ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மறக்கப் பட்ட மகாத்மாவின் அஸ்தி! (Road to Sangam)


             பயணங்களின் போது ஒரு ஊர் வந்துவிட்டதை உணர்த்த முன்பெல்லாம் பெயர்ப் பலகைகள் மட்டுமிருந்தன. இப்பொழுதெல்லாம், சாலையின் இருமருங்கிலும் டிஜிட்டல் பேனர்கள் ‘சொல்லவே கூச'த் தகுந்த பட்டங்களைச் சுமந்தபடி உள்ளூர் உருப்படிகளும், தேசியத் தலைவர்களும்...


அந்தப் பட்டங்களையும் அதீதத் துதிகளையும் பார்க்கும் போது நம்மை முட்டாளாக்குகிறார்களா அல்லது சம்பந்தப்பட்ட தலைவர்களைக் கேலி செய்கிறார்களா என்று புரியவில்லை.

வாழும் காலத்தில் தன்னை ‘மகாத்மா' என்று அழைத்ததற்காகப் பதறிப் போனார் காந்தி. இத்தனைக்கும் அவரை முதன்முதலில் அப்படியழைத்தவர்கள் பலனை எதிர்பார்த்து எதையும் செய்யாத வெகுளியான பழங்குடி மக்கள்(மத்தியப் பிரதேச ‘கோண்ட்' இனப் பழங்குடிகள்) உண்மையில் தான் ‘மகாத்மா' என்றழைக்கப் படுவதற்காக காந்தி மிகுந்த சங்கடமும், அசூசையும் அடைந்தார். (இன்றைய காந்தி-ஜெயமோகன், பக்கம்-23)

“மகாத்மா என்ற பட்டம் என்னை பல முறை கடுமையான மனவலிக்குத் தள்ளியிருக்கிறது. எனக்கு இந்த உலகத்திடம் சொல்ல புதியதாக ஏதுமில்லை.உண்மையும் அகிம்சையும் புராதனமான மலைகளைப் போன்றவை. என்னால் முடிந்தவரை நான் அவ்விரண்டையும் என் சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயன்றேன் என்று மட்டுமே சொல்ல முடியும். ஆனால் நான் அச்சோதனைகள் மூலம் அடைந்த அனுபவங்களை விளக்குவதற்கு எப்போதுமே தயாராக இருப்பேன். அதன் மூலம் நான் அரசியலில் செயல்படுவதற்கான வலிமையை அடைந்தேன். ஏராளமான மனிதர்கள் என்னை மதிப்பதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால் நான் வேறு எவரையும் விட அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறேன்” -இது நீங்கள் ஏன் மகாத்மா என்று அழைக்கப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு காந்தி சொன்னது.(இன்றைய காந்தி- ஜெயமோகன், பக்கம் -24)

போலி தேசியம் பேசுகிற தாங்களே காந்தியின் குலவாரிசுகள் என்று பிதற்றுகிற பிதாமகர்கள் மறந்து போன விஷயம் ஒன்று, 1995-ல் அம்பலமானது. காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி கரைக்கப் படாமலும், கோரப் படாமலும் ஒரிசாவின் கட்டாக் நகர வங்கியொன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தில் மறதியாக விட்டுவைக்கப் பட்டிருந்தது எதேச்சையாகக் கண்டுபிடிக்கப் பட்டது.

காந்தியின் இளைய மகன் மணிலால் காந்தியின் பேரன் துஷார்காந்தி இது பற்றியறிந்து, நீதிமன்றம் மூலம் அதனைப் பெற்று 1997-ல் ஜனவரி 30ம் தேதி, இந்தியா சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாடிய போது அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமத்தில் கரைத்தார்.

காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி ஏன் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டு இத்தனை வருடங்கள் மறந்து போனது என்பது இன்றும் புரியாத புதிர். ஆனால் இச் சம்பவம் ‘அமீத்ராய்' மனதில் ஆழப்பதிந்து ஒரு திரைக்கதையை உருவாக்கியது.

Road to Sangam என்ற பெயரில் இயக்கிய அவரது முதல் இந்திப்படம் கடந்த ஆண்டு ஜனவரி 30-ல் வெளியானது.

தென்னாப்பிரிக்க படவிழாவில் சிறந்த முதல்பட இயக்குனருக்கான விருது உட்பட சுமார் பத்து விருதுகளைப் பெற்ற இப்படம் வழக்கம் போலவே இந்தியப் பார்வையாளர்களிடமும், பத்திரிகைகளிலும் அதிகம் முன்னிறுத்தப்பட வில்லை.

கொஞ்சம் மசாலாத் தூவி பெரும் வெற்றிபெற்ற ‘லஹே ரஹோ முன்னாபாய்' படத்தைக் காட்டிலும் காந்தி மீதான மரியாதையை அதிகம் வெளிப்படுத்திய இப்படத்தின் திரைக்கதை எவ்வித முகச்சுளிப்புக்கும் இடமளிக்காத அற்புதமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

அலஹாபாத்தில் மிகச் சிறந்த கார் மெக்கானிக் ஹஸ்மத்துல்லாவிடம் மிகப்பழமையான V8 மாடல் ஃபோர்டு என்ஜின் பழுது பார்ப்பதற்காக அவரது நண்பரால் அளிக்கப் படுகிறது.

அந்த என்ஜின் எத்தகைய மகத்துவம் வாய்ந்தது... அது எதற்காக இப்போது பழுது நீக்கும் பணிக்கு அனுப்பப்படுகிறது என்கிற விவரம் அவருக்கு தெரிவிக்கப் படவில்லை. ஒரு சவாலாக கருதிக் கொண்டு அந்த என்ஜினை தயார் செய்யும் பணியில் ஈடுபட ஹஸ்மத்துல்லா தனது மகனுடன் முனைகிறபோது, அலகாபாத் நகரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து அப்பாவிகள் பலர் பலியாகின்றனர். முஸ்லீம் தீவிரவாதிகள் தான் வைத்திருக்கக் கூடும் என்ற கணிப்பில் நகரில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப் படுகின்றனர்.

பெரியவர் ஓம்பூரியின் தலைமையில் கூடும் இஸ்லாமியர்கள் இதனை எதிர்த்து ஊர்வலமாக காவல்துறையிடம் மனு கொடுக்கச் செல்கின்றனர். அந்த ஊர்வலத்தின் போது நடக்கும் தடியடியில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் இறந்து போகிறார்.

இதன் காரணமாக இஸ்லாமிய வணிகர்கள் காலவரையறையற்ற கடையடைப்பு நடத்தும்படி முடிவெடுக்கிறார்கள்.

கார் வேலைகளைப் பாதியில் நிறுத்தும் நிலை ஏற்படுவதால், அதுபற்றித் தகவல் தெரிவிப்பதற்காக நண்பரைத் தொடர்புகொள்கிறார் ஹஸ்மத்துல்லா. அப்போதுதான் , மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி ஒரிஸாவிலிருந்து அவரது கொள்ளுப் பேரன் துஷார் காந்தியால் எடுத்துவரப்பட்டு, அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமத்தில் கரைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பிற இடங்களில் காந்தியின் அஸ்தி கரைக்க உபயோகப்படுத்திய பழைய வண்டியிலேயே செல்ல துஷார் காந்தி விரும்புவதால், அந்தக் காரின் என்ஜின் தான் ஹஸ்மத்துல்லாவிடம் தரப்பட்டுள்ளது என்ற விவரம் அறிகிறார் ஹஸ்மத்துல்லா.

ஜனவரி 30-ம் தேதி (காந்தி இறந்த தினத்தில்) அந்த நிகழ்வு நடக்கவிருப்பதால், அதற்குள் கார் தயாராக வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டதால், நெருக்கடிக்கு உள்ளாகிறார் ஹஸ்மத்துல்லா. முஸ்லீம் பெரியவர்கள் கசோரி(ஓம்பூரி) மற்றும் மெளலானா குரோஷி (பவன் மல்ஹோத்ரா) ஆகியோரிடம் கடைதிறக்க அனுமதி கேட்கிறார். அவர்கள் மறுக்கிறார்கள். இந்தப் புனிதமான பணிக்குத் தன்னைத் தேர்ந்தெடுத்ததைப் பெருமையாகக் கருதும் ஹஸ்மத்துல்லா, இது எந்தவொரு இந்தியனின் மகத்தான கடமையென்று புரியவைக்க முயல்கிறார். வேறு வழியின்றி அவர்களது கட்டுப்பாட்டை மீறி கடை திறந்து கடைக்குள் தன் மகனுடன் என்ஜினை பழுது நீக்கும் பணியில் ஈடுபடுகிறார். சில இஸ்லாமிய இளைஞர்கள் அவரைத் தாக்கவும் முனைகின்றனர். எல்லா எதிர்ப்புகளையும் மீறி, அன்பின் வழியில் ஒவ்வொரு நண்பராக அப்பணியில் ஈடுபட வைக்கிறார் ஹஸ்மத்துல்லா.

ஒரு வழியாக என்ஜின் தயாராகி பொருத்தப்பட்டு சரியாக இயங்கவும் செய்கிறது. ஜனவரி 30-ல் காந்தியின் அஸ்தியை சுமந்தபடி ஹஸ்மத்துல்லாவும் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வசிக்கும் அவரது தெரு வழியே செல்ல வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்து அதில் வெற்றியும் பெறுகிறார்.

மறுபடி கசூரிடமும், சக இஸ்லாமிய சகோதரர்களிடமும், காந்தியின் அஸ்தியை சுமந்து வரும் போது, ஊர்வலத்தில் நாமும் நடந்து சென்று அந்த மகானுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று வாதாடுகிறார். கார் அவர்கள் வீதி வழி வருகிறது. ‘வைஷ்ணவ ஜனதோ' பாடல் ஒலிக்க மிகுந்த உணர்ச்சியோடு நகரும் ஊர்வலத்தில் கசூர் உட்பட ஒவ்வொரு இஸ்லாமியரும் உடன் சேர்ந்து நடக்க திரிவேணி சங்கமத்தை நோக்கி நகர்கிறது ஊர்வலம்.

‘பரேஷ் ராவல்' (ஹஸ்மத்துல்லா) தன் உன்னதமான நடிப்பால் படத்தைப் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.

காந்திஜியைப் பற்றிய அறிதலும் புரிதலும் மிகத் தேவையான இத்தருணத்தில் மிகச்சரியான சமயத்தில் இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கிறது. இந்திய தபால் துறை இந்தப் படத்திற்கான பிரத்யேகத் தபால் அட்டைகளை வெளியிட்டது. என்றாலும், வெற்றுத் தலைவர்களின் கூச்சலில் காந்தி மறக்கப் பட்டது போல் இந்தப் படத்தையும் மசாலாப் படங்களின் விளம்பர வெளிச்சம் மறைத்துவிட்டது. பொது வாழ்வில் நேர்மையை, எளிமையை முன்னிறுத்திய நிகரற்ற தலைவர் காந்தியைப் பற்றி வாசிக்காமலேயே அவர் மீது விமர்சனங்களை முன்வைப்பதுதான் அறிவுஜீவித் தனமென்று நம் மக்கள் மனதில் படிந்துவிட்டது.

வரலாற்றின் பக்கங்களில் மகான்களையும் ஞானிகளையும் பின்பற்ற முடியாத இயலாமையை மறைப்பதற்காக கொஞ்சமும் அறமின்றி விமர்சிக்கத் தலைப்படுகிறார்கள். இன்றைய நிலையில் காந்தியின் தேவையை நினைவூட்டுகிற மிகச் சிறந்த படம் Road to Sangam.
 
(இந்த வார (6/2/2011 தேதியிட்ட) கல்கியில் பிரசுரமானது.) 

6 கருத்துகள்:

  1. மிக அருமையான படம்.
    உணர்ச்சிகரமான நடிப்பு
    பரேஷ் ராவலை மிகவும் பிடித்தது.
    மறக்கடிக்கப்பட்ட படம்.உங்கள் விமர்சனம் மிகவும் அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. மறந்தால் தானே இன்றைய அரசியல் வியாதிகளின் கொள்கை எடுபடும்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி கீதப்பிரியன் சார் சௌந்தர சுகன் உங்களுக்கு கிடைக்கிறதா? அதில் தொடர்ந்து இன்னும் விரிவான விமர்சன கட்டுரை தொடர் எழுதுகிறேன் முடிந்தால் வாசியுங்கள் ..

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ஜோதிஜி நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னூட்டம் வழியே சந்திப்பதில் மகிழ்ச்சி ..

    பதிலளிநீக்கு
  5. ஆஹா..ப்ரமாதம் மிஸ்டர் பாரதிக்குமார்..இந்த தேசத்தில் இப்படி ஒரு மாமனிதர் பிறந்தார் என்பதே நம் வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் செய்தியாக இருக்கட்டும்!!

    பதிலளிநீக்கு
  6. அஸ்தியை மறந்தது போல் ஒரு காலத்தில் மகாத்மாவையே மறந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் எடுக்கப்பட்ட படம் தான் ரோடு டு சங்கம் . இந்த கட்டுரையும் அதன் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...