வெள்ளி, 22 ஏப்ரல், 2011

THE DIVING BELL AND THE BUTTERFLY

இன்று உலக புத்தக தினம்(ஏப்ரல்-23)

வாசிப்பை நேசிப்பவர்களுக்கானது!!




வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது! அதன் புதிர் முடிச்சுகளில் அவிழ்க்கப்படாமல் எத்தனை புதையல் மூட்டைகள் அமிழ்ந்து கிடக்கின்றன! ஒவ்வொரு பொழுது விடியும் போதும் நம் கற்பனைக்கும் எட்டாத அதிசய விஷயங்களை நம் முன் இந்த உலகம் கொட்டிக் கவிழ்க்கிறது.


இயற்கைக்கும் மனிதனுக்குமான விளையாட்டு, யாராலும் யூகிக்க முடியாத வினோதமான அலைகழிப்புகளில், மனிதனைப் புரட்டிப் போட்டபடியிருக்கிறது. இருப்பினும், மனிதர்கள் அசாதாரணமான எந்தச் சூழலையும் வென்று, அசாத்தியமான சாதனைகளைப் படைத்தபடி இருக்கின்றனர்.

‘ழீன் டொமினிக்' எனும் பிரெஞ்சு எழுத்தாளர் எப்போதும் உற்சாகமான, கொண்டாட்டமான மனநிலையுடையவர். பத்திரிகையாசிரியரும் கூட. விளம்பரங்களுக்கான மாடல்களைப் படம்பிடித்து அவர்களைப் பற்றிய தகவல்களை எழுதக்கூடியவர். செலின் என்கிற மனைவியும், மூன்று குழந்தைகளுமாக கவலையேதுமின்றி நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்.

எவரும் எதிர்பாராத வேளையில், திடீரென ஒருநாள் அவரது மூளையையும், முதுகெலும்பையும் இணைக்கும் நரம்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ‘கோமா' நிலைக்குத் தள்ளப்படுகிறார். மூன்று வாரம் அதே நிலையிலிருப்பவர், கண்விழிக்கும் போது தலையிலிருந்து கால் வரை எந்த உறுப்பும் இயங்காமல் போய்விடுகிறது. Locked in Syndrome எனும் முடக்குவாத நோய் காரணமாக இந்த நிலைக்கு ஆளாகிறார். இடது கண் விழியும் இமையும் மட்டும் அசைகிறது. காதுகள் கேட்கும் சக்தியை இழக்கவில்லை. பிரான்சின் கடற்கரை நகரமான ‘பெரக் சூ மெர்'-ன் அதிநவீன மருத்துவமனையில் அவருக்காக மருத்துவக் குழுவொன்று போராடிக் கொண்டிருக்கிறது. அவரது மூளை எல்லாவற்றையும் கவனிக்கிறது; உள்வாங்குகிறது. ஆனால் மூளையின் கட்டளைக்கு உறுப்புகள் எதுவும் (இடது கண் விழி மற்றும் இமைகள் தவிர) கீழ்படிவதில்லை. பேச்சுப் பயிற்சிக்காக ‘ஸ்பீச் தெரபிஸ்ட்' இருவர் மிகுந்த முயற்சி எடுக்கினனர். பேச்சுப் பயிற்சியினால் அவரோடு உரையாட ஒரு வழிமுறையைக் கண்டடைகின்றனர். ‘ழீனி'டம் இயங்கும் ஒருகண்ணை வைத்து அவரிடம் பேசியாக வேண்டுமென்பதால், அவருக்குத் தேவையானவற்றைக் கேள்விகள் வடிவில் கேட்பது; ‘ஆம்' என்பதற்கு ஒரு முறை கண்ணிமைக்கவும், ‘இல்லை' என்பதற்கு இருமுறை கண்ணிமைக்கவும் பயிற்சியளிக்கின்றனர். இது ஓரளவு பலனளிக்கிறது.

அதற்கடுத்த முயற்சியாக ஆங்கிலத்தில் அதிகம் பயன்படக் கூடிய எழுத்துகளை ஒரு ப்ளாஸ்டிக் பலகையில் பொறித்து ஒவ்வொரு எழுத்தாக ஒருவர் வாசிப்பது; ழீன் மனதில் உள்ள வார்த்தையின் எழுத்து வரும்போது ஒருமுறை கண் இமைக்குமாறு பழக்குகின்றனர். ஆக, அதுவரை கேட்ட கேள்விக்கு பதில் என்ற நிலையிலிருந்து சிறுசிறு வார்த்தைகளால் ஆன கேள்விகளைக் கேட்டுப் பதிலடையும் நிலைக்கு முன்னேற்றமடைகிறார். முதலில் வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் பேசும்(!) ழீன், கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கையடைந்து மனதை உறுதியாக்கிக் கொள்கிறார்.

பேச்சுப் பயிற்சி நிபுணர் மெண்ட்லில்-ன் சலிப்பற்ற உரையாடலில் உற்சாகமாகி, இழந்த தன்னம்பிக்கையைப் பெற்ற ழீன், தான் ஒரு புத்தகம் எழுத விரும்புவதாகவும், அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்கிறார். மெண்ட்லின் அதற்குச் சம்மதித்து, ஏற்கனவே ழீனுடன் ஒரு புத்தகத்துக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பதிப்பாளரிடம் பேசி அவர்களையும் சம்மதிக்கச் செய்கிறார். புத்தகம் எழுதும் பணி துவங்குகிறது. மாண்ட்லின் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து ழீனின் இமையசைவை வைத்து வார்த்தைகளைக் கோர்த்து வரிகளாக பத்தியாக, பக்கமாக புத்தகம் உருவாகிறது. கிட்டதட்ட இரண்டு இலட்சம் எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அதிகபட்சம் ஐந்து நிமிடம் என்கிற காலக்கணக்கில் மெண்ட்லினின் பொறுமையான ஒத்துழைப்பினால் ‘Diving Bell and the Butterfly' என்ற தலைப்பில் நூல் வெளியானது. Diving bell என்பது உருளும் விழிகளையும் Butterfly என்பது படபடக்கும் இமைகளையும் குறிப்பதாக ழீன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.

புத்தகம் வெளிவந்த பத்து நாட்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ழீன், இறந்து விடுகிறார்.

பிரான்சில் நடந்த இந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து ழீன் எழுதிய நூலின் தலைப்பையே கொண்டு படமாக வெளிவந்துள்ளது.

கதை ஒரு அசாதாரண, அசாத்திய நிகழ்வென்றாலும், அதைப் படமாக்குவதும் ஒரு சுவாரஸ்யமற்ற முயற்சிதான். ஆனால் வெகு சாமர்த்தியமான திரைக்கதை, படமாக்கிய நுட்பம், அற்புதமான ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு இவற்றின் மூலம் உலகின் மிகச் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால், அதில் நிச்சயம் இடம்பெறக்கூடிய படமாக இது அமைந்திருகிறது.

படத்தின் துவக்கக் காட்சிகள் மங்கலாக, தெளிவற்றுத் தெரிகின்றன. ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் பரபரப்பாக அங்குமிங்குமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக காட்சி தெளிவாகி, கிட்டதட்ட நம் முகத்துக்கு அருகில் வந்து மருத்துவர்கள் ஏதோ கேட்பது போல, அத்தனை நெருக்கமான மிக அண்மைய காட்சிகள் (Tight close-up shots). அதாவது, ழீனின் கண்கள் வழியே புறக்காட்சிகள் நம் முன் காட்டப்பட்டிருக்கின்றன. மருத்துவர்களின் கேள்விகளுக்கு ழீன் பதில் சொல்வதுபோல் ஒரு குரல் வருகிறது. ஆனால் அது மருத்துவர்களின் காதுகளில் கேட்பதில்லை. உண்மையில் அது ழீன், தான் பேசுவதாக நினைக்க, அது அவரின் ‘மனம்' பேசுகிற குரலென்பது சிறிது நேரத்துக்குப் பின்னே நமக்குப் புரியும். படம் துவங்கியபின் 37-வது நிமிடத்தில் தான் ழீனின் முழு உருவம் திரையில் தெரியும். அதுவரை படமாக்கப்பட்ட அத்தனைக் காட்சிகளும் ழீனின் பார்வைக் கண்ணோட்டத்தில் அல்லது பார்வை மையத்தில் இருந்து (Point of View) படமாக்கப் பட்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் ழீன் ஆக மாறியிருப்பீர்கள். தன்னம்பிக்கையோடு ழீன் தனது புத்தகத்துக்கான முதலெழுத்தை அடையாளப்படுத்தும் காட்சியில் தான் ழீனின் முழு உருவம் தெரியும் படி இயக்கியிருக்கும் படத்தின் இயக்குநர் ஜீலியன் உத்தி அபாரமானது.

ழீனிடம் நோய் வந்தபிறகு எஞ்சியவை மூன்றே விஷயங்கள் தான்.

1. அவரது நினைவுகள்

2.அவரது கற்பனைகள்

3.அசையும் இமைகள்

இவற்றை மட்டுமே வைத்து ஒரு படத்தை உருவாக்குவது அத்தனை சுலபமல்ல.

இம்மாதிரியான கதைக்குப் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் அதிகம் பயன்படுத்துவதுதான் இயக்குநருக்கு இருக்கும் ஒரே உபாயம். ஆனால், ழீனை நோய் தாக்கிய அன்று நடந்த சம்பவம், தந்தையுடனான அவரது நெருக்கத்தை உணர்த்தும் ஒரு காட்சி, மனைவி மற்றும் குழந்தைகளுடனான ஒரு காட்சி இவை தவிர பெரும்பாலும் முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட பின்னர் வரும் நிகழ்வுகளை வைத்தே மொத்தக் கதையையும் காட்சிப்படுத்துவது மிகப்பெரிய சவால். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குநர் ஜீலியன் ஸ்நாபெல்.

ழீன் மூன்றுவார கோமா படுக்கையிலிருந்து கண் விழிக்கும் படத்தின் துவக்கக் காட்சிகள், நீர் நிலைக்குப்பின் தெரியும் பிம்பங்கள் போல கலங்கலாகத் தெரியும் போது, ‘என்னப்பா கேமரா பண்ணியிருக்கிறான்' என்ற அபவாதத்தை பலரும் சொல்லியிருக்கக் கூடும். அதுவும், ழீன் இமை சிமிட்டி பதிலளிக்கும் காட்சியில், திரை ஒருமுறை இருண்டு பின் ஒளிர்கிறது. (Blink) குறைந்த நொடிதானென்றாலும், எடிட்டிங் பிழையென அதனை சிலர் கருதக் கூடும். இத்தனைக் கூக்குரல்களையும் ஈடுசெய்யும் விதத்தில், ழீன் புத்தகம் துவங்கும் காட்சியில் அலைபுரளும் கடற்கரையில் இயற்கையை அள்ளி இறைத்தும், ழீன் மனைவியின் கூந்தல் மற்றொரு காட்சியில் காற்றின் வீச்சுக்கு ஏற்ப ஆடுவதைப் படமாக்கிய காட்சியிலும் பிரமாதப்படுத்தி விடுகிறார்கள் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும்!

ழீன் தனது தந்தையின் மீது அதீத பாசமும் நெருக்கமும் கொண்டவர். 92 வயதில் மனம் சோர்ந்து, உடல் சோர்ந்து முதுமை காரணமாக நடக்க முடியாமல், அடுக்ககம் ஒன்றின் மாடி வீட்டில் குடியிருக்கிறார். ழீன் அவரை உற்சாகப்படுத்த முகச்சவரம் செய்து, முத்தமிட, நெகிழ்கிறார் அவரது அப்பா. (ஃப்ளாஷ்பேக்)

ழீன் முடக்குவாதத்தில் மருத்துவமனையில் கிடக்க, அடுக்ககத்திலிருந்து அவர் வரமுடியாத சூழலில் (94 வயதில்) மெண்ட்லிலின் உதவியோடு தொலைபேசியில் தன் அன்பைத் தெரிவிக்கும் காட்சி எவரையும் உருக வைக்கும் உணர்ச்சிப் பிழம்பான ஒன்று. “ழீன், உன் நிலையும் என் நிலையும் இப்போது ஒன்றுதான். உனது ஆன்மாவை உன்னுடல் அடைத்துப் பூட்டி விட்டது... நகர முடியாமல்... என்னை ... இந்த அடுக்கக வீடு...” என்று கண்ணீர் ததும்பக் கூறுமிடத்தில் எவர் மனமும் கரைந்துவிடும்.

பிரார்த்தனைக்கு ழீனை ஒரு தேவாலயத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்கிறார் மெண்ட்லில். பாதிரியாரும் வந்து விடுவார். ழீன், தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்று மறுதளிக்கிறார். ஆனால் மெண்ட்லில், பாதிரியார் மனம் புண்படாமலிருக்க வேண்டுமென்பதற்காக, ‘தனக்காக நீங்களும் இன்ன பிறரும் பிரார்த்திப்பது மகிழ்ச்சியளிப்பதாக' மொழிபெயர்த்துக் கூறுவார். கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் இப்படியான ‘தொடர்பாளர்கள்' இருந்தால் இப்படித்தான் கோளாறுகள் நிகழும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்புதானே...

உலகப் புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் பிறந்ததினமும், இறந்த தினமும் அதுதானென்பதால் அந்தத் தேதியை புத்தக தினமாக அறிவித்தனர். (ஷேக்ஸ்பியரின் இறந்த தினம் அதுவல்ல என்ற சிறு சர்ச்சை கூட உண்டு) மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளர் ‘சொர்வாண்டிஸ்'-ம் அதே தினத்தில் தான் பிறந்தார்.

ழீன் டொமினிக்கின் வாழ்க்கை வரலாற்றை இந்தப் படம் பார்த்த பிறகு, வாசித்தபொழுது ஆச்சர்யகரமாக அவரும் ஏப்ரல் 23ம் தேதியில் பிறந்திருக்கிறார் என்றறிந்தேன்.

‘வாழ்வும் எழுத்தும் வேறுவேறல்ல' என்று ழீன் கருதியதால்தான் ‘ உயிருள்ள பிணம்' போல படுக்கையிலிருந்த போதும் அவரால் ஒரு புத்தகத்தை உருவாக்க முடிந்தது. அதனால் தான் அவரது வாழ்க்கை இன்று ஒவ்வொரு மனிதனுக்குமான புத்தகமாகியது.


உண்மையில் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு முடக்குவாத நோய் இயங்க விடாமல் கட்டிப் போட்டபடி தான் இருக்கிறது. அந்தக் கால இரட்டைப் புலவர்கள் முதல் பாரதி வரை, புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய சில எழுத்தாளர்கள் வரை... உடற்கூறோ, வறுமையோ, குடும்பச் சூழலோ, உறவுச் சிக்கல்களோ... அவர்களதுகால்களையும் கைகளையும் கட்டி இழுத்தபடியே தான் இருக்கின்றன. அதையும் மீறிதான் அவர்கள் இயங்குகின்றனர்.


ஒவ்வொரு புத்தகத்திலும், அதன் வீரியம் மிக்க பக்கங்களுள் ஒட்டிக்கொண்டிருப்பது வெறும் ‘மை' மட்டுமல்ல. அது... அந்தப் படைப்பாளியின் ஆன்மா!


JULIAN SCHNABEL

1951-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த ஜீலியன் மிகச் சிறந்த ஓவியக் கலைஞர். அவரது ஓவியக் கண்காட்சிகள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. உண்மையில் அவரது ‘தட்டு ஓவியங்கள்'(Plate paintings) மூலம்தான் அமெரிக்காவெங்கும் அறியப்பட்டார். திரைப்படத்தின் மீதான ஆர்வத்தில். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது வணிக சினிமா அவரது நோக்கமாக இருக்கவில்லை.

இவரது முதல் படம் கூட ‘பாங்கிட்' என்னும் ஓவியரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதுதான். இவரது அடுத்தபடமான Before Nighi Falls-ம் ஒரு வாழ்க்கை வரலாறுதான். பரவலான பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது.

‘டைவிங் பெல்...' படத்துக்காக கோல்டன் குளோப் விருதினைப் பெற்ற ஜீலியன் ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றார்.

10 கருத்துகள்:

  1. நண்பரே
    படம் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்,அதை இவ்வளவு அழகாக காட்சிகளாக எங்களுக்கு கடத்திவிட்டீர்கள், உடனே பார்க்க ஆவலெழுகிறது,நல்ல அறிமுகத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அவசியம் பாருங்கள் கீதப்பிரியன் சார் ... ஜூலியன் ஸ்நாபெல்-ன் அற்புதமான கதை சொல்லும் உத்தி நிச்சயம் உங்களை கவரும். வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. //வாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்//

    எனக்கு இந்த வாக்கியம் மிகப் பிடித்திருக்கிறது. உண்மையும்கூட.
    வாசிக்கும்போது நேசிக்கும் நொடி
    சுவாசத்தில் ஏறும் பாசத்தின் நெடி.

    அருமையான பகிர்வு.
    தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்து வருகிறோம்..

    http://niroodai.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி .. தொடர்ந்து வாசியுங்கள் ..வாசிப்போம்.... வாழ்வை அர்த்தமாக்குவோம்

    பதிலளிநீக்கு
  5. ஒரு இடுகை எப்போது சிறக்கிறது என்றால் எழுத எண்ணிய செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறையில் . அந்த வகையில் உங்களின் இடுகை பாராட்ட தக்கது . வெளிநாட்டு திரை படத்தை பார்த்த திருப்தி பாராட்டுகள் .

    பதிலளிநீக்கு
  6. உங்களின் இந்த இடுகை வேறுபட்ட கோணத்தில் இருக்கிறது உண்மையில் பாராட்ட கூடிய வகையில் எழுதப்பட்டு உள்ளது நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் வலை தளத்தில் புதிது,புதிதாக விஷயங்கள் நிறையவே கிடைக்கின்றன...மனம் மிக்க உவகை கொள்கிறது...ம்....

    பதிலளிநீக்கு
  8. பாரதிக்குமார்21 மே, 2011 அன்று AM 6:02

    @ மாலதி & ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் வலைப்பூக்களையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்

    பதிலளிநீக்கு
  9. அழகான தொகுப்பு.. படிப்பவர்களை கண் கலங்க வைக்கும் வாழ்கை சம்பவம்.. இப்படி கூட நடக்குமா என்று யோசிக்க வைக்கும் ஒரு சம்பவம்.. வாழ்கை எவ்வளவு விசித்திரமானது.. ஆனாலும் அதை அழகாக, அன்பாக,அறிவாக மாற்றி கொள்ளும் மனிதர்கள் அதை விட விசித்திரமானவர்கள்.. ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவத்தை மிக அழகாக அடுத்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு நன்றி..

    " வாழ்வும் எழுத்தும் வேறுவேறல்ல " மிகவும் உண்மையான வரிகள்..
    ஆனால் ழீனின் வாழ்க்கையை உணர்ந்து பார்கையில், அவர் உணர்ச்சிகள் அற்ற நிலையில் ஏதேனும் ஒரு தருணத்தில் இப்படி எண்ணி இருக்க கூடுமோ என்று மனம் சொல்கிறது..
    வாழ்வும் எழுத்தும் வேறுதான்..
    ஆம்..!!
    என் வாழ்வில் நீ(உணர்வுகள்)யில்லாமல்
    என் எழுத்தில் மட்டும் நீ(உணர்வுகள்)யிருக்கையில்..!!
    கொஞ்சம் முரண்பாடாக இருக்கலாம்.. ஆனாலும் மனித மனம் ஏதோ ஒரு தருணத்தில் தனக்கான நிலையை குறித்து வருத்தப்பட தான் செய்கிறது..

    ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுக்கவும்..:-) அடிக்கடி தமிழ் எழுத வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளாததால், அது பிழைகள் இருக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறது..

    பதிலளிநீக்கு
  10. //வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது.. ஆனாலும் அதை அழகாக, அன்பாக,அறிவாக மாற்றி கொள்ளும் மனிதர்கள் அதை விட விசித்திரமானவர்கள்.. ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவத்தை மிக அழகாக அடுத்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு நன்றி..

    " வாழ்வும் எழுத்தும் வேறுவேறல்ல " மிகவும் உண்மையான வரிகள்..
    ஆனால் ழீனின் வாழ்க்கையை உணர்ந்து பார்க்கையில், அவர் உணர்ச்சிகள் அற்ற நிலையில் ஏதேனும் ஒரு தருணத்தில் இப்படி எண்ணி இருக்க கூடுமோ என்று மனம் சொல்கிறது..
    வாழ்வும் எழுத்தும் வேறுதான்..
    ஆம்..!!
    என் வாழ்வில் நீ(உணர்வுகள்)யில்லாமல்
    என் எழுத்தில் மட்டும் நீ(உணர்வுகள்)யிருக்கையில்..!!
    கொஞ்சம் முரண்பாடாக இருக்கலாம்.. ஆனாலும் மனித மனம் ஏதோ ஒரு தருணத்தில் தனக்கான நிலையை குறித்து வருத்தப்பட தான் செய்கிறது..//

    இத்த‌கைய‌ தெளித‌லும், புரித‌லும் என்னை பிர‌ம்மிக்க‌ச் செய்கிற‌து ம‌கேஷ். கால‌மும் க‌ட‌வுள‌ருளும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்க‌, புள‌ங்க‌கிக்கிறேன் நான்!

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...