திங்கள், 24 நவம்பர், 2025

கனவில் ததும்பும் நதி – 6

 



கனவில் ததும்பும் நதி
– 6

                                        நெய்வேலி பாரதிக்குமார்

.      ப்ரல் 23ஆம் தேதியை உலகப் புத்தக தினம் என்று ஸ்பெயினில் உள்ள கேடோலோனியாவில் 1923 ஆம் ஆண்டு கூடிய புத்தக விற்பனையாளர்கள் சங்கம்தான் முதன்முதலில் அறிவித்தது. நவீன இலக்கியத்தின் முதல் அடையாளம்  எனக் கருதப்படும்  டான் குயிக்ஸோட் என்கிற நாவல் மூலம் படைப்புலகம் அறிந்த ஸ்பானிஷ் மொழியின் மகத்தான படைப்பாளி செர்வாண்டிஸ் மறைந்தது 1616 ஆம் வருடம் ஏப்ரல் 23 என்பதால் அந்த நாளைத் தேர்வு செய்தார்கள். ஆச்சர்யகரமாக பெருவின் ஆகச்சிறந்த எழுத்தாளர் இன்கா கார்சிலாசோ டி வேகா இறந்ததும் அதே வருடம், அதே தினம்தான். பின்னர் யுனெஸ்கோ உலகப் புத்தக தினமாக அறிவித்ததற்கு ஷேக்ஸ்பியர் மறைந்த நாளும் அதுவே என்பது கூடுதல் காரணமாயிற்று..  ஆனால் உலகால் அதிகம் கவனிக்கப்படாத பிரெஞ்சு பத்திரிகையாளர் ழீன் டொமினிக் பாபி பிறந்ததும் (1952 ஆம் வருடம்) ஏப்ரல் 23 தான்  . அவர் எழுதியது ஒரே ஒரு புத்தகம்தான். ஆனால் அதை அவர் விரல்களால் எழுதவில்லை விழிகளால்... இமைகளின் அசைவுகளால் எழுதினார்.     

               ழீன்டொமினிக்' Elle என்னும் வணிக நோக்கிலான பத்திரிகையின் ஆசிரியர். விளம்பரங்களுக்கான மாடல்களைப் படம்பிடித்து அவர்களைப் பற்றிய தகவல்களை எழுதக்கூடியவர். செலின் என்கிற பெண்ணோடு புரிந்துணர்வு வாழ்க்கை வாழ்ந்தவர். பின்னர் அவரோடு கொண்ட பிணக்குக் காரணமாக தனியாகவே வாழ்ந்தார். ஆனாலும் செலின் மூலம் தான் பெற்ற இரண்டு குழந்தைகளோடு வாரத்தின் இறுதி நாட்களை கவலையேதுமின்றி கொண்டாடிக் கொண்டிருந்தவர்.

               எவரும் எதிர்பாராத வேளையில், திடீரென 1995 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி  அவரது மூளையையும், முதுகெலும்பையும் இணைக்கும் நரம்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கோமா' நிலைக்குத் தள்ளப்படுகிறார். மூன்று வாரம் அதே நிலையிலிருந்து, பின்னர் கண்விழிக்கும் போது தலையிலிருந்து கால் வரை எந்த உறுப்பும் இயங்காமல் போய்விடுகிறது. Locked in Syndrome எனும் முடக்குவாத நோய் காரணமாக இந்த நிலைக்கு ஆளாகிறார். இடது கண் விழியும் இமையும் மட்டும் அசைகின்றன. காதுகள் கேட்கும் சக்தியை இழக்கவில்லை.அவரது மூளை எல்லாவற்றையும் கவனிக்கிறது; உள்வாங்குகிறது. ஆனால் மூளையின் கட்டளைக்கு உறுப்புகள் எதுவும் (இடது கண் விழி மற்றும் இமைகள் தவிர) கீழ்படிவதில்லை. கிட்டத்தட்ட 20 நாட்களில் 27 கிலோ எடை குறைந்து மெல்லிய கம்பி போல கட்டிலில் கிடக்கிறார்.  பிரான்சின் கடற்கரை நகரமான பெரக் சூ மெர்'-ன் அதிநவீன மருத்துவமனையில் அவருக்காக மருத்துவக் குழுவொன்று போராடிக் கொண்டிருக்கிறது.

               பேச்சுப் பயிற்சிக்காக ஸ்பீச் தெரபிஸ்ட்' இருவர் மிகுந்த முயற்சி எடுக்கின்றனர். பேச்சுப் பயிற்சியினால் அவரோடு உரையாட ஒரு வழிமுறையைக் கண்டடைகின்றனர். ழீனி'டம் இயங்கும் ஒருகண்ணையும் அதன் இமைகளின் அசைவுகளை வைத்து அவரிடம் பேசியாக வேண்டுமென்பதால், அவருக்குத் தேவையானவற்றைக் கேள்விகள் வடிவில் கேட்பது; ‘ஆம்' என்பதற்கு ஒரு முறை கண்ணிமைக்கவும், ‘இல்லை' என்பதற்கு இருமுறை கண்ணிமைக்கவும் பயிற்சியளிக்கின்றனர். இது ஓரளவு பலனளிக்கிறது.

               அதற்கடுத்த முயற்சியாக ஆங்கிலத்தில் அதிகம் பயன்படக் கூடிய சொற்களை ஒரு நெகிழிப் பலகையில் பொறித்து ஒவ்வொரு வார்த்தையாக ஒருவர் வாசிப்பது; ழீன் மனதில் உள்ள வார்த்தையின் எழுத்து வரும்போது ஒருமுறை கண் இமைக்குமாறு பழக்குகின்றனர். ஆக, அதுவரை கேட்ட கேள்விக்கு ஆம், இல்லை என்பதற்கு மட்டும் பதில் என்கிற நிலையிலிருந்து சிறுசிறு வார்த்தைகளால் ஆன கேள்விகளைக் கேட்டுப் பதிலடையும் நிலைக்கு முன்னேற்றமடைகிறார். முதலில் வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் பேசும்(!) ழீன்,  அவரது பத்திரிகையில் விமர்சகராக பணியாற்றிய அவரது காதலி பென் சாடோனின் ஆறுதலான அருகாமையினால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கையடைந்து மனதை உறுதியாக்கிக் கொள்கிறார்.

               பேச்சுப் பயிற்சி நிபுணர் மெண்ட்லில்-ன் சலிப்பற்ற உரையாடலில் உற்சாகமான ழீன், தான் ஒரு புத்தகம் எழுத விரும்புவதாகவும், அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்கிறார். மெண்ட்லில் அதற்குச் சம்மதித்து, ஏற்கனவே ழீனுடன் ஒரு புத்தகத்துக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பதிப்பாளரிடம் பேசி அவர்களையும் சம்மதிக்கச் செய்கிறார். புத்தகம் எழுதும் பணி துவங்குகிறது. மெண்ட்லில் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து ழீனின் இமையசைவை வைத்து வார்த்தைகளைக் கோர்த்து வரிகளாக பத்தியாக, பக்கமாக புத்தகம் உருவாகிறது. கிட்டதட்ட இரண்டு இலட்சம் எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அதிகபட்சம் ஐந்து நிமிடம் என்கிற காலக்கணக்கில் மெண்ட்லில் மற்றும் ழீனின் நண்பர்கள் ஆகியோரின் பொறுமையான ஒத்துழைப்பினால் ‘The Diving Bell and the Butterfly' என்ற தலைப்பில் அந்த நூல் 1997 ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி வெளியானது. Diving bell என்பது உருளும் விழிகளையும் Butterfly என்பது படபடக்கும் இமைகளையும் குறிப்பதாக ழீன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.  உலகப் புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று  பிறந்த ழீன் டொமினிக்கின் இந்த நூல்தான்  எத்தனை மகத்தானது?

                              ******** ******* **** *********

ண்மையில் நண்பர் பல்லவிகுமார் வழியாக அறிமுகமான பெரம்பலூர் மோகன் தன்னுடைய முதல் நாவலான குருதிப்பாடு அறிமுக விழாவில் அந்த நூல் குறித்து பேசமுடியுமா என்று கேட்டு நான் சம்மதித்தப் பிறகு எனக்கு அந்த நூலை அனுப்பி வைத்தார். மோகனை நான் தமிழ்ப்பல்லவி இதழின் குறுநாவல் போட்டி பரிசளிப்பு விழாவில் ஒருமுறை சந்தித்தேன். அது ஒரு கண நேர சந்திப்புதான். கூடுதலாக ஒரு பத்து நிமிடம் கூட உரையாடவில்லை. அவ்வளவுதான். அந்த குறுகிய கால சந்திப்பு அவர் பற்றிய எந்த கணிப்பையும் உருவாக்கவில்லை. ஆகவே அந்த நாவல் குறித்த எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன்.

      அந்த நாவலுக்கு எழுத்தாளர் க. மூர்த்தி ஒரு அடர்த்தியான முன்னுரையை எழுதி இருந்தார். அந்த முன்னுரை வாசிகின்ற எவரையும் ஒரு கணம் நிமிர்ந்து அமர வைத்துவிடும் வலிமையோடு இருந்தது. பல சமயம் ஒரு நூலின் அணிந்துரை அந்த நூலை வாசிக்க ஒரு மனத்தடையை உருவாக்கிவிடும் அல்லது ஒரு திசைத் திருப்பலை நிகழ்த்திவிடும். மாறாக அந்த அணிந்துரை ஒரு வித்தியாசமான வாசிப்புக்கு தயார்ப்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டிருந்தது. மூர்த்தி அவர்களின் முதிர்ச்சியான எழுத்து மொழி ஒரு வகையில் மோகனின் நாவலுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம். அது மோகனுக்கு கூடுதல் அழுத்தம்தான். ஆனால் மோகனின் எழுத்து, நாவலின் மையம், அவர் அதனை கையாண்டவிதம் ஆகியன அனாயாசமாக அந்த அழுத்தத்தைத் தகர்த்து நாவலை மனதில் இருத்திவிட்டது.

      தெய்வானைக்கு வரிசையாக மூன்று பிள்ளைகள் பெண்குழந்தைகளாக பிறந்துவிட நான்காவதாக கர்ப்பமான தெய்வானை ஆண் பிள்ளை வேண்டும் என்று எல்லா சாமிகளுக்கும் வேண்டிக்கொள்கிறாள்.. ஆனால் நான்காவதும் பெண்குழந்தைதான் என்றதும் விரக்தியில் இனி பெண் குழந்தையே வேண்டாம் என்னும் விரக்தியில் நான்காவது பிள்ளைக்கு “போதும் பொண்ணு” என்று பெயர் வைக்கிறாள். ஆனால் இயற்கையின் விதி எல்லாவற்றையும் விசித்திரமாக புரட்டிப் போடும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக, உரிய காலத்தில் பூப்பெய்தாமல் பெண்ணாக பிறரால் உணரப்படாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இப்படியான பெண்களின் மன வலிகளை, சமூகத்தின் புறக்கணிப்பை. அவமானங்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் நாவலின் மையம்,

      பெரம்பலூருக்கு அருகில் உள்ள வெங்கலம் கிராமத்து மக்களின் வாழ்வியல் சூழல், அந்த மனித மனங்களின் இயல்புகள் ஆகியவற்றுடன் போதும் பொண்ணுவின் வாழ்க்கைப்பாடுகளை அவர்களின் மொழியில் வலிமிகு வார்த்தைகளால் பதிவு செய்திருக்கிறார் மோகன்.

      உலகம் முழுக்கு அதிகம் விரயமாவது குருதிதான். விபத்துகளில், வன்முறைக் களங்களில், யுத்தங்களில், மருத்துவ மனைகளில் அதிகம் இழக்கப்படுவது இரத்தம்தான். ஆனால் அந்த குருதிக்கான எதிர்பார்ப்புடன் வாழ்வது எத்தனை முரண்துயர்? அப்படியான பெண்களின் மனதுக்குள் ஊடாடி அவர்களது வலியை உணர்ந்தது போல மோகன் இந்த நாவலில் எழுதி இருக்கிறார். அவரது எழுத்து மொழி கிராமத்து மக்களுடன் உரையாடுவது போல மிக யதார்த்தமானது. உவமைகளுடன் உருளும் ஒரு நூத்துக்கிழவியின் நாவின் வழியே கேட்பது போல அத்தனை நெருக்கமானது.

      பொம்பளையாடி அவ வாழற வூட்டுல மறநாயைக் கட்டுன மாதிரி லோலோன்னுகிட்டு என்கிற ஒரு வரி எழுதி இருப்பார். வீட்டுக்குள் உலாத்தும் எத்தனையோ விலங்குகள் இருக்கின்றன. பூனை, எலி, பெருச்சாளி.. இப்படி பல ஆனால் மரநாயை ஏன் உதாரணமாகச் சொல்கிறார்? எல்லா விலங்களும் தனக்கு எவ்வளவு பசியோ அது வரைதான் இரை தேடும் பசி அடங்கிவிட்டால் அத்தோடு அவை அமைதிகொள்ளும். ஆனால் மரநாய்க்கு அந்த குணம் இல்லை. இரையைப் பார்க்கும்போதெல்லாம் தின்றுவிட அலையும். வயிற்றில் இடமில்லை என்றால் இரத்தத்தை குடித்துவிடலாமா என்று திரியும். கிராமத்து மக்களின் சொற்களுக்குப் பின்னே அவர்களின் அனுபவ முதிர்ச்சி இருக்கும். இந்த நாவல் நெடுக மோகன் தன் எழுத்தில் பதிந்து இருப்பார். உவமைக் கவிஞர் என்று சுரதாவைச் சொல்லுவோம். உவமை எழுத்தாளர் என்று மோகனை உறுதியாகச் சொல்லலாம். மசையாட்டுல மணிகட்டுன மாதிரி, இலுப்ப மரப் பொந்துல சிக்குன கொராக்குட்டி மாதிரி என்று போகிற போக்கில் மசாலா தூவுவது மாதிரி உப்பு உறைப்பாக அவரது சுவையான உவமைகள்.

      வெங்கலத்தின் தொன்மம் செல்லியம்மா தெய்வம் அது கோபித்துக்கொண்டு வந்து வெங்கலம் கிராமம் ஏரிக்கரையில் அமர்ந்திருப்பதாக ஒரு வரி எழுதி இருப்பார். அவ்வளவுதான் வேறு விவரங்கள் அங்கே இருக்காது. எங்கிருந்து கோபித்துக்கொண்டு வந்தாள் ஏன் கோபித்துக்கொண்டு வந்தாள் என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. தேடிப் பார்த்தால் ஒரு சுவாரசியமான கதை கிடைத்தது.

      மதுரையை எரித்தபிறகு கண்ணகி தன கோபம் தணிந்து பெரம்பலூர் அருகே உள்ள சிறுகனூரில் மதுரகாளியாக வந்து நிலைகொண்டு விட்டாளாம். பக்தர்களெல்லாம் மதுரகாளியின் வசமாகிவிட்டனராம். தனக்கென்று ஒரு வழிபாடு, ஆலயம் வேண்டாமா என்று கோபித்துக்கொண்டு வெங்கலம் கிராமத்து ஏரிக்கரையில் அமர்ந்துவிட்டாலாம் கண்ணகியின் தங்கை செல்லியம்மா. செவி வழி செய்திதான். ஆனாலும் மோகனின் வரி என்னை அங்கு கொண்டுபோய் சேர்த்தது. ஒரு நல்ல படைப்பு இப்படித்தான் வாசகனை மரநாய் போல அலையவிட்டுவிடும்.

                                          (இன்னும் ததும்பும்)   

 

கனவில் ததும்பும் நதி 5

 

கனவில் ததும்பும் நதி 5

            நெய்வேலி பாரதிக்குமார்

லக வரலாற்றின் கால வரையறை அட்டவணையை இப்படி வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். பழங்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம், தாமிர காலம், இரும்பு காலம். தொல்லியல் ஆய்வுகளின் தரவுகள் வழியே மனித சமூகத்தின் பயன்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இப்படி பகுக்கப்பட்டிருந்தது. அதாவது உலோக வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது செம்பு. அதன் பிறகுதான் இரும்பு என்கிற கருதுகோள் தொடர்ந்து நம்பப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக இரும்பைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்றி பெஸ்மார்  (Henry Bessmer, Engaland – 1856) என்று மனப்பாடம் செய்து கொண்டிருந்தோம். ஆனால் இரும்பின் பயன்பாடு கி.மு இரண்டாயிரம் ஆண்டுகளிலேயே வடஇந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தொல்லியல் சான்றுகள் கிடைத்தன. ஆனால் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளிலேயே இருந்ததற்கான சான்றுகளை கண்டறிந்துள்ளது. தமிழக அரசு தொல்லியல் துறை இவ்வருட தொடக்கத்தில் வெளியிட்ட சிறுநூல் ஒன்று தமிழகத்தின் இரும்புப் பயன்பாட்டைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

திரு ராஜன் மற்றும் திரு சிவானந்தம் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கும் இரும்பின் தொன்மை என்கிற இந்த நூல் இந்த ஆய்வுகள் பற்றி விரிவாக கூறுவதோடு, உலக தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தக் கண்டுபிடிப்புகள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது, எத்தனைச் சிறப்பு வாய்ந்தது என்பது பற்றி வெளியிட்ட கருத்துகளையும் தொகுத்துள்ளது.    

பாரிசில் உள்ள பிரெஞ்சு தேச, அறிவியல் ஆராய்ச்சி மைய முன்னாள் இணைப் பேராசிரியர் ஒஸ்மாண்ட் போப்பராச்சி தமிழகத் தொல்லியல் துறையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் அமெரிக்காவின் பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மத்திய ஆசியா மற்றும் தெற்காசிய தொல்லியல் துறையிலும் பணியாற்றி இருக்கிறார். அவரது பாராட்டு மிக முக்கியமானது 

“உலகின் மிகவும் நம்பகமாான ஆய்வகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பீட்டா அனாலிட்டிக் ஆய்வகத்தில் High Probability Density Range(HPD) முறையின் அடிப்படையில் கதிரியக்கக் காால க்கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரையறுக்கப்பட்ட கால வேறுபாடுகளைத் தெளிவாக வழங்குகிறது. புத்தகத்தில் முன்மொழியப்பட்ட புதிய காலக்கணக்கீடுகள் பழைய முடிவுகளை முழுமையாக மாற்றுகிறது.” என்று போப்பராச்சி கூறி உள்ளார்.

தமிழகத்தின் தொன்மை குறித்தா ஆய்வு முடிவுகள் வெளிவரும்போதெல்லாம் திண்ணை வெட்டி விமர்சகர்கள் ஹுக்கும் இதை எல்லாம் நான் நம்பமாட்டேன் இதை உலக ஆராய்ச்சியாளர்கள் சொல்லலை. இல்லை என்றால் வட இந்தியாவில் இதைவிட பழமையான தோசைக்கல் ஒண்ணு இருக்கு என்று உருட்டியவர்கள் இப்பொழுது நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு மவுனமாக இருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த நூலில் இந்தியாவின் பல தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்துகளும் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தெற்காசிய தொல்லியல் துறையின் தலைமைப் பேராசிரியர் திலீப்குமார் சக்ரவர்த்தி, இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ராகேஷ் திவாரி, பேராசிரியர் பத்தய்யா, பேராசிரியர் சாந்தா சீனிவாசன், முனைவர் சி.ஜெ. செரியன், முனைவர் அசோக்குமார் கனுங்கோ ஆகியோரும் இந்த ஆய்வுமுடிவுகளை வரவேற்று ஆதரித்துள்ளனர்.

இதில் ராகேஷ் திவாரி ஏற்கனவே கீழடியிலும் கொற்கையிலும் கிடைத்த கறுப்புநிற பானை ஓடுகளை கவனமாக ஆராய்ந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர என் திவாரியுடன் இணைந்து தெரிவித்த அறிக்கையில்  கங்கைச் சமவெளிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்ததை உறுதிசெய்வதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழியில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டு வெண்கல தகரப் பொருட்கள் இருந்தன. மேலும் சாஸ்தாபுரம், உலைப்பட்டி, அடுக்கம், திருமலாபுரம், ஆரோவில் ஆகிய இடங்களில் கிடைத்த ஈமத்தாழிகளிலும் இவ்வாறு தகர வெண்கலப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தன. ஆனால் தற்சமயம் சிவகளையில் கிடைத்த சான்றுகள் 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய கால இரும்பு என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே  சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்தையும் முதலமைச்சர் என்கிற அடிப்படையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்/ ஒரு முதலமைச்சர் தெரிவிக்கிறார் எனில் அதை மேம்போக்கான ஒன்றாக கருதிவிட முடியாது உரிய ஆய்வாளர்களின் கருத்துகளோடு உறுதி செய்து இரும்பின் தொன்மை – தமிழ்நாட்டின் அண்மைக்கால கதிரியக்க காலக்கனக்கீடுகள் என்கிற நூலை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியிட்டுள்ளது. உண்மையில் இந்த ஆய்வு முடிவுகளை இந்தியாவே கொண்டாடி இருக்கவேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் தொன்மை என்று சொல்வதில் உள்ள கசப்புணர்வு தமிழர் அல்லாத அத்தனை மனிதர்களுக்கும் நெஞ்சு வரை இருக்கிறது என்பதையே ஒவ்வொரு கட்டத்திலும் வெறுப்பாளர்களின் கருத்துகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவின் தொன்மை எத்தனை பழமையானது என்று சொன்னால் புளகாங்கிதப்படுவதும் அதுவே தமிழகத்தின் தொன்மையைப் பற்றிப் பேசினால் குடல் வரை எரிவதும் விசித்திரமான நோய் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. உண்மை என்பது அணையா நெருப்பு அதை காகிதப் பொட்டலத்தில் கட்டி மறைத்துவிட முடியாது.

சிறார் இலக்கிய நூல்கள் வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவர்களை திசைத்திருப்பும் பல்வேறு கண்ணிகள் கைக்கெட்டிய தூரத்தில் கிடைக்கின்ற இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில் சிறுவர்கள் புத்தகங்களை நோக்கி வருவார்களா என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.

எல்லா காலக்கட்டத்திலும் வாசிக்கின்ற கூட்டம் ஒன்று அளவில் சிறியதாயினும் நிச்சயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் என் உறவினர் குடும்பத்து பெண் ஒருவர் இளம் வயது முதல் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கிறவராக இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன். அங்கு வாசிக்க அதிகபட்ச நூல்களைத் தேடிப் போகவேண்டும் என்றால் சிங்கப்பூர் நூலகத்தைத்தான் அணுகவேண்டும். என்றாலும் தனது தீராத வாசிப்பு தாகத்தால் அவர் தேடித்தேடி வாசிக்கிறார். இப்படி சிலரை அடையாளம் காட்டமுடியும்.

வாசிப்பது என்பது குறுகிய கால கேளிக்கை அல்ல. இன்றைக்கு காணக் கிடைக்கும் காணொளித்துளிகள் அற்ப ஆயுளில் மடிபவை அதிகபட்சம் ஒரு நாளைக்கு மேல் அதன் ஆயுள் இருப்பதில்லை. ஒரு சில தாண்டி வாழலாம் அவற்றின் உள்ளடக்கம் ஒருவேளை பயனுள்ளதாக இருக்கும். ஆனால் புத்தகங்களின் வாசிப்பாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கலாம். ஆனால் எல்லா காலகட்டத்திலும் கணிசமான வாசகர்கள் புத்தகங்களைத் தேடிக்கொண்டு இருப்பார்கள். உண்மையில் பாரப்ட்சம்ற அசல் வாசகர்கள் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஐம்பது அறுபது ஆண்டகளுக்கு பின்னர்தான் கிடைப்பார்கள். ஆகவே நிகழ்கால பயன்கருதி புத்தகங்கள் வெளியாவதை குறைக்கவோ தடுக்கவோ கூடாது.

சிறார் இலக்கியத்தில் தொடர்ச்சியான செயல்பாடுகளை தீவிரமாக செலுத்திவரும் உமையவன் அவர்கள் கவனிக்கத்தக்க அளவு தன் படைப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவரது கிணற்று பூதம் என்கிற சிறார் கதைகளின் தொகுப்பை வாசித்தேன். அவரிடம் என்னைக்க் கவர்ந்த இரண்டு விஷயங்களை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். அவரது எழுத்துநடை என்பது சிறுவர்களிடம் நேரிடையாக உரையாடுவது போல எளிமையாக அதே சமயம் வலிமையுடன் ஒரு பள்ளிச் சிநேகிதன் உரையாடுவது போல சுவாரசியமாக இருக்கிறது. மற்றொன்று சிறார்கதைகள்தானே, எவ்வளவுக்கு எவ்வளவு மாயா ஜால விஷயங்களை சேர்க்கிறோமோ அவ்வளவுக்கு சுவாரசியம் என்று நினைக்காமல். பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கண்டித்து எழுதுகிறார். சிறுவர்கள் மத்தியில் இம்மாதிரியான அறிவு அறத்துடன் செயல்பட வேண்டியது எழுத்தாளனின் நேர்மையான கடமை.

முன்னுரையையே சிறுவர்களை நோக்கி பேசுவது போல எழுதி இருக்கிறார். நீங்க இந்தக்கதைகளை எல்லாம் படிச்சிட்டு உங்க நண்பர்கள் கிட்ட சொல்லுங்க. நீங்க கதை சொல்லும்போது எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா என்று தன் படைப்பை நோக்கி இழுக்கிறார்.

தலைப்புக் கதையான கிணற்று பூதம் சிறுகதையில் பணத்துக்காக கிணற்றில் இருந்து நீரை ரகசியமாகத் திருடி விற்பவர்கள், கிணற்றில் பூதம் இருப்பதாக புரளியைக் கிளப்பிவிட்டு, கிணற்றுப் பக்கம் ஊர்மக்கள் வர விடாதபடி செய்துவிடுகின்றனர். சிறுவன் பாலு இந்த விஷயத்தை எதேச்சையாகப் பார்த்துவிட, தண்ணீர்த் திருடர்களை அம்பலப்படுத்த அவர்கள் அறியாமல் மொபைலில் வீடியோ எடுக்கிறான். ஊர்மக்கள் மத்தியில் அவர்களை கையும் களவுமாக பிடிக்க ஒரு திட்டத்தையும் வகுக்கிறான். இறுதியில் அவன் நினைத்தபடியே நடக்கிறது. அதோடு கிணற்றில் பூதம் இருப்பது போல் ஒரு செயற்கை ஒலியை அவர்கள் எப்படி ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் கதையின் இறுதியில் விளக்குகிறார், இதுதான் இன்றையத் தலைமுறைக்குத் தேவையான ஒன்று. நான் மாயக்கை கிணறு என்று சிறுகதை எழுதி இருக்கிறேன். பெரியவர்களுக்கான கதைதான் அதன் உள்ளடக்கமும் மூடநம்பிக்கைக்கு எதிரானதுதான்.

இரண்டாவது கதையான கறுப்பி என்னும் எருமை என்கிற சிறுகதை குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தத்தை போக்கும் முயற்சியில் எழுதப்பட்டது. கறுப்பு நிறம் குறித்து வெவ்வேறு கோணத்தில் எல்லோரும் சமாதானம் சொன்னாலும் அந்தக்குறை மனதில் கொதித்துக் கொண்டே இருக்கும். அதுவும் உடல் நிறத்தைக் கேலிசெய்யும் வகையில் யாராவது பெயரிட்டு அழைத்தால் இன்னும் மனம் ரணமாகும்.

கருப்பு நிறத்தில் பிறந்த ஒரு எருமை தன் கறுப்பு நிறம் காரணமாக பகடி செய்யப்படுவதை சகிக்காமல் வனதேவதையை அணுகி தன்னை சிவப்பாக மாற்றிக்கொள்கிறது. அப்படி சிவப்பாக மாறிய காரணத்தால் இறைச்சிக்கு எடுத்துச் செல்பவர்கள் தங்களின் முதல் தேர்வாக அந்த எருமையை வண்டியில் ஏற்றுகின்றனர். வெட்டப்படுவதற்குத்தான் தான் ஏற்ரப்படுகிறோம் என்பதை தாமதமாக உணர்ந்த எருமை மறுபடியும் வனதேவதையை சந்தித்து மீண்டும் கறுப்பாக மாறிவிடுகிறது. இச்சிறுகதை உண்மையில் சிறுவர்களால் வாசிக்கப்படவேண்டும். உருவகேலி என்பது எந்த அளவுக்கு மனதைத் தைக்கும் என்பது அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிந்த வலி. இச்சிறுகதையை வாசிக்கும் சிறார்கள் நிச்சயம் அந்த வலியை அறிவார்கள். அதேசமயம் அதை ஒரு குறையாக நினைத்து வருந்தவேண்டியது இல்லை என்று உணர்வார்கள்.

இப்படி உமையவன் கதைகள் சிறுவர்களுக்கான அறிவுலகத்தைத் திறக்கின்றன. திரைப்படங்களும், கார்ட்டூன் படங்களும் திரும்பத்திரும்ப அறிவுக்குப் புறம்பான விஷயங்களையே முன்னிறுத்துகின்றன. இச்சூழலில் உமையவனின் கதைகள் சிறுவர்கள் உள்ளத்தில் நிச்சயம் சிறு வெளிச்சத்தைப் பாய்ச்சும்.         

கனவில் ததும்பும் நதி – 4

 



கனவில் ததும்பும் நதி
– 4

                                          -நெய்வேலி பாரதிக்குமார் 

அறிவார்ந்தோர் கரங்களில் மொழிகளின் தலையெழுத்து

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வடக்கு அந்தமானில் வசித்து வந்த 85வயது மூதாட்டி (Boa Sr) போவாசர் மரணமடைந்த போது பத்திரிகைகளின் செய்தி குறிப்புகளில் அவரது பெயர் இடம் பெற்றது. அவர் அப்படி என்ன சாதனை செய்தார்? உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான அகா போ என்கிற மொழியை பேசி வந்த கடைசிப் பெண்மணி அவர்தான். அவர் மரணமடைந்த அன்று அவர் பேசி வந்த அகா போ மொழியும் அழிந்தது. அந்தமானில் பெரும்பான்மை மக்கள் அந்தமானிய இந்தி என்னும் மொழியைத்தான் பேசி வருகின்றனர்.. அந்த மொழிதான் அந்தமானில் பிற மனிதர்களுடன் உரையாட அவருக்கும் துணையாக இருந்தது. 1858 ஆண்டு வாக்கில் 200க்கும் மேற்பட்டோர் பேசி வந்த அகா போ மொழி பேசுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 1931 ஆம் அண்டு வாக்கில் வெறும் ஆறே ஆறு பேர் பேசுகின்ற மொழியாக அருகியது.  

கல்வி கற்கவும், பொருள்  ஈட்டவும்,  குழுக்களுக்கு இடையே நடந்த  சண்டையின் காரணமாக நிகழ்ந்த  இடப்பெயற்சியும் ,அம்மக்கள் பிற மொழிகள் பேசுவதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், அகா போ மொழி அழிவதற்கு முதன்மையானக் காரணம் அதற்கு எழுத்து வடிவம் இல்லை என்பதுதான். தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய மொழியியல் பேராசிரியர் அன்வித்தா அப்பி என்பவர் போவாசர் உடன் தங்கி அவரது குரலில் அவரது மொழியை பேச வைத்தும் பாட வைத்தும் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவுகள்தான் அகா போ மொழி இருந்ததற்கான சாட்சியமாக இருக்கப் போகிறது. பதமஸ்ரீ விருது பெற்ற அன்வித்தா அப்பி அழிந்து வரும் பழங்குடியினரின் மொழிகளைப் பற்றி ஆய்வு செய்து அவற்றைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் நீலகிரி மலைத்தொடர் பகுதிகளில் வசிக்கும் தோடர்கள் பேசிவரும் ஆல்வாஷ் மொழியும் கூட அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. தற்சமயம் 1500 பேர் மட்டும் பேசிவரும் ஆல்வாஷ் மொழிக்கும் எழுத்து வடிவம் இல்லை. தனது தந்தையார் காலத்திலேயே பஞ்சாப்பில் இருந்து நீலகிரி மலைத்தொடருக்கு பணிநிமித்தம் வந்து தங்கி இருக்கும் பல் மருத்துவர் தருண் சோப்ரா தோடர்களின் பண்பாடு, கலாச்சாரம், ஆல்வாஷ் மொழி ஆகியவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்.

எழுத்து வடிவம் இல்லாத காரணத்தினால் அழிந்து கொண்டிருக்கும் மொழிகள் பற்றிய கவலையில் நாம் இருக்கும் அதே சமயம் எழுத்து வடிவம் உள்ள மொழிகளின் நிலை இன்றைக்கு என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். மகத்தான பேரிலக்கியங்கள், இலக்கண வலிமை கொண்ட தமிழ் மொழி எல்லா காலத்திலும் நிகழ்ந்த சூறாவளிகளையும், சுனாமிகளையும் தாங்கி தன்னைத் தானே தகவமைத்துக்கொண்டு இருக்கிறது.

மூல மொழியை ஆங்கில எழுத்துக்களால் எழுதும் வழக்கம் அலைபேசிகளின் தொடக்கக் காலத்தில் தொற்றி இன்று முற்றிப்போய் ஒவ்வொரு மொழியையும் அரித்துத் தின்னத் தொடங்குகிற அபாயத்தை கண்கூடாகக் காண்கிறோம். தமிழ் என்று இல்லை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளிலும் இதே அவல நிலை நிலவுவதை ஊடகங்களில் பதியப்படும் பின்னூட்டங்கள் வழியே அறியும் பொழுது அதிர்ச்சி ஏற்படுகிறது முதலில் திரையிசைப் பாடல்களை இப்படி ஆங்கில எழுத்துகளால் குறிப்பிட்டு காணொளிகளாக பதிவிட்டவர்கள் இப்பொழுது தொலைக்காட்சித் தொடர்களில் வசனங்களை இவ்வாறான முறையில் கேட்கிறார்கள் என்று கேள்விப்படும் பொழுது  பேரதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்கிற தரிசன வரிகளை மறந்து  தமிழ் எண்களை பயன்படுத்தாதன் காரணமாக, தமிழ் எண்களை வழக்கத்தில் இருந்து இழந்தோம் இப்பொழுது எழுத்துகளையும்  இழப்பது மொழியை முற்றிலும் இழப்பதற்கு சமம். எல்லா மொழியிலும் எல்லா இலக்கியங்களையும் படைத்துவிட முடியாது அதற்கான சொல்வளம் தேவை தமிழின் சொல்வளத்துக்கு நாம் பெற்றிருக்கும் காப்பியங்களும், எண்ணற்ற மகத்தான பேரிலக்கியங்களும் உதாரணம்.

அறிவியல் கலைச்சொல்லாக்கத்தில் மற்ற மொழிகளை எல்லாம் தாண்டி தமிழ் முன் நிற்பதற்குக் காரணம் தமிழின் சொல்வளம்தான் முதன்மையானக் காரணம். அதற்கு அடிப்படை தமிழின் வளமையான எழுத்துகளின் எண்ணிக்கை.. எழுத்தின் பயன்பாடு குறையும் போது ஒரு மொழியின் உயிர்நாடியான இலக்கியங்களின், ஆகச்சிறந்த படைப்புகளின் எண்ணிக்கையும் குறையும். கற்பனைத்திறனும் குறையும். எந்த அளவுக்கு கற்பனைத்திறனை மேம்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு படைக்கும் திறன் பெருகும் அறிவியல் துறையாக இருந்தாலும், அறிவு சார்ந்த எந்தத் துறையாக இருந்தாலும் படைப்பாற்றலுக்கு கற்பனைப் பயிற்சியே அடிப்படை. இரவல்மொழிகள் வழியாக கற்றலும், கற்பனை செய்தலும் புதியன நோக்கி செலுத்தாது.

எழுத்து அழிவது மொழியை மட்டுமல்ல , அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், அறிவு சார்ந்த திறன் ஆகியவற்றையும் சேர்த்தே அழிக்கும். ஆண்டுதோறும் செப்டெம்பர் 8 ஆம் தேதியை உலக எழுத்தறிவு தினமாக அனுசரிக்கிறார்கள். கல்லாதவர்கள் கல்வி கற்பது எத்தனை இன்றியமையாததோ  அத்தனைக்கு  முதன்மையானது கல்வி  கற்றவர்கள் அவரவர் தாய்மொழி எழுத்துகளையே எல்லா வகையிலும், எல்லா காலங்களிலும் பயன்படுத்துவது. உலக எழுத்தறிவு தின கவன ஈர்ப்பை படிக்காதவர்களுக்கு செலுத்துவதைவிட கல்வி அறிவு பெற்ற அறிவார்ந்தவர்களை நோக்கியே திருப்ப வேண்டும்.. அவர்கள்தான் இணையத்தில் தாய்மொழியை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அவர்களிடம் அவரவர் மொழியை அவரவர் தாய்மொழியில் எழுதும்படி அறிவுறுத்த வேண்டும்.

                                             ******** ******* **** *********

டைப்பாளிகள் எப்பொழுதுமே காலத்தின் பிரதிநிதிகள். நிகழ்காலத்தில் அனுபவிக்கும் பெருந்துயரின் ஒவ்வொரு துளியையும் அவர்கள் மட்டுமே தொடர்ந்து தங்கள் படைப்புகளில் பதிவு செய்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் எரிகற்கள் பற்றி ஆய்வு செய்த அறிவியியலாளர் ஒருவர் வெவ்வேறு காலகட்டங்களில் பூமியை நோக்கி விழுந்த எரிகற்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தார். வால்ட் விட்மன் என்கிற அமெரிக்க கவிஞர் எழுதிய எரிகற்களின் ஊர்வலம் என்கிற கவிதையை தற்செயலாக வாசித்தார். அந்தக் கவிதை எரிகல் விழுவது பற்றி மிக விரிவாக துல்லியமாக வர்ணித்திருந்தது. வால்ட்விட்மன் நிச்சயம் எரிகல் விழுவதைப் பார்த்திருக்க வேண்டும் என்பதையும். அந்தக் கவிதை வெளியான வருடம் 1860  என்பதையும்  உறுதிசெய்தார். அது அவரது ஆய்வுக்குப் பெரிதும் உதவியதாக தகவல் ஒன்று உண்டு.

தீ நுண்மி காலம் (கொரானா) என்பது எல்லோரையும் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக பூட்டி வைத்தது. படைப்பாளிகளுக்கு தனிமைதானே உற்ற துணை. ஆகவே பல படைப்பாளிகள் தங்களின் இலட்சியப் படைப்புகளை அந்தக் காலகட்டத்தில் எழுதிக் குவித்தனர். ஜெயமோகன் தினம் ஒரு கதை என நூறு நாட்களுக்கு நுறு கதைகள் எழுதி தனது தளத்தில் வெளியிட்டார். கதைசொல்லி இரவிச்சந்திரன் அரவிந்தன் உயிரச்சம் என்னும் தலைப்பில் தீ நுண்மி கால சிறுகதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தின் மனஉளைச்சல்கள், வாழ்வியல் போராட்டங்களை இரா. பூபாலன் தீ நுண்மிகளின் காலம் என்கிற தலைப்பில் கவிதைகளாக வடித்திருக்கிறார். பூபாலனின் கவிதை உலகம் மிக நுட்பமானது. வெவ்வேறு தளங்களுக்குப் பாயும் கூர்மை கொண்டது. அவரது வெவ்வேறு கவிதைத் தொகுப்புகள் அவரது வெவ்வேறு சமூகப் பார்வைகளை அளிக்கும் கவிதைகள் அடங்கியது. அவை பற்றி பலரும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் நான் இந்தக் கவிதைத் தொகுப்பை முக்கியமாக கருதும் காரணம் சில நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் யுத்தம், பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் மூலமாக பேரழிவுகளைச் சந்தித்து இருக்கிறார்கள். அப்படியான பேரிடர் காலங்களை இலக்கியங்கள் ஓரளவுக்கு பதிவு செய்திருக்கின்றன. நம் சம காலத்தில் நாம் சந்தித்த பேரிடர் தீ நுண்மி காலம்தான்.

பொதுவாக இம்மாதிரி காலங்களில் பதிவாகும் படைப்புகள் பெரும் துயர காவியங்களாக அல்லது அவநம்பிக்கையின் வெளிப்பாடுகளாக இருக்கும். ஆனால் பூபாலனின் இந்தத் தொகுப்பில் பல நேர்மறைக் கவிதைகளை வாசிக்க முடிந்தது.

தீ நுண்மி காலத்தில் பரணில் இருந்து தூசித் தட்டி எடுக்கப்பட்ட தாயக் கட்டைகளைப் பற்றி ஒரு கவிதை பேசுகிறது. அதில் கிராமங்களின் பச்சை நினைவுகளுக்குத் திரும்பிவிட்ட மகிழ்வைக் சொல்கிறது. அதிலும் அந்தக் கவிதையில் அதுநாள் வரை தனிமையில் அடைபட்டிருந்த அப்பத்தா தாயம் விளையாட்டில் ராணியாகிவிட்டார் என்று சொல்வது மிக அற்புதம்.

நான் பணிபுரியும் சுரங்கப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பது விடுமுறை தினம் இல்லை. மின்சாரத்துக்கு எது விடுமுறை? எல்லா நாட்களும் வேலை நாட்கள்தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கிழமை வார விடுமுறையாக வரும். எனக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக அமைந்ததே இல்லை. பத்திரிகை வைப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைதான் வைத்திருக்கிறோம் அதானே எல்லோருக்கும் வசதி என்பார்கள். ஆனால் எனக்கு அது வாய்த்ததே இல்லை. பூபாலனுக்கும் அந்தத் துயர் இருந்திருக்கும் போல.. கொரானா காலத்தில் அவருக்கு கிடைத்த ஞாயிறு பற்றி அழகாக எழுதி இருக்கிறார்.

எப்பொழுதும் இல்லாத

ஒரு ஞாயிற்றுக்கிழமை

இப்போது என்னிடம் இருக்கிறது

அதை நான் குளிப்பாட்டுகிறேன்

அழகூட்டுகிறேன் அதனோடு உரையாடுகிறேன்  என போகிறது அக்கவிதை.

 

இன்னொரு கவிதை மனம் நெகிழ வைப்பது. ஆனால் நேர்மறையானது. கொரானா காலத்தில் எல்லோருக்கும் சம்பள இழப்பு இருந்திருக்கும். அந்ததுயர் எதிர்பாராத சிக்கல்கள் கொண்டது

சம்பளம் இந்த மாதமும்

பாதிதான் என்று குறுஞ்செய்தி

வந்திருக்கிறது

நெகிழிப்புட்டியில்

நீர் நிரப்பி நட்டு வைத்த

பூச்செடி பூத்திருக்கிறது

மழையும் தூறத் தொடங்கி இருக்கிறது

என மகிழ்ச்சிக் கூச்சலிட்டு

வாசலுக்கு அழைக்கிறாள் மகள்....

எல்லா வாசல்களும் அடைபடுவதில்லை........  

என்று முடியும் அந்தக் கவிதை நவீன இலக்கியவாதிகளிடம் அரிதாக காணப்படும் நேர்மறைப் பார்வை கொண்டது. இம்மாதிரியான கவிதைகள் வாசிப்பவர்களை நம்பிக்கையின் சிறு இழையில் உயிர்ப்பிக்கச் செய்கிறது.

                                                (இன்னும் ததும்பும்)  

   

 

 

கனவில் ததும்பும் நதி- 3

 

கனவில் ததும்பும் நதி- 3

                  -நெய்வேலி பாரதிக்குமார்

ந்த ஆண்டு தொடக்கத்தில் லினக்ஸ் நிறுவனம் தன்னுடைய உபுண்டு மென்பொருளின் 24.4.0 வகைமையை வெளியிட்டது. ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்திப்பொருளுக்கு பெயர் வைக்க, பெருமளவில் மெனக்கெடுகிறது. அந்தப் பெயர்களின் பின்னணியில் நிச்சயம் ஏதேனும் ஒரு செய்தி இருக்கும். ஒவ்வொரு வாகனம் அறிமுகமாகும்போதும் அதற்கு சூட்டப்படும் பெயர்கள் என்னை ஈர்க்கின்றன. நான் அவை குறித்த செய்திகளைத் தேடி வாசிக்கிறேன்.

மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் என்கிற வகைமையை அறிமுகப்படுத்தும் போது ஸ்விஃப்ட் என்னும் பறவையின் பெயரைச் சூட்டுவது மகிழுந்துக்கு பொருத்தம்தான் என்றாலும் அது குறித்த செய்திகளைத் தேடினேன். உழவாரன் குருவி என்று தமிழில் அழைக்கப்படும் ஸ்விஃப்ட் வானத்திலேயே அதிக நேரம் பறக்கும் ஆற்றல் கொண்டது என்பது மட்டுமே தெரியும். பனை உழவாரன் என்னும் வகை காலை முதல் மாலை வரை தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும், இருட்டியப் பிறகுதான் தரை இறங்கும். ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வலசை வரும் ஆல்பைன் ஸ்விஃப்ட் (மலை உழவாரன்) என்னும் பறவை தொடந்து ஆறு மாதங்கள் வானத்திலேயே பறக்கக் கூடியது. அப்படியானால் உணவு, உறக்கம்..? காற்றில் பறக்கும் சிறிய வகை பூச்சிகளை பிடித்துத் தின்றுவிட்டு வானத்திலேயே ஓய்வெடுக்குமாம். சுவிட்சர்லாந்து பறவையியல் நிபுணர்கள் அதன் கால்களில் சிறிய கண்காணிப்புக் கருவியைக் கட்டி பின்னர் பறக்கவிட்டனர். அவர்களது ஆய்வில்தான் இந்த வியத்தகு செய்தி தெரியவந்தது. உழவாரன் பறவைகள் நீர்நிலைக்கு மேல் பறக்கும்போது பசி எடுத்தால் அப்படியே கீழிறங்கி நீரின் மேல் தலை நீட்டும் மீன்களைக் கொத்திச் சென்றுவிடும். ஸ்விஃப்ட் என்கிற பெயருக்குப் பின்னே இத்தனைச் செய்திகள் இருக்கின்றன.

உபுண்டுவுக்கு வருவோம் ஆப்பிரிக்க கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஒருவரையொருவர் நேசித்து விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்கிற உயரிய தத்துவத்தை முன்னிறுத்தும் சொல்தான் உபுண்டு. ஆப்பிரிக்காவின் பள்ளி மைதானம் ஒன்றில் சிறார்களுக்கான ஓட்டப்பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கோட்டில் ஒரு கூடை நிறைய பழங்கள் இருக்கின்றன. யார் வெற்றி பெறுகிறார்களோ அச்சிறுவனுக்கு அந்தக் கூடை பழங்களும் பரிசு. ஓட்ட்ப்பந்தயம் தொடங்குவதற்கான கொடி அசைக்கப்பட்டதும், தன்னிச்சையாக ஓடாமல், சிறுவர்கள் அனைவரும் ஒருவரது கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு யாரும் பின்தங்கிவிடாமல் சமநிலையில் இலக்கை அடைந்து, பிறகு கூடைப் பழங்களையும் எடுத்து தங்களுக்குள் சமமாக பிரித்துக்கொள்கின்றனர். இதுதான் உபுண்டு.. உன்னால்தான் நான்.. உனக்காகத்தான் நான் என்பதுதான் உபுண்டுவின் தத்துவம். ஜூலுக்கள் பேசும் ப்ரோட்டோ பாண்டு மொழிச்சொல்தான் உபுண்டு. வெவ்வேறு ஆப்பிரிக்க தேசங்களில் ஒபுண்டு, உமுண்டு, முண்டோ என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் பொருள் ஒன்றுதான்.. நீங்கள் இருப்பதால்தான் நானும் இருக்கிறேன் என்னும் மகத்தான உண்மை. லினக்ஸ் கணினியின் இயங்கு வகைமைக்கு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். ஏனெனில் அப்பெயரின் வழியே அந்தச் சொல்லின் பின்னிருக்கும் அற்புதமான தத்துவத்தை தேடிக் கண்டடையலாம்.

  மொழி என்பது வெறும் உரையாட மட்டும் உருவாக்கப்பட்டதா? எனில் எல்லா மொழிகளுக்கும் ஒன்றிரண்டு ஆயிரம் சொற்கள் மட்டும் போதுமானதுதானே. செம்மொழிகளில் இன்றைக்கும் எழுத்து மற்றும் பேசுவதற்கான முழுமையான எல்லா வகையான பயன்பாட்டிலும் உள்ள தமிழில் கிட்டத்தட்ட ஐந்துலட்சம் சொற்கள் வரை இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தொடர்ந்து தன்னுடைய உரைகள், எழுத்துகளில் தமிழின் சொல் வளம் குறித்தும் அவை உருவானதன் பின்னணி குறித்தும் அதிகம் பேசியும் எழுதியும் இருக்கிறார். இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகள் வழியே, மொழியின் அரிய சொற்களை பாதுகாத்துக்கொண்டே வருகின்றனர். தமிழின் மொழி ஆர்வலர்கள் அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப புதியப்புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டும் வருகின்றனர். அப்படி சொற்களை உருவாக்கும்போது எத்தனை நுட்பமாக யோசிக்கிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

காபி என்கிற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ஒன்றை உருவாக்க தேவநேய பாவாணர் அவர்கள் தீவிரமாகத் தேடியிருக்கிறார். முதலில் காபி என்ற சொல் எப்படி உருவாக்கப்பட்டது என்று ஆராய்ந்திருக்கிறார். ஹீப்ரூ மொழியில் ஒயின் என்கிற மதுபானத்தைக் குறிக்கும் காஃபா என்கிற சொல்தான் மூலம் காரணம் அதன் நிறமும் காஃபியின் நிறமும் ஒன்று என்பதால் அந்தப் பெயர் என்றார்கள்.  ஒரு சிலர் காபி டச்சு மொழியில் இருந்து பெறப்பட்டது என்றும் சொல்கிறார்கள். பிரேசிலின் ஒரு பழங்குடி குழுவினர் குதிரையின் குளம்பு வடிவத்தில் காபிக்கொட்டை இருந்ததால் குளம்புவைக் குறிக்கும் காஃபின் என்னும் சொல்லிலிருந்து காஃபி உருவானது என்று ஒரு தகவல் கிடைக்கிறது. அந்தச் செய்தி அப்பெயருக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றவே காஃபிக்கு குளம்பி என்கிற சொல் உருவாக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஒரு சொல் உருவாக்கம் என்பது வரலாற்றை ஒரு முறை புரட்டிப்பார்ப்பது என்கிற வகையில் ஒவ்வொரு மொழியிலும் புதிய கலைச்சொல் உருவாக்கம் என்பது அவசியமானதுதான். சரி திருமண விழாக்களில் ஒளிப்பதிவு செய்யப் பயன்படும் ட்ரோன் க்கு தமிழில் என்ன சொல்லலாம்? தமிழ்ப்பல்லவிக்கு கடிதம் எழுதித் தெரிவியுங்கள்.

ழுத்தாளர் வானவன் அவர்களை எந்த வகைமைக்குள் அடைப்பது என்கிற குழப்பம் அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கும். தனியார் நிறுவனம் ஒன்றில் இயந்திரங்களோடு போராடிக்கொண்டிருக்கும் கடும் உழைப்பாளி. இன்னொரு பக்கம் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி அதனை தனது வாழ்நாள் கடமையாக தான் வாழும் பூமிக்கு நன்றிக்கடன் போல் செலுத்தும் சூழலியல் போராளி. இன்னொரு புறம் பெருவெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் தான் சார்ந்த மக்களின் துயர் போக்க களமிறங்கும் மக்கள் தொண்டன், இவற்றுக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் இலக்கியப்பணி என்று பன்முகத்துடன் தொடர்ந்து சலியாமல் இயங்கிக் கொண்டிருப்பவர். தமிழிலக்கிய உலகில் ஒன்றிரண்டு படைப்பாளிகளுக்கே முழுநேர இலக்கியவாதியாக இயங்குவதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது. பெரும்பாலானவர்கள் இப்படியாக தன்னை எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொடுத்துவிட்டு அரிதெனக் கிடைக்கும் நிமிடங்களில் பேயென உழைத்து தங்கள் படைப்புகளைத் தருகிறார்கள். தமிழிலக்கியம் இன்றைக்கும் தழைக்க இவர்களின் பேருழைப்புதான் பெரும்பலம்.

ஸீரோ டிகிரி 2023 ஆண்டுக்கான நாவல் போட்டி அறிவிக்கப்பட்டபோது நெடும்பட்டியலில் என்னுடைய குற்றியலுகரம் நாவலும் வானவன் எழுதிய ஒரக்குழி நாவலும் இடம் பெற்றதை மகிழ்வுடன் அவர் எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தபோது நான் நிலக்கரிச் சுரங்கத்தில் பெருகி வந்து கொண்டிருந்த நீரை வெளியேற்றுவதற்கான பம்ப்-ஐ இயக்குவதற்கான பணியில் இருந்தேன். அவர் மெஷினிஸ்ட்டாக தன்னுடய நிறுவனப்பணியில் இருந்தார். இருவரது குரல்களும் இணையப் பிரச்சினைக் காரணமாக மெலிதாகவும் விட்டுவிட்டும் ஒலித்துக் கொண்டிருந்தன. காற்றில் கரைந்த ஒலியை எங்கள் கற்பனை வழியே நிரப்பி இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டோம். உண்மையில் அந்தப்போட்டியில் அவரது நாவல் முதல் பரிசைப் பெற வேண்டும் என்று மனதார விரும்பினேன். தான் வாழ்ந்த வாழ்க்கையின் வழியே அந்த நாவலை அவர் எழுதி இருக்கக் கூடும் என்று அவரது நாவலின் தலைப்பே சொன்னது.

நாவலை வாசிக்க விரும்பியபோது உடனே அனுப்பி வைத்தார். ஆனால் என்னுடைய தொடர்ச்சியான பணிகள், உடல்நலக்குறைவு காரணமாக வாசிப்பதும் அது பற்றிய எனது கருத்துக்களைப் பதிவு செய்வதும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதற்குள் ஒரக்குழி பற்றிய விமர்சனங்கள் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டே இருந்தன. ஒரு படைப்பாளிக்கு இத்தனை நண்பர்கள் அமைவது வரம்.

இயற்கை விவசாயம் பற்றிப் பேசுவது ஒரு நாகரீகமான அறிவுஜீவித்தனம் என்பது போல பல திரைப்படங்கள் எந்த ஆழமான புரிதலுமின்றி ஒரு சில காட்சிகளில் கதாநாயகன் கைகளில் மண்வெட்டி தந்து நெற்றி வியர்வையைத் துண்டால் துடைப்பது போல காண்பித்து ஒரு சில வரிகளில் ஒரு பிரச்சாரத்தை செய்துவிட்டு கடந்து விட்டன. இதன் காரணமாக விவசாயம் பற்றி பேசுவது கேலிக்குரிய செயல் போல திரைப்பட விமர்சகர்களால் முன் வைக்கப்பட்டன. இந்தச் சூழலில் ஒரு அசலான இயற்கை விவசாயி தன் விரல்களில் அப்பியிருக்கும் சேறு சகதியுடனும், மண்மணம் மாறா சொற்களுடனும் இயற்கை விவசாயம் பற்றி பேச வரும்போதுதான் தீவிரத்தன்மையுடன் அதனை அணுக வேண்டும் என்கிற கவனம் நம்மை ஆட்கொள்கிறது. ஒரக்குழி அசலான அக்கறையுடன் இயற்கை விவசாயம் பற்றி எழுதப்பட்ட ஒரு படைப்பு.

ஊருக்குள் மாமன், மச்சான், மாப்பிள்ளை என்று உறவு முறை சொல்லி அழைக்கும் போது கிடைக்கும் அன்னியோன்யம் இருக்கே அதனை அனுபவிப்பவர்களால் மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். மாட்டுக்கொட்டைக்கு சிமெண்ட் தரையா? மாட்டு மூத்திரத்தை உரத்துக்கா ? என்று முதல் அத்தியாயத்தில் இருந்தே வாசிப்பவர் புருவங்கள் உயர்கின்றன. அந்தக் காலத்தில் இல்லாத வியாதியா என்று முனகுபவர்களுக்கு நோய்க்கூறுகளின் வித்தியாசத்தை போகிற போக்கில் விவரிக்கின்றார் கதையின் நாயகன் செல்லமுத்து

வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் என்பது ஒரு மயக்கம் தரும் அனுபவத்துக்காக அல்ல அதன் பின்னே ஒளிந்திருக்கும் உடல் ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை உரையாடல் வழியாகச் சொல்லிக்கொண்டே போகிறார். பாக்கு சேர்த்துப் போடும்போது மலச்சிக்கல் இருக்காது. சுண்ணாம்பு சிறிது சேர்க்கும்போது நன்கு பசி எடுக்கும். பெண்களுக்கு மாதாந்திரப் பிரச்சினைகளைச் சரி செய்யும். பாட்டிகள் கூட வெற்றிலைப் பாக்கை இடித்து அதப்புவார்கள். அவர்களுக்கு கர்ப்பப்பைப் பிரச்சினைகளே வராது என்பதை வானவன் குறிப்பிடும்போது யோசித்துப் பார்த்தால் அந்தப் பழக்கத்தை பெண்கள் கைவிட்ட சமீபகாலமாகத்தானே கர்ப்பப்பைப் பிரச்சினைகள் பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம் என்பதை உணர முடிகிறது.

கொய்யாப்பழம் என்பதற்கான பெயர் எப்படி வந்தது? .சிறுவிவசாயிகள் தங்களின் நிலங்களின் பக்க வரப்புகளில் பறவைகள், அணில்களுக்காக இந்தப் பழ மரங்களை நட்டார்களாம். அந்த மரங்களில் கனிந்திருக்கும் பழங்களை உண்ணும் பறவைகள் விளைநிலங்களில் உள்ள பயிர்களை உண்ணாது. அதுவுமில்லாமல் பயிரைத் தாக்கும் பூச்சிகளையும் தின்றுவிடும். ஆகையால் இப்படியான மரங்களில் பழுக்கும் கனிகளை மனிதர்கள் பறித்து சாப்பிடக்கூடாது அவை பிற உயிரினங்களுக்காக என்பதால் மனிதர்கள் கொய்யா பழம் (பறிக்காத பழம்) என்ற பொருளில் அந்தப்பெயர் சூட்டப்பட்ட்தாக செல்லமுத்து சொல்லும்போது மீண்டும் ஒரு மொழியில் பெயர் சூட்டல் என்பது எத்தனை அர்த்தப்பூர்வமானது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

செல்லமுத்துவின் மென்மையான இயற்கை விவசாயப்புரட்சிதான் நாவலின் மையம். அவனது வழிநடத்தலை யதார்த்தமாக, அறிவுப்பூர்வமாக  கட்டமைப்பதில் வானவன் மிகக் கவனமாக தனது எழுத்தில் கையாள்கிறார். அனைவரையும் வாசிக்க வைக்கும் செல்லமுத்துவின் முயற்சி மிக முக்கியமானது மாசானபு புகோகாவைப் பற்றி எளிய விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வது அறிதலுக்கான புதியத் தேடல்.

இப்படியாக நாவல் வழியாக பல செய்திகள். என் அபிமானத்துக்குரிய உத்தம்சோழன் ஒரு பாத்திரத்தின் பெயராக இருப்பது , கிழக்கு வாசல் பத்திரிகை, நம்மாழ்வார் பற்றி எல்லாம் பதிவு செய்வது காலத்தின் ஆவணம்.

ஒரக்குழி விவசாயம் குறித்த ஒரு உண்மையான அக்கறை உள்ள அனுபவம் சார்ந்த படைப்பு

 

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...