புதன், 3 ஏப்ரல், 2013

கலகக்காரக் கலைஞர்கள்-2 ( ஜாஃபர் பனாஹி)


                                

   ஜாஃபர்    பனாஹி  (ஈரான்)

                ஹாலிவுட் திரைப்படங்கள் எறும்பையும் பாம்பையும் பூதாகரமாகக் காட்டி கோடிகளை விழுங்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஃப்ரெஞ்ச் திரைப்பட உலகில் எழுந்தபுதிய அலை' இயக்குநர்கள் யதார்த்தமான கலாபூர்வமான திரைப்படங்களை உருவாக்கினர். ஜப்பான், பிரஸ்ஸில் மற்றும் ஸ்பானிஷ் திரைப்படங்களும் கூட அடிப்படை மனவுணர்வுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டன. அதன்பிறகு நிலவிய தேக்க நிலையை உடைத்து ஒரு புதிய சகாப்தத்தை, எழுச்சியை ஏற்படுத்தியவை ஈரானிய திரைப்படங்கள்தான்.
உலகமெங்கும்
              
         ஈரானில் கடைபிடிக்கப்படும் மிகக் கடுமையான தணிக்கை விதிகளுக்கு ஈடு கொடுத்து மஜீத் மஜீதி, மக்மல் பஃப், கியாரஸ்தமி, சமீரா மக்மல் பஃப், அஸ்கர் ஆகியோர் இணையற்ற திரைப்படங்களைத் தந்து உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். பலசமயம் ஈரானின் சட்டதிட்டங்களுக்கு எதிராக தங்கள் குரல்களை மிகத் துணிவாக பதிவுசெய்த இயக்குநர்கள் அநேகம்.
               
         தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து தனது அழுத்தமான கருத்துகளை பதிவு செய்தமைக்காக இன்னமும் சிறை வைக்கப் பட்டிருக்கும் ஜாஃபர் பனாஹி அதில் முக்கியமானவர்.
               
         White baloon திரைப்படம் மூலம் உலகெங்குமுள்ள திரைப்பட ரசிகர்களை ஈர்த்த ஜாஃபர், ஜுலை 11-ம் தேதி, 1960-ம் வருடம், டெஹ்ரானுக்குத் தெற்கே அஜர்பைஜான் பிராந்தியத்தைச் சேர்ந்தமியானே' என்னுமிடத்தில் பிறந்தார்.
              
          ஜாஃபரின் தந்தை, வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் பணியைச் செய்தவர். ஜாஃபருக்கு 4 சகோதரிகள், 2 சகோதரர்கள். அஸேன் மொழி பேசும் குடும்பத்தைச் சார்ந்த ஜாஃபர், தனது பத்தாவது வயதிலேயே ஈரானின் நூலகத் துறை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசை வென்றார். ஜாஃபருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் அதீத ஆர்வமுண்டு. ஆனால் அவரது தந்தை ( தீவிர சினிமா ரசிகராக இருந்தபோதிலும்) திரைப்படங்களைப் பார்க்க ஜாஃபருக்கு அனுமதி தரவில்லை. பெண் குழந்தைகளோ திரைப்படத்தைப் பற்றி நினைக்கவும் கூடாது. இந்தச் சூழலில் அப்பாவுக்கு தெரியாமல் ஜாஃபரை அவரது சகோதரிகள் திரையரங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். தான் பார்த்து வந்த சினிமாவை சகோதரிகளுக்கு நடித்துக் காட்டுவதுதான் ஜாஃபர் செய்யும் பதிலுபகாரம. ஒருசமயம், தந்தையும் மகனும் திரையரங்கில் நேரடியாக சந்தித்துக்கொள்ள ஜாஃபருக்கு கடுமையான அடி கிடைத்தது.
               
        ஆனாலும், ஜாஃபரின் ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை ஈரானில் இயங்கி வந்த, “கானூன்” (குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான நுண்ணறிவுப் பயிற்சி மையம்) என்ற அமைப்பில் ஜாஃபரை சேர்த்து விட்டார். அங்கு அவ்வப்போது குழந்தைகளுக்கான படங்கள் காண்பிக்கப்படும். அப்பொழுதுதான் ஈரானின் பிரபல இயக்குநர் அப்பாஸ் கியாரஸ்தமியின் திரைப்படங்களைப் பார்த்து பிரம்மித்து அவரது ரசிகரானார். புகைப்படமெடுக்கவும் சிறிய 8 எம்.எம். கேமரா உதவியுடன் சிறு படங்கள் எடுக்கவும் அங்கேதான் கற்றுக் கொண்டார். ‘கானூன்' மையத்தில் பேராசிரியர்கள் எடுத்த குறும்படங்களில் ஜாஃபரின் பங்கு இருந்தது.
               
         இருபதாவது வயதில் ஈரானின் ராணுவத்தில் சேர்ந்தார். ஈரான் ஈராக் யுத்தத்தின் போது ராணுவத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரராக பணி புரிந்தார். அந்த சமயத்தில் அரசுப்படைகளுக்கு எதிராக இயங்கிய குர்திஷ் அகதிகளிடம் பிடிபட்டு 76  நாட்கள் கைதியாக இருந்தார். இராணுவப் பணியிலிருந்து விலகியபின் தனது ராணுவ பணிக்கால அனுபவங்கள் பற்றி ஒரு ஆவணப்படமெடுத்தார். பின், டெஹ்ரானிலுள்ள டி.வி. மற்றும் திரைப்படக் கலைக்கல்லூரியில் சேர்ந்தார்.
               
        அந்தக் கல்லூரியில்தான் ஒளிப்பதிவாளர் ஃபர்ஸத் ஜோடாஃப், இயக்குநர் பர்வேஸ் ஷஃபாஸி ஆகியோரும் அவருடன் படித்தனர். கல்லூரியின் விரிவுரையாளர்கள் எடுக்கும் பயிற்சிப் படங்கள் மற்றும் ஆவணப்படங்களில் ஜாஃபர் வெவ்வேறு விதங்களில் பணிபுரிந்தார். அந்த அனுபவங்களின் துணையோடு ஈரான் இஸ்லாமியக்  குடியரசுத் தொலைக்காட்சி நிறுவனத்துக்காக சில ஆவணப்படங்களை எடுத்தார்.
               
        என்றாலும், சமூகத்தின் மீதான அவரது அக்கறை காரணமாக புறக்கணிக்கப் பட்ட மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்வியல் அவலங்கள் குறித்தும் தனது படைப்புகளில் பதிவு செய்ய விரும்பினார். அஜர்பைஜானில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மதகுருவின் கட்டளைப்படி, தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டு பலியாகும் அப்பாவி மக்களைப் பற்றியும் அவர்களது மரணத்தையும் தடைசெய்யப்பட்ட இறுதிச்சடங்கு நிகழ்வுகளைப்பற்றியும் ஒரு ஆவணப்படத்தை  (The Wounded Heads) மிக ரகசியமாக அவர்களுக்கே தெரியாமல் எடுத்தார். ஆனால் அந்தப் படம் ஈரானில் திரையிட தடை செய்யப்பட்டது.
               
        படிக்கின்ற காலத்திலிருந்தே அப்பாஸ் கியாரஸ்தமியின் படங்கள் மீது அவருக்கு அலாதிப் பிரியம். அப்பாஸ் ஒரு புதுமை விரும்பி. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு புதிய உத்தியை பயன்படுத்துவதில் ஆர்வம் மிக்கவர். அப்பாஸின்தி பிரெட்' படத்தின் பாதிப்பால் ஜாஃபர்தி ஃப்ரெண்ட்' எனும் குறும்படத்தை 1992-ல் எடுத்தார். அதனை அப்பாஸுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். அப்படம் ஈரான் தேசியத் தொலைக்காட்சி விழாவில் சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றிற்கான விருதுகளைப் பெற்றது.
              
          அப்பாஸிடம் துணை இயக்குநராக சேர  ஜாஃபர் விருப்பம் தெரிவித்திருந்தார். ‘த்ரூ ஆலிவ் ட்ரீஸ்' படத்திலிருந்து அப்பாஸிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தார். 1995-ல் தனியாகப் படம் இயக்கும் முடிவில் பர்வேஸ் ஷபாஸி கூறிய கரு ஒன்றின் அடிப்படையில் White balloon ' படத்தை இயக்கினார். புத்தாண்டு தினமொன்றில் தங்க மீன் வாங்கச் செல்லும் சிறுமி கையிலிருந்த பணத்தைத் தொலைத்துவிட்டு பின் பரிதவிக்கும் சூழலை மிக அற்புதமாக படமாக்கியிருந்தார். கேன்ஸ் பட விழா, சாவோ பாவ்லா படவிழா ஆகியவற்றில் பல விருதுகளைப் பெற்றது. 68-வது ஆஸ்கர் விருதுக்காக சிறந்த அயல்மொழி பிரிவில் போட்டிக்காகப் பரிந்துரை செய்யப்பட்டது.
               
        அவரது இரண்டாவது படம், ‘தி மிரர்' சிங்கப்பூர் படவிழா, இஸ்தான்புல் மற்றும் பெல்ஜியம் படவிழாவில் விருதுகளை அள்ளி வந்தது. அதுவரை குழந்தைகள் பட இயக்குநராக அறியப்பட்ட ஜாஃபர்தி சர்க்கிள்' படம் மூலம் அரசியல் திரைப்படங்களை இயக்குபவராக அடையாளம் காணப்பட்டார். பெண்களின் மீதான அடக்குமுறை வன்முறைகளை அடிப்படையாக வைத்து, ‘தி சர்க்கிள்' -ன் திரைக்கதையை உருவாக்கினார். மூன்று வெவ்வேறு பாதிப்புகள் கொண்ட பெண்களின் நிலையை மூன்று வெவ்வேறு கோணங்களில் வித்தியாசமாக படப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வெனிஸ் படவிழாவில்தங்கச் சிங்கம்' விருது பெற்றது. ஆனால் ஈரானில் இந்தப் படம் திரையிடத் தடை செய்யப்பட்டது.
               
       ஜாஃபரின் அடுத்த படமான Crimpson Gold -ம் ஈரானில் தடை செய்யப்பட்டது. பீட்ஸாவை வீட்டுக்கு வீடு எடுத்துச் செல்லும் ஒரு இளைஞன், நகைக் கடை ஒன்றில் திருட முற்பட்டு, அகப்பட்டுக் கொள்கிறான். ஈரானின் சமூக அவலத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியதால், இந்தப் படம் ஈரானில் திரையிடப்படாவிட்டாலும் நாற்பது நாடுகளில் திரையிடப்பட்டு சிகாகோ திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
               
      ஜாஃபரின் அடுத்த படமான ‘Off Side' -க்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு முதலில் யோசித்தார்கள். அதன் திரைக்கதையை சற்று ()மாற்றி அனுமதியை வாங்கினார். ஈரானில் பெண்கள் கால்பந்துப் போட்டிகளைப் பார்க்க அனுமதியில்லை. கால்சட்டைகளோடு ஆண்கள் விளையாடும் போட்டி என்பதால் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ‘Off Side' படத்தில் இந்த விதியை மீறி பெண்கள் கால்பந்துப் போட்டியை பார்க்கச் செல்வதாக அதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல இந்தப் படமும் தடை செய்யப் பட்டது. ஆனால், இந்தப் படத்தின் திருட்டு வி.சி.டி.கள் ரகசியமாக புழக்கத்தில் கிடைத்தன. ஜாஃபர் இதனைக் குறிப்பிட்டுக் கேலியாக, ‘ஈரானில் மிக அதிகம் பேர் பார்த்த திரைப்படம் ‘Off Side' தான்.' என்று கூறியிருந்தார்
               
        ‘Off Side' படத்தின் எதிரொலியாக ஈரானில் நடந்த ஒரு கால்பந்துப் போட்டியில் அதிரடியாக நுழைந்த இளம்பெண்கள் அமைப்பு ஒன்று நாங்கள் இனி ஒருபோதும் ‘Off Side' -ல் (மறுக்கப்பட்ட பகுதியில்) இருக்கமாட்டோம். எனும் பொருள்பட பேனரைக் காண்பித்தபடி போராடினார்கள்.
              
         இந்த படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப இதன் தயாரிப்பு நிறுவனம் முயன்றபோது ஆஸ்கார் விதிகளின் படி பரிந்துரைக்கப்படும் நாட்டில் சில நாட்களாவது திரையிடப்பட்டிருக்க வேண்டுமென்பதால் ஈரான் அரசிடம் ஒரு வாரம் மட்டும் திரையிட அனுமதி கேட்டது. ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. எனவே ஆஸ்காருக்கு அனுப்ப இயலாமல் போயிற்று.
               
       ஜாஃபர் தேச விரோதியாகவும் தேசப் பாதுகாப்பிற்கு எதிராக திரைப்படங்கள் மூலம் ப்ரச்சாரங்கள் செய்வதாகவும் சித்தரிக்கப்பட்டு 2010-ம் ஆண்டு மார்ச் -1-ல் அவரது மனைவி மகள் மற்றொரு இயக்குநர் முகமது ரசூல்ஃப் மற்றும் 15 நண்பர்களோடு கைது செய்யப்பட்டார். ஜாஃபர் மற்றும் முகமது தவிர, ஏனையோர் அடுத்தடுத்த நாட்களில் விடுவிக்கப்பட்டனர். ஜாஃபர் எவின் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். அவரைச் சந்திக்க உறவினர்கள் உட்பட எவரும் அனுமதிக்கப்பட வில்லை.
               
       மே 18-ம் தேதி ஈரான் - ப்ரெஞ்ச் கலாசார அமைப்பின் இயக்குநர், அப்பாஸ் பக்தியாருக்கு ஒரு செய்தி கிடைத்தது. சிறைக்கூடத்தில் ஜாஃபர் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும் அதன் காரணமாக அவர் உண்ணாவிரதம் இருப்பதாகவும் தெரியவந்தது. அந்தச் செய்தியின் விளைவாக உலகமெங்கும் உள்ள திரைத் துறைக் கலைஞர்கள் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க், மார்ட்டின் ஸ்கார்ஸசி, ஃப்ரான்ஸிஸ் கெப்பல்லோ, ராபர்ட் டி நிரோ உட்பட பலரும் ஜாஃபருக்காகக் குரலெழுப்பினர். பலத்த எதிர்ப்பு காரணமாக மே-25-ல் ஜாஃபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். என்றாலும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
               
         டிசம்பர் 20, 2010-ல் ஜாஃபருக்கு ஆறாண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆண்டுகள் அவர் திரைப்படங்கள் இயக்கவோ திரைக்கதை இயக்கவோ பேட்டிகள் தரவோ கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.
               
       ஜாஃபரின் நண்பர் இயக்குநர் முகமது ரசூல்ஃப்-க்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜாஃபர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார். வழக்கு விசாரணைக்கு வரும் தருவாயில் உள்ளது. அம்நெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு ஜாஃபரை விடுவிக்கும்படி மனு செய்துள்ளது. ஃப்ரான்ஸின் முன்னாள் அதிபர் மிட்டரண்ட் உட்பட பல உலகத் தலைவர்கள் அவரை விடுவிக்கும்படிக் கோரியுள்ளனர்.
               
      கேன்ஸ் படவிழாக் குழுவினர் 2010-ம் ஆண்டு கேன்ஸ் பட விழா நடுவராக அவரை அறிவித்து விட்டு, ஈரானிடம் அவரை அனுப்பி வைக்கும்படி கேட்டது. அனுமதி கிடைக்காததால், காலியான இருக்கை ஒன்றை வைத்து ஜாஃபரை கேன்ஸ் அமைப்பு கெளரவித்தது. பிரபல டைம் பத்திரிகை உலகமெங்கும் அதிகார மையத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் போராளிகள் பத்துபேர் பட்டியலில், ஜாஃபருக்கு 3வது இடத்தை அளித்திருந்தது.
               
       வீட்டுக்காவலில் இருந்த சமயம் ஜாஃபர் தன் நண்பரின் சிறிய டிஜிட்டல் கேமரா மூலமும் - போன் மூலமும் தன்னையும் சுற்றியுள்ள சூழலையும் பதிவு செய்து This is not a film என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்தார். அந்தப் படத்தை 2011 கேன்ஸ் படவிழாவில் திரையிட அந்த அமைப்பு விரும்பியது. ஒரு கேக்கின் உள்ளே மறைத்து வைத்து அந்தப் படத்தின் USB Stick பிரதி ஈரானிலிருந்து கடத்தப் பட்டு பின், கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது.
               
      ரஷ்ய மருத்துவர் மற்றும் சிந்தனையாளர் ஷக்காரோவ் பெயரால் 2012-க்கான சுதந்திரச் சிந்தனையாளர் விருது ஜாஃபருக்கும், ஈரானின் பெண் வழக்கறிஞர் நஸ்ரின் ஸொட்டுடே-வுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
              
         சிறகுகள் முடக்கப்பட்ட பறவை என ஜாஃபர் இன்னமும் தன் சுதந்திரச் சிந்தனைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். பர்மியத் தலைவி ஆங் சாங் சூகி போல, நெல்சன் மண்டேலா போல என்றேனும் ஒருநாள் அவர் விடுவிக்கப் படலாம். உலகம் அவரது உன்னதமான படைப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி : 'நிழல்' ஏப்ரல்-மே  2013

                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...