வெள்ளி, 17 ஜூன், 2022

 

குமுதம் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசுப் பெறச் சிறுகதை 


இறை போல் நிறைந்தவன்

           நெய்வேலி பாரதிக்குமார்

பாடல் எண் 10 குறுந்தொகை  130

                             


 

     மாலுவுக்கு காலில் இருந்த  வலி உயிரில் ஊடுருவி ஒவ்வொரு அணுவையும் பிளந்து கசக்குவது போல இருந்தது. கால்கள் உயரே மாட்டப்பட்டிருந்தன. கட்டுப்போட்டிருந்த பேண்டேஜ் துணிக்குள் இருபத்தி நான்கு மணி நேரமும்  ஏதோ ஒன்று ஊறுவது போல உணர்வு இன்னொரு பக்கம் அவளை உறங்க விடாமல் செய்தது. வேர்வைத்துளிகள் பேண்டேஜ் துணிக்குள் நுழைந்து விடாமல் அவ்வப்பொழுது ஆட்காட்டி விரலால் துடைத்து வெளியேற்றிக் கொண்டே இருந்தாள்.. திமாப்பூர் இராணுவ மருத்துவமனை எவ்வித சலனமும் இன்றி இறுக்கமான மௌனத்தை அணிந்து கொண்டிருந்தது. ஆந்தைகளின் பெருமூச்சு மட்டும் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டே இருந்தது.

     மூடிய பீங்கான் தட்டில் இரவு உணவை எடுத்து வந்தாள் நல்லா

     “என்ன சாப்பாடு நல்லா?” என்று லோத்தா மொழியில் மாலு அவளிடம் கேட்டாள். நல்லா நாகாலாந்தின் மத்திய பகுதியில் இருந்து வந்தவள். லோத்தா மொழி மட்டும்தான் அவளுக்கு சரளமாக வரும். இங்கு வந்த சில நாட்களில் லோத்தா மொழியில் சில அத்தியாவசியமான சொற்களை மாலு கற்று வைத்திருந்தாள்.

     “அகுனி” என்றாள் நல்லா

     :”அட போடி “ சலிப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மாலு. அசரவே அசராத அழகான புன்னகையுடன் அவளருகே வந்து “ஆனால் இன்னிக்கு கூடவே வறுத்த மீன் “ என்றாள் நல்லா. அகுனி சோயாபீன்ஸ்-சில் செய்யப்படும் சுவாரசியமற்ற ஒரு பதார்த்தம். நாகாலாந்தில் பெரிதும் உண்ணப்படும் உணவு. துணைக்கு வைக்கப்படும் பதார்த்தத்தினால் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும்.

     முகத்தை அவளுக்கு கண்ணில் படாத  பக்கம் திருப்பி “நிஜமாவா” என்றாள்

     “அதுவும் எங்கள் ஒகா பாணி மசாலாவுடன் .. “

     “ஓ.. என் செல்ல நல்லா “ என்று அவளை அறியாமல் தமிழில் கொஞ்சினாள் மாலு. அவள் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று நல்லா கேட்கவில்லை வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.

     “செல்ல நல்லா “ அப்படின்னா அர்த்தம் தெரியுமா உனக்கு?”

     “அதை ஏன் தெரிஞ்சுக்கணும்?..நீங்க அன்பா என்னை கொஞ்சறிங்கன்னு புரியுது..”

     “ஆமா மல்லிக்கு சாப்பாடு தந்திட்டியா ?”

“ஊட்டினேன்.. ஆனா அவங்க சாப்பிடலை.. அழுதுகிட்டே இருக்காங்க”

சட்டென கனத்தது மனது ஒரு நிமிடம் மல்லியின்  கண்ணீர் வழியும் உருண்டை முகம் மனக்கண் முன் வந்து போனது. .

      “எனக்கும் பங்கு உண்டா” என்ற கம்பீரமான குரல் கேட்டது. பிரிகேடியர் பாஜ்வா கதவருகே நின்று கொண்டிருந்தார்.

     “ குட் ஈவ்னிங் சார் “

“குட் ஈவ்னிங் கேப்டன் மால்தி.. ஹவ் ஆர் யூ நவ்?” என்றபடி உள்ளே வந்தவர். நல்லா வைத்திருந்த தட்டை உற்று நோக்கினார்.

“சார் மல்லியை பார்த்தீங்களா?”

சட்டென சுதாகரித்தவர். “ ஓ.....இன்னும் இல்லை”  

“AN 33 பத்தி ஏதாச்சும் தகவல் தெரிஞ்சுதா சார்?”

“கிட்டத்தட்ட இருவது வருஷத்துக்கு முன்னாடி கார்கில் யுத்தம் நடந்த சமயம். உங்க அப்பா சரவணன் செல்லசாமியும் நானும் கிரேனேடியர் படையில் ஒண்ணா இருந்தோம். டைகர் ஹில்சை எதிரிங்க கிட்டேர்ந்து மீட்கனும்னு எங்களைத்தான் மேஜர் ஜெனரல் மொகிந்தர் அனுப்பினார். எங்க டீம் அப்ப எதுக்கும் பயப்படாத முரட்டு டீம். தேவிந்தர் சிங் கேள்விப்பட்டிருப்பே நிஜமாலுமே அவன் ஒரு சிங்கக்குட்டி. அவன்தான் முன்னாடி போறான். நானும் உங்க அப்பாவும் மலையிலே ஒரு முகட்டுல ஒரு எதிரியால சுடப்பட்டு  காயத்தோட தொங்கிக்கிட்டு இருக்கோம் உங்க அப்பா கையிலேர்ந்து ரத்தம் அருவியாட்டம் கொட்டுது. எவ்வளவு நேரம் போராடினோம் கடவுளே ஒரு கட்டத்துல உங்க அப்பா பிடி நழுவி என் கண்ணெதிரே விழுந்து காற்றில் ஒலி போல கரைந்து போனார்”

தன்னையும் அறியாமல் மாலுவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“டைகர் ஹில்ஸ் எங்க கைக்கு வந்திடுச்சு.. ஆனா உங்க அப்பாவோட உடம்பை எடுக்கவே முடியலை துடைக்கப்படாத ரத்தம்,, கழுவப்படாத காயம் இராணுவ உடையோட மண்ணில் விழுந்து மரணிப்பதற்கு  எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் தெரியுமா? அந்த வீர உடலை புதைக்கவோ எரிக்கவோ இயற்கை விரும்புவதில்லை அந்த வீரனை தன் மடியில் ஏந்தி பூமி அணைத்துக் கொள்கிறது”

மாலுவின் விசும்பல் அவளையும் அறியாமல் வெடித்தது.

“ மகளே நீ இந்திய இராணுவத்துக்கு ஃபோர்த்  ஜெனேரஷன் சோல்ஜர். உங்க அப்பா இறந்தப்ப உனக்கு மூணு வயசு. உங்க தாத்தாவும் சீன யுத்தத்தில் மரணத்தை தீரத்தோடு பரிசாக பெற்றவர்.. உன்னோட கணவர்.... “

“சார் AN 33 பத்தி எதுவுமே தெரியலையா?”

“ ம் அருணாச்சல பிரதேசத்துல லிப்போ பக்கத்துல பாரி ஹில்ஸ் கிட்டே AN 33 உடைஞ்சு விழுந்து அதோட  பார்ட் எல்லாம் கிடக்குது. எல்லையை காக்க பறந்தவங்க இப்ப எல்லையற்ற வெளியில்... பூமித்தாய் அதில் பயணித்தவர்களை தன் கரங்களுக்குள் அள்ளி மறைத்துக் கொண்டாள் ”

“ஏதாவது சான்ஸ் இருக்குமா? யாராச்சும் ஒருத்தர் ..?”.

உதட்டை பிதுக்கினார் பாஜ்வா..

மறுபடியும் குலுங்கி குலுங்கி அழுதாள் மாலு

“நாம் வேறுபட்டவர்கள் மாலு.. மரணத்தின் போது நாம் செய்ய வேண்டியது அழுகை அல்ல கம்பீரமான வணக்கம். உன் அப்பாவையும் தாத்தாவையும் புதைத்த மண்ணில் நீ முளைத்திருக்கிறாய். AN 33 -யில் உன் உறவினர்கள் யாரும் இருந்தார்களா? ”

“இல்லை மல்லிக்கு உறவாக வேண்டியவர் அதில் இருந்தார் “

“யார்?”

“ஃபர்ஸ்ட் லெஃப்டினன்ட் மாறன்”

“மாறன்...? தி கிரேட் ஹீரோ ..ஒற்றையாய் மிராஜில் பயணித்து எல்லையில் நுழைய முயன்றவர்களை கூண்டோடு அழித்தவன் ஆயிற்றே. இந்தியா முழுக்க ஒரு சமயம் அவனுடைய பெயரைத்தானே உச்சரித்தது. ஒருவேளை கடவுள் என் முன் தோன்றி இன்னொரு ஆளாக உருவெடுக்கலாம் என்று வரம் தந்தால் நான் மாற விரும்பும் உருவம் மாறன்.  ஆமா நீயும் மல்லியும் OTA  வில் ட்ரெய்னிங் எடுத்தவர்கள் மாறன் IMAவில்.. எப்படி உங்களுக்குள்?”

“நாங்களும்  அவரும் தமிழ்நாட்டுல கோயம்புத்தூர் பக்கம்  வெள்ளிப்பாளையம்.”

“ஓ.. மறந்துட்டேன்.. நீங்க மதராசி இல்லே”

“இல்லே தமிழர்கள்.. இந்தியர்கள்”

“மல்லியின் அப்பாவும் பார்டர் செக்யூரிட்டி ஃ போர்சில் இருந்தவர்தானே?””

“:இந்த அஸ்ஸாம் ரைபிள் ஃபோர்ஸ் இல் இருக்கிற அத்தனை பெண்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருங்கிய உறவை நாட்டுக்காக தந்தவர்கள்தானே.. ஏற்கனவே மல்லியின் ஒரே சகோதரன் காஷ்மீரில் மரித்துவிட்டான்”

“உன்னுடைய குழந்தை எப்படி இருக்கிறாள்?”

‘அவளை விட்டுவிட்டு OTA வில் சேரும்போது அவளுக்கு மூணு வயசு.. தயவு செய்து என்னுடைய கணவரைப் பற்றிய நினைவுகள் எதையும் இப்பொழுது சொல்லிவிடாதீர்கள்”

“நான் இப்பொழுது வந்தது ஒரு பெருமை மிக்க விஷயத்தை சொல்ல.. நீ நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விஷயம்”

மாலு எதுவும் பேசவில்லை.. அவளுடைய நினைவுகள பாஜ்வாதான் தூண்ட வேண்டுமா என்ன?

“வருகின்ற குடியரசு தினத்தில் ராஜ்பாத்தில் நடக்க இருக்கும் பரேடில் அஸ்ஸாம் ரைபிள் படையின் அணிவகுப்புக்கு நீதான் தலைமையேற்று முன்னால் வரப்போகிறாய்..”

“என்னது உண்மையாகவா?”

“ஆமாம் நாரி சக்தி (மகளிரின் ஆற்றல்) இம்முறை பல ஆச்சர்யங்களை நிகழ்த்த இருக்கிறது”

“அப்படியானால் இப்பவே நாம் மல்லியை பார்க்க வேண்டும்”

“நிச்சயமாக”

வீல் சேரில் மாலதி அமர நல்லாவும் பாஜ்வாவும் உதவினர்

 

ருத்துவமனையின் ஐசியு பகுதிக்கு அவர்கள் சென்றனர். மல்லி மிக பலவீனமாக படுத்திருந்தாள். அவளை ஒவ்வொரு நொடியும் கண்காணிக்க அவளோடு இணைத்திருந்த மருத்துவ உபகரணங்கள் அச்சுறுத்தும் வகையில் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. டாக்டர் நானாவதி அவளது மெடிக்கல் ஹிஸ்டரியை படித்துக் கொண்டிருந்தார்.

“குட் ஈவ்னிங் டாக்டர் “

“குட்ஈவ்னிங்”

“எப்படி இருக்காங்க ?”

“நைஸ் ..எவரித்திங் இம்ப்ரூவிங்”

“அவங்களால பேசமுடியுமா?”

“வாஸ்க்யுலர் டிமென்ஷியா.. தலையில பலமான அடி சில நினைவுகள் சட்டுன்னு அழிஞ்சி போயிருக்கும் சிலது மட்டும் மறக்கவே மறக்காது.. ட்ரை பண்ணி பாருங்க”

“ஹலோ மல்லி”

அவள் மிக மெலிதாக சிரித்தது போல் இருந்தது. பிரமை.. அவள் கண்கள் வழியே அவளது புன்னகையைத் தேடினார் பாஜ்வா.

“நீங்க பேசறதை எல்லாம் புரிஞ்சுக்குவாங்க.. தாராளமா பேசலாம்”

“பிராவோ... மல்லி, திமாப்பூர் கலவரத்தை திறமையா சமாளிச்சீங்க. உங்க எல்லாரையும் மேஜர் ஜெனரல் ரொம்ப பாராட்டினார். நீயும் மாலுவும் கடைசி நிமிஷம் வரைக்கும் ஒரு சிவிலியனுக்கும் .எதுவும் நடக்காம பார்த்துகிட்டீங்க கிரேட்” லேசாக கைதட்டினார். சலனமற்று இருந்தாள் மல்லி..

“உங்க அம்மா இன்னும் ரெண்டொரு நாள்ல வந்துடுவாங்க உடம்பு சரியானதும் நீ ஊருக்கு போயிடலாம். லீவ் சாங்க்ஷன் ”

அவளிடம் எந்த அசைவும் இல்லை

“மல்லி இந்த முறை ரிபப்ளிக் டே பரேட்ல முதல் முறையா அஸ்ஸாம் பெண்கள் அணி கலந்துக்கப் போகுது. யார் தெரியுமா லீட் பண்ணப் போறா? உன்னோட ஃபிரண்ட் மாலதி. வெள்ளி வீதியில் இருந்து ராஜவீதிக்கு.. ஐ மீன் வெள்ளிப்பாளையம் டூ ராஜ்பாத் ” கண்சிமிட்டினார் பாஜ்வா.

அப்பொழுதும் அவளிடம் எதுவும் மாற்றம் இல்லை

சில நிமிட மவுனங்களுக்குப் பிறகு

மல்லியின் உதடுகள் மெல்ல அசைந்தன

பாஜ்வா அவள் வாயருகே காதுகளை கொண்டு போக முயன்றார் ஆனால் அவரால் சரியாக கேட்க முடியவில்லை

“இந்தக் கிழவனுக்கு காது கேக்கலைம்மா.. மாலு நீ கேளு.. என்ன சொல்றான்னு“ மாலு அவளருகே வீல் சேரை கொண்டு சென்றாள்

“மாறன்” என்று அவளது குரல் அத்தனை பலகீனங்களையும் கிழித்துக்கொண்டு வெளியே வந்தது. எல்லா நினைவுகளும் அழிந்து போனாலும் அழியாத பெயர் மாறன்.

“கவலைப்படாதே அவன் வீரன்.. அவன் வானத்துல அடங்க மாட்டான் ..இந்த பூமிக்குள்ளேயும் புதைய மாட்டான் நீருக்குள்ளேயும் கரைய மாட்டான் “ அவள் நெஞ்சைத் தொட்டு “இங்கே சிம்மாசனம் போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கிறான் விட்டுருவோமா என்ன? சீக்கிரம் எந்திருச்சு  வா.. அஸ்ஸாம் ஆல் வுமன் ரைபிள் ஃ போர்ஸ்னா கொக்கா நம்ம உடம்புல ஓடற ரத்தம்  பாசிட்டிவோ நெகட்டிவோ இல்லை மிலிட்டரி க்ரூப்.. நம்ம கிட்டேர்ந்து  தப்ப முடியாது” தமிழில் உக்கிரமாகச் சொன்னாள் மாலு.

மல்லியின் முகத்தில் முதன் முறையாக நீண்ட நாளைக்குப் பிறகு பூ மலர்ந்தது போல புன்னகை. அவள் கைகள் அறியாமல் அவளது முன் நெற்றிக்கு நகர்ந்தது. அந்த கைகளை ஒரு நிமிடம் அழுத்தினாள் மாலு. அந்த அழுத்தம் பல உணர்வுகளை அவளுக்கு கடத்தியது... .

 

 

 

 

கதையை வாசிக்க உதவும் சில குறிப்புகள்

அஸ்ஸாம் ஆல் வுமன் ரைபிள் ஃ போர்ஸ் என்னும் நமது இந்திய அணி படைப்பிரிவு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே உள்ளடக்கியது அதுவும் இராணுவத்தில் பணியாற்றும் போது மரணித்த வீரர்களின் நெருங்கிய உறவுகள் அதிகம் இடம் பெற்ற படைப்பிரிவு

அகுனி என்பது நாகாலாந்தின் பிரபலமான உணவு . திமாப்பூர் கலவரம் நாகாலாந்தில் நடைபெற்றது. AN 33 சிறிய ரக விமானம் பெரும்பாலும் விஐபிக்கள் பயணிக்கும் குட்டி விமானம் .

கார்கில் யுத்தத்தில் டைகர் ஹில்ஸ் மீட்பு என்பது வீர தீர நிகழ்வு        

 

..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறுந்தொகை 130, வெள்ளிவீதியார் 

நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே?  5

 

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  தோழி தூது விடும்பொருட்டுத் தலைவி தனது ஆற்றாமையால் அவளிடம் கூறியதுமாம்.

 

பொருளுரை:   நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லைவானத்திற்கும் ஏறவில்லை, விலக்கும் பெரிய கடல் உள்ளும் நடந்து செல்லவில்லை.  நாம் அவரை நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், குடிகள்தோறும் முறையாகத் தேடினால் அகப்படாமல் போய் விடுவாரா?

 

குறிப்பு:  காதலோரே ஏகாரம் அசை நிலை.  அகநானூறு 147 – நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே.   அகநானூறு 236 – ஆட்டன் அத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி.  குடி முறை (4) – உ. வே. சாமிநாதையர் உரை குடிகள்தோறும், நாடு, ஊர், குடி ஒன்றனுள் ஒன்று அடங்கியவை ஆதலின் அம்முறைப்படி கூறினான்.  குடியென்றது குடும்பத்தை, பொ. வே. சோமசுந்தரனார் உரை குடிகள்தோறும்,  தமிழண்ணல் உரை தனித்தனி குலம்.  இது சாதி வழிப் பிரிவன்று.  பின்னர் புகுந்த சாதி குலங்களையும் வேற்றுமை பாராட்ட வைத்தது.

 

சொற்பொருள்:   நிலந்தொட்டுப் புகார் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானம் ஏறார் வானத்திற்குள் ஏறவில்லை, விலங்கு இரு முந்நீர் விலக்கும் பெரிய கடலில்காலில் செல்லார் காலினால் நடந்து செல்லவில்லை அவர்நாட்டின் நாட்டின் நாடுகள் தோறும்ஊரின் ஊரின் ஊர்கள் தோறும், குடிமுறை குடிமுறை –  முறையாகக் குடிகள்தோறும், தேரின் தேடினால், கெடுநரும் உளரோ அகப்படாமல் போய் விடுவாரா, நம் காதலோரே நம் தலைவர்

 

1 கருத்து:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...