செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

திசையெட்டும் சிறகு விரிக்கும் கவிதைப் பட்சி

திசையெட்டும் சிறகு விரிக்கும் கவிதைப் பட்சி                                                                -அன்பாதவன்
   
        “சிந்தை முழுவதும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறுபெயர்தான் கவிதை. கவிஞனுடைய வேலை இந்த சக்திக்கு தன்னை ஊற்றுக் கண்ணாகத் திறந்து கொள்வதுதான். இயற்கை என்ற ஒளியை விசிறும் மின்சாரம்தான் கவிதை. அந்த மின்சாரத்தை இயற்கையாகக் கவிஞன் உணர்கிறான். அவனை அவனது பாஷை மூலம் நாம் உணர்கிறோம். ஆகவே பாஷைத் தகட்டைச் செப்புக் கம்பியாக நீட்டி, தன் ஆத்மாவினுள் கரைந்த கவிதையைப் பாய்ச்சுகிறான். நம்மூடேயும் அக்கவிதை பாய்ந்து மனதில் ஒளியாகப் பூக்கின்றது”
-எனக் கவிதையூறும் கோட்பாட்டைச் சொல்வார் பிரேமிள்.

         ஒரு கதைக்காரராக, திரைப்பட ரசனையாளராக சிறந்து விளங்கும் பாரதிக்குமாரின் மற்றுமொரு பரிமாணமாய் ‘மிச்சமிருக்கும் ஈரம்' கவிதைத் தொகுப்பு.

        ‘என் படைப்புகள் பிரசுரத்துக்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல... அவை என் இருப்பின் பிரகடனங்கள்' எனப் பேரிகை முழக்கமிடும் பாரதிக்குமாரின் கவிதைவெளி மிகப் பெரியது. வானுக்கு கீழுள்ள அனைத்தையும் கவிப்பொருளாய்க் காண்பது.

         மிச்சமிருக்கும் ஈரம் தொகுப்பில் உறவுகளும் தோழமையும் ஊடும் பாவுமாய் கலந்து செல்கின்றன. எல்லாக்கவிதைகளையும் குறித்துப் பேசலாம். அது ஒரு பாணி; எனினும் எனக்குப் பிடித்த மூன்று கவிதைகளால் இந்தத் தொகுப்பை எடைபோட உத்தேசம்.

        மூன்று கவிதைகளும் ‘உறவு' குறித்துப் பேசுபவை;  உறவைப் பேணுபவை.
 ‘முகவரிகள்'
 ‘சொல்லாமல் செல்வது'
 ‘மிச்சமிருக்கும் ஈரம்'

            முகவரிகள் கவிதை, பெருங்கூட்டத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட மனதொன்றின் ஆற்றாமையாக பதிவாகியுள்ளது. ஒரு நல்ல திரைப்படத்தின் உத்தியோடு நெய்யப்பட்டது.
           அப்பத்தாவை ஒதுக்கி உதாசீனம் செய்த உறவுக்கூட்டம்தான் இப்போது இந்தக் கவிதைசொல்லியையும் உதாசீனம் செய்து ஓரங்கட்டி மூலைக்குத் தள்ளுகிறது. புறக்கணிப்பின் வலி புரிந்தவர்கள் யாவரும் இந்தக் கவிதையின் வலியை, அவஸ்த்தையை அறிய முடியும்.
           முதல் வரியில் லாங் ஷாட்டில் அப்பத்தா வீசியெறியப்பட்ட மூலையைக் காட்டுபவர், கடைசி வரிகளில் க்ளோசப் ஷாட்டில் சொல்கிறார்...
         “... அப்பத்தா உன் முகத்தின் சுருக்கங்களை
         இப்போது புரிந்து கொள்ள முடிகிறது
        வரிகளுக்கிடையே புதைந்து கிடந்தவை
        வருடங்களல்ல...
        வருத்தங்களும், உதாசீனங்களும்தான் என்று.”

         ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்' என்கிற குறளின் காட்சிப் படிமமாய் விரியுமொரு வெற்றி பெற்ற கவிதை இது!

         ‘சொல்லாமல் செல்வது' கவிதையில் ஒரு கதை சொல்கிறார் பாரதிக்குமார்.
          மரணம் சம்பவித்த வீட்டில் சொல்லிக் கொண்டு போகலாகாது என்ற மரபை, உறவுகளின் இன்னொரு முகத்தைக் காட்ட வாகாக எடுத்துக் கவிதை நெய்திருக்கிறார் கவிஞர்.
             தந்தையின் மரணம். தந்தையின் உடன் பிறந்த உறவுகளுக்கு அது செத்த பிணம்! 
       காடாத் துணியை கோடித்துணியாகக் கொணர்ந்த பெரியப்பா!
       வாய்க்கரிசியை மறந்த அத்தை!
       இன்னொரு தரம் வர மனம் அலுக்கும் மாமா!
       உடன்பால் தெளிச்சிட்டா ஊருக்குப் போக சவுகர்யமென முணுமுணுக்கும் சித்தி!
என உறவுகள் எனும் பெயரில் காகிதச் சங்கிலிகள் ஒருபுறம்.

       இன்னொருபுறம், நிராதரவாய் நிற்கும் அம்மா, அக்கா, தம்பியென கையறு நிலை உறவுகள்.
          இந்தக் கவிதையைப் படித்தபோது என் தந்தையின் மரணமும் பிறகு நிகழ்ந்த கசப்பான சம்பவங்களும் நினைவுக்கு வந்தன.
         ஒவ்வொரு வீட்டிலும் இப்படியோர் கசந்த மரம் இருக்கக் கூடும்!

        இப்படியாகப் புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் சுயநலங்களும் கூடிய சமூகத்தில் வாழத் தேவை மனத்திட்பம்! அதைத் தான் ‘மிச்சமிருக்கும் ஈரம்' கவிதையில் காட்டுகிறார்.

       ‘...எதிர்கொள்ள எத்தனிப்பதற்குள்
        எல்லாப் புயல்களையும்
        எனக்கெதிராய் வீசச் செய்கிறது
        வாழ்வின் அவலச் சூழல்.
         ... ... ...
          ... ... ...
         எந்த ஆதாரமும் இல்லாமல்
         என் காலடியில் நழுவுகிறது
         வாழ்க்கை'

       ஆனால், யதார்த்தமென்பது குரூரம் மட்டுமல்ல! ஏதோ ஓர் மூலையில் கருமேகம் சூழும்! மழைத்துளி வீழும்! என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்தக் கவிதை. தோட்டத்துள் மட்டுமல்ல; தோட்டத்துக்கு வெளியிலும் பூக்கள் சில மலர்வதுண்டு என்ற நன்னம்பிக்கை முனையைக் காட்டுவதாய் இக் கவிதை.

        பாரதிக்குமாரின் கவிதைகள் பலவற்றிலும் கவிதைப் பொறி நிறையவே இருக்கிறது. செய்நேர்த்தியும், நுட்பமும் சரிவிகிதத்தில் சேர்ந்திருக்குமானால், மாபெரும் வெற்றித் தொகுப்பாக இந்நூல் மின்னியிருக்கக் கூடும்.

         ஆனாலுமென்ன... கவிதை அழகுதான் என்றாலும் மனிதம் கவிதையைவிட உயர்ந்தது!
 

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

அபோகாலிப்டோ (APOCALYPTO)

        

        மானிடவியல் ஆய்வென்பது எல்லா தேசத்திற்கும், எல்லா இனத்திற்கும் தேவையான ஒன்று. ஒரு பக்கம் தொல்லியல் ஆராய்ச்சியென்பது தனிமனித ஈடுபாட்டைச் சார்ந்தே இருக்கிற அவலம்; இன்னொருபக்கம், தொன்மைக்காலச் சின்னங்கள் அழிகின்ற சூழல்; மற்றொரு பக்கம், வரலாற்றைத் திரிக்கும் தந்திரசாலிகளென்று அறிய முற்படுகிறவர்களுக்கும், வன்மையான வரலாற்றுக்குமிடையே எத்தனையோ தடைக்காரணிகள்.
          வரலாற்றாய்வாளர்களும் மானுடவியல் ஆய்வாளர்களும் உழைத்துப் பெற்ற கனிகளைச் சுவைக்கவும், விதை பரவலாக்கத்துக்குத் துணை செய்யவும் வேண்டியவர்கள் படைப்பாளர்களே...
 இங்கே உள்ள திரைக்கலைஞர்கள் ஒன்று, வரலாற்றை அறியாதவர்களா இருக்கின்றார்கள்; அல்லது, வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் அவற்றில் கற்பனைக் கலப்பை அதிகரித்து விடுகிறார்கள்.
           இந்த தருணத்தில் அழிந்து போன ‘மாயா' இனத்தவர் பற்றிய ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படமாக மெல்கிப்சனின் அபோகாலிப்டோவைக் குறிப்பிடலாம்.
            கிறிஸ்து பிறப்பதற்கு  கிட்டதட்ட 1600 வருடங்களுக்கு முன் மத்திய அமெரிக்க நாடுகளென்று அறியப்படும் இன்றைய குவாதிமாலா, எல் சால்வடார், மெக்சிகோவின் சிலபகுதிகளில் வாழ்ந்து வந்த இனம்தான் ‘மாயன்' இனம்.
            கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடியடைந்த போதுதான் (உண்மையில் அவர் இந்தியாவைக் கண்டறியும் நோக்கில் பயணித்து, தவறாக இந்தியா என நினைத்து அமெரிக்காவில் இறங்கினார்) ஐரோப்பியக் குடியேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகே முறைமைப் படுத்தப்பட்ட எழுத்துமுறை பரவலாக அப்பகுதிகளில் ஏற்பட்டது. ஆனால் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் (‘மாயன்கள் வாழ்ந்த பகுதிகளில்) எழுத்துமுறை மொழியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமானதொரு விஷயமாகும். அது மட்டுமல்லாமல் வானியல் மற்றும் கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.
           அவர்களது எண்கள் பயன்பாட்டு முறையை விளக்கும் படத்தினைப் பார்த்தால், அதில் அவர்கள் பூஜ்ஜியம் மற்றும் கோடுகளை வைத்துக் கணக்கிட்ட முறை புரிபடுகிறது. கணினித்துறையில் இருப்பவர்களுக்கு, கணினியின் அடிப்படை அமைப்பியல் சூத்திரம் 1,0 என்று இரண்டு எண்ணை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டது என்பது எளிதாகப் புரியும். கிட்டதட்ட மாயன் எண்கள் அதே போல் இருப்பது கண்டு வியப்பாயிருக்கிறது.
         
            மாயன் காலண்டர் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் துல்லியமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் வருவதை முன்கூட்டியே இன்ன தினத்தில் வருமென அறுதியிட்டுப் பிரிக்கிறார்கள். ‘சூரியகாலம்' என்பது அவர்கள் சுழற்சி முறையில் 1,336,500 நாட்கள் கொண்ட தொகுப்பாக இருக்கிறது. அதன்படி அவர்கள் கணக்கிட்ட நான்காவது சூரிய காலத்தில் நாம் இருக்கிறோம்.
           ஐந்தாவது மற்றும் இறுதி சூரியகாலம் வரும் 2012-ம் ஆண்டு திசம்பர் மாதம் 21-ம் தேதி வருகிறது. அன்று இந்த உலகம் அழிந்து விடுமென்பது அவர்களது ஆரூடம்.
            மாயன்களின் ஆரூடங்கள் அவர்களது நம்பிக்கைகள் சார்ந்த விஷயம். இப்படியான ஆரூடங்கள் ஜோதிடம் மாதிரியல்ல. அசரீரி மாதிரி அவர்களில் சிலருக்குத் தோன்றுவதைக் கூறுவார்கள்.
          மாயன்கள் தங்களது ஆரூடங்கள், கலை ஆகியன சம்பந்தமாக அந்தக் காலகட்டத்திலேயே புத்தகங்களாகத் தயாரித்திருக்கின்றனர் என்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது. ஸ்பெயினின் ஆக்கிரமிப்பில் அவற்றை அழித்து விட்டனர். அதில் எஞ்சிய நான்கு புத்தகங்கள் இன்னும் இருப்பதாகச் சொல்கின்றனர்.
             ‘மெஸோ அமெரிக்கன்கள்' என்று மானிடவியல் நிபுணர்களால் குறிப்பிடப்படும் ‘மயன் நாகரீகத்துப் பழங்குடியினரின் பல நகரங்களும், பிரமீடுகளும் யுனெஸ்கோவினால் பாரம்பர்ய சின்னங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
             மத்திய அமெரிக்காவின் அதிகபட்ச மக்கள்தொகை இனமாக இருந்த ‘மாயன்கள்' இன்று 6 லட்சம் பேர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மாயா மொழி கிட்டதட்ட வழக்கொழிந்து விட்டது. ஸ்பெயினின் ஆக்ரமிப்புக்குப் பிறகு ‘ஸ்பானிஷ்' தான் பெரும்பான்மையோரின் மொழியாக இருக்கிறது. மாயா நாகரீகம் கிட்டதட்ட அழிந்துவிட்டது. மயன்கள் இன்று கலப்பின மக்களாகவே இருக்கின்றனர்.

          இந்தப் பின்னணிகளைப் புரிந்து கொண்டு அதன்பின் அபோகாலிப்டோ திரைப்படத்தைப் பார்த்தால்தான் உலகின் அழிந்து போன இனங்கள் மற்றுமவர்களின் நாகரீகம் பற்றிய கண்ணோட்டத்தோடு அதனைப் பார்க்க முடியும்.
           இப்படம் பார்த்த சிலரிடம் படம் பற்றிய விமர்சனங்களைக் கேட்ட போது அவர்கள், இரண்டு பழங்குடிக் குழுக்களிடையே நடக்கும் பயங்கரமான மோதல் பற்றிச் சொல்லும் வன்முறைக் கலாச்சாரம் விரவிய படமென்று நம் ‘அரிவாள்+அண்டர்வேல்ட்' படங்கள் பற்றிக் குறிப்பிடுவது போலவே சொன்னார்கள்.
           இப்படத்தின் கதை வெகு சராசரியானது. யூகாட்டின் மெக்சிகோ வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் (மயன்) மிருகங்களை வேட்டையாடி பச்சையாக சாப்பிடும் அளவுக்கு நாகரீகமடையாத காட்டு மிராண்டி கும்பல். அந்தக் கூட்டத்தின் தலைவன் ஃபிளிண்ட் ஸ்கை எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பவன். அவனது மகன் ஜாகுவார்பா துணிச்சலும், வீரமும் மிகுந்தவன்.  அவன் மனைவி செவன். இவர்களுக்கொரு மகன். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவன் ஜாகுவார். ஒரு நாள் காட்டில் குழுவாக வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த கிராமத்திலிருந்து மற்றொரு குழுவினர் காட்டைக் கடந்து செல்லும் நோக்கில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் எனப்பலரோடு வருகின்றனர். ஆதிவாசி கும்பலைப் பார்த்ததும், அவர்கள் பயந்து ஒளிந்து கொள்கின்றனர். அவர்களில் ஒருவன் சற்று துணிந்து தாங்கள் எடுத்து வந்த மாமிசத்தை மயன் குழுவினரிடம் வைத்து, தங்களைக் காட்டைக் கடந்து செல்வதற்கு அனுமதிக்குமாறு கேட்கிறான். மயன் குழுவினர் அவர்களைத் தாக்க எத்தனிக்கும் போது மயன் குழுவின் தலைவன் அவர்களைத் தடுத்து, ‘அவர்கள் நம் எதிரிகளல்ல; நம்மிடம் அடைக்கலம் கேட்கிறார்கள். எனவே அவர்கள் செல்லட்டும்' என அனுப்பி விடுகிறான்.
           வேட்டை முடிந்து வீடு திரும்பும் ஜாகுவார் கனவில், ஏதோ ஒரு மனிதக் கூட்டம் மயன் குழுவினரைத் தாக்குவது போல் வருகிறது. உறங்கும் தனது கர்ப்பிணி மனைவியையும், மகனையும் கவலையோடு பார்க்கிறான். சிறிது நேரத்தில் அவன் கனவில் கண்டது போலவே காட்டுமிராண்டித் தனமாக மற்றொரு கூட்டம் மயன் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து வரைமுறையின்றித் தாக்குகிறது. எதிர்த்துப் போராடுபவர்கள் இரக்கமில்லாமல் தாக்குதலில்  கொல்லப்படுகின்றனர். ஜாகுவார் தன் மனைவியையும் மகனையும் அவர்கள் கண்ணில் படாமல் ஒரு ஆழமான கிணற்றினுள் மறைவாக பாறைக்கடியில் பதுங்குமாறு, செடிகளின் உதவியோடு இறக்கி விடுகிறான். பின் அந்தக் கூட்டத்தோடு சண்டையிடுகிறான். ஆனால் அவன் தந்தை உட்பட பலரும் கொல்லப்பட, ஜாகுவாரும் சிலரும் அவர்களிடம் பிணைக்கைதியாக மாட்டிக் கொள்கின்றனர்.
           நீண்ட தூரம் காட்டைக் கடந்த அவர்கள் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப் பட்டு மாயா நகரை அடைகின்றனர். இவர்களைப் பிடித்து வந்த கூட்டம் ஓரளவு அறிவு பெற்றவர்கள். பிரமிடுகளை ஆலயம் போலும், இருப்பிடமாகவும் கட்டி இருக்கின்றன. விவசாய நிலங்களை அழிஹ்து சிறுசிறு தொழிற்கூடங்களை கட்டியிருக்கின்றனர். மனதளவில் அவர்களது காட்டுமிராண்டித்தனம் மட்டும் போகவில்லை. பிடிபட்ட கைதிகளை ஒரு பலிபீடத்தில் வைத்து இதயத்தை அறுத்து தங்கள் காணிக்கையாக வைக்கின்றனர். தலைகளை வெட்டி உருட்டுகின்றனர். ஒவ்வொருவராக பலியிடப்படும் சூழலில் ஜாகுவாரின் முறை வருகிறது.
           மயன் சிறுமியொருத்தி ஆரூடமாக ஒரு வார்த்தை சொல்கிறாள். மயன் குழுவினரை கைதியாக இழுத்து வரும்போது “நீங்கள் இவனைக் கொல்லவே முடியாது. நீங்கள் முயற்சிக்கையில் சூரியக் கடவுள் இவனைக் காப்பாற்றுவார்” என்று கூறுகிறாள்.
           அவள் கூறியபடியே ஜாகுவாரை வெட்ட வரும்போது வானில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதைக் கண்ட மதகுரு, ‘கடவுளுக்கு பலி போதும். இனி இவர்களை விட்டுவிடலாம்' என்று கூறுகிறார்.
           பிடித்து வந்த குழுவினர், பலியிடப்படாத கைதிகளை பெரிய மைதானத்தில் ஓடவிட்டு ஈட்டி எறிந்து கொல்லும் விளையாட்டினை விளையாடுகிறார்கள். அதிலும் தப்பி அங்கிருந்த தலைவனின் மகனைக் கொன்றுவிட்டு, பல தடைகளைத் தாண்டி தன் மனைவி, குழந்தை இருக்கும் கிணற்றருகே வருகிறன். அப்போது பெய்யும் மழை கிணற்றை நிறைக்கிறது.  ஜாகுவாரின் மனைவிக்கு அங்கேயே இரண்டாவது குழந்தை பிறக்கிறது. அவர்களைக் காப்பாற்றி அழைத்து வரும்போது, அவனைத் துரத்தி வந்த இருவர் எதிரில் நிற்கின்றனர். அதே சமயம் கடற்கரையோரம் ஸ்பானிய கப்பல்கள் வருகின்றன. கப்பலைப் பார்த்து அதிசயித்த அந்த இருவரும் கடலை நோக்கி நடக்கின்றனர். ஜாகுவார் மனைவி குழந்தைகளோடு வேறு திசையில் திரும்புகிறான். செவன், ஜாகுவாரிடம் நாமும் அவர்களிடம் செல்லலாமா? எனக் கேட்கிறாள். வேண்டாம், நம் சொந்த காட்டுக்கே போவோமெனத் திரும்புகிறான் ஜாகுவார்.
          தங்களிடம் அடைக்கலமாக வந்த கிராமத்தினரை பத்திரமாக அனுப்பும் நாகரீகம் பழங்குடியினருக்கு இருந்திருக்கிறது. ஆனால் பழங்குடியிலிருந்த சிறிது நாகரீகமும், அறிவும் பெற்ற அதே இனத்தின் வேறொரு குழுவுக்கு இரக்கம், மனிதாபிமானம் இல்லாமல் போகிறது. மெல்கிப்சன் அதோடு நில்லாமல், நாகரீகமடைந்த அந்தக் குழு இன்னும் அறிவில் பலம் வாய்ந்த ஸ்பானியக் குழுவை நோக்கிப் போவதாக முடித்திருப்பது மயன் கலாச்சாரத்தின் இன்றைய அழிவு நிலைக்கான காரணத்தை உணர்த்துவதாய் இருக்கிறது.
          

        மெல்கிப்சன் மிகச்சிறந்த இயக்குநர். கடும் உழைப்பாளி. தான் எடுத்துக் கொள்ளும் கதைக் கருவிற்காக வருடக் கணக்கில் உழைப்பவர். அவரது Brave Heart, The Passion of Christ ஆகியன உலகப் புகழ் பெற்றவை.
         மெல்கிப்சனே சிறந்த நடிகர்தான். ஆனால் இந்தப் படத்தில் நடுக்க வாய்ப்பிருந்தும் அவர் நடிக்கவில்லை. சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் தொழில் முறை நடிகர்களை பயன்படுத்திக் கொண்டார். பெரும்பாலான கதாபாத்திரங்களை மயன் சமூக மக்களையே நடிக்க வைத்திருக்கிறார்.
           படத்தின் மிகச்சிறப்பான அம்சம், திரைப்படம் முழுக்க மயன் மொழியில்தான் கதாபாத்திரங்கள் பேசுகின்றனர். தொழில்முறை நடிகர்களை மயன் மொழி கற்க வைத்து, பின்னர் நடிக்கச் செய்திருக்கிறார். குவாதிமாலாவின் இருண்ட வனப்பகுதிகளிலும், யுகாட்டன் மெக்சிகோவிலும் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் படம் பிடித்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக மயன் இன ஆய்வாளர்கள், மானிடவியல் ஆய்வாளர்கள், மயன் மொழி அறிந்தவர்களுடன் பல மாதங்கள் விவாதித்து பின்னர் படப்பிடிப்புக்குச் சென்றார். மயன் காலத்திய பிரமிடுகளை நேரில் சென்று ஆய்வு செய்து அது போலவே பிரமிடுகளை ‘செட்' போட்டு அதில் சில காட்சிகள் பதிவு செய்தார்.
            கல்லால் செய்யப்பட்ட அந்தக் காலத்திய ஆயுதங்களை படத்திற்காக உருவாக்கியிருக்கிறார்.
           இந்தப் படத்தின் முக்கியக் குறைகளாக எனக்குத் தெரிந்த இரண்டு விஷயங்கள்...
         ஒன்று, கதாபாத்திரங்களின் பெயர்கள் சற்றேறக்குறைய ஆங்கிலப் பெயர்களாக இருப்பது முரணாகத் தெரிந்தது. இதே போன்று ஆப்ரிக்க பழங்குடிகளை வைத்து 1966-ல் எடுக்கப்பட்ட Naked Prey எனும் படத்தில் கதாபாத்திரங்களுக்கு பெயர்களே கிடையாது. ஆனால் அந்தப் படம் முழுக்க முழுக்க பழங்குடியினர் பேசும் மொழியில் எடுக்கப்பட்டது அல்ல. ஆங்கிலத்திலும் சிற்சில இடங்களில் பழங்குடியினர் மொழியிலும் எடுக்கப்பட்டது.
         மற்றொரு குறை, ஜாகுவார் குழுவினர் பிடிபட்டு, பலியிடப்படும் வரை அவர்களது முகம் மழிக்கப்பட்டே இருக்கின்றன. படத்தில் கலை இயக்குநரும், இசை அமைப்பாளரும் மிகக் கடுமையாக உழைத்திருப்பது காட்சிக்குக் காட்சி புரிகிறது. படத்தின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்று டீன் சீமரின் ஒளிப்பதிவு. காடுகளில் படர்ந்திருக்கும் கொடிகளோடு இழைந்து கொண்டு நகர்கிறது கேமரா. ஜாகுவாரை பலியிடப் போகும் காட்சியில் தெரியும் சூரிய கிரகணக் காட்சியும் அற்புதம்.
            ஜாகுவார் தப்பித்து மலையருவியில் குளிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. Spider Cam எனப்படும் தொங்குநிலை கேமரா பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இக்கேமரா உயரமான இடத்திலிருந்து கீழே நிலைகுத்திய பார்வையில் எடுக்கப்படும் காட்சிகளில் பெரும்பாலும் பயன்படுகிறது. குறுக்கே கட்டப்பட்ட கயிற்றில் கேமராவைக் கட்டி அதன் ஒயர்களை வேறொரு இடத்தில் இணைப்புக் கொடுத்து அதன் வழியே அதை இயக்குகிறார்கள். ஹாலிவுட் படங்களில் குறிப்பிட்ட 20 படங்களில் மட்டும் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்லப் படுகிறது.
          ‘தி பிரிட்ஜ் ஆஃப் ரிவர் க்வாய்' திரைப்படம் வந்தபிறகு ஜப்பானிய மரண ரயில் பாதை குறித்த ஆய்வுகள் நடைபெறத் துவங்கியது போல, மயன் நாகரீகம் பற்றி பலரும் இப்படம் வந்த பிறகு அறியத்தலைப்பட்டனர்.
 ஒரு மிகச்சிறந்த மனித நாகரீகம் மெல்ல அழிந்ததன் வரலாற்றுப் பதிவாக அபோகாலிப்டோ படம் விளங்குகிறது.
          படத்தின் துவக்கக் காட்சியில் ‘வில் டூரண்ட்'ன் வரிகள் காண்பிக்கப் படுகின்றன.

        ஒரு மகத்தான நாகரீகத்தின் அழிவென்பது அந்த இனத்துக்குள்ளிருந்து துவங்குகிறதே தவிர, வேறொன்றின் முயற்சியாக மட்டுமில்லை
 என்பதே அந்த வரிகள். எவ்வளவு சத்தியமான வரிகள்!


மெல்கிப்சன்:
 
        மிகச் சிறந்த இயக்குநரும், நடிகருமான மெல்கிப்சன் ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான திரைப்படங்களிலும், சர்ச்சைக்குரிய திரைப்படங்களிலும் நடித்தவர். புகழ்பெற்ற MAD MAX, LETHAL WEAPENS படங்களிலும், Bravery Heart, The passion of Chirst படங்களிலும் நடித்தவர்.
           இயக்குநருக்கான ஆஸ்கர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். திரைப்படம் தாண்டிய சமூக அக்கறை கொண்டவர். குடிபோதைக்கு எதிராகவும், யூதர்களுக்கு இழைக்கப்படும் இனவெறிக்கு எதிராகவும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் குரலெழுப்பியவர்.
 மெல்கிப்சனின் மனைவி ரோபின் தலைமையில் கைவிடப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற அறக்கட்டளை ஒன்றை இன்றும் நடத்தி வருகிறார்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

பிடிபட்டவன்

        ‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது' வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக் கொண்டான் மருதன். எரும மிதிச்ச கால் எரியறது மாதிரி வெய்ய மூஞ்சியில எரிச்சலைக் கெளப்பியது.
          குத்துக் காலிட்டுக் குந்தியபடி கீழக் கெடந்த ரவக் குச்சிய எடுத்து மணல் தரை மேவாட்டத்துல ஒரு நோக்கமுமில்லாம என்னத்தையோ கிறுக்கினான். அது என்னமோவாக வடிவெடுத்தது. குச்சியை தூரப் போட்டுவிட்டு ஆட்காட்டி விரலால் அளைந்தான். மணல் துகள்கள் விரல் சந்துல பூந்து கிச்சுகிச்சு  மூட்டுவதும் சொகமாத்தானிருந்தது. அந்தப் பொதையல்ல கிடைச்ச பீடித் துண்டு, அவனுள் நெனைப்பைக் கிளறி நெஞ்சுக் கூட்டுக்குள்ள பொகைஞ்சி இருமலாத் தெறித்தது.
         இன்னைக்கு பொழைப்பு போச்சு! ‘கருப்பனை' குளிப்பாட்டணுமுன்னு நெனச்சிட்டிருந்தான். அதுக்குள்ள இப்படி கூட்டி வந்து வுட்டானுங்க துரைமாருங்க. அன்னன்னிக்கி வேலைய முடிச்சு கூலியக் கேட்டாலே முழுசாக் கெடைக்காது.
           இன்னிக்கு ‘கருப்பனும்' சாணிப் பூச்சோடத் தான் கொட்டாய்க்குள்ள போயிருப்பான். கூட்டாளி பக்கிரிகிட்ட மாடுகளைச் சேர்த்து அனுப்பியாச்சு, பண்ணை கிட்ட கூலிய அவ்வளவு சுளுவா பேத்துர முடியாது.
           ஆச்சு... மணி மூணு! வயித்துக்குள்ள எல்லாப் பயலும் பூந்துகிட்டு காக்கரே பூக்கரேன்னு சிரிச்சு எகத்தாளம் போட்டாப்புல பசி குதியாளம் போட்டது. எப்ப நம்மளக் கூப்புட்டு, எப்ப நம்மள் உடுவாங்கன்னு தெரியலையே... காலம்பற பதினோரு மணிக்கு வீரங்கோயில் வாசலாண்ட கெடச்ச செதறு தேங்காத் துண்ட ரவகாணும் பல்லால கரண்டித் தின்னது தான். ஒரு டீத்தண்ணி குடிச்சா நல்லாயிருக்கும். தொரமாருங்க மூஞ்சியப் பாத்தா டீக்கடைக்குப் போற அறிகுறியே இல்ல. அவங்களும் கோர்ட்டு வாசப்பக்கம் நின்னு ஒவ்வொரு ஊரு பேரச் சொல்லி போலிசுக் காரவங்களக் கூப்பிட்டுக்கிட்டிருந்த டவாலியையே பார்த்து கிட்டிருக்காங்க. அந்தந்த ஊரு போலிசுக்காரவங்க ஏகத்துக்கு பாவனை காமிச்சு, இப்பிடியும் கூட இவனுங்க இருப்பாங்களான்னு அம்புட்டு பவ்யமா, கூட கூட்டியாந்த ஆளுங்களைக் கூண்டுல ஏத்துனதை பார்த்தா மருதனுக்கு வாய் ஒலந்து போச்சு.
          நெரிஞ்சி முள்ளு கணக்கா மொளஞ்சி கெடந்த தாடிய வறட்டு வறட்டுன்னு சொரிஞ்சான் மருதன். தாமரக் கொளத்துல குதிச்சு கொம்மாளம் போடுற நேரமிப்போ. இந்நேரம் ஊர்லயிருந்த அந்தப் பக்கிரியக் காட்டியும் ரெண்டு நிமிட்டாவது கூட தண்ணிக்குள்ள அமுங்கிக் கெடந்து மணிக்கடை ‘பன்'ன பந்தயப் பொருளா வாங்கிப்புடலாம்ன்னு ராத்திரி முச்சிடும் கூர்ப்பா திட்டம் தீட்டி வெச்சிருந்தான். அந்த நெனப்பே இனிப்பா இருந்துச்சு. எச்சிலக் கூட்டி முழுங்கி ‘விர்'ருன்னு கல்லெடுத்து விசிறினான் கோவமா...
           கோவாலு வீட்டுக் கல்யாணத்துக்கு சாந்தீரமா போய் தொப்ளான் தோப்புக் கொல்லையில வாழ மரம் வெட்டி எடுத்துட்டு வர்றதாச் சொல்லியிருந்தான். கோவாலுவுக்கு எதிலயும் கண்ணு மண்ணு தெரியாம கோவம் வரும். எத்தன ‘த்தா' பாட்டு வுடறானோ தெரியல. அவனுக்கும் வேணும்... போன தரம் வேலிக்கருவ முள்ள வெட்டியாற சொல்லிட்டு எங்கியோ மூங்கிப்படலு ஓசியில கெடச்சிதில, ‘என்னா முள்ளு வெட்டியாந்திருக்க... எலிவாலு கணக்கா... இம்மாந்தடி வேணும்ல'அப்படின்னு தொடயத் தட்டிக் காட்டினான். அது ஆவற கதையில்லன்னு தெரிஞ்சும் என்ன பண்றதுன்னு பொத்திகிட்டுத்தான் போனான் மருதன்.
            பதிலுக்கு இப்பிடி ஒரு அயனான சான்சு கெடைக்கும்ன்னு எதிர்பார்க்கவே இல்ல. ‘நல்லா வேணும்டா மவனே'ன்னு நாக்க மடக்கி, பொறங்கையத் தட்டி சொல்லணும் போல இருந்தது அவனுக்கு. ஒரு தரம் வாயாற சொல்லி வாசாப்பும் உட்டான்.
          ‘பொளிச்'சுன்னு மறுபடி எச்சில துப்பி, அதுல மணலத் தள்ளித் தள்ளி மூட, அது செத்த நேரத்துக்கு பொழுது போக நல்லாத்தான் இருந்துச்சு.
         ‘எலேய் மருதப்பா, என்ன பண்ணிட்டு கிடக்கே' அதட்டலான குரல் கேட்டு மெரண்டு, துண்ட எடுத்து கமுக்கட்டில வச்சிட்டு, ‘ஒண்ணுமில்லிங்க சாமி'ன்னான்.
          “தூங்கி கீங்கிப் புடாதே. அய்யா எப்ப வேணும்ன்னாலும் கூப்புடுவாங்க. டீத்தண்ணியெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். வெளங்குச்சா...” கூட்டி வந்த போலிசுக்காரரு அதட்டலா சொல்றாரு.
        “சரிங்க எசமானே” சொல்லிட்டு திரும்பியும் குந்தி உக்காந்தான். கால் பூரா சில்லுன்னு என்னமோ ஒண்ணு ஓடி-ஓடியாந்தமாதிரி இருந்துச்சு.
 மருதனுக்கு அவிச்ச மல்லாட்டன்னா அம்புட்டு இஷ்டம். அலமேலு கெழவி சந்தைக்குப் போயிட்டு நாலு மணி வாக்குல வரும். இன்னிக்கு கடைசி திங்கக்கெழமை.நிச்சயம் சந்தையில கூட்டமிருக்காது. மொத்த மல்லாட்டையும் விக்க ஒரு நாளும் அவளுக்கு பொசுப்பே இருக்காது. எப்படியும் மிஞ்சிக் கிடக்கும். நிச்சயம் கேட்ட காசுக்கு குடுத்துடுவா. இந்த நேரம் பார்த்து இங்க வந்து மாட்டிகிட்டமே. எப்ப வுடுவாங்கன்னு தெரியலயே...
          அண்ணந்தம்பி ஒதவி ஒத்தாசைக்குன்னு ஒத்தனும் இல்லாம ஒத்தையா கெடக்கறது எம்புட்டுக் கஷ்டம்னு இந்த மாதிரி நேரத்துலதான் தோணும். மத்தபடி மருதனுக்கு பெருசா கவலயும் லட்சியமும் கெடையாது.
          கீழ கெடந்த குச்சிய மறுபடி எடுத்து கடவாப்பல்லுல ஏதோ கெடக்கற மாதிரி நெம்பி எடுத்தான். வந்தது பருக்கையா இல்ல ஒடஞ்ச குச்சி மொனையா தெரியல. ஏதோ சாதிச்சவன் மாதிரி மண்டைய மண்டைய ஆட்டி சிரிச்சிகிட்டே ‘தூ, தூ'ன்னு துப்பினான். சமய சந்தர்ப்பமில்லாம ஒத்த ஏப்பம் வந்த சுவடு தெரியாம வாயிலேர்ந்து கெளம்பிப் போனது. ‘அடக் கெரகமே... என்னாத்தக் கண்டேன்னு இப்பிடிக் காஞ்ச வயித்திலேருந்து கெளம்பி ஓடறே?'ன்னு சலிப்பா தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். மருதனுக்கு எதுக்காகவும் எதுத்தாப்ல ஆளு, தேளு தேவையில்ல. காத்து இருந்தாவே போதும்ன்னு எல்லாக் கதையும் சொல்லுவான்.
          தூங்குமூஞ்சிக் காத்து சொகமாத்தான் இருந்தது. காசு இருந்தா ரெண்டு கேசு ஆடலாம் போலத்தானிருக்கு. அட. இந்த கோர்ட்டு கச்சேரி எல்லாத்துக்கும் எப்பிடித்தான் இப்பிடி சொகுசா எடம் கெடைக்குமோ தெரியலப்பா.
            ‘ம்ஹெகங் ம்ஹெகங்'ன்னு கனைக்கிற கொரல் கேட்டு வெளிப்பக்கம் திரும்பினான். கறுப்பும், வெள்ளையுமா திட்டுத் திட்டா கலந்த நெறத்தில மாசானம் ஊட்டு ஆடுமாதிரியே நின்னதப் பாத்ததும் தான் ‘ஆஹா'ன்னு மரைக்காயரு நெகா வந்தது. ஆட்டாம்புளுக்க ரெண்டு மூட்ட பெலா மரத்து அடிவேருக்குப் போட வேண்டியிருந்தது. பல்பு போட்ட மாதிரி மருதனுக்கு நெனப்பு மினுக்கிச்சு. நல்ல மனுசன்... அவரு கேட்டா எப்பவும் தட்டாம செஞ்சிடுவான். அறுவது ரூவா கெடைக்குந்தான். இன்னும் அரை மூட்ட சேர்த்தா ரெண்டு மூட்ட தேறிடும். பழம் பெருத்து அறுத்தா பத்து சொளையாச்சும் வஞ்சனையில்லாம கொடுப்பாரு. அந்த மரம் ஒரு ஒத்த காய்ச்சி மரம். ஒரு தாட்டிக்கு ஒரு காய்தான் காய்க்கும். ஆனாலும் அம்புட்டு ருசியாயிருக்கும். ஒனக்கு எனக்குன்னு அதுக்கு மரைக்காயரு சொந்தத்திலேயே ஏகப் போட்டி. அப்பிடியும் போன தடவ மருதன் கேட்டேபுட்டான். ‘ஏன் பாயி... எனக்கு ஒரு தரம் முழுப் பழமாக் குடேன்... தேனாட்டம் இனிக்குது!'
          “இன்ஷா அல்லா அடுத்த முறை பார்ப்போம்.”
           “அது என்னா பாய் எதக் கேட்டாலும் என்னுமோ அல்லாங்கிறே எப்பப் பாத்தாலும்...?”
          “அல்லாவோட கருணையால நான் உசிரோட இருந்து, நீயும் நல்லபடியா இருந்து, என் மரமும் பிலுபிலுன்னு காய்ச்சா ஒனக்கு ஒண்ணு தர்றேன்னு அர்த்தம்”.
           “அடேங்கப்பா! அம்முட்டோண்டு வார்த்தைக்கு இம்மாம் பெரிய அர்த்தமா?! சுளுவாத்தான் இருக்கு பாய் ஒன் பாசை”          ஆட்டாம்புளுக்கைய இந்த தடவ கொஞ்சம் கூட கொடுத்தா தகிரியமா இன்னும் பத்து சொள சேர்த்து குடுன்னு கேக்கலாம். ‘என்னுமோ அல்லா நிறையக் காய்க்கணும்'ன்னு கன்னத்தில போட்டுகிட்டான். பாய் மாதிரி சொல்ல வரலேன்னாலும், ஒரு மாதிரியா தேத்தி சொல்லிப்புட்டோம்னு சந்தோசப்பட்டுகிட்டான்.
           எப்பக் கூப்புடுவாங்கன்னு தெரியல கெரவம்.இன்னிக்குப் பாத்து தங்கச்சிமேட்டுல மேய்ச்சலுக்கு வந்தது தப்பு. கொடுக்காப்புளியங்கா கெடைக்கும்ன்னு அந்தப் பக்கிரிப் பய பேச்சக் கேட்டுகிட்டே வந்தது தான் குத்தம். கடசியில அந்தப் பக்கிரிப்பய எங்கியோ ஓடிப் பதுங்கிட்டான். தொரைமாருங்களும் ‘ஓடன பயல வுடு' அப்படின்னு அத லேசுல வுட்டதுதான் மருதனுக்கு ஆச்சரியமாப் போச்சி. மாடு போனா மசிரே ஒண்ணாச்சின்னு எங்கனா ஓடிப் பதுங்கியிருக்கலாம். இப்பிடி வந்து மாட்டிகிட்டமேன்னு ஒரே வெசனமாப் போச்சு மருதனுக்கு.
          மேக்க சூரியன் நிக்கறதப் பாத்தா மணி நாலாயிருக்கும். அலமேலுக் கெழவி இன்னேரம் போயிருக்கும். சாயறதுக்குள்ள வூட்டுக்குள்ள அடைஞ்சிடணும். அவிச்ச கல்ல போச்சு... எவனுக்கு அடிச்சுதோ லாட்டரி. மொத்தமா வாரிக் கொடுத்திருப்பா. நாம்பளும் இல்லைன்னா போட்டிக்கு ஆளு இல்லாம இன்னும் அம்பது காசு கொறச்சே குடுத்துருப்பா. எந்த பயலுக்கு மச்சம் இருந்துச்சோ தெரியல. வெள்ளோட்டந்தான்னு நெனச்சிகிட்டு சுத்தும் முத்தும் ஒரு தரம் பாத்தான். அவனவனுங்க பொண்டாட்டி புள்ளங்களோட வந்து கெடக்கறதப் பாத்தா ஏக்கமாத்தான் இருக்கு. வூட்டுக்காரனுக்கு டீயும் பொறையும் வாங்கி வந்து கூடயே கெடக்கறாளுவ. நமக்குத்தான் அந்த அம்சமே இல்லயே. எரும சாணத்தோடயும், ஆட்டாம் புளுக்கையோடயுந்தான் சகவாசம்னு ஆயிப்போச்சு. அப்பறம் ஏக்கப்பட்டும், துக்கப்பட்டும் ஆவப்போறதென்ன?
          “இருப்புக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்... இருப்புக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்...” வெளியே நின்ன டவாலி கத்தினான்.
          அவ்வளவுதான்... மருதப்பனைக் கூட்டி வந்த போலீஸ்காரர்கள் இருவரும் அவன் தோள் மீது கை வைத்து நெட்டியபடி கோர்ட்டுக்குள் நுழைந்து கூண்டில் அவனை நிற்க வைத்தனர்.
          நீதிபதி இவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார். “உன் பேர் என்ன?”
        “கும்பிடறேனுங்க மருதப்பன் சாமி”
        “என்ன வேலை பாக்குற?”
         “ ஆடுமாடு மேய்க்கிறேனுங்க” சொல்லிவிட்டு, ‘சரியா சொல்லிட்டேனா' என்பது போல் கூட்டி வந்த போலீஸ்காரர்களைப் பார்த்தான்,
          “உன்னை பயங்கரவாதத் தடை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா?”
        கேட்பதற்கும் புரிவதற்கும் சிரமப்பட்ட மருதப்பன் ஒருகணம் திடுக்கிட்டு பின் சொன்னான், “புரிலீங்க எசமானே”
         நீதிபதி ஒரு முறை கண்ணாடியைக் கழற்றி நிமிர்ந்து பார்த்து மறுபடி தலைகுனிந்து பின் கேட்டார்.
         “போலீசாரால் தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளிகளுடன் சேர்ந்து தேசவிரோதச் செயல், பிளவுபடுத்துதல், கூட்டுச்சதி செய்து அரசுக்கு எதிராக நடத்தல் ஆகிய ஜாமீனில் விட முடியாத குற்றங்கள் உன் மீது சுமத்தப் பட்டிருக்கிறது. நீ இவற்றை ஒப்புக் கொள்கிறாயா...?”

செவ்வாய், 28 ஜூன், 2011

KHUDA KAY LIYA (குதா கே லியே)

                                                                                                                                                                             பகட்டான நகைக் கடையிலோ அல்லது ஆடம்பரமான ஐந்து நட்சத்திர உணவு விடுதியிலோ பொருத்தமற்ற உடைகளோடும், உருவத்தோடும் நுழைய நேரிட்டால் நம் மீது வீசப்படும் ஏளனப்பார்வைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒரு சந்தேக வலை நம்மைச் சுற்றிப் பின்னப்படுவதை நுட்பமாக கவனிப்பவர்கள் உணர்ந்திருக்கலாம். எல்லை தாண்டி வேவு பார்க்க வந்த உளவாளியைப் போலவும், கிடைத்ததை அள்ளிச் செல்ல நுழைந்த கள்வனைப்போலவும் நம்மைப் பற்றி உருவாகும் சித்திரம் சிறிது நேரமேயானாலும், கூனிக் குறுக வைத்துவிடும். உதவுபவர் போல் உடன் வரும் கடைச் சிப்பந்தியின் பார்வை, நம்மை கண்காணிக்கத்தானோ என்ற அச்சம் எழுவது இயல்பு.
         அந்த ஒருசில நிமிடங்களில் மனம் நெரிபடுகின்ற அவஸ்தை, அந்த இடத்தை விட்டு அகன்றபின் தான் ‘விட்டு விடுதலையான' சுகத்தைத் தரும்.
 சந்தேகத்தின் வளையத்துக்குள் நாம் இருக்க நேரிடுகிற சூழலென்பது முதலை வாயில் பிடிபட்ட இரை உள்ளேயும் தள்ளப்படாமல், வெளியேயும் துப்பப் படாமல் உயிரின் வலியை ஒவ்வொரு அணுவும் அனுபவிப்பது போல் துயரமானது.
          சில நிமிட நேர சந்தேகப் பார்வைகளையே நாம் சகித்துக் கொள்ள முடியாத போது, வாழ்கின்ற வாழ்க்கை முழுதும் பிறருடைய சந்தேகக் கணைகளுக்கு இலக்காகி ரத்தம் கசியும் நொடிகளை நகர்த்துவது எத்தனை கொடூரமானது!
            செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பெரும்பான்மையான நாடுகளில் இஸ்லாமியர்கள் இப்படியான நரக வேதனையோடுதான் வாழ வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான்; அவர்கள் சதாசர்வ காலமும் குண்டு வைக்கும் திட்டத்துடன் தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் போன்றதொரு பார்வை படித்தவர்களிடம் கூட நிலவுகிறது. 
           இப்படியான தவறான பார்வை எப்படி ஒரு இஸ்லாமிய இளைஞன் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டதுதான் ‘குதா கே லியே'என்ற பாகிஸ்தானிய படம். குதா கே லியே என்பதற்கு ‘கடவுளின் பெயரால்' என்று பொருள். பொதுவாக பாகிஸ்தானில் அதிகமாக திரைப்படங்கள் உருவாக்கப் படுவதில்லை. எடுக்கின்ற ஒருசில படங்களும் இந்திப் படங்களின் தாக்கங்களில் எடுக்கப்பட்டவையாக இருக்கும்.
         ஷோயப் மன்சூர் இயக்கிய இப்படம், மூன்று வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழல்களில் வாழ்கிற இஸ்லாமியர்களின் வாழ்க்கையை ஒரு புள்ளியில் சேர்க்கிற நேர்த்தியான திரைக்கதையைக் கொண்டது.
          பாகிஸ்தானின் லாகூரில் வாழ்கிற மன்சூர், சர்மத் ஆகிய இருவரும் சகோதரர்கள். இருவரும் இசைப் பிரியர்கள். நல்ல பாடகர்களும் கூட. காலப் போக்கில் சர்மத் இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவரின் போதனையால், மெல்ல மெல்ல தீவிரவாத இயக்கத்தின்பால் ஈர்க்கப் படுகிறான். இசை மற்றும் ஓவியங்கள் இஸ்லாத்துக்கு எதிரானது என்று அந்த இயக்கத்தின் கொள்கைப் படி, இசையை விட்டு விலகி, நீண்ட தாடியுடன் இயக்கவாதியாகவே ஆகிவிடுகிறான்.
            மன்சூரின் இசை ஆர்வமிகுதியில், அமெரிக்காவில் உள்ள சிகாகோவுக்கு சென்று அங்கு இசைக்கல்லூரியில் பயில்கிறான். அங்கு அவனோடு இசை பயிலும் ஜென்னி என்கிற அமெரிக்க பெண்ணின் மீது காதல் பிறக்கிறது. ஜென்னி மன்சூரின் மீதுள்ள காதலால், தனக்குள்ள குடிப்பழக்கத்தை விட்டொழிக்கிறாள்.
           லண்டனில் குடியேறிய பாகிஸ்தானியரின் ஒரே மகள் மரியம் இங்கிலாந்தின் நவநாகரீக வாழ்வுக்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு வாழ்பவள். டேவ் என்ற ஆங்கிலேய இளைஞனைக் காதலிக்கிறாளவள். இது பிடிக்காத அவளது தந்தை அவனோடு பழகக் கூடாதென அச்சுறுத்துகிறார். வேடிக்கை என்னவென்றால், அவர் இங்கிலாந்தில் பிறந்த வெள்ளைக்காரப் பெண்மணியோடு திருமணமாகாமலேயே குடித்தனம் நடத்துகிறார். மரியம் தன் காதலில் உறுதியாக இருக்கவே, அவளது தந்தை அவளை பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்லலாமென்று அழைத்துவந்து, தாலிபான்கள் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பாகிஸ்தான் பழங்குடிப் பிரிவுகள் வசிக்குமிடத்தில் (FATA), தனது உறவினரான சர்மத்திடம் ஒப்படைக்கிறார். அவருடைய எண்ணம் டேவிடமிருந்து மரியத்தைப் பிரிப்பதே. தாலிபான்கள் இயக்கத்தின் பிடியில் உள்ள அந்தப் பகுதியில் முழுக்க முழுக்க பெண்களைச் சுதந்திரமாக இயங்கவிடாமல் முடக்கி வைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் கொஞ்சமும் பொருந்திப் போகாத மரியம் அங்கு இருக்கும் பெண்களின் உதவியோடு அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். ஆனால் துரதிருஷ்டவசமாக சர்மத்திடம் அகப்பட்டுக் கொள்கிறாள். சர்மத் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்கிறான்.
          சிகாகோவில் வசிக்கும் மன்சூர், ஜென்னியுடன் இணைந்து இசையும் சந்தோஷமுமாக வாழ்கிறான். ஒரு முறை அவன் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் மேல் தளத்தில் குடியிருக்கும் குடிகார அமெரிக்க இளைஞன் வேண்டுமென்றே மன்சூரை வம்புக்கு இழுக்கிறான். மன்சூர் ஒதுங்கியே போனாலும் அவன் மீது குடிகாரனுக்குத் தீராத வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சமயத்தில் செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குடிகாரன், மன்சூர் ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவன் என்று அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் தந்துவிடுகிறான். மன்சூர் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்படுகிறான்.
           மரியம் தன் காதலன் டேவுக்கு ஒரு கடிதமெழுதி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டுகிறாள். டேவ் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, இங்கிலாந்து அரசு மற்றும் தூதரகம் மூலம் தாலிபான் தலைவர்களுக்கு நெருக்கடி தருகிறான். வேறு வழியின்றி சர்மத் மற்றும் அவனது இயக்கத்தினர் மரியத்தை விடுவிக்கின்றனர். மரியம் விடுதலையாகி, சர்மத்திடம் சட்டப் பூர்வ விலக்கு பெற பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறாள். வழக்கு நடைபெறும் தருணத்தில் வடக்கு கூட்டணிப் படையினருக்கும் சர்மத் சார்ந்த இயக்கத்தினருக்கும் சண்டை நடக்கிறது. அதில் தேவையில்லாமல் உயிர்கள் பலியாவது சர்மத்தை மனரீதியாக வெகுவாகப் பாதிக்கிறது. அவன் மெல்ல இயக்கத்தை விட்டு வெளியேறும் மனநிலைக்கு வருகிறான்.
           மன்சூர் அமெரிக்க உளவுப் படையினரிடம் சித்திரவதைப் படுகிறான். அவனிடமிருக்கும் எதேச்சையான பொருட்களுக்கும் கூட ஏதேதோ அர்த்தம் கற்பிக்கின்றன. ஒவ்வொரு விஷயத்தையும் அவன் மறுக்க கடுமையாகத் தாக்கப் படுகிறான். விசாரணைக்கு வரும் அதிகாரிகள் எல்லாம் அவன் அறையில் சிறுநீர் கழிப்பதும் அசிங்கம் பண்ணுவதுமாக கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவனது காதலி ஜென்னியால் அவனைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு சட்டம் மன்சூரை வலைப்பின்னலுக்குள் தள்ளுகிறது. அமெரிக்க அதிகாரிகளை நம்ப வைக்க அறை முழுதும் ‘ஐ லவ் யூ எஸ்' என்று எழுதி வைக்கிறான். ஆனாலும் அவனை அதிகாரிகள் துன்புறுத்துவது நிற்கவில்லை. எப்பொழுதோ ஒரு முறை அவனது சகோதரன் சர்மத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதப் பெரியவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி, அவனை மேலும் சித்திரவதைப் படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ‘ஐ லவ் யூ எஸ்' என்று எழுதியிருப்பதை மாற்றி ‘ஐ லவ் ஒசாமா' என்று எழுதி விடுகிறான். இதனால் கொதிப்படைந்த அமெரிக்க அதிகாரிகள் அவனைக் கண்மூடித் தனமாகத் தாக்குகின்றனர். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு புத்தி பேதலித்தவனாக நடமாட முடியாத முடவனாக ஆகி விடுகிறான்.
           மரியம் தொடுத்த வழக்கில் இஸ்லாம் சம்மந்தப்பட்ட சில சந்தேகங்களை தெளிவுபடுத்த வாலி என்கின்ற முஸ்லீம் மதத் தலைவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுகிறார். அவர் பெண்களை அடிமைப்படுத்துவதும், வலுக்கட்டாயமாக மணம் புரிவதும் இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை தர்க்க பூர்வமாக கூறுகிறார். அதன் பேரில் மரியம் விடுவிக்கப்படுகிறாள்.
 இந்த இடத்தில் இயக்குநர் மரியத்தை இங்கிலாந்து செல்வதாகக் காட்டாமல், தான் அடைபட்ட இடத்துக்கே திரும்புவதாகக் காட்டியிருப்பது சிறந்ததொரு முடிவு. அடைபட்ட இடத்தில் உள்ள பெண்களுக்குக் கல்வி புகட்ட அவள் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறாள். சர்மத் இயக்கத்திலிருந்து விலகி, மசூதியில் குர்-ஆன் ஓத ஆரம்பிக்கிறான்.
           மன்சூர் ஒரு வருட கால சித்திரவதைகளுக்குப் பிறகு ஒரு குற்றமும் நிரூபிக்கப்படாதவனாக, அதே நேரத்தில் மனநிலை பிறழ்ந்த, சக்கர நாற்காலியில் எஞ்சிய வாழ்க்கையை நகர்த்துபவனாக அவனது தாய் தகப்பனிடம் சேர்க்கப்படுகிறான். அவன் ஒருநாள் குணமாகக் கூடுமென்ற நம்பிக்கையோடு அவனது குடும்பத்தினர் காத்திருக்கும் நெகிழ்வான காட்சியோடு படம் நிறைவடைகிறது.
           ஒரு சராசரி இந்திப்படத்தின் சாயலிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் வெளிவந்த படங்களில் மிகச்சிறந்த படமென்றே கருதப்படுகிறது. மூன்று வெவ்வேறு சூழல்களில் வாழும் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் இயல்பு, சூழல்கள் ஆகியவற்றை சிக்கலில்லாமல் நேர்த்தியான திரைக்கதை ஆக்கியிருக்கிறார் மன்சூர்.
 மன்சூராக நடித்திருக்கும் ஷான் மற்றும் சர்மத்தாக நடித்திருக்கும் ஃபலட் அப்சல்கான், மரியமாக நடித்திருக்கும் இமான் அலி ஆகியோர் கதாபாத்திரத்துக்கு ஒத்திசைவான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
              எல்லாவற்றையும் விட நீதிமன்றத்தில் வாலியாக வரும் இந்தி நடிகர் நசுருதீன்ஷாவின் நடிப்பு அபாரமானது. படத்தின் ஆகச்சிறந்த அந்த காட்சியில் கொஞ்சமும் மிகைத்தன்மை வந்துவிடாமல், மிகக் கவனமாகத் தேர்ந்த முகபாவங்கள், உச்சரிப்பு நேர்த்தியோடு பிரமாதப்படுத்தி விடுகிறார் ஷா. படத்தின் பாடற்காட்சிகள், இசை, பாடல் வடிவமைப்பு எல்லாவற்றிலும் ஒரு இந்தியத் தன்மைதான் தென்படுகிறது.
              கெய்ரோ படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது, ஜப்பான் திரைப்பட விருது, இத்தாலி படவிழா விருது, ஆசியாவில் தயாரான முதல் படங்கள் பிரிவில் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது இப்படம்.
             சந்தேகத்தின் நிழல் படர எவராலும் ஒருபோதும் இயங்க முடியாது. வன்முறைக்கும், போராட்டத்துக்கும் இடையே மெல்லிய இழைதான் இருப்பதாகப் பொதுப் பார்வையாளன் பார்வையில் கணிக்கப்படுகிறது.
 போராட்டமென்பது தன்னை பின்னியிருக்கும் வலையைத் தானே அறுத்துக் கொண்டு வெளிவருவது. இதன் வலியும், வேதனையும் போராடுகிறவன் தான் ஒருவனே ஏற்றுக் கொள்வது. வன்முறையென்பது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதையும் தயவுதாட்சண்யமின்றி அழிப்பது
.

         ஒரு சில குழுக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, பொது இடத்தில் ஏதுமறியாத அப்பாவிகளின் உயிரைப் பணயம் வைப்பதை ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தின் இலக்கணமென்று கூறும் போது, ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்பது எத்தனை நியாயமோ அத்தனை நியாயம் ஒரு போராட்டம் என்பது எந்தவொரு அப்பாவியின் வாழ்வையும் பலிகேட்பதாக இருந்துவிடக் கூடாது.
          அதேசமயம் ஒரு தேசத்தில் நடக்கக்கூடாத ஒரு துர்ச்சம்பவம் நிகழ்ந்துவிட்டால் அதற்குக் காரணமாக இருப்பவர்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, மொழியைப் பேசுபவர்கள் என்பதற்காக, மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதற்காக ஒன்றுமறியாத ஜீவன்கள் உயிர்வதை செய்யப்படுவதோ, வாழத் தகுதியற்றவர்களாக ஆக்குவதோ நியாயமற்றது.
             போகின்ற இடமெல்லாம் நம் பின்னந்தலையில் விரலொன்று அழுத்தியபடி நம்மை அச்சுறுத்துவது போல சந்தேகத்தின் கண்கள் குத்துவதும், ஏளனப் பார்வை, போலிப் புன்னகை வீசப்படுவதும் ஒரு தனிமனிதனின் வலியை எத்தனை தூரம் அதிகப்படுத்துகிறதென்பது அவனது நிலையிலிருந்து பார்த்தால்தான் உணரமுடியும்.
             இந்த சமயத்தில் தலித்துகள் அரசு சலுகையினால் உயர்வதையும், சில நன்மைகள் பெறுவதையும் சுட்டிக்காட்டி, ‘அவர்களுக்கென்னப்பா... எல்லாம் கிடைக்கிறது' என்று மறைமுகப் பரிகாசம் செய்பவர்கள் பலருமிருக்கிறார்கள். உதாசீனத்தின் வலியென்பதும் அவமானத்தின் அடையாளமாய் இருப்பதும் எத்தனை துயர்மிக்கது என்பது அப்படியாக இருப்பவர்களுக்குத் தான் புரியும்.           இராசை. கண்மணி ராசாவின் ‘வலி' என்ற கவிதை அந்த வேதனையை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது.
      சாணிப்பால் ஊற்றி
      சவுக்கால் அடித்தான்
      என் பூட்டனை உன் பூட்டன்
      காலில் செருப்பணிந்ததால்
      கட்டி வைத்து உதைத்தான்
      என் பாட்டனை உன் பாட்டன்
      பறைக்கு எதுக்கடா படிப்பு என
      பகடி செய்து ஏசினான்
      என் அப்பனை உன் அப்பன்

       ‘உங்களுக்கென்னப்பா
       சர்க்காரு வேலையெல்லாம்
       உங்க சாதிக்குத்தான்'-என
       சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!
      
       ஒன்று செய்
        உன்னையறியாத ஊரில் போய்
        உன்னைப் பறையனென்று சொல்!
       அப்போது புரியும்
       என் வலி!
           (‘கவிதையாவது கழுதையாவது' தொகுப்பிலிருந்து)
         
        ஏளனப் பார்வைகளுக்கும், சந்தேக வளையத்துக்கும் ஆளாகும் எல்லா மனிதர்களின் மனவலியை ரத்தம் கசியப் பதிவு செய்துள்ள இக்கவிதை இப்படத்தின் இஸ்லாமியர்களின் மனநிலைக்கும் பொருந்தும்.
 குதா கே லியே தன் பாணியில் அதே வலியை திரைமொழியாக பதிவு செய்துள்ளது.

                          

ஞாயிறு, 26 ஜூன், 2011

கசக்கும் சர்க்கரை

        சங்கீத சீசன் என்றால் கட்டாயம் நீங்கள் ஏதாவதொரு சபாவில் சிதம்பரநாதனை பார்த்திருக்கலாம். அவனொரு சுவாரஸ்யமான பேர்வழி. நல்ல ரசனைக்காரன். அப்படியென்றால் திருவையாறு பக்கம் வராமலா போய்விடுவான், அப்போது பார்த்துக் கொள்ளலாமென்று திட்டம் ஏதாவது தோன்றினால் அதை சுத்தமாக மனதிலிருந்து அழித்துவிடுங்கள்.
         ஏனென்றால், சிதம்பரநாதனுக்கு சபாக்களில் கச்சேரி கேட்பதை விட, கேண்டீனில் என்னென்ன சுவையான ஐட்டம் கிடைக்கும் என்பதில்தான் நாட்டமதிகம். இப்பொழுது புரிந்திருக்கும் ... எதற்கவன் ரசிகனென்று.
        நளபாகம் அம்பி என்றால் நெய் சொட்டச் சொட்ட முந்திரிப்பருப்பு மணத்துடன் கிடைக்கும் பொங்கல் பற்றி நாவில் எச்சில் ஊறும்படி அவன் சொல்லும் அழகே கேட்பவருக்கு பசியைத் தூண்டிவிடும். சீனிவாசனின் தவளைவடைக்கு தலையையே தரலாமென்பான். தேசிகனின் இட்லி, கொத்சு சாப்பிடாதவன் மனிதனா என்பான். அதுமட்டுமல்ல. எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் ஸ்பெஷல் அயிட்டம் எது; அதற்கு எந்த ஹோட்டல் பெயர்பெற்றது என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி.
         சரவணபவன் மினி இட்லி சாம்பார், கும்பகோணம் கெளரி ஹோட்டல் தயிர்வடை,  சிதம்பரம் நடராஜர் கோயில் மடப்பள்ளி சர்க்கரைப் பொங்கல், பெங்களூர் கையேந்திபவன்களின் இட்லி, காரசட்னி, மைசூர் ஹோட்டல்களில் மசாலா தோசை, கடலூர் மஞ்சகுப்பம் கையேந்தி பவன் நூடுல்ஸ், கொடைக்கானல் எக்ஸ்பிரஸ்ஸோ காபி, பாண்டிச்சேரி சப்போட்டா ஜீஸ் என்று எழுத எழுத பேப்பரும் பேனாவும் தீருமே தவிர அவன் பட்டியல் முடிவுற்றிருக்காது.
         எப்பொழுதும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உற்சாகமாயிருப்பது ஒன்றே, தான் பிறவியெடுத்ததன் நோக்கம் என்பது போல அன்றைய பொழுதை ஓட்டுவதில் குறியாகயிருப்பான். வயது நாற்பத்தியேழு என்பது வெறும் புள்ளிவிபரக் கணக்கேயன்றி, வாழ்க்கைப் பயணத்தில் அதற்கு வேறொன்றும் முக்கியத்துவமில்லை என்று அதனைப் புறந்தள்ளிவிட்டு நாட்களை செலவழிப்பவன்.
        அப்படிப்பட்ட பிரகஸ்பதிக்கு வாயின் உள் கன்னப்பகுதியில் ஒரு வாரமாய் படுத்திக்கொண்டிருக்கும் வாய்ப் புண்தான் இப்போதைய தலையாய பிரச்சினை. வருகிற புண்ணுக்கு வேறு இடமா கிடைக்கவில்லை?! சதா பேசிக் கொண்டிருக்கவும், சளைக்காமல் சாப்பிடுவதற்கும் படைக்கப்பட்ட அந்த அற்புதமான புலன் இப்படி அவதிப்படுவது தான் சிதம்பரநாதனால் சகிக்க முடியாத கவலையாகிவிட்டது. கணிசமான சொத்து சேர்த்து வைத்திருந்த அப்பா; டீச்சர் வேலை பார்க்கும் மனைவி; அளவாய் ஒரு பெண், ஒரு ஆண் என சந்தோஷத்திற்கு குறைவில்லாத குடும்பம் அவனுடையது. கடைத்தெருவில் அவன் வைத்திருக்கிற பட்டாணிக் கடை, ஜீவனத்துக்காக அல்ல; இடைவிடாமல் அவன் கொறிப்பதற்கும், அவ்வழியே செல்லும் நடமாடும் தீனி ஸ்டால்களில் வரும் பதார்த்தங்களை நிறுத்தி ஒரு கை பார்ப்பதற்கும் தான்.
        பக்தனையும் கடவுள் சோதிப்பாரென்று பத்து நாட்களுக்கு முன் யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பான். வாய் திறப்பதே இமாலய சாதனை என்கிற மாதிரியான ‘இறுக்கமான' சூழலில், பக்கத்து தெருவில் குடியிருக்கும் தங்கை சாவித்ரி மிளகாய் பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் எடுத்து வந்த போதுதான், கடவுள் சோதனை இரட்டிப்பாகியது அவனுக்கு.
        சாப்பாட்டு ராமனாகிய அவன், வாய்ப்புண் உபயத்தால் அந்த பஜ்ஜிகளைக் கண்ணீரோடு வீட்டிலுள்ளோர்க்கு ‘விட்டுத் தந்த தியாக வரலாற்றை' யாராவது எழுதியிருந்தால் தமிழில் ஆறாவது பெருங்காப்பியம் கிடைத்திருக்கும். அப்படியும் ஆசை அடங்காமல் சுண்டுவிரலத்தனை பஜ்ஜியை விண்டு தின்றுவிட்டு வலியும் எரிச்சலும் தாங்கமாட்டாமல் வடித்த கண்ணீர் ஒரு குடம் தேறும்.
        மருத்துவமனையென்றால் பின்னங்கால் பிடறியில் பட ஓடக்கூடியவன், கடந்த ஒரு வாரமாக குடும்ப நண்பராகவும் மருத்துவராகவும் இருந்து தொலைக்கும் டாக்டர் வெங்கடாஜலத்திடம் உள்வாயில் தடவ களிம்பு, இடுப்பில் தினமொரு இன்ஜக்ஷன் தாக்குதல், திறக்க முடியும் இத்துணூண்டு வாய்க்குள் மாத்திரைகளின் சரமாரியான ஊர்வலமென கடுமையான சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. ஏதோ ஓரளவுக்கு வாய் திறந்து பேச முடிகிறதென்பதுதான் சற்று ஆறுதல். இப்படியானதே தன் குடும்பசாகரமென்ற சுயபச்சாதாபத்தில் நொந்து நூடுல்ஸாகிப்(!) போயிருந்தான்.
         “சார், பன்னெண்டாம் நம்பர் டோக்கன் நீங்கதானே... உள்ள போங்க” என்ற அட்டண்டரின் குரலில் தன் நினைவுக் குளத்திலிருந்து மேலெழும்பிக் கரையேறி, டாக்டர் ரூம் நோக்கி சென்றான்.
        “வாய்யா... சிதம்பரம். என்னாச்சு வாய்ப்புண்? சரியாச்சா?” சிரித்தபடி சகஜமாகக் கேட்டார் டாக்டர்.
         “நீங்க வேற... துக்கம் தொண்டைய அடைக்குது. ஒண்ணும் சாப்பிடமுடியாம மனுஷன் படற அவஸ்தை சொல்லி மாளாது”
        “அப்பவும் சாப்பிட முடியலைங்கறது தான் பெரிய கவலை உமக்கு! ஏன்யா முன்ன ஒரு முறை செரிக்கப் பத்தலைன்னு இங்க வந்தப்ப, கன்னாபின்னான்னு திங்கப்படாது; உடம்பை மெஷின் கணக்கா வச்சிக்கணும்னு சொன்னேனே... அதை தப்பா புரிஞ்சுகிட்டு ரைஸ் மில் மெஷினாட்டம் வெச்சிருந்தியா? வாயால மட்டுமில்ல... மனுஷன் காது, மூக்கு, கண்ணாலும் சாப்பிடலாம்னு...”
         “கண்டுபிடிச்சிருக்காங்களா அப்படி?!” ஆர்வக் கோளாறில் குறுக்கிட்டான் சிதம்பரநாதன்.
         “அப்படின்னு மட்டும் எவனாச்சும் கண்டு பிடிச்சான்னு வச்சிக்க... நானே அவனை தேடிக் கண்டுபிடிச்சு கொன்னேபுடுவேன். அந்த மாதிரி வசதி மட்டும் இருந்ததுன்னு வச்சிக்க, இப்படி நான் உட்கார்ந்து உன்கிட்ட பேசிகிட்டிருக்க முடியுமா? என்னையும் வறுத்து தின்னுட மாட்டே...!” வாக்கியத்துக்கொரு ‘வச்சிக்க' சொல்லும் வழக்கமுடைய டாக்டர்
       “சேச்சே... அந்தளவுக்கு நான் மட்டமான ரசனையுள்ள ஆளுன்னா நினைச்சீங்க? அப்படி வந்தாலும் வாட்டசாட்டமா ஒரு ஆளைப் பார்ப்பேனே ஒழிய காத்தடிச்சா பறக்கிறாப்புல இருக்கற உங்களைப் போயா....” சிரித்தான்.
        “வா வா மாட்டுக்குப் போடற ஊசி ரெண்டு போட்டு விடறேன்... காலைல என்ன சாப்பிட்ட?”
         “அட என்னங்க வயித்தெரிச்சலைக் கிளப்பிகிட்டு... கால் டம்ளர் காப்பி குடிக்க நான் பட்ட பாடு... நேத்து ராத்திரி மல்லுகட்டி கொஞ்சமே கொஞ்சம் ரவா உப்புமா சாப்பிட்டதோட கெடக்கேன்”.
       “பீரங்கிய சாப்பிடற ஆளுக்கு ரவைன்னு வச்சிக்க... கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் நல்லதாப் போச்சு...”
       “நாசமாப் போச்சு!”
       “அவசரப்பட்டு குறுக்க குறுக்க பேசாதேய்யா... சொல்றதை முழுசாக் கேட்டன்னு வச்சிக்க... சரியா வைத்தியம் பண்ண முடியும். இந்தா... இதுல ஜி.டி.டி. டெஸ்ட் எழுதியிருக்கேன். நீயே வச்சிக்காதே... கொண்டு லேப்ல கொடு. சுகரிருக்கான்னு பார்த்துடுவோம். இருந்துச்சுன்னு வச்சிக்க... அப்ப இருக்குது உனக்கு.”
        ‘விதிகொடுமைடா... இந்த ஆளுகிட்ட மாட்டினது' என தனக்குத் தானே நொந்தபடி வெளியேறினான்.
         லேப்காரன் கொடுத்த குளுக்கோஸ் கரைசலைக் குடித்துவிட்டு அவன் கூப்பிடும்போதெல்லாம் யூரினும், ரத்தமும் எடுத்து தந்து சோர்ந்து போனவன், சொல்லொண்ணா துயரம் அப்பியவனாய் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
         இந்நேரம் கடையிலிருந்திருந்தால் இரண்டு படி அரிசிப் பொரி, அரைப்படி பொட்டுக்கடலை, முக்கால் படி வறுத்த பட்டாணி, நடுநடுவே கைப்பிடியள்ளலாய் கணக்கின்றி கெட்டி அவல் என எத்தனை எத்தனை ரசித்து ருசித்திருக்கலாம். பாழாய்ப் போன வாய்ப்புண் வந்ததிலிருந்து திரவ ஆகாரமே 'ததிங்கிணதோம்' ஆகிவிட்டது. இன்று அதற்கும் கேடு வந்தது. வாய்ப் புண் பற்றிய கவலை வயிற்றுக்கு உண்டா? அதுபாட்டுக்கு பசிக்கான ஆவர்த்தனத்தை இழுத்து இழுத்து பாட, தலை வேறு வலி பிளக்கிறது. பச்சைத் தண்ணி பல்லில் படாமல் இன்னும் எத்தனை தடவை ரத்தமெடுப்பானோ லேப்காரன். மாட்டுறவனை சாகடிச்சுட்டு  தான் மறு வேலை பார்ப்பான்கள் போல.
         அந்த நேரத்தில்தான் தன் கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க வருகிறான் இவனது பள்ளிக் கூடத் தோழமை ஆத்மாநாதன்.  இவனை நெருங்கியதும், “டேய் சிதம்பரம்... எப்படிடா இருக்கே... எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து... என்ன இந்த பக்கம்... சம்சாரம் ஏதாச்சும் சமாச்சாரமா? டெஸ்ட் பண்ண வந்தியா?” மூச்சிறைக்க கேட்டான்.
        படித்துப் பெரியாளாகி, நாதன்&நாதன் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ், நாதன்&நாதன் கார்மெண்ட்ஸ் என்றெல்லாம் கூட்டாக வியாபாரம் செய்து, ஊரில் பாதி இடத்தை சொந்தமாக்கி, ஆளுக்கொரு விலையுயர்ந்த காரில் வலம் வருவதெல்லாம் அவர்களின் சின்னவயசு காஸ்ட்லி கனவு. கல்லூரிக்குப் போகும் வழியில் பி.யு.சி. என்ற ஸ்பீட் பிரேக்கர் தடுக்கி விழுந்து திசைமாறிய சிதம்பர நாதன் பிற்பாடு பட்டாணிக்கடையில் தான் பள்ளிகொள்ள முடிந்தது.
         ஆத்மா ஏக் தம்மில் அப்படியே பி.எஸ்.சி. அக்ரி பாஸ் செய்துவிட்டு கவர்மெண்டி அக்ரிகல்சுரல் டிபார்ட்மெண்டில் இருபத்துநாலு வருட உத்தியோகம். சிறுவயதிலிருந்தே அனாயாசமாகப் படிப்பவன். சதா கூத்தும் கும்மாளமுமாக இருப்பதோடு இயல்பில் ரொம்ப குசும்பு பிடித்தவன்.
         “புள்ள பெக்கற வயசாடா இது? எனக்கு தான் ஜி.டி.டி.க்கு கொடுத்துட்டு நிக்கறேன் ரிசல்ட்டுக்கு. நீ எங்கே இந்தப் பக்கம்?”
         “எனக்கும் சர்க்கரைதான். ரெண்டு வருஷமா மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன். ரொட்டீன் செக்கப் இன்னிக்கு. எனக்கு மந்த்லி டெஸ்ட்... உனக்கு எண்ட்ரன்ஸ் டெஸ்ட்! இரு... பத்து மணியானா டீ குடிக்கப் போயிடுவான். பிளட்டைக் கொடுத்துட்டு வந்துடறேன்.” வழக்கமான சிரிப்போடு ஓடினான்.
          ஆத்மா எவ்வளவு ஹாஸ்யமாகப் பேசக் கூடியவனோ அவ்வளவுக்கு ஜலதரங்கம் போல் சிரிக்கக் கூடியவன். கையில் பஞ்சை வைத்து முட்டியை மடக்கியபடியே வந்தமர்ந்தான். “ஆமா... சர்க்கரைன்னு எப்படி சந்தேகம் வந்துச்சு...? அடிக்கடி ராத்திரியில எழுந்து ஒண்ணுக்குப் போக வேண்டியிருந்துச்சா?”
        “அட ஆமாண்டா. உனக்கும் அப்படித்தானிருந்துச்சா?”
         “ஆமாமா... பசிக்கும் ஆனா ருசியிருக்காது; அடிக்கடி தாகமெடுக்கும். நாக்கு வறண்டு வறண்டு போகும். உடம்பெல்லாம் அரிப்பெடுக்கும்; நல்லா அங்கங்க அடிச்சிப் போட்டாப்புல வலிக்கும். புண் வந்தா சாமானியமா ஆறாது... சனி! இன்னும் ஒவ்வொருத்தருக்கு ஒருவிதமாயிருக்கும்”.
         “சாப்பாட்டுல வேற ஆயிரத்தெட்டு கட்டுப்பாடாயிருக்கணும்ங்கறாங்க..?”
        “ஆமா... சாப்பிடற அளவைக் குறைக்கணும். வழக்கத்தைவிட அதிகமா வேலையோ உடற்பயிற்சியோ அட... வாக்கிங்காவது போகணும்ப்பா. கூடவே தவறாம மாத்திரைங்க, மாதாந்திர டெஸ்ட், வெங்காயம் வெள்ளைப்பூண்டு... கர்பிணிப் பொம்பளைக்காவது பத்துமாசத்துல விமோசனம் இதுங்கள்லயிருந்து. ஆயுள் சந்தா, ஆயுள் காப்பீடு மாதிரி வந்தா ஆயுசுக்கும் வைத்தியமும் கையுமாயிருக்க வேண்டியதுதான் நாம.”
         லேப் டெக்னீஷியன் ரிசல்ட்டுடன் வெளியே வர, பரபரப்புடன் எழுந்தனர்.            
      சிதம்பரத்துக்கு ஃபாஸ்டிங் சுகர் அளவு 180ம், தொடர்ந்த மணியளவுகளில் கணிசமான ஏறுமுகத்தில் இறுதி முடிவு 290ம் இருந்தது. வாங்கிப் பார்த்த ஆத்மா, “அடடே... எண்ட்ரன்ஸிலேயே என்னை விடக் கம்மிதான்.  படிக்கிறப்போ அதிகம் வாங்கினா பாஸ். இங்க ரிசல்ட் குறைவாயிருந்தாத்தான் பாஸ். அங்க குறைச்சு வாங்கி எனக்கடுத்து வந்த நீ, இங்கயும் குறைச்சு வாங்கி என்னையே முந்திட்டே. நம்ம தடியன் தண்டபாணியில்ல... ஞாபகமிருக்கா உனக்கு?மூணு வருஷத்துக்கொரு தடவை அடுத்த வகுப்பு போவானே...”
         “ஆமா... இப்ப தரகு தண்டபாணியாயிருக்கானே... அவன் தானே...”
          “அவனேதான். போன வாரம் வீட்டுக்கு வந்திருந்தான். அவனுடம்புல சுகர் இருப்பு எவ்வளவு தெரியுமா? எப்பவும் 400க்கு மேலதானாம். இன்சுலின் போடாட்டி கையக் காலை இழுத்துடும்னு டாக்டர் மிரட்டியிருக்காரு. கொஞ்சம் கூட அலட்டாம எங்க வீட்டுல வெச்ச ஸ்வீட் காரத்தை ஒரு வெட்டு வெட்டிட்டு, சர்க்கரை தூக்கலா காபி கேட்டான்னா பார்த்துக்கோயேன். மனுஷன் பாயோட படுக்குறதுக்குள்ள என் பொண்ணுக்கு நல்லதொரு வரனைக் கொண்டான்னு சொல்லி அனுப்பினேன்.
          போனவாட்டி டாக்டர் கிட்ட போனப்போ அவன் சாப்பாட்டுப் பழக்கத்தையெல்லாம் கேட்டுட்டு, இனி அதுல பாதியளவு... அதையும் அஞ்சு பங்காப் பிரிச்சு அஞ்சு வேளை சாப்பிடச் சொல்லியிருக்காரு. சர்க்கரைன்னு எழுதின எழுத்தக் கூடப் பார்க்கக் கூடாதுன்னும் சொல்லியனுப்பியிருக்காரு. இவன் என்னடான்னா...” பேசிக் கொண்டே இருந்தவன் தக்க எதிர்வினை இல்லாததால் சிதம்பரநாதனைத் திரும்பிப் பார்க்கிறான். பேயறைந்தாற் போலிருக்கும் அவனது மனவோட்டத்தை ஒருவாறாய் யூகித்தவனாய்,
        “நீ என்ன மிரண்டுட்டியா...? இதெல்லாம் இந்த காலத்துல ஜீஜீபி... சுகர், பி.பி., கொலஸ்ட்ரால் இல்லேன்னா டி.பி, கேன்சர் இப்படி ஏதாச்சும் வியாதியில்லேன்னா சமூகத்துல மதிப்பேயில்ல தெரியுமா...?! அசையா சொத்து, அசையும் சொத்தோட இதையும் சேர்த்தாச்சுப்பா... ஒண்ணா ரெண்டா அப்படீன்னா நம்ம சின்ன வயசில வேற அர்த்தம். இப்ப வேற. சுகரும் பி.பி.யும் தான் அது...”ஏதேதோ சொன்னான் ஆத்மா.
           “ஏதோ இருக்கறதை வெச்சுகிட்டு பொண்டாட்டி பிள்ளைகுட்டின்னு
உல்லாசமா காலத்தை கழிச்சிட்டிருந்த எனக்கு இதுவொரு கேடு காலமா  தோணுதுடா. ஏதேதோ பயம் வருது. வீணாக் கழிச்ச பொழுதெல்லாம் பூதாகரமா எழும்பி முன்ன நின்னு கெக்கேலி கொட்டுதுடா. என்ன சோதனைடா இது   ஆண்டவனே...”அரற்றினான் சிதம்பரம்.
         “ஏண்டா டேய்... ஏதாவது கல்யாணத்துக்கோ ஊருக்கோ போக காலங்கார்த்தால அலாரம் வெச்சு எழுந்துக்கறதில்லையா...? மனுஷ வாழ்க்கையில நரையும் வியாதியும் அலாரம் போலத் தாண்டா. இது கடவுளோட வேக்-அப் கால். எதைப் பத்தியும் கவலைப்படாம லெளகீக வாழ்க்கையில மூழ்கிக் கிடக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி.
 நானும் இத கண்டுபிடிக்கிற வரை, வேலை, வீடு, சீட்டாட்டம், கிளப்ன்னு திரிஞ்சவன் தான். பையனும் உதவாத ஒரு படிப்பை படிச்சதா பேர்பண்ணிட்டு வேலை தேடுற போர்வையில சுத்திட்டிருந்தான். ‘போதும்டா நீ வேலை தேடுற லட்சணம்'ன்னு, சேவிங்ஸ்லேயிருந்து ஒருலட்சமெடுத்து பேன்சி ஸ்டோர் ஒண்ணு வெச்சி உட்கார வெச்சேன். ரெண்டே வருஷத்தில இப்ப நல்ல பிக்-அப். வந்த லாபத்தில ஒரு கவரிங் கடையொண்ணு வெக்கலாமான்னு பார்க்கிறான் இப்ப. இந்த வருஷம் படிப்பை முடிக்கிற மகளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி விட்டுட்டா நாம படுக்கையில விழுந்தாலும் பாதியில போனாலும் கவலையில்ல இல்லையா... அதுக்கு தான் தண்டபாணியை கூப்பிட்டு விட்டேன்.
        இதெல்லாம் இந்த வியாதி வராட்டி நாம துரிதமா செய்வோமா...? என்னமோ இந்த உலகமே நம்ம கையிலன்னு மிதப்பா இல்ல திரிஞ்சிட்டிருப்போம்...?! “
        “நியாயம்தான் நீ சொல்றதும். தண்டபாணியை பார்த்தா என் வீட்டுக்கொரு தடவை வரச்சொல்லு. எம்மக ஜாதகத்தை கொடுத்து கல்யாண திசை வந்தாச்சான்னு பார்க்கச் சொல்லலாம்”.
                                    - ( ஜூன் 27 உலக நீரிழிவு நாள் ) 
  

வியாழன், 23 ஜூன், 2011

என்னுடைய முதல் சிறுகதை

  என்னுடைய முதல் சிறுகதை 
 ஆனந்த விகடன்  11.3.1990 இதழில் பிரசுரமானது 

   மயில்குட்டி

                                                




             துவண்டு போயிருந்த நம்பிக்கையை விக்கிரமாதித்தன் போல் தோளில் சுமந்து கொண்டு, வீட்டுக்குப்போய் என்ன சமாதானம் சொல்லலாமென்று சிந்தித்தவாறே நடந்தான். அவனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாதுதான். அவனை நோக்கித்தான் எத்தனையெத்தனை ஆயுதங்கள்! இரண்டு நாட்களுக்கு முன் அவன் வேலை பார்க்கும் கம்பெனி அவன் மீது எய்த சென்னைக்குச் செல்வதற்கான மாற்றல் ஆணை வந்தது. மாற்றல் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் வருமென்று எதிர்பார்க்கவில்லை.
        வழக்கம் போலவே, ‘இதைத் தவிர்க்க முடியாதா, வேறு வழிகள் கிடையாதா?' என்று மனைவி நிர்மலாவின் கேள்விக்கணையிலிருந்து தப்புவதற்காக அவனுக்குக் கிடைத்த கேடயம்தான் ‘எதற்கும் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லிப்பார்க்கலாம்' என்று காலையில் சொன்ன வார்த்தை. அவள் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாயந்திரம் போய்ப் பாருங்கள் என்று நூறு முறை அரித்தெடுப்பாள் என்று தெரியாமல் போயிற்று. அவனுக்குத் தெரியும், அது இயலாதென்று. ஆனாலும், அவளுக்காக அவரைப் பார்த்துவிட்டு வந்தான்.
       கோபாலகிருஷ்ணன் ஒன்றும் கம்பெனி பிரம்மாக்களில் ஒருவரல்ல. சிவனேயென்று கிளையலுவலகத்தில் அமர்ந்திருக்கும் கிளை உதவி மேலாளர். அவ்வளவுதான். கோபாலகிருஷ்ணன் தன் வார்த்தைகளில் சர்க்கரை தடவி, அவரும் அவர் குடும்பத்தாரும் இந்த மாற்றல் உத்தரவால் வருந்துவதாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டு, மாற்றலை நிறுத்துவது; உயிரை விடுவது இவ்விரண்டையும் தவிர மற்ற அனைத்து உதவிகளையும் தம்மால் செய்ய முடியும் என்பது போல் பேசினார்.
       ஆயிற்று... இப்போது வீட்டுக்குச் செல்லவேண்டும். அவனுக்குள்ளே எதிர்பார்ப்புகள், கனவுகள் எதுவுமில்லை. ஆகவே அது உடையவுமில்லை. ஆனால், வீட்டில் நிலைமை அவ்வாறு இல்லையே! மனைவி நிர்மலா, குழந்தைகள் சரவணன், திவ்யா எல்லோரது எதிர்பார்ப்பும் உடைந்து போகுமே.
 அவர்களுக்கென்னவோ இந்த ஊர் மிகவும் பிடித்துப் போயிற்று. இதுவரை தங்கியிருந்த ஊர்களில் இந்த கும்பகோணம் மட்டும் சட்டென்று அவர்களது மனதில் இடம் பிடித்துக் கொண்டது.
        நிர்மலாவுக்கு இங்கு வந்த பிறகுதான் முன்னேற்றத்தின் படிகள் தெரிவதாக ஒரு நம்பிக்கை. அதற்கு அவளுக்கு ஆதாரமாய் திகழ்ந்தவள் மூன்றாவது வீட்டு சவுந்திரம்மாள்.
        சவுந்திரம்மாள் ரொம்ப கெட்டிக்காரி என்று அடிக்கடி நிர்மலா சொல்வாள். நிறைய வித்தைகள் தெரிந்தவளாம். வீட்டில் சின்னச் சின்ன கைவைத்தியம் செய்வது, புதுப்புது பலகாரங்கள் பண்ணுவது, கோலங்கள் கற்றுத் தருவது, நகரில் வந்திருக்கும் சினிமா பற்றி காரசாரமாக விமர்சனம் பண்ணுவது... இன்னும் நிறைய.
       அவற்றுள் ஒன்றுதான் பணம் பண்ணும் வித்தை. எப்படி சிக்கனமாக இருந்து பணத்தை சேமிப்பது, அப்படிச் சேர்த்த பணத்தை எப்படி விருத்தி செய்வது என்பதையெல்லாம் அவன் மனைவி அவளிடம் கற்று சமர்த்தானது குறித்து அவனுக்கும் மகிழ்ச்சிதான். அநாவசிய செலவுகள் குறைந்தது. அவனுடைய பாக்கெட் மணி வழக்கமும் ஒழிந்தது. அடுத்த மாதம் கூட ஏதோ சீட்டு பிடிக்கப் போவதாகச் சொன்னாள். இந்த வேளையில் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவனுக்குப் புரியவில்லை.
          கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவதற்கு முன் நைசாகப் பேசி குழந்தைகளைச் சமாதானப் படுத்தும் நோக்கில், “மெட்ராஸ்ல அட்டகாசமான பீச் இருக்கு; பெரிய்ய பெரிய்ய ஹோட்டல்களெல்லாம் இருக்கு; அப்புறம்... Zoo... 
அங்க இந்த சிங்கம் புலி கரடியெல்லாம் கர்புர்ன்னு சப்தம் போட்டுகிட்டு பார்க்கவே தமாஷாயிருக்கும். பொய்ய்ய்ங்ன்னு சத்தம் போட்டுட்டு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் இல்லே... அது இப்படியும் அப்படியும் போயிகிட்டு இருக்கும்; அப்புறம் என்னென்ன... ம்... துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பாக்கின்னு திக்கி திக்கி திவ்யாகுட்டி கடைசியில டுமீல்ன்னு சுடுமே... அந்தக் குறள் எழுதுன வள்ளுவர் பேருல ‘வள்ளுவர் கோட்டம்'ன்னு... எப்பா... அந்த வானம் முட்டுக்கும் ஒரே ஒசரமாயிருக்கும் தேரெல்லாம்... ஆங்... மாடி பஸ் கூட உண்டு டட்டடய்ங்க்... அதெல்லாம் பார்க்க வேணாமா?” என்றான்.
       “ம்ஹீம்... வேணாம்ப்ப. நாம இங்கியே இருந்துடலாம். இருந்தா ஜாபரு மயில் தோகை தரேன்னு சொன்னான். அதை புத்தகத்துல வச்சி அதுக்கு தென்னை மரத்துலயிருந்து காய்ஞ்ச பட்டையை சுரண்டி வெச்சா குட்டி போடுமாம்!” என்றான் சரவணன், அவனது சால்ஜாப்புக்கெல்லாம் சற்றும் சலனப்படாமல்.
       “ஆமாம்ப்பா. நான் கூட தோட்டத்துல ரோஜா செடி வெச்சிருக்கேன். அது பூக்கறதைப் பார்க்காம எப்படிப் போறது?” என்றது மழலை மாறாமல் திவ்யா.
 தன் வித்தை பலிதமாகாமல், “அப்படியா... ரோஜாப்பூ வெச்சா உனக்கு ரொம்ப அழகாயிருக்குமே...” என்று அவளது கன்னங்களை வழித்து நெட்டி முறித்துவிட்டு, “சரி போய் விளையாடுங்க” என்று அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்த போது அவனையுமறியாமல் கண்களில் கண்ணீர் சூடாக வழிந்தது.
       வீட்டுக்குள் வந்ததும், குழந்தை திவ்யாவை வாரி மடியில் போட்டுக் கொண்டு, சரவணனை ஒரு பக்கம் சாய்த்து, எப்படி அவர்களைச் சமாதானப் படுத்துவது என்று குழம்பி மெளனத்தை உபாயமாய் கையாண்டான். பின் அவர்களைப் படுப்பதற்காகப் பெட்ரூமுக்குப் போகச் சொன்னான்.
       அப்போது அடுப்படியிலிருந்து வந்த நிர்மலா, “ஏன் இவ்வளவு நேரம்? நான் இன்னும் ஆளைக் காணுமேன்னு நெனைச்சிட்டு இருக்கேன். சாப்பிட வேணாமா?” என்றாள்.
       “வேணாம். கொஞ்சம் காபி மட்டும் கொடு. பசிக்கலை”.
 அவள் காபி கலக்குவதற்காக மறுபடியும் அடுக்களைக்குள் சென்றாள். அங்கிருந்தவாறே குரல் கொடுத்தாள். “போய்ப் பார்த்தீங்களா? அவரு என்ன சொன்னாரு?”
        அவனுக்குத் தெரியும். நேரடியாக கேட்க மனமில்லாத போதெல்லாம் அவள் அடைக்கலமாகுமிடம் அடுக்களைதான்.
        “ம்... பார்த்தேன். ட்ரை பண்றாராம். ஆனால் நிறைய காசு செலவாகுமாம். அதுவுமில்லாம ட்ரான்ஸ்ஃபரையெல்லாம் மறுக்காம ஏத்துகிட்டா சீக்கிரம் ப்ரமோஷன் கிடைக்குமாம். அப்புறம் பிரச்சினையில்லாம ஜம்முன்னு ஒரே ஊருல இருக்கலாமாம். இப்பக் கொஞ்சம் பல்லைக் கடிச்சிகிட்டு இதைச் சமாளிங்கன்னு சொன்னாரு. எனக்கும் அதுதான் தோணுது. நாம இங்கிருந்து போகறதுல அவருக்குத்தான் பாவம் ஏக வருத்தம். அவர் என்ன பண்ணுவாரு?”
       அவன் மேலும் அங்கிருக்க மனமில்லாமல், குழந்தைகள் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான். குழந்தைகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொண்டு தானிருந்தனர். ஒரு குற்றவாளியைப் போல குறுகுறுக்கும் மனத்துடன் அருகில் சென்றான்.
       “இன்னும் தூங்கலையா?”
       “ம்ஹீம்... ஏம்பா மெட்ராஸ்ல மயில்தோகை நிறையக் கிடைக்குமாமே... அம்மா சொன்னாங்க” என்றான் சரவணன்.
       இதை எதற்கு இப்போது கேட்கிறான் என்று புரியாமல், என்ன சொல்வது என்று விழித்த போது, காபியுடன் உள்ளே நுழைந்த நிர்மலா, கண்சிமிட்டி சமிஞ்சை செய்தாள்.
        இவன் புரிந்து கொண்டு, “ஆமாம்ப்பா... நிறைய கிடைக்கும்”.
       “அப்படின்னா மெட்ராஸ் போகலாம்ப்பா”.
        “ஆமாம்ப்பா... நான் கூட செடியை எடுத்துகிட்டு வந்திடறேன். மெட்ராஸ்ல ஆரஞ்சு கலர் ரோஜா, மஞ்சள் கலர் ரோஜா செடியெல்லாம் கிடைக்குமாமே...” இது திவ்யா.
       “சரி தூங்குங்க. காலையில சீக்கிரம் எழுந்திரிக்கணும்” என்று அவர்களை தூங்க வைக்க முயற்சித்தாள் நிர்மலா.
 படுக்க மனமில்லாமல், கேட்க எத்தனித்த கேள்விகளைத் தளராமல் ஸ்டாக் வைத்திருந்த சரவணன், அதிலிருந்து ஒன்றை சலித்துப் பொறுக்கியெடுத்து மீண்டும் சந்தேகத்துடன் கேட்டான். “ஏம்பா மயில் தோகை குட்டி போடுமா?”
       “ஓ! போடுமே”
        கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் ஏதோ ஒரு நிம்மதியில் கண்ணயர்ந்தார்கள்.
        எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிர்மலா அவன் முன் வந்தமர்ந்தாள். மனதில் இருந்த எத்தனையோ கனவுகளையும் திட்டங்களையும் கலைத்துவிட்டு குழந்தைகளின் மனதில் தளர்ச்சி ஏற்படுத்தாமல் அவர்கள் வழியிலேயே தேற்றியிருக்கிறாயே... உன்னை நான் எப்படி சமாதானப் படுத்துவது? என்பது போல் பார்த்தான்.
        ‘எல்லாம் எனக்குத் தெரியும்' என்பதுபோல் கண்களைத் தாழ்த்திப் பார்த்துவிட்டு அவன் கைகளில் முகம் புதைத்து தூங்க முயற்சித்தாள் நிர்மலா. அவனுக்குத் தெரியும். அவள் எத்தனைக் காயப்பட்டிருப்பாளென்று. அவளது சின்னச் சின்ன ஆசைகளை எதிர்பார்ப்புகளைக் கூட நிறைவேற்ற முடியாமல்...
       கடவுளே... ஏன் என்னை ஒவ்வொரு முறையும் நிராயுதபாணியாகவே போர்க்களத்துக்கு அனுப்புகிறாய்...?
       தூங்கும் புஷ்பங்களைப் பார்த்தான். சரவணன் ஏதோ கேட்கப்போகும் பாவனையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
       மெட்ராசுக்குப் போனதும் எங்காவது மயில் தோகை வாங்கி வந்து மறக்காமல் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனான்.

(நன்றி: ஆனந்த விகடன் - 11.3.1990)

திங்கள், 20 ஜூன், 2011

PEEPLI (LIVE)

    PEEPLI (LIVE)

       சமீப காலமாக தேநீர்க் கடைகள், திரையரங்கங்கள், திருமணக்கூடங்களில் சக மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் சலிப்பான உரையாடல் ஒன்றை நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இந்தியா எந்திரமயமாகி வருகிறது. நகரங்களில் மக்கள் நிமிடங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அவசரகதியில் சக மனிதர்களைப் பற்றிய அக்கறையில்லாமல் பறக்கிறார்கள். வீடுகள் நெருக்கமாகி இருக்கின்றன. மனிதர்கள் தூரம்தூரமாக விலகிவிட்டார்கள் என்ற அர்த்தம் தொனிக்கிற பேச்சுக்களை வெவ்வேறு குரல்களில் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள்.
       தொழில் பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சியென்று இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகளோடு சமபலத்தில் மோதும் அளவிற்குப் பெருகிவிட்டது. ஆனால் மனிதம் வீழ்ந்து கொண்டிருக்கிறதே என்ற கவலை, இரண்டு மூன்று தலைமுறைகளை ஒருங்கே பார்க்க முடிந்தவர்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இது இயல்பாகி விடலாம்.
       யோசித்துப் பார்க்கையில் எல்லாப் பொருளாதாரக் காரணங்கள் சமகால நியாயங்களையும் தாண்டி, மூலகாரணமாய் ஒன்று தோன்றுகிறது. சில பத்து வருடங்கள் முன் வரை ‘இந்தியா ஒரு விவசாய நாடு' என்பதுதான் சர்வதேச அரங்கில் நமக்கான அடையாளமாக இருந்தது. ஆனால் இன்று இந்தியா ஒரு வளர்ந்து வரும் தொழில்துறைகள் சார்ந்த நாடு என்பதுதான் சரியாக இருக்கும். வயல்கள் நிரம்பியிருந்த ஊர்களில் இன்று ‘கான்கிரீட் காடுகள்' என்னும் அளவுக்கு கட்டடங்கள் பெருகி விட்டன. உயிர்ப்பான ‘பயிர்கள்' நம் பிரதான உற்பத்திப் பொருளாக இருந்தவரை நம்மிடையே ‘மனிதமும்' உயிர்ப்புடன் இருந்தது. விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘உயிரற்ற' பொருட்களின் உற்பத்திப் பெருகப்பெருக மனிதமும் செத்துவிட்டதோ என்று தோன்றுகிறது.
       தை மாதம் பிறந்துவிட்டால் திரும்பிய பக்கமெல்லாம் பசேசென்று வயல்கள் பூத்துக் குலுங்க இந்த தேசமே உயிர்ப்புடனிருப்பது போல் பார்க்கச் சிலிர்ப்பாக இருக்கும். நாற்று நடும்போதும், களைபறிக்கும் போதும், அறுவடையின் போதும் பாட்டு, கேலி, கிண்டல் என்று பணிபுரியும் சூழலில் கூட சகமனிதர்களோடு கலந்து உறவாடுவது நம் வாழ்வின் மரபாக இருந்து வந்தது. கூட்டமாக, குதூகலமாக கொண்டாடப்படவேண்டிய திருவிழாக்கள் கூட இன்று 14”,21” பெட்டிகளுக்குள் சுருங்கி விட்டன. தேசத்தின் பசுமைக் குறையக் குறைய மனிதர்களின் மனதிலும் பச்சையம் குறைந்து விட்டது.
      இது வழக்கமாகக் கேட்கும் பழமையின் குரலல்ல... இழப்பின் வலி.
 உணவுதான் மனிதனின் அத்தியாவசியத் தேடல். ஆனால், அதனை இலக்காகக் கொண்டு இயங்கும் விவசாயம் இன்று ஏளனத்துக்கும், அலட்சியத்துக்கும் உரிய சொல்லாகிவிட்டது. நம் கல்வித் திட்டத்தில் கூட விவசாயம் ஒரு அத்தியாவசியமான பாடமாயில்லை. எப்படி நம் தமிழ்க் குழந்தைகள் தமிழையே புறக்கணித்துவிட்டுப் பட்டப் படிப்பை முடித்து விடும் சூழல் இருக்கிறதோ அதுபோல, விவசாயம் என்றால் என்னவென்று கடுகளவும் தெரியாமல் ஒரு மனிதனின் ஆயுட்காலம் கடந்துவிடுமளவு நம் பிழைப்புலகம் முற்றிலும் வேறாக விவசாயத்திலிருந்து விலகி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனில், ஒரு விவசாயியின் துயரங்களை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை எப்படி ஒரு சராசரி மனிதன் உணர்ந்து கொள்வான்?
       எங்கோ ஓர் ஊரில், ஏதோவொரு சாலையில், யாரோ ஒரு முகமறியாத மனிதன் விபத்தில் மரணமடைவதைச் செய்திகளில் கேட்டுக் கடந்து விடுவதைப் போல், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை எளிதாகக் கடந்து விடுகிறோம்.
       கடந்த ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர், விவசாயிகள் பட்டினிச் சாவு பட்டியலை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கிறார். வருந்துவதைக் காட்டிலும் அவமானப்பட வேண்டிய செய்தியிது. நமக்கான பருக்கைகளை அனுப்பிவிட்டு, பட்டினியால் கடன் தொல்லையால் சாகிறான் என்றால், நாமெல்லாம் நன்றிகெட்டவர்கள் ஆகிவிட்டோமோ என்ற உறுத்தல், ஒவ்வொரு கவளத்தை உண்ணும் போதும் நமக்கு ஏற்பட வேண்டும்.
       இந்த உறுத்தல் இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கானுக்கு இருந்ததன் விளைவுதான் PEEPLI (LIVE) என்கிற படம். உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் ரித்விக் கட்டக், சத்யஜித்ரே, ஷ்யாம் பெனகல், மிருணாள்சென், அடூர் கோபால கிருஷ்ணன், மீரா நாயர், தீபாமேத்தா என்று நம் இந்திய இயக்குநர்களை எந்தச் சலனமுமின்றிச் சேர்க்கலாம். நம் தமிழில் கூட, ருத்ரய்யா, ஜெயபாரதி, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா என்று சிலரைக் குறிப்பிட முடியும். என்ன பிரச்சினை என்றால், இவர்கள் விருதுப்பட இயக்குநர்கள் என்று முத்திரையிடப்பட்டு இவர்களுடைய திரைப்படங்கள் என்றாலே மிதமிஞ்சிய சோகம் அல்லது மெதுத் தன்மை இருக்கும் என்று பெரும்பாலான பார்வையாளர்கள் ஒரு அச்சத்துடன் புறக்கணிக்கிறார்கள்.
        அமீர்கானின் இந்தித் திரைப்படங்கள் (அவரது தயாரிப்பில் உருவானவை) பிரதானமான பிரச்சினையை எப்படி ஜனரஞ்சகமாக பொதுப் பார்வையாளர்கள் மிரண்டுவிடாதபடி தருவது என்கிற அறிதலோடு உருவாக்குகிறார். அவரது முந்தைய படங்களான லகான், தாரே ஸமீன் பர் ஆகியன இப்படியான ஜாக்கிரதையோடு எடுக்கப்பட்டவை தான். அவை விமர்சகர்கள், வெகுஜன ரசிகர்கள் இருதரப்பாலும் வரவேற்பைப் பெற்றன.
       முழுக்க முழுக்க கலைத்தன்மை என்று சொல்ல முடியாமலும், முழுதும் ஜனரஞ்சகமான படமென்று சொல்ல முடியாமலும் ஒரு சமரச பாணியில் அவரது  படங்கள் இருக்கின்றன. PEEPLI (LIVE) சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்ட நல்ல திரைக்கதைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
       முக்கியப் பிரதேசமென்னும் கற்பனையான மாநிலத்தில் ‘பீபிலி' என்ற கிராமத்தில் நந்தா தாஸ் மற்றும் அவரது அண்ணன் புதியா தாஸ் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். இருவருக்கும் விவசாயம்தான் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கான மூலாதாரம். பொதுவான அவர்களின் நிலத்தில் விளைச்சல் குறைந்து தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. வங்கிக் கடனுக்காக அலைகின்றனர். ஆனால் எதுவும் கிடைத்தபாடில்லை. உள்ளூர் அரசியல் தலைவரிடம் வங்கிக் கடன் பெற்றுத் தரும்படி கேட்கிறார்கள். ஆனால் அவரோ ‘அது சாத்தியமில்லை; எனினும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அரசு ஒரு லட்சம் உதவித் தொகை தருகிறது' என்று நக்கலாகக் கூறி அனுப்பி விடுகிறார்.
        சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கடைசியில், நந்தாதாஸ் தான் தற்கொலை செய்து கொள்வதால் கிடைக்கும் ஒருலட்ச ரூபாய் பணத்தில் இருவரது குடும்பத்தையும் காப்பாற்றும்படி அண்ணனிடம் கூறிச் சம்மதிக்கச் செய்கிறான். இருவரும் அந்த முடிவுக்கு வந்தபின், சாராயம் குடிக்கிறார்கள். போதையோடு ஒரு தேநீர்க்கடையில் அவர்கள் நந்தாதாஸ் தற்கொலை செய்யப் போகும் விஷயத்தை உளறி விடுகிறார்கள். தேநீர்க் கடையில் தற்செயலாக அமர்ந்திருந்த உள்ளூர் நிருபர் ராகேஷ், இந்தப் பரபரப்பான செய்தியை பெரிய அளவு கொண்டு செல்வதன்மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம் என்ற முடிவோடு ITVN எனும் ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நந்திதா மாலிக்கிற்குத் தகவல் தெரிவிக்கிறான்.
       முக்கியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர்தொல்லை காரணமாக, மாநிலத்தின் இடைத்தேர்தல் அறிவிக்கப் படுகிறது. இந்தச் சூழலில் நந்தாதாஸ் தற்கொலைச் செய்தியைப் பரபரப்பாகத் தருவது சேனலுக்கு பெரியதொரு பெயரைத் தருமென யோசித்த நந்திதா, பீபிலி கிராமத்துக்கு நேரலை ஒளிபரப்புச் சாதனங்களோடு வருகிறார்.
        பாரத் லைவ் என்னும் ஹிந்திச் சேனலுக்கும் இந்த ஆசை தொற்றிக் கொள்ள அவர்களும் நேரடி ஒளிபரப்புச் சாதனங்களோடு பீபிலி கிராமத்துக்குள் நுழைகின்றனர்.
        உள்ளூரிலிருக்கும் ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு இது பெரிய தலைவலியைத் தருகிறது. காவல்துறைத் துணையோடு நந்தா தாஸ் மற்றும் புதியா தாஸை அழைத்து மிரட்டுகிறார். ஆனால் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் இதை லேசில் விடுவதாயில்லை. ஒரு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் தாங்களே தீர்த்துக் கட்டி விடுவோம் என்று அச்சுறுத்துகிறார்கள்.
       சேனல்காரர்கள் மாற்றி மாற்றி இருவரது பேட்டியையும் ஒளிபரப்பப் போட்டி போடுகிறார்கள். ஆனால் இரண்டு பேரும் அரசியல் கட்சிகளின் மிரட்டல்களுக்குப் பயந்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.
 ITVN-ன் நந்திதா, உள்ளூர் நிருபர் ராகேஷின் உதவியோடு எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் எதிர்பார்த்த நாட்டை அதிரச் செய்யும் நந்தாதாஸ் பேட்டி கிடைக்கவில்லை.
       பாரத் லைவ் சேனல்காரர்கள் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்து நந்தாதாஸின் அண்டை வீட்டார்கள், சிறுபிராய நண்பர்கள் ஆகியோரின் பேட்டியை ஒளிபரப்புகிறார்கள். அதோடு, உயரமான மரக்கோபுரம் அமைத்து அதன் வழியே ஊர் முழுக்கத் தெரியும்படி நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்.
       ஆளுங்கட்சி ஏதாவது செய்து இதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயம். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்கின்றன. எனவே, இருக்கின்ற உதவித் திட்டங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு கைப்பம்பு தரலாம் என முடிவெடுத்து, அரசு அதிகாரியொருவர் ஒரு ஜீப்பில் அரசுப் பட்டாளத்துடன் வந்து கைப்பம்பை நந்தா தாஸின் தலையில் கட்டிவிடுகிறார். இதை நிலத்தில் இறக்க பண உதவி கிடைக்குமா என்று கேட்கிறான் நந்தாதாஸ். கோப்புகளைப் புரட்டிப் புரட்டிப்  பார்த்துவிட்டு, விதிமுறைகளின்படி இல்லை என உதட்டைப் பிதுக்கிவிட்டுக் கிளம்புகிறார்கள்.
        எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தந்து விட்டுப் போகிறார். தட்டுமுட்டு சாமான்கள் கூட வைக்க இடம் போதாத அவர்களின் சிறிய வீட்டில் நடுநாயகமாக பிரயோஜனமற்ற கைப்பம்பும், டி.வி.யும்!
        ஆளும் சம்மான் கட்சியின் முதல்வர் ராமபாவு யாதவ், இந்தத் தலைவலியைத் தீர்க்கும் பொறுப்பை விவசாயத் துறை அமைச்சர் சலீம் இத்வாய் (நசுருதீன் ஷா) வசம் ஒப்படைக்கிறார்.
         நந்தாதாஸின் ஒவ்வொரு அசைவும் நேரடி ஒளிபரப்பாகிறது. தற்கொலைக்கான தினத்தின் அதிகாலை மலம் கழிக்கச் செல்லும் நந்தாதாஸ், திடீரென தலைமறைவாகி விடுகிறார். எல்லோரும் எதிர்பார்த்த பரபரப்பு நாடு முழுதும் பரவுகிறது.
       பீப்லி கிராமத்தில் தன் விவசாய நிலத்துக்காகக் கிணறு வெட்டும் பணியைத் தன்னந்தனியாக ஆரம்பித்து, முடிப்பதற்கு முன் பசிக் கொடுமையில் இறந்து போகிறார் இன்னொரு விவசாயி.
        ராகேஷ் அவரைப் பற்றிய செய்தியை ஒளிபரப்பலாமென நந்திதாவிடம் சொல்கிறான். ஆனால், நாடு முழுக்க நந்தாதாஸ் மேல் கவனத்துடன் இருக்கும் சூழலில், இறந்து போன விவசாயியைப் பற்றி செய்தி தயாரிப்பது அத்தனை புத்திசாலித்தனமில்லை என்று நந்திதா மறுத்து விட, ராகேஷ் ஏமாற்றமடைகிறான்.
        சலீம் தான் நந்தாதாஸை கடத்தி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார்.
        நந்தாதாஸை எல்லோரும் தேடிக் கொண்டிருக்கும் போது, ஊரில் பூட்டிக் கிடந்த கூரை வீடொன்று தற்செயலாகத் தீப்பிடித்துக் கொள்கிறது. தீ விபத்தில் எதேச்சையாக மாட்டிக்கொண்ட ராகேஷ் அடையாளம் தெரியாதபடி கருகிவிடுகிறான். இறந்து போனது நந்தாதாஸ் என்றும் அது எதிர்பாராத விபத்து என்றும் தவறாக நினைத்துக் கொள்ளும் சேனல்காரர்கள், நந்தாதாசுக்குக் காவலாக வந்த காவல்துறையினர், அவர்களை எல்லாம் நம்பி தற்காலிகமாக ஆரம்பிக்கப் பட்ட கடைகள் எல்லாம் ஒரே நேரத்தில் ஊரை விட்டுக் கிளம்பி விடுகின்றனர்.
         நந்தாதாஸின் மரணம் விபத்துதான்; தற்கொலையல்ல என்று முடிவெடுத்த அரசு, தற்கொலைக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஒரு லட்சத்தைத் தர முடியாது எனக் கைவிரித்து விடுகிறது. கடைசிக் காட்சியில் நந்தாதாஸ் சாகவில்லை. அவனது தாடி மீசை எடுக்கப்பட்டு, ஒரு பாலம் கட்டும் பணியில் தினக்கூலியாக அடையாளம் தெரியாத நபரைப்போல காட்டப்படும் போது நாம் அதிராமல் இருக்கவே முடியாது.
       
      படத்தின் இயக்குநர் அனுஷா ரிஸ்விக்கு இதுதான் முதல்படம். அமீர்கான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் என்றாலும், அவர் தான் தயாரிக்க எடுத்துக் கொள்ளும் படங்களின் திரைக்கதை மீது செலுத்தும் அதீத கவனம் நல்ல சினிமாவுக்கான சிறந்த முயற்சி எனலாம். தமிழில் பிரகாஷ்ராஜ் இப்படியான கவனத்தோடு தயாரிக்க முயல்கிறார்.
        படத்தில் நந்தாதாஸ் காணாமல் போனபிறகு, தொலைக்காட்சிச் சேனல் தொகுப்பாளர், நந்தா மலம் கழித்த இடத்தை வட்டமிட்டு, ‘இது தான் அவர் மலம் கழித்த இடம்' என்று சென்ஷேஷனல் நியூஸ் சொல்லும் காட்சி இந்தச் சமூகத்தின் மீதான, அரசியல் வாதிகள் மீதான, ஊடகங்கள்  மீதான சவுக்கடி விமர்சனம்.
        ஒரு ஜீவாதாரமான பிரச்சினையை, எப்படி ஒரு பொதுப்பார்வையாளனின் ரசனைக்கும், புரிதலுக்குமான பக்குவத்தோடு சொல்வது என்று, தீர்க்கமாக யோசித்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘பீபிலி லைவ்' பாணி, திரைப்படக் கலைஞர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தமிழில் சேரனும், வசந்தபாலனும் இந்த வகை பாணியைக் கையாள்கிறார்கள்.
 சற்று எள்ளலுடன் சொல்லப்பட்டாலும் ‘பீபிலி லைவ்' மிகச் சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாக, அது எடுத்துக் கொண்ட பிரச்சினையின் அடிப்படையில் சொல்லலாம்.
        ‘ஒரு விவசாயியின் மரணமென்பது ஒரு தேசத்தின் மரணம்' என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்?

அனுஷா ரிஸ்வி:

தில்லி பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்ற அனுஷா, பத்திரிகையாளராகத்தான் தன் இலட்சியப் பணியைத் துவங்கினார். பீப்லி லைவ் படத்துக்கான கதையுடன் அமீர்கானை அணுகியபோது, முதலில் இவரால் டைரக்ட் செய்ய முடியுமா என்று தயங்கினார். அதன் பிறகு சற்று தயக்கத்துடன் படம் எடுக்கச் சம்மதித்தார். படப்பிடிப்பின் போது இவரது சுறுசுறுப்பான உழைப்பைக் கண்ட பிறகு, நம்பிக்கையுடன் முழு பணியையும் ஒப்படைத்தார். தனது முதற் படத்திலேயே ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப் படும் பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.(2011 ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் போட்டியில்,  சிறந்த அயல்மொழிப் படத்துக்கான போட்டியில் கலந்து கொள்ள இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.)


 

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...