ஞாயிறு, 26 ஜூன், 2022


கரிசல் எழுத்தாளர் கி,ராஜநாராயணன்  அவர்களின் 95  வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பிதழில் இடம் பெற்ற கட்டுரை ..

        கவித்துவத்தையும் கரிசல் மொழியையும் பிணைக்கும் கி.ரா.வின் சொல்லிழை....

                   

       

     கரிசல் இலக்கியக் கர்த்தாக்கள் தமிழுக்குத் தந்தவை கடலளவு.. அள்ள அள்ள அந்த சமுத்திரத்தில் முத்துக்களுக்கு குறைவே இல்லை. அதிலும் கி.ரா. ஒரு கர்ணன். மூழ்கித் திளைப்பவர்கள் திணறத் திணற தருவதில் அவருக்கு இணையாக இன்னொருவர் தமிழிலக்கியத்திற்கு கிடைப்பார்களா என்பது சந்தேகம். மாய வித்தைக்காரர் போல கூடு விட்டு கூடு பாயும் வசியக்காரர். ஒரு சொல்லில் நாம் மயங்கிக் கிடக்கையில் அவர் இன்னொரு சொல்லால் எழுப்பி அதி மயக்கத்தை புகட்டுவார்.

     ஒரு தேர்ந்த கவிஞரைப் போல வார்த்தைகளால் நம்மை வசீகரித்தபடி முன்னகர்ந்து செல்லும்போதே அவரது அடுத்த வரியில் அவரது கரிசல் மொழி கரிசனமாய் நம் இதயத்தை வருடிச் செல்லும். ஒரு ‘பாட்டாளி’ தனது இசைக்கருவியோடு வாசித்து செல்ல அதில் கிறங்கி சொகுசாளிகள் பின் நடந்து செல்கையில் அந்த கூட்டத்துக்கு சற்றும் குறைவில்லாமல், உழைக்கும் ‘பாட்டாளிகள்’ அவர் பின்னே கூடிவிடும் ஈர்ப்பைத் தரும் அவரது வட்டார வார்த்தைகள் சொற்சிலம்பம் ஆடிக் கொண்டே தொடர்ந்து  வரும்.  அவரது புனைவுகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என எதிலும் அவரது இந்த மாயாஜாலத்தைக் காண முடியும்.

     அவரது ‘வெள்ளைச் சேவலும், தங்கப் புதையலும்’ என்னும் சிறுகதையில் அந்த கவிதானுபவத்தையும், கரிசல் குரலையும் ஒருங்கே பெறலாம். புதையலுக்காக மரத்தின் வேரை வெட்டும்போது கேட்கும் உலோகக் கலயத்தின் ஒலியை ‘லட்சுமியின் சிரிப்பொலி’ என்று கவிஞனைப் போல வர்ணிக்கும் அவர் பச்சைத்தண்ணீரை பதினைந்து ‘போகிணி மொண்டு ஊற்றிக் கொண்டார் என கரிசல் மண்ணுக்கு நம்மை இழுத்துக் கொண்டு போவார். கொஞ்சம் நமுட்டுச் சிரிப்பு அல்லது நக்கல் சிரிப்பை எதிராளி சிந்தினால் நாம் எப்படி எதிர் கொள்வோம்? பல சமயம் அதற்கு நம் அசட்டு சிரிப்புதான் பதிலாக இருக்கும். ஆனால் பொட்டியாரின் மனைவி கேட்கும் ‘என்ன சிரிப்புமாளம்?’ என்னும் கேள்வி கரிசல் மொழியில் எகத்தாளத்துக்கு எதிர்மொழியாக இருக்கும் ஒரு சொல்லாகப் படுகிறது.

     ‘கூளம்’ என்ற சொல் அந்த கதையில் மட்டுமல்ல அவரது வேறு சில கதைகளிலும் வருகிறது. வட தமிழ் நாட்டில் குப்பைக் கூளம் என்று சேர்த்தே பயன்படுத்துவோம். கிட்டத்தட்ட அதற்குப் பொருள் உத்தேசமாக கழிவுகளை குறிப்பதாகவே இருக்கும். வைக்கோலைத்தான் அப்படி தெற்கே குறிப்பிடுவார்கள் என்பதை கிராவின் கதைகளின் வழியேதான் அறிந்தேன். ஒரு சொல் சில மைல்கள் தூர வித்தியாசத்தில் எப்படித் திரிகிறது என்பதை கண்கூடாக அறியலாம்.

     ‘அன்பே மனிதமாய்’ சிறுகதையில் எள்ளல் துள்ளும் அவரது கரிசல் மொழியில் இரண்டு வெவ்வேறு சம்சாரிகளைப் பற்றிக் குறிப்பிடுவார். ஒரு தம்பதி தங்களுக்குள் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் மிக எளிதில் ‘கைப்பு’ வந்துவிடும். ஆனால் மற்றொரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் கைகலப்பில் ஊரையே கிடுகிடுக்க வைத்துவிடுவார்கள். அனால் பிரிய மாட்டார்கள். அவர்களைப் பற்றி கி.ரா. அண்டக்கிடாரம் முட்டிப் புறப்படும் கோபம் அவர்களுக்கு... யாரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்க முடியாது சர் சர்ரென்று கல்லெறிகள் பறக்கும் அவர்களுக்குள்  என்பார்... வாசிக்கும் போதே விலா நொறுங்கிடும் நமக்கு.  

     ஆனால் அதே கதையை அவர் முடிக்கும் அழகு இருக்கே ..அடடா  கவிதை... அருவிகளின் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் (சீசனில் மட்டும்தான்) அருவிகளே இல்லாத குற்றாலம் உண்டு. குறும்பலா ஈஸ்வரரின் வடமேற்கு மூலையில் குமந்தான் ஊற்று இருக்கிறது எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடக்கமாக... மலைப்பாறைகளின் இடையே அன்பு கசிந்து வருவதைப் போல  குமந்தான் ஊற்று நீர், இரவும் பகலும் வருடம் முன்னூற்றி  அறுபத்தி ஐந்து நாளும் கொட்டிக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தினருக்காக... என்று முடிப்பார்.. உண்மைதானே ஆர்ப்பாட்டமான எதன் மீதும் நமக்கு அலாதியான ஈர்ப்பு உண்டு அதற்கு கண நேர வாழ்வுதான் எனத் தெரிந்தும்.

 ‘காலம் காலம்’ என்னும் சிறுகதையில் பேருந்தில் ஏற நிற்கும் தாத்தாவை கூட்டம் அப்படியே ஏற்றிவிடுவதை அவரது மொழியில் ‘அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி சருகை காற்றுக் கொண்டு போவது போல பேருந்தின் நடுவில் கொண்டி நிறுத்தியது என்பார். அப்படியே அடுத்த வரியில் ‘தீப்பெட்டியின் நடுகுச்சி போல அவர் நின்று கொண்டிருந்தார் என அவர் கவித்துவமாக  வர்ணிக்கும் போது. அந்த சூழலின் எரிச்சல் நமக்கும் பற்றிக் கொள்ளும். உண்மையில் அப்படியான நெருக்கடியில் உடலும் உடலும் உரசும்போது எங்கே ‘திகு திகு’வென எரிந்து விடுவோமோ என்கிற நம் அச்சத்தை அவர் வரிகள் வாசிப்பவர்க்கு உணர்த்திவிடும்.

‘நாற்காலி’ கதையில் அவைகளின் நிறத்தை சொல்கையில் செங்கரும்பு நிறத்தில் ஒன்று என்றும் மற்றொன்று எள்ளுப் பிண்ணாக்கு போல கருப்பு நிறத்திலொன்று என்பார். ஒரு கவிஞனின் சொல் நமக்கு ஓவியத்தின் கோடுகள் போல ஒரு பிம்பத்தை நம் மனதுக்குள் வரைந்துவிடும். அவரது வர்ணனையில்  அப்படியே அந்த நிறத்தில் நாற்காலிகள் நம் மனதில் ஜம்மென்று உட்கார்ந்துவிடும்.

 

அதே கதையில் அழிப்பாங்கதை (விடுகதை) ஒன்று

‘முத்தப்பனை பிடிச்சு முதுகுத் தொலை உரிச்சு

பச்சை வெண்ணைத் தடவி’ என கற்பனையில் நம்மை உயரத்தில் இட்டு செல்லும் வரிகளால் வெற்றிலை, சுண்ணாம்பைப் பற்றிச் சொல்லியிருப்பார்.

‘கன்னிமை’ சிறுகதையில் விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு பிரகாசிக்கிறாள். விளக்கின் ஒளிக்கும் அழகுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது கறிக்கு உப்பைப் போல அழகுக்கு அதி ருசி கூட்டுகிறது விளக்கு என்னும் வர்ணனையை கொஞ்சம் விஸ்தரித்து வரிகள் கூட்டி எழுதினால் ஒரு கவிதையாகிவிடும். ஆனால் கி.ரா அங்கு நின்று கொண்டிருக்கவில்லை. அப்படியே நகர்ந்து தனது முண்டாசைக் கட்டிக் கொண்டு வயல்காட்டில் இறங்கி விடுகிறார் அடுத்தடுத்த பாராக்களில்.. ‘ ‘கிஸ்தான் தாட்டுக்களில் பகிர்ந்த பருத்தி அம்பாரத்தை பொதியாக் கட்டி வண்டியில் பாரம் ஏற்றி அவர் பாட்டுக்கு வீட்டுக்கு கிளம்பிவிடுவார். அதுதான் அவரது தனித்துவம். ஒரு இடத்தில் தங்க மாட்டார். நம்மையும் விடமாட்டார்.

அவரது ‘இல்லாள்‘ சிறுகதையில் வரிக்கு வரி கவிதையும், கரிசல் மொழியும் பின்னிப் பிணையும்.... சோமையாவின் வீட்டுக் கதவு தாழ்ப்பாள் உண்டு ஆனால் பூட்டுவதில்லை. திறக்கும் போதே திண்ணையை உரசிக் கொண்டுதான் நிற்கும் அதன் குடுமி மெல்லிய ராகம் இசைக்கும். சின்ன ‘அலுக்கட்டம்’ என்றாலே சோமையாவுக்கு ‘மெனா’ வந்துவிடும். என செல்லும் கதையில் ஜானுவை அவர் ரசிக்கும் அழகு தனி கவிதை.. ருசித்து வாசிக்க வைக்கும் வரிகள் அவை.

அழிப்பான் கதை என்னும் விடுகதை அவரது படைப்புகளில் அதிகம்... நம்மை அவரது உலகுக்குள் அவை இட்டுச் செல்லும்.

போகும் போதும் என் நிழல் முன்னாலே வந்தது

வரும் போதும் என் நிழல் முன்னாலே வந்தது ‘ என்று  குறுங்கவிதையைப்  போல  சொல்லும் மழலை ஒன்று அதனை விளக்கும் போது ‘ காலையில நாம் மேக்காமப் போனா நம்ம எனலு (நிழல்) நம்ம முன்னால போகுமா திரும்பி சாயந்திரம் வரும்போது நம்ம எனலு முன்னாலதானே போகும் என்பார். அதுதான் கி.ரா. வானுக்கும் பூமிக்கும் வலியில்லாமல், சிலவில்லாமல் இட்டுச் சென்றபடியே இருப்பார்.

முதுமக்களுக்கு என்னும் கட்டுரையில் ‘பாசம் என்பது கீழ் நோக்கித்தான் போகும் நீரானது வேருக்கு செல்வது போல... மேலே செல்லாது அது மாதிரி அவரவர் பிள்ளைகளுக்குத்தான் அவரவர் பாசம் சென்றடையும்.. பெற்றோர்களுக்கு திரும்பாது’  என்று தத்துவார்த்தமாக சொல்லும் அவர் சட்டென ‘தேனைத் தொட்டியோ நீரைத் தொட்டியோ’ன்னு இருக்கணும் என்பார்.

கோபல்ல கிராமம் நாவலில் விடியலின் அழகை, நிஜ தரிசனத்தை இரண்டு பக்கங்களில் கரிசல் மொழியிலும் கவித்துவ நடையிலும் அவர் சொல்லும் அழகு தேர்ந்த நாயனக்காரரும், மிருதங்கக்காரரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாசிப்பது போல அத்தனை நேர்த்தி..

‘ஒட்டியிருந்த உடம்பைப் பிரித்துக் கொள்ளும்போது ஏற்படும் செல்ல சினுக்காட்டங்கள்...

கன்றுகளின் பால்தாகக் குரல்கள்; அதை வாங்கி எதிரொலிக்கும் தாய் மாடுகளின் கத்தல்கள்’

என போய்க்கொண்டே இருக்கும் அவரது அதிகாலை தரிசனம்.   

 

நேர்காணல் ஒன்றில் இடைச்செவலிலிருந்து புதுவைக்கு இடமாற்றம் பற்றிக் குறிப்பிடுகையில் சூறாவளிக் காற்று சர்ரென்று புறப்படும் அப்புறம் சர்ரென்று கிழே இறங்கும். அப்படியே மனிதர்களையே புரட்டிப்போட்டுவிடும். சமுத்திரமே இல்லாத ஊரில் கடல் மீன்களை பொழியச் செய்துவிடும். மீன் மழை பொழிந்தது என்பார்கள். மழையா காரணம். இல்லை காற்றுதானே.. அப்படி ஒரு காற்று தன்னை புதுவைக்கு இழுத்து வந்ததாக சொல்லுவார். எழுத்திலும் உரையிலும் அவரது கவித்துவம் யோசித்து எழுத்துக் கூட்டி வருவதில்லை. அப்படியே நீரூற்றாக பாயும்.

நாயனம் வாசிக்க முடியாத உடல் படு கிழமாக ஆகிவிட்ட நிலையில் மனசுக்குள் ராகங்கள் சிறகு விரித்து சஞ்சாரம் பண்ணிக் கொண்டே இருக்கும் என்று சொல்லும் அவரது யதார்த்தாமான வரிகளில் கவியுள்ளமும், முதிர் மனமும் அதை உணர்ந்த பக்குவ அறிவும் புலப்படும்.

அதே நேர்காணலில் தனது கடிதங்கள் அனைத்தையும் ஒரு பதிப்பாளர் ஒரு தொகுப்பாகக் கொண்டு வர இருப்பதாக சொல்லிவிட்டு அனாயசமாக ‘விடிந்தால் தெரியும் வெளிச்சம்’ என்று ஒற்றைவரியில் அதற்கு முத்தாய்ப்பு வைப்பார். உங்கள் மாஸ்டர் பீஸ் எது என்று கேள்வியாளர் கேட்கும்போது மாஸ்டர் பீஸ் என்றால் ‘தொடைகறிதானே’ என்று குசும்புடன் வினவும்போது அவரின் அத்தனை வருட நகர வாழ்க்கையிலிருந்து அவரது குருதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கரிசல் மண்ணை ஒரு போதும் பிரித்து எடுக்கவே முடியாது என்றே பொங்கி வரும் சிரிப்பினூடே எனக்குத் தோன்றிற்று..

கி.ரா. தமிழுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.. அதில் கலந்து கிடக்கும் முந்திரியும் ஏலமுமாக கவிதையும் கரிசலும்....

-      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...