வியாழன், 23 ஜூன், 2011

என்னுடைய முதல் சிறுகதை

  என்னுடைய முதல் சிறுகதை 
 ஆனந்த விகடன்  11.3.1990 இதழில் பிரசுரமானது 

   மயில்குட்டி

                                                




             துவண்டு போயிருந்த நம்பிக்கையை விக்கிரமாதித்தன் போல் தோளில் சுமந்து கொண்டு, வீட்டுக்குப்போய் என்ன சமாதானம் சொல்லலாமென்று சிந்தித்தவாறே நடந்தான். அவனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாதுதான். அவனை நோக்கித்தான் எத்தனையெத்தனை ஆயுதங்கள்! இரண்டு நாட்களுக்கு முன் அவன் வேலை பார்க்கும் கம்பெனி அவன் மீது எய்த சென்னைக்குச் செல்வதற்கான மாற்றல் ஆணை வந்தது. மாற்றல் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் வருமென்று எதிர்பார்க்கவில்லை.
        வழக்கம் போலவே, ‘இதைத் தவிர்க்க முடியாதா, வேறு வழிகள் கிடையாதா?' என்று மனைவி நிர்மலாவின் கேள்விக்கணையிலிருந்து தப்புவதற்காக அவனுக்குக் கிடைத்த கேடயம்தான் ‘எதற்கும் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லிப்பார்க்கலாம்' என்று காலையில் சொன்ன வார்த்தை. அவள் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாயந்திரம் போய்ப் பாருங்கள் என்று நூறு முறை அரித்தெடுப்பாள் என்று தெரியாமல் போயிற்று. அவனுக்குத் தெரியும், அது இயலாதென்று. ஆனாலும், அவளுக்காக அவரைப் பார்த்துவிட்டு வந்தான்.
       கோபாலகிருஷ்ணன் ஒன்றும் கம்பெனி பிரம்மாக்களில் ஒருவரல்ல. சிவனேயென்று கிளையலுவலகத்தில் அமர்ந்திருக்கும் கிளை உதவி மேலாளர். அவ்வளவுதான். கோபாலகிருஷ்ணன் தன் வார்த்தைகளில் சர்க்கரை தடவி, அவரும் அவர் குடும்பத்தாரும் இந்த மாற்றல் உத்தரவால் வருந்துவதாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டு, மாற்றலை நிறுத்துவது; உயிரை விடுவது இவ்விரண்டையும் தவிர மற்ற அனைத்து உதவிகளையும் தம்மால் செய்ய முடியும் என்பது போல் பேசினார்.
       ஆயிற்று... இப்போது வீட்டுக்குச் செல்லவேண்டும். அவனுக்குள்ளே எதிர்பார்ப்புகள், கனவுகள் எதுவுமில்லை. ஆகவே அது உடையவுமில்லை. ஆனால், வீட்டில் நிலைமை அவ்வாறு இல்லையே! மனைவி நிர்மலா, குழந்தைகள் சரவணன், திவ்யா எல்லோரது எதிர்பார்ப்பும் உடைந்து போகுமே.
 அவர்களுக்கென்னவோ இந்த ஊர் மிகவும் பிடித்துப் போயிற்று. இதுவரை தங்கியிருந்த ஊர்களில் இந்த கும்பகோணம் மட்டும் சட்டென்று அவர்களது மனதில் இடம் பிடித்துக் கொண்டது.
        நிர்மலாவுக்கு இங்கு வந்த பிறகுதான் முன்னேற்றத்தின் படிகள் தெரிவதாக ஒரு நம்பிக்கை. அதற்கு அவளுக்கு ஆதாரமாய் திகழ்ந்தவள் மூன்றாவது வீட்டு சவுந்திரம்மாள்.
        சவுந்திரம்மாள் ரொம்ப கெட்டிக்காரி என்று அடிக்கடி நிர்மலா சொல்வாள். நிறைய வித்தைகள் தெரிந்தவளாம். வீட்டில் சின்னச் சின்ன கைவைத்தியம் செய்வது, புதுப்புது பலகாரங்கள் பண்ணுவது, கோலங்கள் கற்றுத் தருவது, நகரில் வந்திருக்கும் சினிமா பற்றி காரசாரமாக விமர்சனம் பண்ணுவது... இன்னும் நிறைய.
       அவற்றுள் ஒன்றுதான் பணம் பண்ணும் வித்தை. எப்படி சிக்கனமாக இருந்து பணத்தை சேமிப்பது, அப்படிச் சேர்த்த பணத்தை எப்படி விருத்தி செய்வது என்பதையெல்லாம் அவன் மனைவி அவளிடம் கற்று சமர்த்தானது குறித்து அவனுக்கும் மகிழ்ச்சிதான். அநாவசிய செலவுகள் குறைந்தது. அவனுடைய பாக்கெட் மணி வழக்கமும் ஒழிந்தது. அடுத்த மாதம் கூட ஏதோ சீட்டு பிடிக்கப் போவதாகச் சொன்னாள். இந்த வேளையில் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவனுக்குப் புரியவில்லை.
          கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவதற்கு முன் நைசாகப் பேசி குழந்தைகளைச் சமாதானப் படுத்தும் நோக்கில், “மெட்ராஸ்ல அட்டகாசமான பீச் இருக்கு; பெரிய்ய பெரிய்ய ஹோட்டல்களெல்லாம் இருக்கு; அப்புறம்... Zoo... 
அங்க இந்த சிங்கம் புலி கரடியெல்லாம் கர்புர்ன்னு சப்தம் போட்டுகிட்டு பார்க்கவே தமாஷாயிருக்கும். பொய்ய்ய்ங்ன்னு சத்தம் போட்டுட்டு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் இல்லே... அது இப்படியும் அப்படியும் போயிகிட்டு இருக்கும்; அப்புறம் என்னென்ன... ம்... துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பாக்கின்னு திக்கி திக்கி திவ்யாகுட்டி கடைசியில டுமீல்ன்னு சுடுமே... அந்தக் குறள் எழுதுன வள்ளுவர் பேருல ‘வள்ளுவர் கோட்டம்'ன்னு... எப்பா... அந்த வானம் முட்டுக்கும் ஒரே ஒசரமாயிருக்கும் தேரெல்லாம்... ஆங்... மாடி பஸ் கூட உண்டு டட்டடய்ங்க்... அதெல்லாம் பார்க்க வேணாமா?” என்றான்.
       “ம்ஹீம்... வேணாம்ப்ப. நாம இங்கியே இருந்துடலாம். இருந்தா ஜாபரு மயில் தோகை தரேன்னு சொன்னான். அதை புத்தகத்துல வச்சி அதுக்கு தென்னை மரத்துலயிருந்து காய்ஞ்ச பட்டையை சுரண்டி வெச்சா குட்டி போடுமாம்!” என்றான் சரவணன், அவனது சால்ஜாப்புக்கெல்லாம் சற்றும் சலனப்படாமல்.
       “ஆமாம்ப்பா. நான் கூட தோட்டத்துல ரோஜா செடி வெச்சிருக்கேன். அது பூக்கறதைப் பார்க்காம எப்படிப் போறது?” என்றது மழலை மாறாமல் திவ்யா.
 தன் வித்தை பலிதமாகாமல், “அப்படியா... ரோஜாப்பூ வெச்சா உனக்கு ரொம்ப அழகாயிருக்குமே...” என்று அவளது கன்னங்களை வழித்து நெட்டி முறித்துவிட்டு, “சரி போய் விளையாடுங்க” என்று அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்த போது அவனையுமறியாமல் கண்களில் கண்ணீர் சூடாக வழிந்தது.
       வீட்டுக்குள் வந்ததும், குழந்தை திவ்யாவை வாரி மடியில் போட்டுக் கொண்டு, சரவணனை ஒரு பக்கம் சாய்த்து, எப்படி அவர்களைச் சமாதானப் படுத்துவது என்று குழம்பி மெளனத்தை உபாயமாய் கையாண்டான். பின் அவர்களைப் படுப்பதற்காகப் பெட்ரூமுக்குப் போகச் சொன்னான்.
       அப்போது அடுப்படியிலிருந்து வந்த நிர்மலா, “ஏன் இவ்வளவு நேரம்? நான் இன்னும் ஆளைக் காணுமேன்னு நெனைச்சிட்டு இருக்கேன். சாப்பிட வேணாமா?” என்றாள்.
       “வேணாம். கொஞ்சம் காபி மட்டும் கொடு. பசிக்கலை”.
 அவள் காபி கலக்குவதற்காக மறுபடியும் அடுக்களைக்குள் சென்றாள். அங்கிருந்தவாறே குரல் கொடுத்தாள். “போய்ப் பார்த்தீங்களா? அவரு என்ன சொன்னாரு?”
        அவனுக்குத் தெரியும். நேரடியாக கேட்க மனமில்லாத போதெல்லாம் அவள் அடைக்கலமாகுமிடம் அடுக்களைதான்.
        “ம்... பார்த்தேன். ட்ரை பண்றாராம். ஆனால் நிறைய காசு செலவாகுமாம். அதுவுமில்லாம ட்ரான்ஸ்ஃபரையெல்லாம் மறுக்காம ஏத்துகிட்டா சீக்கிரம் ப்ரமோஷன் கிடைக்குமாம். அப்புறம் பிரச்சினையில்லாம ஜம்முன்னு ஒரே ஊருல இருக்கலாமாம். இப்பக் கொஞ்சம் பல்லைக் கடிச்சிகிட்டு இதைச் சமாளிங்கன்னு சொன்னாரு. எனக்கும் அதுதான் தோணுது. நாம இங்கிருந்து போகறதுல அவருக்குத்தான் பாவம் ஏக வருத்தம். அவர் என்ன பண்ணுவாரு?”
       அவன் மேலும் அங்கிருக்க மனமில்லாமல், குழந்தைகள் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான். குழந்தைகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொண்டு தானிருந்தனர். ஒரு குற்றவாளியைப் போல குறுகுறுக்கும் மனத்துடன் அருகில் சென்றான்.
       “இன்னும் தூங்கலையா?”
       “ம்ஹீம்... ஏம்பா மெட்ராஸ்ல மயில்தோகை நிறையக் கிடைக்குமாமே... அம்மா சொன்னாங்க” என்றான் சரவணன்.
       இதை எதற்கு இப்போது கேட்கிறான் என்று புரியாமல், என்ன சொல்வது என்று விழித்த போது, காபியுடன் உள்ளே நுழைந்த நிர்மலா, கண்சிமிட்டி சமிஞ்சை செய்தாள்.
        இவன் புரிந்து கொண்டு, “ஆமாம்ப்பா... நிறைய கிடைக்கும்”.
       “அப்படின்னா மெட்ராஸ் போகலாம்ப்பா”.
        “ஆமாம்ப்பா... நான் கூட செடியை எடுத்துகிட்டு வந்திடறேன். மெட்ராஸ்ல ஆரஞ்சு கலர் ரோஜா, மஞ்சள் கலர் ரோஜா செடியெல்லாம் கிடைக்குமாமே...” இது திவ்யா.
       “சரி தூங்குங்க. காலையில சீக்கிரம் எழுந்திரிக்கணும்” என்று அவர்களை தூங்க வைக்க முயற்சித்தாள் நிர்மலா.
 படுக்க மனமில்லாமல், கேட்க எத்தனித்த கேள்விகளைத் தளராமல் ஸ்டாக் வைத்திருந்த சரவணன், அதிலிருந்து ஒன்றை சலித்துப் பொறுக்கியெடுத்து மீண்டும் சந்தேகத்துடன் கேட்டான். “ஏம்பா மயில் தோகை குட்டி போடுமா?”
       “ஓ! போடுமே”
        கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் ஏதோ ஒரு நிம்மதியில் கண்ணயர்ந்தார்கள்.
        எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிர்மலா அவன் முன் வந்தமர்ந்தாள். மனதில் இருந்த எத்தனையோ கனவுகளையும் திட்டங்களையும் கலைத்துவிட்டு குழந்தைகளின் மனதில் தளர்ச்சி ஏற்படுத்தாமல் அவர்கள் வழியிலேயே தேற்றியிருக்கிறாயே... உன்னை நான் எப்படி சமாதானப் படுத்துவது? என்பது போல் பார்த்தான்.
        ‘எல்லாம் எனக்குத் தெரியும்' என்பதுபோல் கண்களைத் தாழ்த்திப் பார்த்துவிட்டு அவன் கைகளில் முகம் புதைத்து தூங்க முயற்சித்தாள் நிர்மலா. அவனுக்குத் தெரியும். அவள் எத்தனைக் காயப்பட்டிருப்பாளென்று. அவளது சின்னச் சின்ன ஆசைகளை எதிர்பார்ப்புகளைக் கூட நிறைவேற்ற முடியாமல்...
       கடவுளே... ஏன் என்னை ஒவ்வொரு முறையும் நிராயுதபாணியாகவே போர்க்களத்துக்கு அனுப்புகிறாய்...?
       தூங்கும் புஷ்பங்களைப் பார்த்தான். சரவணன் ஏதோ கேட்கப்போகும் பாவனையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
       மெட்ராசுக்குப் போனதும் எங்காவது மயில் தோகை வாங்கி வந்து மறக்காமல் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனான்.

(நன்றி: ஆனந்த விகடன் - 11.3.1990)

திங்கள், 20 ஜூன், 2011

PEEPLI (LIVE)

    PEEPLI (LIVE)

       சமீப காலமாக தேநீர்க் கடைகள், திரையரங்கங்கள், திருமணக்கூடங்களில் சக மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் சலிப்பான உரையாடல் ஒன்றை நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இந்தியா எந்திரமயமாகி வருகிறது. நகரங்களில் மக்கள் நிமிடங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அவசரகதியில் சக மனிதர்களைப் பற்றிய அக்கறையில்லாமல் பறக்கிறார்கள். வீடுகள் நெருக்கமாகி இருக்கின்றன. மனிதர்கள் தூரம்தூரமாக விலகிவிட்டார்கள் என்ற அர்த்தம் தொனிக்கிற பேச்சுக்களை வெவ்வேறு குரல்களில் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள்.
       தொழில் பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சியென்று இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகளோடு சமபலத்தில் மோதும் அளவிற்குப் பெருகிவிட்டது. ஆனால் மனிதம் வீழ்ந்து கொண்டிருக்கிறதே என்ற கவலை, இரண்டு மூன்று தலைமுறைகளை ஒருங்கே பார்க்க முடிந்தவர்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இது இயல்பாகி விடலாம்.
       யோசித்துப் பார்க்கையில் எல்லாப் பொருளாதாரக் காரணங்கள் சமகால நியாயங்களையும் தாண்டி, மூலகாரணமாய் ஒன்று தோன்றுகிறது. சில பத்து வருடங்கள் முன் வரை ‘இந்தியா ஒரு விவசாய நாடு' என்பதுதான் சர்வதேச அரங்கில் நமக்கான அடையாளமாக இருந்தது. ஆனால் இன்று இந்தியா ஒரு வளர்ந்து வரும் தொழில்துறைகள் சார்ந்த நாடு என்பதுதான் சரியாக இருக்கும். வயல்கள் நிரம்பியிருந்த ஊர்களில் இன்று ‘கான்கிரீட் காடுகள்' என்னும் அளவுக்கு கட்டடங்கள் பெருகி விட்டன. உயிர்ப்பான ‘பயிர்கள்' நம் பிரதான உற்பத்திப் பொருளாக இருந்தவரை நம்மிடையே ‘மனிதமும்' உயிர்ப்புடன் இருந்தது. விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘உயிரற்ற' பொருட்களின் உற்பத்திப் பெருகப்பெருக மனிதமும் செத்துவிட்டதோ என்று தோன்றுகிறது.
       தை மாதம் பிறந்துவிட்டால் திரும்பிய பக்கமெல்லாம் பசேசென்று வயல்கள் பூத்துக் குலுங்க இந்த தேசமே உயிர்ப்புடனிருப்பது போல் பார்க்கச் சிலிர்ப்பாக இருக்கும். நாற்று நடும்போதும், களைபறிக்கும் போதும், அறுவடையின் போதும் பாட்டு, கேலி, கிண்டல் என்று பணிபுரியும் சூழலில் கூட சகமனிதர்களோடு கலந்து உறவாடுவது நம் வாழ்வின் மரபாக இருந்து வந்தது. கூட்டமாக, குதூகலமாக கொண்டாடப்படவேண்டிய திருவிழாக்கள் கூட இன்று 14”,21” பெட்டிகளுக்குள் சுருங்கி விட்டன. தேசத்தின் பசுமைக் குறையக் குறைய மனிதர்களின் மனதிலும் பச்சையம் குறைந்து விட்டது.
      இது வழக்கமாகக் கேட்கும் பழமையின் குரலல்ல... இழப்பின் வலி.
 உணவுதான் மனிதனின் அத்தியாவசியத் தேடல். ஆனால், அதனை இலக்காகக் கொண்டு இயங்கும் விவசாயம் இன்று ஏளனத்துக்கும், அலட்சியத்துக்கும் உரிய சொல்லாகிவிட்டது. நம் கல்வித் திட்டத்தில் கூட விவசாயம் ஒரு அத்தியாவசியமான பாடமாயில்லை. எப்படி நம் தமிழ்க் குழந்தைகள் தமிழையே புறக்கணித்துவிட்டுப் பட்டப் படிப்பை முடித்து விடும் சூழல் இருக்கிறதோ அதுபோல, விவசாயம் என்றால் என்னவென்று கடுகளவும் தெரியாமல் ஒரு மனிதனின் ஆயுட்காலம் கடந்துவிடுமளவு நம் பிழைப்புலகம் முற்றிலும் வேறாக விவசாயத்திலிருந்து விலகி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனில், ஒரு விவசாயியின் துயரங்களை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை எப்படி ஒரு சராசரி மனிதன் உணர்ந்து கொள்வான்?
       எங்கோ ஓர் ஊரில், ஏதோவொரு சாலையில், யாரோ ஒரு முகமறியாத மனிதன் விபத்தில் மரணமடைவதைச் செய்திகளில் கேட்டுக் கடந்து விடுவதைப் போல், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை எளிதாகக் கடந்து விடுகிறோம்.
       கடந்த ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர், விவசாயிகள் பட்டினிச் சாவு பட்டியலை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கிறார். வருந்துவதைக் காட்டிலும் அவமானப்பட வேண்டிய செய்தியிது. நமக்கான பருக்கைகளை அனுப்பிவிட்டு, பட்டினியால் கடன் தொல்லையால் சாகிறான் என்றால், நாமெல்லாம் நன்றிகெட்டவர்கள் ஆகிவிட்டோமோ என்ற உறுத்தல், ஒவ்வொரு கவளத்தை உண்ணும் போதும் நமக்கு ஏற்பட வேண்டும்.
       இந்த உறுத்தல் இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கானுக்கு இருந்ததன் விளைவுதான் PEEPLI (LIVE) என்கிற படம். உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் ரித்விக் கட்டக், சத்யஜித்ரே, ஷ்யாம் பெனகல், மிருணாள்சென், அடூர் கோபால கிருஷ்ணன், மீரா நாயர், தீபாமேத்தா என்று நம் இந்திய இயக்குநர்களை எந்தச் சலனமுமின்றிச் சேர்க்கலாம். நம் தமிழில் கூட, ருத்ரய்யா, ஜெயபாரதி, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா என்று சிலரைக் குறிப்பிட முடியும். என்ன பிரச்சினை என்றால், இவர்கள் விருதுப்பட இயக்குநர்கள் என்று முத்திரையிடப்பட்டு இவர்களுடைய திரைப்படங்கள் என்றாலே மிதமிஞ்சிய சோகம் அல்லது மெதுத் தன்மை இருக்கும் என்று பெரும்பாலான பார்வையாளர்கள் ஒரு அச்சத்துடன் புறக்கணிக்கிறார்கள்.
        அமீர்கானின் இந்தித் திரைப்படங்கள் (அவரது தயாரிப்பில் உருவானவை) பிரதானமான பிரச்சினையை எப்படி ஜனரஞ்சகமாக பொதுப் பார்வையாளர்கள் மிரண்டுவிடாதபடி தருவது என்கிற அறிதலோடு உருவாக்குகிறார். அவரது முந்தைய படங்களான லகான், தாரே ஸமீன் பர் ஆகியன இப்படியான ஜாக்கிரதையோடு எடுக்கப்பட்டவை தான். அவை விமர்சகர்கள், வெகுஜன ரசிகர்கள் இருதரப்பாலும் வரவேற்பைப் பெற்றன.
       முழுக்க முழுக்க கலைத்தன்மை என்று சொல்ல முடியாமலும், முழுதும் ஜனரஞ்சகமான படமென்று சொல்ல முடியாமலும் ஒரு சமரச பாணியில் அவரது  படங்கள் இருக்கின்றன. PEEPLI (LIVE) சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்ட நல்ல திரைக்கதைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
       முக்கியப் பிரதேசமென்னும் கற்பனையான மாநிலத்தில் ‘பீபிலி' என்ற கிராமத்தில் நந்தா தாஸ் மற்றும் அவரது அண்ணன் புதியா தாஸ் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். இருவருக்கும் விவசாயம்தான் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கான மூலாதாரம். பொதுவான அவர்களின் நிலத்தில் விளைச்சல் குறைந்து தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. வங்கிக் கடனுக்காக அலைகின்றனர். ஆனால் எதுவும் கிடைத்தபாடில்லை. உள்ளூர் அரசியல் தலைவரிடம் வங்கிக் கடன் பெற்றுத் தரும்படி கேட்கிறார்கள். ஆனால் அவரோ ‘அது சாத்தியமில்லை; எனினும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அரசு ஒரு லட்சம் உதவித் தொகை தருகிறது' என்று நக்கலாகக் கூறி அனுப்பி விடுகிறார்.
        சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கடைசியில், நந்தாதாஸ் தான் தற்கொலை செய்து கொள்வதால் கிடைக்கும் ஒருலட்ச ரூபாய் பணத்தில் இருவரது குடும்பத்தையும் காப்பாற்றும்படி அண்ணனிடம் கூறிச் சம்மதிக்கச் செய்கிறான். இருவரும் அந்த முடிவுக்கு வந்தபின், சாராயம் குடிக்கிறார்கள். போதையோடு ஒரு தேநீர்க்கடையில் அவர்கள் நந்தாதாஸ் தற்கொலை செய்யப் போகும் விஷயத்தை உளறி விடுகிறார்கள். தேநீர்க் கடையில் தற்செயலாக அமர்ந்திருந்த உள்ளூர் நிருபர் ராகேஷ், இந்தப் பரபரப்பான செய்தியை பெரிய அளவு கொண்டு செல்வதன்மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம் என்ற முடிவோடு ITVN எனும் ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நந்திதா மாலிக்கிற்குத் தகவல் தெரிவிக்கிறான்.
       முக்கியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர்தொல்லை காரணமாக, மாநிலத்தின் இடைத்தேர்தல் அறிவிக்கப் படுகிறது. இந்தச் சூழலில் நந்தாதாஸ் தற்கொலைச் செய்தியைப் பரபரப்பாகத் தருவது சேனலுக்கு பெரியதொரு பெயரைத் தருமென யோசித்த நந்திதா, பீபிலி கிராமத்துக்கு நேரலை ஒளிபரப்புச் சாதனங்களோடு வருகிறார்.
        பாரத் லைவ் என்னும் ஹிந்திச் சேனலுக்கும் இந்த ஆசை தொற்றிக் கொள்ள அவர்களும் நேரடி ஒளிபரப்புச் சாதனங்களோடு பீபிலி கிராமத்துக்குள் நுழைகின்றனர்.
        உள்ளூரிலிருக்கும் ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு இது பெரிய தலைவலியைத் தருகிறது. காவல்துறைத் துணையோடு நந்தா தாஸ் மற்றும் புதியா தாஸை அழைத்து மிரட்டுகிறார். ஆனால் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் இதை லேசில் விடுவதாயில்லை. ஒரு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் தாங்களே தீர்த்துக் கட்டி விடுவோம் என்று அச்சுறுத்துகிறார்கள்.
       சேனல்காரர்கள் மாற்றி மாற்றி இருவரது பேட்டியையும் ஒளிபரப்பப் போட்டி போடுகிறார்கள். ஆனால் இரண்டு பேரும் அரசியல் கட்சிகளின் மிரட்டல்களுக்குப் பயந்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.
 ITVN-ன் நந்திதா, உள்ளூர் நிருபர் ராகேஷின் உதவியோடு எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் எதிர்பார்த்த நாட்டை அதிரச் செய்யும் நந்தாதாஸ் பேட்டி கிடைக்கவில்லை.
       பாரத் லைவ் சேனல்காரர்கள் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்து நந்தாதாஸின் அண்டை வீட்டார்கள், சிறுபிராய நண்பர்கள் ஆகியோரின் பேட்டியை ஒளிபரப்புகிறார்கள். அதோடு, உயரமான மரக்கோபுரம் அமைத்து அதன் வழியே ஊர் முழுக்கத் தெரியும்படி நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்.
       ஆளுங்கட்சி ஏதாவது செய்து இதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயம். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்கின்றன. எனவே, இருக்கின்ற உதவித் திட்டங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு கைப்பம்பு தரலாம் என முடிவெடுத்து, அரசு அதிகாரியொருவர் ஒரு ஜீப்பில் அரசுப் பட்டாளத்துடன் வந்து கைப்பம்பை நந்தா தாஸின் தலையில் கட்டிவிடுகிறார். இதை நிலத்தில் இறக்க பண உதவி கிடைக்குமா என்று கேட்கிறான் நந்தாதாஸ். கோப்புகளைப் புரட்டிப் புரட்டிப்  பார்த்துவிட்டு, விதிமுறைகளின்படி இல்லை என உதட்டைப் பிதுக்கிவிட்டுக் கிளம்புகிறார்கள்.
        எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தந்து விட்டுப் போகிறார். தட்டுமுட்டு சாமான்கள் கூட வைக்க இடம் போதாத அவர்களின் சிறிய வீட்டில் நடுநாயகமாக பிரயோஜனமற்ற கைப்பம்பும், டி.வி.யும்!
        ஆளும் சம்மான் கட்சியின் முதல்வர் ராமபாவு யாதவ், இந்தத் தலைவலியைத் தீர்க்கும் பொறுப்பை விவசாயத் துறை அமைச்சர் சலீம் இத்வாய் (நசுருதீன் ஷா) வசம் ஒப்படைக்கிறார்.
         நந்தாதாஸின் ஒவ்வொரு அசைவும் நேரடி ஒளிபரப்பாகிறது. தற்கொலைக்கான தினத்தின் அதிகாலை மலம் கழிக்கச் செல்லும் நந்தாதாஸ், திடீரென தலைமறைவாகி விடுகிறார். எல்லோரும் எதிர்பார்த்த பரபரப்பு நாடு முழுதும் பரவுகிறது.
       பீப்லி கிராமத்தில் தன் விவசாய நிலத்துக்காகக் கிணறு வெட்டும் பணியைத் தன்னந்தனியாக ஆரம்பித்து, முடிப்பதற்கு முன் பசிக் கொடுமையில் இறந்து போகிறார் இன்னொரு விவசாயி.
        ராகேஷ் அவரைப் பற்றிய செய்தியை ஒளிபரப்பலாமென நந்திதாவிடம் சொல்கிறான். ஆனால், நாடு முழுக்க நந்தாதாஸ் மேல் கவனத்துடன் இருக்கும் சூழலில், இறந்து போன விவசாயியைப் பற்றி செய்தி தயாரிப்பது அத்தனை புத்திசாலித்தனமில்லை என்று நந்திதா மறுத்து விட, ராகேஷ் ஏமாற்றமடைகிறான்.
        சலீம் தான் நந்தாதாஸை கடத்தி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார்.
        நந்தாதாஸை எல்லோரும் தேடிக் கொண்டிருக்கும் போது, ஊரில் பூட்டிக் கிடந்த கூரை வீடொன்று தற்செயலாகத் தீப்பிடித்துக் கொள்கிறது. தீ விபத்தில் எதேச்சையாக மாட்டிக்கொண்ட ராகேஷ் அடையாளம் தெரியாதபடி கருகிவிடுகிறான். இறந்து போனது நந்தாதாஸ் என்றும் அது எதிர்பாராத விபத்து என்றும் தவறாக நினைத்துக் கொள்ளும் சேனல்காரர்கள், நந்தாதாசுக்குக் காவலாக வந்த காவல்துறையினர், அவர்களை எல்லாம் நம்பி தற்காலிகமாக ஆரம்பிக்கப் பட்ட கடைகள் எல்லாம் ஒரே நேரத்தில் ஊரை விட்டுக் கிளம்பி விடுகின்றனர்.
         நந்தாதாஸின் மரணம் விபத்துதான்; தற்கொலையல்ல என்று முடிவெடுத்த அரசு, தற்கொலைக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஒரு லட்சத்தைத் தர முடியாது எனக் கைவிரித்து விடுகிறது. கடைசிக் காட்சியில் நந்தாதாஸ் சாகவில்லை. அவனது தாடி மீசை எடுக்கப்பட்டு, ஒரு பாலம் கட்டும் பணியில் தினக்கூலியாக அடையாளம் தெரியாத நபரைப்போல காட்டப்படும் போது நாம் அதிராமல் இருக்கவே முடியாது.
       
      படத்தின் இயக்குநர் அனுஷா ரிஸ்விக்கு இதுதான் முதல்படம். அமீர்கான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் என்றாலும், அவர் தான் தயாரிக்க எடுத்துக் கொள்ளும் படங்களின் திரைக்கதை மீது செலுத்தும் அதீத கவனம் நல்ல சினிமாவுக்கான சிறந்த முயற்சி எனலாம். தமிழில் பிரகாஷ்ராஜ் இப்படியான கவனத்தோடு தயாரிக்க முயல்கிறார்.
        படத்தில் நந்தாதாஸ் காணாமல் போனபிறகு, தொலைக்காட்சிச் சேனல் தொகுப்பாளர், நந்தா மலம் கழித்த இடத்தை வட்டமிட்டு, ‘இது தான் அவர் மலம் கழித்த இடம்' என்று சென்ஷேஷனல் நியூஸ் சொல்லும் காட்சி இந்தச் சமூகத்தின் மீதான, அரசியல் வாதிகள் மீதான, ஊடகங்கள்  மீதான சவுக்கடி விமர்சனம்.
        ஒரு ஜீவாதாரமான பிரச்சினையை, எப்படி ஒரு பொதுப்பார்வையாளனின் ரசனைக்கும், புரிதலுக்குமான பக்குவத்தோடு சொல்வது என்று, தீர்க்கமாக யோசித்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘பீபிலி லைவ்' பாணி, திரைப்படக் கலைஞர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தமிழில் சேரனும், வசந்தபாலனும் இந்த வகை பாணியைக் கையாள்கிறார்கள்.
 சற்று எள்ளலுடன் சொல்லப்பட்டாலும் ‘பீபிலி லைவ்' மிகச் சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாக, அது எடுத்துக் கொண்ட பிரச்சினையின் அடிப்படையில் சொல்லலாம்.
        ‘ஒரு விவசாயியின் மரணமென்பது ஒரு தேசத்தின் மரணம்' என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்?

அனுஷா ரிஸ்வி:

தில்லி பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்ற அனுஷா, பத்திரிகையாளராகத்தான் தன் இலட்சியப் பணியைத் துவங்கினார். பீப்லி லைவ் படத்துக்கான கதையுடன் அமீர்கானை அணுகியபோது, முதலில் இவரால் டைரக்ட் செய்ய முடியுமா என்று தயங்கினார். அதன் பிறகு சற்று தயக்கத்துடன் படம் எடுக்கச் சம்மதித்தார். படப்பிடிப்பின் போது இவரது சுறுசுறுப்பான உழைப்பைக் கண்ட பிறகு, நம்பிக்கையுடன் முழு பணியையும் ஒப்படைத்தார். தனது முதற் படத்திலேயே ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப் படும் பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.(2011 ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் போட்டியில்,  சிறந்த அயல்மொழிப் படத்துக்கான போட்டியில் கலந்து கொள்ள இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.)


 

திங்கள், 13 ஜூன், 2011

IN THIS WORLD

      நீங்கள் இந்த உலகில் பெளதீக ரீதியாக மனிதன் என்கிற அடையாளத்தைத் தவிர சமூகத்தில் என்னவாக அடையாளப்படுத்தப் படுகிறீர்கள்? உங்கள் பெயர், முகம், பதவி தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் வாழும் தேசத்தின் குடிமகனாக, நீங்கள் சார்ந்த இனத்தவராக உங்களுக்கென்று ஒரு அடையாளம் நிச்சயமிருக்கும்.
       ஆனால் பெயரையோ, முகத்தையோ, இனத்தையோ, வாழும் ஊரையோ, தேசத்தையோ அடையாளமாக சொல்லமுடியாதபடி எத்தனையோ லட்சம் பேர் ஏதோ ஒரு தேசத்தின் எல்லைப் பகுதியில் அல்லது ஜனசஞ்சாரத்தில் ஒளிந்து கொண்டபடி, தங்கள் இயல்பான அடையாளத்தை தொலைத்துவிட்டு ‘அகதிகள்' என்ற பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
       உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வாழ்பவர்கள் பாலஸ்தீனியர்கள். அதற்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள். பொதுவாக ஆப்கான் என்றால் தாலிபான்கள், பழமைவாதிகள் என்கிற பிம்பங்களைத் தாண்டி வேறெதுவும் பெரும்பாலோனோர்க்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில், அங்குப் புகைப்படக்காரர்கள், நிருபர்களுக்கு அனுமதியில்லை. இரண்டாவது அதிமுக்கிய காரணம், வல்லரசுகளின் கடைக்கண் பார்வை படுமளவு அங்கு எண்ணெய் வளமோ, பரவலான சந்தைப் பொருளாதாரமோ இல்லை. எனவே, ‘ஜனநாயகக் காவலர்கள்' பொருட்படுத்தக் கூடிய தேசமாக ஆப்கான் இல்லை. லிபியாவில் ‘ஜனநாயகம் தழைக்க' உள்ளே புகுந்த உலக நாடுகள் ஆப்கன் பக்கம் திரும்புவதேயில்லை. ஈழத்தைப் போலவே புறக்கணிக்கப்பட்ட தேசமான ஆப்கானின் அவலமான இன்றைய நிலைக்கு மிக முக்கியக் காரணங்கள் அதன் ஒழுங்கற்ற நில அமைப்பு (Gelogical Structure). ஒன்றையொன்று எதிரிகளாகக் கருதிக்கொள்ளும் பழங்குடிப் பிரிவுகள், போதை மருந்து கடத்தல், மத அடிப்படைவாதிகள் என்பனவற்றைச் சொல்லலாம்.
       ஆப்கானில் இரண்டு கோடிபேர் தற்பொழுது வசித்து வருவதாக ஒரு கணக்கு கூறப்பட்டாலும், ஆப்கானைப் பொறுத்தவரை எந்தக் கணக்கும் உண்மையாக இராது. ஏனெனில், உள்நாட்டுப் போரினாலும் பட்டினியாலும் ஒரு மணிநேரத்துக்குப் பதினான்கு ஆப்கானியர்கள் இறக்கின்றனர். அறுபது ஆப்கானியர்கள் தங்கள் உடைமைகளை விட்டு அகதிகளாக ஏதோ ஒரு தேசத்துக்குள் அபாயங்களைச் சந்தித்தபடி நுழைய முற்படுகிறார்கள். எனவே, ஆப்கானின் மிகச் சரியான மக்கள்தொகையை யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. உலகெங்கிலும் ஆப்கான் அகதிகள் அறுபத்தேழு லட்சம் பேர் இருப்பதாக உலக அகதியமைப்பு கணக்கிட்டுச் சொல்கிறது.
       ஆப்கன் நாட்டின் அதிகபட்சப் பழங்குடி இனமாக ‘பஷ்தூன்' மக்கள் அறுபது லட்சம் பேர் இருக்கின்றனர். அடுத்தபடியாக ‘தாஜிக்குகள்' நாற்பது லட்சம் பேரும், பத்து லட்சம் பேர் கொண்ட ‘ஹஜாரக்'குகளும், ‘உல்பெக்கு'களும் அதற்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட ‘இமாக்', ‘பார்ஸ்', ‘பலூச்', ‘துர்க்மன்', ‘க்யுசெல் போச்' போன்ற சிறு குழுக்களும் உள்ளனர்.
       கடந்த கால வரலாற்றில், ஒட்டு மொத்த ஆப்கானை ஆண்டவர்கள் ‘பஷ்தூன்' இனத்தைச் சார்ந்தவர்கள்தான். இவர்களுக்கு மற்ற பழங்குடி இனத்தவர் மேல் அக்கறையில்லை. அதே போல் மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்வதேயில்லை. தங்கள் இனத்திற்கென்று தனியாகத் தலைவர்களை உருவாக்கி அவர்கள் சொல்படி மட்டுமே நடப்பார்கள். இதனால் ஒரு இனம் மற்றொரு இனத்துக்கு எப்பொழுதுமே நேரெதிர்தான். எந்த அளவுக்கு என்றால், ஒரு பொது மருத்துவமனை இருப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு இனம் வைத்தியத்துக்காக வரும்போது, பிற இனத்தவர் வருவதற்கு அனுமதிப்பதில்லை. எனவே ‘பஷ்தூன்'களுக்கு ஒரு நாள் வைத்தியமென்றால், மற்றொரு நாள் ‘தாஜிக்கு'களுக்கு என்று முறை வைத்துதான் பார்ப்பது.
       இப்படியான சூழலில் இவர்களுக்கு தாங்கள் ‘ஆப்கானியர்கள்' என்ற உணர்வே அவர்களது நாட்டில் இருக்கும் வரை இருப்பதில்லை. தாங்கள் சார்ந்த இனம் என்னவோ அதைத்தான் தங்கள் அடையாளமாகக் கூறுவார்கள். இவர்களுக்குள் நடக்கும் உள்நாட்டுச் சண்டைகள், மற்றும் நாட்டின் அதிகபட்ச பணம் புரளும் தொழிலான அபின் பயிரிடுதல் வியாபாரமிருக்கின்றன. இதன் காரணமாகவும் கொலைகளும், வன்முறைகளும் அதிகம். எனவே இவர்கள் அபாயகரமானவர்களாக உலகின் பார்வையில் இருக்கிறார்கள்.
        உலகத்தின் கவனத்தைப் பெறும் கவர்ச்சிகரமான விஷயங்களெதுவும் இல்லாததால், அன்றாடம் நிகழும் பட்டினிச்சாவுகள் காரணமாக ‘புலம் பெயர்தல்' ஒவ்வொரு நிமிடமும் நிகழ்கிறது.
        ஆனால் ஆப்கானியர்கள் என்றால் பல நாடுகளும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. எனவே, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையும் ஆப்கானியர்கள், தங்களை பாகிஸ்தானிகள் என்றோ அல்லது அங்கிருந்து ஈரானுக்குள் புகுந்து பின் ‘ஈரானியர்கள்' என்றோ பொய் சொல்லி லண்டனுக்கோ, பாரிசுக்கோ அகதிகளாக நுழைய முற்படுகிறார்கள்.
        ஆப்கானின் பெரும்பகுதியான நிலம் மலைகளால் ஆனது. எனவே சரிசமமான சாலைப் போக்குவரத்து சாத்தியமில்லாத ஒன்று. இதன் காரணமாக எந்த ஒரு தொழில் நிறுவனமும் அங்கு முதலீடுகளுக்கு முன்வருவதில்லை. போதை மருந்து பயிரிடுதலுக்கும், கடத்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு போதை மருந்து வர்த்தகம் மட்டுமே அங்கே அமோகமாக நடக்கிறது.
       போதாதற்கு, அடிப்படைவாதிகளின் கெடுபிடிகள். பெண்கள் பர்தா இல்லாமல் நடமாட முடியாது. அதாவது ஒரு கோடி பேர் முகங்களை மற்ற ஒரு கோடி பேர் பார்க்க முடியாது. நாட்டில் திரையரங்குகள், பொதுவான பத்திரிகைகளுக்குத் தடை. பெண்கள் வேலை பார்க்க அனுமதியில்லை. அத்தியாவசியமான மருத்துவத் துறையில் கூட பெண்கள் பணியாற்ற முடியாது. ஆண் மருத்துவர்கள் மட்டுமே என்பதால் அவர்களிடம் மருத்துவம் பார்க்கும் பெண்கள் கூடவே சகோதரன், மகன், கணவன், தந்தை என யாரையாவது அழைத்துவர வேண்டும். மருத்துவருக்கும், நோயாளிப் பெண்ணுக்கும் இடையே திரைச்சீலை இருக்கும். மருத்துவரின் கேள்விகளுக்கு உடன் வரும் ஆண் பதில் சொல்ல வேண்டும்.
        ஆப்கான் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஈரான் இயக்குநர் மக்மல் பஃப், பல இன்னல்களுக்கிடையே, ஆப்கான் அரசிடம் அனுமதி பெற்று எடுத்த படங்கள் ‘தி சைக்கிளிஸ்ட்' மற்றும் ‘காந்தஹார்'  . பின்னர் சித்திக் பர்மர் இயக்கிய ‘ஒசாமா'. இதற்குப் பிறகு சில ஆவணப் படங்கள்.

       அதற்குப் பிறகு வெளிவந்த படம் IN THIS WORLD-. பாஃப்டா விருது பெற்றது. ஆப்கானின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஓரளவு பிரதிபலித்த படங்கள், ‘தி சைக்கிளிஸ்ட்', ‘காந்தஹார்', ‘ஒசாமா' என்றால், ஆப்கானியர்கள் அகதிகளாக தேசம் விட்டு தேசம் பயணிக்கும் போது ஏற்படும் சிக்கல்களைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் IN THIS WORLD-.

       ஜமால் மற்றும் இனாயத்துல்லா இருவரும் ஆப்கானிலிருந்து பாகிஸ்தானின் பெஷாவரில் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தவர்கள். நிச்சயமற்ற அந்தச் சூழலில் இருந்து அவர்கள் தப்பிக்க, லண்டன் சென்றால் மட்டுமே முடியும் என்று அவர்கள் குடும்பம் கருதுகிறது. தங்களது கையிருப்பில் உள்ள சேமிப்பிலிருந்து கள்ளத்தனமாக எல்லை கடந்து அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மூலம் அனுப்புகிறார்கள். ஹவாலா முறையில் அவர்களுக்குப் போகின்ற இடங்களில் பணம் கிடைக்கும் அளவு புரோக்கர்கள் தொடர்பு பலமாக இருக்கிறது.
        15 வயது ஜமாலும், 20 வயது இனாயத்துல்லாவும் குவாட்டா வருகிறார்கள். அங்கிருந்து ஈரானின் எல்லை நகரான டாஃப்பின், அதன் பிறகு பேருந்து வழியாக ஈரானுக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். ஆனால் எல்லையோர காவல்படையிடம் அகப்பட்டு மறுபடி பெஷாவருக்கே திரும்புகிறார்கள்.
 கண்டெய்னர் லாரியில் இவர்களைப் போன்றே இன்னும் சில அகதிகளும் இருக்கின்றனர். காற்றுப் புகவும் வசதியில்லாத அந்த இடத்தில் தொடர்ந்து 40 மணி நேரம் பயணம் செய்ய முடியாமல் பலரும் மூச்சுத் திணறி, கதவைத் திறக்கும்படி கதவுகளைத் தட்டுகின்றனர். ஆனால் அவர்களது ஓலம் கேட்கப்படாமல் காற்றில் கரைந்து விடுகிறது. கண்டெய்னர் தன் இலக்கை அடையும் போது உள்ளிருந்த இனாயத்துல்லாவும் இன்னும் சிலரும் மரணமடைந்து விடுகின்றனர். ஜமால் மட்டும் குதித்த வேகத்தில் தப்பித்து நகரை அடைகிறான். அங்கு ஒரு பெண்ணின் கைப்பையைத் திருடி, கிடைக்கும் தொகையில் ஸன்கெட்டா அகதிகள் முகாமில் தஞ்சமடைகிறான்.
       அங்கு யூசுப் என்னும் இளைஞன் பழக்கமாகிறான். இருவரும் சேர்ந்து ஒரு லாரியின் அடிப்பகுதியில் படுத்தவாறே இலண்டன் வந்தடைகின்றனர்.
       ஜமால் லண்டன் வந்ததும் தன் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கிறான். இனாயத்துல்லாவின் உறவினர்கள் ஜமாலிடம், இனாயத்துல்லா அங்கு இருக்கிறானா என்று ஆவலுடன் கேட்கிறார்கள். அவன் இந்த உலகத்திலேயே இல்லை (He is not in this World) என்று பதிலளிக்கிறான். கேமரா திரும்பவும் பெஷாவர் அகதிகள் முகாமைக் காண்பிக்க, படம் முடிகிறது.        ஆப்கன் நிலைமை இதுதான். ஆப்கானில் வசித்தால் பசியோ, ஏதேனுமொரு தோட்டாவோ எந்த நேரத்திலும் மரணத்தைப் பரிசளிக்கும். வாழ்வைத் தேடிப் பயணித்தாலும் மரணம் இருகை நீட்டி வரவேற்கும். ஆப்கானில் அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு ஆப்கானியர்கள் என்ற அடையாளமில்லை. ஏதோ ஒரு பழங்குடி இனத்தவன் என்றுதான் அவர்கள் அழைக்கப் படுவார்கள். ஆப்கானுக்கு வெளியேயும் அவர்கள் ஆப்கானியர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. முகங்களற்ற உருவங்களோடு திரியும்படி சபிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
        திடுக்கிடும் திருப்பங்களோ, இரத்தம் உறையும் காட்சிகளோ படத்திலில்லை. ஆனால், பதட்டத்துடனே தான் ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கும். படத்தின் உண்மைத் தன்மைக்காக எதனோடும் சமரசம் செய்யாத இயக்குநர் மைக்கேல் விண்டர் பாட்டம்-ஐப் பாராட்ட வேண்டும்.
        படத்தில் ஜமாலாகவும், இனாயத்துல்லாவாகவும் வருகிற இருவரும் நடிகர்கள் அல்ல. அவர்கள் தான் நிஜ கதாபாத்திரங்கள்.(இனாயத்துல்லா இறந்துவிடுவதாகக் காட்டப்பட்டாலும், நிஜத்தில் திரும்ப பெஷாவர் அனுப்பப் படுகிறான்). இன்னமும் ஜமால் சவுத் ஈஸ்ட் லண்டன் பகுதியில் ‘தஞ்சமடைந்தவர் பட்டிய'லில் சேர்க்கும்படி இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பித்து விட்டுக் காத்துக் கொண்டிருக்கிறான்.
 பிறப்பும் இறப்பும் தீர்மானிக்க முடியாத நிலையற்ற ஒன்றாக இருப்பது இயற்கை. ஆனால், ஒவ்வொரு நிமிடமும் இருப்பே நிலையற்றது எனில் அது என்ன வாழ்க்கை?!

மைக்கேல் விண்டர் பாட்டம்:

இங்கிலாந்தின் லங்காஷையரில் பிறந்த விண்டர் பாட்டம் திரைப்படப் பள்ளியில் பயின்று, பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பணியில் சேர்ந்தார். பிரபல திரைப்பட இயக்குநர் இங்க்மர் பெர்க்மன் பற்றி இரண்டு ஆவணப்படங்களை எடுத்தார். பிறகு திரைத்துறையில் வர்த்தகரீதியாக சில படங்களை இயக்கினாலும், புறக்கணிக்கப்பட்ட மக்களைப்பற்றிய அக்கறையுடன் சில படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ‘வெல்கம் டூ சரஜேவா', ‘தி ரோட் குவாண்டனமோ' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. பாலஸ்தீனியர்களின் பிரச்சினைகள் குறித்த ‘தி பிராமிஸ் டு லேண்ட்' என்ற படத்தை தற்போது இயக்கி வருவதோடு, இந்தியாவின் ஜெய்ப்பூரை மையமாகக் கொண்டு ‘திரிஷ்னா' என்ற படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வியாழன், 9 ஜூன், 2011

THE POPE'S TOILET

       

        கடந்த ஆண்டு (2010) நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் வழக்கமாக இந்த இந்த நாடுகள் தான் கோப்பையை வெல்லும்; இந்த இந்த நாடுகள் தான் இறுதிப் போட்டிக்கு செல்லுமென ஊடகங்கள் ஆரூடங்கள் சொன்னபடி இருந்தன. அப்படிப் பட்டியலிடப்பட்ட நாடுகளில் பல, இறுதிச் சுற்றிலேயே மண்ணைக் கவ்வின. கொஞ்சமும் சளைக்காமல் ஊடகங்கள் ஜெர்மன் உயிரியல் காட்சியகத்திலிருந்த ‘பால்' என்கிற ஆக்டோபஸ்ஸின் காலில் சரணடைந்தன. “உங்கள் ஆரூடங்கள் என்னவாயிற்று?” என்று யாரும் கேட்டுவிடாத படிக்கு கனகச்சிதமாகத் திசைதிருப்பினர். இனி, பிரச்சினை பால்-ன் தலையில் விடிந்தது.
      பரபரப்புப் பத்திரிகைகள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ‘ஹீரோ' ஆக்கிவிடலாம் என்பதற்கான சான்றுதான் ‘ஆக்டோபஸ் பால்.' போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஜெர்மன், பிரேசில், அர்ஜெண்டினா நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் ஆக்டோபஸ் பாலைக் கொல்ல வேண்டுமெனக் கூக்குரலிட்டனர். பாவம், என்ன பாடு படுத்தினார்களோ தெரியவில்லை. பால், சென்ற நவம்பரில்(2010) இறந்துவிட்டது. ஒரு ஆக்டோபஸின் சராசரி ஆயுளை விடக் குறைந்த வயதில் அது இறந்து போனது. அது இறந்த பிறகும் ஆத்திரம் தீராத அர்ஜெண்டினா பயிற்சியாளரும், முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரருமான மாரடோனா “மிக்க மகிழ்ச்சி” என்றாராம்!
      ஆக்டபஸ் பால்-க்கும் ஜாம்பவான் நாடுகள் தோற்று வெளியேறியதற்கும், ஏதேனும் சம்மந்தம் உண்டா? மெத்தப் படித்த, மிதமிஞ்சிய நாகரீகம் மிக்க மனிதர்களின் பிற்போக்குத் தனம் எந்த விமர்சனமுமின்றி வெறும் செய்தியாக கடந்து போகிறது. விளிம்பு நிலைக்கு துரத்தப்பட்ட மக்களின் இயலாமை ஏதேனும் ஒரு தீர்வுக்காக ஒரு நம்பிக்கையைத் தொற்றிக் கொண்டிருந்தால் அது  மூடர்களின் செயல் என்று விமர்சிப்பதும் வர்க்க பேதம்தானோ...?!
 யாராலும் கணிக்க முடியாத் உருகுவே, நெதர்லாந்தையே திணறடித்தது. உருகுவே தென் அமெரிக்க நாடுகளில் இரண்டாவது மிகச்சிறிய நாடு. (மிகவும் சிறிய நாடு கரிநாம்... ஒருமுறை ஒலிம்பிக்கில் இந்தியா வெறுங்கையுடன் திரும்பியபோது ஒரு தங்கத்தை வென்ற குட்டி நாடு).
      உருகுவே நாட்டின் எல்லப்புற ஊரான ‘மெலோ'வுக்காக மற்றொரு ‘பால்' வருகையை (போப் இரண்டாம் ஜான் பால்) முன்னிட்டு, ‘மெலோ'வுக்கு மிக அருகிலிருந்த பிரேசில் பத்திரிகைகள் கிளப்பிய பூதாகரமான தோற்றமும், ஆரூடங்களும் எப்படி அந்தக் கிராமத்து மக்களின் வாழ்வைச் சின்னாபின்னப் படுத்தியது என்பதைக் கருவாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் “த போப்ஸ் டாய்லட்”.
      1988-ம் வருடம் போப் இரண்டாம் ஜான்பால் உருகுவே வருவதாக அறிவிக்கப் பட்டதிலிருந்து அவர் வருகையை எதிர்நோக்கி ‘மெலோ' அல்லோகலப்படுகிறது.
       பிரேசிலின் தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிகைகளும் சேர்ந்து ‘மெலோ'வுக்கு பிரேசிலிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் சுமார் ஐம்பதினாயிரம் பேர் வரக் கூடுமென்று அனுதினமும் தெரிவித்தபடியிருக்கின்றன. குறிப்பிட்ட தினத்தில் பிரத்யேக நிகழ்ச்சிகளும், நேரடி ஒளிபரப்புகளும் இருக்குமென அறிவிக்கின்றன.
      ‘மெலோ' கிராம மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள். உருகுவேயில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பது சட்டப்படிக் குற்றம். எல்லைப்புற ஊரான மெலோவுக்குப் பிரேசிலிலிருந்து தான் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்கள் வந்தாக வேண்டும். சைக்கிளில் தான் பெரும்பாலான பொருட்கள் எடுத்து வரப்படும். அதுதான் செலவு குறைந்த எளிமையான போக்குவரத்து. மெலோ கிராமத்து ஆண்களில் பெரும்பாலோனோர், சைக்கிளில் பொருட்களை எடுத்து வந்து அதற்கான கூலி பெற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களில் ஒரு சிலர் வெளிநாட்டு ஆடம்பர, அலங்காரப் பொருட்களைக் கடத்திவருவதுமுண்டு. உருகுவேயின் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு இந்தச் சைக்கிள்காரர்கள் மேல் எப்போது ஒரு கண் உண்டு. குறுக்கு வழியில், வயல்களூடே மறைந்து மறைந்து வரும் அவர்கள், பிடிபட்டு விட்டால் சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களது பொருட்களைச் சிதைத்து, உடைத்துக் கீழே போட்டு விடுவதும், தங்களுக்கு வேண்டியதை எடுத்துச் செல்வதும் உண்டு.
      ‘பெடோ' என்பவன் இப்படிக் கடத்தல் வேலை செய்கிறவர்களில் ஒருவன்.  எப்படி மறைந்து மறைந்து வந்தாலும், ஏதோ ஒரு தருணத்தில் சுங்க அதிகாரிகளிடம் மாட்டுவதும் உண்டு.
      அப்படியான ஒரு சமயம், சுங்க அதிகாரிக்கு எப்படியாவது பெடோவைக் கைது செய்வது நோக்கமற்று, அவனைப் பணிய வைத்து, தனக்கான கடத்தல் வேலையை செய்ய வைக்க முயல்கிறார்.
      பெடோவின் மகள் சில்வியாவுக்கும், அவனது மனைவிக்கும் பெடோ கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சில்வியாவுக்கு எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகிவிட வேண்டுமென்பது கனவு. கையில் கிடைக்கிற காகிதங்களைச் சுருட்டி, வாயருகே வைத்து தனிமையில் தொகுப்பாளரைப் போல் பேசி எப்போதும் பாவனை செய்து பழகியபடியிருக்கிறாள்.
      இச்சூழலில் போப் ஜான்பாலின் வருகையை ஒட்டி, மெலோவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற ஐம்பதினாயிரம் பேரைக் குறிவைத்து, மெலோ மக்கள் என்னென்ன வியாபாரம் செய்யலாமெனத் திட்டமிடுகின்றனர். பெரும்பாலானோர் திண்பண்டம், உணவுப் பொருட்கள் விற்க முடிவு செய்தனர்.
 பெடோவிற்கு வித்தியாசமான யோசனை தோன்றுகிறது. பொதுக் கழிப்பறை ஒன்றைக் கட்டி முடிந்தவரை கல்லாக் கட்டுவது என்று முடிவெடுக்கிறான். அவன் வீட்டிலும் கழிப்பறை வசதியில்லை. எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
      ஆனால், கழிப்பறை கட்ட போதிய பணமில்லை என்பதால் கடத்தல் தொழிலை இன்னும் சிறிது காலம் செய்வது; அதுவும் அந்த சுங்க அதிகாரிக்காகச் செய்வது; கழிப்பறை கட்டுவதற்கான தொகையை முன்பணமாக அவரிடமே பெறுவதெனத் திட்டமிடுகிறான். மனைவிக்கும், மகளுக்கும் தெரியாமல் அவருக்காகக் கடத்தல் தொழில் செய்கிறான். நண்பர்களைத் துணைக்கழைத்துக் கொண்டு அவனே கழிப்பறைக்கும் வேலையைத் துவங்குகிறான்.
      சுற்றுச்சுவர், கூரை எனக் கொஞ்சம் கொஞ்சமாக எழும்புகிறது கழிப்பறை. இன்னும் ‘பேசின்' வைக்க வேண்டியதுதான் பாக்கி. இந்தச் சூழலில் அவன் அதிகாரிக்காகக் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது தெரிந்து கொண்ட சிவியாவும், அவன் மனைவியும் சண்டை போடுகிறார்கள். கழிப்பறை வந்துவிட்டால் அதில் கிடைக்கும் வருமானத்தில் ஏதேனும் தொழில் செய்யலாமெனச் சமாதானப் படுத்துகிறான் அவர்களை.
      சில்வியாவோ தான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காகச் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்து, பேசின் வாங்கிவந்து கழிப்பறை வேலையை முடிக்கும் படியும், இனி கடத்தல் தொழில் செய்ய வேண்டாமென்றும் கண்டிப்புடன் கூறுகிறாள். ஒப்புக் கொண்ட பெடோ, அதிகாரியிடம் சென்று, இனி கடத்தல் தொழில் செய்ய முடியாதெனக் கூறித் திரும்புகிறான்.
       போப் வரும் நாள் வந்து விட்டது. பிரேசில் சென்று பேசின் வாங்கி சைக்கிளில் திரும்பும் போது அதிகாரியால் வழிமறிக்கப் படுகிறான் பெடோ. சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு செல்கிறார் அவர். பேசினைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து ஊரையடைந்து பொருத்திவிடுகிறான். போப் வந்து விடுகிறார். ஆனால் கொஞ்சமும் எதிர்பாராமல் முந்நூற்று சொச்சம் பேரே அங்கு வந்திருந்தனர்.
      போப் பத்து நிமிடம் மட்டுமே மேடையேறிப் பேசிவிட்டு, பின் இறங்கிப்போய் விடுகிறார். பெடோ, அங்கு குழுமிய கூட்டத்தில் சிலரை ஓடி ஓடிக் கழிப்பறையைப் பயன்படுத்தும்படிக் கெஞ்சுகிறான். குறைந்த நேர நிகழ்ச்சி என்பதால், எவரும் அவனைப் பொருட்படுத்தாமல் கலைகின்றனர்.
 கழிப்பறை மட்டும் எஞ்சுகிறது. சில்வியாவின் உயர்கல்வி கனவு கலைந்து போகிறது. அப்பாவுக்குத் துணையாக நேர்மையான முறையில் தொழில் செய்ய பெடோவுடன் நடந்தே செல்கிறாள்.
      உலகப் புகழ் பெற்ற திரைப்படமான ‘சிட்டி ஆஃப் காட்'-ன் ஒளிப்பதிவாளர் சீஸர் சார்லோன் உருகுவேயில் பிறந்து பிரேசிலில் வசிப்பவர். அவர் 1988-ல் போப் மெலோ வந்த போது எதேச்சையாகப் பதிவு செய்த ஒளிப்படக் காட்சி, மற்றும் மெலோ மக்கள் ஏமாந்து போன உண்மைச் சம்பவம் ஆகியவற்றை வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கினார். மெலோவைச் சேர்ந்த என்ரிக் ஃபெர்ணாண்டஸ் என்பவரோடு சேர்ந்து இப்படத்தை இயக்கினார். ‘சிட்டி ஆஃப் காட்' படத்தின் இயக்குநர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
      பெடோவும் அவனது நண்பர்களும் கடத்தல் பொருள்களுடன் சைக்கிளில் வயல்வெளிகளில் புகுந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சியில், மிக அற்புதமான நிலக் காட்சிகளை வெவ்வேறு சிறந்த கோணங்களில் பதிவு செய்த கேமரா, கதையோட்டத்துக்குத் தக்கவாறு நேர்த்தியாக பிரயாணிக்கிறது.
       சடையர் (Satire) என்று சொல்லப்படும் எள்ளல் பாணித் திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் ‘த போப்'ஸ் டாய்லட்'. எளிமையான மூலக்கதையை மெருகேற்றி அழகான திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.
      கழிப்பறை கட்டப்பட்ட பின் வரும் கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்று  பெடோ, மகள் சில்வியாவுக்கும், மனைவிக்கும் நடித்துக் காட்டும் காட்சி நகைச்சுவையான சிறப்பான காட்சி.
      கூட்டத்தை வரிசையில் நிற்கும்படிக் கட்டுப்படுத்துவது போலவும், கழிப்பறைக்குள் இருப்பவரை எப்படித் தட்டி அழைப்பது என்றும் பெடோ நடித்துக் காட்டும் காட்சியில், ‘சீஸர் ட்ரான்சானிகோ' பிரமாதப்படுத்தியிருப்பார். இயல்பில் நாடக நடிகரான அவர், இலாவகமாக நடிப்புத் திறனை அக்காட்சியில் வெளிப்படுத்தியிருப்பார்.
      போப் வந்து சென்ற பிறகு மெலோ மக்கள் விற்காத உணவுப் பொருட்களை வீதியில் வீசியெறிந்து விட்டு நகர்வதும், மீண்டும் தொலைக்காட்சி நிறுவனங்கள் போப் வருகையை ‘ஆஹா ஓஹோ' எனப் புகழ்ந்து ஒளிபரப்பும் போது பெடோ ஆத்திரமடைந்து தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கும் காட்சியும், அந்தச் சமூகத்தின் மீதான காட்சி ரீதியிலான விமர்சனமென்றே கூறலாம். மிகைப்படுத்தப் படாத யதார்த்தமான திரைக்கதை அமைப்பில் படம் மனதில் கிளர்ச்சியூட்டாத படிப்பினையை ஏற்படுத்தி விடுகிறது.
      ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப் பட்ட இப்படம், கடைசியில் அதன் தலைப்பு காரணமாக நிராகரிக்கப் பட்டது.
      உருகுவேயின் வாழ்வியல் சூழல், ஊடகங்களின் அதீத பரபரப்பு, மதத்தின் மீதான சரியான விமர்சனமாக இப்படம் அமைந்திருக்கிறது.
 பீடங்கள், பொய்யுரைகள், பணம் பண்ணும் மாய்மாலங்கள் தேசத்துக்கு தேசம் மாறுபடலாம். ஆனால், ஏமாளிகளாய் இருக்கும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் எஞ்சியிருப்பவை நிறைவேறாக் கனவுகள் மட்டுமே.

சீஸர் சார்லோன்:

      1958-ம் வருடம் உருகுவேயில் பிறந்து வளர்ந்த சீஸர், ஒளிப்பதிவுத் துறையில் கொண்ட அதீத ஆர்வம் காரணமாக, அதற்கு வாய்ப்புகள் மிகுந்த பக்கத்து நாடான பிரேசிலில் தற்போது வசிக்கிறார். “சிட்டி ஆஃப் காட்” படத்தில் பணியாற்றியதற்காக தற்போது சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர். ஒளிப்பதிவு, இயக்கம், திரைக்கதையாசிரியர், நடிகர் என்று பல பரிமாணங்கள் உடையவர். போப் வருகைக்கு மெலோ கிராம மக்கள் ஆற்றிய எதிர்வினையை நேரில் காணும் சந்தர்ப்பம் அவருக்கு. அதை, மிகச் சாதாரணமான கையடக்க கேமராவில் பதிவு செய்தவர். பிறகு, அவற்றை ஒருங்கிணைத்து, தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு திரைக்கதையை உருவாக்கினார். மிகக் குறைந்த செலவில் இப்படத்தை எடுத்து முடித்த அவருக்கு ஆஸ்கரை வழங்கி வரும் நிறுவனம், தனது நிறுவன சிறப்பு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியது.

புதன், 25 மே, 2011

Heart Beat Detector


      நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து எல்லா திசையிலும் 30 கி.மீ. தொலைவிற்குள் ஒரு பொறியியல் கல்லூரி இருக்கிறது. பெரும்பாலான கல்லூரிகளில் வளாகத்தினுள்ளேயே நேர்முகத் தேர்வில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சேரும் ஆணை இறுதி ஆண்டு படிக்கும் போதே கிடைத்து விடுகிறது. ‘கல்வித்தந்தை'கள் பெருகிவிட்டதால் ‘கல்விப்புரட்சி' நிகழ்ந்து விட்டதா? கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்தபின் ‘தொழில் புரட்சி' ஏற்பட்டுவிட்டதா? இவையெல்லாம் வளர்ச்சியா அல்லது வீக்கமா...?
      நாடு முழுவதும் இது விவாதத்துக்கு உட்படுத்தவேண்டிய விஷயம். ஒரு காலத்தில் தனியார் நிறுவனங்கள் வேலைக்கான விளம்பரங்களை வெளியிடும்போது 10-15 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டிருந்தது. ஆனால் இப்போதெல்லாம் கல்லூரியிலிருந்து வெளிவந்த சூட்டோடு சான்றிதழ் வருமுன்பே, பணியிலமர்த்த தயாராயிருக்கின்றன நிறுவனங்கள்!

      அனேகமாக இன்னும் பத்து வருடங்களுக்குள் நாம் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற எச்சரிக்கையுணர்வு இல்லாமல் நாம் சமகாலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

      நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இளைஞர்களை மிகக் குறைந்த வயதில் பணியிலமர்த்த முன்வருவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

      1. இளம் வயதினராய் இருப்பதால் நிர்ணயித்த சம்பளம் தனக்கான குடும்பச் செலவு குறைந்த நிலையில் பெரும் தொகையாக தோற்றமளிப்பது.

      2. பணி உயர்வும் சம்பள உயர்வும் அதற்கிணையான உழைப்பை சத்தமின்றி உறிஞ்சிக் கொள்வது கவனத்தில் கொள்ளப்படாதது.

      3. நாற்பது வயதாகும் போது நிறுவனத்தின் நிதி நிலைமை அல்லது தனி நபர்களின் திறமையின்மை என்று ஏதேனும் காரணங்களைச் சொல்லி வேலையை விட்டு அனுப்ப எளிதாகும்.

      4. நாற்பது வயதுக்குப் பின்னான பதவி, பண உயர்வு அவசியமற்றுப் போதல். மேலும் அவ்வயது தாண்டி நெருங்கும் நோய்களுக்கான மருத்துவ செலவையும் ஏற்க வேண்டியதில்லை.

      இப்படியான காரணங்கள் இருப்பதால் நாற்பது வயதை நெருங்கும் நபர்களை வீட்டுக்கு அனுப்பும் வழிகளை நிறுவனங்கள் தேடத் துவங்குகின்றன.

      இது அபாயகரமானது. ஒரு நாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கை என்பதை அரசுகளோ, பொதுமக்களோ இன்னும் உணராமல் இருக்கின்றனர்.

      வேலையில்லை என்ற முடிவை எடுக்க 28 வயது வரை பார்த்துவிட்டு, ஒரு இளைஞனால் தனக்கான, நிலையான தொழிலைத் தானே துவங்க வாய்ப்பு இருக்கிறது. எந்த முடிவை எடுப்பதற்கும் குடும்பம் என்ற கட்டு இல்லாமல் துணிச்சலாக இயங்க முடியும்.

      ஆனால், 40 வயதில் தனக்கு வேலையில்லை என்று தெரியவந்தால் ஒரு மனிதன் எப்படி தனக்கான இடத்துக்காக மறுபடி பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க முடியும்?

      ‘ஆட்குறைப்பு' என்ற ஆயுதத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குபவை என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் அந்த நிறுவனங்களுக்கு, முதலீடு செய்த தேசத்தின் பிரஜைகள் பற்றிய அக்கறையோ கவலையோ இருக்காது.

      நாளடைவில் இதற்கொரு பொது விவாதம் நிகழ்த்தி இது போன்ற நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்களுக்கு ஒரு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.

      இலக்கியங்களானாலும், ஊடகங்களானாலும் ஒரு சமூகத்தின் கண்ணாடியாக நிகழ்ந்து, சமகாலப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்க வேண்டும்.

      நமது திரைப்படங்களில் எத்தனை படங்கள், இப்படியான ஜீவாதாரமான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகின்றன என்ற கேள்வி அண்மையில் Heart Beat Detector என்ற பிரெஞ்சு திரைப்படத்தைப் பார்த்த பிறகு தோன்றியது.

      ஜெர்மனியில் தலைமையகத்தைக் கொண்ட வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஃப்ரான்சில் இயங்கி வருகிறது. தனது நிறுவனத்தில் ஒரு புறம் புதிய இளைஞர்களை வேலைக்குச் சேர்த்தபடி, மறுபுறம் தனது ஊழியர்களை (2500 பேரிலிருந்து 1200 பேராக) குறைக்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதன் உச்சகட்டமாக நிறுவனத்தின் C.E.O. மத்தியாஸ் ஐஸிப்பை மனநிலை சரியில்லாதவர் என்று நிரூபிக்கும் ஆதாரங்களோடு வரும்படி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி (H.R.) சைமனை அனுப்புகிறது.

      சைமன் அந்த நிறுவனத்தில் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்து ஊழியர்களை மனதளவில் உற்சாகப்படுத்த வந்ததாக தன்னை மத்யாஸிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். மத்தியாஸ் உண்மையில் ஒரு வயலின் கலைஞர். அது மட்டுமில்லாமல் நிறுவனத்தின் சில ஊழியர்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை ஏற்கனவே நடத்தி வந்தவர். ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஒரு முக்கியமான இசைக்கலைஞர் ஏரோன் வீட்டுக்கு அனுப்பப்பட, இசைக்குழு கலைக்கப்பட்டு விடுகிறது. அப்பொழுதெல்லாம் அதைப் பற்றி அக்கறை கொள்ளாத தலைமையகம் இப்பொழுது திடீரென இதற்காக ஒரு அதிகாரியை அனுப்புவது பொருந்தவில்லையே என்று யோசித்த மத்தியாஸ், தன்னை வெளியேற்றத் தான் சைமன் வந்திருக்கிறார் என்பதை யூகித்து விடுகிறார்.

      மத்தியாஸின் தனிச் செயலர் இஸபெல்லாவிடம் மத்தியாஸின் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டறிகிறார் சைமன். இஸபெல்லாவும் இசைக்குழுவில் இருந்தவர் என்பதோடு மத்தியாசுக்கும் அவருக்கும் நெருக்கமான காதல் உறவு இருந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. ஆனால் தலைமையகத்தில் மேலதிகாரியாக இருக்கும் கார்ல் ரோஸ் என்பவர் இஸபெல்லாவை, மத்தியாஸ் மனநிலை சரியில்லாதவர் என்பதற்கான ஆதாரங்களை உருவாக்கும்படி மிரட்டிப் பணியவைத்ததாக இஸபெல்லா கூறுகிறார்.

      இஸபெல்லா தந்த குறிப்பேட்டின்படி மத்தியாஸ் ஒரு முறை நிறுவன அதிகாரிகள் கூட்டத்தில் பேசும்போது தடுமாறியதையும், இரண்டுமுறை தாமதமாக வந்ததையும், ஒரு முறை மயக்கமடைந்ததையும் நாள் மற்றும் நேரக் கணக்குப்படி ஆதாரம் தரப்பட்டது.

      மத்தியாசின் மனைவி லூசி, சைமனைச் சந்தித்து மத்தியாசின் மகன் இறந்து போன நிகழ்விலிருந்து மத்தியாஸ், மிகவும் மனம் உடைந்திருப்பதால், அவரைப் பணி நீக்கம் செய்து துன்புறுத்த வேண்டாமென்று கெஞ்சுகிறார்.

      சைமன் மீண்டும் ஒரு முறை மத்தியாசை சந்தித்து சில விளக்கங்களைக் கேட்கிறான். அப்போது தலைமையகத்தில் உள்ள கார்ல்ரோஸின் உண்மையான பெயர் கார்ல் க்ராஸ் என்றும் அவர் ஒரு லெபனீஸ் சைல்ட் (ஜெர்மனியில் ஹிட்லருடைய ஆணைகளை நிறைவேற்றவும், அவரைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட படையில் பணியாற்றிய வீரர்கள் மரணமடைய நேர்ந்தால், அவர்களுடைய குழந்தைகளை ஏதேனும் ஒரு ஜெர்மானியன் தத்தெடுத்து வளர்க்க வேண்டும்; அப்படித் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு லெபனீஸ் சைல்ட் என்று பெயர்) என்றும், தான் போலந்து நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் அவர் மனதில் இன்னமும் ஹிட்லர் கால நினைவுகளோடு தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாகவும் மத்தியாஸ் கூறுகிறார். சைமன் பதிலேதும் சொல்லாமல் வெளியேறுகிறான். இதன் காரணமாக, மத்தியாஸ் தற்கொலை செய்ய  முயன்று காப்பாற்றப் படுகிறார். மருத்துவ மனையிலிருக்கும் அவர் மீது எந்த அறிக்கையும் தயார் செய்ய இயலாமல் சைமன் உயரதிகாரி கார்ல் ரோஸிடம் தன் இயலாமையைத் தெரிவிக்கிறான்.

      அவரோ சைமனைக் கடிந்துகொள்கிறார். மத்தியாசை வீட்டுக்கு அனுப்பத்தான் சைமனை நிர்வாகம் அனுப்பியதே தவிர பரிதாபப் பட அல்ல என்று கோபமாகப் பேசுகிறார்.

      சைமன் மத்தியாசை மனிதாபிமானத்துடன் மருத்துவமனையில் சந்திக்கிறார். அங்கு மத்தியாஸ் சைமனிடம் மூன்று அநாமதேயக் கடிதங்களைத் தருகிறார். அதில் மத்தியாசின் தந்தையும் ஹிட்லரின் படையில் போலந்து நாட்டில் பணியாற்றியவர். அத்துடன் அவர் போலந்து நாட்டில் அப்போதிருந்த யூதர்களை கூட்டம், கூட்டமாக ‘காஸ் சாம்பரில்' (Gas champer) கொன்று பல இடங்களில் புதைக்கும் பணியிலிருந்தவர் என்றும் அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதை மத்தியாஸ் சைமனிடம் கொடுத்ததற்கு முக்கியக் காரணம் தன் குடும்பத்துக்குக் கூட ஹிட்லர் படையுடன் தொடர்பிருந்தது என்று நிரூபிப்பதன் மூலம் உயரதிகாரி கார்ல்ரோஸிடம் அனுதாபம் பெறுவதற்காக.

      அடுத்த நாள் சைமனுக்கும் இதே போல கையொப்பமிடாத கடிதமொன்று வருகிறது. அதில் யூதர்களைப் போலந்தில் உள்ள மிஸ்ரெக்கில் விஷவாயு செலுத்திக் கொல்லும் ஆணையொன்றின் நகல் அனுப்பப் பட்டிருக்கிறது. அந்த ஆணையில் கையெழுத்திட்டிருப்பவர் மத்தியாஸின் தந்தை ‘தியோடர்'. கடிதம் அஞ்சல் செய்யப்பட்ட இடம் எதுவெனப் பார்த்து, அதனை வைத்து யார் அனுப்பியிருக்கக் கூடும் என்று ஆய்கிறார் சைமன். அது ஏற்கனவே நிறுவனத்தில் வேலை பார்த்து, இசைக்குழுவிலும் இடம் பெற்ற ஏரோன் நியூமென் என்று கண்டு பிடித்து விடுகிறார்.

      நியூமெனிடம், அவன் வசிக்கும் ஊரி சென்று பேசுகிறார் சைமன். நியூமென் போலந்தில் நடந்த யூதர்களின் மீதான விஷவாயு சம்பவத்தில் நேரடியாக வாழ்ந்தவன். அத்துடன் நியூமெனின் தந்தைதான் கொல்லப்பட்ட யூதர்களை வாகனத்தில் ஏற்றிக் குழிதோண்டிப் புதைக்கும் பொறுப்பிலிருந்த அதிகாரியென்பதும், நியூமெனின் தந்தைக்குத்தான், மத்தியாஸின் தந்தை தியோடர், யூதர்களைக் கொல்லும் பணியில் எவரும் உயிர் பிழைத்துவிடாமல் கவனமாகச் செய்ய வேண்டுமென்று ஆணையிட்ட கடிதம் அனுப்பியிருக்கிறார் என்பதும் புலனாகிறது.

      இந்த விஷயங்கள் அறிந்த நியூமெனை மத்தியாஸ் சாமர்த்தியமாக ‘ஆட்குறைப்பு' நிகழ்வில் பணியிலிருந்து நீக்கியிருக்கிறார். நியூமெந்தான் இசைக்குழுவின் மைய நபர் என்பதால், இதன் காரணமாக இசைக்குழு கலைக்கப் படுகிறது. யூதர்களின் படுகொலையின் போது எவராவது உயிர் பிழைத்து விடுவார்களோ என்று சோதிக்க Heart Beat Detector கருவியைப் (இதயத் துடிப்பை அறியும் கருவி) போன்றவர்கள்தாம் என்ற பொருளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மிகச் சிறந்த திரைக்கதை, காட்சியமைப்பு, வசனங்கள் ஆகியவற்றுக்கு மிகச் சரியான உதாரணம்.

      அழகான, இயல்பான திரைக்கதை முடிச்சுக்கள், நேர்த்தியான காட்சியமைப்புகள், கூர்மையான வசனங்கள் என்று படம் எல்லாவற்றையும் சம விகிதத்தில் கலந்து யதார்த்தமாக எடுக்கப் பட்டிருக்கிறது. ஒரு காட்சியையோ, வசனத்தையோ தவறவிட்டால் படத்தின் பிரதானமான கதையின் முக்கிய முடிச்சை அவிழ்க்க முடியாமல் தடுமாறி விடுவோம். நிறுவனத்தின் ஆட்குறைப்பு என்பது அதன் தந்திரமான நிலைப்பாடுகளில் ஒன்று. சில தனிமனிதர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்துக்கொண்டே எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்பதைப் படம் தெளிவாக உணர்த்துகிறது.

      படம் நெடுக இசை ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பாராட்டியாக வேண்டும். திரைக்கதை என்ற கலையில் திரையிசை என்ற மொழியை எப்படி இரண்டறக் கலப்பது என்பதை, இந்தப் படத்தின் இயக்குநர் நிகோலஸிடம் கற்க வேண்டும். படத்தின் ஒரு காட்சியில் மத்தியாஸ் தனது இசையனுபவத்தை சைமனிடம் பகிரும்போது ‘இசை என்பது ஒரு வைரஸ். என்னை அது ஆறு வயதில் பீடித்தது' என்றபடி ஒரு வயலின் இசைக் கோர்வையை ஒலிக்கச் செய்து, ‘இசை பல சமயங்களில் என்னைக் கத்தியைப் போலக் கிழிக்கிறது' என்பார். அந்த இசையைக் கேட்கும் போது உண்மையில் நம் இதயம் கிழிபடும். அந்தக் காட்சியின்படி மத்தியாஸ் ‘வேலை போய்விடுமே' என்று மனம் நொந்த சூழ்நிலையை உணர்த்துவது போலிருக்கும்.

      அடுத்த சில காட்சிகளுக்குப் பிறகு மறுபடி ஒரு இடத்தில் மத்தியாஸ் வயலின் வாசிப்பார். அருகிலமர்ந்து இருப்பவர் நியூமென். (இது ஃப்ளாஷ்பேக் காட்சி) பணி நீக்கம் செய்வதற்கு முன்னதாக இருந்த காட்சியது. இப்பொழுது புரிந்து விடும். ஒரு இசைக் கலைஞனுக்கு ஒரு இசை எப்படிக் கத்தி போல் அறுக்கும் என்பது. நியூமென்னை நீக்கிய குற்றவுணர்ச்சி காரணமாகத்தான் மத்தியாசுக்கு பிறகு இசை கேட்கும்போதெல்லாம் பதட்டம் ஏற்படுகிறதென்பதைக் காட்சி ரீதியாகக் காட்டியிருப்பார்கள். கவிதையான காட்சிகள் படம் நெடுக.

      இசைக் குழுவுக்காக ஆள் தேர்வு பண்ணுவதற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் சைமன், ஒரு கண்துடைப்புக்காக... அதில் பாடுபவராக வந்து அசத்துபவர் ஸ்பானிஷ் தேசத்தின் ‘பெமிங்கோ' என்ற இசைப்பாணியில் பிரபலமான மிகுல் பவேடா... மிக உருக்கமான பாடல் அது. பவேடாவின் குரல் இதயத்தை உருக்கும். பவேடா, கிராமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

      இம்மானுவேல் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புக்களில் பெரும் பங்கு வகித்திருப்பவர் எலிஸபெத்.

      மத்தியாஸ் வரும் காட்சிகளில், அவர் கைகளைக் கழுவிக்கொண்டும், நகங்களைச் சுத்தம் செய்துகொண்டும் இருப்பார். மிக நுணுக்கமான பாவனையது. அவரது இந்தச் செய்கைகளுக்கு எந்த விளக்கமுமில்லை. உண்மையில் இது ஒரு மனோ வியாதி. ஒரு சிலர் தங்கள் குற்றவுணர்ச்சியை மறைக்க, தங்களை அதீதமாகச் சுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்.

      அதைப்போல ‘சனிக்கிழமைக் காய்ச்சல்' (Saturday Fever) என்று கூறப்படும் நிறுவன மதுபான விருந்துகளை படத்தில் அடிக்கடிக் காண்பிக்கிறார்கள். படத்தில் ஆட்குறைப்பு செய்வதற்கு நிறுவனம் தரும் குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்று ‘மதுப்பழக்கம்' ஒரு நோயாகக் கருதப்பட்டு, அதன் பேரிலும் ஊழியர்களை நீக்கலாம் என்று தகவல் அனுப்புகிறது. ஆக, மதுப்பழக்கம் ஏற்படுத்துவதென்பதும் நிறுவன அதிகாரிகளால் தான். ஆனால் அதையே காரணம் காட்டிப் பணிநீக்கம் செய்வது எத்தனை குரூரமான தண்டனை? அல்லது குரூரமான தந்திரம்?!

      மதுபான விருந்தொன்று முடிவடைந்ததும், போதை தலைக்கேறி ஒரு ஊழியர் தெருவில் நடனமாடிக் கொண்டே வருவார். சர்ரியலிஸ நடனம் என்று கூறப்படும் அந்த நடனம், நளினமாக இருந்தாலும் மறுபுறம் தெருவில் நடப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவு இருக்கும். இது போல் படத்தில் பல நுட்பமான காட்சிகள்.

      அயல்நாட்டுப் பத்திரிகைகளில் பல விமர்சகர்கள் இந்தப் படத்தை அறுவை, இழுவை என்றெல்லாம் தூற்றி எழுதியிருக்கிறார்கள். இதிலும் கூட நுண்ணிய அரசியல் இருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

      பல நிறுவனங்களில் மடிப்புக் கலையாத உடைகளில் பணியாற்றும் இன்றைய தலைமுறை, நவீன கூலிகளாகவே கண்களுக்குத் தெரிகின்றனர். அவர்கள் கழுத்தில் கட்டியிருக்கும் ‘டை' ஒரு ‘சுருக்குக் கயிற்றை'ப் போலவே காட்சியளிக்கிறது. இந்தியா, இன்னும் சில வருடங்களில் சந்திக்கப் போகும் இந்தப் பிரச்சினைக்காக இப்போதே யோசிக்கத் துவங்குவதுதான் புத்திசாலித் தனம். 40 வயதிற்குப் பிறகு வேலையற்றுத் திரியும் பிள்ளைகளை இந்த தேசம் சுமக்க வேண்டுமா? மூளை உழைப்பாளிகளுக்காகவும் யோசிப்போம் உழைப்பாளர் தினத்தில்....
நிக்கோலஸ் க்ளாஸ்:


      ப்ரெஞ்சு இயக்குநரான நிக்கோலஸ், நல்ல எழுத்தாளரும் கூட. நிக்கோலசுக்கு இந்தியாவின் மீது நல்ல ஈடுபாடும், அபிமானமும் உண்டு. இவர் இந்திய மண்ணின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு The Bengal Nights  என்ற படத்தை ப்ரெஞ்சு மொழியில் இயக்கினார். இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி தான் அதில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரபல சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படத்திலும் இவருக்கு ஒரு பங்கு இருக்கிறது. திரைப்படத்தை பொறுத்தவரை, கதையிலும், திரைக்கதையிலும் மிகுந்த கவனத்தைச் செலுத்துபவர். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தீர்மானிக்கும் முன்பாக எழுத்தாளர் எலிஸபெத்துடன் விவாதித்து, பின்பே படமாக்கினார்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

THE DIVING BELL AND THE BUTTERFLY

இன்று உலக புத்தக தினம்(ஏப்ரல்-23)

வாசிப்பை நேசிப்பவர்களுக்கானது!!




வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது! அதன் புதிர் முடிச்சுகளில் அவிழ்க்கப்படாமல் எத்தனை புதையல் மூட்டைகள் அமிழ்ந்து கிடக்கின்றன! ஒவ்வொரு பொழுது விடியும் போதும் நம் கற்பனைக்கும் எட்டாத அதிசய விஷயங்களை நம் முன் இந்த உலகம் கொட்டிக் கவிழ்க்கிறது.


இயற்கைக்கும் மனிதனுக்குமான விளையாட்டு, யாராலும் யூகிக்க முடியாத வினோதமான அலைகழிப்புகளில், மனிதனைப் புரட்டிப் போட்டபடியிருக்கிறது. இருப்பினும், மனிதர்கள் அசாதாரணமான எந்தச் சூழலையும் வென்று, அசாத்தியமான சாதனைகளைப் படைத்தபடி இருக்கின்றனர்.

‘ழீன் டொமினிக்' எனும் பிரெஞ்சு எழுத்தாளர் எப்போதும் உற்சாகமான, கொண்டாட்டமான மனநிலையுடையவர். பத்திரிகையாசிரியரும் கூட. விளம்பரங்களுக்கான மாடல்களைப் படம்பிடித்து அவர்களைப் பற்றிய தகவல்களை எழுதக்கூடியவர். செலின் என்கிற மனைவியும், மூன்று குழந்தைகளுமாக கவலையேதுமின்றி நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்.

எவரும் எதிர்பாராத வேளையில், திடீரென ஒருநாள் அவரது மூளையையும், முதுகெலும்பையும் இணைக்கும் நரம்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ‘கோமா' நிலைக்குத் தள்ளப்படுகிறார். மூன்று வாரம் அதே நிலையிலிருப்பவர், கண்விழிக்கும் போது தலையிலிருந்து கால் வரை எந்த உறுப்பும் இயங்காமல் போய்விடுகிறது. Locked in Syndrome எனும் முடக்குவாத நோய் காரணமாக இந்த நிலைக்கு ஆளாகிறார். இடது கண் விழியும் இமையும் மட்டும் அசைகிறது. காதுகள் கேட்கும் சக்தியை இழக்கவில்லை. பிரான்சின் கடற்கரை நகரமான ‘பெரக் சூ மெர்'-ன் அதிநவீன மருத்துவமனையில் அவருக்காக மருத்துவக் குழுவொன்று போராடிக் கொண்டிருக்கிறது. அவரது மூளை எல்லாவற்றையும் கவனிக்கிறது; உள்வாங்குகிறது. ஆனால் மூளையின் கட்டளைக்கு உறுப்புகள் எதுவும் (இடது கண் விழி மற்றும் இமைகள் தவிர) கீழ்படிவதில்லை. பேச்சுப் பயிற்சிக்காக ‘ஸ்பீச் தெரபிஸ்ட்' இருவர் மிகுந்த முயற்சி எடுக்கினனர். பேச்சுப் பயிற்சியினால் அவரோடு உரையாட ஒரு வழிமுறையைக் கண்டடைகின்றனர். ‘ழீனி'டம் இயங்கும் ஒருகண்ணை வைத்து அவரிடம் பேசியாக வேண்டுமென்பதால், அவருக்குத் தேவையானவற்றைக் கேள்விகள் வடிவில் கேட்பது; ‘ஆம்' என்பதற்கு ஒரு முறை கண்ணிமைக்கவும், ‘இல்லை' என்பதற்கு இருமுறை கண்ணிமைக்கவும் பயிற்சியளிக்கின்றனர். இது ஓரளவு பலனளிக்கிறது.

அதற்கடுத்த முயற்சியாக ஆங்கிலத்தில் அதிகம் பயன்படக் கூடிய எழுத்துகளை ஒரு ப்ளாஸ்டிக் பலகையில் பொறித்து ஒவ்வொரு எழுத்தாக ஒருவர் வாசிப்பது; ழீன் மனதில் உள்ள வார்த்தையின் எழுத்து வரும்போது ஒருமுறை கண் இமைக்குமாறு பழக்குகின்றனர். ஆக, அதுவரை கேட்ட கேள்விக்கு பதில் என்ற நிலையிலிருந்து சிறுசிறு வார்த்தைகளால் ஆன கேள்விகளைக் கேட்டுப் பதிலடையும் நிலைக்கு முன்னேற்றமடைகிறார். முதலில் வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் பேசும்(!) ழீன், கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கையடைந்து மனதை உறுதியாக்கிக் கொள்கிறார்.

பேச்சுப் பயிற்சி நிபுணர் மெண்ட்லில்-ன் சலிப்பற்ற உரையாடலில் உற்சாகமாகி, இழந்த தன்னம்பிக்கையைப் பெற்ற ழீன், தான் ஒரு புத்தகம் எழுத விரும்புவதாகவும், அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்கிறார். மெண்ட்லின் அதற்குச் சம்மதித்து, ஏற்கனவே ழீனுடன் ஒரு புத்தகத்துக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பதிப்பாளரிடம் பேசி அவர்களையும் சம்மதிக்கச் செய்கிறார். புத்தகம் எழுதும் பணி துவங்குகிறது. மாண்ட்லின் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து ழீனின் இமையசைவை வைத்து வார்த்தைகளைக் கோர்த்து வரிகளாக பத்தியாக, பக்கமாக புத்தகம் உருவாகிறது. கிட்டதட்ட இரண்டு இலட்சம் எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அதிகபட்சம் ஐந்து நிமிடம் என்கிற காலக்கணக்கில் மெண்ட்லினின் பொறுமையான ஒத்துழைப்பினால் ‘Diving Bell and the Butterfly' என்ற தலைப்பில் நூல் வெளியானது. Diving bell என்பது உருளும் விழிகளையும் Butterfly என்பது படபடக்கும் இமைகளையும் குறிப்பதாக ழீன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.

புத்தகம் வெளிவந்த பத்து நாட்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ழீன், இறந்து விடுகிறார்.

பிரான்சில் நடந்த இந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து ழீன் எழுதிய நூலின் தலைப்பையே கொண்டு படமாக வெளிவந்துள்ளது.

கதை ஒரு அசாதாரண, அசாத்திய நிகழ்வென்றாலும், அதைப் படமாக்குவதும் ஒரு சுவாரஸ்யமற்ற முயற்சிதான். ஆனால் வெகு சாமர்த்தியமான திரைக்கதை, படமாக்கிய நுட்பம், அற்புதமான ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு இவற்றின் மூலம் உலகின் மிகச் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால், அதில் நிச்சயம் இடம்பெறக்கூடிய படமாக இது அமைந்திருகிறது.

படத்தின் துவக்கக் காட்சிகள் மங்கலாக, தெளிவற்றுத் தெரிகின்றன. ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் பரபரப்பாக அங்குமிங்குமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக காட்சி தெளிவாகி, கிட்டதட்ட நம் முகத்துக்கு அருகில் வந்து மருத்துவர்கள் ஏதோ கேட்பது போல, அத்தனை நெருக்கமான மிக அண்மைய காட்சிகள் (Tight close-up shots). அதாவது, ழீனின் கண்கள் வழியே புறக்காட்சிகள் நம் முன் காட்டப்பட்டிருக்கின்றன. மருத்துவர்களின் கேள்விகளுக்கு ழீன் பதில் சொல்வதுபோல் ஒரு குரல் வருகிறது. ஆனால் அது மருத்துவர்களின் காதுகளில் கேட்பதில்லை. உண்மையில் அது ழீன், தான் பேசுவதாக நினைக்க, அது அவரின் ‘மனம்' பேசுகிற குரலென்பது சிறிது நேரத்துக்குப் பின்னே நமக்குப் புரியும். படம் துவங்கியபின் 37-வது நிமிடத்தில் தான் ழீனின் முழு உருவம் திரையில் தெரியும். அதுவரை படமாக்கப்பட்ட அத்தனைக் காட்சிகளும் ழீனின் பார்வைக் கண்ணோட்டத்தில் அல்லது பார்வை மையத்தில் இருந்து (Point of View) படமாக்கப் பட்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் ழீன் ஆக மாறியிருப்பீர்கள். தன்னம்பிக்கையோடு ழீன் தனது புத்தகத்துக்கான முதலெழுத்தை அடையாளப்படுத்தும் காட்சியில் தான் ழீனின் முழு உருவம் தெரியும் படி இயக்கியிருக்கும் படத்தின் இயக்குநர் ஜீலியன் உத்தி அபாரமானது.

ழீனிடம் நோய் வந்தபிறகு எஞ்சியவை மூன்றே விஷயங்கள் தான்.

1. அவரது நினைவுகள்

2.அவரது கற்பனைகள்

3.அசையும் இமைகள்

இவற்றை மட்டுமே வைத்து ஒரு படத்தை உருவாக்குவது அத்தனை சுலபமல்ல.

இம்மாதிரியான கதைக்குப் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் அதிகம் பயன்படுத்துவதுதான் இயக்குநருக்கு இருக்கும் ஒரே உபாயம். ஆனால், ழீனை நோய் தாக்கிய அன்று நடந்த சம்பவம், தந்தையுடனான அவரது நெருக்கத்தை உணர்த்தும் ஒரு காட்சி, மனைவி மற்றும் குழந்தைகளுடனான ஒரு காட்சி இவை தவிர பெரும்பாலும் முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட பின்னர் வரும் நிகழ்வுகளை வைத்தே மொத்தக் கதையையும் காட்சிப்படுத்துவது மிகப்பெரிய சவால். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குநர் ஜீலியன் ஸ்நாபெல்.

ழீன் மூன்றுவார கோமா படுக்கையிலிருந்து கண் விழிக்கும் படத்தின் துவக்கக் காட்சிகள், நீர் நிலைக்குப்பின் தெரியும் பிம்பங்கள் போல கலங்கலாகத் தெரியும் போது, ‘என்னப்பா கேமரா பண்ணியிருக்கிறான்' என்ற அபவாதத்தை பலரும் சொல்லியிருக்கக் கூடும். அதுவும், ழீன் இமை சிமிட்டி பதிலளிக்கும் காட்சியில், திரை ஒருமுறை இருண்டு பின் ஒளிர்கிறது. (Blink) குறைந்த நொடிதானென்றாலும், எடிட்டிங் பிழையென அதனை சிலர் கருதக் கூடும். இத்தனைக் கூக்குரல்களையும் ஈடுசெய்யும் விதத்தில், ழீன் புத்தகம் துவங்கும் காட்சியில் அலைபுரளும் கடற்கரையில் இயற்கையை அள்ளி இறைத்தும், ழீன் மனைவியின் கூந்தல் மற்றொரு காட்சியில் காற்றின் வீச்சுக்கு ஏற்ப ஆடுவதைப் படமாக்கிய காட்சியிலும் பிரமாதப்படுத்தி விடுகிறார்கள் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும்!

ழீன் தனது தந்தையின் மீது அதீத பாசமும் நெருக்கமும் கொண்டவர். 92 வயதில் மனம் சோர்ந்து, உடல் சோர்ந்து முதுமை காரணமாக நடக்க முடியாமல், அடுக்ககம் ஒன்றின் மாடி வீட்டில் குடியிருக்கிறார். ழீன் அவரை உற்சாகப்படுத்த முகச்சவரம் செய்து, முத்தமிட, நெகிழ்கிறார் அவரது அப்பா. (ஃப்ளாஷ்பேக்)

ழீன் முடக்குவாதத்தில் மருத்துவமனையில் கிடக்க, அடுக்ககத்திலிருந்து அவர் வரமுடியாத சூழலில் (94 வயதில்) மெண்ட்லிலின் உதவியோடு தொலைபேசியில் தன் அன்பைத் தெரிவிக்கும் காட்சி எவரையும் உருக வைக்கும் உணர்ச்சிப் பிழம்பான ஒன்று. “ழீன், உன் நிலையும் என் நிலையும் இப்போது ஒன்றுதான். உனது ஆன்மாவை உன்னுடல் அடைத்துப் பூட்டி விட்டது... நகர முடியாமல்... என்னை ... இந்த அடுக்கக வீடு...” என்று கண்ணீர் ததும்பக் கூறுமிடத்தில் எவர் மனமும் கரைந்துவிடும்.

பிரார்த்தனைக்கு ழீனை ஒரு தேவாலயத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்கிறார் மெண்ட்லில். பாதிரியாரும் வந்து விடுவார். ழீன், தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்று மறுதளிக்கிறார். ஆனால் மெண்ட்லில், பாதிரியார் மனம் புண்படாமலிருக்க வேண்டுமென்பதற்காக, ‘தனக்காக நீங்களும் இன்ன பிறரும் பிரார்த்திப்பது மகிழ்ச்சியளிப்பதாக' மொழிபெயர்த்துக் கூறுவார். கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் இப்படியான ‘தொடர்பாளர்கள்' இருந்தால் இப்படித்தான் கோளாறுகள் நிகழும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்புதானே...

உலகப் புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் பிறந்ததினமும், இறந்த தினமும் அதுதானென்பதால் அந்தத் தேதியை புத்தக தினமாக அறிவித்தனர். (ஷேக்ஸ்பியரின் இறந்த தினம் அதுவல்ல என்ற சிறு சர்ச்சை கூட உண்டு) மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளர் ‘சொர்வாண்டிஸ்'-ம் அதே தினத்தில் தான் பிறந்தார்.

ழீன் டொமினிக்கின் வாழ்க்கை வரலாற்றை இந்தப் படம் பார்த்த பிறகு, வாசித்தபொழுது ஆச்சர்யகரமாக அவரும் ஏப்ரல் 23ம் தேதியில் பிறந்திருக்கிறார் என்றறிந்தேன்.

‘வாழ்வும் எழுத்தும் வேறுவேறல்ல' என்று ழீன் கருதியதால்தான் ‘ உயிருள்ள பிணம்' போல படுக்கையிலிருந்த போதும் அவரால் ஒரு புத்தகத்தை உருவாக்க முடிந்தது. அதனால் தான் அவரது வாழ்க்கை இன்று ஒவ்வொரு மனிதனுக்குமான புத்தகமாகியது.


உண்மையில் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு முடக்குவாத நோய் இயங்க விடாமல் கட்டிப் போட்டபடி தான் இருக்கிறது. அந்தக் கால இரட்டைப் புலவர்கள் முதல் பாரதி வரை, புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய சில எழுத்தாளர்கள் வரை... உடற்கூறோ, வறுமையோ, குடும்பச் சூழலோ, உறவுச் சிக்கல்களோ... அவர்களதுகால்களையும் கைகளையும் கட்டி இழுத்தபடியே தான் இருக்கின்றன. அதையும் மீறிதான் அவர்கள் இயங்குகின்றனர்.


ஒவ்வொரு புத்தகத்திலும், அதன் வீரியம் மிக்க பக்கங்களுள் ஒட்டிக்கொண்டிருப்பது வெறும் ‘மை' மட்டுமல்ல. அது... அந்தப் படைப்பாளியின் ஆன்மா!


JULIAN SCHNABEL

1951-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த ஜீலியன் மிகச் சிறந்த ஓவியக் கலைஞர். அவரது ஓவியக் கண்காட்சிகள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. உண்மையில் அவரது ‘தட்டு ஓவியங்கள்'(Plate paintings) மூலம்தான் அமெரிக்காவெங்கும் அறியப்பட்டார். திரைப்படத்தின் மீதான ஆர்வத்தில். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது வணிக சினிமா அவரது நோக்கமாக இருக்கவில்லை.

இவரது முதல் படம் கூட ‘பாங்கிட்' என்னும் ஓவியரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதுதான். இவரது அடுத்தபடமான Before Nighi Falls-ம் ஒரு வாழ்க்கை வரலாறுதான். பரவலான பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது.

‘டைவிங் பெல்...' படத்துக்காக கோல்டன் குளோப் விருதினைப் பெற்ற ஜீலியன் ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றார்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

என்ன செய்யப் போகிறோம்?

“கிடங்கில் தீட்டப்பட்டுக் காத்திருக்கும்
போராயுதங்களைவிட
கையில் வைத்திருக்கும் ‘ஒரு வாக்கு'
கூர்மையானது”

வரலாற்றின் திறந்த பக்கங்கள் ஜனநாயக ஆட்சிமுறையே சிறந்ததென்று தெரிவிக்கிறது. அதன் கூறுகளை நீண்ட காலமாக எதிர்கொள்ளும் சராசரி இந்தியக் குடிமகனோ அதன் மீது அதிருப்தியுற்றவனாகவே காணப்படுகிறான். ஆனால் அவ்விதமான அதிருப்திகளை எதிரொலிக்க வேண்டிய தேர்தல் களத்தில் திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தவற விட்டவர்கள் போல தங்கள் முன்தீர்மானங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு கையில் கிடைக்கும் கொழுகொம்பைப் பற்றியபடி பரிதவிக்கிறார்கள்.

தற்போதைய தேர்தல் முறை பற்றியும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் தேர்தல் காலங்களில் மட்டும் விவாதிக்கப்பட்டு பின் அவை மறக்கவும் படுகிறது. தேர்தல் முறை பற்றி விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் தேவைப்படுவது ஒரு புறமிருந்தாலும், இருக்கின்ற விதிகள் பற்றியும், அவை பற்றிய விழிப்புணர்வும், நம்முடைய உரிமைகள் குறித்தும் நாம் அறிய வேண்டியவை ஏராளம்.

பெரும்பான்மையான வாக்காளர்கள் இன்றைய அரசியல் மீது ஆர்வமில்லாத காரணத்தாலும், இதனால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்கிற அபிப்ராயத்தினாலும் வாக்களிக்கச் செல்வதில்லை. ஆனால் எத்தனையோ தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப் படுகிற பொழுது, ஒவ்வொரு வாக்கும் எத்தனை அதிமுக்கியமானது என உணர முடியும்.

இன்னும் சிலர் தாங்கள் வாக்களிக்கப் போகும் முன்பே தங்களது வாக்கினை வேறு எவரோ கள்ளத்தனமாகப் போட்டு விடுகிறார்களே என்றும் பிறிதொரு பிரிவினர் நிற்கும் வேட்பாளர்கள் எவருக்குமே வாக்களிக்கும் விருப்பமில்லையே என்றும் அதற்கான காரணங்களாக முன்வைக்கின்றனர்.

இரண்டுக்குமே நமது தேர்தல் விதிமுறைகளில் வழிமுறைகள் உண்டு. நம்முடைய வாக்கினை வேறு எவரோ போட்டுவிட்டால், நாம் நம்முடைய ஆட்சேபணையை அந்த வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு, நம்முடைய இருப்பிட மற்றும் அடையாளச் சான்றுகளைக் காண்பித்து நிரூபித்தபின் புதிய வாக்குச் சீட்டில் பதிவு செய்யலாம். ஆனால் அந்த வாக்குச் சீட்டு பெட்டியில் போடப்படாமல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு வித்தியாசம் ஒற்றை இலக்கத்திலிருந்தால் அப்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே இது பற்றி குமுறிக் கொண்டிராமல் உரிமையோடு கடமையைச் செய்யலாம்.

அடுத்ததாக ‘எவருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை' என்றால் வாக்குச் சாவடியிலுள்ள தேர்தல் அதிகாரியிடம் எல்லா வாக்காளர்களையும் போல் நம் பெயரையும் கையொப்பத்தையும் பதிந்து விட்டு 17-A படிவம் பெற்று அதில்

‘49-O' விதிப்படி எவருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என பதிவு செய்யலாம். இதனால் என்ன பயனென்றால், ஒன்று, நம் பெயரில் வேறு எவரேனும் வாக்களித்து விடாமல் தடுத்து விடலாம். அடுத்து, இதே போன்று அதிகம் பேர் வாக்களித்தால் புதியதொரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, தேர்தல் சீர்திருத்தம் பற்றிய அவசியத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.

எனவே நம்முடைய ஒரு வாக்கு மதிப்பு மிக்கது. மாற்றத்தைத் தரவல்லது. ஆட்சி அதிகாரத்தையே கூட முடிவு செய்ய வல்லமை பெற்றது.

விருப்பமான எவருக்காவது வாக்களியுங்கள். அல்லது எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாவது வாக்களியுங்கள்.

ஒருபோதும் வாக்களிக்கும் உரிமையை விட்டுத்தராதீர்கள். நம் தீர்மானங்கள் எல்லாம் நிர்மாணிக்கும் உரிமையும், பொறுப்பும் நம் விரலருகில்... நாம் என்ன செய்யப் போகிறோம்?

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...