திங்கள், 24 நவம்பர், 2025

கனவில் ததும்பும் நதி- 3

 

கனவில் ததும்பும் நதி- 3

                  -நெய்வேலி பாரதிக்குமார்

ந்த ஆண்டு தொடக்கத்தில் லினக்ஸ் நிறுவனம் தன்னுடைய உபுண்டு மென்பொருளின் 24.4.0 வகைமையை வெளியிட்டது. ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்திப்பொருளுக்கு பெயர் வைக்க, பெருமளவில் மெனக்கெடுகிறது. அந்தப் பெயர்களின் பின்னணியில் நிச்சயம் ஏதேனும் ஒரு செய்தி இருக்கும். ஒவ்வொரு வாகனம் அறிமுகமாகும்போதும் அதற்கு சூட்டப்படும் பெயர்கள் என்னை ஈர்க்கின்றன. நான் அவை குறித்த செய்திகளைத் தேடி வாசிக்கிறேன்.

மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் என்கிற வகைமையை அறிமுகப்படுத்தும் போது ஸ்விஃப்ட் என்னும் பறவையின் பெயரைச் சூட்டுவது மகிழுந்துக்கு பொருத்தம்தான் என்றாலும் அது குறித்த செய்திகளைத் தேடினேன். உழவாரன் குருவி என்று தமிழில் அழைக்கப்படும் ஸ்விஃப்ட் வானத்திலேயே அதிக நேரம் பறக்கும் ஆற்றல் கொண்டது என்பது மட்டுமே தெரியும். பனை உழவாரன் என்னும் வகை காலை முதல் மாலை வரை தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும், இருட்டியப் பிறகுதான் தரை இறங்கும். ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வலசை வரும் ஆல்பைன் ஸ்விஃப்ட் (மலை உழவாரன்) என்னும் பறவை தொடந்து ஆறு மாதங்கள் வானத்திலேயே பறக்கக் கூடியது. அப்படியானால் உணவு, உறக்கம்..? காற்றில் பறக்கும் சிறிய வகை பூச்சிகளை பிடித்துத் தின்றுவிட்டு வானத்திலேயே ஓய்வெடுக்குமாம். சுவிட்சர்லாந்து பறவையியல் நிபுணர்கள் அதன் கால்களில் சிறிய கண்காணிப்புக் கருவியைக் கட்டி பின்னர் பறக்கவிட்டனர். அவர்களது ஆய்வில்தான் இந்த வியத்தகு செய்தி தெரியவந்தது. உழவாரன் பறவைகள் நீர்நிலைக்கு மேல் பறக்கும்போது பசி எடுத்தால் அப்படியே கீழிறங்கி நீரின் மேல் தலை நீட்டும் மீன்களைக் கொத்திச் சென்றுவிடும். ஸ்விஃப்ட் என்கிற பெயருக்குப் பின்னே இத்தனைச் செய்திகள் இருக்கின்றன.

உபுண்டுவுக்கு வருவோம் ஆப்பிரிக்க கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஒருவரையொருவர் நேசித்து விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்கிற உயரிய தத்துவத்தை முன்னிறுத்தும் சொல்தான் உபுண்டு. ஆப்பிரிக்காவின் பள்ளி மைதானம் ஒன்றில் சிறார்களுக்கான ஓட்டப்பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கோட்டில் ஒரு கூடை நிறைய பழங்கள் இருக்கின்றன. யார் வெற்றி பெறுகிறார்களோ அச்சிறுவனுக்கு அந்தக் கூடை பழங்களும் பரிசு. ஓட்ட்ப்பந்தயம் தொடங்குவதற்கான கொடி அசைக்கப்பட்டதும், தன்னிச்சையாக ஓடாமல், சிறுவர்கள் அனைவரும் ஒருவரது கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு யாரும் பின்தங்கிவிடாமல் சமநிலையில் இலக்கை அடைந்து, பிறகு கூடைப் பழங்களையும் எடுத்து தங்களுக்குள் சமமாக பிரித்துக்கொள்கின்றனர். இதுதான் உபுண்டு.. உன்னால்தான் நான்.. உனக்காகத்தான் நான் என்பதுதான் உபுண்டுவின் தத்துவம். ஜூலுக்கள் பேசும் ப்ரோட்டோ பாண்டு மொழிச்சொல்தான் உபுண்டு. வெவ்வேறு ஆப்பிரிக்க தேசங்களில் ஒபுண்டு, உமுண்டு, முண்டோ என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் பொருள் ஒன்றுதான்.. நீங்கள் இருப்பதால்தான் நானும் இருக்கிறேன் என்னும் மகத்தான உண்மை. லினக்ஸ் கணினியின் இயங்கு வகைமைக்கு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். ஏனெனில் அப்பெயரின் வழியே அந்தச் சொல்லின் பின்னிருக்கும் அற்புதமான தத்துவத்தை தேடிக் கண்டடையலாம்.

  மொழி என்பது வெறும் உரையாட மட்டும் உருவாக்கப்பட்டதா? எனில் எல்லா மொழிகளுக்கும் ஒன்றிரண்டு ஆயிரம் சொற்கள் மட்டும் போதுமானதுதானே. செம்மொழிகளில் இன்றைக்கும் எழுத்து மற்றும் பேசுவதற்கான முழுமையான எல்லா வகையான பயன்பாட்டிலும் உள்ள தமிழில் கிட்டத்தட்ட ஐந்துலட்சம் சொற்கள் வரை இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தொடர்ந்து தன்னுடைய உரைகள், எழுத்துகளில் தமிழின் சொல் வளம் குறித்தும் அவை உருவானதன் பின்னணி குறித்தும் அதிகம் பேசியும் எழுதியும் இருக்கிறார். இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகள் வழியே, மொழியின் அரிய சொற்களை பாதுகாத்துக்கொண்டே வருகின்றனர். தமிழின் மொழி ஆர்வலர்கள் அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப புதியப்புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டும் வருகின்றனர். அப்படி சொற்களை உருவாக்கும்போது எத்தனை நுட்பமாக யோசிக்கிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

காபி என்கிற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ஒன்றை உருவாக்க தேவநேய பாவாணர் அவர்கள் தீவிரமாகத் தேடியிருக்கிறார். முதலில் காபி என்ற சொல் எப்படி உருவாக்கப்பட்டது என்று ஆராய்ந்திருக்கிறார். ஹீப்ரூ மொழியில் ஒயின் என்கிற மதுபானத்தைக் குறிக்கும் காஃபா என்கிற சொல்தான் மூலம் காரணம் அதன் நிறமும் காஃபியின் நிறமும் ஒன்று என்பதால் அந்தப் பெயர் என்றார்கள்.  ஒரு சிலர் காபி டச்சு மொழியில் இருந்து பெறப்பட்டது என்றும் சொல்கிறார்கள். பிரேசிலின் ஒரு பழங்குடி குழுவினர் குதிரையின் குளம்பு வடிவத்தில் காபிக்கொட்டை இருந்ததால் குளம்புவைக் குறிக்கும் காஃபின் என்னும் சொல்லிலிருந்து காஃபி உருவானது என்று ஒரு தகவல் கிடைக்கிறது. அந்தச் செய்தி அப்பெயருக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றவே காஃபிக்கு குளம்பி என்கிற சொல் உருவாக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஒரு சொல் உருவாக்கம் என்பது வரலாற்றை ஒரு முறை புரட்டிப்பார்ப்பது என்கிற வகையில் ஒவ்வொரு மொழியிலும் புதிய கலைச்சொல் உருவாக்கம் என்பது அவசியமானதுதான். சரி திருமண விழாக்களில் ஒளிப்பதிவு செய்யப் பயன்படும் ட்ரோன் க்கு தமிழில் என்ன சொல்லலாம்? தமிழ்ப்பல்லவிக்கு கடிதம் எழுதித் தெரிவியுங்கள்.

ழுத்தாளர் வானவன் அவர்களை எந்த வகைமைக்குள் அடைப்பது என்கிற குழப்பம் அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கும். தனியார் நிறுவனம் ஒன்றில் இயந்திரங்களோடு போராடிக்கொண்டிருக்கும் கடும் உழைப்பாளி. இன்னொரு பக்கம் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி அதனை தனது வாழ்நாள் கடமையாக தான் வாழும் பூமிக்கு நன்றிக்கடன் போல் செலுத்தும் சூழலியல் போராளி. இன்னொரு புறம் பெருவெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் தான் சார்ந்த மக்களின் துயர் போக்க களமிறங்கும் மக்கள் தொண்டன், இவற்றுக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் இலக்கியப்பணி என்று பன்முகத்துடன் தொடர்ந்து சலியாமல் இயங்கிக் கொண்டிருப்பவர். தமிழிலக்கிய உலகில் ஒன்றிரண்டு படைப்பாளிகளுக்கே முழுநேர இலக்கியவாதியாக இயங்குவதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது. பெரும்பாலானவர்கள் இப்படியாக தன்னை எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொடுத்துவிட்டு அரிதெனக் கிடைக்கும் நிமிடங்களில் பேயென உழைத்து தங்கள் படைப்புகளைத் தருகிறார்கள். தமிழிலக்கியம் இன்றைக்கும் தழைக்க இவர்களின் பேருழைப்புதான் பெரும்பலம்.

ஸீரோ டிகிரி 2023 ஆண்டுக்கான நாவல் போட்டி அறிவிக்கப்பட்டபோது நெடும்பட்டியலில் என்னுடைய குற்றியலுகரம் நாவலும் வானவன் எழுதிய ஒரக்குழி நாவலும் இடம் பெற்றதை மகிழ்வுடன் அவர் எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தபோது நான் நிலக்கரிச் சுரங்கத்தில் பெருகி வந்து கொண்டிருந்த நீரை வெளியேற்றுவதற்கான பம்ப்-ஐ இயக்குவதற்கான பணியில் இருந்தேன். அவர் மெஷினிஸ்ட்டாக தன்னுடய நிறுவனப்பணியில் இருந்தார். இருவரது குரல்களும் இணையப் பிரச்சினைக் காரணமாக மெலிதாகவும் விட்டுவிட்டும் ஒலித்துக் கொண்டிருந்தன. காற்றில் கரைந்த ஒலியை எங்கள் கற்பனை வழியே நிரப்பி இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டோம். உண்மையில் அந்தப்போட்டியில் அவரது நாவல் முதல் பரிசைப் பெற வேண்டும் என்று மனதார விரும்பினேன். தான் வாழ்ந்த வாழ்க்கையின் வழியே அந்த நாவலை அவர் எழுதி இருக்கக் கூடும் என்று அவரது நாவலின் தலைப்பே சொன்னது.

நாவலை வாசிக்க விரும்பியபோது உடனே அனுப்பி வைத்தார். ஆனால் என்னுடைய தொடர்ச்சியான பணிகள், உடல்நலக்குறைவு காரணமாக வாசிப்பதும் அது பற்றிய எனது கருத்துக்களைப் பதிவு செய்வதும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதற்குள் ஒரக்குழி பற்றிய விமர்சனங்கள் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டே இருந்தன. ஒரு படைப்பாளிக்கு இத்தனை நண்பர்கள் அமைவது வரம்.

இயற்கை விவசாயம் பற்றிப் பேசுவது ஒரு நாகரீகமான அறிவுஜீவித்தனம் என்பது போல பல திரைப்படங்கள் எந்த ஆழமான புரிதலுமின்றி ஒரு சில காட்சிகளில் கதாநாயகன் கைகளில் மண்வெட்டி தந்து நெற்றி வியர்வையைத் துண்டால் துடைப்பது போல காண்பித்து ஒரு சில வரிகளில் ஒரு பிரச்சாரத்தை செய்துவிட்டு கடந்து விட்டன. இதன் காரணமாக விவசாயம் பற்றி பேசுவது கேலிக்குரிய செயல் போல திரைப்பட விமர்சகர்களால் முன் வைக்கப்பட்டன. இந்தச் சூழலில் ஒரு அசலான இயற்கை விவசாயி தன் விரல்களில் அப்பியிருக்கும் சேறு சகதியுடனும், மண்மணம் மாறா சொற்களுடனும் இயற்கை விவசாயம் பற்றி பேச வரும்போதுதான் தீவிரத்தன்மையுடன் அதனை அணுக வேண்டும் என்கிற கவனம் நம்மை ஆட்கொள்கிறது. ஒரக்குழி அசலான அக்கறையுடன் இயற்கை விவசாயம் பற்றி எழுதப்பட்ட ஒரு படைப்பு.

ஊருக்குள் மாமன், மச்சான், மாப்பிள்ளை என்று உறவு முறை சொல்லி அழைக்கும் போது கிடைக்கும் அன்னியோன்யம் இருக்கே அதனை அனுபவிப்பவர்களால் மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். மாட்டுக்கொட்டைக்கு சிமெண்ட் தரையா? மாட்டு மூத்திரத்தை உரத்துக்கா ? என்று முதல் அத்தியாயத்தில் இருந்தே வாசிப்பவர் புருவங்கள் உயர்கின்றன. அந்தக் காலத்தில் இல்லாத வியாதியா என்று முனகுபவர்களுக்கு நோய்க்கூறுகளின் வித்தியாசத்தை போகிற போக்கில் விவரிக்கின்றார் கதையின் நாயகன் செல்லமுத்து

வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் என்பது ஒரு மயக்கம் தரும் அனுபவத்துக்காக அல்ல அதன் பின்னே ஒளிந்திருக்கும் உடல் ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை உரையாடல் வழியாகச் சொல்லிக்கொண்டே போகிறார். பாக்கு சேர்த்துப் போடும்போது மலச்சிக்கல் இருக்காது. சுண்ணாம்பு சிறிது சேர்க்கும்போது நன்கு பசி எடுக்கும். பெண்களுக்கு மாதாந்திரப் பிரச்சினைகளைச் சரி செய்யும். பாட்டிகள் கூட வெற்றிலைப் பாக்கை இடித்து அதப்புவார்கள். அவர்களுக்கு கர்ப்பப்பைப் பிரச்சினைகளே வராது என்பதை வானவன் குறிப்பிடும்போது யோசித்துப் பார்த்தால் அந்தப் பழக்கத்தை பெண்கள் கைவிட்ட சமீபகாலமாகத்தானே கர்ப்பப்பைப் பிரச்சினைகள் பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம் என்பதை உணர முடிகிறது.

கொய்யாப்பழம் என்பதற்கான பெயர் எப்படி வந்தது? .சிறுவிவசாயிகள் தங்களின் நிலங்களின் பக்க வரப்புகளில் பறவைகள், அணில்களுக்காக இந்தப் பழ மரங்களை நட்டார்களாம். அந்த மரங்களில் கனிந்திருக்கும் பழங்களை உண்ணும் பறவைகள் விளைநிலங்களில் உள்ள பயிர்களை உண்ணாது. அதுவுமில்லாமல் பயிரைத் தாக்கும் பூச்சிகளையும் தின்றுவிடும். ஆகையால் இப்படியான மரங்களில் பழுக்கும் கனிகளை மனிதர்கள் பறித்து சாப்பிடக்கூடாது அவை பிற உயிரினங்களுக்காக என்பதால் மனிதர்கள் கொய்யா பழம் (பறிக்காத பழம்) என்ற பொருளில் அந்தப்பெயர் சூட்டப்பட்ட்தாக செல்லமுத்து சொல்லும்போது மீண்டும் ஒரு மொழியில் பெயர் சூட்டல் என்பது எத்தனை அர்த்தப்பூர்வமானது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

செல்லமுத்துவின் மென்மையான இயற்கை விவசாயப்புரட்சிதான் நாவலின் மையம். அவனது வழிநடத்தலை யதார்த்தமாக, அறிவுப்பூர்வமாக  கட்டமைப்பதில் வானவன் மிகக் கவனமாக தனது எழுத்தில் கையாள்கிறார். அனைவரையும் வாசிக்க வைக்கும் செல்லமுத்துவின் முயற்சி மிக முக்கியமானது மாசானபு புகோகாவைப் பற்றி எளிய விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வது அறிதலுக்கான புதியத் தேடல்.

இப்படியாக நாவல் வழியாக பல செய்திகள். என் அபிமானத்துக்குரிய உத்தம்சோழன் ஒரு பாத்திரத்தின் பெயராக இருப்பது , கிழக்கு வாசல் பத்திரிகை, நம்மாழ்வார் பற்றி எல்லாம் பதிவு செய்வது காலத்தின் ஆவணம்.

ஒரக்குழி விவசாயம் குறித்த ஒரு உண்மையான அக்கறை உள்ள அனுபவம் சார்ந்த படைப்பு

 

கனவில் ததும்பும் நதி, 2

 



கனவில் ததும்பும் நதி – 2

 நெய்வேலி பாரதிக்குமார்

               ப்ரல் 23 உலகப் புத்தக தினத்தையொட்டி உலகமெங்கும் புத்தகக் கண்காட்சிகள், அதிகத் தள்ளுபடியுடன் புத்தக விற்பனையை பல்வேறு புத்தக நிறுவனங்கள் நடத்துகின்றன. கடந்த சில வருடங்களாக வெவ்வேறு புத்தக நிறுவனங்கள் இணைந்து சென்னை எழும்பூர் பெரியார் மாளிகையில் (தினதந்தி அலுவலகம் அருகில்) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் நூல்களை விற்கின்றன. நான் அதில் அரிய நூல்கள் சிலவற்றை வாங்கி இருக்கிறேன். இந்த வருடமும் அறிவிக்கப்படலாம்.

      உலகப்புத்தக தினத்தில் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய எழுத்தாளர்கள் ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், ழீன் டொமினிக் பாபி ஆகியோர் ஏப்ரல் 23 இல் பிறந்தவர்கள் (ஒரு சிலர் ஷேக்ஸ்பியர் இறந்த தினம் மட்டுமே ஏப்ரல் 23 என்கிறார்கள்) இந்த வரிசையில்  ரே பிராட்பரியையும் இணைக்கலாம். ரே பிராட்பரி அந்த நாளில் பிறந்தவருமில்லை இறந்தவருமில்லை என்றாலும் அவரது ஃபாரன்ஹீட் 451 நாவல் மிக முக்கியமான ஒன்று. அது புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றி பேசுகின்ற நாவல்

      ரே பிராட்பரி ஒரு அறிவியல் புனை கதை எழுத்தாளர். நம் சுஜாதாவுக்கு இவரும் ஐசக் அசிமோவும்தான் விருப்பமான எழுத்தாளர்கள். அமெரிக்காவில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரே பிராட்பரி பார்வைக் குறைபாடு காரணமாக இராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்பை இழந்தவர். 12 வயது முதலே எழுதத் தொடங்கி பத்திரிகைகளில் தொடர் சிறுகதைகள் (Chain of Stories) என்னும் முறைமையில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதத் தொடங்கி பின்னர் முழு நேர எழுத்தாளராக தன்னைத் தகவமைத்துக் கொண்டார். அவரது சிறுகதைகளுக்கு கிடைக்கும் அதீதமான வரவேற்பைப் பார்த்து பதிப்[பாளர்கள் அச்சிறுகதைகளை நீட்டித்து அதே வரிசையில் தொடர்ந்து எழுதுமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள். அதே போல அவரது சிறுகதைகள் பின்னர் விரித்து எழுதப்பட்டு நாவலாகி இருக்கின்றன. ஃப்ரான்ஹீட் 451 நாவல் தி ஃபயர் என்கிற தலைப்பில் சிறுகதையாக எழுதப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்ட நாவல்.

      ரே பிராட்பரி ஒரு கற்பனையான தேசத்தை அதில் படைத்திருப்பார். மக்களுக்கு எதிரான சட்டங்களும் நடவடிக்கைகளும் கொண்ட கற்பனை தேசம் அது அவ்வாறு உருவாக்குவதை (dystopia) டிஸ்டோபியா என்கிறார்கள். உடோபியாவுக்கு நேர் எதிர் சமூகம். நல்ல அம்சங்களும், சட்டத் திட்டங்களும் கொண்ட உலகத்தைக் கற்பனையில் உருவாக்கினால் அதனை உடோபியா (utopia )என்பார்கள்.

ரே பிராட்பரியின் கற்பனை தேசத்தில் புத்தகங்கள் வாசிப்பது வீண் வேலை நேரத்தை வீணடிப்பது. ஆகவே புத்தகங்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அப்படி அரசாங்கத்துக்குத் தெரியாமல் புத்தகங்கள் வைத்திருந்தால் அவை எரிக்கப்படும். புத்தகங்கள் வைத்திருந்தவருக்கு கடுமையான தண்டனையும் உண்டு. புத்தகங்களை எரிப்பதற்கு என்றே அரசாங்க நிறுவனம் ஒன்று உண்டு. அங்கு உள்ள புகார் பெட்டிகளில் புத்தகங்கள் வைத்திருப்பவர் பற்றி தகவல் தெரிவித்தால் உடனடியாக அங்குள்ள குழு சென்று அந்தப் புத்தகங்களை எரித்துவிடும். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மாண்டேக் என்பவனுக்கு அரசாங்கத்தின் இந்தச் செயல்பாடு மிகப் பிடித்தமானது. அவனுக்கும் புத்தகங்கள் வாசிப்பவர்கள் உதவாக்கரைகள் என்கிற எண்ணம் உண்டு.

அந்த தேசத்துக்கு ஆசிரியர் பணிக்காக புதிதாக வரும் ஒரு ஆசிரியை மாண்டேக்கை எதேச்சையாக சந்திக்கிறாள். அரசின் இந்தச் சட்டம் மக்களின் அறிவு நலனுக்கு எதிரானது என்று தெரிவிக்கிறாள். அதை மறுக்கும் மாண்டேக்கிடம் “நீங்கள் இதுவரை புத்தகங்கள் வாசித்திருக்கிறீர்களா?” என்று கேட்கிறாள். இல்லை என்று தலையாட்டுகிறான். ஒன்றைப் பற்றித் தெரியாமலேயே அது பயனற்றது என்று எப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்க மாண்டேக் யோசிக்கிறான். அடுத்த முறை புத்தகங்களை எரிக்கும் பணிக்குச் செல்லும்போது தீயில் எரிபடாத புத்தகம் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து ரகசியமாக வாசிக்கின்றான். அது சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “The life History of Copperfield” என்னும் கற்பனை சுயசரிதைப் புத்தகம். அந்தப் புத்தகம் மெல்ல மெல்ல உள்ளிழுக்கிறது.

மாண்டேக் அதன்பிறகு புத்தங்களை எரிக்கச் செல்லும்போது வேண்டுமென்றே சில புத்தகங்களை எரியவிடாமல் செய்து அவற்றை ரகசியமாக வீட்டுக்கு எடுத்துவந்து படிக்க ஆரம்பிக்கின்றான். ஒரு கட்டத்தில் அவனால் புத்தகம் வாசிக்காமல் இருக்கவே முடியவில்லை. தொலைக்காட்சிப் பிரியையான அவளது மனைவி கோபத்தில் அவனைப் பற்றி புகார் பெட்டிக்குத் தகவல் அனுப்புகிறாள். அவன் அரசின் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகத் தப்பி ஓடுகின்றான். அவனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த ஆசிரியை அரசுக்குத் தெரியாத ரகசியத் தீவு ஒன்றை அறிமுகம் செய்கிறாள். அங்கு உள்ள அனைவரும் நாள் முழுவதும் புத்தகம் வாசிக்கிறார்கள். அரசாங்கம் கண்டுபிடித்தால் புத்தகம் எரிக்கப்படும் என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடமாக வாசித்து அதை மனதில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். யாரெல்லாம் அப்படி ஒரு முழு புத்தகத்தை மனனமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அந்தப் புத்தகத்தின் பெயரையே சூட்டிவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள் இங்கும் அப்படி ஒரு பழக்கம் இருந்தால் ஒரு சிலரை நாம் திருக்குறள் என அழைக்கலாம். ஒன்றிருவரை நாம் சிலப்பதிகாரம் என்றழைக்கலாம் எத்தனை அற்புதமாக இருக்கும்? மாண்டேக் அந்தத் தீவில் தனக்கான புத்தகம் ஒன்றைத் தேர்வு செய்து வாசிக்க ஆரம்பிக்கின்றான். இந்த நாவலைத் தமிழில் வெ.ஸ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஃபாரன்ஹீட் 451 அதே பெயரில் திரைப்படமாக ஃபிரான்காயிஸ் ட்ரூஃபெட் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது. மிக அற்புதமான இந்தத் திரைப்படம் பற்றி விரிவான விமர்சனத்தை சௌந்திர சுகன் இதழில் எழுதி இருக்கிறேன். அந்தக் கட்டுரை பின்னர் விழித்திரையில் நிற்கும் பிரமொழித்திரைப்படங்கள் என்னும் என்னுடைய நூலில் இடம்பெற்றுள்ளது. புத்தகங்களின் மகத்துவம் பற்றி எடுக்கப்பட்ட மிக முக்கியமான படங்கள் என  ஃபாரன்ஹீட் 451 மற்றும் The Diving Bell and Butterfly  ஆகியவற்றைக் குறிப்பிடுவேன். தேடிக் கண்டடையுங்கள்..

முகநூலை வெற்று அரட்டை என்றும் சுயத்தம்பட்ட ஊடகம் என்றும் கடுமையாக விமர்சிப்பவர்கள் உண்டு. நவீன இலக்கியவாதிகள் பலர் அது கவுரவக் குறைச்சலானக் களம் ஆகவே முகநூல் குழுக்களுடன் அன்னந்தண்ணி ஆகாரம் எல்லாம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் ரகசியமாக விடாமல் வாசிக்கிறார்கள். இல்லையென்றால் முகநூல் போராளிகள் என்னைக் கண்டபடி வசை பாடுகிறார்கள் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை எவரும் அவர்களிடம் கேட்பதில்லை. இப்பொழுது விமர்சனங்களுக்கும், பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கும் வசை என்று பெயர் சூட்டிவிட்டார்கள். அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டால் “என் வளர்ச்சியை பிடிக்காத எதிரிகள் செய்த சூழ்ச்சி” என்கிற நிரந்தர வசனம் போலாகிவிட்டது இந்த வசை என்கிற சொல்.

நீங்கள் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் முகநூல் என்பது இன்று பரவலான மக்கள் தொடர்புக்கானத் தளமாக இயங்குகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கவனிக்கின்ற, ஓரளவு வாசிக்கின்ற எழுத்துவடிவிலான சமூக ஊடகமாக முகநூல் மட்டுமே இருக்கின்றது. தன் தாயின் மீதோ, தந்தையின் மீதோ எந்தப் பதிவுக்கும் கமென்ட் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து மிகுந்த கொள்கைப் பிடிப்புடன் இருப்பவர்கள் கூட நிச்சயம் வாசிக்கிறார்கள் என்பதை அவர்களை அடுத்த முறை சந்திக்கும் போது கண்டுபிடித்துவிட முடிகிறது. இளையதலைமுறை இன்ஸ்டா, ரீல்களில் மூழ்கித் திளைத்திருக்க பூமர் என்று ஒதுக்கப்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சரணடைய சரியான தளம் முகநூல்தான்.

முகநூலை மிக ஆக்கப்பூர்வமாக, படைப்பூக்கத்துடன் பதிவிடுபவர்கள் முகநூல் பக்கங்களை அர்த்தமுள்ளதாக மாற்றி வருகிறார்கள். அதில் குறிப்பாக Karikalan R, Geethapriyan Vasudevan, Magudeswaran, அறிவழகன் கைவல்யம், பொ. வேல்சாமி என்று பலரைக் குறிப்பிடலாம். இதில் கரிகாலனின் பணி அற்புதமானது மிகவும் வியக்கவைப்பது. அவரது பதிவுகள் திரைப்படம், கவிதைகள், சமகால நிகழ்வுகள், வரலாற்றுச் செய்திகள் என பல்வேறு தளங்களில் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன. ஒரு கவிஞராக மட்டுமே அதிகம் அறியப்பட்ட அவரின் நுட்பமான, தீர்க்கமானப் பார்வை முகநூல் வழியாகத்தான் அதிகம் வெளிப்படுகிறது. குறிப்பாக அவரது பெரியாரின் இரங்கல் உரை பதிவு எத்தனை தத்துவார்த்தமானது என்ன ஒரு அழகான Narration . அதில் எத்தனை விஷயங்களை ஒரு கடுகுக்குள் கடலை நிரப்புவது போல நிறைக்கிறார். மரணம் என்பது ஒளியை அணைப்பது போல அல்ல விடியல் வந்தால் விளக்கை அணைப்பது போல என்கிற தாகூரின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார். நாகம்மை இறந்தபொழுது “இனி வீட்டுக்குப் போகவேண்டும் என்கிற அவசியமில்லை” என்கிற பெரியாரின் கூற்று அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை நமக்குள் விதைக்கிறது. பெரியாரின் இரங்கல் உரையை eulogy poetry தன்மையைக்  கொண்டிருக்கிறது என்று அதனை வகைமைப்படுத்துவது எத்தனைப் புரிதலைத் தருகிறது? .

            கரிகாலனின் பார்வை வேறொரு கோணத்தில் இயங்குவது.  இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் பரிசு பெற்ற படங்களைக் குறிப்பிடுவது என்பது எல்லோரும் செய்யக்கூடியதுதான் என்றாலும் கரிகாலன் மொத்தமுள்ள 24 ஆஸ்கர் விருதுகளில் 13 விருதுகளை பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்? அவரது ஒவ்வொரு பதிவுமே தொகுக்கப்பட வேண்டியவைதான். அரிதாக அவரது கவிதைகளைப் பதிவிடுவார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இந்தக் கவிதை புன்னகைக்க வைப்பது. கவிதையில் நகைச்சுவை மிக அரிது கரிகாலன் எதையும் சாத்தியப்படுத்துவார்.  

பாவம்

~

ஏழு பாவங்களுள்

ஒன்று பொறாமை

விவிலியம் கூறுகிறது

அழகாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

அறிவாளியாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

கனவானாக

சீமாட்டியாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

பகைவரை மன்னித்து

பொறாமைப்படுத்தாதீர்

இரக்கமுடையவராக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

ரொம்ப நல்லவராக இருந்து பொறாமைப்படுத்தாதீர்

'பொறாமைக்கு தூண்டுவது

எட்டாவது பாவம்!'

என்கிறது, கரிகாலன்

எழுதிக் கொண்டிருக்கிற

புதிய விவிலியம

 

                                                                                    (இன்னும் ததும்பும்)

 

 

 

      

கனவில் ததும்பும் நதி

 கனவில் ததும்பும்  நதி

-நெய்வேலி பாரதிக்குமார்

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சிக்கு 15 கி.மீ. தொலைவில் ஸ்வர்ணரேகா என்னும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மேற்குவங்கம் வழியாக ஒடிசாவுக்குச் சென்று பின் கடலில் கலக்கிறது. ஜார்க்கண்டின் சில பகுதிகளில் மட்டும் அதன் மணற்பகுதியில் தங்கத்துகள் கலந்து கிடப்பதால் அங்குள்ள பழங்குடி மக்கள், நாள் முழுவதும் மணலை சலித்து, மில்லி கிராம் அளவுக்கு தங்கத்தை எடுத்து விற்று தங்கள் வயிற்றுப்பாட்டைத் தீர்க்கின்றனராம். இந்தச் செய்தியை அறிய நேரிட்டால் பலரின் கனவில் ஓடும் நதியாக ஸ்வர்ணரேகா இருக்கலாம்.

      ஆனால் கலை, இலக்கியரசனை உள்ளவர்களின் கனவில் ஏதேனும் ஒரு வரியோ, அரிய சொல்லோ. ஒரு ஓவியத்தின் கோடுகளோ, வண்ணமோ அல்லது சிற்பங்களின் பாவங்களோதான் அதிகம் வரக்கூடும். அதற்காக இலக்கியவாதி பணத்தின் மீது பற்றற்றவன் என்பதல்ல பொருள். அவன் தலையெழுத்து அவனது கனவுகளில் அவையே வந்து தீரும்.

      ஸ்வர்ணரேகா என்கிற பெயரைக் கேள்விப்பட்டதும், ரித்விக் கதக்கின் சுபர்ணரேகா என்கிற பெங்காலித் திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினைக் காலக்கட்டத்தில் நடப்பதாக உருவாக்கப்பட்ட கதைக்கரு. ஸ்வர்ணரேகா நதிக்கரையில்தான் அந்தக் கதைத் தொடங்குகிறது. ரித்விக் கதக் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர். சத்யஜித் ரேவுக்கு இணையாகக் கருதப்பட வேண்டியவர். சுபர்ணரேகா ஆசியப் பத்திரிகையின் பட்டியல் ஒன்றின்படி எல்லா காலத்துக்குமான சிறந்த திரைப்படங்களின் வரிசையில் 11 வது இடத்தைப் பிடித்தது. அவரது மேக தக்க தாரா இந்தியத் திரைப்படங்களில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று.

      சுபர்ணரேகா ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் தற்பொழுது இணையத்தில் யூ ட்யூப் வழியாகக் காணக்கிடைக்கிறது. இணையம் என்பது தேடித்தேடிக் கண்டடைபவர்களுக்கான பொக்கிஷங்களைத் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. இணையம் என்பது ஒட்டுமொத்தமாக மோசமானதல்ல அது தனக்குள் சிறந்தவற்றுக்கும், மிகச்சிறந்தவற்றுக்கும், மோசமானவற்றுக்கும் மிக மோசமானவற்றுக்கும் தாராளமாக இடமளித்திருக்கிறது. நாம்தான் நமக்கான ஆரோக்கியமான கனி எவை என்பதை அறிந்து பறிக்கவேண்டும்.

 

         மீபத்தில் ஒரு இலக்கிய நிகழ்வில் ஒரு பேச்சாளரிடம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை அளித்து அதிலுள்ள கதைகள் குறித்துப் பேசச்சொல்லி இருந்தார்கள். அவர் அந்தத் தொகுப்பை ஓரமாக வைத்துவிட்டு, தான் சிறு வயதில் படித்த ரஷ்யச் சிறுகதைப் பற்றி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் போல அபிநயங்களுடன் பேசினார். பிறகு கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் என்று அவரது பேச்சு இலக்கில்லாமல் அங்கும் இங்குமாகப் பாய்ந்தது. சிறந்தச் சிறுகதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தான் கொண்டு வந்த பசுமாட்டை, பனைமரத்தில் கட்டிவிட்டு ஒருவழியாக ஓய்ந்தார். அண்மைக்காலங்களில் சில பேச்சாளர்கள் தங்களுக்குத் தரப்பட்ட நூல்களைப் படிக்காமல் மேடைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஆலாபனைகளில் பஜனைப் பாடுவது அதிகமாகிவிட்டது. இதனால் சமகால இலக்கியங்கள் பற்றி, படைப்பாளிகள் பற்றிய விரிவான விவாதக்களம் உருவாகாமல் வெறுமையாகிவிட்டது.

குழுக்கள் சார்ந்த படைப்பாளிகள், ஊர்ப்பாசத்தில் முன்னிறுத்தப்படும் படைப்பாளிகள் தவிர பிற படைப்பாளிகள் இருள்வெளியில் எந்த வெளிச்சமுமின்றி இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத்  தொகுப்பு ஒன்றில் அதன் முன்னுரையை எழுதிய ஒருவர் அதிலுள்ள கதைகளைப் பற்றியோ, எழுத்தாளர்கள் பற்றியோ ஒரு வரி கூட கூறாமல் சாமர்த்தியமாக ந்ழுவிச் சென்றதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். பெயர்களைக் குறிப்பிட்டால் ஆயபயன் என்ன என்பதை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்துவிட்டே உச்சரிக்கிறார்கள். தனக்கு உதவாத பெயர்களைக் குறிப்பிட சிலர் ஒருபோதும் விரும்புவதில்லை. எனவே சிலருக்கு மட்டும்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பொங்கிப் பெருகும் புகழ் வெளிச்சமும், விருதுகளும் கிடைக்கின்றன.

கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை படைப்புலகில்  இரண்டு செல்விகள் மிக முக்கியமானவர்கள். அதிலொருவர் தமிழ்ச்செல்வி அவர்கள். கீதாரி, மாணிக்கம், அளம், கற்றாழை என தனது பல்வேறு படைப்புகளால் பரவலாக அறியப்பட்டவர். இவர் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்றாலும் விருத்தாச்சலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்.

இன்னொருவர் கலைச்செல்வி நெய்வேலியில் பிறந்து வளர்ந்து தற்சமயம் திருச்சியில் வாழ்ந்து கொண்டிருப்பவர். காந்தியச் சிந்தனைகள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட கலைச்செல்வியின் நாவல் ஹரிலால் த/பெ.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மிக முக்கியமானது. அவரது நாவல்கள் காத்திரமானவை. அற்றைத்திங்கள், சக்கை, புனிதம், தேய்புரி பழங்கயிறு ஆகியவற்றுடன் ஆலகாலம் என்னும் நாவல் வித்தியாசமான கூறுமுறையால் வாசிப்பவரை தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

காலத்தை ஒரு துளியில் அழிக்கும் விஷம் ஆலகாலம் என்பார்கள். காலம் என்பது எப்பொழுதும் மாறிக்கொண்டே இருப்பது. தனக்குள் ஆச்சர்யங்களையும் எதிர்பாரா விசித்திரங்களையும் புதைத்துக்கொண்டிருப்பது. ஆனால் நிலையில்லாதது என்பதை ஊடுஇழையாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல் ஆலகாலம்.  நாவல் ஐந்து காலகட்டங்களில் நடப்பதாக ஐந்து உள்பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாகம் முடியும் இடத்தில் அடுத்தப் பாகம் தொடங்குவதற்கான இணைப்புப் புள்ளியை லாவகமாக தன் எழுத்தின் வழியே மெல்லியச் சங்கிலியாக உருவாக்குகிறார் கலைச்செல்வி.  .

முதல் பாகத்தில் மனதில் வாழும் காதலனுக்காக கசிந்துருகும் பாணர் குலத்து  குழலி மற்றும் அவளது சகோதரன் அறிவுடைநம்பி இருவரும் மதுரைக் காஞ்சியைப் படைத்த மாங்குடி மருதனாரைச் சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது. மருதனாரின் பாடல்களையும் இசைக் கோர்த்து பாடும் பாணர் குடி. ஆகையால் இருவருக்குமான பிணைப்பு இறுகுகிறது. ஆனால் அண்ணனும் தங்கையும் யாரைத் தேடிச் செல்கிறார்களோ அந்த மன்னன் போரில் கொல்லப்பட்டிருப்பான் என்பதை மருதனார் வழி அறிந்து துயருற்று அவர்களின் மனம் இசையில் கலந்து ததும்பும் இடத்தில் அப்பாகம் நிறைவுறுகிறது.

அடுத்தப் பாகத்தில் காஞ்சியை அடுத்த மணிமங்கலத்தில் இருந்து நண்பனின் திருமணத்துக்காக சோழ மண்டலத்தில் பழையாறை வரை சென்றுவிட்டு திரும்பும் போது காஞ்சி போரினால் சிதைவுற்று வழியெங்கும் பிணங்கள் கிடக்கின்றன. சிர்பியாகிய அவன் வடித்தச் சிற்பங்கள் அவனை நோக்கித் திரும்பி நிற்கின்றன. அவன் மீண்டும் வாடா திசை நோக்கிச் செல்வதோடு அப்பாகம் நிறைவுறுகிறது.

மிக முக்கியமான மூன்றாம் பாகத்தில் ஈசனுடன் பராந்தகச் சோழன் மரணம் குறித்தும் நிலையாமைக் குறித்தும் உரையாடுகிறார். தனக்குள் இருக்கும் அசைவின்மையைக் காலத்தாலும் தொட இயலாது என்றுணரும் இடத்தில் நிறைவுறுகிறது.

நாடகக் கம்பெனியில் விடப்பட்ட சுப்பையா காந்தியின் ஆசிரமத்திற்குச் சென்று அங்கு காந்தியுடன் வாழும் சந்தர்ப்பத்தில் எப்படி அவர் மரணத்துயரால் ஆட்படாத மனநிலையை அடைந்திருக்கிறார் என்பதை தரிசித்து தெளிவு பெறுகிறார். ஐந்தாவது பாகம் சம காலத்தில் நிகழ்வதாக படைக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்த மொழிநடை அர்த்தமுள்ள உரையாடல் ஆகியவற்றால் வாசிப்பவர்களின் சிந்தனைப் போக்கை கலைத்து விளையாடுகிறது ஆலகாலம் நாவல். யாவரும் பதிப்பக வெளியீடு.

லார்க் பாஸ்கரன் மிகச் சிறந்த வடிமைப்பாளராகவே அதிகம் அறியப்பட்டாலும் அவரது கவிதைகள் உண்மையை நோக்கிய ஆக்ரோஷத்தின் குரலாக இருக்கின்றன. பொதுவாக தற்கால நவீனக் கவிதையுலகம் நேரடியான உணர்வுகளின் பதிவுகளை தவிர்க்கவே விரும்புகிறது. இருண்மையின் வழியே மனதைத் தொடுவதையே அதிகம் முயற்சிக்கிறது. வானம்பாடி கவிதைகளை பொய்மைக் கலந்த கோஷங்கள் என்று நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் அவர்களின் பாடுபொருள்களையும் முடிந்தவரை விலக்கியே வைக்கிறார்கள். ஆனால் லார்க் பாஸ்கரன் அப்படியான  பாடுபொருள்களை  நவீனக் கவிதை மொழியில் தனக்குள் குமுறும் கொந்தளிப்புகளோடு முன் வைக்கிறார்.

பசி என்னும் தலைப்பிலான அவரது கவிதை (இப்படியானத் தலைப்புகளை, சமகாலக் கவிஞர்கள் விரும்புவதே இல்லை) பசித்தவனின் எஞ்சிய சொத்தாகச் சுற்றும் அறிவை இப்படிப் பேசுகிறது.

வாயில் நுரை தள்ள

கதறும் அறிவின் சுமை

கிட்டத்தட்ட நொறுக்கப்பட்ட

இதயத்தின் சுவரில்

கொஞ்சம் ஆக்சிஜனைச்

சரிசெய்தபடி

சுற்றி வருகிறது...

………..

நீட்டிய கால்களில்

ரசமட்டம் பார்த்தபடி

புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்

பொய்களின் மேல் கட்டப்பட்டக்

கேள்வியை...

லார்க் என்றாலே வானம்பாடி என்றுதானே பொருள்.. ஆகையினால் கூட அவருக்குள் ஒரு வானம்பாடி இன்னும் விடாமல் இசைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கின்றேன். லார்க் என்னும் பெயரில் சிங்கப்பூர் போன்ற தேசங்களில் இயங்கும் மென்பொருள் தனித்தியங்கும் தன்மைப் பெற்றது. சீனாவில் பயன்படுத்தப்படும் ஃபெய்ஷு மென்பொருளைப் போன்றது என்கிறார்கள். லார்க் பாஸ்கரனும் தனித்துவமான படைப்பாளிதான். வேரல் புக்ஸ் வெளியிட்டிருக்கும் கடல் தன் மீனை சமைப்பதில்லை கவிதை நூலில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது. 


 



















 











 

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...