வியாழன், 10 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 5

உன் குரல்:

பொருட்களற்ற அறையில் பேசினால் எதிரொலி கேட்குமே... அது போல இந்த இருட்டறையில் என் மனசாட்சியின் குரல் கூட எதிரொலித்தபடி இருக்கிறது. யாருமற்ற தனியறையில் பேசத் துவங்குகிறேன். கடவுளுக்குக் கேட்கக் கூடும். ஒருவேளை நீங்கள் பிற்காலத்தில் இதனை கேட்பீர்கள் என நம்புகிறேன். காற்றின் அலைகளில் நாம் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அழியாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும். என்றாவது எதிர்காலத்திலொருநாள் அவற்றை மறுபடி இனம் கண்டு யார் வேண்டுமானாலும் கேட்கும் காலம் வரலாம். அப்போது கேட்பீர்கள் என்று காற்றில் என் குரலைப் பதிவு செய்கிறேன்.

பாசத்துக்குரிய அப்பா...

நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. இங்கு நடந்த குற்றங்களுக்கு நான் மட்டும் பொறுப்பாளியில்லை. கூட்டமாகக் குழுவாக நகர்ந்து சென்ற திரளில் நானும் ஒருவனே தவிர, இன்னொரு உயிரைப் பறிக்கும் முஸ்தீபுகள் எதுவும் என்னிடத்தில் இல்லை. மனித சமுதாயத்தில் வேடிக்கை வினோதமாக ஒவ்வொரு எல்லைக்கும் நியாய அநியாயங்களின் அளவுகள், வரைமுறைகள் மாறுகின்றன. அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் அதிகபட்ச தண்டனை மரணதண்டனை என்றும், இன்னொரு மாகாணத்தில் அதே குற்றத்துக்கு (அங்கு மரண தண்டனைக்கு தடையாம்)ஆயுள் தண்டனை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். எதிர்பாராமல் யாரோ ஒரு பொறுப்பற்றவன் ஊதிய காற்றில் அந்த நெருப்பு பற்றிக் கொண்டது. அதில் இந்த தேசத்துப் பிரஜை ஒருவன் உயிர் விட்டான். எது நிகழ்ந்தது... என்ன ஆனது என யோசிக்கும் முன்பே நாங்கள் குற்றவாளியாக்கப் பட்டோம்.

நாங்கள் குற்றவாளிகளாகவும், சதிகாரர்களாகவும் இந்த சமூகத்தின் முன் நிறுத்தப் பட்டோம். மொழி தெரியாத இந்த தேசத்தின் பயங்கரங்கள் எல்லாம் இந்தப் பளிங்குக் கட்டிடங்கள், பகட்டான சாலைகளுக்கும் பின்னால் சட்ட புத்தகங்கள் வழியே தன் கோரப்பற்களைக் காட்டியபடி நின்றபோது தான் புரிந்தது நம் தேசத்தின் ஈரம் கசியும் சட்ட விதிகளின் அருமை.

உங்கள் சக்திக்கும் மீறி என்னைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். போதும் அப்பா... உங்கள் மீதான சுமைகளை இறக்கத்தான் இங்கு வந்தேனே தவிர, உங்கள் மீது புதிய சுமைகளை ஏற்றுவதற்காக அல்ல. யாருக்கும் பயன்படாமல் இப்படிச் சாவதுதான் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. மேலும் மேலும் என்னைக் குற்றவாளியாக்காதீர்கள்.

ஆனால் ஒருவகையில் எனக்கு மகிழ்ச்சிதானப்பா... என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் முயற்சிப்பதை வக்கீல் மூலம் அறிந்தபோது, நீங்கள் என்னைக் குற்றவாளியாகக் கருதவில்லை. என்னை வெறுத்தொதுக்கவில்லை என்பதை நினைக்கும் போது, நான் பிறவிப்பயனடைந்த மகிழ்வடைகிறேன்.

அம்மாவிடம் என்னைப் பற்றிச் சொல்ல வேண்டாம். எதுவும் தெரியாமலேயே அவர்களின் மரணம் அமைதியாக நிகழட்டும். தாயின் கடைசி நிமிடங்களில் அருகிலிருக்க முடியாத துர்பாக்கிய நிலை இனி எந்த தேசத்திலும் எந்த மகனுக்கும் ஏற்பட வேண்டாமென்பதே இப்போதைய எனது பிரார்த்தனை.

மீண்டும் ஒருமுறை இவ்வுலகில் பிறக்கமுடிந்து, அதில் உங்களை எனது மகனாக ஈன்று என் கடனையடைக்க முடியுமெனில்... மறுபிறவியை அதீதமாக நம்புகிறேன்... நேசிக்கிறேனப்பா...

பிரியமான யமுனா...

இந்த உலகத்தை விட்டுப் பிரிவதைவிட உன்னை விட்டுப் பிரிவது தான் என் துக்கத்தின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. வீட்டுக்குள் நுழைந்த மறு நிமிடத்திலிருந்து உன் குரல் அடுக்கடுக்காய் எனக்கான கேள்விகளைத் தாங்கியபடி ஒலிக்கும்.

“கட்டளைக் கலித்துறை அப்படீன்னு இருக்கே... அது என்ன கஷ்டமான வெண்பாவா? அபிராமி அந்தாதி, பட்டினத்தார் பாடல்களெல்லாம் கட்டளைக் கலித்துறையாமே...?

அடோப் பேஜ் மேக்கரில் பாலிகான் செட்டிங் அப்படீன்னு ஒரு ஆப்ஷன் இருக்கே... அது எப்படிண்ணா?

எஸபேஜியல்னு பேசவராதவங்களுக்குப் பயிற்சி தர்றாங்களே... அது பாஸிபிலா அண்ணா?

ஒரு மேட்சிலே கடைசிப் பந்து மட்டும் பாக்கியிருக்கு வின் பண்றதுக்கு. இரண்டு ரன் போதும். ஆனா பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிக்க மூணு ரன் வேணும். அப்படீன்னா அதுக்காக பேட்ஸ்மேன் மூணாவது ரன் ஓடிவர முடியுமா? கவுண்டிங்-ல வருமா?

தேவர் மக்கள் அனைவரும் உயர்திணை. ஏனைய யாவும் அஃறிணை தானே. அப்படின்னா வள்ளுவர், ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' அப்படீன்னு அஃறிணையில் முடிக்கிறாரே... அது ஏன்?”

இப்படி உன்னிடமிருந்து எல்லாக் கேள்விகளின் பரப்பும் ஆழமும் விஸ்தாரமானவை. உன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்லி விட முடியும். அல்லது தேடிக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், நீ என்னிடம் கேட்காத, என்னால் பதில் சொல்ல முடியாத கேள்வி ஒன்றுண்டு. அது உன் வாழ்க்கை...?...?...?

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம் என்கிற இங்குள்ள காட்டுமிராண்டித் தனமான சட்ட விதிகளின் படி என் உயிர்தான் என் குற்றங்களுக்கான பதிலென்றால்... போகிறது... ஏற்றுக் கொள்கிறேன்... ஆனால், இந்த நிமிடமே வேண்டுமென்பது குரூரமில்லையா...? குற்றவாளிதான் என்றாலும் அந்த மனிதனுக்கென்று சில கடமைகள் இருக்காதா? ஒரு மகனாக... தந்தைக்கு; ஒரு சகோதரனாக... சகோதரிக்கு... நிறைவேற்ற வேண்டிய கடமைகளை முடித்துத் தர அவகாசம் கொடாமல் தண்டிக்க நினைப்பது எந்த மனித தர்மத்தில் சேர்த்தி...?

நான் செய்ததிலேயே மிகப் பெரிய குற்றம் உன் வாழ்க்கைக்கு ஒளியேற்ற முடியாமல் செல்வதுதான். அதற்கான தண்டனை இந்தப் பிறவியில், இந்த உலகத்தில் தருவதற்கு, மனிதர்களில் தகுதியானவர்கள் யாருமில்லை. இந்த சூழ்நிலைக்கு என்னைத் தள்ளி விட்டவர்களுக்கான தண்டனையைக் கடவுளே தீர்மானிக்கட்டும்...

இனிய ஜனா...

நம்மைப் பிரிப்பது எந்த சட்ட விதிகளாலும் இயலாதது. ஒரு காதலன் காதலியைவிட நம்மைப் பற்றி நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். எதற்கும் கலங்கும் குணம் உனக்கில்லை. எது வரினும் எதிர்கொள்வாய். தேசத்தை மிக நேசித்ததாகப் பீற்றிய நான்கூட சுயநலத்துடன் வெளியேறினேன். ஆனால், நீ திட்டிக் கொண்டே இருந்தாலும் கூட அங்கேயே இருந்து போராடத் தீர்மானித்தாயே தவிர இடம் பெயரவில்லை... நிஜத்தில் நீதான் என்னைவிட தேச அபிமானி.

எதையும் விட்டுச் செல்லாமல் போகிறோமே என்ற குற்ற உணர்ச்சியிலிருந்து கொஞ்சமேனும் தேற்றுவது உனது நட்புதான்...

என்னுடைய மிகச்சரியான மாற்றாக நீ இருப்பதுதான் என் குடும்பத்துக்கு நான் தரும் ஒரே சொத்து. உன்னிடம் பகிர்ந்து கொள்ள ஏராளம் இருப்பினும் எனக்கான கடைசி வேண்டுகோள் இதுதான்...

“என் தேசத்தையும் குடும்பத்தையும் கைவிட்டுவிடாதே...”

எனக்கு எல்லாமுமாக இருந்த... இருக்கும் அபி...

இந்த உலகத்தின் அதிகபட்ச துரதிருஷ்டசாலியான என்னை ஏன் விரும்பினாய்? ஏதாவது ஒரு பூவின் இதழ் என்னைக் கடந்து போகும்போதெல்லாம் உன் வாசம் நினைவுக்கு வருவதும்... சிலீரென மழைத்துளி விரல் மீது படும்போது உன் ஸ்பரிசம் நினைவுக்கு வருவதும், ஏதாவது ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் போது உன்னோடு இருந்த பொழுதுகள் நினைவுக்கு வருவதும் தவிர்க்க முடியாததாகிறது.

இந்தப் பைத்தியக்காரத் தனமான ஏக்கங்களை ஒருபோதும் நீ ஏற்றுக் கொள்ளவே மாட்டாய். காதலில் நான் மிகப் பிற்போக்கானவன் அபி. அறியாமை என்றும் தோன்றலாம். பலசமயங்களில் அறியாமைதான் கடவுள்... அதனால்தானோ என்னவோ குழந்தைகளைக் கடவுள் என்கிறோம்.

ஒருவிதத்தில் இந்த வாழ்க்கை என்னை விட்டுப்போவதில் அதிகம் வருத்தமில்லை அபி. இலட்சியமற்ற, வெறும் பொறுப்புகளை நிறைவேற்ற சதா போராடிக் கொண்டிருக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கை மீது எனக்கு அத்தனை பிடிப்பு இல்லை. ஒருவேளை எனக்கு லட்சியத்தை சுமக்கும் தகுதி இல்லையோ என்னவோ...

ஆனால் நீ அப்படியில்லை அபி... அசாதாரணமானவள்... எனக்குள் இருக்கும் மயக்கங்களும் தயக்கங்களும் உனக்கு இல்லை. என் மீதான தண்டனையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறாய் என்று என் வக்கீல் மூலம் அறிந்தேன், சவால்களையே ஆயுதங்களாக்கி இன்னும் வலிமையுடன் போராடும் துணிச்சல் உனக்கு அதிகம்.

இந்த கொடூரத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இன்னொரு மனிதனைக் கொல்லும், இன்னொரு உயிரைப் பறிக்கும் எந்த அதிகாரத்துக்கு எதிராகவும் போராடுவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காதே. இன்னொரு அப்பாவி அவலமான மரணத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு வராதபடிக்குப் போராடு!! அதற்குத் தோள்கொடுப்பதாய் நீளும் எந்தக் கரங்களையும் ஏற்றுக்கொள்... எவர் கைவிட்டாலும் பரவாயில்லை... ஒற்றையாய் நின்று போராடு! நான் வாழாமல் போனாலென்ன... நம் காதல் வாழும்.

என்னுடைய பொருட்களனைத்தையும் பட்டியலிட்டுக் காண்பித்தார்கள். எனக்குச் சொந்தமான அவற்றை நான் சம்மதித்தால் பிரித்து யார் யாருக்கென்ற என் விருப்பப்படி அனுப்பி விடுவார்களாம். வேடிக்கையாக இருந்தது. எனக்குச் சம்மதமான என் உயிர் எனக்குள் தவித்தபடி இருக்கிறதே... அதை என்னிடமிருந்து பிரித்து யாருக்கு அனுப்பப் போகிறார்களென்று கேட்டேன்... யாரிடமிருந்து பதிலில்லை.

உன்னோடு பழகிய நாட்களில் நீ தந்த சிறு சிறு பரிசுகள், புத்தகங்கள், கைக்குட்டைகள், பேனா இவற்றை உன் பெயரிட்டு அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். அவை புனிதமானவை தான் என்னைப் பொறுத்தவரை...

ஆனால் இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கையில்லை என்று எனக்குத் தெரியும். அதுவும் கூட நல்லதுக்குத் தான். என் பிரிவு உன்னை வாட்டாது.

என் செல்போனிலிருந்து கவிதைப் புத்தகங்கள் வரை விசாரணைக்காக பறித்து விட்டார்கள். உன் முகத்தைக் கடைசி நிமிடம் வரை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியம் எனக்கு அருளப் படவில்லை. ‘எதை சாதித்து விட்டாய் நீ?' என்று கடவுளுக்கு என் மீது கோபமோ என்னவோ... எல்லாப் பரிசுகளும் நிராகரிக்கப் பட்டுவிட்டது எனக்கு...!

நண்பர்களாகப் பேசிக் கொண்டிருந்த இடத்தில் எங்கிருந்தோ வந்த கலவரக் கூட்டம் எங்கள் மீதும் வன்முறையைத் திணித்தது. எங்களைத் தாக்க வந்தவர்களைத் தடுப்பதற்காகத் தாக்கினோம். இதில் எவனுடைய மரணக் கணக்கோ என் பெயருக்கு நேராக எழுதப்பட்டு விட்டது.

திட்டமிடுதலும், தீவிரமானதுமில்லாமலும் நிகழ்ந்த மரணம் எப்படிக் குற்றமாகும் நீ சொல்? திட்டமிட்டே நாள் குறித்து, நேரம் குறித்து என்னைத் தூக்கிலேற்றுகிறார்களே... இந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை?

இன்னொரு உயிரைப் பறிக்கும் உரிமை வேறொரு மனிதனுக்கில்லை என்றால் என்னுடைய உயிரைப் பறிக்கும் உரிமையை யார் இவர்களுக்குத் தந்தது?

ஒருவனுடைய மரணத்துக்கு இன்னொருவன் தான் காரணமென்று நிரூபிக்கப் பட்டால், அந்த இன்னொருவன்தான் இறந்தவன் குடும்பத்துக்குப் பொருளாதாரப் பொறுப்பாளி, அவனே அந்தக் குடும்பத்தைக் கரையேற்ற வேண்டும்; காப்பாற்ற வேண்டும் என்று தீர்ப்பளிக்க எந்த சட்டத்திலும் ஏன் இடமில்லை?

கொலை செய்தவனால் பாதிக்கப்படுவது ஒரு குடும்பம் தானென்றால், தீர்ப்பளிப்பவனால் பாதிக்கப் படுவது இரண்டு குடும்பமில்லையா...? இதற்கு என்ன தண்டனை?

சட்டங்கள் வகுக்கப் பட்டதெல்லாம் தவறிய மனிதனைத் திருத்துவதற்கே என்றால், மரணத்துக்குப் பின் எப்படி என்னைத் திருத்தப் போகிறார்கள்?

மரணம் தான் தண்டனை என்று முடிவானபின் கழுத்தெலும்பு முறிபட அதை நிறைவேற்றுவது என்ன கொடூரம்?! மரணத்துக்கு இதைவிட வேறு மென்மையான வழிகளாயில்லை?!

தண்டனை நிறைவேற்றிய பின் குற்றவாளியில்லை என்று நிரூபணமானால் போன உயிருக்கும், இறந்தவன் மீதான கறைக்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

எனக்குத் தெரியும்... யாரிடமும் இந்தக் கேள்விகள் எதற்கும் பதிலில்லை என்று. ஆனால் அபி, நெஞ்சுரம் மிக்க உன்னைப் போன்ற அடுத்த தலைமுறைக்கு இந்தக் கேள்விகளை நான் விட்டு வைக்கிறேன் அபி. என்றாவது ஒரு நாள் இதற்கான பதில்களைத் தேடிப் பிடியுங்கள். அதுவரைக்கும் இது போன்ற தண்டனைகளை நிறுத்தி வையுங்கள்.

என் கடைசி ஆசையும், வேண்டுகோளும், பிரார்த்தனையும் இதுதான்!

இந்த உலகத்தில் தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் கடைசி நபர் நானாக இருக்கவேண்டும்......... .....


(குறுநாவல் முடிந்தது... ஆனால் கேள்விகள் முடியவில்லை)

11 கருத்துகள்:

  1. நண்பரே ,
    காற்றில் உன் குரல் எல்லா அத்தியாயமுமே நன்றாக இருந்தது,மீள் பகிர்ந்தமைக்கு நன்றி
    //
    தண்டனை நிறைவேற்றிய பின் குற்றவாளியில்லை என்று நிரூபணமானால் போன உயிருக்கும், இறந்தவன் மீதான கறைக்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?// பதில் சொல்வது மிகவும் கடினம் தான்.யாருக்குமே வரக்கூடாது இந்நிலை.

    பதிலளிநீக்கு
  2. சமீபத்தில் நீதியரசர் வி . ஆர். கிருஷ்ணையரின் " பல்வேறு உலகில் என் பயணம் " படித்தப் போது அவரும் கூட பொயக்குற்றத்துக்கு ஆளாகி தண்டனை அனுபவிக்கிற போதும் ஒரு நன்மை விளைகிறது , சிறை சாலைகள் மாற்றம் பெறவும் , கைதியை மனித தன்மையுடன் அணுகவும் அதை ஒரு வாய்ப்பாக தனது தீர்ப்புகளின் மூலம் நிறைவேற்றுகிறார். ஆனால் அவரை போன்ற பலர் இருப்பின் பதில் இல்லாத அந்த கேள்வியே இல்லாமல் ஆகியிருக்கும் . இப்போது பிரார்த்திப்போம், ஆசைபடுவோம், வேண்டுவோம் நெஞ்சில் உரமுடன் நேர்மை திறமுடன்.... சொல்ல வந்ததை சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை தோழமை வணக்கம் . .

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி கீத பிரியன் ... இது வெறும் குறுநாவல் மட்டுமல்ல சில தேசங்களில் இருக்கும் இந்த அநீதியான தண்டனை யாரேனும் ஒரு நிரபராதியை பலிகேட்கும்போது என்ன பதில் வைத்திருக்கிறோம் என்ற கேள்வியின் வெளிப்பாடே ...உங்கள் கருத்து பதிவாகும்போது அந்தக் கேள்விக்கான பலம் இன்னும் கூடுகிறது .

    பதிலளிநீக்கு
  4. மிக சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்... குறிப்பாக நீதிபதி கிருஷ்ண அய்யர் மரணதண்டனைக்கு எதிராக தன் குரலை மிக உக்கிரமாக பல இடங்களில் பதிவு செய்துள்ளார் மனித உரிமைகள் மீது அவரின் அக்கறை மிகுந்த புத்தகங்களை வாசித்துள்ள உங்களின் மனித நேயத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. இரண்டு நாட்களாயிற்று படித்து முடித்து, இந்த தொடரை..எப்படி கருத்தை பதிவிடுவது என்று புரியாத ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறேன் பாரதி... நேரில் விமர்சனம் சொல்லும் நிலை ஏற்பட்டிருந்தால் நான் அழுதிருப்பேன்.
    என்ன ஒரு கொடுமை பார்த்தீர்களா? மனிதர்கள் வகுக்கும் சட்டங்கள் தான் இது எல்லாமே.... தவறுக்கு தண்டனை ஒரு தவறென்று வகுத்திருக்கும் இந்த மனிதர்களை நாம் நாகரீக மனிதர்கள் என்கிறோம். எத்தனையோ புதுப்புது கண்டுபிடிப்புகளால் தன்னை மென்மேலும் உயர்த்திக் கொண்டிருக்கும் மனிதன், தனக்குள் இன்னமும் இருக்கும் மிருகத்தை இது போன்ற சட்டங்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். நாவலில் வருகிறவர்கள் வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல .... இப்படி எத்தனையோ குடும்பங்கள் அங்கங்கே தவித்துக் கொண்டு தானே இருக்கிறது...
    உங்கள் எழுத்துக்கள் அவர்களை உயிரோடு எங்கள் முன் உலவ வைத்திருக்கிறது பாரதி... பார்த்திக்காக, அவனைப் போன்று மரணதண்டனைக்கு முன் கையறு நிலையில் நிற்கின்ற எத்தனையோ பேருக்காக எங்களையும் தவிப்போடு பிரார்த்திக்க வைத்துவிட்டீர்கள்.....

    பதிலளிநீக்கு
  6. எல்லா உறவுகளையும் பேச வைத்த நீங்கள் அம்மா என்ற உறவை படுக்கையில் வைத்து பேசாமல் விட்டதில் உங்கள் மென் மனம் தெரிகிறது பாரதி... இப்படி ஒரு நிலையில் அந்த அம்மா பேசினால், ஐயோ நினைக்கவும் நெஞ்சம் பதறுகிறது.....

    பதிலளிநீக்கு
  7. ஆனால் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். உங்கள் எழுத்தின் அழகை இந்த கதையின் உணர்ச்சி வெள்ளம் போகிற போக்கில் கொண்டு போய்விட்டது. படிக்கும் யாரும் முதலில் கதையின் உணர்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து போகக்கூடும்... மறுபடியும் வாசிக்கையில் அல்லது யோசிக்கையில் தான் நீங்கள் எழுத்தில் காட்டியிருக்கும் வித்தைகள் புரிகிறது. இதுவும் கூட உங்கள் கதையின் வெற்றி தான் பாரதி,,, மனமார்ந்த பாராட்டுக்கள்.... அங்கங்கே தெறிக்கும் அந்த அழகை எடுத்துக் காட்டி பாராட்ட ஆசை தான். ஆனால் பாருங்கள் என் கருத்துரைகளின் நீளம் கண்டு அடுத்து கருத்து சொல்ல வரும் யாரும் பயந்து விடப் போகிறார்கள்...அதற்காக ஒரே வரியுடன் நிறுத்திக் கொள்கிறேன். "கவிதைகள் பல நிறைந்த குறுநாவல்.."

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி பிரியா ... என்ன சொல்வதென்று தெரியவில்லை ... ஆனால் உங்கள் கருத்துரை வாசித்து நெகிழ்ச்சியுடன் இருக்கிறேன் ... ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது ஒரு வாசிப்பாளரின் உள்வாங்கும் வாசிப்பே ... அந்த வகையில் நீங்கள் எனக்கு அளித்த கவுரவம் மிக்க விருதாக கருதுகிறேன் ... நீங்கள் சரியாக கணித்து இருக்கிறீர்கள் அம்மாவை பேசும்படி அமைத்து இருந்தால் என்னாலும் கூட முழுமையாக எழுதியிருக்க முடியாது ... இந்த குறுநாவலுக்காக இத்தனை பொறுமையுடன் ... இத்தனை சிரத்தையுடன் கருத்துரை இட்ட உங்களுக்கு மீண்டும் நன்றி .. இந்த குறுநாவலை பொறுமையாக கணினியில் டைப் செய்து இடுகையிட்ட என் துணைவி நிலாமகளுக்கும் இந்த பெருமை சேரும் ..

    பதிலளிநீக்கு
  10. வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  11. வலைச்சரம் இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் எஸ்கே.வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி இன்னும் சிறப்பாக செயல்பட தாங்கள் காட்டிய பரிவு... என்னை ஊக்கப்படுத்தியுள்ளது.

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...