வெள்ளி, 17 ஜூன், 2022

 இலக்கியப் பீடம் சிறுகதைப் போட்டி - 2022 இல் சிறப்புப் பரிசு பெறச் சிறுகதை 


கடவுளின் விரல்

-நெய்வேலி பாரதிக்குமார்

வெளியே போயிடாதே போலிஸ்காரவங்க புடிச்சிட்டு போயிடுவாங்க”  என்று அர்ச்சனா  ஒருநாளைக்கு நூறு தடவை கண்களை உருட்டி உருட்டி மிரட்டுவாள்.  ‘வழக்கமா பூச்சாண்டி பிடிச்சிட்டு போயிடுவான்னுதானே அம்மா மிரட்டும். இப்ப ஏன் மாத்தி மாத்தி சொல்லுது’ என்று செல்வாவுக்கு புரியவே இல்லை.

“பூச்சாண்டின்னா யாரும்மா?” அப்படின்னு ஒரு முறை கேட்டப்போ

“முகமூடி எல்லாம் போட்டுக்கிட்டு பயங்கரமா இருப்பாங்க” அப்படின்னு  அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.  

தெருவுல எட்டிப் பார்த்தா நடந்து போறவங்க வண்டியில போறவங்க போலிஸ் காரவங்க கூட முகமூடிதான் போட்டுக்கிட்டு போறாங்க

“ஆமா, இவங்க எல்லாம் இப்படி முகமூடி போட்டுக்கிட்டு போறாங்களே இவங்க எல்லாம் பூச்சாண்டி இல்லையா?”

“இது.. கொரானா பரவாம இருக்கறதுக்கு”

“அது யாரும்மா கொரானா?”

“உனக்கு இப்ப புரியாது. அம்மா சொன்னா ‘ஊம்’ன்னு கேட்டுக்கணும் புரியுதா?” என்றாள் அர்ச்சனா.

 “கொரானாவும் ஒரு பூச்சாண்டிதான். அவன் மூக்கிலே வந்து ஏறிக்குவான்.  அதனால  அத மூடிட்டா கொரோனா பய  வரமாட்டான் அப்படித்தானே “

 “அட  புத்திசாலி கரெக்டா புரிஞ்சிகிட்டியே. ஜுரம் எல்லாம் வரக்கூடாதுன்னா பேசாம வீட்டுலேயே இருக்கணும் புரியுதா ?”

“அம்மா, அப்பா ஏம்மா ஆபீஸ் போகலை?”

“ஆபீஸ்ல கொரானா உக்காந்து பயமுறுத்தறானாம்.. அதனால அப்பா வொர்க் ஃபிரம் ஹோம்..”

”எங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் அப்பாவுக்கு ஆன் லைன் ஆஃபீஸ்”

செல்வா பல சமயம் அவனே கேள்வி கேட்பான் அதுக்கு அவனே பதிலும் சொல்லிவிடுவான்.

. “அம்மா” என்று வாசலில் குரல் கேட்டது. செல்வா ஓடிப் போய் பார்த்தான். அங்கே செல்லம்மாவும் ஒரு சிறு பையனும் நின்று கொண்டிருந்தார்கள் முகத்தில் கர்ச்சீப்பை மடித்து கட்டி இருந்தார்கள்.அதற்குள் அர்ச்சனா அங்கு வந்தாள்.

“என்ன செல்லம்மா உனக்குத்தான் சம்பளம் குடுத்து பதினஞ்சு நாளைக்கு வரவேணாம்னு சொல்லி அனுப்பினேனே?”

“அதுக்கில்லம்மா .. தோட்டத்துல புளியமரம் காய்ச்சி அப்பவே நிறைய கொட்டி கெடந்துச்சு. பொறுக்கினா ரெண்டு மாசத்துக்கு ஆவும். நீங்க கூட நேரம் கிடைக்கறப்ப வந்து எடுத்துக்கன்னு சொன்னீங்க”

   “சொன்னேன்தான்..அப்ப இந்த கொரோனா பிரச்சினை எல்லாம் இல்லையே ?”

“அப்படியே விட்டா புளியம்பளம் எல்லாம் வீணாப் போயிடும்மா இப்படியே போயி தோட்டத்துல எடுத்துக்கறேன்.. வேற எதையும் தொட மாட்டேன். உங்களுக்கு வேணும்னா கொஞ்சம் பளம் ஒடச்சு தர்றேன்”

“ஒரு பழம் கூட வேணாம். நாங்கதான் வருஷத்துக்கு மொத்தமா வாங்கி வச்சிடுவோமே..யாரு இதெல்லாம் உடச்சிட்டு கெடக்கறது. சரி சரி எடுத்துக்க இது யாரு உன் பேரனா? பேரு என்ன?”

“பேரன்தான் அறிவு...அறிவழகன்“

“ஒரு டீ கூட போட்டுத்தர முடியாதபடி இந்த கொரோனா வந்து பயமுறுத்துது”

“பரவாயில்லைம்மா வீட்டுலேயே சாப்பிட்டுட்டு வந்துட்டோம்”

      என்றபடி தன் பேரனை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றாள் செல்லம்மா. அவர்கள் வீட்டு வேலைக்காரம்மாதான் செல்லம்மா. தினமும் வந்து பாத்திரமெல்லாம் கழுவி, வீடு பெருக்கித் தருவாள். கொரானாவால் செல்லம்மாவுக்கும் லீவு விட்டாச்சு.

செல்வி அப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து கண்களை கசக்கியபடி வெளியவந்து அர்ச்சனாவின் சேலையை பிடித்துக்கொண்டு மிச்ச தூக்கத்தை நின்றபடியே தூங்கினாள்.

“அம்மா.. செல்லம்மாவுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் இல்லையா?” மறுபடி செல்வா கேள்விகளை ஆரம்பித்தான்.

“புளியமரத்தை அப்படியே பிடுங்கி வீட்டுக்கு எடுத்துட்டுப் போனாதான் செல்லம்மா வொர்க் ஃபிரம் ஹோம் செய்ய முடியும்.”

“அய்யய்யே புளிய மரத்தை எப்படிம்மா பிடுங்கறது?”

“உனக்கு பதில் சொல்றதுக்கு அந்த வேலையை செஞ்சிடலாம்” அர்ச்சனா சிரித்தபடி சொன்னாள்.

“நான் போயி எப்படி பொறுக்கறாங்கன்னு பாக்கறேன்மா”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஏதாச்சும் பூச்சி கடிச்சிடும்”

“அப்ப செல்லம்மாவை கடிக்காதா?”

“சும்மா என்னைக் கடிக்காதே..போயி எட்ட இருந்து பாரு”

அதற்குள் செல்வி பல்துலக்கிவிட்டு பால் தம்ளருடன் அவனிடம் வந்தாள்

“டேய் டேய் செல்வா..நாம டீச்சர் விளையாட்டு விளையாடலாம் வாடா”

“நான் வரலை நீ போய் விளையாடு”

 “அம்மா...எனக்கு போரடிக்குதும்மா இவனை டீச்சர் விளையாட்டுக்கு வரச்சொல்லும்மா”

“மொதல்ல நீங்க ரெண்டு பேரும் போயி அவங்க புளியம்பழம் பொறுக்கறதை வேடிக்கை பாருங்க.அப்புறம் டீச்சர் விளையாட்டு விளையாடுங்க சரியா?”

“சரிம்மா” செல்வா..அவனுடைய ஆசைதானே முதலில் நிறைவேறப்போகிறது என்ற சந்தோஷத்துடன் உடனே தலையாட்டினான். அரைகுறையாக தலை ஆட்டியபடி செல்வி அவனுடன் தோட்டத்துக்குச் சென்றாள்.

தோட்டத்தில் செல்லம்மாவும் அறிவும் ஆளுக்கொரு வெள்ளைச் சாக்கினைப் பிடித்துக்கொண்டு பழம் பொறுக்கினார்கள். இவர்களைப் பார்த்ததும் அறிவு பொறுக்குவதை நிறுத்திவிட்டு சில நிமிடம் அப்படியே பார்த்தான்.

“அறிவு.. சீக்கிரம் பொறுக்கு அப்பத்தான் சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்.” என்றாள் செல்லம்மா.

அறிவு இவர்களை நோக்கி கைநீட்டினான். அவனது விரல்கள் கண்டு கண்டாக வளைந்து காயம்பட்டு காய்ப்பு காய்த்தது போல இருந்தன.

“ஆச்சி அவனை எங்கக் கூட விளையாட அனுப்புங்க ஆச்சி” என்று கேட்டான் செல்வா.

“இப்படி ஒண்ணா சேர்ந்தெல்லாம் விளையாடக் கூடாது தம்பி” என்றாள் செல்லம்மா.

“நாங்க தொடாம விளையாடறோம்..ப்ளீஸ் ப்ளீஸ் அனுப்புங்க ஆச்சி”

 “சரி சரி போடா..ஆனா எட்ட நின்னு விளையாடனும். ஒருத்தரை ஒருத்தர் தொடாம விளையாடனும்”

கையில் இருந்த புளியம்பழங்களுடன் அப்படியே வந்தான் அறிவு.

“எங்க காட்டு புளியம்பழத்தை?”

எட்டி நின்றபடியே காண்பித்தான் அறிவு.

“அய்யய்யே இது என்ன இப்படி இருக்கு..பாக்க நல்லாவே இல்லை” என்று சிரித்தான் செல்வா.

“நீ இதுவரைக்கும் பாத்தது இல்லே?”

“நான் தோட்டத்துக்கே வரமாட்டேன்.. பூச்சி கடிக்கும் அம்மா திட்டும்”

“புளியம்பளத்தை சாமி உண்டாக்குனப்போ ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டுச்சாம். ரொம்ப டேஸ்டா இருந்துச்சா கண்ணை இப்படி மூடி அப்படி நாக்கைத் தட்டி தட்டி சாப்பிட்டுச்சாம் அப்புறம் சாமி மனுசங்களை கூப்புட்டு இதுதான் எனக்கு பிடிச்ச பளம்னு  நடு வெரலை காமிச்சு சொன்னாராம்..அதனால்தான் புளியம்பளம் நடுவெரல் மாரியே இருக்குதாம், சாமியோட வெரல்னு பறவைங்க இதை சாப்புடாதாம் எங்க ஆயா சொன்னிச்சு” என்றான் அறிவு.

”அட,ஆமா பாக்க நடுவிரல் மாதிரிதான் இருக்கு” செல்வி அதிசயித்தாள்.

பிறகு அதை உருட்டி உருட்டிப் பார்த்து எந்தப்பக்கம் உடைப்பது என்று தெரியாமல் விழித்தான் செல்வா.

“மேல லேசா இருக்கிற ஓட்டை ஓடை” என்று ஐடியா கொடுத்தான் அறிவு

ஓட்டை அமுக்கி அமுக்கிப் பார்த்தான் செல்வா. பல்தான் இறுகியதே  ஒழிய ஓடு உடையவில்லை.

“இப்படி குடு” என்று அதை வாங்கி இரு உள்ளங்கை நடுவே வைத்து வேகமாகத் தட்டினான். மளுக்கென்று உடைந்தது ஓடு. அடுத்தப் பழம் ஒல்லியாக ஓடு லேசாக இருப்பதை உணர்ந்து அழகாக பாம்பு சட்டையை உரிப்பது போல ஓட்டை மட்டும் உருவினான் அறிவு. 

உள்ளே இருந்த பழத்தை எடுத்து தந்தான் அறிவு.

“கை வலிக்கலை?” என்று கேட்டாள் செல்வி

“அதெல்லாம் வலிக்காது சோட்டானா இருக்குது இல்லே”

“”சோட்டானா அப்படின்னா என்ன?” செல்வா கேட்டான்.

“சோட்டான்னா உப்பலா இருக்குல்லே அதான். சொட்டாங்கின்னா உனக்குத் தெரியுமா?”

”தெரியாதே”

“சொட்டாங்கின்னா அஞ்சு கல்லு வச்சு விளையாடுவோம்ல அது”.

 “எப்படி விளையாடறது?” என்று கேட்டாள் செல்வி

“களத்துல நாங்க வெளையாடுவோம் இரு நான் சொல்லித்தாரேன்”என்று அவசரமாக கூழாங்கல் தேடி எடுத்து வந்தான்.

“ஆமா களம்னா என்ன?”

வீட்டின் பின்புற வாசலில் அவ்வப்போது வற்றல் காயவைக்க தரையில் சிமென்ட் பூசி மேடாக வைத்திருந்த இடத்தைக் காண்பித்து “இதோ, இதான் சின்ன களம்.. வயல்ல பெரிய களம் இருக்கும்” என்று சிமெண்ட் தளத்தில் வெள்ளைக்கல் ஒன்றால் வட்டம் போட்டு அஞ்சு கல்லில் ஒன்றை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மீதியைத் தரையில் போட்டான் அறிவு.

பிறகு கையில் இருந்த கல்லை மேலே தூக்கிப் போட்டு அது கீழே வருவதற்குள் தரையில் இருந்த கல்லை ஒவ்வொன்றாக எடுத்து தூக்கிப்போட்ட  கல்லை சரியாகப் பிடித்தான். மூன்றாவது கல்லைத் தூக்கிப் போடும்போது   

முக்கூட்டு சிக்குட்டு பாவக்கா

முள்ளில்லாத ஏலக்கா,

நாங்கு சீங்கு

மரவள்ளி கிழங்கு,

ஐவார் அரக்கு

சம்பா சிலுக்கு,

என்று பாடியபடியே அழகாக பிடித்தான்..

செல்வி ஆசையோடு “நான் விளையாடறேண்டா“ அவனிடமிருந்து கற்களை வாங்கினாள். அவனைப் போலவே கல்லை மேலே தூக்கிப்போட்டு கீழே கல்லை அள்ளுவதற்குள் மேலே போட்ட கல் வேறெங்கோ விழுந்தது. மறுபடி அறிவு அவர்களிடம் வாங்கி முன்பு போல் அழகாக செய்தான்.

செல்வாவும் வாங்கி கல்லைப் பிடிக்கிறேன் என்று கவிழ்ந்து விழுந்தான்.

“இந்த விளையாட்டு போரடிக்குது வேற சொல்லுடா” என்றான் செல்வா.

“பல்லாங்குழி வெளையாடலாமா?”

“அது எப்படி விளையாடறது?”

“நான் சொல்லித்தரேன்.” –அறிவு.

“ஆமா அதுக்கும் இதே காயின்தானா?”

“இந்தக் காய் இல்லை அது வேற...புளியங்கொட்டை“

“அதை எங்கே வாங்கறது?”

“வாங்க வேண்டாம். சோட்டான் புளியம்பழத்திலேர்ந்து சுளுவா எடுத்துக்கலாம்”

ஒரு முற்றின பழத்தை அவர்களிடம் காண்பித்தான். ஓடு உப்பலாக இருந்தது.

“இதான் சோட்டான் அப்படியே கொடுக்காப்புளி மாதிரி இருக்கு இல்லே?”

“கொடுக்காப்புளின்னா?”

“கொடுக்காப்புளி தெரியாதா? பச்சையா இருக்கும் உள்ளே வெள்ளையா தோசை மாதிரி அழகா இருக்கும் சாப்புட்டா செமையா  இருக்கும்” சப்புக் கொட்டி காட்டினான் அறிவு.

புளியம்பழத்தை சிமெண்ட் தரையில் வைத்து சப்பென்று அடித்தான். அதன் ஓடு பொடிப்பொடியாய் உதிர்ந்தது.

உரித்த புளியம்பழத்தை எடுத்து வாயில் வைத்துப் பார்த்தான் செல்வா.

“அதத் திங்காத புளிக்கும்.” என்று சத்தமிட்டான் அறிவு.

அதற்குள் ஒரு கடி கடித்துவிட செல்வாவின் கண்கள் கூசி முகத்தை சுருக்கிக்கொண்டான்

அந்தநேரம் அர்ச்சனா தோட்டத்துக்கு வந்தாள்

“என்ன விளையாடறீங்க?”

“பல்லாங்குழி..நீங்க வரீங்களா?” கண்களை சாய்த்து கேட்டான் அறிவு.

“அடேங்கப்பா நாங்க எல்லாம் சின்னப் பிள்ளையா இருக்கும்போது விளையாண்டது.. அதுக்கு பல்லாங்குழி கட்டை வேணுமே”

“அதெல்லாம் வேணாம் புளியங்கொட்டை இருந்தா போதும்”

அருகிலிருந்த வெள்ளைக்கல்லில் சிமென்ட் தரையில் இரண்டு வரிசையாக வட்டங்கள் போட்டான்.

புளியங்கொட்டைகளை எடுத்து வட்டங்களில் வைத்தான்.

“அம்மா இந்த அறிவுக்கு எல்லாம் தெரியுதும்மா சோட்டானை அப்படியே ஹல்க் மாதிரி உடைக்கிறான். கல்லு விளையாட்டுல தூக்கிப்போட்டு அப்படியே தோனி மாதிரி கேட்ச் பிடிக்கிறான். சூப்பர் சிங்கர் மாதிரி பாட்டு எல்லாம் பாடறான்.”

“ஓ அப்படியா....பீ கேர்ஃபுல், டோண்ட் டச் ஹிம். கீப் டிஸ்டன்ட்”

“ஒகே ம்மா. இவன் விரலைப் பாரேன் லுக்ஸ் கிரேசி..”

அறிவு பெருமிதமாக நீட்டினான்

“:என்னாச்சு” என்றாள் அர்ச்சனா.

“முந்திரிக்கொட்டை ஒடைச்சா பால் படும்லே அதான் இப்படி.”

“முந்திரிக் கொட்டை உடைப்பியா? வேற என்னென்ன செய்வே?”

“அப்புறம் மல்லாட்டை ஒடைப்பேன்.. ம்ம்ம் மாங்கா பறிக்கப் போனா பொறுக்க போவேன்.“ தன் விரல்களில் லேசாக உடைந்த புளியம்பழ ஓட்டை எடுத்து பொருத்திப் பார்த்தான். சரியாகப் பொருந்தியது. .

“செல்லம்மா இங்க வா இவனை நீ ஸ்கூலுக்கு அனுப்பறதே இல்லையா?” என்று கோபமாகக்கேட்டாள்.
     “ஸ்கூல் ஏது அனுப்புறதுக்கு?” பழத்தை பொறுக்கியபடியே அந்தப் பக்கம் பார்த்தபடி பதில் சொன்னாள்.

“ஊர்ல உலகத்துலே குழந்தைங்களை வேலைக்கு வச்சிக்க கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காங்க நீ என்னடான்னா படிக்கிற பிள்ளையை துணைக்கு கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி கை இப்படி காய்ச்சுப் போற அளவுக்கு வேலை வாங்குறே”

இடை புகுந்து “வட்டத்துக்குள்ள எத்தனை காய் வைக்கணும்?” என்று கேட்டாள் செல்வி

“அது எனக்குத் தெரியாது சுமதி அக்காதான் வைக்கும்..ஆயா குழிக்குள்ள எத்தனை காய் வைக்கணும்?” அறிவு செல்லம்மாவிடம் கேட்டான்.

“அஞ்சஞ்சா வையேன்.. மொத்தம் எத்தனை புளியங்கொட்டை இருக்கு?“

“எனக்கு எண்ணத் தெரியாதே? நீ வந்து வையேன் ஆயா”

“உனக்கு கவுன்ட் பண்ணத் தெரியாதா?” என்றான் செல்வா

“தெரியாதே.” என்றான் அறிவு.

“ஏன் நீ ஸ்கூல்-க்கு போகலை?”

“போகலை”

“ஏன்?”

“மூணாம் வகுப்பு போனேன். எங்க வீட்டுல பணம் இல்லே போவேணாம்னு சொல்லிட்டாங்க ”

“அவங்க அப்பா கட்டட  வேலைக்கு போறாரு. அம்மா முந்திரி உடைக்கற வேலைக்குப் போவுது.. முன்னாடி படிச்ச புள்ளைங்களை கேட்டா புக்கு குடுக்குதுங்க , கிழிஞ்சதுதான் இருக்கும். இருந்தாலும் என்ன பண்றது? நோட்டும் பென்சில் மத்தது எல்லாம் வாங்க கடன்தான் வாங்குனும்.. இப்ப என்னடான்னா ஃபோன்லதான் ஸ்கூலாம் என்ன கருமமோ அதை வாங்க காசு இல்லியே...”என்று சொன்னாள் செல்லம்மா.

உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் தன்னுடைய செல்லை எடுத்துக் காண்பித்து “மூணு கேமரா இருக்கும் பெரிய ஸ்கிரீன் தெரியுமா? ஒன்லி டென் தவுசண்ட்.. இதுலதான் நான் கிளாஸ் அட்டன்ட் பண்றேன்.”என்று ஆர்வமாக தகவல் சொன்னாள் செல்வி;

ஆசையோடு அது வேணும் என்று ஃபோனைக் காண்பித்து செல்லம்மாவைப் பார்த்து  பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் அறிவு.

“அது சரி.. உனக்கு ஈடு ரெண்டு புள்ளைங்க வூட்டுல இருக்கு..அம்புட்டும் கேக்கும்..பேசறதுக்கே துக்கினியோண்டு தீப்பெட்டி மாரி வச்சிருக்கான் ஒங்கப்பன்.. இதுல சோப்பு டப்பா மாரி வேணும்னா பத்தாயிரம் இருவதாயிரம் ஆவுமாமில்லே அதுவுமில்லாம மாசம் மாசம் எக்கச்சக்க பணம் கட்டணுமாம்..நமக்கு கட்டுப்படியாவது.. அதனலாதான் உங்க மூணு பேரையும் ஸ்கூலை விட்டு நிறுத்தியாச்சு.”

ஆள் கிடைத்த சந்தோஷத்தில் செல்வி உடனே உள்ளே சென்று தனக்கு அப்பா வாங்கித்தந்த வெள்ளை போர்ட், மார்க்கர் பென், வழக்கமாக வைத்திருக்கும் கம்பு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.. சுவரின் ஓரம் போர்டை சாத்தி வைத்தாள். பிறகு அறிவுக்கு ஒரு சிலேட்டும் பல்பமும், செல்வாவுக்கு ஒரு சிலேட்டு பல்பமும் எடுத்து வந்தாள்.

செல்வா டீச்சர் விளையாட்டுக்கு வராத நாட்களில், தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளை எல்லாம் மாணவர்களாகக் கருதி கம்பை  கையில் வைத்துக்கொண்டு சத்தமாக கணக்கு வாய்ப்பாட்டை சொல்லுவாள். அதுவே அவளுக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு.

அறிவு மிகப் பவ்யமாக கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். தன் மடியில் வைத்திருந்த சதுர வடிவ சிலேட் பார்க்கவே புத்தம் புதுசாக அழகாக இருந்தது அவனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

“முதல்ல உனக்கு ஆனா ஆவன்னா சொல்லித்தாரேன்“ என்று போர்டில் பெரிதாக ‘அ’ ‘ஆ’வன்னா போட்டாள் செல்வி.

“இதே மாதிரி உன் சிலேட்டில் போடு. அந்த புளியபழ மூடியை எடுத்து கீழே போடு” என்று அவனை அதட்டினாள்.

புளியம்பழ  ஓட்டை உதறிவிட்டு, ஒரு கையை மறுகையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘அ’ வை ஒரு தினுசாக போட்டு முடித்தான்.

அர்ச்சனா செல்லம்மாவைப் பார்த்து “இன்னிக்கு எவ்வளவு முடியுதோ அவ்வளவு பொறுக்கிக்கோ. நாளைக்கு எல்லாம் வராதே.. பழத்துக்கு ஆசைப்பட்டு படுக்கையிலே விழுந்துடக் கூடாது”

“பொங்கும் காலம் புளி.. மங்கும் காலம் மாங்கான்னு சொல்லுவாங்க சாரைப்பாம்பு அடிக்க அடிக்க வருமே.. அது மாரி... இந்த வருஷம் பறிக்க பறிக்க வருதும்மா புளி....இன்னும் ரெண்டு நாளைக்கு வந்துடறேன்மா”’

“பாம்பு வருதோ புளி வருதோ நிச்சயமா கொரானா வந்துரும்  பொட்டு பொட்டுன்னு சாவறாங்க.. பேரனை வேற கூட்டிட்டு வந்துடறே.. பிள்ளைங்களை கண்ட்ரோல் பண்ண முடியுமா?”

“அப்படி சொல்லாதே தாயி.. இனிமே அவனை இங்க கூட்டிட்டே ..வர மாட்டேன்.. ரெண்டு நாளைக்கு என்னை மட்டும் வுடுதாயி..மவன், மவ வீட்டுக்கு ஆவும்.. நான் விக்கறதுக்கு கேக்கலைம்மா.”

“.நானும் ஆயா கூட வர்றேனே.. இந்த அக்காகிட்ட எளுத கத்துக்கறேன்.” கெஞ்சும் குரலில் கேட்ட அறிவு பழக்க தோஷத்தில் புளியம் பழ ஓட்டை எடுத்து மறுபடி கைகளில் மாட்டிக் கொண்டான்.. 

அதற்குள் செல்வி போனை ஆன் செய்து அதிலிருந்து யூட்யூப் சேனலில் யாரோ ஒருவர் வகுப்பெடுப்பதை அறிவிடம் காண்பித்து “இங்க பாத்தியா இது மாதிரிதான் ஆன் லைன் கிளாஸ் நடக்கும் “

“ஆயா .. ஆயா இங்க பாரேன் வாத்தியாரை.. சினிமாவுல ஆக்ட் குடுக்கற மாதிரி பேன்ட் சட்டை கோட் எல்லாம் போட்டுக்கிட்டு... நம்ம ஊர்ல பண்ணை வூட்டுல  இருக்கற மாதிரி ரூம்பு.. எங்க ஸ்கூல்ல எல்லாம் மரத்துக்கு கீழதான் உக்காந்திருப்போம்”

“ மரத்துக்கு கீழவா?”

“ஆமா ஜாலியா இருக்கும்.. கிச்சு கிச்சு தாம்பாளம் எல்லாம் மண்ணுலே வெளையாடுவோம்”

“அது எப்படி?”

“சீவாங்குச்சியை எடுத்து மண்ணுல ஒளிச்சு வச்சி கண்டுபிடிக்கணும். சொல்லித் தரவா?”

“மண்ணா..செல்வி கையெல்லாம் டர்ட்டியா ஆயிடும்..  தம்பி அதெல்லாம் வேண்டாம்”

“ஆயா நானும் படிக்கணும் அது மாதிரி போனு வாங்கிக்குடு  ஆயா..” என்று கெஞ்சலாகக் கேட்டான் அறிவு

 “ஏய் செல்வி மொதல்ல அந்த போனை வாங்கு..சானிடைஸ் பண்ணு.. செல்லம்மா இது சரியா வராது.. நீ கெளம்பு”

“இல்லைம்மா இல்லைம்மா.. அப்பனாணை இனும அவனை கூட்டியார மாட்டேன்.. இன்னிக்கு இத்தோட நிறுத்திக்கறேன்..இன்னும் ரெண்டே நாள். டேய் கெளம்புடா” அவனை துரிதப்படுத்தி பறித்தவற்றை எடுத்து மூட்டைக் கட்ட ஆரம்பித்தாள். அவன் செல்போனையும் சிலேட் பல்பத்தையும் ஏக்கத்தோடு பார்த்தான். செல்லம்மா அவனது கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு அவனை தர தரவென இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.  புளியம் ஓடு மாட்டி இருந்த அறிவின்  கைகளில்  இருந்து கடவுளின் ஓடு உடைந்து துகள்களாக சிதறின. 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

   

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...