப்போனா அவரு சரியாத்தான் இருக்காரு. நாமதான் மாறிட்டோம்.” என்று மெலிதான குரலில் சொன்ன டாக்டர் பீட்டர் பக்கம் திரும்பி, “ பீட்டர், இப்ப சுவரில இருக்கற எல்லாத்தையும் அழிச்சுட்டு பழையமாதிரி ஆக்குங்க. அப்புறம் நான் சொல்றமாதிரி எழுதலாம்”

“சரி டாக்டர், என்ன எழுதணும்னு இப்பவே சொல்லிடுங்க” என்றேன் கண்களில் ஒளி மின்ன...

பதிலுக்கு டாக்டர் சொன்ன வாசகம் எரிதழலை காதில் செருகியது போலிருந்தது. இருந்தாலும் கிடைத்த ஆர்டரை விடுவதாயில்லை..

“ மறுபடி சொல்லுங்க டாக்டர் காதுல விழலை...”

                            “ சுவரில் எழுதாதீர்..”



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...